Advertisement

அத்தியாயம் 16

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? சிறுவயதில் விளையாட்டாகப் பேசுகிறான் என்றெண்ணிக் கண்டுகொள்ளாமல் இருந்தேன் ஆனால் இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவன் மாறவில்லை.  

அன்று கடையில் கயலைப் பார்த்தான். பின் பள்ளியில் அன்றிரவு அவளிடம் வம்பு பண்ணினான். அதன் பின் சிறுவனிடம் காதல் கடிதம் கொடுத்தனுப்பினான். இன்று கல்யாண வீட்டில் அனைவரும் இருக்கக் கயலை இமைக்காது பார்க்கிறான். யாருமில்லா இடத்தில் அவள் கை பிடிக்கிறான். 

எவ்வளவு தைரியம் அவனுக்கு? அவள் விருப்பமில்லை என்று விலகிச் சென்றாலும் விடாமல் துறந்துகிறான் அவனுக்கு தன்மானம் என்பதே இல்லையா? என் கயலிடம் எவ்வாறு அவன் அவ்வாறு நடந்து கொள்ளலாம்? அவனை என்ன செய்தால் தகும்? 

பற்களைக் கடித்துக் கொண்டிருந்த சந்திரனுக்கு அன்புவின் மேல் அளவிடமுடியாத கோபம். அவன் சட்டையைப் பிடித்து அறைய வேண்டும் போல் இருந்தது. தனக்கு உரிமையான பொருள் கை நழுவுவதைப் போன்றிருந்தது. பொது இடத்தில் எதுவும் செய்ய இயலாது எனவே இப்போது என்ன செய்யலாம் என்ற யோசனையில் பெரியவர்களை அழைத்திருந்தான்.

செல்வா அனைவரையும் தனியே அழைத்து வந்தான். கரணமறியாது அனைவரும் ஒருவித எதிர்பார்ப்போடும், கலக்கத்தோடும் வந்திருந்தனர். 

வேல்முருகனின் அருகில் சென்றவன் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, “மாமா எனக்கும் கயலுக்கு இப்போவே கல்யாணம் பண்ணி வைங்க மாமா” என்றான். 

திடீரென சந்திரன் இவ்வாறு கேட்க, புரியாத குழப்பமுடன், ருக்மணியைப் பார்த்துவிட்டு வசந்தாவிடம், “என்னம்மா மாப்பிள்ளை திடீர்னு இப்படி கேட்குறானே?” என்றார். 

ஆனால் அதற்குள் பொறுமை இல்லாத ருக்மணி, “ஏலே சந்திரா! உனக்குக் கல்யாணம் தான நான் பண்ணி வைக்குறேன். அவள விட நல்ல பொண்ணா பாப்போம்டா!” என வேல்முருகன், கற்பகம் நிற்பதறிந்தும் கூறினார். 

ஆனால் சந்திரனோ அதைப் பொறுக்காமல், “இல்ல ஆச்சி, நீங்க எனக்கு வேற எந்த பொண்ண பார்த்தாலும் நான் கட்டமாட்டேன். கல்யாணம் பண்ண அது கயலை மட்டும் தான் இல்ல நான் கடைசிவரைக்கும் இப்படியே இருக்குறேன்.

பரம்பரை, குடும்ப வாரிசுன்னு எல்லாம் சொல்லுவீங்களே அதெல்லாம் என்னோடு முடிச்சி போகட்டும். கயலை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலைனா நம்ம குடும்பத்துக்கு அடுத்த வாரிசு இல்லாமலே போயிடும்” என்றான். எதைக் கூறினால் ஆச்சியின் வாய் மூடிவிடும் என்று நன்கு அறிந்திருந்தான். 

ருக்மணி, இதுதான் உன் வளர்ப்பா என்பது போல் வசந்தாவைப் பார்த்து முறைக்க, “என்னடா சந்திரா இப்படி திடீர்னு வந்து கல்யாணம் பண்ணனும்னு பிடிவாதம் பண்ணுற? கல்யாணம் பண்ணுறதுனா அவ்வளோ ஈஸியா தெரியுதா உனக்கு? எல்லாம் எங்க அம்மாவ சொல்லணும் நீ என்ன பண்ணாலும் சரி சரின்னு உனக்குத் தலையாட்டி, ரொம்ப செல்லம் கொடுத்து வளத்திருக்காங்க” எனச் சரியான நேரத்தில் ருக்மணியின் பார்வைக்கு எதிராகக் கூறினார் விஜயராகவன். 

என்னடா புதுசா இருக்கு, திடீர்னு கயலைக் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுற?” எனக் கேட்டார் சங்கரலிங்கம். 

புதுசாலாம் இல்ல, நான் சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் கயலைத்தான் என் பொண்டாட்டின்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். அவ என் தாய்மாமா மகள், எனக்கு முறப்பொண்ணு அவள கல்யாணம் பண்ணுற உரிமை எனக்குத் தான் இருக்கு. அவ எனக்கு மட்டும் தான் சொந்தம், நான் சின்ன வயசுல இருந்து அவள தான் விரும்புறேன். ஜெயந்திக்குக் கல்யாணம் முடியனும்னு நினைச்சேன். அதான் இப்போ முடிச்சிரிச்சே, எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் பிடிவாத குரலில். 

சந்திரன் கயலை விரும்புவதாகச் சொன்னதிலே அனைவரும் ஆச்சரியமுடன் இருக்க, “சரி தம்பி, திருவிழா ஆரம்பிக்கட்டும், நாங்க சாமிக்கிட்ட குறி கேட்டுக்கிறோம் அப்பறமா இத பத்தி பேசலாமே!” என கற்பகம் கூற,

அவரை தொடர்ந்து, “ஆமாடா நாமளும் நம்ம ஜோசியர்கிட்ட போய் பொருத்தம் இருக்கானு பார்க்கணும், அம்புட்டு சொந்தகாரங்களுக்கு சம்மதமான்னு கேட்கணும், அப்புறம் எம்புட்டு பயலுக அவங்க மகள உனக்கு கட்டிக்கொடுக்கணுமுன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்களோ?” என அடுக்கடுக்காக் காரணம் கூறி நீட்டி இழுத்தார் ருக்மணி. 

ஆமா இவ பேரன் இந்த சீமையிலே இல்லாத அழகனாக்கும், இவனுக்கு பொண்ணு தர வரிசையில நிக்குறங்களாக்கும்! நானே வேண்டான்னு தான் தள்ளி போடுறேன் என எண்ணினார் கற்பகம். 

குறி கேட்குறது, ஜாதகம், ஜோசியம், பொருத்தம்னு எதுவும் வேண்டாம் யார்கிட்டையும் சம்மதம் கேட்க வேண்டாம். இப்போவே உங்களால கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?முடியாதா?” இறுதியாகப் பிடிவாதமுடன் நின்றான். 

நாங்களே ஜெயந்தி கல்யாணத்துக்கு அப்பறம் கயலை பொண்ணு கேட்டு வரணும்னு தான் முடிவா இருந்தோம். இப்போ இவனே வெளிப்படையா கேட்டுட்டான். நாம வேணா இப்போ நிச்சியம் முடிச்சிக்கலாம் கல்யாணத்தை அப்பறம் வைச்சிக்கலாம். என்ன மச்சான் சம்மதம் தானே உங்களுக்கு?” என்றார் விஜயராகவன். தன் காதல் மனைவியின் பலவருட ஆசையை அவரும் அறிவார். 

சில நொடி அமைதிக்குப் பின் தன் தங்கை வசந்தாவின் முகம் பார்த்தவர், “சரி தான் மாப்பிள்ளை. அப்படியே பண்ணிடலாம், திருவிழா முடியவும் அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வைச்சிக்கலாம்” என்றார் வேல்முருகன்.

அதைத் தொடர்ந்து சங்கரலிங்கம், “ராகவா! நீ ஜெயந்தி வீட்டுக்காரங்க கிட்ட பேசு, நான் போய் ஐயர் கிட்ட பேசுறேன், அம்மாடி வசந்தா கயலை ரெடி பண்ணி மேடைக்கு கூட்டிட்டி வாம்மா, அடியே நீ போய் ரெண்டு தாம்பூலத் தட்டு ரெடி பண்ணு, செல்வா சொந்தக்காரங்க யாரையும் கிளம்பிடாம கொஞ்சம் இருக்க சொல்லு” அனைவருக்கும் கட்டளை இட்டவர் வேல்முருகன் கற்பகத்தை அழைத்துச் சென்றார். 

அனைவரும் அவர்கள் விருப்பத்திற்கு முடிவெடுக்கக் கயலின் விருப்பம் பற்றி யாரும் நினைக்கக் கூட இல்லை.  

ஜெயந்தியும், விக்னேஷும் சம்பிரதாய விளையாட்டுகளில் நண்பர்கள் கேலிக்கு நடுவில் மாட்டிக்கொண்டு விழித்துக் கொண்டிருந்தனர். கயலும் ஒருவித உற்சாகத்தோடு ஜெயந்தியைக் கேலி பேசிக்கொண்டிருந்தாள். அவளின் அருகே வந்த வசந்தா அழைக்க, “என்ன அத்தை ஏதும் வேலையா சொல்லுங்க?” என்று கேட்க, “நீ கொஞ்சம் என் கூடவா, பூவு நீயும் வாம்மா” என இருவரும் அழைத்துச் சென்றார். ஜெயந்தியும் கவனிக்கவில்லை.

கயலும், பூவும் புரியாமல் நிற்க, அவளின் கையில் ஒரு பட்டுப்புடவையைக் கொடுத்தவர், “பூவு நீயும் அவ கூடப் போய் புடவையை கட்டிவிட்டு, அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வாம்மா, கொஞ்சம் சீக்கிரம் வாங்க, ஜெயந்தி தனியா இருக்கா நான் அங்க போறேன்” எனப் படபடப்புடன் அவர்களை அவசரப்படுத்தியவர் அவர்கள் கேள்வி கேட்பதற்குள் சென்றுவிட்டார். 

பூங்கோதையும் கயலை அழைத்துச் சென்று அலங்காரம் பண்ண, கயல் எதுவும் பேசாது அமைதியுடனே இருந்தாள். ஆனால் சிந்தனையிலோ ஏதோ தப்பா இருக்கே, என்னவாக இருக்கும்? எதற்காக இருக்கும்? என்ற கேள்விகள் தொடராக வந்து நிற்க, தன்னை சுற்றி நிகழ்வதைக் கவனிக்கவில்லை.  

பூங்கோதை வெளியே அழைத்து வர, பின் வசந்தா வந்து கயலை மேடைக்கு அழைத்துச் சென்று அமர்த்தினார். கயலின் மனதிற்குள் என்னவோ நெருடலாகத் தோன்ற தன்னருகே நிமிர்ந்து பார்த்தால் ஜெயசந்திரன் பட்டு வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தான். கயலுக்கு ஏதோ புரிவது போலிருக்க, எழுந்திரிக்க முயன்றாள் ஆனால் அதற்குள் அவளருகே வந்த வேல்முருகன், “கண்ணு கொஞ்சம் அமைதியா உக்காரும்மா” என்றார். 

அவர் முகம் பார்த்தவள் தலை தாழ்த்திக்கொண்டு அப்படியே அமர, ருக்மணி வந்து அவளுக்கு மாலையிட்டவாறு, “இங்க பாருடி என் பேரன் ஆசைப்பட்டதுக்காக தான் சம்மதிச்சேன்!” என்றார். 

சங்கரலிங்கம் ஜெயசந்திரனுக்கு மாலையிட, உறவுகள் சூழ,ஊரார் அறியச் சந்திரனின் பெற்றோரும், கயலின் பெற்றோரும் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர். ஐயர் நிச்சியப் பத்திரிகை வாசித்தார். திருவிழாவிற்குப் பின் இரண்டாம் நாள் அதாவது இன்றிலிருந்து பதிமூன்றாம் நாள் திருமணம் எனத் தேதியும் குறிக்கப்பட்டது. 

கயலுக்கு அருவருப்பாய் இருந்தது, சந்திரனின் அருகில் அமரவே மனமில்லை சிதைக்குள் அமர்ந்திருப்பது போன்று உடலெல்லாம் எரிந்தது. யாருக்கு உரிமையானவளை யார் நிச்சயிப்பது? நினைக்க, நினைக்க உடல் கூசியது. மாலையை கழட்டியெறிந்து அன்பு எனக் கத்தவேண்டும் போல் இருந்தது. 

ஓடிச்சென்று அன்புவின் அணைப்புக்குள் அடக்கிவிட வேண்டுமென்ற வேகமெழ, எழ முயற்சித்தாள் ஆனால் அவளின் பின்புறம் நின்றுகொண்டிருந்த அன்னையின் கரம் அவளின் தோளில் அழுத்த அவள் முயற்சி தடுக்கப்பட்டது.  

கயலின் மனமோ கொதித்துக் கொண்டிருந்தது, தன்னை சூழ்ந்திருப்பது தன் உறவுகள் தானா? தான் என்ன விருப்பு,வெறுப்பற்ற உணர்வுகளில்லா பொம்மையா? என்னிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லவில்லையே? சரியாக அன்பு சென்ற பின் நிச்சிய ஏற்பாடு, திட்டமிட்டதா? தற்செயலா? 

சந்திரன் என்னை விரும்பினானா? இத்தனை நாள்களில் இதை நான் அறிந்ததில்லையே? அவன் மனதில் சலனம் வரும் படியா என் நடவடிக்கைகள் இருந்தது? இந்த நிச்சியத்திற்குப் பின் மேலும் ஆசையை வளர்த்துக் கொண்டால்? ஏற்கனவே என் மீது கோபத்திலிருக்கும் அன்புவிற்கு என்ன சொல்லிப் புரியவைப்பது? எங்கே அவனை பார்ப்பது? 

தன்னை இவ்வாறு அமர வைத்த, விதியை நொந்தாள். உலகில் எந்த பெண்ணிற்கும் வரக்கூடாத நிலைமை, அழகிய சொப்பனத்தில் அமிழ்ந்திருந்தவளை எழுப்பியதை போன்ற ஏமாற்றம். அணிந்திருந்த மலர்மாலை கூட மலைபோல் கனத்தது. தன் கண் முன்பே தாம்பூலத்தட்டுகள் மாற்றப்படுவதை விழிகளில் நீரோடு பார்த்தவள் நெஞ்சை அழுத்திப் பிடித்தாள். 

அவளின் தவிப்பையும் வேதனையும் கூட மறைக்க முயலவில்லை, அந்த அளவிற்குத் தன்னிலை இழந்திருந்தவளின் முகம் பார்த்தவர்களுக்கும் புரிந்திருக்கும் ஆனால் திடீர் நிச்சியத்தால் தான் பயத்தில் படபடப்பில் இப்படி உள்ளாள் என்றெண்ணிக் கொண்டனர். 

ஆனால் அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த ஜெயந்தியின் கண்களுக்கு அவள் தவிப்பு அப்படியே தெரிந்தது. அவள் முகபாவனையிலே அவளின் விருப்பமின்மையை அறிந்தவள் அன்னையை அழைத்து, “அம்மா எதுக்கு எப்படி திடீர்னு பண்ணுறீங்க? பாரும்மா கயலு முகமே சரியில்ல” என்றாள். 

நாங்களும் அதான் சொன்னோம், எங்க உன் அண்ணன் கேட்டாத்தானே? கட்டுனா கயலைத்தான் கட்டுவேன் அதுவும் இப்போவே கல்யாணம் பண்ணிவைங்கன்னு சொன்னான், நாங்க தான் இப்போ நிச்சியம் பண்ணிட்டு அப்பறம் கல்யாணம் வச்சிக்கலாம்னு சொன்னோம். சரிடி நீ கொஞ்சம் அமைதியா இரு, மாப்பிள்ளையோட அத்தை உன்னையே பார்த்துக்கிட்டு இருக்காங்க” என்றவர் விலகிச் சென்றார். 

தன் அண்ணன் கயலை விரும்பினானா? கயலின் விருப்பமின்மை அறிந்தும் கட்டாயப்படுத்துகிறானோ? ஏதோ சரியில்லை. ஏன் இந்த அவசரம் முதலில் சந்திரனிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்த விக்னேஷ் அவள் கைகளை உரசினான். அதிலும் அவள் கவனம் கலையாமலிருக்க, நெருங்கி அமர்ந்தவன் மாலையின் மறைவில் அவளைக் கிள்ளினான். ஜெயந்தி நிமிர்ந்து அவனைப் பார்க்க,”கொஞ்சம் சிரி ஜெயம்மா, அப்பறம் போட்டோஸ் வீடியோஸ் நல்ல இருக்காதும்மா!”என்க, லேசாகச் சிரித்தவள் தலையாட்டினாள். 

பின் அனைவருக்கும் விருந்து ஜெயந்தியின் வீட்டில் பரிமாறப்பட, மீண்டும் கலகலப்பு கூடியது. அனைவரின் விருப்பத்திற்கு ஆட்டுவிக்கப்பட்ட கயல் இறுதியில் களைப்புடன் ஒரு அறைக்குள் அடைந்து கொண்டாள். என்னவோ அவளால் சந்திரனின் முகம் பார்க்கவே முடியவில்லை, அவன் முகம் பார்ப்பதையும் தவிர்த்தாள். அவனும் இருந்த பரபரப்பில் கண்டு கொள்ளவில்லை. 

இரவு உணவிற்குப் பின் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த சிவகாமி, “என்னடி பேச்சி, அந்த ருக்மணி பேத்தி கல்யாணத்தைச் சிறப்பா செஞ்சிருக்கா போல?” என வேலையாளிடம் கேட்டார். 

அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தவர், “ஆமாம்மா! இந்த ஊருலையே இப்படி ஒரு கல்யாணத்தை நான் இத்தனை வருஷத்துல பார்த்ததேயில்லை, சிறப்ப தான் செஞ்சிருக்காங்க! அது மட்டுமா அந்த பொண்ண தங்கத்துல நிறைச்சிருக்கு, அப்பறம் இரண்டு நாளா ஊருல எல்லாருக்கும் அவுக வீட்டுல தான் விருந்தே நடக்குது!” எனப் பெருமை போல் கூற, 

இது என்னடி கல்யாணம் என் பேரன் அன்புக்கு இதைவிடச் சிறப்பா செஞ்சிகாட்டுறேன் பாருடி. அதுவும் அவ கண்ணு முன்னாடியே, அவ பேரனுக்குக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே நடத்திக் காட்டுறேன்!” என்றவர் நறுநறுவென்று வெற்றிலையை மென்றார். 

அட போங்கம்மா, உங்களுக்கு விஷயமே தெரியாதா? அந்த அம்மா பேத்தி கல்யாணத்துலையே பேரனுக்கும் நிச்சியம் பண்ணிட்டாங்களாம், நம்ம திருவிழா முடிச்ச ரெண்டா நாளே கல்யாணமாம்”  

என்னடி சொல்லுற? பொண்ணு யாரடி?” 

வேற யாரு, நம்ம வேல்முருகன் மக கயலு தான். சொந்த மாமா மக இருக்க வெளியே பொண்ணு எடுப்பாங்களா?”  

நிசமாவா? மாமா பொண்ணா இருந்தாலும் இதுவரைக்கும் எதுவும் பேசி வைக்கலையே பேச்சி” 

அட நீங்க வேறம்மா! அந்த புள்ளைக ரெண்டுக்குமே சின்ன வயசுல இருந்து விருப்பம் தானாம்” 

யாரடி சொன்னா? அந்த கயலு புள்ளைக்கு இதுல விருப்பமா?” 

கல்யாணம் வீட்லையையே எல்லாரும் பேசுறாங்க, ரெண்டும் பேரும் விரும்பித்தான் கட்டிக்கப்போறாங்களாம். விருப்பமில்லாமலா அந்த புள்ள இவுக வீட்டையே சுத்தி சுத்தி வருது, ரெண்டு பேரு ஜோடியா பைக்லலாம் சுத்துறாங்களே!” 

அதே நேரம் அன்பு வாசல் படிகளில் ஏறுவதை பார்த்தவர் பேச்சியிடம் கண்ஜாடை காட்டிவிட்டு பேச்சை மாற்றினார். ஆனால் சிவகாமிக்கு நம்பும் படியாக இல்லை சரவணனிடம் பேசியது, முதல் முறை தன் வீட்டில் கயல் அன்புவை பார்த்த பார்வை அவருக்குள் சில சந்தேகங்களை உண்டாக்கியது. 

எப்படி இருப்பினும் அவளுக்குத் தான் சந்திரனுடன் நிச்சியமாகி விட்டதே, கயலைவிட நல்ல பெண்ணைப் பார்த்து அன்புக்குக் கட்டிவைக்க வேண்டும் அதுவும் ருக்மணி முன்னே செய்து வைக்க வேண்டும் என்றெண்ணினார்.

இதை எதையும் அறியாத அன்பு சாப்பிட்டுவிட்டுப் படுக்க, காலையில் கண்ட கயலில் அழகிய தோற்றத்தை நினைத்தவாறு இனிய கனவிற்குள் சென்றான். 

Advertisement