Advertisement

அத்தியாயம் 15

ஜெயந்தியின் திருமண ஏற்பாடுகள் வெகுவிமர்சையா நடைபெற்றது. அந்த ஊரிலே அதுவரை அப்படியொரு திருமணம் நடந்ததேயில்லை என்னும் அளவிற்கு ஏற்பாடுகள் இருந்தது.

அவர்கள் வீடு மற்றும் கோவில்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஊரே ஜொலித்தது. கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. மேடை முழுவதும் மலர்களால் அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தனர். மைக் செட், ரேடியோ கட்டப்பட்டு பாடல்கள் இசைக்கப்பட்டது.

முதல் நாள் இரவிலிருந்தே ஊரார் அனைவருக்கும் அவர்கள் வீட்டில் தான் விருந்து. அந்த ஊரின் இளவரசி போல் வளர்ந்த ஜெயந்தியை அனைவரும் அவர்கள் வீட்டுப் பெண் போல் எண்ணினர். உரிமையோடு அவளின் திருமண வேலைகளில் பங்கு கொண்டனர்.

ஜெயந்தியின் வீட்டிலும் முன்புறம் வாழைமரம் கட்டப்பட்டு, உட்புறம் பந்தலும் அமைக்கப்பட்டிருந்து. அதிலும் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்புறம் சமையல் ஆட்கள், வேலையாட்கள் என அனைவரும் கூடிச் சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர். உறவுகள், ஊரார், மாப்பிள்ளை வீட்டார், திருமணத்திற்கு வரும் அனைவருக்குமென விதவிதமான விருந்துணவுகள் தயாராகிக் கொண்டிருந்தது.

ஜெயந்தியின் வீடும் உறவினர்களால் நிறைந்திருந்தது. உறவினர்கள் ஒன்று கூடுகையில் அந்த இடத்தில் ஆரவாரத்திற்குப் பஞ்சமில்லையே! சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி, ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

பெண்கள் அனைவரும் கலகலப்பாக பேசியபடி பூ கட்டிக்கொண்டும், தாம்பூலம் தயார் செய்துகொண்டும் இருந்தனர். அவர்களோடு அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார் ருக்மணி.

அப்போதும் உறவுகள் வந்தபடி இருக்க, வசந்தி வாசலில் நின்று வரவேற்றுக்கொண்டிருந்தார். ஜெயந்தியை சூழ்ந்து கொண்ட தோழிகளும் அவள் வயது பெண்களும் அவளுக்கும் தன்களுக்குமென மருதாணி இட்டுக்கொண்டு, மகிழ்வோடு கதை பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் வீடே ஆரவாரத்துடன் ஜொலித்துக் கொண்டிருக்க, எதிர் வீடு மட்டும் அமைதியாகக் காட்சியளித்தது. ஆண்கள் அனைவரும் மாப்பிள்ளை அழைப்பிற்கு சென்றிந்தனர். மாப்பிள்ளை மற்றும் அவர்கள் குடும்பத்தார், உறவுகள் தங்குவதற்குப் பண்ணை வீட்டைத் தயார் செய்திருந்தான் செல்வகணேஷ்.

பட்டாசு, வான வெடிகள் வெடிக்க, மேளதாளத்துடன் ஊர் எல்லைக்கே சென்று மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றனர்.

மாப்பிள்ளை விக்னேஷ் பிரபு காரிலிருந்து இறங்க, ஆரத்தி சுற்றி செந்தூரமிட்டனர். வரவேற்பிற்காகவே அழைத்து வரப்பட்ட யானை ஆசிர்வதித்து விக்னேஷ்க்கு மாலையிட்டது.

சங்கரலிங்கம், விஜயராகவனும் முன்னே வந்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்று பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். செல்வாவும், சந்திரனும் அங்கிருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

வந்தவர்கள் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. உண்டவர்கள் ஓய்வு எடுக்கச் சென்ற பின் இருவரும் கிளம்பினர்.

இரவாகி விடவே அப்போது தான் வேலைகள் அனைத்தும் முடித்து சற்று ஓய்வெடுக்க இருவரும் திரும்பினர். “சந்திரா! நீ வீட்டுக்குப் போய் சாப்பிடு, நான் கோவில்வரைக்கும் போய் மேடையலங்காரம் முடிச்சிரிச்சா? அவங்க எல்லாரும் சாப்டாங்களான்னு பார்த்திட்டு வரேன்” என்றான் செல்வா.

இல்லடா நீ மதியமும் சாப்பிடல்ல, நீ போய் முதல்ல சாப்பிடு. நான் போய் கோவில்ல வேலையை பாத்துட்டு, சின்னப்பாட்டி, மாமா எல்லாரும் இப்போ தான் வாரங்காலம் அவங்களவும் கூட்டு வரேன்” என்றான் சந்திரன்.

அப்போ நானும் உங்கூடவே வரேன்டா”

டேய் வீட்டுல ஏதாவது தேவை இருந்தா அங்க ஒரு ஆள் இருந்தா தான் சரியா இருக்கும். நீ வீட்டுக்கு போ முதல்ல”

செல்வாவை அனுப்பிய சந்திரன் அவன் வேலைகளை பார்க்கச் சென்றான்.

கூடியிருந்த சொந்தங்கள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதை பேசத் தொடங்கி விட, இறுதியாக கயலின் திருமண பேச்சில் வந்து நின்றது.

கற்பகம் உன் மகளுக்கு ஏதும் மாப்பிள்ளை பார்க்குறையா? அவளும் ஜெயந்தி வயசு தானே?”

எங்க சொந்தத்துல ஒரு மாப்பிள்ளை இருக்கு, நம்ம கயலுக்குச் சொல்லட்டுமா கற்பகம்?”

அடியே, கயலுக்கு எதுக்குடி வெளியே மாப்பிள்ளை அதான் நம்ம சந்திரன் இருக்கானே!”

ஏன் கற்பகம் முன்னாடியே பேசிவச்சிட்டீங்களோ? நான் கூட என் அண்ணா பையனுக்கு கயல கேட்டு வரலாம்னு நினைச்சேன்”

அப்போ அடுத்து நம்ம கயல் கல்யாணம் தான்!”

அனைவரின் கேள்வியும் கயலின் கல்யாணத்தைப் பற்றியே இருக்க, கற்பகத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

சந்திரனுக்கும், கயலுக்கு இன்னும் திருமணம் பற்றிப் பேசவில்லை என்று கூறினால் வசந்தாவின் வீட்டில் தான் ஒதுக்குகிறார்கள் என்ற அர்த்தமாகிவிடும். சம்பந்தம் பேசிவிட்டோம் என்று பொய் கூறவும் மனமில்லை பின்னர் அவர்கள் வீட்டிற்குத் தெரிந்தால் நாம் தான் அவ்வாறு ஆசை கொண்டு கதை கூறியதாகச் சொல்லிவிடுவார்கள்.

உறவுகளிடம் எப்போதும் கவனமாகப் பேச வேண்டும் என்பதை உணர்ந்தவர், “இதுவரைக்கும் ஏதும் முடிவு பண்ணலை அத்தை. நம்ம ஊர் திருவிழால சாமிக் கிட்டக் குறி கேட்டுட்டு தான் முடிவு பண்ணும்” என்றார். அவரின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது.

அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கயலுக்கு அனலின் மேல் நிற்பதைப் போன்றிருந்தது. தன்னை பற்றிப் பேசுவதை விட அனைவரும் தன் திருமணம் பற்றியும் அதுவும் சந்திரனோடு தொடர்புப்படுத்திப் பேசுவது அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. என்ன தான் சந்திரன் முறை மாமானாக இருப்பினும் அன்புவை தவிர யாரையும் அவள் மனம் ஏற்கவில்லை. அதற்கு மேலும் அங்கு இருக்க விருப்பமின்றி எழுந்து உள்ளே சென்று ஜெயந்தியின் அருகே அமர்ந்தாள்.

அதுவரை ஜெயந்தியைக் கேலி பேசிக் கொண்டிருந்த தோழியர் கூட்டம் கயலின் வருகைக்குப் பின் அவள் புறம் திரும்பினர். ஜெயத்திக்கு விக்னேஷிடமிருந்து அழைப்புகள் வர, சுற்றிலும் தோழிகள் இருக்கிறார்கள், இரு கைகளிலும் மருதாணி உள்ளது என்பதால் அவள் அழைப்பைத் தவிர்த்தாள்.

அவனிடமிருந்து மெசேஜ் வரத் தொடங்கியது. அவளோ மொபைலை பரிதாபமாகப் பார்க்க, அவளிடமிருந்து மொபைலை பறித்துக் கொண்ட பூங்கோதை, “ஜெயாம்மா இப்போ உன்ன பார்க்க வாரட்டுமா?” என அனுப்பப்பட்டிருந்த செய்தியையும் வாசித்துக் காட்டினாள்.

ஓஹோ! ஜெயாம்மாவா யாரும்மா அந்த பாட்டியம்மா?”

விடிச்சா கல்யாணம் மாப்பிள்ளை சாருக்கு அதுவரைக்கும் பொறுமையில்லையா?”

ஏய் வரச்சொல்லி ரிப்ளே பண்ணுடி!”

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூற, அதில் வெட்கத்துடன் முகம் சிவந்த ஜெயந்தி மொபைலை தரும்படி கெஞ்சிக் கொண்டிருந்தாள். பூங்கோதை மொபைலை தருவது போல் காட்டி அவளை ஏமாற்றி விளையாடிக் கொண்டிருந்தாள்.

கயலோ எதுவும் பேசவில்லை எனினும் மெல்லிய புன்னகையுடன் அதைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

நேரம் நள்ளிரவை நெருங்கி இருக்க, ருக்மணி வந்து அனைவரையும் உறங்கும் படி அதட்டிய பின்னே அனைவரும் படுத்தனர்.

படுத்து ஒருமணி நேரமான பின்னும் கயலுக்குத் தூக்கும் வருவதாய் இல்லை. அதற்குப் பின் அன்புவை பார்க்கவேயில்லை. பள்ளியிலும் ஆண்டு விடுமுறை விட்டு இருக்கப் பார்ப்பதற்கான வாய்ப்பும் அமையவில்லை அவளும் பார்க்க முயற்சி செய்யவில்லை. அவனைப் பார்க்காத நாட்கள் கணமாய் இருந்தது. சுவாசத்திற்குக் காற்று இல்லாது திணறுவது போன்றிருந்தது.

அதற்கு மேலும் படுத்திருக்க முடியாமல் எழுந்து வெளியே வந்தாள். அனைவரும் உறங்கியிருக்க மெல்லிய விளக்கொளியும், நிசப்தமும் நிறைந்திருக்கப் படிகளில் ஏறி, மொட்டை மாடியில் சென்று நின்றாள்.

ஏற்கனவே அங்கு ஒரு பெண் நிற்பது போல் நிழலுருவம் ஒன்று தெரிய அருகே சென்றவள் தோள் தொட்டுத் திருப்பினாள்.

பூவு, நீ என்னடி இந்த நேரத்துல தனியா இங்க நிக்குற?” என்றவாறு அவளை ஆழ்ந்து பார்த்தால் கயல்.

கண்களின் லேசாக துளிர்ந்த நீரை துடத்துக் கொண்டு, “சும்மா தான் கயலு தூக்கம் வரல அதான் இங்க வந்தேன்!” என்றாள்.

நான் தான் துக்கம் வரலைன்னு வந்தா இவளும் அதே காரணத்தை சொல்லுறளே! என எண்ணியவாறு, “ஏன் பூவு அடுத்து உனக்கு தானே கல்யாணம்? அப்போ தான் இப்படி சந்தோஷமா இருக்க முடியும்” என்க,

ஏன் அடுத்து உனக்கு கல்யாணமாகதா? நீ என்ன ஒளவையார் பாட்டியா?” என்றாள் கிண்டலுடன்.

கயல் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட, “ஜெயந்தி நாளைக்கு அவ மாமியார் வீட்டுக்கு போயிடுவா, முன்னாடிலாம் எவ்வளோ சந்தோஷமா இருந்தோம். நீயும் அவளும் இல்லாம எப்படி கயல்?” என்றவாறு லேசாகக் கண்கலங்கினாள் பூங்கோதை.

அட என்ன பூவு, சின்ன புள்ள மாதிரி அழுத்துக்கிட்டு அதுக்கெல்லாம் இன்னும் நேரம் இருக்கு. இப்போ வா போலாம்” என அழைத்துச் சென்றாள் கயல்.

அதிகாலையில் ஆதவன் எழும் முன் அனைவரும் எழுந்து தாயரிக் கொண்டிருந்தனர். தோழிகள், உறவுப் பெண்கள் சூழ, ஜெயந்திக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.

அங்குப் பண்ணை வீட்டிலும் மாப்பிள்ளை விக்னேஷ் தயாராக, சந்திரன் சென்று கோவிலுக்கு அழைத்து வந்தான்.

ஜெயந்தியின் குடும்பத்தார் அனைவரும் கோவிலில் வருவோரை வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்க, ஜெயந்தி அழைத்து வரப்பட்டு மேடையில் அமர்த்தப்பட்டாள். அரக்கு வண்ண பட்டுப்புடவை அணிந்து, மேனி முழுவதும் தங்க ஆபரணம் நிறைக்க, பார்ப்போர் கண் கூசும் படி தங்கச் சிலையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் மனமோ அன்புவின் வருகைக்கு ஏங்கி நிற்க, கயலின் கண்களும் அவன் வருகையைத் தான் எதிர்பார்த்தது.

சரியாக முகூர்த்த நேரத்திற்கு அன்புவும் கோவிலுக்குள் வந்தான். சந்திரன், செல்வா என யாரும் அவனை வரவேற்கவில்லை. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் வரவேற்று முன்னிருக்கையில் அமர வைக்க, ஜெயந்தி சிறு தலையசைப்போடு, மென் புன்னகை பூக்க வரவேற்றாள்.

அன்புவின் கண்கள் ஜெயந்தியிடமிருந்து நிமிர்ந்து அவளின் பின் நின்று கொண்டிருந்த கயலைப் பார்த்தது.

தலை நிறைய மல்லிகை சூடி, மாம்பழ வண்ண பட்டுப்புடவையில் தேவதையாக ஜொலித்தாள். மையிட்ட பெரிய கருவிழிகள், சிவந்த உதடு, அதற்குள் மறைந்திருந்த சிறு புன்னகை, புடவையின் முந்தானையை கைகளில் சுற்றிக் கொண்டு தலை தாழ்த்தி தரை பார்த்து நின்றிருந்த தோற்றம் பார்க்கையில் செதுக்கி வைத்த சிலைபோல் கலைநயம் மிக்க அழகோடு மிளிர்ந்தாள்.

அன்புவின் பார்வை அவளிடமிருந்து விலக அடம்பிடிக்க, பொது இடம் என்பதால் பிடிவாதமுடன் பார்வையை திரும்பிக் கொண்டான்.

சில நொடிக்கும் குறைவான நொடியில் அன்புவின் பார்வை ரசனையுடம் கயலின் மேல் பட்டுத் திரும்பியதைச் சரியாக சந்திரன் கவனித்துக் கொண்டான்.

மேள வாத்தியங்கள் ஒலிக்க, ஐயர் தந்த மாங்கல்யத்தை விக்னேஷ் ஜெயந்தியின் கழுத்திலிட்டான். பின் நின்ற கயல் அடுத்த முடிச்சுக்களை இட, அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதித்தனர். 

அதன் பின் மணமக்கள் இருவரும் அம்மன் சன்னிதி சென்று வணங்கி வந்து பின் பெரியோரிடமும் ஆசி பெற்றனர்.

அதன் பின் அன்பு சென்று வாழ்த்தி இருவருக்கும் பரிசளித்தான். இருவரும் மகிழ்வோடு பெற்றுக்கொள்ள, அப்போதும் ஒரு பார்வை கயலைப் பார்த்தவாறு விடை பெற்றுக் கிளம்பினான்.

அம்மன் சன்னதியில் சென்று வணங்கியவன், கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்தான். எதிரே கயல் கையில் தாம்பூலத்துடன் வருவதைப் பார்த்தவன் சுற்றிலும் யாருமில்லாததையும் கவனித்தான். தன்னை தாண்டிச் சென்றவளை, “கயல் கொஞ்சம் நில்லு!” என்றான்.

அன்றைய நிகழ்வு மனதின் ஒரு ஓரம் நெருடலாய் இருக்க, ஒருவார்த்தை மன்னிப்பு கேட்க எண்ணினான்.

செல்லம்மா என்றில்லாது கயல் என்று வேறுபடுத்தி அழைத்ததில் கோபம் கொண்டவள் நிற்காது சென்றாள். அவள் உதாசீனம் தாங்காது அவள் கையை அன்பு பிடித்து இழுக்க, அதைத் தட்டிவிட்டுச் சென்றாள் கயல். 

யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி இருக்க, சந்திரனின் கண்கள் தொலைவிலிருந்து இவர்களை பார்த்துக் கொண்டிருந்தது.

அதற்கு மேலும் பொறுமை வேண்டாம் என்று நினைத்தவன் ஒரு முடிவோடு செல்வாவை அழைத்து தன் குடும்பத்தாரையும், கயலின் பெற்றோரையும் தனியே அழைத்து வரச் சொல்லி அனுப்பினான்.

அவர்களிடம் என்ன பேசுவது, எப்படி தன் திட்டத்தை நிறைவேற்றுவது என்ற யோசனையில் நின்றான்.

Advertisement