Advertisement

அத்தியாயம் 10

சந்திரனுக்கும் அன்புவிற்கும் வயதில் வித்தியாசம் நான்கு மாதங்கள், உயரத்தில் வித்தியாசம் நான்கு சென்டி மீட்டர், உருவத்தில் வித்தியாசம் சிறிதளவு நிற வேறுபாடு மட்டுமே. 

அண்ணன் தம்பி என்று சொல்லுமளவிற்கு உருவ ஒற்றுமை உண்டு. உடை தான் இருவரையும் வித்தியாசப் படுத்தியது. 

குணத்திலும் இருவரும் ஒற்றுமை கொண்டவர்கள் தான். இருவருக்கும் அவர்கள் அன்னைக்குத்தான் முதலிடம் அளிப்பார்கள். பிறருக்கு உதவுவதில் இருவருமே கர்ணன் குணம் கொண்டவர்கள். 

குடும்பப் பெருமையைக் காப்பவர்கள், பெரியோரை மதிப்பதிலும் தொழிலாளர்களின் நலன் காப்பதிலும் இருவரும் அக்கறை கொண்டவர்கள்தான். ஜெயந்தியின் மீது இருவருமே அளவிடா அன்பு கொண்டவர்கள். 

பள்ளியில் மாணவர் தலைவனாவதில் ஆரம்பமானது அவர்களுக்குள்ளான போட்டி.  

சந்திரன் அறிவியலில் அதிக மதிப்பெண் பெற, அன்பு கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்று மொத்த மதிப்பெண்ணில் இருவரும் சமமாகினர்.  

சந்திரன் சிலம்பம், பளு தூக்குதலில் என்று வெற்றி பெற, அன்பு சைக்கிள் ஓட்டம், ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற, இறுதியில் இருவர் வாங்கும் மெடலின் எண்ணிக்கையில் சமமாகும். அறியும், வீரமும் சமமாகக் கொண்டவர்கள். 

இருவருமே தங்களின் உரிமையை, தங்களுக்கு உரிமையான பொருளை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. செல்வாவிற்கு மட்டுமே சந்திரன் தன் உடைமைகளை, உரிமைகளை விட்டுக்கொடுப்பான். சந்திரனின் பலம், பலகீனம் செல்வா எனில், அன்புவின் பலம், பலகீனம் கயல். 

இருவரும் வெவ்வேறு குணம் கொண்டவராய் இருப்பின் அதில் வலிமையானவர் ஒருவர் வெல்லும் வாய்ப்புண்டு. ஆனால் சமான வலிமை கொண்ட இருவர், ஒரே திசையில் ஒரே வேகத்தில் ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்க, அதில் வெற்றியை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் மற்றவர் பெற இயலாது. 

பள்ளியில் அப்போதுதான் மாதிரி தேர்வுகள் முடிந்திருக்க, அடுத்ததாக ஆண்டு விழாவிற்கான ஏற்பாடு தொடங்கி இருந்தது.  

நடனம், நாடகம்,  பாட்டு என அதற்கான ஒத்திகையில் மாணவர்கள் இருந்தனர். ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்துதல், விழாவிற்கான ஏற்பாடு, ஆண்டு அறிக்கை தயாரித்தல் என மும்மரமாக இருந்தனர். 

வகுப்பறை வெளியே தாழ்வாரத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் நடனத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நடனமுறையைக் கூற, அதை மற்றொரு பெண் நிராகரிக்க என அவர்களுக்குள் ஒரே சலசப்பாக இருந்தது.  

ஆக மொத்தம் அவர்கள் பயிற்சிக்கு, ஒரு மாதிரி நடனம் தேவையாக இருந்தது. 

அலுவலக அறையிலிருந்து விடைத்தாளுடன் ஆசிரியர் அறைக்குச் சென்று கொண்டிருந்த கயலைப் பார்த்த மாணவியர், மொத்தமாகச் சூழ்ந்து கொண்டனர்.

கயலக்கா, நீ நல்லா டான்ஸ் பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். ப்ளீஸ்க்கா எங்களுக்கு ஒரு தடவை டான்ஸ் பண்ணிக் காட்டு நாங்க அதையே ஃபாலோ பண்ணிக்கிறோம்” என எதிர்வீட்டுப் பெண் கேட்டாள். 

ப்ளீஸ் மிஸ், நாங்க தான் வெல்கம் டான்ஸ் மிஸ், நல்லா பண்ணணும் மிஸ். ஒரு தடவை நீங்க சொல்லித் தந்தா போதும் மிஸ்” என்று மற்றோரு மாணவி கேட்க, கயல் ‘ஏன்தான் இந்த வழியாக வந்தமோ?’ என்று நொந்து கொண்டாள். 

ஏய் கயலக்கா, இப்போ நீ சொல்லித் தரலை நான் மேனேஜ்மெண்டல உன் மேல கம்ப்ளெண்ட பண்ணிடுவேன்” என மீண்டும் எதிர்வீட்டுப் பெண் மிரட்ட,  ‘அடியாத்தி! இவ நம்ம வேலைக்கே வேட்டு வைச்சிடுவா போல இருக்கே!’ எனக் கயல் யோசனையோடு நின்றாள். 

எச்.எம்மே சொல்லிட்டாங்க, டீச்சர் யார்கிட்ட வேணாலும் ஹெல்ப் கேட்டுக்கோங்கன்னு, சோ ப்ளீஸ் மிஸ்” என மற்றொரு மாணவி கேட்க, அதே நேரம் அனைவரும் கயலின் முகத்தையே பார்த்து நின்றனர். 

அதில் ஒரு பெண் அவள் அருகே வந்து அவள் கையிலிருந்த பேப்பர் கட்டுகளை வாங்கி செல்ல, மற்றொரு பெண் அனைவரையும் தள்ளி நிற்கச் சொல்ல, மற்றொரு பெண் மியூசிக்கை ஆன் செய்தாள்.

ஆக மொத்தம், இவர்களுக்கு உதவாது இவர்களைத் தாண்டிச் செல்ல இயலாது என்பதைக் கயலும் உணர்ந்தாள். புடவையின் முந்தானையை எடுத்துச் சொருகிக் கொண்டு முன்னே வந்தாள் கயல். 

தன் வேலைகளை முடித்த அன்பு, சோர்வாக இருக்கவே ஒரு கப் தேனீருடன் ஜன்னலருகே வந்து நின்றான்.  

அப்போதுதான் அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டவன், கயலின் மீது பார்வையைப் பதித்தவாறு அப்படியே நின்றான். 

ஆசை முகமறந்து போச்சே-இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்க லாமோ? 

கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில்
கண்ண னழழுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு காணில்-அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம் 

ஓய்வு மொழிதலுமில்லாமல்-அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த
மாயன் புகழினையெய் போதும். 

கண்கள் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ? 

தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த
வைய முழுதுமில்லை தோழி! 

கண்ணன் முகமறந்து போனால்-இந்தக் 
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி தோழி?” 

‘என் நினைவுகளுக்குள் புதைத்திருந்த அவன் ஆசை முகம் மறக்கிறதே. என் நெஞ்சம் இன்னும் காதலை மறக்கவில்லை எனில், எவ்வாறு அவன் முகம் மறக்கலாம்? என்ற வரிகளின் போது கயலின் முக பாவனை, நீண்ட வருடங்களாகியதால் அன்புவின் முகம் தன்னுள் மறையும் வேதனையை அப்படியே வெளிப்படுத்தியது. 

நினைவுகளுக்குள் பதிந்திருந்த அவனின் முழு உருவம் காண முடியவில்லை. அவ்வாறு ஒரு உரு கண்டாலும் அதில் அவன் அழகு சிரிப்பைக் காணும்! எனும் போது நேரிலும் இல்லாது நினைவிலும் அவன் முகம் காண முடியாத தவிப்பைக் கயலின் கண்கள் அப்படியே காட்டியது. 

என்னைப் போல் ஒரு பேதை பெண் இதற்கு முன் யாரும் இருந்திருக்க இயலாது. இந்த கண்கள் செய்த பாவம் அவன் முகம் மறக்கும் நிலையாச்சே! அவ்வாறு அவன் முகம் மறக்குமெனில் இந்தக் கண்கள் இருந்து தான் என்ன பயன்? என்ற பொருள் படும் வரிகளில் கயலின் கண்கள் மட்டுமில்லாது அவள் பாவனைகளும் மேனி அசைவுகளும் அவள் துடிப்பை அப்படியே வெளிக்காட்டியது. 

அருகே நின்று விழியோடு விழி கலந்து ஒருமுறை அவன் முகம் பார்த்துவிடும் ஆசை, அது நிறைவேறாத தவிப்பு அவளையும் மீறி அவளை அழுத்த நடனத்தின் இறுதியில், பாடலின் இறுதி வரியில், தரையில் அமர்ந்தவளின் விழியிலிருந்து துளி நீர் சிதறி வழிந்தது. 

அதையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு உயிரே துடித்தது. அவளை இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்து அழுத்திக் கொள்ள வேண்டும். கலங்கிய கண்களில் முத்தமிட வேண்டுமென்ற வேட்கை எழுந்தது. அவள் கண்களில் இதுவரை அவன் காணாத ஏதோ ஒருவித தவிப்பு அவன் நெஞ்சைக் கிள்ளியது.  

தன் செயல்தான் அதற்குக் காரணமோ என்றொரு குற்றவுணர்வு வேறு அவனை அழுத்தியது. 

தன்னால் தான், தனக்காகத் தான் அவளின் இந்தத் துடிப்பு என்றெண்ணி ஒருபுறம் சுகமாகவும், ஒருபுறம் வலியாகவும் உணர்ந்தவன் மீண்டும் அவளைப் பார்த்தான். 

மாணவியர் அனைவரும் கைதட்டியவாறு அவளைச் சூழ்ந்து கொண்டு, “ஐயோ கயலக்கா சூப்பர், ஆஹா! என்ன எக்ஸ்பிரசன்? அப்படியே உண்மையாவே ஃபீல் பண்ணுற மாதிரியே இருந்ததுக்கா” என்று அந்தப் பெண் சொல்ல, 

ஆமா மிஸ், உங்க டான்ஸ் நல்லா இருந்தது, அதைவிட உங்க நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது மிஸ்” என்று மற்றொரு  மாணவியும் பாராட்டினாள். 

அது உண்மைதான் எனச் சொல்லவா முடியும்? என்றெண்ணியவள் சிறு புன்னகையுடன் விலகிச் சென்றாள். 

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அன்புவிற்கு எரிந்து கொண்டிருந்தது உள்ளம். கயலிடம் இறங்கியிருந்த கோபம் மீண்டும் மேலேறியது. 

‘நடிப்பு,  நடிப்பு,  நல்ல நடிப்புதான். எல்லாமே நடிப்பு தான். நீ தான் முட்டாப் பையன் மாதிரி அவளையே நினைச்சித் தவிச்சிக்கிட்டு இருக்கடா!’ என்று தன்னையே திட்டிக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தான். 

எங்கும் செல்லத் தோன்றாமல், வேலையும் பார்க்க விருப்பமில்லாது சாய்ந்து படுத்தவன், ‘செல்லம்மா.. செல்லம்மா..’ என்றவாறு விழி மூடினான். 

அன்புவின் நினைவுகளுக்குள் பள்ளிப் பருவத்தில் செல்லம்மாவாகிய கயல் வந்தாள்.

 பள்ளி ஆண்டு விழாவின் போது அன்பு ஒருமுறை பாரதியின் பாடலைப் பாடுவதற்காகப் பாரதி வேடமிட்டிருந்தான். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, அடுத்ததாக அன்பு மேடையேற வேண்டியிருந்தது. 

தன் அருகே இருந்த ஆசிரியையிடம், “டீச்சர், நான் மட்டும் தனியாவா மேடையில நிக்கணும்?” என்று கேட்டான். அவனோ நான்கு ஐந்து பேர் சூழ நடுவேதான் நாயகனாக நிற்க வேண்டுமென்ற ஆசையில் கேட்டான். 

ஆனால் அவரோ இவன் தனியாக மேடையேறத் தான் அஞ்சுகிறானோ என்றெண்ணினார். ஒரு நடனத்திற்குச் சிறு பெண்ணாய் அழகாகச் சேலையில் தயாராகி இருந்த கயலைப் பார்த்தவர், அவளையும் அவனோடு மேடையில் நிற்க வைத்தார். 

டீச்சர் இது யாரு? எதுக்கு டீச்சர் இவ?” எனக் கேட்டவாறு தன் அருகே இருந்தவளைப் பார்த்தவன், அது கயல் தான் என்பதை உணர்ந்து கொண்டான். 

ஏலே, அது செல்லம்மாலே உன் பொண்டாட்டிலே” என்றவர் கீழே இறங்கி விடக் கயலை மீண்டும் திரும்பிப் பார்த்தான். அன்றிலிருந்து அவள் அவனின் செல்லம்மாவாகினாள்.

என் கனவுகளுக்குள் நிறைந்த காதலி கண்ணம்மாவாக மட்டுமில்லாது, என் சரிபாதியாகி உடனிருந்து சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் என் மனைவி செல்லம்மாமாகவும் நீயே வேண்டுமடி. 

ஆனால் கண்ணம்மாவாகவே, கனவாகவே கலைந்து விடுவாயோ கயல்? என்றெண்ணியவாறு விழி நிறந்தான். நீண்ட நேரமாகியிருக்க… கடிகாரத்தைப் பார்க்க, மாலை ஐந்தாகியிருந்தது. வெளியே பெரிய மழை வேறு பெய்து கொண்டிருக்க, வீட்டிற்குக் கிளம்ப எண்ணி எழுந்த நேரம் பக்கத்து அறையில் ஏதோ சத்தம் கேட்டு விரைந்தான்.

தேர்வு விடைத்தாள்கள் திருத்திக் கொண்டிருந்தவள் இன்னும் கொஞ்சம் கொஞ்சமென மொத்தமாக முடித்து அப்பொழுதான் எழுந்தாள் கயல். விடைத்தாள் கட்டுகளை அங்கிருந்த பீரோவில் அடுக்கிக் கொண்டிருக்க, எதிர்பாராமல் பீரோவின் மேலிருந்த வெண்கல ஷீல்டு அவள் காலில் விழுந்தது. “அம்மாஆஆ…” என்று அலறி, கால்ளை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். 

அதே நேரம் உள்ளே வந்தவனுக்கு அவள் அலறலே பெரிதாய்க் கேட்க, “செல்லம்மா…” எனப் பதறியவாறு அருகே வந்தான். அவன் அருகே வரவே தடுமாறி எழுந்து நின்றவள், வெகு அருகே அவன் முகம் பார்த்தாள். 

சில மணி நேரத்திற்கு முன் நடனமாடுகையில் அவள் கண்களில் கண்ட ஒருவிதத் தவிப்பு இப்போதும் தெரிய, விழியோடு விழி கலக்கத் தன்னிலை மறந்து நொடியில் அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்தான். 

அவள் தவிப்பை அடக்கிவிடும் வேகமும், வேகத்திற்குள் அடங்கா அவன் மோகமும் சேர, அவள் முகத்தை கைகளில் ஏந்தி அழுத்தி முகமுழுவதும் வேகமுடன் முத்தமிட்டான். 

விழிகள், கன்னத்தில் முத்தமிட, அவள் கண்ணீரின் உவர்த் தன்மையை உணர்ந்தான். விழியில் வழியும் நீர் நிற்கவில்லை. அவனின் ஒவ்வொரு முரட்டு முத்தத்திற்கும் அவள் அணைப்பின் அழுத்தம் அதிகமாகியது.

அவனுக்கோ உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. அவளின் சில்லென்ற கன்னத்தில் உஷ்ண மூச்சுக்காற்றோடு கலந்து அவன் இதழ் சூடாகப் பதியத் தன்னிலை மறந்தவள், அவன் நெஞ்சில் பதிந்தாள்.

மாமா…” என அவள் உதடுகள் மிக மெலியதாய் முணுமுணுக்க, அவள் இதழ் நோக்கிக் குனிந்தவன், வெளியில் கேட்ட ஒரு இடியோசையில் தன்னை உணர்ந்து அவளை உதறி நொடியில் வெளியேறினான். 

மழையில் முழுதும் நனையும் படி நின்றும் உடலில் பரவியிருந்த வெப்பம் குறையவில்லை. கைகளை இறுகக் கட்டிக்கொண்டு மேல் நோக்கி முகம் நிமிர்த்த, கொட்டும் நீர்த் துளிகள் அவன் முகத்தில் படிந்து வழிந்தோடியது அதற்குள் நிறமில்லா அவன் கண்ணீரும் கலந்தோடியது. 

அவன் செல்லவே மடங்கி அமர்ந்தவள், ஒரு கையால் நெஞ்சைப் பற்றிக் கொண்டும் மறு கையால் வாயை மூடிக்கொண்டும் மௌனமாய்  அலறினாள்.

Advertisement