Advertisement

விழியின் மொழி – மித்ரா

அத்தியாயம் 01

கண்ணெதிரே கருமை எங்கும் சூழ்ந்திருக்க உருவமறியா உயிரை உருக்கும் குரல் ஒன்று “செல்லம்மா.. செல்லம்மா.. செல்லம்மா…” என  எங்கோ தொலைவில் கேட்டது. அதன் முகம் பார்க்க வேண்டும், முயன்றும் முடியவில்லை.

மை இருளுக்கும் உருவம் தர இயலாத கருமை சிறு வெளிச்சமுமின்றி. ஆனால் செல்லம்மா என்ற அழைப்பு நிற்கவில்லை. உடல் நடுங்கியது, உதடு உழன்று, நா வறண்டு, தண்ணீர் வேண்டும் என்ற தாகம் பெருகியது. ஆனால் உதடுகளைப் பிரிக்க முடியவில்லை, உடல் இறுகியது.

செல்லம்மா என்ற அழைப்பு ஓசையின் வலிமை குறைந்து தேய்ந்து நிற்க இருந்த நேரம் இதயத்துடிப்பின் ஓசை இடியெனக் கேட்டது. இதயத்தை உள்ளங்கைக்குள் அள்ளுவது போன்று நெஞ்சாங்கூட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“கயலு…கயலு… எழுந்திரிடி. பொழுது விடிச்சிரிச்சி. எழுந்து வாசப் பெருக்கிக் கோலம் போடு. எழுந்திரிடி. எம்புட்டு நேரம் தான் தூங்குவ?” என அன்னை கத்திய பிறகும் அவள் எழவில்லை.

‘எப்பவும் சீக்கிரமா எழுந்திரிச்சிருவாளே, இன்னைக்கு என்னாச்சு? உடம்புக்கு எதுவும் முடியலையோ?’ எண்ணிய அவள் அன்னை அறைக்குள் வந்து அவளை எழுப்பினார்.

“கண்ணு! அம்மாடி உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்றவாறு அவளை உலுக்க, அதுவரை அவர் கத்திய எதுவும் கேட்காதவளுக்குக் கண்ணு என்ற அழைப்பு அவள் செவி தீண்டி கனவைக் கலைக்க, துயில் துறந்து எழுந்து அமர்ந்தாள் கயல்விழி.

எழுந்தவள் அருகே இருந்த அன்னையின் பதட்டத்தைப் பார்த்து தன் முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டு, “அம்மா! நல்லாத் தான் இருக்கேன் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்” என்றாள்.

“கழுத! இம்புட்டு நேரமா தூங்குவ? இந்தா இத குடிச்சிட்டு வேலையை பாரு” எனக் காஃபி கிளாஸை அவள் கையில் கொடுத்தவர் எழுந்து சென்றார்.

ஒரு நொடி கனவில் கேட்ட குரலை நினைத்துப் பார்த்தவள் நெஞ்சை அழுத்திப் பிடித்தாள். மனதின் சஞ்சலத்தை ஒதுக்கியவள் எழுந்து முந்தானையை எடுத்துச் சொருகிக் கொண்டு முன்புற வாசலுக்குச் சென்றாள்.

வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்துக் கோலமிட்டு நிமிர, கிழக்கே சூரியனும் நிமிர்ந்தெழுந்தான். வீட்டின் முன் இருந்த வேப்பமரத்தில் காகம் மொத்தமும் கூட்டமாகக் கரைய, மீண்டும் கனவின் நினைவு.

அடுப்பறைக்குச் சென்று பாத்திரத்தைச் சுத்தம் செய்து முடித்தவள் பின்புறம் சென்றாள். அவள் அன்னை மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்து பால் கறந்து எடுத்து வந்தார். வீட்டிற்குள் செல்ல, எதுவும் பேசாமல் தாண்டிச் சென்ற மகளைப் பார்த்தவர் சமையலறைக்குள் சென்று சமையல் வேலையில் இறங்கினார்.

வைக்கோல் கட்டுகளைப் பிரிந்து அதிலிருந்து சிறிது உருவி அங்கிருந்த இரு மாட்டின் முன்பு பிரித்துப் போட்டவள், கட்டப்பட்டிருந்த இளங்கன்றை அவிழ்த்து மாட்டின் அருகே விட்டாள். அங்கிருந்த கல்லில் கன்னத்தில் கை வைத்து வெறித்த பார்வையோடு அமர்ந்தாள். அங்கும் காகம் கரைந்தவாறு சுற்றி வட்டமிட, காதை மூடியவாறு எழுந்து வீட்டிற்குள் சென்றாள்.

அன்னையின் அருகே சென்று நின்றவள், “அம்மா! காக்கா கத்துனா யாராவது ஊருக்குப் புதுசா வருவாங்கன்னு தான அர்த்தம். நம்ம வீட்டுக்கு யாரும் வாராங்களா?” எனச் சாதாரணமாகக் கேட்டாலும் அவள் எதிர்பார்ப்பு அந்த வார்த்தைக்குள் வெளிப்படையாகவே தெரிந்தது.

“ஒத்த காக்கா கத்துனா தான் அப்படி சொல்லுவாங்க, காக்கா கூட்டமால்ல கத்துது? அப்படினா ஊருக்குள்ள ஏதாவது கெட்டது நடக்கும்” என்றவர் சமையல் வேலையில் கவனமுடன் இருக்க, அவள் முகம் பார்க்கவில்லை.

“அம்மா! நான் எல்லக்காளியம்மன் கோவிலுக்குப் போயிட்டு வரட்டுமா?” எனக் கேட்க,

“எல்லையில இருக்குற கோவிலுக்குத் தனியாவா போவ? வேண்டாம்டி சாயங்காலம் ஜெயந்தி, பூவவேணாக் கூட்டிட்டு போ. இப்பவே போணும்னா ஊருக்குள்ள இருக்குற அம்மன் கோவிலுக்குப் போ” என்றார் அழுத்தமாக.

அவனைப் பற்றி அறிய வேண்டும். அதற்காகவே எப்படியும் ஜெயந்தி வீட்டிற்குத் தான் போக வேண்டும். அம்மா சொல்லுறதும் சரி தான் என நினைத்தவள் அவரிடம் தலையை ஆட்டிவிட்டு கோவிலுக்குக் கிளம்பிச் சென்றாள்.

கயல்விழி பெயருக்கேற்றார் போல் சற்று பெரிய கண்கள், சிறிய நாசி, சிறிய வடிவான சிவந்த உதடுகள், கொலுகொலு கன்னங்கள், இடை தாண்டிய கருங்கூந்தல் என இயற்கையிலே அழகு நிறைந்தவள்.

வேல் முருகன், கற்பகம் தம்பதியரின் ஒற்றை புதல்வி. சிறிது நிலத்தில் விவசாயம், இரு பசுமாடுகள் என போதுமான அளவு வருமானத்தில் அவள் தேவைகளைச் சரி வரச் செய்து நிறைவுடனே வளர்த்தனர். பி.எஸ்.சி பாட்டனி முடித்து, பின் பி.எட் இறுதி தேர்வு எழுதியுள்ளாள். தந்தைக்கு செல்ல மகள், இதுவரை தந்தை சொல்லே வேத வாக்கு. ஆனால் இனிமேல்?

பசுமைக்குக் குறைவில்லாத எழில்மிகு மலையடிவார கிராமம் பூவரசம் புதூர். ஊருக்கு வடக்கும் மேற்கும் அடர் காடுகள் நிறைந்த மலைகள் எல்லைகளாக இருக்க, தெற்கே வற்றாத பெரிய ஆறு எல்லையாக எப்போதும் நீரோட்டமுடன் இருக்கும். கிழக்கு எல்லையில் சிறு குன்றின் மேல் முருகர் கோவிலும் அதற்குச் சிறு தொலைவில் எல்லையைக் காக்கும் காவல் தெய்வமான காளியம்மன் கோவிலும் அமைந்திருக்கும். அதிலிருந்து நீண்ட நெடும் சாலையொன்று நகரத்திற்குச் செல்லும் வழி.

ஊருக்கு நடுவே முத்து மாரியம்மன் கோவிலும் அதன் பின் பெரிய தெப்பக்குளமும் வெட்டப்பட்டிருக்கும். ஊருக்குள் ஓரமாக நீண்ட கண்மாய் (சிற்றோடை) ஊராரின் நீர் தேவைக்குப் போதுமானதாக இருந்தது.

கோவிலுக்குள் சென்றவள் அம்மன் சன்னதி சென்று கரம் கூப்பி வணங்கி நின்றாள். அவன் நலமோடும் நீண்ட ஆயிலோடும் வாழவேண்டும் என்ற ஒரு வரி தான் எப்போதும் அவள் வேண்டுதல். பிரசாதமாகப் பெற்ற குங்குமத்தை நெற்றியில் மெல்லிய கோடாய் இட்டவள் பின்புறம் குளக்கரை சென்று படித்துறையில் அமர்ந்தாள். 

கனவில் கேட்டது அவன் குரல் தான் ஆனால் அவன் முகம் காணவில்லை. இப்போது நினைவில் அவன் முகம் காண முயன்றவளுக்கு, கிட்டத்தட்ட ஏழு வருடம் முன் பார்த்த அவன் முகம் அழிந்த ஓவியம் போல் லேசாக நினைவிற்குள் வந்து சென்றது. தனக்கு உரிமையான பொருளை உடைத்த பின் அதன் மீது ஏக்கப் பார்வையை வீசும் குழந்தை போல் தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தை ஒரு வறட்டு புன்னகையுடன் பார்த்தவள் எழுந்து சென்றாள்.

மன அமைதி வேண்டிதான் அங்கு அமர்ந்தாள் ஆனால் மன அமைதி தான் கிடைக்கவில்லை.

அவனைப் பற்றிய சிறு செய்தியேனும் அறிந்து கொள்ள வேண்டும் என அவன் வீடு இருக்கும் தெரு வழியாகச் சென்றாள்.

கடிகாரத்தின் நொடி முள்ளைவிட வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு நடுவில் தானும் ஓடி, ஓய்ந்து போய் வந்திருந்தான் அன்புச்செழியன்.

பெங்களூரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங்கில் தன் காரை நிறுத்தினான். வேலையின் அலைச்சல், அலைச்சலின் சோர்வு என வாடி, களைப்புடன் வந்தவன் தன் ப்ளாட்டிற்குள் சென்று சோஃபாவில் அமர்ந்தான்.

கசங்கிய சட்டை, கலைந்த தலை, வாடிய முகம், தலைவலி வேறு என வந்தவன் கால்களைத் தூக்கி நேராக நீட்டி, சட்டையின் முதல் இரண்டு பட்டனைக் கழட்டிவிட்டு தலையை பின் புறம் சாய்த்து விழி மூடினான்.

ஒரு வளைக் கரம் அவன் தலை முடிக்குள் கரம் கோர்த்து மென்மையாக வருடியது. அந்தச் சுகத்தை ரசித்தவனுக்கு நெஞ்செல்லாம் மழைச் சாரல் போல் அவள் வாசம் ஜில்லென்று வீசிச் சென்றது. அக்கரம் மென்மையோடு அவன் முகத்தில் தடவ அவனுள் ஒரு சிலிர்ப்பு வர சோர்வு சற்று நீங்கியது.

விழி திறந்தால் இந்த சுகம் களையும் என மேலும் விழிகளை இறுக மூடினான். தனிமையின் வெறுமைக்குள் உறவுகளின் இனிமையைத் துறந்து வாழ்பவன். கற்பனையிலே அவளோடு வாழும் கனவுக் காதலன்.

அன்புச்செழியன் சென்னையில் பிரபலமான கல்லூரியில் பி.இ சிவில் முடித்து இரு வருடம் சென்னையில் வேலை செய்தான். பின் மூன்று வருடங்களாக பெங்களூரில் வேலை செய்து வருகிறான். வருடம் முழுவதும் வேலை வேலை எனச் சுற்றுபவன் வருட விடுமுறையில் வட இந்தியா முழுவதும் மனம் போல் சுற்றுவான்.

மனம் சரியில்லாமல் இருப்பின் பைக்கை எடுத்துக் கொண்டு மணிக்கணக்கில் நாள் கணக்கில் சுற்றும் நாடோடி. எங்கே, ஏன் என்று கேட்பதற்குக் கேள்வி இல்லை. கேட்பதற்கும் அனுமதிப்பதில்லை.

காலையில் அலைபேசியின் அழைப்பில் விழி திறந்தான். சோஃபாவில் உறங்கியதால் கை, கால்கள் வலிக்க எழுந்து சோம்பல் முறித்தவன் அழைப்பை எடுத்தான்.

அவன் பாட்டியிடமிருந்து வந்திருக்க, பேசி இரு வாரமாகியதால் முதலில் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

“கண்ணு! ஊருக்கு வாயா, நீ ஏயா தனியா கஷ்டப்படணும்?” ஊருக்கு அழைத்தால் கோபம் கொள்வான் என அறிந்தும் எப்போதும் போல அழைத்தார் சிவகாமி.

“ஆச்சி, எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன். ஊருக்கு வரல, திரும்பத் திரும்பக் கூப்பிடாதீங்க” அழுத்தமுடன் கூறினான்.

“சரி ராசா! உனக்குக் கஷ்டமில்ல என் மக ஒத்த ஆளா அம்புட்டு வேலையும் பார்க்குறான். நீ இங்க இருந்தா அவனுக்குக் கொஞ்சம் ஒத்தாசையா இருக்குமில்ல? அவனுக்கும் வயசாச்சி…” என்றார் கொஞ்சும் குரலில்.

“ஆச்சி என் அப்பாவுக்கு அப்படி ஒன்னும் வயசாகிடல இப்பவும் அவர் யங் தான். எல்லா வேலையும் அவராலையே கவனிக்க முடியும், அவர் எப்பவும் சூப்பர் மென் தான்” எனத் தந்தையைப் பெருமையாகக் கூறுவது போல் ஆச்சியின் அழைப்பை மறுத்தான்.

“சரிடா, நான் பொண்ணு பார்க்குறேன் வந்து கல்யாணம் பண்ணி அவளையும் கூட்டிட்டுப் போ, அதுக்கப்பறம் நீ இந்த ஊருக்கே வர வேண்டாம். உனக்கு பிடிச்ச இடத்துல அவ கூட சந்தோசமா வாழ்ந்தா போதும். உன்ன ஒருத்தி கைல பிடித்துக் கொடுத்த நிம்மதியில நான் கண்ண மூடுறேன்” கோபமுடன் ஆரம்பித்து சிறு விசும்பலுடன் முடித்தார்.

ஆனால் அவர் கல்யாணம் என்ற வார்த்தையை கூறும் போதே காலை கட் பண்ணியவன் சுவரில் சாய்ந்து விழி மூடினான். சிறு பெண்ணாய் தன்னவளின் குழந்தை முகம் இன்றும் அவன் கண்முன் பசுமையுடன் வந்து சென்றது.

விழியோரம் கசிந்த துளியை துடைத்துக் கொண்டு பூஜையறை சென்று கரம் கூப்பி நின்றார் சிவகாமி.

அதே நேரம் அவர் மகன் சிவசுப்பிரமணியனும் வந்து வணங்கி நின்றார். 

சிவசுப்பிரமணியன் ஐம்பத்தி நான்கு வயது. ஆனால் பார்ப்பதற்கு நாற்பது வயதுபோல் தோற்றமுடையவர். ஊரில் பெரிய மனிதர். அவர் வார்த்தைக்கு எப்போதும் மரியாதை உண்டு.

அந்த ஊரை, விவசாயத்தை, தன் தொழிலாளர்களை, தன் மண்ணை நேசிப்பவர். அனைவரிடமும் கனிவுடனும் அன்புடனும் பேசும் பண்பானவர். ஆனால் சிறு தவறு என்றாலும் மன்னிக்க மாட்டார். தவறு செய்கையில் அவர் காட்டும் முகமே வேறு.

உணவுண்டு கிளம்பும் வரை அன்னையின் முக கவலையைக் கவனித்தவர் அதன் அர்த்தம் உணர்ந்து, அவர் அருகே வந்தார், “அம்மா! அவன் பிறந்த மண்ண விட்டு எங்க போயிற போறான்? விதி வரும் போது அவன் கட்டாயம் வருவான்” நம்பிக்கை கூறியவர் எழுந்து சென்றார்.

Advertisement