Advertisement

விழி – 8 

“நிஜமா உங்கட்ட நான் இதை எதிர்பார்கலை.. கொஞ்சம் கூட…” என்று கூறிய மலர்விழியின் முகத்தில் அத்தனை வேதனை..

‘நீயா இது…’ என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நின்று சத்தியமாய் வஜ்ரவேலை வேரோடு பிடுங்கி எறிவது போல் இருந்தது..

என்ன பதில் பேசுவது என்று கூட தெரியாமல், அப்படியே அமர்ந்திருந்தான்.. என்ன சொல்ல முடியும்… எதை சொல்ல முடியும்.. ஆரம்பத்தில் இருந்து அனைத்துமே அவன் பக்கம் தவறுகள் தான் நிறைய இருக்கிறது… ஆனால் ஒவ்வொன்றையும் அத்தனை அழகாய் புரிந்து நடந்துகொள்கிறாள் மலர்விழி..

எல்லாமே சரியாகிவிட்டது, இனி மகிழ்வோடு தங்கள் வாழ்வை தொடங்குவோம் என்று நினைத்திருந்த நேரத்தில் தான் வஜ்ரவேல் வேலையில் பிரச்சனை.. கையில் இருக்கும் பணத்தை வைத்து சமாளித்து, எப்படியாவது அடுத்த வேலைக்கு சென்றிடலாம் என்று பார்த்தால், வேலை கிடைப்பது என்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது..

முதலில் மலர்விழிக்கு தெரியாமல் சமாளிப்பதே அத்தனை கஷ்டமாய் இருந்தது..

‘இன்னிக்கு ஆபிஸ்ல என்ன நடந்துச்சு…’ என்று கேட்பவள், அவன் பதில் சொல்வதற்கு முன்னாடியே  ‘எங்க ஸ்கூல்ல இன்னிக்கு…’ என்று அவள் பள்ளிக் கூடத்தில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை சொல்வாள்..

சில நேரங்களில் கடுப்பாய் இருக்கும் அவனுக்கு..

‘ஐயோ கொஞ்சம் வாயை மூடேன்…’ என்று கத்த வேண்டும் போல் இருக்கும்..

ஒருநாள் சரியான தலைவலி அவனுக்கு. வெயில் வேறு அன்று ஜாஸ்தியாய் இருக்க, வெளியே சென்றவன் மதியமே வீட்டிற்கு வந்துவிட்டான்.. தலையை அப்படியே பிய்த்து தனியே கழட்டி வைத்துவிடலாமா என்று இருந்தது..

அப்படி ஒரு வலி… அனைத்திலுமே ஒரு எரிச்சல் பிறக்க, கையிலிருந்த பைலை தூக்கி எறிந்தவன், அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டான்.. பழைய ஆபிஸிலேயே மீண்டும் முயற்சிக்க, ராஜேஷும் அவனுக்கு உதவினான். ஆனால் இவர்களது ஹெட்டோ, ‘அட்லீஸ்ட் டூ மன்த்ஸ் ஆது வெய்ட் பண்ணிதான் ஆகணும்…’ என்று சொல்ல, அதுவரை என்ன செய்வது என்று மண்டை குடைச்சலாய் இருந்தது..

தினம் தினம் வீட்டில் மலர்விழியை சமாளிப்பது வேறு கொடுமையாய் இருந்தது..

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், அவள் சாதரணமாக எது கேட்டாலுமே, அது அவனுக்கு ஒருவித பதற்றத்தை கொடுத்தது.. அதிலும் அவன் ஆபிஸ் கதை என்று ஏதாவது அவள் கேட்டாள் போதும், இருதய துடிப்பு எகிறும்..

ஒருநாள் “என்னங்க… உங்களுக்கு லீவே விடமாட்டாங்களா..?? டெய்லி போறீங்க…” என்று கேட்க,

‘இது வேறையா…’ என்று நினைத்தவன், வார இறுதியில் வீட்டில் இருந்தான்..

ஆனால் அது வேறு மாதிரியான அவஸ்தையாய் இருந்தது. மலர்விழி கட்டும் அன்பு, சில நேரங்களில் எதிர்பாரா விதமாய் ஏற்படும் நெருக்கம், இதெல்லாம் இன்னும் போட்டு வஜ்ரவேலை படுத்த, உண்மையை மறைப்பது என்பது எத்தனை சிரமம் என்பது அவனுக்கு அப்போது தான் புரிந்தது.

“சென்னை வந்து இத்தனை நாள் ஆச்சு.. எங்கயாது வெளிய போகலாமா…” என, முதல் முறை கோவிலுக்கு அழைத்துச் சென்றான்..

கோவிலில் ஆரம்பித்தது, அடுத்த அடுத்த வாரங்களில், பீச், சினிமா, ஹோட்டல் என்று தொடர்ந்தது.. கூடவே கையில் இருக்கும் காசும் குறைந்துகொண்டே இருந்தது..

செலவு செய்யும் ஒவ்வொரு நொடியும் அடுத்தது என்ன?? எப்படி சமாளிப்போம்…?? என்று மனதில் கேள்வி பிறக்காமல் இல்லை..

ஆனால் இதில் மலர்விழி மீது எவ்வித குறையும் சொல்ல முடியாதே.. யாருக்குமே ஆசைகள் இருக்கும் தானே.. அதுவும் திருமணமாகி தனிக்குடித்தனம் வந்து எங்கேயும் போகவும் இல்லை என்றால் எப்படி..

மலர்விழியை தனக்கு பிடித்திருந்த போதும், அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறது என்ற போதும், வாழ்வில் அடுத்த கட்டம் போக இருவருக்குமே விருப்பம் தான் என்னும் போதும், அவள் பக்கம் எவ்வித தவறுமே இல்லையெனும் போதும், வஜ்ரவேலால் அடுத்து என்று அவளிடம் முன்னேற முடியவில்லை..

சில நேரம் ‘என்னங்க இந்த சேலை நல்லாருக்கா…’ என்று வந்து நிற்பாள்.. சும்மாவே அவளை காணும் போது மனம் தடுமாறும், அதுவும் அவள் நல்லாருக்கா என்று கேட்டு அவனையே பார்க்கும் போது, ‘ஐயோ…’ என்று நெஞ்சம் அடித்துகொள்ளும்..

அவஸ்தை தான்.. பெரும் அவஸ்தை தான்.. ஒருநாள் அவனால் அவனையே கட்டுப்படுத்த முடியவில்லை.. வேலையாவது வெட்டியாவது.. அது வரும் போது வரட்டும்… எனக்கு என் விழியாச்சி தான் முக்கியம் என்று தோன்ற, ஒருவேகம் அவனுள்.

“செமையா இருக்க…” என்றவன், அவளை இறுக அணைக்க, எப்போதும் கண்ணில் ஆவல் தெரிந்தாலும் எட்டியே நிற்கும் கணவன், அது ஏன் என்று புரியவில்லை என்றாலும், இன்னும் அவன் இந்த திருமணத்தை ஏற்கவில்லையோ என்று தனக்குள்ளே குழம்பி தவித்து இருப்பாள்..

ஆனால் அவனிடம் கேட்க மாட்டாள்.. என்ன கேட்க முடியும்??

‘ஏன் நீ என்னை நெருங்க மறுக்கிறாய்…??’ என்று அவள் கேட்க முடியுமா என்ன..

எதுவாக இருந்தாலும் அவனே மனம் மாறட்டும் என்று பொறுத்திருந்தாள்.. அப்படியிருக்க, இப்போது திடீரென்று அவனே அணைக்கவும், ஆரம்பத்தில் திடுக்கிட்டாலும், கொஞ்சம் கூச்சமாய் கூட இருந்தாலும், என் கணவன் தானே என்று அவனோட இழைய தொடங்க, மலர்விழியிடம் இருந்து எவ்வித மறுப்பும் இல்லையென்றதும் வஜ்ரவேலுக்கு மேலும் மேலும் முன்னேறும் வேகம் பிறந்தது..

அணைப்போடு நில்லாமல், அடுத்தடுத்த கட்டங்கள் போக, அவளுமே அவனுள் லயிக்க தொடங்க, வஜ்ரவேலும் சரி, மலர்விழியும் சரி தன்னிலை மறக்க, முத்தமிட அவள் முகம் நிமிர்த்த அவளோ,

“இப்போதான் பொண்டாட்டி இருக்கிறதே தெரியுது போல.. வேலை வேலை வேலை எப்போ பார்…” என்று லேசாய் சலிப்பது போல் சொன்னாலும், குரலில் அத்தனை குழைவு..

‘வேலை…’ என்ற ஒரு வார்த்தை போதாதா, வஜ்ரவேலை தாக்க. நிமிர்த்திய முகத்தை ஒருமுறை இறுக பிடித்தவன், அப்படியே விட்டுவிட்டான். தன் பலத்தை எல்லாம் அவன் மீது போட்டு நின்றிருந்தவள், அவன் விடுவான் என்று எதிர்பார்க்காததால் அப்படியே லேசாய் தள்ளாட, விட்டவனே பிடிக்கும் நிலை..

“என்னங்க…” என்று அதிர்ந்து பார்க்க,

“ஓ.. ஒண்ணுமில்ல…” என்றவன் “சா.. சாரி…” என்றுவிட்டு வேகமாய் கீழே ஓடிவிட்டான்..

மலர்விழியோ அப்படியே திகைத்து நின்றிருந்தாள்.. அவள் மனமோ பலவாறாய் நினைத்தது.. என்ன பிரச்சனை?? இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் என்னவோ இருக்கிறது…?? என்னானது?? என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு எதுவுமே புலப்படவில்லை..

கீழே சென்ற வஜ்ரவேலோ ராஜேஷ் என்னவென்று கேட்டதற்கும் ஒன்றும் சொல்லாமல் அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து இருக்க, ராஜேஷிற்கும் என்ன என்று ஒரு அளவுக்கு மேல் கேட்க முடியவில்லை.                     

“பேசாம, மலர்விழி கிட்ட சொல்லிடுடா… பாவம் அந்த பொண்ணு… ரெண்டு மாசம் தானே பல்ல கடிச்சிட்டு பொறுத்துக்கோ….” என்று மட்டும் சொன்னான்..

‘ம்ம் பாப்போம்…’ என்றவன் சிறிது நேரத்தில் மேலே வர, மலர்விழி உறங்கியிருந்தாள்.. முகத்தில் அத்தனை செழிப்பில்லை.. யோசனையில் படுத்திருப்பாள் போல முகம் ஒருவித குழப்பமாய் இருந்தது உறங்கும் போது கூட..

வெகு நேரம் கட்டிலில் அவளருகே அமர்ந்து அவள் முகத்தையே பார்த்தவன், “சாரி விழியாச்சி…” என்று அவளுக்கு கேட்காத குரலில் சொன்னவன் அடுத்து உறங்கவே இல்லை..     

மறுநாள் விடியல் இருவருக்குமே மௌனமாய் கழிய, அவள் பள்ளிக்கூடம் கிளம்ப, வேகமாய் கீழே இறங்கியவன், வண்டியை கிளப்பி நிற்க, அவளோ எதுவுமே பேசாமல் ஏறிக்கொண்டாள்.

கோவமாய் போடா என்று போயிருந்தால் கூட, அவளுக்கு கோவம் என்று நினைக்கலாம். ஆனால் இப்படி மௌனமாய் உடன் வருபவளை என்னவென்று  நினைக்க. மலர்விழியை பள்ளியில் இறக்கியவன், அடுத்து தன் வேலையாய் செல்ல, அவளிடம் உண்மையை சொல்லிவிடலாமா சொல்லிவிடலாமா என்று மனம் போட்டு பதைக்க அன்றைய நாளில் வெயில் வேறு அதிகமாய் இருக்க, எல்லாம் சேர்ந்து தலைவலி வந்துவிட்டது..

வீட்டிற்கு வந்தவன், தன் ரெஸ்யும் மற்றும் சான்றிதல்கள் அடங்கிய பைலை அப்படியே போட்டுவிட்டு, தலையை பிடித்து அமர்ந்தவன், அவனையும் அறியாது கண்ணயர்ந்து விட்டான்..

மாலை வழக்கம் போல் பள்ளிவிட்டு வந்தவள், கீழே வஜ்ரவேல் வண்டியை பார்த்ததும், ‘சீக்கிரமே வந்திட்டார்…’ என்று ராஜேஷ் வீட்டினை பார்க்க, அதுவோ பூட்டி கிடந்தது..

‘இவர் மட்டும் தான் வந்திருக்கார் போல…’ என்று நினைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைய, சோபாவிலேயே அயர்ந்து உறங்கும் வஜ்ரவேல் கண்ணில் பட,

‘உடம்பு சரியில்லையோ…’ என்று நினைத்து வேகமாய் அவனருகே செல்ல, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். எங்கே தொட்டு பார்த்தால் கூட, எழும்பிவிடுவானோ என்று அமைதியாய் அவன் உறக்கம் கலையாமல் தள்ளியே நின்றாள்..

அந்த நிலையில் அவனை காணும் போது, சுத்தமாய் முதல் நாள் நடந்தது எல்லாம் நினைவிலேயே இல்லை… அவனது சாப்பாடு பேக்கை எடுக்க அதுவோ காலையில் இவள் எப்படி கொடுத்துவிட்டாளோ அப்படியே அதே கணத்திலேயே இருந்தது..

‘சாப்பிட கூட இல்லையா…’ என்று முணுமுணுத்து, நகர போக, அவனது பைல் கண்ணில் பட,

“ஹ்ம்ம் உள்ள வைக்காம இப்படி போட்டு வச்சிருக்காங்க…” என்று சொல்லியபடி அதனை எடுக்க, அவனது ரெஸ்யும் அவளை பார்த்து சிரித்தது..

“ரெஸ்யும்… இது ஏன் இப்போ…” என்றபடி பார்க்க, உள்ளே முழுக்க அவன் சான்றிதழ்கள்… அப்போதும் கூட அவளுக்கு சந்தேகம் எல்லாம் வரவில்லை..

“இதெல்லாம் இப்போ ஏன் வெளிய எடுத்து போட்டிருக்கார்…” என்று சொல்லியவள் எதையோ யோசித்தபடி, அந்த பைலை பீரோவில் வைத்து பூட்டி வர, வஜ்ரவேல் போன் சிணுங்கத் தொடங்கியது..

எங்கே விட்டால் அவன் உறக்கம் கெட்டுவிடுமோ என்று வேகமாய் செல்லை எடுத்து மீண்டும் ரூமுக்கே வந்துவிட, அழைப்பு வந்தது புதிய எண்ணில் இருந்து.. யாராக இருந்தாலும் என்ன என்று எண்ணி அழைப்பை ஏற்று காதில் வைக்க,

“Mr. வஜ்ரவேல்..” என்று அழகிய பெண் குரல் கேட்க, மீண்டும் ஒருமுறை வந்த எண்ணை பார்த்துவிட்டு,

“நோ.. ஐம் ஹிஸ் வொய்ப்…” என,

“ஓகே மேம்.. நாளைக்கு காலையில ஷார்ப்பா பத்து மணிக்கு இண்டர்வியு இருக்கு.. ப்ளீஸ் உங்க ஹஸ்பன்ட் கிட்ட சொல்லிடுங்க…” என்று அந்த பெண் சொல்ல, இவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

என்ன இண்டர்வியு?? யாருக்கு இண்டர்வியு?? அதை அப்படியே கேட்டும் விட்டாள்.. அழைப்பு விடுத்தவளோ உண்மை நிலை தெரியாது, உன் கணவனுக்கு தான் வேலைக்கான இன்டர்வியு என்று சொல்லி வைக்க, மலர்விழிக்கு அதிர்ச்சியாய் இருந்தது..

“வேலைக்கு போறாங்க தானே அப்புறம் என்ன..??” என்று யோசிக்க, சற்று முன் பார்த்த அவன் பைல் நினைவு வர, மீண்டும் அதனை எடுத்து பார்க்க, மலர்விழிக்கு எனவோ புரிவது போல் இருந்தது.

ஒவ்வொன்றாய் நினைத்து பார்த்தாள். அவனது திடீர் மாற்றம், பதற்றம், ஒதுக்கம், நிம்மதியின்மை… ஒன்றோடு ஒன்று கோர்த்து பார்க்கையில், அவளுக்கு கிடைத்த பதில் வஜ்ரவேல் இப்போது வேலையில் இல்லை என்பதே.. அப்படியே பொத்தென்று கட்டிலில் அமர்ந்துவிட்டாள்..

எத்தனை பெரிய விஷயம் இது.. ஆனால் தன்னிடம் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை என்று தோன்ற ஏனோ மனம் வெகுவாய் வேதனை பட்டது.. அவன் மனைவி தானே நான்.. அவன் சுக துக்கங்களில் பங்கு பெற தானே அவனை திருமணம் செய்திருக்கிறாள்.. சிறு சிறு விஷயங்கள் சொல்லாமல் மறந்து போகலாம். ஆனால் இது..??

எப்படி முடிந்தது ?? தன்னிடம் இருந்து எப்படி மறைக்க முடிந்தது ?? என்று தோன்ற உள்ளம் குமுறியது.. அழுகை எல்லாம் இல்லை.. இது வேறு மாதிரியான உணர்வு.. கண்களை மூடி தன்னை சம நிலை படுத்த முயன்றாள்.. சத்தம் போட கூடாது.. சண்டை போட கூடாது.. பொறுமையாய் பேச வேண்டும்..

எதுவாக இருந்தாலும் அவன் எழட்டும், கேட்போம் என்று அவன் எழுவதற்குள்  ஒருமுறை குளித்து முடித்து வர, சற்றே மனம் நிதானத்தில் இருப்பது போல் தோன்றியது..

எப்போதடா இவன் விழிப்பான் என்று காத்திருக்க, வானம் கூட இருட்ட தொடங்கிவிட்டது. நேரம் ஆக ஆக வஜ்ரவேல் எழாமல் போக போக, அவள் மனம் பதை பதைத்தது..

‘இப்படி தூங்குறாங்க..’ என்று யோசித்தவள், தான் செய்வது அறிவீனம் என்று தெரிந்தாலும், நடுங்கும் உள்ளதோடு மெல்ல அவன் மூக்கின் கீழ் விரல் வைத்து பார்த்தாள்,

‘ஹப்பா.. ப்ரீத் பண்றாங்க..’ என்று தோன்ற ஒரு நிம்மதி. அவனையே பார்த்து அப்படியே அவளும் அமர்ந்துவிட்டாள்.

மேலும் சில நேரம் அவளை காத்திருக்க வைத்தே வஜ்ரா முழித்தான்… முழிக்கவும்  முதலில் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. நேரே மலர்விழி மங்கலாய் தெரிந்தாள். கண்களை கசக்கி பார்த்தவன், அவளே தான் அமர்ந்திருக்கிறாள், அதுவும் தன்னை பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள் எனவும்,

‘இவ எப்போ வந்தா…’ என்று யோசித்தபடி கடிகாரம் பார்க்க, அதுவோ இரவு ஒன்பதை காட்டியது.

‘இவ்வளோ நேரம் தூங்கிட்டேனா…’ என்றெண்ணியவன், எழ போக, முதலில் முடியவில்லை.. சற்று நிதானித்து, எழுந்தவன், அடுத்து தன் பைல் நியாபகம் வந்து பார்வையை ஓட்ட,

“எல்லாம் பீரோல எடுத்து வச்சிருக்கேன்… பிரெஷ் ஆகிட்டு வாங்க.. சாப்பிடலாம்…” என்றுவிட்டு அவன் முகம் பார்க்காமல் மலர்விழி சமையலறை நோக்கி செல்ல,

‘என்.. என்ன பீரோல எடுத்து வச்சிருக்கா.. பைல் பார்த்தாளா..??’ என்று படபடப்பு கூட, வேகமாய் பீரோவை திறந்து பார்த்தவன், அவள் சாதரணாமாய் சொல்லி சென்றது போல தோன்ற,

“உள்ள தானே எடுத்து வச்சா..” என்று நினைத்துக்கொண்டு, அவனும் ஒரு குளியலை போட்டு வர, இருவருமே எதுவுமே பேசாமல் அடுத்து உண்டு முடித்தனர்..

வெகு நேரம் உறங்கியது வஜ்ரவேலுக்கு எப்படியோ இருந்தது.. மலர்விழி முகம் நேற்று நடந்ததற்கு தான் இப்படி என்னவோ போல் இருக்கிறது என்று நினைத்தான்..  வீட்டு ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவன், அவன் மொபைலை தேட,

“உங்களுக்கு போன் வந்திச்சு.. நான் தான் பேசினேன்…” என்று அவன் முன் போனை நீட்டினாள்.

“யார் பண்ணா…” என்று வாங்கி பார்த்தவன், புதிய எண்ணாய் இருக்க, மீண்டும் கேள்வியாய் நோக்க, மலர்விழி அவனை நேராய் பார்த்து, யார் அழைத்தார்கள் எதற்கு அழைத்தார்கள் என்று சொல்ல, கேட்டிருந்தவன் அதிர்ந்து போனான்..

“விழியாச்சி…!!!!!!” என்று அதிர்ந்து விளிக்க,

“நிஜமா உங்கட்ட நான் இதை எதிர்பார்கலை.. கொஞ்சம் கூட…” என்று கூறிய மலர்விழியின் முகத்தில் அத்தனை வேதனை..

உண்மை தெரிந்துவிட்டது…. இனி எதுவும் சொல்ல முடியாது… உண்மையை தவிர என்ற நிலையில் இருந்தான் வஜ்ரா..

அவள் முகத்திலும் கண்களிலும் இருந்த வேதனை அவனை இன்னும் வருந்த செய்தது..

“விழி…” என்று தொடங்க..

“பேசாதீங்க…” என்று கத்தி விட்டாள்..

அவள் கத்தல் இன்னும் அதிர்வை கொடுத்தது வஜ்ரவேலுக்கு.. அடுத்து என்ன சொல்வாளோ என்ன கேட்பாளோ என்று பார்த்தவன் விழிகளில் அப்பட்டமாய் களேபரம் தெரிய அப்படியே நின்றான்..

“கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லணும்…” என்றவள்,

“எப்போ இருந்து வேலை இல்லை..” என,

“அது…..” என்று அவன் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்க,

“பதில் மட்டும்…” என்றாள் கணீர் குரலில்..

முதல் முதல் அவன் கேட்ட குரல்.. ‘வழிய மறைச்சு நின்னா எப்படி போறதாம்…’ என்று அவள் முதல் முதலில் பேசும் போது இப்படிதான் குரல் கணீரென்று இருந்தது.. அந்த நினைவு இப்போதும் வந்து தொலைக்க, அதிலிருந்து தண்ணி மீட்க தலையை உலுக்கியவன், அவள் கேள்விக்கான பதிலை சொன்னான்..

அது இன்னும் அவளுக்கு அதிர்ச்சி..

‘சரி இப்போதான் எதோ வேலை போயிருக்கும்..’ என்று நினைத்திருக்க, திருமணம் போதே அவன் வேலையை விட்டிருக்கிறான் என்று தெரிய, நொந்து போனாள்.. சொல்லபோனால் இது ஒரு ஏமாற்று விஷயம் தானே.. ஆனால் அப்படி கேட்க முடியுமா…??

இன்னும் வேதனையோடு அவனை காண, அவனோ தலையை கீழே போட்டான். சுத்தமாய் அவன் உருவத்திற்கு ஒட்டாத தோற்றம்..  உனக்கு இது வேண்டாம் இத்தோற்றம் உனக்கு பொருந்தவே இல்லை என்று அவளுக்கு அப்போதும் கூட கத்த வேண்டும் போல் இருந்தது..

வெகு நேரம் வரைக்கும் மௌனம் மட்டுமே இருவருக்கும் இடையில் பேசிக்கொள்ள, அவளும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை, அவனுக்கோ அவள் பேசாத ஒவ்வொரு நொடியும், அடுத்து என்ன கேட்பாளோ என்று ஒரு திகிலாகவே இருந்தது..

வீட்டில் சொல்லிவிட்டால், அவ்வளவு தான்… என்னை எல்லாம் மதிக்க கூட மாட்டார்கள் என்று நினைத்தான்.. அதுவும் கல்யாணம் போதே வேலை இல்லை, உண்மையை மறைத்திருக்கிறான் என்று தெரிந்தால், சுத்தம் தங்கவேல் இவனை அடித்தாலும் அடித்துவிடுவார்..

ஒருவித மிரட்சியோடு அவளை காண, அவளோ தீவிரமாய் எதையோ யோசித்திருந்தாள். சுளித்திருந்த புருவங்களும், ஒரே இடத்தில நிலைகுத்தி நிற்கும் பார்வையும் அவன் வயிற்றில் அமிலம் வார்த்துக்கொண்டிருந்தது..

“ஹ்ம்ம் சரி பார்த்துக்கலாம்…” என்றவள் எழுந்து போக,

“என்.. என்ன..??” என்றான் வேகமாய்..

“எப்படியும் எதாவது ஒரு வேலை கிடைச்சிடும் தானே.. அதுவரை மேனேஜ் பண்ணிக்கலாம்..” என்று கொஞ்சம் அமைதியாகவே சொன்னாள். முன்பிருந்த உஷ்ணம் இல்லை..

“சா.. சாரி…” என,

“நீங்க சாரி கேட்கனும்னு நான் இதை சொல்லலை.. நிஜமாதான் சொல்றேன்… பாத்துக்கலாம்.. என்ன முன்னாடியே சொல்லிருந்தா கொஞ்சம் செலவுகளை குறைச்சு இருக்கலாம்.. ம்ம் பாத்துக்கலாம்…” என்றவள் உறங்கச்  சென்றுவிட்டாள்.   

ஆனால் அவனுக்கு தான் எப்படியோ ஆகிவிட்டது.. இம்முறையும் மன்னித்துவிட்டாளா?? எப்படி எப்படி…??

அவனை இன்னும் நன்றாக திட்டியிருக்கலாம்… அத்தனை ஏன் ‘என்னிடம் உண்மையை மறைத்தாயா??’ என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கி இருக்கலாம்.. அதெல்லாம் இல்லாமல் இப்படி அமைதியாய் மலர்விழி போனது அவனுக்கு இன்னும் சங்கடமாய் போனது..

 

                       

Advertisement