Advertisement

விழி – 6

“உங்க போன் ரிங் ஆகிட்டே இருந்தது… குடுத்துட்டு போலாம்னு வந்தேன்…” என்றவள் பார்வை, ‘நீ மேல வா உனக்கு இருக்கு…’ என்று சொல்லாமல் சொல்ல,

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும், இப்போதைக்கு மேலே சென்றால், அதுவும் மலர்விழி அப்பா அம்மா இருக்கையில் எதுவும் பேசி, அதுவேறு அவர்கள் தப்பாய் புரிந்துகொண்டு ஏதாவது நினைத்துவிட்டால் அது இன்னும் பிரச்சனை என்று தோன்ற,

“விழியாச்சி….” என்று அழைத்தவன், அவளருகே செல்ல,

“நான் மாடிக்கு போறேன்…” என்று அவள் விலக போக,

“நான் பேசணும்…” என்று நிறுத்தினான்.

கடைசிவரை இதை சொல்லவே கூடாது என்று தான் நினைத்திருந்தான்.. ஒரு பெண்ணின் திருமணத்தை காத்திருந்து நிறுத்துபவன் எப்படி பட்டவனாய் இருக்க முடியும்??

அப்படி ஒரு எண்ணம் மலர்விழி மனதில் தோன்றி, தான் கீழிறங்கி விட கூடாது என்றே அவன் இதை சொல்லவில்லை.

அதுவுமில்லாமல் ராயப்பனூரில் மாணிக்கம் ஒருநாள் இவன் கண்ணில் பட்டுவிட்டான்..

“ஏன் டா மலர்விழிக்கு கல்யாணம்னு சொல்ல தெரிஞ்ச உனக்கு, எனக்கு கல்யாணம் பேசி முடிசிருக்காங்கன்னு ஏன்டா சொல்ல முடியலை..” என்று கடிய,

“டேய் மாப்பள.. எனக்கு அப்போ மலர்விழிக்கு கல்யாணம்னு மட்டும் தான்டா தெரியும்… நீ தான் மாப்பிள்ளைன்னு தெரியாது…” என, அவனை நம்ப முடியாத ஒரு பார்வை பார்க்க,

“நிஜமாடா… என் பொண்டாட்டி வழியில ஒரு கேதம்னு அவ ஊர்க்கு போனேன், வந்து பார்த்தா உனக்கு கல்யாணமே முடிஞ்சுபோச்சு.. நான் ஒன்னு சொல்லவா டா, மலர்விழி தங்கமான பொண்ணுடா… என் பொண்டாட்டிக்கும் அந்த பொண்ணுக்கும் நல்ல பழக்கம்..

நம்ம எப்படி நடந்துக்கிறோமோ அதுபோல தான் அதுவும் நடக்கும்.. நீ நல்லவிதமா இருந்தா, அந்த பொண்ணும் நல்ல விதமா இருக்கும்..” என்று சொல்ல, அவனுமே அதை உணர்ந்து தானே இருந்தான்..     

ஆக உண்மையை சொல்லி அவன் உள்ளதை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.. மற்றதை எல்லாம் சொன்னானே தவிர, உன் திருமணத்தை நிறுத்தவே ஊருக்கு வந்தேன் என்பதை சொல்லவே இல்லை. எப்படி சொல்ல முடியும். ஆனால் இப்போதோ தெரியவேண்டியவளுக்கு தானாய் தெரிந்து போனது..

“என்ன பேச போறீங்க…?? எதுனாலும் அப்பா அம்மா ஊருக்கு போகட்டும்…” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் மேலே சென்றுவிட்டாள்.

“ம்ம்ச்….” என்று சலிப்புற்றவன், அங்கே இருந்த இருக்கையில் பொத்தென்று அமர, அவனது தோற்றம் முக பாவனை எல்லாம் ராஜேஷிற்கு வித்தியாசமாய் பட்டது.

முகத்தில் தெரிந்த ஒரு அலுப்பு, ஒரு தவிப்பு, எதையுமே சடுதியில் தூக்கி எரியும் வஜ்ராவா இது என்று தோன்றியது அவனுக்கு.

“டேய் மாப்பிள.. விடு… சொன்னா புரிஞ்சுக்கும்டா…” என,

“புரிஞ்சுக்குவா.. ஆனா என்ன நினைப்பா…???” என்றான்..

அலுவலகத்தில் ஒருமுறை வஜ்ரவேலுக்கும், இன்னொரு நபருக்கும் லேசாய் உரசல் ஏற்பட்டுவிட்டது.. அப்போதும் ராஜேஷ் தான் சமாதானம் செய்தான்.

“அமைதியா இருடா.. எல்லாம் பார்க்கிறாங்க..?? என்ன நினைப்பாங்க உன்னை…” என்று அடக்க,  

“அதை பத்தி கவலையில்லை.. எனக்கு என்னை பத்தி தெரியும்.. அடுத்தவன் சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை…” என்று புஜங்களை முறுக்கி நின்ற வஜ்ரா இப்போது ‘என்னை பத்தி என்ன நினைப்பா…’ என்று கேட்கும் போது, முற்றிலும் வேறாய் தெரிந்தான்.

கொஞ்சம் அழகாகவும் தெரிந்தான்..

ஒருபெண் வாழ்வில் வந்துவிட்டால், மாறக்கூடாது என்று நினைப்பவனும் மாறிவிடுகிறான்.. அப்படியிருக்க வஜ்ராவின் பிடிவாதங்கள் எல்லாம் எம்மூலைக்கு செல்லும்..

“எடுத்து சொல்லு… ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. ஆனா பொறுமையா சொல்லு…” என,

“ம்ம்…” என்றவன்,

“இந்த வேலை விஷயம் வேற கொஞ்சம் டென்சனா இருக்குடா… இருக்க பணத்தில இதோ அட்வான்ஸ் கொடுத்து வீடு எடுத்தாச்சு.. ரெண்டு மாசம் பேப்பர் போட்டதுல சாலரி கிரெடிட் ஆகலை… இப்போ என்னை நம்பி ஒருத்தி.. எல்லாமே டக் டக்னு நடக்குது… டென்சனா இருக்கு..” என்றவன் அப்படியே கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.

இந்த விசயத்தில் ராஜேஷிற்கு அவன் மீது கோவம் தான்..

‘என்ன நினைப்பில் பேப்பர் போட்டான்…’ என்று.. அதையே கேட்க,

“இல்ல மச்சி, கோகுல் ரெபர் பண்ணான்ல, நான் கூட உன்கிட்ட சொன்னேன்ல நீ தான் வரலை சொன்ன, ஜஸ்ட் நான் இன்டர்வியூ அட்டென் பண்ணேன்.. வேற ஒருத்தர் ரிலீவ் ஆகானுமாம் தென் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க சொன்னாங்க டா…” என,

‘அட கிறுக்கு பயலே…’ என்று தான் பார்த்தான் ராஜேஷ்..

“இவ்வளோ நடந்திருக்கு என்கிட்டே ஏன்டா சொல்லலை….” என,

“அன்னிக்கே உன்கிட்ட சொன்னேன், நீதான் கவனிக்கல…” என்றான் முகத்தை ஒருமாதிரி வைத்து…

“சரி சரி முகத்தை தூக்காத… சகிக்கலை… அதான் இன்னொரு வேலை ரெடியா இருக்குல்ல அப்புறம் என்ன… எதையும் போட்டு குழப்பி, அதை மலர்விழி மேல காட்டாத..” என்று மேலும் சில நேரம் பேசிவிட்டே வஜ்ரவேல் மேலே செல்ல,  மலர்விழியின் முகம் எதோ யோசனையில் இருந்தது.

‘இவ என்ன யோசிக்கிறா..’ என்று அவளை பார்க்க, அவளோ வேண்டுமென்றே அவன் பார்வையை தவிர்த்தாள்.

அவனும் அடுத்து எதுவும் பேசவில்லை, எதுவாக இருந்தாலும் மலர்விழி அப்பா அம்மா கிளம்பட்டும் என்று காத்திருக்க, அவர்களும் மறுநாள் விடிந்ததுமே கிளம்பிவிட்டனர்.

அவர்கள் போனதும் தான் தாமதம், மலர்விழி பிடி பிடியென பிடித்துவிட்டாள்.

“என்ன நினைச்சிட்டு ஊருக்கு வந்தீங்க உங்க மனசில…???” என்றவளின் பார்வையில் அப்படி ஒரு காட்டம்.

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளு விழியாச்சி…” என்று அளருகில் வர,

“என் கல்யாணத்தை தான் நிறுத்தனும் வந்தீங்களா…???” என்று உறுத்து விழித்தவள், அவனை விட்டு விலகி நின்றாள்.

“ம்ம்ச் தள்ளி போகாத…” என்றவன் அவளை பிடித்து தன்னருகே நிறுத்த,

“அப்போ மனசு முழுக்க வன்மம் இல்லையா…??” என,

“ஹேய்… நிஜமா அப்படியெல்லாம் இல்லை…” என்றவன் குரல் கொஞ்சம் நான் சொல்றதை கேளேன் என்று கெஞ்சாமல் கெஞ்சியது..

“வேறெப்படி…???”

“முதல்ல இப்படி வந்து உட்கார்… நான் சொல்றதை கொஞ்சம் கேளு..” அவளை அமரவைத்து, அவளை ஒட்டியே வெகு நெருக்கமாகவே அமர்ந்தான்..

“நீங்க தள்ளி உட்கார்ந்தே சொல்லுங்க..” என்று அவனை தள்ள,

“இப்போ உன் கை தான் என் மேல பட்டுச்சு… ஒட்டி உட்கார்ந்தாலும் நான் எதா உன்னை பண்ணேனா…??” என்றவன் பார்வை அவளை விளையாட்டாய் காண, கைகளை பட்டென்று விலக்கிகொண்டாள்..                                    

அவள் செய்கையில் சிரிப்பு வந்தாலும், எங்கே சிரித்தால் அதற்கும் சிலுப்புவாள் என்று தோன்ற,

“சரி சரி… அதுக்குன்னு ரொம்ப தள்ளி போகாத…” என்றவன்,

அவளை திருவிழாவில் பார்த்தது, அப்போது தான் நிஷா கல்லூரியில் அவனை வேண்டாம் என்றது, அவளை பார்க்கும் போது தனக்கு தோன்றிய உணர்வுகள் என்று எல்லாம் சொல்ல, அவன் சொல்வதை எல்லாம் முகத்தில் எவ்வித உணர்வும் காட்டாது கேட்டுகொண்டு இருந்தாள்..

‘இவ என்ன நினைக்கிறான்னே தெரியலையே…’ என்ற யோசனையோடு, பார்க்க,

“ம்ம் இவ்வளோ தானா இன்னும் இருக்கா…” என,

“அன்னிக்கு உன்னை அந்த நேரத்தில திட்டனும் தான் தோணிச்சு.. ஆனா நீ கொஞ்சம் சவால் மாதிரி பேசினயா?? அதான் சரி கோவம் வந்திருச்சு…” என்றான்.

“ஓ… கோவம் வந்து.. அப்புறம்…” என்று ஒரு அலட்சியாம் காட்ட,

“விழியாச்சி…” என்று லேசாய் குரலை உயார்த்தினான்.

“சோ… நீங்க அல்ரடி லவ் பண்ணிருக்கீங்க…” என, அவள் குரலில் இருந்தும் முகத்தில் இருந்தும் எந்தவித உணர்வும் வெளிப்படவில்லை.

நிஜமாகவே வஜ்ரவேலிற்கு பக்கென்று ஆனது.. ஒன்றை தெளிவுபடுத்த அது இன்னொரு குழப்பம் விளைவிக்கும் கதையாய் போனதோ என்று நினைத்தான்..

“விழியாச்சி…” என்று தயக்கமாய் பார்க்க,

“சோ உங்களுக்கு ஒரு பொண்ண லவ் பண்றது எப்படின்னு தெரியும் இல்லையா?? பின்னாடி சுத்துறது, அவளை எப்படி இம்ப்ரெஸ் பண்றது  இதெல்லாம்…” என, அவனோ மௌனமாய் பார்த்தான்..

“சொல்லுங்க……” என,

“அது அதெல்லாம் ஜஸ்ட் ஒரு இன்பாக்சுவேசன்… அவ்வளோ தான்…” என,

“ஹ்ம்ம் நான் அதை கேட்கலை…” என்றவள், “உங்களுக்கு லவ் பண்ண தெரியும்.. இல்லையா…” என்று மீண்டும் முதல் கேள்விக்கு வர,

என்னடா கேட்கிறாள் இவள் என்பது போல் பார்த்தான்.

“நல்லவேளை… உங்களை விசாரிக்கும் போது, மாப்பிள்ள கொஞ்சம் முசுடு அது இதுன்னு சொன்னாங்களா… நான் கூட பயந்தேன்.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. எங்க இந்த சிடுமூஞ்சிக்கு லவ் பண்ண கிளாஸ் எடுக்கனுமோன்னு..”  என்றவள், அவனையே மதிப்பிடுவது போல் பார்க்க, அவளின் பார்வை கண்டவன்,

“ஹேய் என்ன அப்படி பார்க்கிற…” என, அவன் மனமோ இவள் என்ன மாதிரி டிசைன் என்று யோசித்தது.

கோவமாய் பேசுவது போல் இருக்கிறது ஆனால் சிரிக்கிறாள்.. இலகுவாய் பேசுவது போல் இருந்தது ஆனால் சட்டென்று காய்கிறாள், இதில் எதில் இவள் என்று தெரியவில்லை அவனுக்கு.

‘இப்படி பார்க்கிறாளே அடுத்து என்ன சொல்லுவாளோ…’ என்று நினைக்க,   

“இல்லை…. சூப்பர்னு சொல்ல முடியாது.. ஆனா சுமார்னும் சொல்ல முடியாது.. பட் நல்லாத்தான் இருக்கீங்க…” என்று இதழில் தவழும் புன்னகையோடு தலையை ஆட்டி சொல்ல,

“அடிப்பாவி சைட் அடிச்சியா…” என,

“ஏன் அடிக்க கூடாதா…” என,

அவள் இலகுவாய் பேசியதே தன்னை தவறாய் நினைக்கவில்லை என்று வஜ்ரா உணர, அவனுக்குமே பேச்சு இலகுவாய் வந்தது. 

“ஹ்ம்ம் ஏன் உங்களை ஒரு பொண்ணு கூட திரும்பி பார்க்கலை…”

“அது, என் வருங்கால பொண்டாட்டி கொடுத்த சாபம்னு அஞ்சு வருஷம் முன்னாடி தெரியாம போச்சு…” என்று சொல்லி சிரித்தான்..

மலர்ந்த சிரிப்பு.. மனம் விட்டு வெகு நாட்கள் பின் வஜ்ரா அப்படி சிரிக்கிறான் என்பது அவனையே பார்த்துகொண்டிருந்த மலர்விழிக்கு நன்றாகவே புரிந்தது..

எதோ அந்த நேர கோவம்… போதாத குறைக்கு கல்லூரி கால காதல் வேறு தோல்வி எல்லாம் சேர்ந்து அவனை அப்படி நினைக்க வைத்து, பின் அந்த நினைப்பிலேயே ஊர வைத்து, அவன் நினைப்பது சரிதான் என்று நம்பவும் வைத்து, ஹப்பா ஏதேதோ எண்ணி இறுதியில் அவர்கள் திருமணமே நடந்து விட்டது என்று நினைக்கும் போது ஆச்சர்யமாய் தான் இருந்தது..

“போதும் ரொம்ப சைட் அடிக்காத…” என்றவன் அவள் கைகளை இறுக பற்றி,

“தேங்க்ஸ்.. நான் சொன்னதை சரியா புரிஞ்சதுக்கு… மனசு இப்போதான் கொஞ்சம் ப்ரீயா இருக்கு விழியாச்சி…” என, அவளும் புன்னகையோடே பார்க்க,

“ஆனா நீ என்னை மறந்திட்ட…” என்று குறைபட்டான்..

இப்போது அவளுக்கு சிரிப்பு ரொம்பவே வந்தது.. அவளும் சற்று நேரம் முன் அவன் சிரித்தது போலவே சிரிக்க,

“ஏய் இப்போ என்ன சொல்லிட்டேன்.. இப்படி சிரிக்கிற..” என்று கேட்க,

“இல்ல.. சத்தியமா நான் அதை அப்போவே மறந்திட்டேன்…. நியாபகமே இல்லை.. இது… இது ஜஸ்ட் நீங்க அப்போ கோவமா பேச நானும் அப்படியே பதில் சொன்னேன் அவ்வளோ தான்..” என்று அவனை சமாதானம் செய்ய விழைய,

“ம்ம் இருந்தாலும்…” என்று வேண்டுமென்றே பேச்சை நீட்டித்தான்..

“அடடா… நான் ஒன்னு சொல்லவா.. என்கிட்டேயே வந்து ரெண்டு மூணு பேரு உன்னை கல்யாணம் பண்ணி காட்டறேன்னு சவால் விட்டிருக்காங்க.. அதையே தான் பெரிசா எடுத்ததில்லை.. அப்படி இருக்கப்போ.. இது எனக்கு  நியாபகத்துலையே இல்லை.. ஆனா உங்களை பார்த்த முகமா தெரிஞ்சது…” என,

“ஆமாமா உலக மகா பேரழகி நீ.. போடி… உன்னையே கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்டாங்களாம்…” என்று வேண்டுமென்றே பேச,

“ஏன் ஏன்.. எனக்கென்ன… அப்போ நான் அழகா இல்லையா… நிஜமா…” என்று கேட்டவள் அவன் முன்னே நின்று இப்படி அப்படி திரும்பி அழகு காட்ட,

‘அடியே ரதியே….’ என்று பாடத்தான் தோன்றியது அவனுக்கு..

இமைகொட்டாமல் அவளை பார்க்க, “ஹ்ம்ம் சொல்லுங்க..” என்று அவள் ஊக்க, அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தியவன், இறுக அணைத்து,

“அழகாத்தான் இருக்க… ரொம்ப…” என்று காதில் கிசுகிசுக்க,

“அழகா இருக்கேனா?? அழகாத்தான் இருக்கேனா…??” என்று அவள் விடாமல் கேட்க,

“ரெண்டும் ஒன்னு தானே…” என்று அவளை தன் புறம் திருப்ப,

திருமணமானத்தில் இருந்து இப்போது தான் முதல் நாள் நெருக்கம், அவனின் அருகாமை, என்னதான் பேசி, சிரித்து, ஒரே அறையில் தங்கி என்று இருந்தாலும், ஏனோ இன்றைய பேச்சு இருவருக்குமே ஒரு நெருக்கத்தை தான் கொடுத்தது..

முதலில் மலர்விழிக்கு கோவம் தான்..

அதுவும் அவள் திருமணம் என்பதை கேள்விப்பட்டு அதை நிறுத்தவே அவன் ஊருக்கு வந்தான் என்று தெரியவும் ரொம்பவும் கோவம் தான்.

‘ச்சே என்ன மாதிரியான ஆள்…’ என்றே நினைத்தாள்…

ஆனால் பேச பேச அவன் மனதில் இருந்தது எல்லாம் வெளி வர, அவளுக்கு தான் நினைத்தது தவறு என்று புரிந்தது..        

வஜ்ரவேல் ஒரு சாதாரண ஆண் மகன். கோவம், ஆசை, காதல், அன்பு, நேசம் நட்பு என்று ஆனைத்து வகையான உணர்வுகளின் கலவையவன்… பார்த்ததுமே கண்ணே மணியே என்று அவன் குழையவும் இல்லை, அடியே பொடியே என்று கடியவும் இல்லை.. ஆனாலும் எதார்த்தமாகவும் இல்லை.. அது சூழ்நிலையால்…

சொல்ல போனால், முதலில் சவால் விடுவது போல் பேசியது அவள் தானே, ஆகையால் தானே அவனும் சொன்னான்… இது சிறு விஷயம், வெளியே சொன்னால் நிச்சயம் கேட்பவர்கள் சிரிப்பார்கள்.. ஆனால் அதுவே அவர்களுக்கு ஒரு பந்தம் தரும் விசயமாக மாறியது தான் அதிசயம்..

ஏனோ அவனை பற்றி தவறாக நினைக்கவும் அவளுக்கு முடியவில்லை, அவன் சொல்வதை தவறாய் புரிந்துகொள்ளும் அளவு முட்டாளும் அவளில்லை..

அவனோடு மகிழ்வாய் ஒரு வாழ்வு தொடங்கவேண்டும் அதுவும் ஒரு புரிதல் உண்டான பின் தொடங்கவேண்டும் என்றே விரும்பினாள்.. மனம் விட்டு பேசுகையில் எத்தனை பெரிய பிரச்சனைகள் என்றாலும் அது நீர்த்து போகும், இதெல்லாம் எம்மாத்திரம்.

வஜ்ரவேல் தான் கேட்டதற்கு ஒளிவு மறைவின்றி பதில் சொன்னதே அவளுக்கு அவனை இன்னும் பிடிக்க செய்தது.. அவன் நினைத்திருந்தாள் கணவன் என்ற உரிமையை அவனே எடுத்திருக்கலாம்.. அப்படி செய்யவில்லை..

அவனுக்கான தயக்கங்களையும், குழப்பங்களையும், தடுமாற்றங்களையும்  நான் ஆண் என்ற போர்வைக்குள் மறைக்காமல் அழகாய் வெளிகாட்டினான். அவனது அந்த குணம் அவளுக்கு இன்னும் பிடிக்க செய்தது..

இதோ இப்போது கூட, அவன் கையணைப்பில் இருக்கும் போது கூட அவளுக்கு மனதில் ஒரு நிறைவு தான் கிடைத்தது..

“ம்ம் சொல்லுங்க.. நான் அழகா இல்லையா…” என்று மீண்டும் கேட்க,

“ரொம்ப ரொம்ப அழகா இருக்க போதுமா…” என,

“இவ்வளோ சலிப்பா எல்லாம் சொல்ல கூடாது…” என்று மலர்விழி சிணுங்க,

“விழியாச்சி…” என்று அழைத்தவன் இன்னும் அவளை தன்மீது சரித்துகொள்ள ஆசை தூண்ட, அதே நேரம் அவன் அலைபேசியும் சிணுங்கி தொலைத்தது..

ஒருகையால் அவளை அணைத்தபடி இருந்தவன், மறுகையால் அழைப்பை ஏற்று “ஹலோ…” என,

அந்தப்பக்கம் இருந்து வந்த தகவல் அப்படியே அவனை சிலை போல் அமர செய்துவிட்டது..

மனமோ ‘போச்சு போச்சு… எல்லாம் போச்சு….’ என்று அலற,

‘கொஞ்ச நேரம் முன்னாடி தானே நினைச்சேன்.. எல்லாம் சரியாகும்னு நானும் விழியாச்சியும் சந்தோசமா வாழ போறோம்னு.. அது பொறுக்கலையா…’ என்று கடவுளை கடிந்து என்ன பயன்..

வஜ்ரவேலுக்கும், மலர்விழிக்கும் ஒரு புரிதல் உருவாக, விதி வேறொரு ரூபத்தில் தன் விளையாட்டை காட்டியது..

 

Advertisement