Advertisement

   விழி – 10

“டேய் நீ நிஜமா தான் சொல்றியா…” என்று ராஜேஷ் இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்க,

“ஆமா டா…” என்றான் வஜ்ரா உறுதியாய்..

எப்போதுமே அவன் முகத்தில் கண்டிராத ஒரு உறுதி, ஒரு நிமிர்வு, ஒரு தெளிவு தெரிய, இன்னும் ஆச்சர்யமாய் தான் பார்த்தான் ராஜேஷ். ஆனால் ஒன்று மட்டும் மிக நன்றாக புரிந்தது.

“சந்தோசமா இருக்கு டா…” என்று சொல்லி வாழ்த்தினான் ராஜேஷ்..

வஜ்ரவேல் தன் முடிவை மலர்விழியிடம் மட்டும் தான் அடுத்து சொன்னான்.. அவன் அம்மாவிடமோ, இல்லை பாட்டியிடமோ கூட வாய் திறக்கவில்லை..

“நாளைக்கு ஊருக்கு போகலாமா..” என்று வஜ்ரா அனைவரிடமும் கேட்க, மலர்விழி ஒன்றும் தெரியாதவள் போல் தன் வேலையை பார்க்க, மணிமேகலையும், அலமேலுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து,

“என்னடா திடீர்னு…” என்று கேட்க,

“அங்க கொஞ்சம் வேலை இருக்கும்மா…” என, அப்போதும் கூட அவன் மனத்தில் என்ன நினைத்திருக்கிறான் என்று சொல்லவில்லை..

ஆனால் மலர்விழிக்கு மகிழ்வாய் இருந்தது.. தான் சொன்ன ஒன்றை சரியான விதத்தில் புரிந்து, அதை பற்றி சிந்தித்து அவன் ஒரு முடிவிற்கு வந்திருப்பது மனதில் ஒரு இதம் கொடுத்தது..

‘தன்னை அவன் பெரிதாய் நினைக்கவில்லையோ..’ என்ற எண்ணம் அவளுக்கு மனதில் ஒரு ஓரத்தில் இருந்தது தான்.. ஆனால் இப்போது அது இருந்த இடம் தெரியவில்லை..

அவனை ஒரு மலர்ந்த பார்வை பார்த்தவள், “எப்படியும் அங்க வரணும் தானே அத்தை.. இப்போவே கிளம்பலாம் சொல்றார்…” என்று கணவனுக்கு சார்ந்து பேச,

“இதென்னடா.. பொண்டாட்டியும் புருசனும் ஒரேமாதிரி பேசுறாங்க..” என்று முணுமுணுத அலமேலு,

“மலர்விழி… ஒரு நாள்ல என்னாச்சு… அவன் உன்னை பார்க்கிறான்.. நீ அவன் பேசுறதுக்கு ஏத்துக்கிட்டு பேசுற.. பெரிய ஆள் தான் போ…” என்று அவளை பேச, அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தாலும் அவளுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை..

கலகலவென்று சிரிக்க, அவள் சிரிப்பை தான் வஜ்ரவேல் பார்த்திருந்தான். பல நாட்கள் கழித்து அவள் அப்படி சிரிக்கிறாள்.. தன்னால் தான் இத்தனை நாள் இந்த சிரிப்பை தொலைத்திருந்தால் என்று நினைக்க லேசாய் அவன் முகம் வாட,

அதை சரியாய் புரிந்துகொண்ட மலர்விழி ‘அதெல்லாம் ஏதுமில்லை…’ என்பது போல் கண்ணிமைக்க, சரியாய் அது அலமேலு பாட்டி கண்களிலும் விழுந்தது.

“அம்மா மணிமேகலை.. இனி நம்ம இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லை போல.. உன் மருமக கெட்டிக்காரி தான்.. அவளே எல்லாத்தையும் பார்த்துக்குவா… அவனே ஊருக்கு போகலாம் சொல்றபோ நம்மலே கிளம்பினா தான் நல்லது..” என, மணிமேகலைக்கும் அலமேலு சொல்வது புரிந்தது.

அடுத்து என்ன, அனைவரும் அன்று மாலையே ஊருக்கு கிளம்ப, ராயப்பனூர் சென்றடைய இரவு ஆகிவிட்டது..

‘அட என்ன எல்லாம் இப்போவே வந்திருக்கீங்க…’ என்று ஆச்சர்யமாய் பார்த்தாலும், சென்னை போன பிறகு மலர்விழியும் வஜ்ரவேலும், முதல் முறை வந்திருப்பதால் இரவு உணவு விருந்தாகவே அமைந்தது.

மறுநாள் காலையே, தங்கவேல் குளித்து முடித்து சாமி கும்பிட்டு வர, உடன் தணிகாசலமும் வர,

“அப்பா.. சித்தப்பாஉங்கட்ட ஒன்னு பேசணும்…” என்றான்..

 

என்ன என்று அனைவருமே பார்க்க, இப்படி எல்லாம் இவன் முன்னுரை முகவுரை எல்லாம் ஒரு விசயத்திற்கு படிக்க மாட்டானே என்று தான் தோன்றியது எல்லாருக்கும்..

நேராக இது தான் விஷயம் என்று பேசுவான். பிடிக்கவில்லையா தூக்கி போட்டு போய்விடுவான்.. இதுநாள் வரை வஜ்ரவேலின் குணம் இதுவாகவே இருந்தது..   

“அது.. நான் நம்ம ஊருக்கே வந்திடலாம்னு இருக்கேன் ப்பா..” என,

“ஊருக்கே வந்திடலாம்னா…?? எப்படி… இங்க வந்து என்ன செய்ய போற..?? உன் படிப்புக்கு ஏத்த வேலை இங்க என்ன கிடைக்க போகுது…???” என்றார் முகத்தை எப்படியோ வைத்து.

“வேலைக்கு இல்லைப்பா.. நம்ம நிலத்தை பார்த்துக்க.. இங்கயே வந்திடலாம்னு இருக்கேன்.. அங்கே வேலை…” என்று பேச்சை ஆரம்பித்தவன், பின் முழு மூச்சில் ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லிவிட்டான்..

அவன் வேலை விட்டது, பின் திருமணம், அதன் பின் வேலைக்கு என்று அல்லாடியது, அவன் மனம் பட்டபாடு, பின் மலர்விழிக்கு உண்மை தெரிந்து அவள் நடந்து கொண்ட விதம், என அனைத்தையுமே சொல்ல, வீடே அமைதியாய் தான் இருந்தது.

மலர்விழிக்கு கூட ஆச்சர்யம் தான்.. வஜ்ரவேல் முழுக்க அனைத்தும் சொல்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

‘இதெல்லாம் தெரிஞ்சா என்னை என்ன நினைப்பாங்க…’ என்று அவனே எத்தனையோ முறை அவளிடம் கூறியிருக்கிறானே.. ஆனால் இப்போது வஜ்ரவேலே இப்படி சொல்லவும், மலர்விழிக்கு இவன் என்ன மாதிரி மனிதன் என்று ஆச்சர்யமாய் இருந்தது..

மனிதனுக்கு குழப்பங்கள், தோல்விகள், தடுமாற்றங்கள், அதனால் அவன் சில பொய்கள் சொல்வது, தவறுகள் செய்வது சகஜம் தான் எனில், அதை எத்தனை பேர் வெளியே சொல்லிக்கொள்ள தயாராய் இருக்கிறார்கள்.. அதிலும் வஜ்ரவேல் போன்று ஒருவன்..??

‘ம்ம்ஹும் சான்சே இல்லை…’ என்று தான் தோன்றியது மலர்விழிக்கு..

இப்போ இந்த நொடி, அவனை இன்னும் பிடித்தது.. சொல்லபோனால் வஜ்ரவேல் இப்போது இன்னும் அழகாய் கூட தெரிந்தான் அவள் பார்வையில்..

வீட்டில் இருந்த அனைவரும் பேச்சற்று அமைதியாய் நிற்க, குரலை செருமிய தங்கவேலோ, “இது.. இந்த முடிவு தான் உறுதியானதா??” என்று கேட்க,

“முதலும் கடைசியுமா இது தான் என் முடிவுப்பா..” என, அவன் குரலிலும் முகத்திலும் இருந்த உறுதி கண்டவர், அடுத்த நொடி அவனை இறுக கட்டிக்கொண்டார்..

பொதுவாய் ஒரு வீட்டில் அம்மா மகன், அப்பா மகள் தான் க்ளோஸ் என்று சொல்வார்கள்.. ஒருவயதுக்கு மேல் அப்பா மகன் இருவருக்கும் அத்தனை பெரிய பேச்சு வார்த்தைகள் கூட இருக்காது.. மனதில் பாசம் அன்பு இருந்தாலும் அதை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாது..

ஆனால் வஜ்ரவேலை பொறுத்தவரை, வீட்டில் அனைவரிடத்திலும் அவன் அப்படிதான்… யாராக இருந்தாலும் ஒரு அடி தள்ளி தான் நிற்பான்.. ஏனோ அவன் குணமே அப்படியாகி போனது.

தங்கவேலும் கூட மகனிடம் ரொம்பவும் எல்லாம் பேசிக்கொண்டது இல்லை.. ஆனால் இப்போது அவராகவே வந்து அணைக்கவும், அதிர்ச்சியாய் இருந்தாலும், ஆனந்தமாகவும் இருந்தது.. அவன் தோள்களை பற்றி, வஜ்ரவேலை பெருமையாய் பார்த்தவர்,

“ரொம்ப பெருமையா இருக்குடா.. ரொம்ப… நீ ஹாஸ்ட்டல் போகணும்னு சொல்லும் போதே எனக்கு அவ்வளோ கஷ்டமா இருந்துச்சு… இனி நம்ம பையன் இங்க இருக்க மாட்டான்னு நானே மனசில கொஞ்சம் தைரியம் வச்சுக்கிட்டேன்.. ஆனா கல்யாணமாவது இந்த ஊர் பொண்ண பண்ணனும்னு முடிவு பண்ணிருந்தேன்.. அப்போதான் நீயும் இங்க வந்து போக இருப்பன்னு.. அதுக்கேத்த மாதிரி தான் எல்லாம் அமைஞ்சது..

மூத்தவன் டா நீ… நீ தான் இங்க எல்லாத்துக்கும் முன்னாடி நிக்கணும்.. நேத்துகூட நானும் உன் சித்தப்பனும் பேசிட்டு இருந்தோம்.. முன்னமாதிரி அலைய முடியலை, வெளியூர்ல இருக்க நிலத்தை யாரும் விலைக்கு பேசினா குடுத்துடலாம்னு. என்னதான் வாய் பேசினாலும், அப்படி கொடுக்க மனசில்லை. ஆனா இப்போ என் நெஞ்சில பால் வார்த்துட்ட வஜ்ரா…” என்று பேச,

இவர் மனதிற்குள்ளும் இத்தனை இருந்திருக்கிறதா என்று ஆச்சர்யமாய் போனது வஜ்ரவேலுக்கு..

‘உங்களை நீங்க உங்க வீட்ல உணர்த்தலை…’ மலர்விழி திருமணமான புதிதில் சொன்னது தான்.. ஆனால் இப்போது தோன்றியது ‘நான் யாரையும் சரியா புரிஞ்சுக்கலை…’ என்று..

‘இனி போக போக எல்லாமே சரி பண்ணனும்…’ என்று நினைத்திருக்க,

“இங்கயே வந்திடலாம் சொல்லிட்ட… ஆனா அங்க வீடு எல்லாம் அப்படியே இருக்கே…” என்று தணிகாசலம் கேட்க,

“உங்ககிட்ட பேசிட்டு எல்லாம் காலி பண்ணனும் இருந்தேன் சித்தப்பா…” என,

“அப்போ இன்னிக்கே போகலாம்…” என்று தங்கவேல் சொல்ல,

“ஹவுஸ் ஓனர் கிட்ட பேசணும்ப்பா…” என்றான்..

“எதுனாலும் நேர்ல போயி பேசிக்கலாம்டா..” என்றவர் அடுத்து ஒருநிமிடம் கூட தாமதிக்க விரும்பவில்லை.. மகனையும் மருமகளையும் அழைத்துக்கொண்டு மீண்டும் சென்னை செல்ல கிளம்பினார்..

“வீடு காலி பண்றதுன்னா சும்மாவா…” என்று மணிமேகலை சொல்ல,

“அக்கா நான் அங்க போனதில்லை இப்போ நான் போய்ட்டு வர்றேனே..” என்று கோமதியும்  கிளம்ப,

“லீவ் தானே நாங்களும் வருவோம்…” என்று ராகவனும் கேசவனும் கிளம்ப, அன்று மாலையே அனைவரும் கிளம்புவதாய் முடிவானது..

மலர்விழிக்கு அவள் அப்பா அம்மாவை காணவேண்டும் போல் இருக்க, அவர்களை காண சென்றாள்.. சென்றவள் தாங்கள் ஊருக்கு வரப்போகிறோம் என்பதை மட்டும் சொல்ல,

“என்னடி இது… படிச்சு வேலை பார்க்கிற மாப்பிள்ளைன்னு தானே நாங்க உன்னை கொடுத்தோம்…” என்று வாசுகி முகம் சுருக்க,

“இதுல உனக்கு சம்மதமா மா..??” என்றார் ராஜேந்திரன்..

“ஹ்ம்ம் இந்த முடிவை அவர்கிட்ட எடுக்க சொன்னதே நான் தான் ப்பா…” என, அதற்குமேல் பேசினால் ஒன்றும் பயனில்லை என்று இருவரும் வாய் மூடிக்கொண்டனர்.

ஆனால் வாசுகி மட்டும் ஒரு முனுமுனுப்போடே இருந்தார்.. அவரை ஒருவழியாய் பேசி சரி செய்து மீண்டும் வீடு வர, சிறிது நேரத்திலேயே அனைவரும் சென்னை கிளம்ப அடுத்து அடுத்து வேலைகள் அத்தனை வேகத்தில் நடக்கும் என்று மலர்விழியும் சரி வஜ்ரவேலும் சரி இருவருமே எதிர்பார்க்கவில்லை..

தங்கவேலே வீட்டு ஓனரிடம் சென்று பேசினார்.. வீட்டிற்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் காலி செய்வதா என்று அவர் தயங்க, வஜ்ரவேல் பின் எடுத்து சொன்னான்..

போகிறோம் என்பவர்களை பிடித்துவைக்கவா முடியும்..???

ஒருவழியாய் வீட்டை மறுநாளே காலி செய்து ராயப்பனூர் கிளம்புகையில், ராஜேஷ் முகம் தான் வருத்தமாய் தெரிந்தது.. வஜ்ரவேலுக்கும் அப்படிதான்..

“டேய்.. அடிக்கடி வருவேன் டா…” என,

“ஹ்ம்ம் நானும் உங்க ஊர்க்கு வரேன் அட அப்பப்போ..” என்று வழியனுப்பி வைத்தான் ராஜேஷ்..

ஊர் வந்து சேர இரவாகிவிட, கட்டிலில் வந்து விழுங்க வஜ்ரவேலுக்கு உடலில் அத்தனை அசதி.. ஆனால் மனமோ லேசாய் இருந்தது.. மலர்விழி அறைக்கு வர,

“தேங்க்ஸ் தேங்க்ஸ் விழியாச்சி…” என்று அவளை இறுக அணைத்துகொண்டான்..

“ஹ்ம்ம் இத்தனை நாள் சாரி இப்போ தேங்க்ஸா…” என,

“ஆமா எவ்வளோ தேங்க்ஸ் சொன்னாலும் போதாது….” என்று இன்னும் இறுக அணைக்க,

“ஹ்ம்ம் இப்போவாது உங்க டென்சன் எல்லாம் போச்சா…” என,

“எஸ்.. என்னை நானே புதுசா பீல் பண்றேன்… இது நானே இல்லை.. நான் டோட்டலா வேற மாதிரி… ஆனா இப்போ புதுசா இருக்கு எனக்கே..

உனக்கு தெரியுமா அப்பா இப்போ பேசுற மாதிரி எல்லாம் என்கிட்டே இருந்ததே இல்லை.. அன்னிக்கி கட்டிபிடிச்சார் பார்… ஹப்பா.. அப்படி ஒரு பீல்.. அவர் கண்ல நீ என் மகன்டான்னு ஒரு உணர்வு… அதை உணரும் போது அவ்வளோ சந்தோசமா இருக்கு.. எல்லாமே உன்னால தான்..எனக்கு மனுசங்களை எப்படி ஹேண்டில் செய்யணும் தெரியாது… சூழ்நிலைகளை எப்படி ஹேண்டில் செய்யணும் தெரியாது..

நான் நினைக்கிறது.. நான் பண்றது இதெல்லாம் தான் சரின்னு இருந்தேன்.. ஆனா நீ என்னை அவ்வளோ அழகா ஹேண்டில் பண்ண… எங்க நீ என்னை தப்பா புரிஞ்சிடுவியோன்னு நினைச்சு நினைச்சே தான் எல்லாம் சொதப்பி வச்சேன்…” என்று சொல்ல,

அவன் முகத்தில் அப்படி ஒரு நம்பிக்கை, ஒரு உற்சாகம் இருந்தது.. இத்தனை நாள் எங்கே போனது இதெல்லாம் என்று கேட்க தோன்றினாலும் அவனிடம் வேறெதையும் கிளற விரும்பவில்லை.. ஏனோ அவளுக்குமே மனதில் இருந்த தவிப்பு ஒருநிலைக்கு வந்து சமன் பட்டு போனது போல் இருந்தது.. அவளை அணைத்திருந்தவன் மார்பில் முகம் புதைத்து இன்னும் ஒட்டிக்கொள்ள,

“ஹேய் விழியாச்சி..” என்று கொஞ்ச,

“எனக்கு இன்னும் கோவம் போகலை…” என்றாள் முகம் நிமிர்த்தாமல்..

“ம்ம்…” என்றவன் அவள் முகம் நிமிர்த்த, அவள் கண்களில் பழைய குறும்பு மின்ன,

“கோவமா… சரி என்ன செய்யணும் சொல்லு…” என்றவன் சிரிக்க,

“ஹ்ம்ம் அப்பப்போ இப்படி சிரிக்கணும்… எதையும் மனசில போட்டு குழப்பாம என்கிட்டே சொல்லணும்… எதுவா இருந்தாலும்…” என்று அழுத்தி சொல்ல, அவள் குரலில் கொடுத்த அழுதத்தை, அவன் அணைப்பில் கொடுத்து,

“ம்ம் இவ்வளோ தானா..??” என,

“புருஷன் பொண்டாட்டி உறவுங்கிறது, நீ எனக்கு இதை செஞ்ச, நான் உனக்கு இது பண்ணேன்னு சொல்லி காட்றது இல்லை.. உனக்கு நீ எனக்கு நான்னு வாழ்ந்து காட்றது.. நம்ம வாழ்ந்து காட்டனும்…” என்றாள் அழ்ந்த குரலில்.. 

அவள் சொன்னது அவன் மனதில் நிறைக்க, “கண்டிப்பா… டீச்சரம்மா…” என்று சொல்ல,

“ஹா ஹா.. அந்த பயம் இருக்கட்டும்…” என்று சிரித்தவளை முழுவதுமாய் தன் சொந்தமாக்கி கொண்டான் வஜ்ரவேல்..

வஜ்ரவேல் எனும் குழப்பவாதி, வஜ்ரவேல் எனும் அலட்சியவாதி, வஜ்ரவேல் எனும் நிலையற்ற குணம் கொண்டவன் காணாமல் போய் வஜ்ரவேல் புதியவனாய் தோன்ற, மலர்விழிக்கு அவனோடான வாழ்வு அத்தனை மகிழ்வாய் சென்றது..

“விழியாச்சி….” என்று கொஞ்சுவான்.. சில நேரம் “டீச்சரம்மா…” என்று சொல்லி சொல்லியே சேட்டைகள் செய்வான்.. என்ன செய்தாலும் ரசிக்க வைத்தான்..

எப்போதுமே மலர்விழியின் சிரிப்பு சத்தமும், கொலுசு சத்தமும் அந்த வீட்டை நிறைக்க வைத்துக் கொண்டிருந்தது.. அவள் சிரிப்பதிலேயே எத்தனை மகிழ்வாய் அவர்கள் வாழ்வு இருக்கிறது என்று அனைவருக்கும் புரிந்தது.. 

வஜ்ரவேல், தங்கவேலோடும், தணிகாசலத்தோடும் கிளம்பி தோட்டம் வயல் என்று செல்வான்.. வஜ்ரவேலுக்கு அத்தனை ஒன்றும் விவசாயம் தெரியாது.. இருவரும் சொல்வதை கற்றுக்கொண்டிருந்தான்..

நாட்கள் இப்படியே செல்ல, வேலைகளை பிரித்துக்கொண்டனர்.. அன்றும் அப்படி கிளம்ப என்னவோ வஜ்ரவேல் வேட்டியில் தயாராகி வர,

“என்ன காஸ்டியும் மாத்திட்டீங்க…” என்று மலர்விழி வாய் பிளக்க,

“ஏன் இது நல்ல இல்லையா…” என்று அவள் போலவே செய்துகாட்டினான்.. எப்போதும் அவள் தன்னுடைகளை பத்தி கேட்பது போல்.. அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு வழக்கமான சிரிப்பு வந்தாலும், பேன்ட் சட்டையில் ஒருவித மிடுக்கு என்றால், வெட்டி சட்டையில் ஒருவித கம்பீரம் இருக்க,

தலைசரித்து “ம்ம்ம் நான் சைட் அடிக்கிற அளவுல இருக்கு…” என,

“ஹ்ம்ம் இந்த பேச்சு தான்… என்னை இவ்வளோ மாத்திருக்கு… என் லைப்ப மாத்திருக்கு.. சொல்ல போனா, இந்த வாழ்க்கை நீ எழுதினது விழியாச்சி… நீ எழுதுற கதை தான் என் வாழ்க்கை….” என, மலர்விழிக்கு அத்தனை நிறைவாய் இருந்தது.. 

ஆனாலும் ஒன்றும் சொல்லாது, “சரி சரி கிளம்புங்க.. நேரமாச்சு…” என்று அவன் முதுகில் கைவைத்து தள்ள,

“ஆமா இன்னிக்கு உழுறாங்க… போகணும்…” என்று அவனும் வேகமாய் படியிறங்க..

“டிராக்டரா…???” என மலர்விழி கேட்க,

“இல்லை மாடு தான் விட்டிருக்கேன்..” என,

“அப்போ நானும் வரவா…??” என்றாள் கண்களில் ஆசையோடு..

“ம்ம்… வாயேன்…” என்றவன், சாப்பாடு கூடையை அவள் கைகளில் வைத்திருக்க,வண்டியை கிளப்பிக்கொண்டு வயலுக்கு சென்றான்..

ஏற்கனவே ஆட்கள் வந்திருக்க, அவனுக்கு முன்னே தங்கவேல் அங்கே நின்றிருந்தார். மகனோடு மருமகளும் வந்திருப்பதை பார்த்து,

“என்னம்மா நீயும்..??” என,

“சும்மாதான் மாமா…” என,

“சரி நான் கள்ளக்குறிச்சி போறேன் வஜ்ரா… சம்பள கணக்கு நீயே பார்த்துக்கோ.. ம்ம்…” என்றவர், அவன் முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டு செல்ல, அந்த தந்தையின் ஸ்பரிசம் ‘எனக்கு அடுத்து நீ தான்…’ என்று சொல்லாமல்சொல்லியது அவனுக்கு..

அவர் போவதையே பார்த்திருந்தவன், பின் வேலைகளை கவனிக்க, ஏர் பூட்டியிருந்த மாடுகள் வரிசையாய் உழவு தொடங்க, மண்ணை கீறி, அடியில் இருக்கும் புது மண் வெளி வர, லேசாய் தென்றல் காற்றோடு மெல்லிய சாரலும் வீச, அந்த மண் வாசம் இருவர் மனதையும் நிறைத்தது..

காற்று வெளியில் ‘விழியே கதை எழுது….’ என்று எங்கோ ஒலிக்கும் பாடல் மிதந்து வர, வஜ்ரவேல் பார்வை அவன் மனைவியை தான் கண்டது..

அன்பாய்… காதலாய்… பெருமையாய்… பெருமிதமாய்… உனக்காக நான்.. எனக்காக நீ என்று சொல்லியது அவன் பார்வை.. நீ பார்க்கும் பார்வைக்கான அர்த்தம் எனக்கு புரிந்தது என்பதை உணர்த்தும் வகையில், அவன் தோள் மீது சாய்ந்துக் கொண்டாள் மலர்விழி..

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

 

Advertisement