Advertisement

அவர் செல்வதையே பார்த்த மீரா தோள்களை குலுக்கி விட்டு பார்வையை திசையெட்டுக்கும் விரட்டினாள். அவள் கண்ணில் மலை தீபத்தை எதிர்பார்த்தபடி பார்வையை உயர்த்தி கம்பீரமாய் நிற்கும் மலை மீது பதித்து காத்திருக்கும் பல தரப்பட்ட மக்கள் கூட்டம் தென்பட, மனம் நிர்மலமாய் இருந்தது. 

“மேடம்… நாங்க இங்க லோக்கல் சேனல்லேந்து வர்றோம்… பேசலாமா?” என்று ஒரு பெண் எங்கிருந்தோ வந்து அவளின் தனிமையில் குறுக்கிட, குழப்பத்துடன் நிமிர்ந்தாள் மீரா.

“என்ன பேசணும்?”

“நீங்க கடந்து வந்த பாதை… உங்களுக்கு எப்படி இப்படி ஆச்சு… நீங்க இந்த ஊர்தானா மேடம்?” என்று அப்பெண் இழுக்க, அழுத்தமாய் பார்த்த மீரா,

“எதுக்கு நான் சொல்லணும்?”

“மேம்..”

“லுக், நான் ஒன்னும் சாதனை பண்ணிடல… என் வாழ்க்கையை என்னோட வழியில் நான் வாழுறேன். என் வாழ்க்கையில் நடந்ததை பப்லிக்கா சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.”

“என்ன மேம் இப்படி சொல்லிட்டீங்க… எத்தனையோ சவால எதிர்த்து போராடி இருப்பீங்க. அதை எங்கக்கூட ஷேர் பண்றது மூலமா அது நிறைய பேருக்கு போய் சேரும். உங்கள பார்த்து நிறைய பேர் தன்னம்பிக்கையை வளர்த்துப்பாங்க.” 

“மத்தவங்க தன்னம்பிக்கையை வளர்த்துக்கிறத விட உங்களோட வீவர்ஷிப் வளரும்னு வேணா சொல்லுங்க. இன்னைக்கு என்னை தூக்கி வச்சி ஆஹா! ஓஹோ! இவங்க க்ரேட் அதுஇதுன்னு ஏத்திவிட்டு பேசிட்டு நாளைக்கே கண்டுக்காம போவீங்க. இதை பார்க்குறவங்களும் உச்சு கொட்டிட்டு நகர்ந்து போயிட்டே இருப்பாங்க. இதில எனக்கு என்ன யூஸ் இருக்கு? என்னை பார்த்துட்டு இதுமாதிரி இனி வேற எந்த பொண்ணுக்கும் நடக்கக்கூடாதுன்னு யாராவது வீதியில் இறங்கி போராடப் போறாங்களா? இல்லை இந்த சமுதாயம் தான் மாறப்போகுதா? லுக், இது எதுவுமே நடக்காதுங்கிறப்போ உங்களோட சென்சேஷ்னல் ஸ்டோரிக்காக நான் மறக்க நினைக்குற பக்கங்களை புரட்ட முடியாது. யூ கேன் லீவ் நவ்…”

“மேம்…” அப்பெண் இன்னுமே நகராமல் இழுக்க,

“லெட் அஸ் லிவ் இன் பீஸ்…  எங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பண்ணிட்டு எங்களை பத்தி பிளாஷ் நியூஸ் அடுச்சி எங்களை அழுத்தத்துக்கு உள்ளேயே வச்சிருக்கிறது நீங்கதான். இல்லாதது எல்லாம் சொல்லி எங்க குடும்பம் மொத்தத்தையும் வீதியில் இழுத்து அவங்களையும் டிப்ரெஷனுக்கு தள்ளுறீங்க. பெட்டெர் யூ ஸ்டே அவே…” என்று மீரா அழுத்தம் கொடுத்து பார்வையில் கடுமையை கூட்ட அப்பெண் வேறு  வழியின்றி நகர்ந்துவிட்டாள். 

இது அனைத்தையும் கவனித்த கார்த்திக் அதிருப்தியுடன் அவளை நெருங்கினான்.

“இப்போ எதுக்கு இவ்ளோ ஹார்ஷா பேசுற? அவங்க பேசத்தானே கூப்பிட்டாங்க. பேச வேண்டியதுதானே? இதுல என்ன இருக்கு?”

“இப்போவே பதில் சொல்லனுமா? வீட்டுக்கு போய் பேசலாம்.” என்று மீரா அவனை கத்தரித்து பார்வையை மலையின் மீது பதிக்க கார்த்திக் அமைதியாய் தீபம் ஏற்றும் வரை அவளருகில் நின்று தரிசனம் முடித்தான்.

“உள்ள வந்து உட்காருடா… இன்னும் ஒருமணி நேரம் இங்க இருக்குற மாதிரி இருக்கும். கொஞ்சம் கூட்டம் குறைஞ்ச பிறகு கிளம்பலாம்.” என்று பார்வையை கூட்டத்தினுள் சுழலவிட்டு பரபரத்தான்.

“இல்லை நான் கிளம்புறேன். வீட்டுலையும் விளக்கு ஏத்தி வச்சிருப்பாங்க, நம்ம யாராவது இருந்தாதான் நல்லாயிருக்கும்.” என்று கிளம்ப தயாராய் நிற்க அவளை தனித்து அனுப்ப தயங்கி நின்றான் அவன்.

“ஐ கேன்…”

“அதுக்கில்லைடா… உனக்கு வீட்டுக்கு வழி தெரியாது.”

“ஆனா ஆட்டோக்காரருக்கு போலீஸ் க்வாடர்ஸ்னு சொன்னா தெரியும்ல… நான் பார்த்துக்குறேன்.”

“சொன்னா கேட்கமாட்ட… இங்க ரோட் பிளாக்ட்… ஆட்டோ வராது. கொஞ்ச தூரம் போய்தான் ஆட்டோ ஏறனும். இரு நான் வந்து ஏத்தி விட்டுறேன். பத்திரமா வீட்டுக்கு போ. டோன்ட் ஓவர்திங்க்.” என்று பலமுறை அறிவுறுத்திய பின்னேதான் அவளை ஆட்டோவில் ஏற்றிவிட்டான்.

ஆட்டோ நெடுஞ்சாலை கடந்து வீடு நோக்கி செல்ல, வழிநெடுக கார்த்திகை தீபத்தில் வீடுகள் அனைத்தும் ஒளிர்ந்தது. அந்த ஒளிர்வு அவளுக்குள் பொலிவையும் ஒரு நிம்மதியையும் தர… நிமிர்வு தானாய் வந்து சம்மணமிட்டு அமர்ந்தது. அதே நிமிர்வுடன் வீட்டில் வந்து இறங்கியவள் மனம் தன் வீட்டிலும் ஒளிரும் தீபங்களை கண்டு குதூகலமாகிவிட, துள்ளலுடன் வீட்டினுள் நுழைந்தாள்.

‘ரீச்ட்’ என்ற குறுஞ்செய்தியை மட்டும் கார்த்திக்கு அனுப்பிவிட்டு தன் வீட்டிற்கு அழைத்து பேசியவள் கார்த்திக் வீடு திரும்பும் வரை சிறு சிறு வீட்டு வேளைகளில் தன்னை புகுத்திக்கொண்டாள்.

“எனக்காக காத்திருக்காம சாப்பிட வேண்டியதுதானே? ஏன் இப்படி உடம்ப கெடுத்துக்கிற?” தனக்கும் அவளுக்கும் இரு தட்டுகளில் சேர்த்து பரிமாறுபவளை கண்டு அவன் கேள்வி எழுப்ப,

“உங்களுக்காக எல்லாம் நான் காத்திருக்கல மிஸ்டர். ஏ.சி.பி சார்… ஈவினிங் பக்கத்து வீட்டு அக்கா நிறைய பொரி கொடுத்துவிட்டாங்க… அதை சாப்பிட்டேன் அதான் பசிக்கல…” என்று உதட்டை பிதுக்கினாள் மீரா.

மலர்ந்த முகத்துடன் அவளது இயல்பை ரசித்தவன் அமைதியாக உண்டு முடித்து அவள் வரவுக்காக அறையில் காத்திருந்தான். சமையலறையை ஒதுங்க வைத்துவிட்டு வந்து இரவு உடைக்கு மாறிய மீரா லைட்டை அணைக்கவா என்பது போல் அவனைக் காண, புருவத்தை வளைத்தவன்,

“அதை அப்புறம் அணைச்சிக்கலாம் முதல்ல இங்க வந்து உட்காரு…” என்றான்.

முகத்தை சுழித்தவள், “நான்கூட என்னை அணைச்சிக்கோன்னு சொல்லப் போறீங்களோன்னு நினைச்சேன்.”

“அட… இதுகூட நல்ல ஐடியாவா இருக்கே…” என்று எழுந்து வந்து அவளை அணைத்து குதூகலித்தான்.

“ஐடியா இல்லாத மனுஷன். எப்போதும் இவரு ரொமென்ஸ் பண்ண நான்தான் எடுத்து கொடுக்கணும்.” என்று அவளும் அவன் அணைப்பில் நொடித்தாள்.

“ரொமென்ஸ் பண்ணா எப்போதும் இதே வேலை தான்னு தள்ளி போகவேண்டியது சரின்னு தள்ளி நின்னா அப்டியே மாத்தி பேச வேண்டியது. இந்த பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியாதா!” என்று லேசாய் அவன் சிரிக்க, 

“ம்க்கும்…” கழுத்தை வெட்டினாள் அவள்.

“சரி சரி அதெல்லாம் விடு… ஈவினிங் ஏன் உன்கிட்ட பேச வந்த லோக்கல் சேனல் பொண்ணுகிட்ட அப்படி ஹார்ஷா பதில் சொன்ன? உன் அனுபவத்தை பகிர்ந்துகிறது மூலமா நாலு பேருக்கு பயனா இருக்குன்னா அதை செய்ய வேண்டியதுதானே கண்ணம்மா?” 

நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள் தலையை சிலுப்பி, “எனக்கு பிடிக்கலை… அதான் பேசலை. ஏதோ சாதனை பண்ண மாதிரி சும்மா சும்மா என்னால அதை கதையா சொல்லிட்டு இருக்க முடியாது. அப்படியே சொன்னாலும் நான் ஒருத்தி சொல்றதால பாண்டியன் மாதிரி ஆளுங்க திருந்தப் போறதும் இல்லை. இன்னொரு பாண்டியன் உருவாகாம இருக்கப் போறதும் இல்லை. என்னை மாதிரி வன்முறையால் ஒடுக்கப்பட்டு வெளில வர முடியாம இருக்கிறவங்களுக்கு ஆறுதல் தர இந்த மீடியா சரியான மீடியமா இருக்கும்னு தோணல…”

“மீடியாவ விட வேற எந்த மீடியமும் மக்கள் கிட்ட அதிகமா ரீச் ஆகாது கண்ணம்மா.” என்றான் அவன் மறுப்பாய்.

“பிராக்ஷன் (fraction) ஆப் செகண்ட்ல வைரல் ஆகி அதே பிராக்ஷன் ஆப் செகண்டில் காணாம போறதை விட என்னை நானே இன்னும் மேம்படுத்திக்கிட்டு, எதையும் சமமாய் எதிர்கொள்ளும் பக்குவம் வந்த பின்னாடி, நிதானமா தெளிவா பிளான் பண்ணி என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏதாவது செய்யலாம். எனக்கு இதுதான் சரின்னு தோணுது. இதுக்கு மேலேயும் என்னை போர்ஸ் பண்ணுவீங்களா என்ன?” என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க, அவள் உடல்மொழியில் வெளிப்பட்ட மிடுக்கில் தெளிவுபெற்று அவள் விருப்பத்திற்கு விட்டுவிட்டான்.

“ஏதோ பிளானில் இருக்க… நீ நடத்துமா…”

அவன் பிடிப்பிலிருந்து வெளிவந்தவள் தீர்க்கத்துடன், “ம்ச்… மண்ணாங்கட்டி பிளான். எனக்கான அடையாளத்தை நான் விருப்பப்பட்ட துறையில் நானே ஏற்படுத்திக்கிட்டதா இருக்கணும். நான் சந்திச்ச என்னோட இருண்ட பக்கங்களோட அனுபவம் என்னோட அடையாளமா மாறக்கூடாது.

எனக்கான பாதை நான் தேர்ந்தெடுத்தா இருக்கணும் இந்த சமுதாயமோ பாண்டியனோ ஏற்படுத்திய தாக்கத்தில் அது காட்டிய திசையில் இருக்க கூடாது. அவங்களால இந்த மீரா திசைமாறி போய்ட்டா அது அவள் வாழ்க்கையாவே இருக்காது. ஹோப் யூ வில் பீ வித் மீ இன் திஸ் ஜர்னி.” என்று நம்பிக்கையுடன் பேச, அவள் சிரம் பிடித்து ஆட்டியவன், “நான் எப்போவும் என் வீட்டம்மா கட்சிதான் கண்ணம்மா.” என்று அவள் நெற்றியோடு நெற்றி வைத்து முட்டினான்.

“தெரியும்! நீங்க எப்போவும் என் கூட இருப்பீங்க அண்ட் எல்லா விஷயத்திலும் துணையா இருப்பீங்கன்னு.” என்று அந்த நெருக்கத்தை பெருக்கியவள் பெருமிதமாக அவனை ஒண்டிக்கொள்ள, அவள் அகத்திரை விரிந்து வாய்தா வாய்தா என்று நீண்டுகொண்டிருந்த வழக்கை துரிதப்படுத்த என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தி, தனக்கு பக்கபலமாய் இருந்து ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் அரணாய் தோழனாய் கணவனாய் காதலனாய் உடன் இருந்த நினைவுகளை அசைபோட, இனியும் அவள் அனைத்திலும் அவன் உடன் இருப்பான் என்ற நம்பிக்கையுடன் கண் அயர்ந்தாள்.

நம்பிக்கை! அதுதரும் பலம் அவளை உயர்வு நோக்கி இழுத்துச் செல்லும் என்று வாழ்க்கையை வாழப் பழகி எதிர்நீச்சல் போடத் தயாராய் இருப்பவள் தற்போது தன் அணைப்பில் சலனமின்றி உறங்க, அதைக் கண்டு தானும் திருப்தியுற்றவனாய் அவனும் கண் அசந்தான்.

நடுசாமத்தில் திடுமென விழிப்பு தட்டிய மீராவோ திரும்ப உறக்கத்திற்கு செல்லாது தன்னை அணைத்தபடி உறங்கும் கார்த்திக்கை ஒருசில நொடிகள் ரசித்து அவனுக்கு ஆழமாய் அழுத்தமாய் முத்தமொன்றை வைத்து நிமிர்ந்தாள். இதழ்கள் தானாய் வளைய, கால்கள் தன்னால் அவ்வறை மூலையில் போடப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றது.

மேசை விளக்கை ஒளிரவிட்டவள் சில மாதங்களுக்கு முன்வரை தன் வடுக்களின் வடிகாலாய் தன் துணையாய் இருந்த டைரியை பிரித்தாள். அதன் வெற்றுப்பக்கம் அவளை ஈர்க்க, விரல்கள் அதன்போக்கில் வார்த்தை ஜாலம் தீட்ட, அந்த டைரியின் இறுதிப் பயணத்தை துவக்கி வைத்தாள்.

அழலில் அமிழ்ந்தழிந்த சொற்கள்; 

கானல் நீரான பிம்பங்கள்; 

செழித்த என் சோலை வனங்கள்; 

விழித்தெழுந்தேன் நான் என்னவனால்…!

-மீரா.

Advertisement