Advertisement

ரியாசின் வாகனத்தில் இருவரும் முதலில் கவியை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு, அதன் பிறகே, தங்கள் ஊர் சுற்றலை துவக்கினர். நண்பர்கள் விழாக்களில் சந்தித்துக் கொண்டால் இப்படி வெளிக் கிளம்புவது அவர்கள் வழக்கம். 
ரியாஸ் ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஊர் திரும்பியிருந்தான். இருவருக்கும் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன. 
மதுபான கடையொன்றில் நிறுத்தி, இரண்டு குளிர்பான வகை மதுவை வாங்கிய ரியாஸ், மீண்டும் வண்டியை செலுத்த துவங்கினான். அமுதன் வாகனத்தின் இசைக் கருவியில், ‘எங்கேயும்.. எப்போதும் சங்கீதம் சந்தோசம்.’  என்ற பாடலை ஒலிக்க விட, ரியாஸ் அவனை பார்த்து அர்த்தமாய் சிரித்தான். 
அமுதன் அவன் சிரிப்பிற்கு பொருள் புரியாது, “என்னடா..’’ என்றான். பாடல் முடிந்து மறுபாடல் துவங்கியிருக்க, கடற்கரை சாலையின் ஓரத்தில் தன் வாகனத்தை நிறுத்திய ரியாஸ், கையில் தான் வாங்கிய மதுபானத்தை எடுத்துக் கொண்டு, கத்தும் கடலை பார்த்தபடி, வாகனத்தின் முன்புறம் ஏறி அமர்ந்தான். 
அமுதன் தன் பங்கு உற்சாக பானத்தை எடுத்துக் கொண்டவன், அதன் மூடியை திருகி உள்ளுக்குள் கொஞ்சம் சரித்துக் கொண்டு, தன் கேள்வியின் பதிலிற்காய் ரியாசை பார்த்தான். 
“இல்ல… நீ போட்ட பாட்டுக்கும் உனக்கும் செம மேட்சிங் மச்சி. ஐயா சாத்திரம் எல்லாம் பாக்காத ஆளு தான.’’ என்றுவிட்டு கையில் இருந்த பானத்தை மீண்டும் தொண்டைக்குள் சரிக்க துவங்கினான். 
அமுதன் சற்றே லேசாய் சிவந்த முகத்தோடு, “டேய்… அடங்கு. நீ அந்த மேட்டரை விடவே மாட்டியா.’’ என்றான் ஆற்றாமையோடு. ரியாஸ், கவி இணைந்த ஒரே மாதத்தில் கவி கருவுற்றாள். அதே நேரம் இசையும் கருவுற்றாள். 
இருவரும் இணைபிரியா தோழிகள் ஆகையால் நகரில் சிறந்த மருத்துவரை தேர்ந்தெடுத்து, ஒன்றே போல பரிசோதனைக்கு சென்று வந்தார்கள். ஒரு நாள் எதேச்சையாக இசையின் கருவளர்ச்சி பரிசோதனையை படித்த கவி, அது காட்டிய வித்தியாசத்தில் வியந்து விசயத்தை கணவனின் காதில் போட்டாள். 
‘அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே’ என்று மண்டையை பிய்த்துக் கொண்ட ரியாஸ், அமுதனை தனியாய் தள்ளிக் கொண்டு போய், அவன் உற்சாக பானத்தின் பிடியில் இருக்கும் பொழுது, பழைய விடயங்களை கிண்டிக் கிளறி நண்பனின் வாயிலிருந்து உண்மையை வாங்கிவிட்டான். 
“டேய்… டேய்… நீங்க ஒண்ணு சேரணும்னு என் பொண்டாட்டி என்னை கன்னிப் பையனா சுத்தவிட்டா. ஆனா நீங்க ஜாலியான ஜிம்கானான்னு மேட்டரை முடிச்சிட்டு தான் மேரேஜுக்கே ப்ளான் பண்ணி இருக்கீங்க. ஐயோ… இந்த அநியாயத்தை நான் எங்க போய் முறையிடுவேன்… அல்லா… ஜீசஸ்… மாரியம்மா…’’ தொடர்ந்து பொங்கவிருந்த ரியாசின் வாயில் அன்று ஒரு பொறித்த கோழிக் காலினை அடைத்து அப்போதைக்கு அவன் வாயடைத்தான் அமுதன். 
ஆனால் ரியாஸ் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த விசயத்தை சொல்லி நண்பனை ஓட்டி தள்ளுவதில் வல்லவனாயிருந்தான். இன்றும் ஒலித்த ஒரு பாடல் அவனுக்கு வாய்ப்பை அள்ளி வழங்கிவிட்டது. 
“அடங்குடா. ஓவரா சீன் ஓட்டிட்டு இருந்த.. காலேஜ்ல நீ செஞ்ச லீலையெல்லாம் உன் பொண்டாட்டிகிட்ட லிஸ்ட் போட்டு ஒப்பிப்பேன்.’’ என்றான் அமுதன் கடுப்போடு. 
உடனே ரியாஸ் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல, “சரிப்பா.. இனி நான் எதையும் கேக்கல. இப்ப கூட உன் கன்னத்துல பல் தடம் தெரியுதே. மதியம் நாங்க வீட்டுக்கு வந்தப்ப உன் கன்னம் புது பன்னு மாதிரி மொழு மொழுன்னு இருந்துச்சி. சாயங்காலம் கேக் வெட்டப் போற கேப்ல அது எப்படி மரம் மாதிரி முளைச்சி வந்துச்சின்னு நான் கேப்பேன். கேக்க மாட்டேனே… கேக்க மாட்டேன்.’’ என தொடர்ந்து நண்பனை கலாய்த்து தள்ளினான். 
“டேய்… உன்னோட…’’ என்று ரியாசை அடிக்க கையை உயர்த்திய அமுதன், அத்தனை அழுத்தமாகவா பல் தடம் தெரிகிறது என காண வாகனத்தின் கண்ணாடியை நோக்கி ஓடினான். ரியாசின் வெடி சிரிப்பு அவனை துரத்தி வந்தது. 
மேலும் ஒரு அரை மணி நேரம் தங்கள் வாழ்வின் ஏற்ற, இரக்கங்கள் அத்தனையும் நண்பர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர். மதம், இனம், குழு என்ற சிறு சிறு உட்கட்சி பூசல் இருவர் வாழ்விலும் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது. காதலின் அன்பில், தங்கள் இணையர்களின் துணையோடு அதை கடக்கப் பழகியிருந்தனர். 
நள்ளிரவிற்கு சில வினாடிகள் முன்னதாக, ரியாஸ் அமுதனை கொண்டு வந்து அவன் குடியிருப்பில் விட்டு சென்றான். அமுதன் நேராய் தங்கள் மொட்டை மாடி குடியிருப்பின் தண்ணீர் பீப்பாய்கள் இருக்கும் மேல் மாடியின் மேல் ஏறினான். 
அவர்கள் குடியிருப்பின் உயரம் மிக அதிகம். ஆக அவனுக்கு கீழே சென்னை மாநகர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இவர்களுக்கு அருகே இருந்த குடியிருப்புகள் இவர்களை விட உயரத்தில் தாழ்ந்தவை ஆகையால் மலை மேல் நின்று நிலம் ரசிக்கும் மனிதனாய் அமுதன் சற்று நேரம் இரவின் நகர் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். 
‘மலையும், கடலும், வயலும், கடலும் மட்டுமா அழகு. இதோ நள்ளிரவில் ஒளிரும் இந்த நகர் கூட தான் ஒப்புமை இல்லா அழகு.’ என அவனுக்குள் இருந்த ரசிகன் உள்ளத்தில் கவி புனைந்து கொண்டிருந்தான். 
அவன் கைகள் தன்னிச்சையாக இசை கடித்த கன்னத்தை தடவிக் கொண்டது. அமுதன் இசையுடன் கூடி சரியாய் ஓராண்டுகள் இரு மாதம் முடியப் போகிறது. 
ஆதினி  அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்திருந்தாள். இசையின் மெல்லுடல் கிழிக்கப்படும் போது, அமுதன் அவளோடு தான் அறுவை அரங்கிற்குள் இருந்தான். அவள் கரங்களை பற்றிக் கொண்டு அவளோடு பேசியபடி. 
அந்த காட்சிகளை அவனால் மறக்கவே முடியாது போயிற்று. இன்பத்தில் பங்கேற்கும் ஆணால், பெண் பிரசவிக்கும் போது, அவள் துன்பத்தில் பங்கேற்க முடியாமல் போவது ஆணினத்தின் சாபம் என்றே மனதிற்குள் தவித்துப் போனான். 
மருத்துவர் மூன்று மாதங்களுக்கு பின்னால் இருவரும் இணையலாம் என பரிந்துரைத்திருந்தார். ஆனால் அமுதன் இசையின் உடல் முற்றாய் இயல்பிற்கு திரும்ப வேண்டும் என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான். 
முதலில் விலகியிருந்த இசை, ஆறு மாதங்கள் கழிந்த பின், ‘அம்மு…’ என அவன் தோள் சாய, அவன் முன் உச்சியில் முத்தமிட்டவன், “நமக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு கண்ணம்மா. பாப்பாவுக்கு பீட் பண்ற. ஆபீசும் ரீஜாயின் பண்ணிட்ட. ரொம்ப வேலை பாக்குற. நிம்மதியா தூங்கு.’’ என அவளை தன் மார்போடு சேர்த்தணைத்தான்.  
கணவனின் கரிசனையில் விழி நீர் பொங்கியவள், “லவ் யூ அம்மு.’’ என்றுவிட்டு அமைதியாய் அவன் அணைப்பில் உறங்கத் துவங்கினாள். காமத்தை தள்ளி வைத்தாலும், அமுதன் மனையாளை கட்டிக் கொண்டாடவும், முத்தமிட்டு மூர்ச்சையாக்கவும் ஒரு போதும் தவறவில்லை. ஆக அவர்கள் இல்லறம் அன்பின் அறமாக தொடர்ந்து கொண்டிருந்தது. 
இத்தனை நாள் தனியாக இருக்கும் போது, மனைவியின் மீது, தோன்றாத ஆசை, வீட்டிற்குள் ஆட்கள் குவிய துவங்கியதும் தலை விரித்து ஆடியது. காரணம் அருள் அம்மாவை கண்டாலே, இசை அமுதனை கிடப்பில் விட்டு அவரிடம் ஒட்டிக் கொள்வாள். 
தினம் கிடைக்கும் முத்த சலுகையும் பறிக்கப்பட, அமுதன் இசையின் மீது பித்தேறி அலைந்தான். தன் அலைபேசியை கைகளில் எடுத்தவன் இசையின் எண்ணுக்கு அழைத்தான். 
அவள் மறுபுறம் எடுத்து திட்டத் துவங்கும் முன், “ஷ். நான் சொல்றதை மட்டும் கேளு. உடனே வாட்டர்டேங் வா.’’ என்றவன் அழைப்பை துண்டிக்க, அடுத்த பத்து நிமிடத்தில் இசை மூச்சு வாங்க மேலேறி வந்தான். 
அவன் இலகுவாய் ஒரு தண்ணீர் பீப்பாயின் மீது சாய்ந்து நிற்பதை கண்டவள், “பாட்டி அத்தனை திட்டு. அருள் அம்மாவே சொல்லிட்டாங்க. நாளைக்கு நான் உங்களை தோசைக் கரண்டி வச்சி சூடு போடப் போறேன்.’’ என அவனை மிரட்டத் துவங்கினாள். 
ஒரு சிரிப்போடு அவள் கோபத்தை ரசித்திருந்தவன், அவள் எதிபார்க்காத தருணமொன்றில் அவளை இழுத்து, யார் பார்வைக்கும் தென்படாத இடத்தில் கொஞ்சம் வலுவாக கடித்தான். 
“ஆ…’’ என்று அவள் அலற எத்தனித்த நொடி, அவன் இதழ் உயர்ந்து அந்த அலறலை தனக்குள் வாங்கிக் கொண்டது. கணவனின் ஆசையின் வேகத்தை உணர்ந்தவள், இருகைகளையும் மாலையாய் கோர்த்து அவனுக்கு இசைந்து நின்றாள். 
மூச்சு வாங்க அவளைப் பிரிந்தவன், “வீட்ல எல்லாரும் தூங்கியாச்சா..?’’ என்றான் ஆசைப் பெருமூச்சோடு. “உங்களையும் என்னையும் தவிர எல்லாரும் தூங்கிட்டாங்க.’’ என்றாள் இசை அவன் நெற்றியில் செல்லமாய் முட்டியபடி. 
“காட்டேரி… ஆ ஆன்னு கத்தி என் மானத்தை வாங்க மாட்ட இல்ல.’’ என்றவன் கை கொடுத்து அவளை தூக்கி கொள்ள, “என்னால வாக்குறுதி எல்லாம் கொடுக்க முடியாது. ஆனாலும் வர வர நீங்க ரொம்ப மோசம். ரௌடி பையா. வலிக்குது.’’ என்றவள் சற்று முன் அவன் கடித்த இடத்தை நீவிக் கொண்டாள். 
“நீ கடிச்சப்ப எனக்கு இனிச்சது பாரு. டிட் பார் டேட் காட்டேரி.’’ என்று மையலின் மயக்கத்தோடு மொழிந்தவன், அவளை தூக்கிக் கொண்டு படியிறங்க துவங்கினான். இவர்களின் கூடல் உவகையை கண்ட வானக் காதலன், பேராசை கொண்டு தன் பூமிக் காதலியை தழுவ மழையென இறங்கி வந்தான். 
இருவரையும் நனைந்த மழைத்துளி காமத்தின் வெம்மை தணிந்து, காதலின் குளுமை கொண்டு நிலம் சேர விழைந்தது. தன்னவளை வெம்மை கொண்டு நோக்கிய அமுதனின் விழிகள் தற்போது காதலின் சலனத்தால் குளிர்ந்து அன்பின் பெருமழையென காலத்திற்கும் அவளை நனைக்க காத்திருந்தது.
சலனம் குளிர்ந்தது.  

Advertisement