Advertisement

பின் கதையுரை 
அமுதனின் வீடு அத்தனை கொண்டாட்டமாய் இருந்தது. இசையின் இரட்டை சகோதரிகள் தங்கள் கைகளுக்கு எட்டிய இடங்களில் எல்லாம் பலூன்களை கட்டிக் கொண்டிருந்தனர். 
அருள் அம்மா, “அந்த ‘ஆ’ எழுத்து இன்னும் கொஞ்சம் மேல வரணும்டா’’ என ரியாசை வேலை வாங்கிக் கொண்டிருக்க, நான்காவது முறையாக கோணத்தை மாற்றிய ரியாஸ், “இவன் புள்ள பர்த்டே பார்டி முடியிறதுக்குள்ள என் நல்லி எலும்பை குடும்பமே சேர்ந்து கோணலாக்கிடும் போலையே.’’ என வழக்கம் போல மனதிற்குள் வசைபாடிக் கொண்டிருந்தான். 
அவன் மனைவி கவியோ, மடியில் பத்து மாத குழந்தை சர்மிளாவோடு, கையில் சற்று முன் ஷாலினி கொடுத்து சென்றிருந்த பழச்சாறை அருந்தியவாறு தன் கணவன் வேலை செய்யும் பாங்கை கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள். 
ஷாலினி சமையலறையில் விருந்தினர்களுக்கு உணவினை தயார் செய்து கொண்டிருக்க, கொள்ளுப் பெயர்தியின் பிறந்த நாள் விழாவிற்கு வருகை புரிந்திருந்த, இசையின் பாட்டியும் அவருக்கு சமையலில் உதவிக் கொண்டிருந்தார். 
பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, தன் மாப்பிள்ளையுடன் நாட்டு நடப்பை பேசிக் கொண்டிருந்தார் ரங்காச்சாரி. அதிகாலையில் தான் அவர்கள் வழமைப்படி, கொள்ளுப் பெயர்திக்கு ஆயுளை வளர்க்கும் ஆயுஷ் ஹோமத்தை தானே நடத்தி வைத்திருந்தார்.
குடும்பமே குளித்து முடித்து, முதலில் கோவிலுக்கும், அதை தொடர்ந்து தேவாலயத்திற்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தி திரும்பியிருந்தனர். மதியம் நன்றாக உண்டுவிட்டு, இசை, அமுதனின் செல்ல மகள் ஆதினி நல்ல உறக்கத்தில் இருந்தாள். 
மொட்டை மாடியில், இசை, அமுதன், சேகர் மூவரும் வரும் விருந்தினர்களுக்கு வழங்க, பரிசுப் பொருளை தயார் செய்து கொண்டிருந்தனர். 
இப்போது  சென்னையில் மாடி வீட்டுத் தோட்டம் குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் நிலையில், தங்கள் மகளின் பிறந்த நாள் பரிசாக வருவோருக்கு எல்லாம் கீரை, மற்றும் காய்கறி செடிகளின் விதைகளை வழங்க முடிவு செய்திருந்தனர். 
அதன்படி, விதைகளை சேகர் சிறிய காகித உறைகளில் பிரிக்க, மஞ்சள் வர்ண அட்டை காகிதத்தில் மரத்தின் உருவை வரைந்த இசை, மரத்தின் அச்சு போல அதை சுற்றி வெட்ட, அதற்கு வர்ணம் தீட்டி, நன்றி என முகப்பில் எழுதிக் கொண்டிருந்தான் அமுதன். 
மதிய உணவு முடிந்ததும் அவர்கள் இந்த பணியில் இறங்கி இருந்தார்கள். அமுதன் முழு வடிவம் தந்த மர வாழ்த்து அட்டையில், சேகர் இரு வேறு காய், கீரை விதைகளை அவற்றோடு இணைத்து பின் செய்ய நன்றியின் வாழ்த்து மடல் முழு உரு கொண்டது. 
மாலை கதிரவன் கவிழும் நேரம் ஆதினி கண் விழித்தாள். அவளின் விழிப்பு குரல் கேட்டதும் இதுவரை ஆங்காங்கே தங்கள் பணியில் இருந்தவர்கள், அதை அப்படியே போட்டுவிட்டு அவளை நோக்கி ஓடினர். 
வேகத்தில்  சிறந்த இரட்டையர்கள் முதலில் குழந்தையை தூக்கிக் கொண்டனர். அவர்களின் பின் நின்று, அருள், ஷாலினி, இருதயராஜ், கவி ஆகியோர் குழந்தையை கேட்டு கை நீட்டிக் கொண்டிருந்தனர். 
“அதெல்லாம் முடியாது. நாங்க தர மாட்டோம். தூங்குற பாப்பாவை கொஞ்ச கூடாதுன்னு பாட்டி திட்றாங்க. நாங்க பாப்பாவை பாக்குறதே லீவ்ல தான். நாங்க தான் இன்னைக்கு முழுக்க வச்சிருப்போம்.’’ என்றபடி கையில் பலூனோடு குழந்தையை தூக்கி கொண்டு வாயிலை நோக்கி நடந்தனர். 
ஆதினி  புதியவர்கள், பழகியவர்கள், பழகாதோர் என்ற எவ்வித பேதமுமின்றி தூக்கி கொஞ்சும் அனைவரிடமும் அழகாக ஒட்டிக் கொள்வாள். புதிதாய் முளைத்திருக்கும் கீழ் பல் தெரிய அவள் புன்னகைப்பது காண்போரை கட்டிப் போட்டுவிடும். 
இப்படி இவர்கள் அலப்பறையை கூட்டிக் கொண்டிருக்க, சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்த இசையின் பாட்டி , “என்ன இது சந்தை மடமாட்டம். ஏ… பொண்ணுங்களா கொஞ்சி நேரத்தை ஓட்டாம குட்டிக்கு புதுத்துணி உடுத்தி ஆறு மணிக்குள்ள தயார் செஞ்சிடுங்க.  குழந்தை இங்க தானே இருக்க போறா. இன்னும் சித்த நேரத்துல வெளி மனுசா எல்லாம் வந்துடுவா. போங்கோ.. போய் எல்லாரும் உங்க காரியத்தை பாருங்கோ.’’ என ஒரு அதட்டல் போட்டு அனைவரையும் மீண்டும் அவர்கள் பணி நோக்கி திருப்பினார். 
இசையின் பாட்டி வார்த்தைகள் எப்போதும் சூடாக தான் இருக்கும். ஆனால் அந்த வெம்மை வார்த்தையின் கீழிருக்கும் நேச கத கதப்பை உணர்ந்தவர்கள் அவரை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகியிருந்தனர்.
முதலில் அதிகம் திணறியவர்கள் இரட்டையர்கள் தான். “ஓல்ட் லேடி.’’ என அவரை கண்டாலே ஒதுங்கி ஓடி விடுவார்கள். ஆனால் காலப் போக்கில் அவரின் நெய் அதிரசத்திற்கும், முறுக்கிற்கும் அடிமையாகி அவர் சொற்களை எல்லாம் ஒரு காதில் வாங்கி மறுகாதில் விடப் பழகியிருந்தனர். 
அவரின் பண்டங்களை இருவரும் ரசித்து உண்பதை காண்பவர், ஊரிலிருந்து வரும்போதோ, அன்றி இங்கு வந்த பின்போ, இருவருக்கும் பிரத்யேகமாக கொஞ்சம் நொறுக்கு தீனிகளை தயார் செய்தே வருவார். 
ஆனாலும் அவர்கள் அங்கும் இங்கும் ஓடும் போது, “பொம்மனாட்டி பசங்க என்னத்துக்கு இப்படி ஆடுறதுகள்.’’ என்று வையவும் தவறமாட்டார். அவர்கள் அதை எல்லாம் காதில் வாங்கினால் தானே ஆட்டம் குறையும். 
இரட்டையர்கள் ஆதினியை தயார்படுத்த துவங்க, நன்றி அட்டையை தயாரித்து முடிந்திருந்த மூவர் குழுவும் தாங்கள் தயாராக கீழே இறங்கினர். சேகர் வரவேற்பறையில் இருந்த அருள் அம்மாவை நோக்கி நடந்துவிட, இசையும் அமுதனும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர். 
அவர்கள் இன்னமும் அமுதனின் இரட்டைப் படுக்கையறை குடியிருப்பில் தான் தங்கள் வாழ்வை தொடர்ந்து கொண்டிருந்தனர். குழந்தை பிறந்த பிறகு அருள் அம்மாவோ, ஷாலினியோ அன்றி இசையின் பாட்டியோ அடிக்கடி இங்கு தங்க நேர, அவர்களுக்கு வசதியான பெரிய படுக்கையறையை கொடுத்துவிட்டு, அவர்கள் மீதமிருந்த சிறிய படுக்கை அறையை எடுத்துக் கொண்டார்கள். 
இருவரின் சம்பளமும் சேர, அவர்களின் வாழ்நிலையை அவர்கள் அடுத்த நிலைப்படிக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இருவருக்கும் அதில் விருப்பம் இல்லை. எளிமையே இனிய வாழ்வு என்ற முடிவிற்கு வந்தவர்கள், தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் கல்விக்கு கொடுத்து உதவினர். 
‘அகரம்’, பிரகாஷ் அண்ணன் நடத்தும் ‘நம்பிக்கை’ போன்ற மையங்களுக்கு பெயர் சொல்லாமல் கணிசமான தொகையை அனுப்பி வைத்து விடுவர். அரும் மட்டுமே அவற்றை அறிவார். காரணம் அமுதன் எதையும் தாயிடம் மறைப்பதில்லை என்பதால். 
தனக்கு பின்னால் கதவு அடைபட, இசை மாலை அணிய வேண்டிய உடையை வேக வேகமாக தேடிக் கொண்டிருந்தாள். அதே நேரம் அமுதனின் வலுவான கரங்கள் அவளை இடையோடு அணைத்தது. 
“அம்மு…’’ கொஞ்சலாய் மிழிட்றினாள் இசையாள். “மியூசிக்…’’ அவள் பெயரையே மீட்டுவதை போல உச்சரித்தான் அமுதன். “உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மியூசிக். உன்ன கிஸ் பண்ணி 168 ஹவர்ஸ் ஆயிடுச்சு.’’ என்றான் குரலில் கிறக்கத்தை கூட்டி. 
“டேய் பிராடு ஏழு நாளை எப்படி இழுத்து சொல்ற பாரு. வீடு முழுக்க ஆளுங்க இருக்காங்க அம்மு. இது தான் நீங்க ரொமான்ஸ் பண்றதுக்கு நேரமா…?’’ என்றாள் குரலில் போலியான சலிப்பை ஏற்றி. 
“ஆத்திரம் கொண்டவற்கே கண்ணம்மா… சாத்திரம் எதுக்கோடி” என்றவன் தன் கன்னத்தை அவள் புறம் காட்டினான். லேசாய் உரோமங்கள் எட்டிப் பார்த்த சொர சொர கன்னத்தை இசை ஆசையாய் கை கொண்டு தடவ, அமுதன் கண்களை மூடினான். 
அவன் அசந்த நேரம், நறுக்கென்று அவன் கன்னத்தில் கடித்தவள், பட்டென நழுவி குளியலறைக்குள் மறைந்துவிட்டாள். “ஷ்….’’ என்று கன்னத்தை நீவி விட்டுக் கொண்டவன், “காட்டேரி. இருடி நைட்டு உன்ன பேசிக்கிறேன்.’’ என்று கதவிற்கு வெளியே கத்திவிட்டு, உடை மாற்ற துவங்கினான். 
விருந்தினர்களின் வருகை கூடத்தை நிறைக்க துவங்கியது. அனைவரும் உடைமாற்றி அந்த நாளை கொண்டாட தயாராக இருந்தனர். ஆதினி கை நீட்டுபவர்களிடம் எல்லாம் தாவி தன் கீழ்ப் பல் தெரிய சிரித்துக் கொண்டிருந்தாள். 
அனைவரும் வந்தவுடன், ஆதினியின் கையில் பெரிய மெழுகுவர்த்தியை கொடுத்து, தாய், தந்தையர் இணைந்து கூடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை ஏற்ற வைத்தனர்.
அதை தொடர்ந்து, “நீண்ட நீண்ட காலம்… நீ நீடு வாழ வேண்டும்..’’ என்ற பிறந்த நாள் தமிழ்ப் பாடல் ஒலிக்க குழந்தைகள் அனைவரும் ஆதினியை சுற்றி ஆட துவங்கினர். அவர்களோடு இரட்டையர் இணைய, இரட்டையரோடு இருதயராஜ் இணைய, இசை, அமுதன், அருள், ரியாஸ் என வரிசையாய் களத்தில் குதித்தனர். 
அருள் அம்மா, இசையின் பாட்டியை கரம்பற்றி இழுக்க, அவர் முகத்தை மூடிக் கொண்டு தன் கணவரின் பின் ஓடி ஒளிந்ததை கண்டவர்கள் வாய் விட்டு சிரித்தனர். 
பாடல் முடிந்ததும் ஷாலினி தானே தயாரித்த இனிப்பப்பத்தை கூடத்திற்கு கொண்டு வந்தார். அனைவரின் கரவொலியும் இணைந்து ஒலிக்க, ஆதினி துண்டு செய்த இனிப்பை, அவள் முதலில் அருளை நோக்கி நீட்டினாள். 
அனைவரும் ஒரு புன்சிரிப்போடு அதை ஆமோதித்தனர். அருள் கண்களில் ஈரம் கசிய தன் பெயர்த்தி ஊட்டிய இனிப்பு துண்டை வாயில் வாங்கிக் கொண்டார். 
இப்படி இனிப்புகளை ஊட்டுதல், நிழற்படமெடுத்தல் என அடுத்த ஒருமணி நேரம் கரைய, வந்திருந்த விருந்தினர்களுக்கு தலை வாழை விரித்து அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. 
தன் மனையாளோடு வந்திருந்த பிரகாஷ், ஆதினியின் முதலாம் பிறந்த நாள் பரிசாய் சந்தனக் கன்று ஒன்றை கொண்டு வந்திருந்தார். “ஊர்ல நட்டு வைக்கிறோம் அண்ணா…’’ என்ற உறுதியோடு இசை, அமுதன் அதை பெற்றுக் கொண்டார்கள். 
விழா இனிதே முடிய, அனைவரும் தம் தம் இல்லங்களுக்கு திரும்பினர் . இசையின் தாத்தா, பாட்டியும், அருள் அம்மாவும் அங்கேயே தங்க, இசையிடம் கெஞ்சி, கொஞ்சி அனுமதி பெற்றிருந்த அமுதன், ரியாசோடு வெளிக் கிளம்பியிருந்தான்.

Advertisement