Advertisement

சலனம் – 9 
இசை அந்த இற்றுப் போன பழைய நாட் குறிப்பேட்டை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மின் அஞ்சல் வழியே அலுவகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தாள்.
ஊரிலிருந்து வந்த கவி, அலுவலகம் கிளம்பும் வரை சாதாரணமாய் இருப்பதை போல காட்டிக் கொள்ள அரும்பாடு பட்டுப் போனாள். ஆனால் அவள் உள்ளமோ நடந்ததை எண்ணி சதா ரணமாய் அவளை வதைத்துக் கொண்டிருந்தது. 
“ஏன் ஆபிஸ் வரல..?’’ என்று சந்தேகமாய் வினவிய கவியிடம், ‘பெரியம்மா மாமியார் ஹாஸ்பிட்டல்ல அட்மிசனாம். போய் பார்த்துட்டு வர சொன்னாங்க அதான்.’’ என்று வாயில் வந்த பொய்யை சொல்லி சமாளித்தாள். 
கவி அறிந்தவரை இசை தேவையில்லாமல் எதையும் செய்யமாட்டாள். ஆக தூண்டி துருவாமல், தான் மட்டும் அமைதியாய், அலுவலகம் கிளம்பி சென்றாள். 
தோழியின் தலை இந்தப் பக்கம் மறைந்ததும், இசை தாயின் நாட் குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். ஆம் அவளுக்கு அன்னையின் நினைவு வரும்போதெல்லாம் அதை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்துவிடுவாள். 
அன்னை என்ற உறவை புகைப்படம் தவிர்த்து இந்த எழுத்துக்களிலேயே  அதிகம் உணர்ந்து இருக்கிறாள். இந்த நாட்காட்டியை கூட அவளின் பெரியம்மா, அவள் கல்லூரியின் மூன்றாம் வருடம் படிக்கும் போது, தாயின் திவசம் முடிந்த நாளொன்றில், தன் தாயின் நினைவாய் தன்னிடம் ஏதுமில்லையே என அவர் மடியில் படுத்து மறுகிய போது தான் மனம் கேளாமல் அந்த நாட்குறிப்பை அவள் வசம் ஒப்புவித்து இருந்தார். 
அதில் தான் மகள் தன் அன்னையை அறிந்தாள். இளம் வயதில் இருந்தே அதிக புத்தகங்கள் வாசிக்கும் வழமை இருந்ததால், பூரணியின் எழுத்துக்கள் வழியே தாயை உணர்வது அவளுக்கு எளிதாய் இருந்தது. 
ஒரு நாள் இரவில் அந்த நாட்காட்டி முழுமையையும் வாசித்து முடித்திருந்தாள். அந்த நாட்காட்டி தொன்னூறுகளில் துவங்கி, 96 ஆம் ஆண்டில் முடிவடைந்திருந்தது. 
ஆம் அவள் பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை பூரணி நாட்குறிப்பேட்டில் எழுதி இருந்தார். இசை பிறந்த மூன்றே மணி நேரங்களில் பூரணி இறந்திருந்தார். 
பூரணி வரிசையாய் தேதியிட்ட பக்கங்களில் எழுதாமல், தானாய் தேதி  குறிப்பிட்டு, அன்றைய நாட்களில் நிகழ்ந்த முக்கிய விவரங்களை மட்டும் ஓரிரு வரிகளில் எழுதி வைத்திருந்தார்.     
மனம் நெகிழ்ந்த அல்லது அதிகம் வருந்திய நாட்களில் மட்டுமே கொஞ்சம் அதிக பக்கங்களை எழுதி இருந்தார். 
அப்படிதான் தாயின் காதலையும், மண வாழ்வையும், அதில் அவர் அனுபவித்த துன்பங்களையும் இசை உணர்ந்திருந்தாள். அவளையும் அறியாது கண்ணில் கண்ணீர் வழிந்திருக்க, மீண்டும் ஒரு முறை அந்த நாட் குறிப்பேட்டை வாசிக்க துவங்கினாள்.
ஆம் அப்படியாவது, சலனம் கொண்ட தன் மனம் அமைதி கொள்ளதா..? மீண்டும் விடாதா..? என்று எண்ணி தான் அந்த செயலை துவக்கினாள். ஆனால் அப்போது அவள் அறியவில்லை தன் மனதின் வேதனையை பெருக்கிக் கொள்ளப் போகிறோம் என்பதை. 
இசை தன் அறையை விட்டு சென்ற நொடியிலிருந்து எத்தனை நேரம் அப்படி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தனோ அவனே அறியான். அலைபேசி ஒலி எழுப்பி அமுதனின் மோன நிலையை கலைத்தது. 
சற்று நேரம் எங்கிருக்கிறோம் என்றே உணராதவன், அலைபேசியின் மினு மினுப்பில் அழைப்பது தாய் என்று உணர்ந்ததும், அதை அள்ளி எடுத்து அழைப்பை ஏற்றான். 
“அம்மா..!’’ மகனின் குரல் கேவலாய் வெளிப்படவும் அருள்விழி பதறிவிட்டார். “அமு…! என்னப்பா என்ன ஆச்சு..?’’ தாயின் பரிதவிப்பில் தன்னை மீட்டவன், தன் துக்கத்தை தனக்குள் விழுங்கியபடி,  
“இன்னைக்கு வண்டியில வரும் போது தெரியாம… ஒரு குட்டி நாய் மேல வண்டியை விட்டேன்மா.. அந்த நாய் செத்துப் போச்சு. அதான் ரொம்ப கஷ்டமா இருக்குமா.. ரொம்ப குட்டி நாய்மா..” இதழாய் கூட அரும்பாத தன் காதலின் நினைப்பில் அமுதன் பேச, அப்பக்கம் தாய் ஆசுவாசம் கொண்டார். 
“அமுதா…! நீ தெரிஞ்சி செஞ்சி இருக்க மாட்ட… ஆனா அதுக்காக உனக்கு ஆறுதல் சொல்ல மாட்டேன். குட்டி வலி வேதனையோட செத்து இருக்கும். ஆனா அதோட தாயப் பத்தி நினச்சி பாத்தியா. இனி இருக்க ஒவ்வொரு நிமிசமும் வலி வேதனையோட அந்த இடத்தை தான் சுத்தி வரும். அம்மானா அதுல உயர்திணை அக்றிணை கிடையாதுப்பா… கொஞ்சம் கவனமா வந்து இருக்கலாம் இல்லை.’’  மகனுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தார் நிலவரம் அறியாத தாயாய். 
“இனி கவனமா இருக்கேன்மா…!’’ தாயின் வலி என்ற ஒற்றை வார்த்தையில் தனையன் மீண்டிருந்தான். தன் தாயும் தனக்காக வாழ்பவள் தானே. வாழ்வில் அத்தனை வலி வேதனை தாங்கி. அவளுக்காக என் வாழ்வை நான் மகிழ்வாய் வாழத் தானே வேண்டும். 
அந்த எண்ணம் தோன்றியவுடன், “மா… அடுத்த வாரம் ஊருக்கு வரேன். உங்க மடியில தலை சாஞ்சி படுத்துக்கணும் போல இருக்கு.’’ என்று ஆசையாய் கூறினான். 
“கட்டி கொடுத்தா பத்து மாசத்துல ரெண்டு ரெட்டை பேர பிள்ளைகளை மடியில போட்டு சீராட்டுவேன். உனக்கு இன்னும் என் மடி வேணுமா. டேய்…! எதுக்கும் மூர்த்தி அங்கிள்கிட்ட உன்ன செக்கப் கூட்டிட்டு போலாமான்னு பாக்குறேன். ஏழு கழுத வயசாகுது இன்னுமாடா உனக்கு லவ் வரல. ஒரு வேளை எனக்கு மருமக எடுக்குற பாக்கியம் இல்லாம எதாச்சும் மருமகனை செட் பண்ணி இருக்கியா. இருந்தா அதையும் தைரியமா சொல்லுடா.. அம்மா முற்போக்குவாதி தான். மனசை தேத்திக்கிட்டு அவனுக்கு பட்டு ஜிப்பா வாங்கி வைக்கிறேன்.’’ என்று சொல்லிவிட்டு பெரிதாய் சிரிக்க, அமுதனின் முகத்திலும் அப்புன்னகை எதிரொலித்தது. 
இது தான் அவன் தாய். இத்தனை நாள் மகன் தான் தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணியே அவன் திருமண விடயத்தில் ஒதுங்கி இருந்தார். அவர் கொண்ட கொள்கைகள் அப்படி. 
ஆனாலும் மகனுக்கு வயது ஏற ஏற, சராசரி இந்திய தாயாய் மனதிற்குள் கவலை கொண்டார். அதனாலேயே இப்படி பேசி மகனுக்கு தன் ஆவலை கோடிட்டு காட்டுவார். 
அமுதனுக்கும் தாயின் ஆசை புரிய தான் செய்தது. வழக்கமாய் அவரைப் போலவே பேச்சில் திருப்பிக் கொடுத்துவிட்டு, அழைப்பை துண்டித்து விடுவான். 
இம்முறை அவனால் அப்படி முடியவில்லை. இசையிடம் அடிவாங்கிய தன்மானம் இனியொருமுறை வேறு பெண்ணிடம் மண்டியிடும் என்று எண்ண முடியவில்லை. 
ஆக மகன் இம்முறை திருவாய் மலர்ந்தான். “அம்மா.. எனக்கு லவ் இதெல்லாம் செட் ஆகும்னு தோணல. சும்மா நாய் குட்டி மாதிரி அவங்க பின்னாடி அலைஞ்சி என்னால லவ்லாம் பண்ண முடியாது. உங்க பிரண்ட் சேகர் அங்கிள்கிட்ட சொல்லி நீங்களே ஒரு நல்லா பொண்ணா பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே. ஆன்சைட் போற மாதிரி இருக்குமா. அதனால ஒரு ஆறுமாசம் கழிச்சி நேரடியா மேரேஜ் பிக்ஸ் பண்ணிக்கலாம். நானும் சீக்கிரமா என் பொண்டாட்டி மடியில படுத்து உங்களை கடுப்பேத்தல நான் உங்க பையன் தமிழமுதன் இல்ல பாத்துக்கோங்க.’’ என்று விட்டு அமுதன் அம்மாவை வம்பிற்கு இழுத்தான். 
ஆனால் அவன் எண்ணியபடி, அவன் தாய் உற்சாகத்தில் துள்ளி குதிக்காமல், “ஏதாச்சும் பிரச்சனையா அமுதா..?’’ என்று சரியாக மகனின் நாடி பிடித்தார். ஒரு நொடி அமுதனே தடுமாறிப் போனான். 
உடனே தன்னை மீட்டுக் கொண்டவன், “அட என்னம்மா நீங்க..? நானே வெட்கத்தை விட்டு எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேக்குறேன். நீங்க என்னை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க இப்படி ஆக்சன் எடுக்காம இருந்தா நான் கையில கமண்டலம் வச்சிட்டு சாமியாரா தான் போகணும்.’’ என்று போலியாய் அலுத்துக் கொண்டான். 
இம்முறை அந்தப் பக்கம் வெடி சிரிப்பு சிரித்த தாய், “டேய் படவா..! நான் கட்டி வச்சா ஒரு பொண்ணு தான். அதனால நைசா சாமியாராகி ஆஸ்ரமம் வச்சி நித்தமும் குட்டி புட்டின்னு செட்டிலாக பாக்குறியா. அது இந்த அருள்விழி இருக்குற வரை நடக்காதுடா மகனே. வடியிற ஜொள்ளை துடச்சிட்டு போய் ஜோலியப் பாரு. நானும் சேகர் வீட்டுக்கு போய் கல்யாணத்துக்கு பொண்ணு வேட்டையை தொடங்குறேன்.’’ என்றவர் சற்றே இடைவெளிவிட்டு, 
“ரொம்ப சந்தோசம் அமுதன். உன்னோட எதிர்காலத்தை தேர்ந்தெடுக்குற பொறுப்பை என்கிட்டே கொடுத்து இருக்க. எல்லா அம்மா மாதிரியும் ரொம்ப பெருமையா தான் இருக்கு. நல்லது நினைக்கிறோம் நாம. நல்லது தான் நமக்கு நடக்கும். நீ கொடுக்குற அன்பை இரண்டு மடங்கா திருப்பிக் கொடுக்குற மனசுக்காரி உனக்கு பொண்டாட்டியா வருவா அமுதன். சரி ரொம்ப நேரம் பேசிட்டோம். போய் தூங்கு. இனிமே வண்டி ஓட்டும் போது கவனமா இருக்கனும். நாளைக்கு போகும் போது அந்த அம்மா நாயிக்கு சாப்பிட ஏதாவது கொண்டு போய் போடு. சாப்பிட்டு போய் படு. போனை வைக்கட்டா..?’’ என்றார். 
“லவ் யூ மா.’’ என்றவன் அந்த அலைபேசியில் அழுந்த முத்தமிட, “உனக்கும் என் அன்புகள் அமுது பையா. போய் தூங்கு போ. ஒரு பொண்ணை கரெட்க் பண்ணி கடலை போட வேண்டிய வயசுல… அம்மா முந்தானை புடிச்சிட்டு சுத்திட்டு இருக்க..!’’ அலுத்துக் கொண்டாலும் அத்தனை பெருமிதம் அவர் குரலில். 
“ரொம்ப பண்ணாதீங்க. எல்லா உங்க மருமக வர வரைக்கும் தான். அப்புறம் எல்லாம் உங்களுக்கு ஒன்னும் கிடையாது  போங்க.’’ என தாயை கடுப்பேற்றினான். 
ஆனால் அவர் அமுதனின் அன்னை ஆயிற்றே. “ஆமா.. அப்பவும் உன்னை கொஞ்சுவேன்னு நினைப்பு. ரோஜாப் பூ மாதிரி என் பேரனோ, பேத்தியோ வந்துடுவாங்க. அவங்களை கொஞ்சவே நேரம் இருக்காது. போடா டேய்…! உன்கிட்ட பேசினா சேவ கூவிரும். என் பொழப்பை பாக்குறேன் போய். போனை வைக்குறேன்டா தடிப்பையா..!’’ என்றவர் அதோடு அலைபேசியை துண்டித்திருக்க, தாயோடு பேசியதில் அமுதன் நன்றாக தெளிந்திருந்தான். 
இதழ்களில் புன்னகை கூட மலர்ந்திருந்தது. அலைபேசி கொண்டு லேசாக நெற்றியில் தட்டிக் கொண்டவன், “அம்மா…! அம்மா…!’’ என்று உள்ளுக்குள் உற்சாகமாய் இருமுறை சொல்லிக் கொண்டான். 
அவ்வளவு தான். இந்த எதார்த்த மனநிலை தான் வாழ்வு. கிடைக்காத ஒன்றிற்காக எப்போதும் அதன் வாயிலில் காத்திருக்க அமுதன் விரும்புவதில்லை. நிதர்சனத்தை நோக்கி அவன் கால்கள் நகர்ந்துவிடும். 
வெளிநாடு சென்று பணிபுரிய ஏற்கனவே இரண்டு முறை அவனுக்கு வாய்ப்பு வந்திருந்தது. அமுதன் தான் தமிழ்நாட்டை, தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் இங்கேயே தேங்கி இருந்தான். 
ஆனால் இம்முறை அந்த வாய்ப்பை அமுதன் ஏற்றுக் கொள்ள விரும்பினான். ஒரு ஆறு மாதம் முற்றிலும் புதிய சூழலில் கழித்தால் மனம் சமநிலை அடைத்துவிடும் என்று எண்ணியே அந்த வாய்ப்பிற்கு தனது சம்மதத்தை தெரிவித்து மின் அஞ்சல் அனுப்பினான். 
எப்படியும் ஓரிரு வாரங்களில் சம்மதம் தெரிவித்து அவனுக்கு பதில் வரும் என்பது அவன் அறிந்ததே. அடுத்த ஓரிரு வாரங்கள் வீட்டிலிருந்து பணி செய்வோம் அலுவலகம் செல்ல வேண்டாம் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், அதற்கும் சேர்த்தே மின் அஞ்சலை அனுப்பி வைத்துவிட்டு அதன் பிறகே உறங்க சென்றான்.         
  
இரண்டு நாட்கள் விடுப்பிற்கு பிறகு இசையும் பணிக்கு திரும்பினாள். எப்பொழுதும் கல கல பேர்வழி கிடையாது. ஆனாலும் பேச்சு வார்த்தைகள் கூட மிகவும் சுருங்கிப் போயிற்று.
கவிக்கு தோழியின் நிலை கவலையை அளித்தது. ரியாஸ் தங்கையின் திருமண நிச்சயம் முடித்து ஊர் திரும்பி வருகையில் கையில் பிரியாணியோடு வந்திருந்தான். 
அமுதன் வீட்டிலிருந்து பணி செய்கிறான் என்ற செய்தி அவனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அன்று இரவு அவன் வீட்டிற்கு தேடிப் போகையில்,  நிலைக் கண்ணாடியில் ஓட்டியிருந்த பொட்டும், கொடிக் கயிற்றில் இருந்த துப்பட்டாவும் அவனுக்கு ஏதோ சேதி சொல்ல, “என்னாச்சு தமிழ்..?’’ என்றான் அமைதியாய். 
எப்போதும் ரியாசிடம் அமுதன் எதையும் மறைக்க முயன்றதில்லை. ஆக கொட்டிக் கவிழ்த்து விட்டு, பிரியாணியை எடுத்து உண்ணத் துவங்கி இருந்தான். 
ரியாஸ் தான் மனதிற்குள் பாரத்தை ஏற்றிக் கொண்டான். “நான் வேணா பேசிப் பார்க்கவா தமிழு. அந்தப் பொண்ணு பதட்டத்துல எதையாச்சும் அவசரப்பட்டு பேசியிருக்கும்.’’ என்றான் ஆறுதலாய். 
“என்னைப் போய் அவ கால்ல விழுந்து கெஞ்ச சொல்றியா..? இல்ல கை நீட்டி பிச்சை கேட்கட்டுமா..? ஒரு மண்ணும் வேண்டாம். அம்மாகிட்ட பொண்ணு பார்க்க சொல்லிட்டேன். ஒரு ஆறு மாசம் யூ,எஸ் போயிட்டு வந்தா மனசு எல்லாத்தையும் துடச்சி போட்ரும். நபேண்டான்னு நடுவுல நீ எதுவும் காமெடி பண்ணாம இருந்தா அதுவே போதும். புரியுதா. அந்த பொண்ணு எல்லாம் நம்ம லைப் ஸ்டைலுக்கு ஒத்து வராது மச்சான்.’’ என்றவன் பிரியாணியை மூச்சு விடாமல் உள்ளே தள்ளியதில் பெரிய ஏப்பம் ஒன்றை வெளியேற்றினான். 
இதற்கு மேல் தன் பேச்சு அமுதனின் செவி ஏறாது என்பதை உணர்ந்த ரியாஸ், அடுத்து அமுதன் தொடுத்த தங்கை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கியிருந்தான். 
“ஆபிஸ் வாடா..! எனக்கு போர் அடிக்குது.’’ என்று கேட்டதற்கும், “நீயும் வேணா வொர்க் ப்ரம் ஹோம் போட்டுட்டு என் ரூம்ல வந்து செட்டில் ஆகு.’’ என்றதோடு அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டான்.
அதோடு ரியாஸ் அமைதியாய் தன் வீட்டிற்கு திரும்பினான். அடுத்த நாள் காலை, கவி தனியாய் உணவகத்தில் அமர்ந்திருப்பதை கண்ட ரியாஸ் அவள் அருகில் சென்று அமர்ந்தான். 
“ஹாய் கவி..!’’ இவன் அழைக்க, திரும்பிப் பார்த்தவள், “ஹாய் சார்..! எப்படி இருக்கீங்க. தங்கச்சி நிச்சயம் நல்லபடியா முடிஞ்சதா..? எங்களுக்கு எல்லாம் எப்ப பிரியாணி ட்ரீட்…?’’ என்று அவனை கேள்விகளால் தாக்க துவங்கினாள். 
“கண்டிப்பா ட்ரீட் உண்டு. அஞ்சப்பர்ல இருந்து பிரியாணி ஆர்டர் கொடுத்து வாங்கி தரேன் சரியா..? எங்க உங்க கூட ட்வின் மாதிரி ஒட்டிட்டு இருப்பாங்களே உங்க பிரண்ட் எங்க அவங்க..?’’ லேசாக நூல் விட்டுப் பார்த்தான். 
‘அதை ஏன் கேக்குறீங்க..? நான் ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து பேய் அடிச்ச மாதிரி இருக்கா. ஏற்கனவே அளந்து தான் பேசுவா. இப்ப அதுவும் இல்ல. ப்ரேக் வாடின்னு கூப்பிட்டா கூட.. நீ போயிட்டு வரும் போது எனக்கு ஒரு கப் காபி வாங்கிட்டு வான்னு சொல்றா.. நல்ல மசூதியா பார்த்து மந்திரிக்கணும் அவள..’’ கவி புலம்ப புலம்ப ரியாஸ் மனதிற்குள் குளிர்ந்து போனான். 
‘ஆஹா..! அந்தப் பக்கமும் பசலை வாட்டுதா. நண்பேன்டா வேலையை செஞ்சிப் பார்த்துருவோமா..? அமுதன் சொல்லி எதை கேட்டோம் இதை கேட்க.’ மனதிற்குள் முடிவெடுத்தவனாக யாழிசை இருக்கையை நோக்கி நடந்தான். 
ஆனால் காலம் அவனுக்கு முன் பல கணக்குகளை போட்டு வைத்து விட்டு காத்திருந்தது. 
சலனமாகும். 
  
 

Advertisement