Advertisement

கடந்த பத்து நாட்களாய் சுற்றி சுற்றி சுழன்றடித்திருந்த மழை சாரல், தூறல் என்று கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. எப்படியும் வெள்ளம் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடும். 
ஆனால் அது ஏற்படுத்தி செல்லும் பொருளாதார பாதிப்புகளை கடக்க, ஓரிரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று மனதிற்குள் அமுதன் நினைத்துக் கொண்டான். 
இவர்கள் பொருளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கவும், காத்திருந்த ஒருங்கிணைப்பாளர் அதனை பெற்றுக் கொண்டார். அங்கிருந்த பெரும்பான்மையான மக்கள், சற்று தொலைவில் இருந்த மேடான நிலப்பரப்பிற்கு புலம் பெயர்ந்திருந்தார்கள். 
“இங்க இருக்குறவங்க எல்லாம் ரொம்ப பாவம் இல்லையா சார். முழு வீடும் மூழ்கிப் போச்சு. மறுபடி எல்லாத்தையும் ஆரம்பத்துல இருந்து தொடங்கணும்.’’ இசை அங்கிருந்த நிலையை கண்டு வருத்தத்தோடு மொழிந்தாள். 
  
“ஆமா இசை. ஆனா எத்தனை பாதிப்பு வந்தாலும் மனுஷன் மனுசத் தன்மையோட இருந்தா நாம மீண்டு வரலாம்னு நமக்கு சொல்லிக் கொடுக்குறதும் இதே வெள்ளம் தான் இசை. சுத்தி எத்தனை மனுசங்க நிக்குறாங்க பாருங்க. சுய நலம் இல்லாம. இங்க இப்ப யாருக்காச்சும் இவன் என்ன ஜாதி.. இவன் எந்த மதம்னு பிரிச்சு பார்க்க தோணுதா..? இதான் வாழ்கையோட நிதர்சனம் இசை. மனுசன் அப்படிங்கிறது மட்டும் தான் ஒரே அடிப்படை அடையாளம். மீதி எல்லாமே சாயப் பூச்சு தான். இன்னும் இப்படி நாளு மழை பெஞ்சா முழுசா வெளுத்துரும்.’’ என்று சொல்ல, அவன் பேச்சின் தாத்பர்யம் உணர்ந்த இசை, அமுதனையே பார்த்துக் கொண்டிருந்தாள், இதற்கு தான் என்ன பதில் சொல்வது என தெரியாமல். 
அவள் முகத்தை கண்டவன், சற்றே புன்னகையோடு, “சாரி.. இசை… உங்களை மொக்கை போட்டுட்டேன் போல. பெரிய அளவுல உயிர் சேதம் இல்லையே. அதை நினச்சே மனசை தேத்திக்க வேண்டியது தான் இசை. பொருள் போனா போகட்டும். மறுபடி தேடிக்கலாம். இந்த சமயத்துல இங்க உயிர் பிழச்சி இருக்குறதே பெரிய வரம் தான்.’’ என்று சொல்ல, இசையும் ஆமோதிப்பாய் மண்டையை உருட்டி வைத்தாள். 
இப்படியே மேலும் இரண்டு நாட்கள் கடக்க, ஏழாம் நாள் வெள்ளம் ஓரளவிற்கு வடிந்திருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயில் சேவைகள் துவக்கப்பட்டிருந்தன. 
  
அன்றைக்கு தன் இருசக்கர வாகனத்தை எடுத்து வரலாம் என்று இசை அமுதனை அழைத்தாள். அமுதனும் அவளை தன் வாகனத்தில் அழைத்துக் கொண்டு இரயில் நிலையம் சென்றான். 
வெள்ளம் ஓரளவு வடிந்து, ஆங்காங்கே குட்டைகளாய் மட்டும் மழை நீர் தேங்கியிருந்தது. இந்த ஆறு நாட்களாய் இசை, அவளின் அறைக்கு செல்லவே இல்லை. 
அமுதன் குடியிருப்பில் இருந்த பெண்மணி ஒருவர், பெண்கள் உடைகளை மாத தவணையில் விற்பனை செய்து வந்தார். அவரிடம் இசையை இரண்டு செட் மாற்றுடைகள் வாங்க வைத்திருந்தான். ஆக உடை தேட கூட இசை அறையை நாடவில்லை. 
மத்திய இரயில் நிலையத்தை அடைந்த போது, ஏழு நாட்களுக்கு முன் இருவரும் சண்டைக் கோழிகளாய் சிலிர்ந்து நின்றது, அமுதனின் நினைவடுக்கில் படமெடுக்க அவன் உள்ளுக்குள் மௌனியாய் நகைத்துக் கொண்டான். 
அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்தவளும் ஏறக் குறைய அதே மன நிலையில் தான் இருந்தாள். இருவரும் வாகனத்தை அந்த இரு சக்கர நிறுத்துமிடம் முன்பு நிறுத்தி, ஏழு நாட்களுக்கு முன் விட்டு சென்ற இசையின் வண்டியை கண்டுபிடிப்பதற்குள் முழுதாய் அரை மணி நேரம் கடந்திருந்தது. 
வண்டியெடுத்து வந்த பின்பு இருவரும் அதிகம் உரையாடிக் கொள்ளவில்லை. இரவு உணவை அவர்கள் பிரகாஷின் அலுவகத்திலேயே முடித்துக் கொள்வதால் வீட்டில் பால் மட்டும் அருந்திய பின் உறங்க செல்வார்கள். 
அது இசை உண்டாக்கிய பழக்கம். அன்றைக்கு அமுதனிடம் பால் கோப்பையை நீட்டிய இசை, “நான் நாளைக்கு என் ரூமுக்கு போலாம்னு இருக்கேன் சார். கவியும் காலைல வந்துடுவா..’’ என்று நிறுத்த, அமுதன் சரி என்பதாய் தலையை மட்டும் உருட்டினான். 
ஆனால் உள்ளுக்குள் அத்தனை வெறுமையாய் உணர்ந்தான். அவளுடனே சேர்ந்து சுற்றும் போது தெரியவில்லை. ஆனால் இதோ அவள் செல்கிறேன் என்று சொன்னதும், சொல்லில் வடிக்க முடியா தனிமை உணர்வு அவனை தாக்கியது. 
அவன் பேசாது மௌனியாய் இருக்கவும், அவளே தொடர்ந்து, “நாளைக்கு மார்னிங் ஆறு மணிக்கு கவி வருவா சார். நான் நேரா ரயில்வே ஸ்டேசன் போய் அவளை பிக் பண்ணிட்டு ரூமுக்கு போயிடுறேன். ரொம்ப தாங்க்ஸ் சார். என் வாழ்கையில இப்படி திருப்தியா சந்தோசமா உணர்ந்ததே இல்ல. இந்த ஆறு நாட்களையும், உங்க மூலமா சந்திச்ச புது மனுசங்களையும் வாழ்கையில எப்பவும் மறக்கவே முடியாது. ஒன்ஸ் அகைன் ரொம்ப தாங்க்ஸ் சார்.’’ என்றவளின் குரல் மிகவுமே நெகிழ்ந்திருந்தது. 
அவள் அமைதியாக எழுந்து சென்றிருந்தாள் அமுதன் வேறு எதுவும் பேசியிருந்திருக்க மாட்டான். ஆனால் இசையின் நெகிழ்ந்த குரல் அவன் கட்டுப்பாடுகளை மொத்தமாய் உடைத்தது. 
மடியில் இருந்த மடிக்கணியை எடுத்து தரையில் வைத்தவன், சற்றே நெருங்கி அமர்ந்து அவள் கைகளைபற்றி, “காலம் முழுக்க இப்படி புது புது உலகத்தையும், மனுசங்களையும் உனக்கு காட்டணும்னு ரொம்பவே ஆசையா இருக்கு இசை. நீ என்னோடவே இருந்துடேன்.’’ என்றான் உருகிய ஆழக் குரலில். 
சற்று நேரம் அவன் என்ன பேசிக் கொண்டிருக்கிறான் என்பதையே இசையின் மூளை உணரவில்லை. ஆனால் அவன் பேசிய வார்த்தைகளை மீண்டும் கோர்த்து அவள் அதை உள்வாங்கிய போது, விருட்டென அவன் வசமிருந்த தன் கைகளை உருவினாள். 
யார் மேல் கோபம் எதற்கு கோபம் என்றே புரியாமல், “சீ… ஒரு பொண்ணு நாலு வார்த்தை நல்லா சிரிச்சி பேசினாலே உங்க ஆம்பளைங்க புத்தி எல்லாம் அங்க தான் வந்து நிக்கும் இல்ல. நான் கூட உங்களை என்னவோன்னு நினச்சேன். நீங்களும் கடைசில ஒரு சராசரி ஆம்பளை தான்னு நிரூபிச்சிட்டீங்க. உங்களை நம்பி இங்க தங்கினேன் பாருங்க. என்னை சொல்லணும்.’’ என்றவள் வேகமாய் எழுந்து தன் வண்டியின் சாவியை தேடி எடுத்தாள். 
தான் பேசிய எதையோ தவறாக அர்த்தம் செய்து கொண்டாளோ, என்று பதை பதைத்து போன அமுதன், “இசை… நான்… என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்க வந்ததை தான் அப்படி கேட்டேன். வேற எதுவும் தப்பு எண்ணம் இல்ல.. சொல்றதை கேளு இசை..’’ என்று அவள் பின்னோடு செல்ல,   
அவனை நின்று நன்றாக முறைத்து பார்த்தவள், “ஓ.. அப்ப தப்பா கேக்குற எண்ணம் வேற இருக்கா. வழியை விடுங்க. நான் போகணும். உங்களை எல்லாம் நம்பினேன் பாருங்க.’’ என்றுவிட்டு அவனை சுற்றிக் கொண்டு செல்ல முயன்றாள் இசை. 
அவள் எதையோ தப்பர்த்தம் செய்து கொண்டாள் என்றே அத்தனை நேரம் மறுகி நின்ற அமுதன் அப்படி இல்லை என்றதை உணர்ந்ததும் சற்றே நிதானம் கொண்டான். 
தன் கைகளை அவள் முன்னே நீட்டி அவளை தடுத்தவன், “நான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு உன்கிட்ட ஒரு ப்ரோபோசலை வச்சேன். உனக்கு பிடிக்கலைனா நீ தாராளமா… எனக்கு இதுல விருப்பம் இல்லை சார்னு சொல்லிட்டு விலகி போலாம். அதை விட்டுட்டு நம்பி வந்தேன்… நம்பிக்கை துரோகம்… ஆம்பளை புத்தி… அது இதுன்னு எதுக்கு இப்படி கண்டபடி பேசுற.’’ அடக்கப்பட்ட ஆத்திரம் அவன் குரலில் அப்பட்டமாய் வெளிப்பட்டது. 
இசையோ தான் பிடித்த முயலுக்கு மூன்றே காலென, “ஒரு பொண்ணு சிரிச்சி பேசினாலே உடனே ரெட் ரோசை தூக்கிட்டு ப்ரோபோசல்னு சுத்துற உங்களை மாதிரி ஆளுங்ககிட்ட அப்படி தான் சார் பேசுவேன். என்னை பார்த்ததுல இருந்தே உங்களுக்கு பிடிக்காது. ஒரு ஆறு நாள் உங்க வீட்ல தங்கி இருப்பேனா. திடீர்னு எங்க இருந்து குதிச்சது இந்த பிரியம். இதெல்லாம் புரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்ல. முதல்ல வழிய விடுங்க. உங்க முன்னாடி நிக்கவே எரிச்சலா இருக்கு.’’ 
அவனை இன்னும் இன்னும் வார்த்தைகளால் சினமூட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது புரியாமல் இசை வார்த்தைகளை தெறிக்க விட்டாள். 
ஆனாலும் அமுதன் சற்று பொறுமையாகவே, “இசை.. மணி இப்ப பத்து. இந்த நேரத்துல நீங்க தனியா போக வேண்டாம். காலைல நீங்க சொன்ன மாதிரியே கிளப்புங்க. இனி நான் உங்ககிட்ட அந்த பேச்சையே எடுக்க மாட்டேன். ஏன் இனி வழக்கம் போல பேசாமையே இருந்துடுறேன். இப்ப உள்ள போய் படுங்க.’’ என்றவன் திரும்ப, 
“உங்க எண்ணம் தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னால ஒரு நிமிசம் கூட இங்க இருக்க முடியாது. நான் போறேன்.’’ என்றாள். 
அடுத்த நொடி, அவள் முகம் அமுதனின் கைகளில் இருந்தது. வலது கன்னத்தை கட்டை விரலாலும், இடது கன்னத்தை மற்ற விரல்களிலும் அழுந்தப்பற்றியவன், அவளை அப்படியே சுவரோடு சாய்த்து, “என்னை பார்த்தா உனக்கு எப்படி தாண்டி இருக்கு. பொறுக்கி மாதிரியா..? சொல்லு… என்ன நினச்சிட்டு இருக்க என்னை பத்தி..? இன்னைக்கு நைட் இங்க தங்கினா உன்னை என்ன பண்ணிடுவேன் நானு. சொல்லு என்ன பண்ணிடுவேன்..’’ உக்கிரமாய் சிவந்து போய் அருகில் தெரிந்த முகத்தை இசை மருண்டு போய் பார்த்தாள். 
அவள் விழிகளின் மருட்சியை சந்திக்க இயலாதவன், தன் விழிகளை அழுந்த மூடி, அவளே எதிர்பாரத போது, அவளை வாயில் நோக்கி தள்ளினான். 
“போயிடு.. திரும்ப எப்பவும் வந்திராத என் வாழ்கையில… உன்னை நான் பார்க்கவே கூடாது. என்னை பத்தி இப்படி கீழ் தரமான எண்ணம் உள்ள ஒருத்தி.. எனக்கு எதிரியா இல்ல துரோகியா இருக்க கூட தகுதியில்லாதவ…தயவு செஞ்சி போயிடு..’’ என்றவன் அப்படியே மடங்கி அமர்ந்தான். 
விழிகளில் தேங்கிய நீரோடு, அவனின் அந்த உடைந்த தோற்றத்தை திரும்பி திரும்பி பார்த்தவள், அங்கிருந்து வெளியேறினாள். 
நான்கு நாட்களாய் மழை விட்டிருந்த வானம் வெண் சாரலாய் அவள் கண்ணீர் துடைக்க விரைந்தது துளி விரல்களால். 
சலனமாகும்.   
 

Advertisement