Advertisement

சலனம் – 8 
“ஏ டயரு இன்னும் கொஞ்சம் வேகமா சுத்துடா எரும. இப்ப தான் ரெண்டு டம்ளர் ஜூஸ் குடிச்ச இல்ல. சுத்து.. சுத்து சுத்து….’’ இசை அந்த குட்டிப் படகில் நடு நாயகமாய் அமர்ந்திருக்க, செல்வம் அந்த படகை சுழற்றி விட்டுக் கொண்டிருந்தான். 
இசை வாயின் மேல் கரம் குவித்து. “ஊ..’’ என்று ஒலி எழுப்பிய படி அந்த படகின் விசையை அனுபவித்துக் கொண்டிருந்தாள். சந்தித்த நிமிடம் முதல், பாலு கரடியும், புல் புலேசும் போல முறைத்துக் கொண்டு இருந்தவர்கள் தற்சமயம், டோராவும் புஜ்ஜியும் போல, ‘வாங்க நண்பர்களே எல்லாரும் ஒன்னா போலம்’ என்று நட்பு வளர்த்துக் கொண்டிருதனர். 
கடந்த நான்கு நாட்களாக இசை அமுதனோடு தான் சுற்றிக் கொண்டிருந்தாள். அவனின் பல்வேறு முகங்களை இந்த இரண்டு நாட்களில் கண்டிருந்தாள். 
வெள்ள நிவாரணத்திற்கு என தன் வங்கிக் கணக்கில் இருந்த சேமிப்பில், அன்றாட செலவிற்கு என்று கொஞ்சம் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மீதி பணத்தை அப்படியே வழித்து பிரகாஷிடம் சேர்ப்பித்து இருந்தான். 
அவர் கூட, “டேய்… எல்லாரும் கொடுக்குற மாதிரி அஞ்சோ பத்தோ கொடு.. உனக்கு அவசர தேவைனா என்னடா பண்ணுவ.’’ என்று கேட்ட போது கூட, “அதான் நீங்க எல்லாம் இருக்கீங்களே…’’ என்றவன் அவர் மறுக்க மறுக்க, அத்தனை பணத்தையும் அவர் வசம் ஒப்புவித்து இருந்தான். 
எப்படியும் அவன் ஐந்து மாத சம்பளம் என்று தோரயாமாய் இசை மனதிற்குள் கணக்கெடுத்து இருந்தாள். அவளும் தன் பங்களிப்பாக ஒரு இரண்டாயிரம் ரூபாயை கொடுத்தாள். 
ஏனெனில் அவள் சம்பளம் வாங்கிய மறு நிமிடம், அவள் தேவை போக மீதி பணம் அவள் பாட்டியின் வங்கிக் கணக்கிற்கு இடம் பெயர்ந்து விடும். தேவையில்லாமல் செலவு செய்து பணத்தை விரயம் செய்வாள் என்று இவளிடம் வம்பிற்கு நிற்பார் அவர். 
ஆக இசையே, இந்த ஏற்பாட்டை செய்திருந்தாள். எனவே அவள் கைவசம் இருந்த சொற்ப தொகையில் இரண்டாயிரத்தை கொடுத்திருந்தாள். ஆனால் அதை பிரகாஷ் மகிழ்வுடனே பெற்றுக் கொண்டார். 
அவள் முகத்தில் இருந்த தயக்கத்தை உணர்ந்தவர், “எவ்ளோ ரூபா கொடுக்குறோம் அப்படிங்கிறது முக்கியம் இல்லை சாமி. எத்தனை மன நிறைவோட குடுக்குறோம் அப்படிங்கிறது தான் முக்கியம். நீ அஞ்சி ரூபா கொடுத்தாலும் அதுல தான் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்குவேன். அது யாரவது பசிச்சவங்க வயித்துக்கு போகும். சரியா சாமி..’’ என்று அன்போடு விளக்கவும் இசையின் முகம் தெளிந்தது. 
ஏனோ அந்த பிரகாஷ் அண்ணாவை அவளுக்கும் அத்தனை பிடித்தது. இவர்களின் உரையாடலை அமுதன் முகத்தில் நிலைத்த புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 
 
அவர்கள் இப்படி தன்னார்வலர்கள் பணி செய்ய துவங்கிய தினத்தில் இருந்து, அவர்களுக்கு உணவுகள் அங்கிருந்த அலுவலகத்தின் மூன்றாம் மாடியில் பரிமாறப்பட்டது. 
முதல் நாள், இவள் சைவம் என்று அறியாது, இவளிடம் அவர்கள் ஒரு பிரியாணி பொட்டலத்தை நீட்டி இருக்க, அதை வாங்கியவள், அருகில் இருந்த செல்வத்திடம் கொடுத்துவிட்டாள். 
“ஐ.. எனக்கு இன்னைக்கு ரெண்டு பிரியாணி..’’ என்று அக மகிழ்ந்து போன செல்வம், அதன் பின், “யக்கா… யக்கா…’’ என்று அவள் பின்னோடு சுற்றி பாசப் பயிர் வளர்க்க துவங்கினான். 
முதல் நாள், அமுதன் அங்கிருந்த பிரட், ஜாமை இவளுக்கு எடுத்து வழங்குவதை கண்ட பிரகாஷ், அடுத்த நாள், சாம்பார் மற்றும் தயிர் சாத உணவு பொட்டலங்களையும் தருவித்தார்.
ஆனாலும் இசை ஏதாவது தகிடு தத்தம் செய்து, ஒரு பிரியாணி பொட்டலத்தை லவட்டி வந்து செல்வத்திற்கு கொடுத்துவிடுவாள். அவனும், “நீ சூப்பர் அக்கா… ஒரு வருசமா இவர் பின்னாடி தான் சுத்தின்னு இருந்தேன். எதுக்கும் பிரயோஜனம் இல்ல..’’ என்று அமுதனை பார்த்து கலாய்த்து விட்டு, சாப்பிட சென்றுவிடுவான். 
“ஆனாலும் உனக்கு கொழுப்பு கூடிப் போச்சு டயரு..’’ என்று அமுதன் பதில் கொடுத்தாலும், இருவரின் ரகளைகளையும் அமைதியாக மனதிற்குள் ரசித்துக் கொள்வான். 
இந்த நான்கு நாட்களில் அமுதனின் வீட்டிற்கு உறங்க மட்டுமே சென்றார்கள். மாலை கவிழ்ந்தால், உதவ முன் வந்தவர்கள், உதவி தொகை வரவுகள், தேவைப்படும் பொருட்கள், உதவி தேவைப்படுவோர் பட்டியல் என கணக்குகளை எடுத்து அடுத்த நாள் ஆயத்த பணிகளுக்கு தேவையான திட்டமிடுதலை முடித்த பிறகே வீட்டிற்கு கிளம்பினார்கள். 
இசை அங்கிருந்தவர்களோடு நன்றாக ஒன்றிப் போனாள். ஓரிருவரை பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு வந்திருந்தாள். வாழ்வில் இதெல்லாம் அவளுக்கு ஒரு புதிய அனுபவம். 
இந்த மூன்று நாட்களில், வீட்டிற்கு இருமுறை அலைபேசி இருந்தாள். தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், தொலைக்காட்சி செய்திகள் பார்த்து பீதி கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தாள். 
அமுதன் தினமும் இரவு நேரங்களில் தாயுடன் உரையாடும் வழமையை கொண்டிருந்தான். அவன் தன் தாயிடம், இசையின் வரவை பற்றி அறிவித்திருந்தான். 
உடனே இவளிடம் உரையாடி அவர், ‘யாதொரு சஞ்சலமுமின்றி சொந்த வீட்டில் இருப்பதை போல் இருக்க வேண்டும்.’ என்று வலியுறுத்தி சொன்ன போது இசைக்கே ஆச்சர்யம் தான். 
யாருமற்ற வீட்டில் தன் மகன் வயதுப் பெண்ணை கொண்டு வந்து தங்க வைத்து இருக்கிறான். ஆனால் இவரோ அதை பற்றிய சஞ்சலங்கள் சிறிதுமின்றி தன்னை இயல்பாக நடந்து கொள்ள அறிவுறுத்துகிறாரே என்று வியந்து போனாள். 
அமுதன் தன் தாயிடம் உரையாடும் போது, மனதிற்கு நெருக்கமான தோழனுடன் உரையாடும் தோரணை தான் அவன் முகத்தில் இருக்கும். சில நேரங்களில் தாயை பெயர் சொல்லி அழைத்து, ஏதேனும் செல்ல சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பான். 
இசை அம்மாதிரி நேரங்களில் அவன் முக பாவனைகளை பார்த்தபடி அமர்ந்திருப்பாள். இவளை அமுதன் கவனித்து ‘என்ன..?’ எனும் படி புருவம் உயர்த்தி வினவினாள், ஒன்றுமில்லை என்று தலையை உருட்டிவிட்டு, பார்வையை திருப்பிக் கொள்வாள். 
இப்படி தான் மூன்று நாட்கள் விண்கல வேகத்தில் பறந்திருந்தது. “போதும் உங்க விளையாட்டு… டேய் டயரு.. திங்க்ஸ் வந்து எடுக்க ஹெல்ப் பண்ணுடா.. எப்ப பாரு விளையாட்டு..’’ அவன் கடிய, படகை சுழற்றிக் கொண்டிருந்த செல்வம், “தோ… வன்ட்டாருப்பா ஹிட்லரு.’’ என்று முனகியவன், வெளியே, ‘தோ… வந்துட்டேன்ணா…’’ என்றபடி அமுதனை நோக்கி நடந்தான். 
கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் அனைவருக்கும் பழச்சாறு வழங்கப்பட்டிருந்தது. வழமை போல இசை தன்னுடைய பங்கை, செல்வத்திற்கு தானம் செய்திருந்தாள். 
அதனால் அவளுக்கு பிடித்தமான விளையாட்டை துவங்கி இருந்தாள் இசை. ஆம் அவளுக்கு படகில் ஏறிக் கொண்டு இப்படி சுழல்வது பிடித்திருந்தது. இதை பழக்கி விட்டது செல்வம் தான். 
முதல் நாள் மட்டுமே செல்வத்தை அமர வைத்து அமுதனும், இசையும் படகை தள்ளினார்கள். மற்ற இரண்டு நாட்களும், செல்வம் இசையை நீருக்குள் இறங்க அனுமதிக்கவே இல்லை. 
“நாம தான் தடி தடியா இருக்கோமே. அக்காவை என்னாத்துக்குணா தண்ணியிலலாம் இறக்கிகின்னு. அது குந்தின்னு வரட்டும். நாம தள்ளினு போலாம்.’’ என்று அமுதனை ஆண் என்று தன்னோடு இணைத்து நீருக்குள் நிறுத்திக் கொண்டான். 
பொருட்களை விநியோகித்து முடித்த பின் அங்கிருந்து கிளம்ப தாமதம் ஆனாலோ, அன்றி பொருட்களை அலுவலகத்தில் இருந்து ஏற்ற தாமதம் ஆனாலோ, செல்வமும், இசையும் தங்கள் சுழல் விளையாட்டை துவங்கி அமுதனின் இரத்த அழுத்தத்தை எகிற வைப்பார்கள். 
ஆம் இவர்கள் விளையாடும் போதெல்லாம், எந்த அளவிற்கு அவர்களை ரசிக்கிறானோ அதே அளவு அவனுக்கு அளப்பரிய எரிச்சலும் உண்டாகும். அதன் முக்கிய காரணம், இசை செல்வத்தோடு நன்றாக நெருங்கி இருந்தாள். 
எப்படி என்றால், ‘போடா பேமானி.. சோமாறி…’ என்று சென்னை வழக்கில் அவனை வையும் அளவிற்கு நெருங்கி இருந்தாள். செல்வமும் அவள் எப்படி திட்டினாலும், பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல், “சொல்லுக்கா..’’ என்று அவள் பின்னே தான் சுற்றுவான். 
ஆனால் அமுதனை மரியாதை நிமித்தம் தள்ளியே வைத்தாள். அன்றைக்கு அந்த மழையில் அவனை நெருங்கி அடித்து, திட்டியதோடு சரி. அதன் பிறகு வந்த நாட்களில், ‘சார்..’’ என்ற மரியாதை அடைமொழியை அவனோடான சம்பாசனைகளில் அவள் தவறவிட்டதே இல்லை. 
‘அவள் என்னை எப்படி அழைத்தால் எனக்கென்ன..?’ என்று பெருமூச்சொன்றை வெளியிட்டவன், செல்வம் பொருட்களை கொண்டு வந்து படகில் வைக்கவும், படகை தள்ள துவங்கினர். 
வெள்ளம், மூன்றாம் நாளான இன்று பெருமளவு வடிந்திருந்தது. படகுகள் வெகு மோசமாய் பாதிக்கப்பட்டிருந்த, ஜாபர்கான் பேட்டை, மேற்கு சைதாப்பேட்டை, கோட்டூர்புறம் போன்ற பகுதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.          
அவர்களும் அந்தப் பகுதிக்கு தான் விரைந்து கொண்டிருந்தார்கள். மற்ற யாரும் எண்ணிப் பார்க்காத அளவில் தன்னார்வலர்கள் வீதிகளில் இறங்கி பணி செய்து கொண்டிருந்தார்கள். 
மாநில அரசோடு, தற்சமயம் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மையும் கை கோர்த்திருந்தது. ஆக ஆங்காங்கே சீருடை அணிந்த முகங்களையும் காண முடிந்தது. 

Advertisement