Advertisement

சலனம் – 7 
நாளின் எப்பொழுது அது என கணிக்க முடியாததொரு வர்ணத்தில் வானம் இருந்தது.  யாரோ தன்னை அழைக்கும் ஓசை செவியெட்ட யாழிசை மெதுவாய் தன் விழிகளைப் பிரித்தாள். புதிய இடம். நள்ளிரவிற்கு மேலே தான் உருண்டு, புரண்டு ஒரு வழியாய் உறங்கி இருந்தாள். 
அவள் எழுந்து அமர, அவளுக்கு எதிரே அமுதன் கையில் காபி கோப்பையுடன் நின்றுக் கொண்டிருந்தான். 
“குட் மார்னிங் இசை. இன்னும் கொஞ்ச நேரம் உங்களை தூங்க விடலாம்னு தான் நினச்சேன். ஆனா பிரகாஷ் அண்ணா போன் பண்ணிட்டார். நான் வெளியே கிளம்பனும்.’’ என்று நிறுத்தினான். 
“ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா. நான் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு  வந்துடுறேன். என்னை மெயின் ரோட்ல ட்ராப் பண்ணிட்டு நீங்க போயிடுங்க. நான் ஆட்டோ பிடிச்சி ரூம் போயிக்கிறேன்.’’ பேசியபடியே இசை பரபரப்பாக எழ, அமுதம் அவளை கேள்விக் குறியாய் பார்த்தான். 
அவன் பார்வையில் கொஞ்சம் நிதானம் கொண்டவள், “என்னாச்சு அமுதன்..? ஏன் அப்படி பாக்குறீங்க.’’ என்றாள். 
“நேத்து நைட் முழுக்க மழை இசை. இப்ப வெளிய போனா எந்த மெயின் ரோட்டுக்கும் போக முடியாது. நம்ம அப்பார்ட்மென்ட் கீழேயே  மூணடிக்கு தண்ணி ஓடுது இசை. நல்ல வேளை பவர் பாய்ன்ட் புல்லா சார்ஜ் பண்ணி வச்சிருந்தேன். காலைல தான் நியூஸ் பார்த்தேன். இப்ப நீங்க எங்கயும் போக முடியாது. நிலைமை கொஞ்சம் நார்மலுக்கு வர வரை இங்க தான் இருக்கனும்.’’ என்றான். 
“ஓ..’’ என்று பதில் கொடுத்தவளின் குரல் அவளையும் மீறி உள் சென்றிருந்தது. 
“சாரி.. இசை.. இப்படி ஆகும்னு  நானும் நினைக்கல. நீங்க ரெப்ரெஷ் பண்ணிட்டு காபியை குடிங்க. ரொம்ப சூடாதான் இருக்கு. இன்னும் கொஞ்சம் சூடு வேணும்னா கிட்சன்ல போயி சூடு பண்ணிக்கோங்க. இன்ஸ்டன்ட் வெரைட்டி கிட்சன்ல நிறைய இருக்கும். என்ன வேணுமோ செஞ்சி சாப்பிடுங்க. நான்  போயிட்டு ஒரு த்ரீ அவர்ஸ்ல வந்துடுறேன்.’’ என்றான். 
“இந்த நிலமையில நீங்க எங்க போறீங்க சார்..?’’ என்று தன் கேள்வியால் அவனை நிறுத்தினாள் இசை. 
அவளை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன், “வாலன்ட்ரி சர்வீசுக்கு இசை. ஏற்கனவே கொஞ்சம் பசங்க கிளம்பியாச்சு. நிறைய மக்கள் பள்ளமான பகுதியில மாட்டிட்டு இருக்காங்க. இப்போ வரை பெருசா உயிர் சேதம் இல்ல. ஆனா, சாப்பாடு, தண்ணி, பால் இதுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்களாம். பிரகாஷ் அண்ணா காலையிலேயே கால் பண்ணிட்டாங்க. சீக்கிரம் கிளம்பனும்.’’ என்றவன் மீண்டும் கிளம்ப யத்தனித்தான். 
“வெளிய தான் அவளோ தண்ணி ஓடுதே. நீங்க மட்டும் எப்படி போவீங்க.’’ என்று மீண்டும் தன் சந்தேகத்தை கேட்டாள் இசை. 
“என்னை இங்க இருந்து பிக் அப் பண்ண இப்ப போட் வரும் இசை. மினி போட். நான் அதுல போயிடுவேன். நிறைய இடங்கள்ள மோட்டார் போட் போற அளவுக்கே தண்ணி ஓடுதாம். நீங்க பத்திரமா இருங்க. நான் போயிட்டு சீக்கிரம் திரும்பி வந்துடுறேன். சரியா..?’’ அவன் வினவ, 
‘என்னது சென்னை சாலையில் படகு செல்லுமா..?’ என்ற ஆச்சர்யபாவத்தை முகத்தில் தேக்கியவள், “நானும் வரவா..?’’ என்றாள் அவனிடம் வேண்டுகோளாய். 
அவன் என்ன சொல்வது என தெரியாமல் விழிக்க, “வரேனே ப்ளீஸ்.. இங்க தனியா போர் அடிக்கும்.’’ என முகத்தை சுருகி வினவ, அந்த முகத்தின் முன் மறுப்பை காட்ட திராணி அற்றவனாய் ‘சரி’ என்று தலையசைத்து இருந்தான்.
கொடியில் இருந்த தன் துணிகளை உருவியவள், “டூ மினிட்ஸ் ப்ளீஸ்..’’ என்றுவிட்டு நேற்று அமுதன் காட்டியிருந்த குளியலறைக்குள் புகுந்து     கொண்டாள். 
பத்து நிமிடங்களில் குளித்து வெளியேறியவள், தனக்குள் ஏதோ முணு முணுத்தபடி வாசலில் கிழக்கு முகமாக நின்று மூன்று முறை சுற்றினாள். அமுதன் அவளின் காபி கோப்பையை அருகில் இருந்த மேஜையில் வைத்திருக்க, அது வெதுவெதுப்பான பானமாக உருமாறியிருந்தது. 
அதை ஒரே மடக்கில் வாயில் ஊற்றிக் கொண்டவள், “போலாமா சார்..!’’ என்று அவன் முன் வந்து நின்றாள். அலங்காரமே அற்ற நிர்மலமான முகம், அத்தனை அழகாய் இருந்தது. 
ஆனாலும் அந்த முகத்தில் ஏதோ ஒன்று குறைவதாய் தோன்ற, அமுதன்  “இசை.. உங்க பொட்டு..’’ என நிறுத்த, தன்னிச்சையாய் தன் நெற்றியில் கை வைத்தவள், “போச்சுடா… கீழ விழுந்திருக்கும் போல..’’ என்றவள், “சார் உங்க வீட்ல குங்குமம் இருக்குமா..?’’ எனக் கேட்டாள். 
அவன் இல்லை என மறுப்பாய் தலை அசைக்க, கொஞ்சம் எட்டி அவன் சட்டையில் தலை காட்டிக் கொண்டிருந்த பேனாவை கையில் எடுத்தாள். அந்த செய்கையில் அவன் விரல் நுனி கூட அவன் மீது உராயவில்லை. 
ஆனாலும் உரிமையான அந்த செய்கையில் அமுதன் சற்றே நிலை குலைந்து போனான். அவன் பேனாவை எடுத்தவள், அங்கிருந்த பெரிய நிலைக் கண்ணாடியின் முன் நின்று, வட்டமாய் நெற்றியில் பொட்டு வரைந்தாள். 
“தாங்க்ஸ் சார்..! வெறும் நெத்தியோட இருந்தா எதுவும் விளங்காதுன்னு எங்க பாட்டி சொல்லிட்டே இருப்பாங்க. நீங்க வேற நல்ல காரியத்துக்கு போறீங்க. இப்படியே உங்க கூட வத்திருந்தா என்ன ஆகுறது.’’ என்று தானே கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லி இருந்தாள். 
அத்தனை நேரம் ஏதேதோ உணர்வுகளின் பிடியில் இருந்தவன், இவளின் பிற்போக்கு தனமான பதிலில் அப்படியே மீண்டான். பிற்போக்கு சாங்கியத்தின் ஒரு அடையாளமாய் அவள் நெற்றியில் வீற்றிருந்த பொட்டை தன் கைகள் கொண்டு சர சரவென்று அழித்துவிட்டால் என்ன என்று அவனுக்கு அக்ககணம் தோன்றியது. 
அவன் தான் இசை முகத்தில் பொட்டு இல்லை என்பதை குறிப்பிட்டதே. அவன் பார்வையில் அவள் முகத்திற்கு பொலிவூட்டும் ஒரு அலங்காரப் பொருள். 
ஆனால் அதை அவள் இப்படி சாஸ்திரங்களோடு தொடர்புபடுத்தி பேச, அவளின் பொட்டு வைத்த முகத்தை கூட அவனால் ரசிக்க முடியாது போயிற்று. 
‘அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நீ சரியா இருந்தா எதுவும் எப்பவும் விளங்காம போகாது. எப்பவும் நேர்மறை சிந்தையும், சக மனுஷன் மேல அன்பும் இருந்தா போதும்.’ என்று அவளுக்கு பாடம் எடுக்க முடிவெடுத்தவன் உடனடியாய் அம்முடிவை கைவிட்டான். 
ஏனெனில் இசை ஏதோ இப்பொழுது தான் அவனிடம் முகம் கொடுத்து பேசவே துவங்கி இருக்கிறாள். இந்த நேரத்தில் எதையாவது பேசப் போய் அது ஏதேனும் வாக்கு வாதத்தில் முடிந்து மீண்டும் இவள் மலையேறிவிட்டாள். 
அந்த எண்ணமே அவனுக்கு அப்படி ஒரு சோர்வைக் கொடுத்தது. அமைதியாய் நின்றவன், அவள் நீட்டிய பேனாவை மீண்டும் சட்டை பையில் சொருகிக் கொண்டான். 
ஆனால் நேற்று இரவில் இருந்து இதயத்தை மென்மையாய் ஆக்கிரமித்திருந்த உணர்வுகள் சற்றே வடிய துவங்கி இருந்தது. முப்பது வருடங்களுக்கு முன்பே சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தாய் நினைவிற்கு வந்தார். 
‘இதெல்லாம் உனக்கு செட் ஆகாது அமுதா..’ என்று அவன் மனசாட்சி சொல்ல, அதே நேரம் அவன் அலைபேசி அழைத்தது. 
கையில் பேசியை எடுத்துப் பார்த்தவன், “அவங்க வந்தாச்சு. போகலாம்.’’ என்றவன் முன்னே நடக்க, இசை அவனை பின் தொடர்ந்தாள். 
அமுதன் வீட்டை பூட்ட, இருவரும் படியிறங்க துவங்கினர். இரண்டாம் தளம் இயல்பாயிருக்க முதல் தளத்தில் ஆறு படிகள் நீருக்குள் மூழ்கி இருந்தது. 
படிகள் கண்ணனுக்கு தெரியாததால் இசை, அமுதனின் கரங்களை பிடிப்பிற்காய் பற்றிக் கொண்டாள். இருவரும் இடுப்பளவு நீரில் நடந்து செல்ல, இவர்களில் வீட்டு வாயில் அருகே ஒரு குட்டி படகு நின்றிருந்தது. 
துடுப்பை கையில் வைத்தபடி, விடலை ஒருவன் அமர்ந்திருந்தான். முடியை ஏதேதோ கோணத்தில் வெட்டி, கண்டபடி சாயமேற்றி வைத்திருந்தான். முதலில் தான் படகில் ஏறிய அமுதன், இசையும் ஏற உதவினான். 
இசை அந்த வாலிபனின் தலையிலேயே பார்வையை பதித்திருக்க, அவளை பார்த்து லேசாக விசில் அடித்தவன், “அக்கா யாருன்னா..? ஆளா..?’’ என்று கேட்டு கண் அடிக்க, அன்றைக்கு அமுதனை பளு தூக்கியில் கண்ட போது எத்தகைய முக பாவனையை வெளிப்படுத்தி இருந்தாளோ, அதே பாவனையை வெளிப்படுத்தி அமர்ந்திருந்தாள் இசை. 
வாய் எதையோ மெதுவாக முணு முணுத்துக் கொண்டிருக்க, அவளின் கரத்தை பற்றிய அமுதன், “இசை ரிலாக்ஸ்…இவன் இப்படித்தான் கலாட்டாவா பேசுவான். டேய் டயரு வாயை மூடிட்டு ஒழுங்கா படகு விடு. இல்ல எனக்கு தெரிஞ்ச பொண்ணை நக்கல் அடிச்சன்னு பிரகாஷ் அண்ணாகிட்ட போட்டு கொடுத்துடுவேன்.’’ என்று மிரட்டினான். 
“என் மேல என்னாத்துக்கு உனக்கு இம்மா காண்டு. சரிப்பா அந்த அக்கா உனக்கு தோஸ்து. சரியா.. அண்ணாகிட்ட எதையாச்சும் போட்டு விட்றாத சாமி. ரெண்டு நாள்ல காலேஜ் பீஸ் கொடுக்குறேன்னு சொன்னாரு.’’ அந்தப் பையன் சற்றே மிரண்டு போய் மன்னிப்பு வேண்டவும், அமுதன் இலகுவாய் புன்னகைத்தான். 
அதே புன்னகையோடு அவன் திரும்பி இசையை பார்க்க, அவள் முடிந்த அளவு ஓரமாய் ஒடுங்கி அமர்ந்து, வாயிற்குள் எதையோ முணு முணுத்துக் கொண்டிருந்தாள். 
ஏனென்றே புரியாமல், அமுதனுக்கு முதல் நாள் இசையை கண்ட போது, பளு தூக்கியில் நின்ற போது அவள் ஓரமாய் ஒடுங்கி நின்றது அவனுக்கு நினைவிற்கு வந்தது. 
‘இன்றைக்கும் ஏன் இப்படி ஒடுங்கிப் போகிறாள்.’ என்று எண்ணியவன் முகத்தில் குழப்ப முடிச்சுடன் இசையையே கவனிக்க துவங்கினான். இசை, ஒருவன் தன்னை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதையே உணராது தன் போக்கில் லலிதா சஹஸ்ரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாள். 
கொஞ்சம் தூரம் கடந்ததும் நீரின் ஆழம் மட்டுப்பட ஆண்கள் இருவரும் படகில் இருந்து கீழே குதித்தனர். யாழ் தானும் இறங்க முயல, “நீங்க அப்படியே இருங்க இசை..’’ என்ற அமுதன் படகை தள்ளினான். 
இருவரும் சற்றே நெரிசலான குடியிருப்பு பகுதிக்கு வந்திருந்த போது, சென்னையின் அது எப்பகுதி என்பதை கூட, இசையால் ஊகிக்க முடியவில்லை. 
அவர்களின் படகு நின்ற இடம் ஒரு மூன்று மாடிக் கட்டிடமாய் இருந்தது. ஆங்காங்கே வேறு சில படகுகள் நிறுத்தப்பட்டிருக்க, உள்ளே விரையும் யுவன்களும், யுவதிகளும், கையில் பெரிய பெரிய பொதிகளோடு வெளியேறிக் கொண்டிருந்தனர். 
“இசை இறங்கி வாங்க உள்ள போகலாம்.’’ என்று இசையை அழைத்தவன், “டயரு நீ இங்கேயே இருடா…. நாங்க வந்துடுறோம்.’’ என்றான். டயர் என அழைக்கப்பெற்ற செல்வம் மண்டையை உருட்ட, இசை நீரின் ஆழம் குறைவாக இருந்ததால் தானே கீழே இறங்கினாள். 
சற்றே நீரில் மூழ்கி இருந்த முதல் மாடியை கடந்து இரண்டாம் மாடியின் துவக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்த போது, அங்கே சுமார் இருபது இளைஞர்கள், ஆளுக்கு ஒரு மடிக்கணினியின் முன் அமர்ந்து எதையோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். 
அவர்களுக்கு நடுவில், ஓங்கு தாங்காய் ஒருவர்,, லுங்கியை கையில் பிடித்தபடி, திரும்பி நின்று அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். 
அவர் திரும்பும் வரை அமுதன் மௌனமாய் நின்றுக் கொண்டிருந்தான். அங்கிருந்த அனைவருமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, யாரும் அமுதனை கண்டு கொள்வதாய் இல்லை. 
அவர் திரும்பியதும், “வணக்கம் தல..’’ அமுதன் இடை வரை குனிந்து, வணக்கம் சொல்ல, “அட அமுதன்.. வாடா வாடா.. இவங்க யாரு…’’ என்ற இசையை கேள்வியாய் ஏறிட்டார் பிரகாஷ்.  
“ஆபிஸ்ல கூட வேலை செய்றவங்க அண்ணா. நான் இந்த மாதிரி கிளம்புறேன்னு கேள்விபட்டு அவங்களும் கூட வரதா சொல்லி ஜாயின் பண்ணிட்டாங்க.’’ என்றான். 
“வாம்மா..’’ என்று அவளை வரவேற்றவர், “அமுதா.. பிரபு லிஸ்ட் போட்டு வச்சி இருக்கான். நீ அந்த ஏரியா எல்லாம் போகணும். மைக்கேல் பால் எடுத்துட்டு வர போயிருக்கான். வந்ததும் நீ கிளம்பு. நிறைய பேர் பால் வேணும்னு தான் கேட்டுட்டு இருக்காங்க.’’ என்றவர் மீண்டும் அவர் அலைபேசி சிணுங்க, அதற்கு பதில் கொடுக்க நகர்ந்தார். 
மெதுவாய் அமுதனை நெருங்கி நின்ற இசை, “இவங்க இங்க என்ன பண்றாங்க சார்..?’’ என அறைக்குள் நுழைந்ததிலிருந்தே தன் மூளையை குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டு வைத்தாள். 
“அது இசை… யாருக்கு எல்லாம் ஹெல்ப் வேணுமோ அவங்களை தேடி ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க. எப்படினா.. நேத்து நைட் மழை அதிகமாகி பல வீடுகள்ல வெள்ளம் புகுந்தப்பவே அண்ணா ‘வெள்ளத்தை வெல்வோம்’ அப்படின்னு ஒரு முகநூல் குழு பக்கத்தை ஆரம்பிச்சி அதுல தனக்கு தெரிஞ்சவங்களை எல்லாம் ஆட் பண்ணிட்டார். அவங்க அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு பகிர … இப்படி ஒரே நாள் நைட்குள்ள மூணு லட்சம் பேர்கிட்ட குழு தவகல் போயாச்சு. இப்ப யாருக்கு என்ன ஹெல்ப் தேவையோ அதை குழுவுல கேப்பாங்க. அதுல யாருக்கு உடனடியா உதவி தேவையோ அவங்களுக்கு அண்ணா நேரடியா உதவி செஞ்சிட்டு இருக்கார். அண்ணா ஒரு சோசியல் ஆக்டிவிஸ்ட். நாங்க எல்லாம் அவரோட அடி பொடிகள். எனக்கு தெரிஞ்சி அண்ணாவுக்கு கிட்ட தட்ட ரெண்டு லட்சம் அடி பொடிகள் சென்னை முழுக்க.’’ என்றான் முழு புன்னகையுடன். 
அதற்குள் அந்த மைகேல் வந்துவிட, மற்ற தன்னார்வலர்கள் கொடுத்த முகவரிகளையும், மூட்டை கட்டிக் கொடுத்த நிவாரணப் பொருட்களையும் பெற்றுக் கொண்டு மூவரும் கிளம்பினர். 
இம்முறை ஆழமற்ற பகுதியில் இசையும், பொருட்களை மட்டும் படகில் வைத்துவிட்டு, அவர்களோடு படகை தள்ளிக் கொண்டு நடந்தாள். 
மழை என்ற இயற்கையின் ஒற்றை சக்தி மக்களின் வாழ்வாதரங்களை புரட்டிப் போட்டிருந்த விதத்தை கண் முன் கண்டாள். இவர்கள் சென்றது ஹவுசிங் போர்ட் என்று மக்களால் அழைக்கப்பெறும் நலிந்த மக்கள் வாழும் பகுதிக்கு. 
அங்கே பெரும்பாலும் முதல் தளங்கள் மூழ்கி இருக்க, சிறுவர்கள் டயர்களில் படகோட்டிக் கொண்டிருந்தனர். இவர்கள் கொண்டு சென்ற பொருட்களில் முக்கியமாய் பால் அங்கே பல குழந்தைகளுக்கு தேவைப்பட, பிரட், பிஸ்கட் என்று இவர்கள் கொண்டு வந்த பொருட்களை அங்கிருந்த, இவர்களின் இணைப்பாளர் ஒருவர் சரியாய் மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தார். 
அதே நேரம் யாரோ ஒரு பெண்மணி சுட, சுட பாலில்லா தேநீர் தயாரித்து கொண்டு வந்து மூவருக்கும் விநியோகித்தார். சில பல மைல்கள் நீருக்குள் நடந்து வந்தது, மூவருக்கும்  குளிரை கிளப்பி இருந்தது. 
ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், மூவரும் ஆவி பறந்த அந்த டம்ளர்களை எடுத்துக் கொண்டனர். மெதுவாய் தடுமாறியபடி நீருக்குள் நடந்து வந்த மூதாட்டி ஒருவர், 
“நல்லாயிரு ராசப்பா.. நல்லாயிரு ராசாத்தி..’’ என்று இருவர் கன்னம் வழித்து திருஷ்டி கழித்துவிட்டு, “காத்தாலேந்து எம் பேத்தி பாலுக்கு அழுதுகின்னு இருந்துச்சி. அந்த மகமாயி கணக்கா வந்து உதவி செஞ்சீகின்னு இக்குறீங்க ரொம்ப நன்றி நைனா..” அந்த பாட்டி மனதார ஆசிர்வதிக்க, 
“ஏய் கிழவி..! நானும் தான் படகை வளிச்சின்னு வந்தேன். என்னை எல்லாம் கண்ணு தெரியாதே உனக்கு.’’ என்று குறைபட்டுக் கொண்டான் செல்வம். 
“வாய மூட்றா டயரு. நீ இன்னாத்துக்கு இதுல குந்தின்னு வந்திருப்பன்னு எனக்கு தெரியாது. படகை தள்றேன்னு பொட்டலத்துல கீற பிஸ்கோத்தை எல்லாம் உன் வாயில உட்ருப்ப…வந்துட்டான் பேமானி..’’ என்று அந்தப் பாட்டி அவனை நன்றாக வாரி விட்டு செல்ல, இசை வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள். 
ஆம் அந்தப் பாட்டி சொன்னது தான் உண்மை. படகை தள்ள தெம்பு தேவை என்று, வரும் வழியெல்லாம், பிஸ்கட். பிரட் என்று அமுக்கிக் கொண்டே தான் வந்திருந்தான் செல்வம். 
“அண்ணா… உங்க தோஸ்து வாய மூட சொல்லுங்கோ… இந்த செல்வம் கண்டி கேரானான் வேற ஆளு சொல்லிட்டேன்..’’ என்று உதார் விட, சிரிப்பை சற்றே நிறுத்திய இசை, “கேரான இன்னும் ரெண்டு குட்டே பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவியா டயர்..’’ என்று கேட்டு அவனை மரண பங்கத்திற்கு உள்ளாக்கினாள். 
“எங்கூட்டுக்கு போன பங்குல நான் எத்தையாச்சும் போய் துன்னுட்டு வரேன். ரெண்டு பேரும் எப்படியோ போங்க.’’ என்று விட்டு செல்வம் நகர, இசை கேள்வியாய் அமுதனை பார்த்தாள். 
தானும் சிரித்துக் கொண்டிருந்தவன், “இப்ப பேசிட்டு போனது அவன் பாட்டி தான்.’’ என்றான்.
“அதான் அப்படி உரிமையா திட்டிட்டு போனாங்களா..?’’ என்றவள், தான் தேநீரை குடித்து முடித்ததும், அமுதன் கையில் இருந்த காலி டம்ளரையும் வாங்கினாள். 
முதல் வீட்டின் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணிடம், ஒரு வெள்ளை சிரிப்போடு, ‘தாங்க்ஸ் அக்கா..” என்றபடி நீட்டினாள். அப்பெண்ணும் ஒரு குறுஞ் சிரிப்போடு அவள் நீட்டிய டம்ளர்களை பெற்றுக் கொண்டார். 
கிளம்பிய வேகத்தில் செல்வம் திரும்பியிருக்க, “வாங்க.. வாங்க.. அடுத்த ரைடுக்கு போனுமில்ல..’’ என்றபடி குதித்து படகில் ஏறினான். “என்னால இதுக்கு மேல தள்ள முடியாது. கிழவிகிட்ட வாங்கின வாழ்த்துக்கு வட்டியா ரெண்டு பேரும் வளிச்சின்னு வாங்கோ..’’ என்றான். 
இசையும், அமுதனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு படகை தள்ள ஆரம்பித்தனர். நிலைத்து தேங்கியிருந்த நீரில் புன்னகையில் விரிந்திருந்த இருவரின் பிம்பங்களும் எதிரொலித்து கலைவதை வானம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. கரு மேகமாய்.   
சலனமாகும். 
   

Advertisement