Advertisement

சலனம் – 6 
அந்த மழை இரவு, அத்தோடு முடியப் போவதில்லை என்பதை பாவம் யாழிசை அறியவில்லை. பதிலுக்கு பதில் அவனுக்கு கொடுத்துவிட்ட திருப்தியில், அவள் வெளியே வர, அங்கே அவள் கண்ட காட்சியில் உள்ளுக்குள் குளிர் பிறந்தது. 
ஆகாய கங்கையை மடை மாற்றி விட்டதை போல அங்கே நீர் சுழித்தோடிக் கொண்டிருந்தது. வரும் போது முழங்கால்களுக்கு சற்று கீழிருந்த நீரின் அளவு தற்சமயம், முழங்கால்களை தாண்டி தொடுமட்டும் வளர்ந்திருந்தது. 
இந்த நீரில் தன்னுடைய ஸ்கூட்டியே மூழ்கும் அபயாம் இருப்பதை உணர்ந்தவள், ‘பேசாம.. கவி சொன்ன மாதிரி கேப் புக் பண்ணி போயிடலாம்.’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். 
வாங்கிய புத்தகத்தை பத்திரமாய் தன் வண்டியின் டிக்கியில் சேர்ப்பித்து விட்டு, வாகன நிறுத்துமிடத்தில், வண்டியை இரு நாட்கள் கழித்து வந்து எடுத்துக் கொள்வதாய் சொல்லி திரும்பி வந்தாள். 
அவள் வரிசையாய் வாகன முன் பதிவிற்கு அழைக்க, அனைத்தும் சொல்லி வைத்தார் போல பிசி என்று வந்து கொண்டிருந்தது. அப்போது தான் சுற்றி, முற்றி இசை தன் பார்வையை படரவிட்டாள். 
நிறைய பயணிகள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல், அங்கே தவித்தபடி நின்றுக் கொண்டிருந்தார்கள் . மகிழுந்து ஓட்டுனர்கள் கூட, “ரோட்லாம் தண்ணில முங்கி பிளாக் ஆகிப் போச்சு அண்ணாத்தை..’’ என்று சவாரி விசாரிக்க வந்தவர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 
அறிவிப்பு ஒலிப்பெருக்கியில், ‘இரயில்கள் இரத்தானது’ என்ற வாக்கியம்  விடாது ஒலித்துக் கொண்டிருந்தது. ஆக திட்டமிட்டு இரயில் பயணத்திற்கு வந்தவர்களும் திரும்ப வேண்டிய சூழலில் அங்கே ஒரு குழப்பமான நிலை உருவாகி இருந்தது. 
அந்த குழப்பத்தை எல்லாம் கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல், மழை மீண்டும் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. இங்கிருந்து எப்படி அறைக்கு செல்வது என்று நினைத்த மாத்திரத்தில் அங்கிருந்த சீதோசன நிலையையும் மீறி, இசைக்கு பதட்டத்தில் வேர்க்க துவங்கி இருந்தது.
மீண்டும் இவள் தன் வழமை போல சுற்றுப் புறத்தை ஆராய, சற்றே தொலைவில் அமுதன் வண்டிமீதிருந்த தன் மழை கவச உடையை அணிந்து கொண்டு, வண்டியை கிளப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். 
முயற்சித்துக் கொண்டிருந்தான் அவ்வளவே. வண்டியின் சைலன்சர் வரை நீரில் மூழ்கி இருக்க, வண்டி, ‘என்னால் இங்கிருந்து உடனே கிளம்ப முடியாது’ என்று அவனிடம் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. 
அவனை கண்ட மாத்திரத்தில் உள்ளுக்குள் ஒரு ஆறுதல் பெருக, ‘இவன் இம்சை தான். ஆனாலும் இந்த நேரத்துல இவனை விட்டா வேற ஆள் இல்ல.’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், வேகமாய் அவனுக்கு பின் சென்று நின்று கணைத்தாள். 
‘என்ன எழிலன் லேடி வாய்ஸ்ல எல்லாம் உருமுறான்’ என்று மனதிற்குள் நினைத்த அமுதன் திரும்பிப் பார்க்க, அங்கே இசை நின்றுக் கொண்டிருந்தாள். 
‘இவ இப்ப எதுக்கு வந்தாளாம்… ரெயின் கோட் மேல என் தொடை தெரியுதான்னு செக் பண்ண வந்தாளா..?’ என்று மனதிற்குள் அவளுக்கு கவுண்ட்டர் கொடுத்தவன், அவளை கண்டு கொள்ளாமல், வண்டியை கிளப்பும் தன் பணியை தொடர்ந்தான். 
கணைப்புகளுக்கு இவன் பதில் கொடுக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த இசை, “எனக்கு என் காசு வேணும்.’’ என்றாள். வண்டியை உதைப்பதை நிறுத்திவிட்டு அமுதன் இம்முறை கவியை திரும்பி பார்த்து முறைதான். 
“நீங்க அதை ஏற்கனவே நேசக்கரங்களுக்கு தானம் கொடுத்ததா நியபாகம். உங்களுக்கு ரொம்ப தேவைனா இப்படி இப்படின்னு அங்க போய் விளக்கி வாங்கிக்கோங்க. முதல்ல இங்க இருந்து நகந்து போங்க. இல்லைனா அரைகுறை ட்ரெஸ்ல இருக்க என்னை பார்க்கும் போது உங்க கண்ணு அவிஞ்சி போயிரும்.’’ என்று விட்டு மீண்டும் வண்டியை உதைக்க துவங்கினான். 
‘இப்படி எடுத்து எறிந்து பேசுபவனிடம் எப்படி தொடர்ந்து நின்று கெஞ்சுவது.’ உள்ளுக்குள் சோர்வாக உணர, இசை மெதுவாய் அங்கிருந்து நகர துவங்கினாள். சற்று நேரத்திற்கு முன்பு நாமும் அவனை அப்படித் தான் எடுத்து எறிந்து பேசினோம் என்பதை வசதியாய் மறந்து விட்டிருந்தாள். 
அமுதனின் விடா முயற்சிகள் பலன் அளிக்க எழிலன் நீருக்குள் புகை விட்டபடி உயிர் கொண்டான். வண்டியை, இசையை தாண்டி சற்று தூரம் செலுத்தியவன், சரியாய் நூறு மீட்டர் தள்ளி நின்று, ஆக்ஸிலேட்டரை முறுக்கினான். 
இசை அவ்வளவு தான் அவன் சென்று விட்டான் என்று சோர்ந்து நின்றவள், அவளுக்காய் வண்டியை நிறுத்தி இருக்கிறான் என்று உணர்ந்து, நீருக்குள் ஓட முடியாமல், சற்று வேகமாய் எட்டுகளை எடுத்து வைத்து நடந்தாள். 
ஆனால் சரியாய் அவள் அவன் வண்டியை அடையும் நொடி, மீண்டும் வண்டியை முறுக்கி, சற்று தூரம் தள்ளி நிறுத்தினான். 
‘போடா நீயும் உன் வண்டியும்’ என்று இசை திரும்பி விட தான் முனைந்தாள். ஆனால் சூழல் அதற்கு இடம் கொடாததால், கோபத்தில் சிவந்த முகத்துடன், அவனை மனதிற்குள் அர்சித்தபடியே கொஞ்சம் பொறுமையாகவே நீரில் நடந்தாள். 
இம்முறையும் அவள் அருகில் வர, அவன் வண்டியை முறுக்கி இருந்தான். கண்ணில் இரு நீர் துளிகள் உற்பத்தியாகி இருக்க, உதட்டை கடித்து, அழுகையை மென்றவள் அப்படியே திரும்பி நடந்தாள். 
பெய்து கொண்டிருந்த மழையிலும், அவளின் முக பாவம், அவள் அழுகையை உணர்ந்த, நீருக்குள் வட்டமடித்து, நகர்ந்து கொண்டிருந்தவளின் முன் சென்று தன் வாகனத்தை நிறுத்தினான். 
‘ஒன்றும் வேண்டாம் போ’ என்று அடம்பிடிக்கும் சிறுமியை போல, அவள் வண்டியை சுற்றிக் கொண்டு நடக்க, யத்தனிக்க, “இசை..’’ என்று ராகமிட்டு அழைத்தபடி அவள் மருதாணி விரல் ஒன்றை பற்றினான். 
அவ்வளவு தான் அவன் அறிந்தது. “எதுக்குடா இப்படி பண்ற.. எருமை.. பிசாசு.. பரதேசி…’’ அவனை திட்டிக் கொண்டே சாரமாரியாயாய் அவன் முதுகில் குத்திக் கொண்டிருந்தாள். 
சற்று நேரம் அவளை போலியாய் தடுத்தபடி நகைத்துக் கொண்டிருந்தவன், “ஹே.. போதும் விடு இசை.. நிஜமா வலிக்குது. மழை அதிகாமகுற மாதிரி இருக்கு ஏறு இசை.’’ என்று நடப்பை நினைவூட்ட, தான் அதிகப்படியாய் பொங்கியதை உணர்ந்த இசை வேறு எதுவும் பேசாமல் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 
‘இசை தண்ணியில பேலன்ஸ் பண்றது கஷ்டம். டபுள் சைட் கால் போட்டு உட்காரு.’ என்று ஆணையிட, ஓட்டுனராய் அவன் சிரமம் உணர்ந்தவள், அவன் சொன்னது போல அமர்ந்தாள். 
சற்று நேரம் பயணம் மௌனத்திலேயே கழிந்தது. ஒரு இரண்டு கிலோ மீட்டர்கள் தாண்டி இருப்பார்கள், இவர்களுக்கு எதிரே வந்த ஒரு மகிழுந்து ஓட்டுனர், இவர்களை கண்டதும், “எப்பால போறீங்க..?’’ என விசாரித்தார். 
“வளசரவாக்கம். என்னாச்சுண்ணே’’ என்று அமுதன் வினவ, “அந்தண்டை பாலம் உடஞ்சி போச்சு தம்பி. தண்ணி வேற ஒரு ஆள் தண்டி ஓடுது. சுத்து போட்டு போனாலும் போறது சுலுவில்ல. முடிஞ்சா வேற எங்கன்னா தங்கிட்டு தண்ணி வடிஞ்ச பிற்பாடு போங்க.’’ என்று விட்டு அவர் கிளம்பினார். 
இப்போது இசையின் முகம் பேய் அறைந்ததை போல் ஆக, “ஏய் இசை.. ஈஸி எதுக்கு இப்ப டென்சன். இங்க இருந்து என் அப்பார்ட்மென்ட் ஜஸ்ட் டூ கிலோ மீட்டர் தான். பேசாம என் வீட்டுக்கு போயிடலாம். உனக்கு என் வீட்ல தங்க தயக்கமா இருந்தா எதிர் வீட்ல ஒரு வயசான அம்மா மட்டும் தான் இருக்காங்க. நீ அங்க தங்கிக்கலாம். சரியா..?’’ என்று விட்டு அவளின் பதிலுக்கு காத்திராமல் வண்டியை திருப்பினான். 
அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, கீழ் தளத்தில் இருந்த வீடுகளில் எல்லாம், வெள்ளம் புகுந்திருக்க, போதா குறைக்கு மின்சாரமும், துண்டிக்கப்பட்டிருந்தது. அவர்கள் கையில் டார்ச்சுடன் தேவையான மூட்டை முடிச்சுகளோடு, சற்றே பழக்கமான முதல் மாடி வீட்டினரை தேடி நடந்து கொண்டிருந்தார்கள். 
கீழ் வீட்டுப் பெண்மணி ஒருவர், “அமுதா… என்னப்பா இந்த நேரத்துல வெளிய போயிட்டு வர. மழையில வண்டி ஓட்ட முடிஞ்சதா..?’’ என்று கேட்டுக் கொண்டே படியேறிக் கொண்டிருந்தார். 
“கஷ்டம் தான் ஆன்ட்டி. எங்க ஆபிஸ்ல வொர்க் பண்றவங்க ரயில்வே ஸ்டேசன்ல மாட்டிகிட்டாங்க அதான் கூட்டிட்டு வர போனேன்.’’ என்றுவிட்டு தன் போக்கில் அமுதன் படியேற, அவனை தொடர்ந்து இசையும் படியேறினாள். 
அதற்கு மேல் அப்பெண்மணி எதையும் விசாரிக்கவில்லை. இரண்டாம் தளத்தில் இருந்த அமுதனின் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, அங்கே சற்று சந்தடிகள் ஓய்ந்திருந்தது. 
என்னதான் உள்ளுக்குள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒரு ஆணுடன் மழை இரவில் ஒரே வீட்டில் இருக்க வேண்டிய நிலை எண்ணி இசையின் மனது முணு முணுத்துக் கொண்டே தான் இருந்தது. 
ஆனால் அந்த சங்கடங்கள் எல்லாம் அமுதனுக்கு இருப்பது போல் இல்லை. அவள் எப்போது கை நீட்டி, சாரமாரியாய் தன்னை தாக்கி இருந்தாலோ அப்போதே அமுதனின் மனம் சமன்பட்டிருந்தது. 

Advertisement