Advertisement

என்னதான் இருவரும் மழைக் கவச உடைகள் அணிந்து இருந்தாலும், பயணத்தில் இருவரும் முழுதாய் நனைந்து இருந்தார்கள். வீட்டிற்குள் நுழைந்ததும், தன்னுடைய அறைக்குள் சென்று உலர்ந்த உடையுடன் வெளியேறியவன், 
“இசை.. இது என்னோட புது நைட் ட்ரஸ். டீசன்ட்டா தான் இருக்கும். ஹாலை ஓட்டி இருக்க பாத்ரூம் நான் யூஸ் பண்றதே இல்ல. உள்ள ஒரு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சி இருக்கேன். நீங்க போய் ரெப்ரஷ் பண்ணிக்கோங்க.’’ என்று சொல்லவும், கொஞ்சம் ஆசுவாசமாய் உணர்ந்தவள், அவன் கை காட்டிய குளியலறை நோக்கி நடந்தாள். 
பத்து நிமிடங்களில் தன்னுடைய உடைகளை பிழிந்து கையில் வைத்தபடி, நீண்ட கூந்தலை விரித்து விட்டபடி, அவளுக்கு சற்றே பெரிதாய் இருந்த உடையை, சுடிதார் துப்பட்டாவை பின் செய்திருந்த ஊக்குகள் மூலம் உடலில் எப்படியோ பொருத்தி இருந்தாள். 
“சார்…’’ என்ற இசையின் குரலுக்கு இருவரின் மழை கவச உடைகளை பிளாஸ்டிக் நாற்காலியில் உலர்த்திக் கொண்டிருந்த, அமுதன் கையில் மெழுகுவர்த்தியோடு அவளை நோக்கி திரும்பினான். 
திரும்பியது மட்டுமே அவன் அறிந்தது. சர்க்கரை பாகின் பொன்னிற மேனி மழையில் நெடு நேரம் ஊறியதால் மேலும் வெளுத்திருக்க, எந்தவித ஒப்பனைகளும் அற்ற முகத்தில், நீண்டர்ந்த புருவங்களும், கன்னம் உரசும் இமை பீலிகளும், சற்றே நிறம் கூடியிருந்த ரோஜா இதழ்களும், நேர் கொண்ட நாசியும் அவன் அனிச்சை செயலான மூச்சுவிடுதலை அப்படியே முடக்கியிருந்தது. 
“சார்…’’ இம்முறை இசை சற்றே குரலுயர்த்தி அழைக்க, “சொல்லுங்க இசை..’’ என்றவனின் மறுமொழி அவனே எதிர்பார்க்காத விதத்தில் குழைந்திருந்தது.
“இந்த துணியை பால்கனியை ஒட்டி இருக்க கொடியில காய வைக்கலாமா..?’’ என்று வினவ, “வேண்டாம் இசை.. சாரல் தெளிக்கும். இங்க வெளி சுவத்துல ஒரு கொடி இருக்கும் பாருங்க. அதுல காய வையுங்க.’’ என்றான். 
‘சரி’ என்று தலை அசைத்த இசை, வெளியே நடக்க, தன் உடையில் அவளை கண்டவனின் உடலில் ஏதேதோ உணர்வுகள் உற்பத்தியாகி உடல் முழுக்க வியாபிக்க துவங்கியது.
அவள் துணிகளை உலர்த்தி வரவும், “ஏதாச்சும் சாப்பிடுறீங்களா இசை.’’ என்றவன், சமையலறைக்குள் புக, “வேண்டாம் சார்… நான் வரும் போது தான் சப்பாத்தி சாப்பிட்டு வந்தேன்’’ என்றாள். 
ஆனால் உண்மையில் இசை அவனிடம் பொய் கூறினாள். கவியை விட்டு வந்து ஆற அமர சுவைத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் இசை உண்ணாமல் தான் கிளம்பி வந்திருந்தாள். 
அவள் கண்களில் பசியின் சாயலை கண்ட அமுதன், “சரி… தண்ணியில வண்டி ஒட்டிட்டு வந்தது… எனக்கும் ரொம்ப பசிக்குது இசை. சோ.. நான் நூடுல்ஸ் செய்றேன். நீங்க எனக்கு கம்பெனி கொடுங்க.’’ என்றுவிட்டு, சமையலறை அலமாரியை கிளற துவங்கினான். 
“அப்படினா நான் செய்றேன் சார். நீங்க திங்க்ஸ் மட்டும் எடுத்து கொடுங்க.’’ என்றுவிட்டு இசையும் இயல்பாய் அவனோடு சமையலறைக்குள் நுழைந்தாள். 
காற்றின் ஈரப்பதத்தை மீறி அந்த குட்டி சமையலறை சற்று கதகதப்பாகவே இருந்தது. அமுதன் சிரித்தபடி நூடுல்ஸ் பாக்கெட்களையும், மற்ற பொருட்களையும் கடை பரப்ப, இசை தேவையானவற்றை கழுவி நறுக்க துவங்கினாள். 
அவளுக்கு எதிரே இருந்த மேடையில் கையில் ஒரு கேரட்டை எடுத்து கடித்தபடி, சுவாதீனமாய் அமுதன் அமர்ந்து கொண்டான். 
சற்று நேரம் அங்கே மௌனம் வியாபிக்க, அந்த மௌனத்தை உடைக்கும் விதமாய் அமுதன், “அன்னைக்கு ஏன் லிப்ட்ல அப்படி ஒரு எக்ஸ்ப்ரசன் கொடுத்த இசை..?’’ என்றான். 
நறுக்கிக் கொண்டிருந்த பீன்சில் கை அப்படியே நிற்க, அவனை நிமிர்ந்து பார்த்ததில், ‘இப்ப இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமா..?’ என்ற கேள்வி இருந்தது. 
அவள் மீண்டும் தன் செயலை துவக்க, “ஆனாலும் உனக்கு கோவம் ரொம்ப அதிகமா தான் வருது. ரொம்ப வருசத்துக்கு அப்புறம் செமையா ஒரு பொண்ணு கையால மொத்து வாங்கி இருக்கேன். அதுவும் நீ திட்டின பாரு… எருமை, பிசாசு.. அப்புறம் இன்னும் கூட ஏதோ சொல்லி திட்டின இல்ல… மறந்துட்டேன். ஹா..! ஹா..! நீ கோவப்படுவேன்னு தெரியும். ஆனா இந்த அளவுக்கு வயலன்ஸ் ஆவன்னு எதிர்பார்க்கலை. எனிவே தாங்க்ஸ் இசை.’’ என்றவன் மீண்டும் வாயிற்குள் கேரட்டை அதக்கி மெல்ல துவங்கினான். 
“யாராச்சும் அடிக்கிறதுக்கு.. திட்டறதுக்கு எல்லாம் தாங்க்ஸ் சொல்லுவாங்களா சார்..’’ என்றவள், தன் காரியத்தில் கண்ணாய் இருக்க, சற்று நேரம் மீண்டும் மௌனம் அவ்விடத்தை வியாபித்தது. 
“என்ன சொல்றது. எங்க அப்பா, அம்மா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்க இசை. நான் பிறந்து கொஞ்ச நாள்ல அப்பா ஒரு ஆக்ஸிடன்ட்ல தவறிட்டார். ரெண்டு பக்க சொந்தமும், எப்பவும் எங்களை விலக்கி தான் நிறுத்தி வைப்பாங்க. 
சின்ன வயசுல இருந்தே அக்கா, தங்கைன்னு யார் கூடவும் விளையாடினது கிடையாது. ஸ்கூல் போற வரைக்கும், எங்க அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்த சின்ன லாரி, ரிமோட் கார் அதுக்கு எல்லாம் பேர் வச்சி அது கூட தான் விளையாடுவேனாம். 
ஸ்கூல் சேர்த்து விட்டதுக்கு அப்புறம் கூட, வீட்டுக்கு வந்தா அதே வேலை தான். கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் பொம்மைக்கு அப்புறம் என்னோட சைக்கிள், கிரிகெட் பேட் இதுக்கு எல்லாம் பேர் வச்சி, ஏதாச்சும் ஷேர் பண்ணனும்னா அதுங்க கூட பேசிட்டு இருப்பேன். 
உனக்கு தெரியுமா..? நான் டுவல்த் படிக்கும் போது, நடந்த டிஸ்ட்ரிக் லெவல் கிரிக்கெட் மேட்ச்ல லாஸ்ட் பால்ல நான் சிக்ஸ் அடிச்சி எங்க டீமை வின் பண்ண வச்சேன். அப்போ என் பிரண்ட்ஸ் என்னை தூக்கி சுத்த வந்தாங்க. 
ஆனா நான் என்னோட கிரிக்கெட் பேட்டை கட்டி பிடிச்சி முத்தம் கொடுத்து, ‘நாம ஜெயிச்சிட்டோம் சச்சின்னு’ கத்திட்டு இருந்தேன். ஹா..! ஹா..! நான் ஸ்கூல் முடிஞ்சி வர வரை பசங்க என்னை அந்த மேட்டர் சொல்லி தான் ஓட்டி தள்ளுவாங்க. 
சின்ன வயசுல ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாம், பாட்டி ஊருக்கு போனோம். தாத்தா ஊருக்கு போனோம். இது எங்க மாமா வாங்கி கொடுத்தது. இது எங்க சித்தி கொடுத்தது… அப்படியெல்லாம் பேசும் போது ரொம்ப ஏக்கமா இருக்கும். 
ஆனா நான் வளர வளர எதார்த்தத்தை ஏத்துகிட்டு, நான் உபயோகிக்கிற பொருளை எல்லாம் பேர் வச்சி உறவா மாத்திட்டேன். ஒரு வகையில அதுவும் நல்லதா தான் போச்சு. ஏன்னா மனுசங்க மாதிரி வஞ்சம் வைக்க தெரியாதது இல்லையா அதெல்லாம்..? அதனால தான் நீங்க உரிமையா அடிச்சி சண்டை போட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இசை’’ என்றான்.  
அவன் பேச்சை நிறுத்த, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அமுதனின் உருவில் சிறு குழந்தை ஒன்று, உறவுகளின் அன்பிற்காய் ஏங்குவது போன்ற தோற்றம் தன் கண் முன் விரிய யாழிசை அப்படியே உருகிவிட்டாள். 
கை தன் பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருக்க, மெழுவர்த்தியின் பொன் மஞ்சள் ஒளியில், நிராதரவான தோற்றம் தரும் அம்முகத்தை, ‘அப்படியே தன் மார்போடு இழுத்து அணைத்துக் கொண்டாள் என்ன..?’ என்ற உணர்வு அவளுள் பிரவாகமாய் எழ, கீழே இறங்கிய அமுதன் குளிர்பதன பெட்டியை திறந்து, மூன்று முட்டைகளை வெளியே எடுத்தான். 
“நூடுல்ஸ் ரெடி ஆயிடுச்சு போல இசை.. அப்படியே இந்த முட்டையையும் கொஞ்சம் உடச்சி ஊத்தி கிளறினா மழைக்கு செமையா இருக்கும்.’’ என்று அமுதன் ரசித்து சொல்ல, சுடு நீரை உடலில் கொட்டிக் கொண்டவள் போல இசை, இதுவரை தான் கழித்த மோன உலகிலிருந்து வெளியே வந்தாள். 
சற்றே தயங்கிய குரலில், “இல்ல.. நான்…நான்வெஜ் சாப்பிட மாட்டேன். எனக்கு வேணும்கிறதை எடுத்துடுறேன். நீங்க வேணா எக் போட்டுக்கோங்க.’’ அவள் குரலில் இருந்த பேதத்தை நொடியில் உணர்ந்தவன், 
“இல்ல.. இல்ல சாரி இசை.. நீங்க சாப்பிட மாடீங்கன்னு தெரியாது. நானும் இன்னைக்கு வெஜ் நூடுல்ஸ் மட்டும் சாப்பிடுறேன்.’’ என்றவன், அவளை சமாதானப்படுத்தும் விதமாய் புன்னகைதான். 
இதுவரை அவன் பயன்படுத்தாதிருந்த தட்டு ஒன்றை மேல் அலமாரியில் இருந்து தேடி எடுத்தவள் , அதை மேலும் நீர் விட்டு அலம்பிவிட்டு, தனக்கான உணவினை எடுத்துக் கொண்டாள். 
அமுதன் அவளை வினோதமாய் பார்த்தாலும், மேலும் அவளிடம் வார்த்தை வளர்க்காது, தன்னுடைய பங்கினை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அவளுக்கு எதிரே அமர்ந்தான். 
“குழம்பு பாத்திரம் தொட்ட கையில தயிர் பாத்திரம் தொடுவியா… நோக்கு எத்தனை முறைடி பத்து பத்துன்னு படிச்சி சொல்றது…’’ கோபமாய் காதுகளில் இரையும் பாட்டி அந்த நேரத்தில் ஏனோ நினைவிற்கு வந்தாள். 
இசை யோசனையாய் உணவை அளப்பதை கண்ட அமுதன், “சாப்பிடுங்க இசை..’’ என்று அவளை ஊக்கினான். 
“இது எப்படி ஒத்து வரும்.’ தனக்குள் சிந்தித்தவள், இந்த மழை மட்டும் இல்லையென்றால் இவன் பார்வை வட்டம் விழாத தொலைவு தன் அறைக்குள் ஓடிப் போய் ஒளிந்திருப்பாள். 
விடிந்ததும் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்பதே அவளின் தற்போதைய தலையாய சிந்தையாய் இருந்தது. வழமையாய் மனதிற்குள் சொல்லிக் கொள்வதைப் போல, ‘கிருஷ்ணா…’ என்றவள் அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து விட்டு உணவில் கவனமானாள். 
இன்று மட்டுமல்ல மகளே இன்னும் நான்கு நாட்கள் இந்த அமுதனின் இல்லமே நீ வசிக்கப் போகும் பிருந்தாவனம் என அவள் அறையில் இருந்த மாயக் கண்ணன் புன்னகைத்ததை பாவம் அறிவாளோ பேதைப் பெண். 
சலனமாகும். 
  
  

Advertisement