Advertisement

 சலனம் – 5 
“வண்டி இங்கயே போட்டுட்டு கேப் புக் பண்ணி ரூமுக்கு போ இசை. நாம வரும் போதே ரோட்ல நிறைய தண்ணி. மழை வேற நிக்காம பெஞ்சிட்டே இருக்கு.’’ முன் பதிவு செய்யப் பெற்றிருந்த தன் பெட்டியின் ஜன்னலோரம் அமர்ந்தபடி, கவி இசைக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தாள். 
தோழிகள் இருவரும் இரயில் நிலையத்தை வந்தடைந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்திருந்தது. ‘சென்னையிலிருந்து திருச்சி செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்ப்ரெஸ் அரைமணி நேரம் தாமதமாக புறப்படும்.’ என்று அறிவிப்பு செய்யும் பெண்ணின் குரல் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை ஒலித்துக் கொண்டிருந்தது. 
இசை கவியின் கட்டளை குரலை அலட்சியம் செய்துவிட்டு, தன்னை சுற்றிலும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 
சென்னை வந்து ஆறு மாதங்கள் கடந்தும், ஜன சந்தடி மிகுந்த இடங்களில் இப்படி விழி விரித்து அந்த பரபரப்பை உள்வாங்குவதில் இருக்கும் ஆச்சர்யம் கொஞ்சமும் மாறவில்லை இசைக்கு. 
கவியின் எதிர் இருக்கையில் இருந்து வந்த, “ஹாய் கவி..! நீங்களும் இன்னைக்கு ஊருக்கு போறீங்களா..?’’ என்ற ரியாசின் குரலில் சட்டென தன் பார்வையை மீண்டும் இரயில் பெட்டிக்குள் திருப்பினாள் இசை.
கவி புன்னகைத்து, “எஸ் சார்..!’’ என சொல்லும் போது தான், ஜன்னலுக்கு அப்பால் நின்றுக் கொண்டிருந்த யாழிசையை அவன் கவனித்தான்.   
“ஹாய்..யாழ்..! என்ன உங்க பிரண்டை சென்ட் ஆப் பண்ண வந்தீங்களா..? அப்படியே நீங்களும் கூட வந்தா எங்க திருச்சியும் கொஞ்சம் கூலா இருக்கும் இல்ல.’’ என்று அவளிடம் பேச்சு வார்த்தையை வளர்க்க துவங்கினான். 
“அதான் நீங்க போறீங்க இல்ல சார். உங்களை பலோ பண்ணி நம்ம சென்னை மழை வரும் பாருங்க.’’ என்று இசை அவனுக்கு இயல்பாய் பதில் கொடுத்தாள். 
“புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைச்சிடுத்து டா அம்பி.. கொடுக்கு முளைச்சிடுத்து..’’ என ரியாஸ் தனக்கு பின்புறம் அபிநயம் பிடித்துக் காட்டவும் யாழ், யாரிடம் ரியாஸ் பேசுகிறான் என திரும்பிப் பார்த்தாள். 
அங்கே முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாது, அமுதன் நின்றிருந்தான். ‘ஓ.. இவனா..’ என்பதை போன்ற ஒரு பார்வையை செலுத்திவிட்டு, இசை திரும்பிக் கொள்ள, கவி மரியாதைக்கு, “ஹாய்..சார்..!’’ என்றாள். 
இசையோ, நீ அலுவலத்தில் தான் எனக்கு உயர் அதிகாரி என்று மனதில் எண்ணிக் கொண்டு தன் போக்கில் ரியாசுடன் அரட்டையில் இறங்கினாள். 
“கொடுக்கு எல்லாம் உங்க ஆபிஸ் வந்து முளைக்கலை மிஸ்டர் ஆபிசர். எங்க கூடவே பிறந்தது. கொஞ்ச நாள் நீங்க எல்லாம் பயந்துடக் கூடாதுன்னு உள்ள இழுத்து வச்சிருந்தோம்.’’ என நாக்கை நீட்டி ஒரு பாவனை காட்ட, கவிதாவும், ரியாசும் சேர்த்து நகைத்தனர். 
நின்றுக் கொண்டிருந்த அமுதனுக்கு உள்ளுக்குள் அழுத்தம் தாறு மாறாய் எகிற துவங்கியது. ‘சை இவ பக்கத்துல வந்தாலே இரிடேட் ஆகுது’ என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டவன், ‘நான் கிளம்புகிறேன்’ என்று நண்பனிடம் சைகை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்ப முனைந்தான். 
நண்பன் கிளம்புகிறான் என்றதும், ரியாஸ் வெளிக் கதவின் அருகில் சென்று, “டேய்..! மழை விட்ட மாதிரி தெரியல. கொஞ்சம் விட்டதும் போடா. இல்லைனா கேப் புக் பண்ணி போ. வீட்டுக்கு போனதும் எனக்கு கால் பண்ணு.’’ என அறிவுரைகளை அள்ளி வீச துவங்கினான். 
இசையின் மீது இருந்த எரிச்சல் அப்படியே இடம் மாற, “ஆமா… நான் பிகரு. வீட்டுக்கு போனதும் உனக்கு கால் பண்ண. ஓவரா சீன் போடாம மூட்டு கிளம்பு. எங்களை பார்த்துக்க எங்களுக்கு தெரியும்.’’ என்று காய்ந்து விட்டு முன்னே நடந்தான்.
அவன் என்ன தான் கோபத்தில் பற்களை அழுந்த கடித்து, சத்தத்தை குறைந்து வார்த்தைகளை கடித்து துப்பினாலும் அவனுக்கு மூன்றடி இடைவெளியில் நின்றுக் கொண்டிருந்தவளுக்கு அவன் பேசிய வார்த்தைகள் ஸ்பஷ்டமாய் காதில் விழுந்தது. 
‘இப்ப எதுக்கு என்கிட்டே காஞ்சிட்டு போறான்.’ என்று ரியாஸ் உள்ளுக்குள் எண்ணினாலும் அதை வெளியே காட்டாது, வாயை இளித்து வைத்தபடியே மீண்டும் தன் இடத்தில் வந்து அமர்ந்தான் . 
இசையோ தன் போக்கில், ‘பிரண்ட் கிட்ட கூட ரூடா தான் போல பேசுவான் போல. இரிடேடிங் இடியட். இவன் கூட எல்லாம் இந்த ரியாஸ் எப்படி தான் குப்பை கொட்றாரோ. பாவம்.’ என்று மனதிற்குள் அவனை வசை பாடிக் கொண்டிருந்தாள். 
அமுதன் சென்றும் ஒரு பத்து நிமிடம் இசை இருவரிடமும் நின்று பேசிக் கொண்டிருந்தாள். மழை நின்றாலும் லேசான தூறல் விழுந்த படியே தானிருந்தது.      
‘இன்னும் இரண்டு நிமிடங்களில்..’ என்ற அறவிப்பு ஒளிர, புகை வண்டி தான் கிளம்ப போவதின் அடையாளமாய் பெரிதான விசில் ஒலியை வெளியிட்டது. 
தான் நெருங்கி நின்றிருந்த நடைபாதையிலிருந்து, இசை விலகி நிற்க, அந்த பெரிய புகை வண்டி, புகையை கக்கியபடியே மெல்ல மெல்ல இசையின் விழிகளில் இருந்து மறைய துவங்கியது. 
கவிதா ஆன மட்டும் ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து, “இசை.. பாத்துப் போ..’’ என சொல்ல, இசையும், “ஹாப்பி ஜர்னி..’’ என்றுவிட்டு, தோழிக்கு உற்சாகமாய் கை அசைத்து விடை கொடுத்தாள். 
இருவரையும் ஒரு புன்னகையோடு, ரியாஸ் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று முன் தன்னை வழி அனுப்பி வைக்க வந்த நண்பனை எண்ணிக் கொண்டான். 
ஆண்களின் அன்பு வெளிப்படையானது. எவ்வித பூச்சுளும் அற்ற புதிய கட்டுமான சுவர் போல. ஆனால் பெண்களின் நட்பு உணர்வுப்பூர்வமானது. பல இழைகள் கொண்ட பட்டை போல. 
தன் எண்ணம் செல்லும் திக்கை உணர்ந்தவன், ‘சரக்கடிச்சா போதுமே.. கண்ணதாசன் மாதிரி தத்துவமா வந்து கொட்டுமே.’ என்று தன்னை தானே வாரிக் கொண்டவன், லேசாய் தன் தலையில் தானே தட்டிக் கொண்டான். எதிரில் இருந்த கவிதாவிற்கு, இரவு வணக்கத்தை சொல்லிவிட்டு, மேலிருந்த தன்னுடைய பெர்த்தில் ஏறி படுத்துக் கொண்டான். 
தோழி கிளம்பியும் கூட, இசை சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தாள். அதன் பின் அருகிலிருந்த ஹக்கீம் பாதாம்சிற்குள் நுழைந்து இரு புத்தகங்களை வாங்கினாள். 
ஆயிரம் தான் மின்னூல், இணைய வாசிப்பு என்று வந்தாலும், கையில் புத்தகத்தை விரித்து பிடித்து, ஒவ்வொரு பக்கமாய் புரட்டி படிப்பதில் அலாதி சுகம் இசைக்கு. 
கையிலிருந்த ஜெயகாந்தனும், ஷெல்லியும் இன்னும் ஒரு வாரத்திற்கு நாங்கள் தான் உன் துணை பெண்ணே என்று சொல்வதை போலிருக்க, புத்தகங்களை மார்போடு அணைந்து பிடித்தபடி மெதுவாய் இரயில் நிலையத்தை விட்டு நடக்க துவங்கினாள். 
சரியாய் முதன்மை நுழை வாயில் அருகே வந்துவிட்ட போது, யாரோ தன்னை உரக்க அழைப்பது போலிருக்க, ‘இங்க யாருக்குடா.. நம்ம பேர் தெரியும்.’ என்ற குழப்பத்தை முகத்தில் தேக்கி இசை திரும்பிப் பார்த்தாள். 
அங்கே அமுதன் முகம் கசங்க நின்றுக் கொண்டிருந்தான். இவன் தானா தன்னை அழைத்தது என்று இசை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் அருகிலிருந்த பயண சீட்டு பரிசோதகர், “மேம்.. இவரை உங்களுக்கு தெரியுமா..?’’ என்று உடைந்த தமிழில் இவளிடம் விசாரிக்க துவங்கினார். 
‘தெரியும்’ என்ற நேரடி பதிலை விடுத்து, “வாட் ஹாப்பன் சார்..?’’ என்று அவரிடம் தன் விசாரணையை ஆங்கிலத்தில் துவக்கினாள் இசை.
“மேம்… பிளாட் பார்ம் டிக்கெட் எடுக்காம சார் சென்ட் ஆப் பண்ண போயிருக்குது. பைன் கட்ட சொன்னா பர்ஸ் கொண்டு வரலை சொல்லுது. ஐடி ப்ரூப் கூட எதுவும் இல்லே.’’ என்று அவர் புகார் வாசிக்க, அவனுக்காய் தன் அடையாள அட்டையை காண்பித்தவள், அவர் கட்ட சொல்லிய தொகையையும் அவன் சார்பாய் செலுத்தினாள். 
பரிசோதகர் விலகி நடந்த அடுத்த நொடி, அமுதன் உள்ளே போய்விட்ட குரலில், “தாங்க்ஸ்’’ என்றான். 
அவனை மேலும் கீழும் பார்த்தவள், “பிகருங்க தான் வெளிய வந்தா கேர்புல்லா இருக்கணும்னு இல்ல சார். பசங்களும் போன் பர்ஸ்… முக்கியமா ஐ.டி இப்படி எல்லாத்தையும் எடுத்துட்டு பாதுகாப்பா தான் வரணும். அதோட இன்னரை விட கொஞ்சமே கொஞ்சம் லாங்கா இருக்க இந்த அரை குறை ட்ரெஸ்க்கு பதிலா கொஞ்சம் லாங் பர்முடாஸ் கூட போட்டுட்டு வரலாம். இது சத்தியமா உங்க நல்லதுக்கு இல்ல. பாக்குறவங்க கண்ணு நல்லா இருக்க.’’ என்றுவிட்டு அவன் பதிலையும் எதிர்பாராது முன்னோக்கி நடந்தாள். 
அவள் சொன்ன பின்பு தான் அமுதன் தன் உடையையே குனிந்து பார்த்தான், ‘யுவர் ஷார்ட் ஈஸ் டூ ஷார்ட்’ என்பதை போல அவன் தொடைகளின் வெள்ளை சருமத்தை லேசாய் காட்டிக் கொண்டிருந்தது அவ்வுடை. 
வீட்டிற்குள் வழமையாய் அவன் அணிவது தான். வெளியே வேறு உடை மாற்றி விட்டு தான் செல்வான். ஆனால் மழை இரவில் பயணிக்க வேண்டி வந்ததாலும், உடை மாற்ற நேரம் அனுமதிக்காததாலும் அப்படியே கிளம்பி வந்திருந்தான். 
‘இவ இருக்காளே’ என்று மனதிற்குள் அவளை வசை பாடியவன், உடை குறித்த அவளின் வார்த்தைகளில் லேசாய் லட்ஜையுற்று சற்று தயங்கியே அவளை தொடர்ந்தான். 
“மணி நான் மண்டே ஆபிஸ்ல கொடுத்துடுறேன். இல்ல உடனே வேணும்னா உங்க அக்கவுன்ட் டீடைல் கொடுங்க. நான் வீட்டுக்கு போனதும் ஈ பேல ட்ரான்ஸ்பர் பண்றேன்.’’ என்றான். 
என்ன தான் அவனுக்கு அவள் மீது வண்டி வண்டியாய் புகைச்சல் இருந்தாலும், நேரத்திற்கு அவள் செய்த உதவி அவனுள் ஒரு நிதானத்தை தோற்றுவித்து இருந்தது. 
அவனை நக்கலாய் பார்த்தவள், “என் ஈபே அட்ரஸ் உங்களுக்கு தான் ஏற்கனவே தெரியுமே சார். டபல்யூ டபல்யூ டபல்யூ டாட் நேசக் கரங்கள் டாட் காம்.’’ என்று ராகம் இழுக்க, அதுவரை இழுத்துப் பிடித்த பொறுமை அமுதனிடமிருந்து முற்றிலும் விடை பெற்றிருந்தது. 
இரயில் எஞ்சின் போல பெரிய பெரிய மூச்சுகள் எடுத்து தன்னை மீட்டவன், “சரிதான் போடி..!’’ என்று முகத்திற்கு நேரே அவளை அர்ச்சித்து விட்டு, அவள் முகம் மாறுவதை கூட நின்றுக் கவனிக்காமல் தன் போக்கில் விலகி நடக்கத் துவங்கினான். 
அதுவரை காதலன், காதலியின் திருட்டு சந்திப்பை போல லேசாய் தூறிக் கொண்டிருந்த மழை, பல வருட பிரிவாற்றாமையின் பின் தலைவியை சந்தித்த தலைவனை போல சுற்றுப் புறத்தை கலங்கடிக்க துவங்கியது. 
சலனமாகும்.         

Advertisement