Advertisement

சலனம் – 4 
  
அறையின் சாளரங்கள் வழி, மழைத்துளிகள் அத்துமீறி அறைக்குள் பிரவேசிக்க, வேகமாய் எழுந்து வந்து சாளரங்களை அடைத்தாள் இசை. ஆனாலும் சாளரக் கதவுகள் கண்ணாடியினால் செய்யப் பெற்றிருந்ததால் வெளியே அடித்த மழையின் உக்கிரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டின. 
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தன் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த கவிதா, குரலில் கவலையை தேக்கி, “பேசாம நீயும் ஊருக்கு கிளம்பு யாழிசை. அடிக்கிற மழையைப் பார்த்தா சாமானியமா நிக்கிற மாதிரி தெரியல. ஆபிஸ் வொர்க்லம் வொர்க் ப்ரம் ஹோம் போட்டுக்கலாம். நான் இல்லமா நீ எப்படி தனியா ரூம்ல இருப்ப.’’ என்றுவிட்டு பதிலுக்காய் பூங்கொடியின் முகம் பார்த்தாள். 
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. போன வாரம் தானே தூத்துக்குடி போயிட்டு வந்தேன். சும்மா அவ்ளோ தூரம் அலைய முடியல கவி. யூ டோன்ட் வொரி. அதான் ரூம்ல என் பாய் பிரண்ட் இருக்கார் இல்ல. அவர் என்ன பத்திரமா பாத்துக்குவார்.’’ என்றுவிட்டு தோழியின் வருத்தத்தை போக்கும் விதத்தில் கண்களை சிமிட்டினாள். 
இசை உதிர்த்த, ‘பாய் பிரண்ட்’ என்ற வார்த்தையில் அறையின் ஒரு மூலையில் புல்லாங்குழல் ஏந்தி நின்றுக் கொண்டிருந்த செராமிக்ஸ் கிருஷ்ணரை நோக்கிவிட்டு,  தலையில் அடித்துக் கொண்ட கவி, “சரியான ஸ்பெசிமன்டி நீ..’’ என்றுவிட்டு லேசாய் புன்னகைத்தாள். 
தோழியோடு தானும் இணைந்து புன்னகைத்தவள், “வீட்ல அம்மா, அப்பா, கயல் எல்லாரையும் கேட்டதா சொல்லு. வரும் போது மறக்காம, வெங்காய தொக்கும், மணப்பாறை முறுக்கும் வாங்கிட்டு வா. சரியா. நைட் ஒன்பது மணிக்கு தானே ட்ரைன். நானே உன்ன ட்ராப் பண்றேன். இப்போ சப்பாத்தி பண்றேன். பாக்ஸ்ல எடுத்துட்டு போ. ட்ரைன்ல எல்லாம் எதையும் வாங்கி சாப்பிடாதா.’’ என்றுவிட்டு அலங்கார மேஜையில் படுத்திருந்த மற்றுமொரு மெழுகுவர்த்தியை ஏற்கனவே எரிந்துக் கொண்டிருந்த மற்றொரு மெழுகுவர்த்தியால் உயிரூட்டி சமயலறைக்கு எடுத்து சென்றாள். 
கவி, எழுந்து செல்லும் தன் தோழியையே விழி அகலாது பார்த்திருந்தாள். அவர்கள் இருவரும் சென்னைவாசிகளாகி ஏறக் குறைய ஆறு மாதங்கள் கடந்திருந்தது. இருவரும் பணியில் இணைந்த நாள் முதல் ஒரே அறையை தான் பங்கிட்டு கொள்கின்றனர். 
முதலில் கவியின் நடை உடை பாவனைகள் சற்றே கிராமத்து சாயலை ஒத்திருக்கும். ஆனால் ஒரே மாதத்தில் முடியை வெட்டியது முதல், இலகுவான, இறுக்கமான சென்னை நகரத்து உடைகளுக்கு தன்னை பழக்கிக் கொண்டாள். 
ஊருக்கு செல்லும் நாட்களில் மட்டுமே பருத்தி சுடிதார் வகைகளை அணிவாள். ஆனால் இசை அப்படியே நேர் எதிர். எப்போதும், முழுக்கை பருத்தி உடைகள் தான். முடி அலங்காரமும் நீண்ட பின்னல் தான். 
மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம் என்பதால், அலுவலகத்திற்கு பூ வைத்து வர மாட்டாள். மற்ற படி, அலுவலகம் முடிந்து வரும் மாலை நேரங்களில் தலைவாரி குழலில் கொஞ்சம் மல்லிகையை சூடிக் கொள்வாள். 
அந்த நேரத்தில் அனேகமாக கவி குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருப்பாள். அதே போல பத்து நாட்களுக்கு ஒரு முறை விரல்களுக்கு மருதாணி இட்டுக் கொள்வாள். 
எண்ணெய் வித்துக்கள், சீகைக்காய் பொடி, குளியல் பொடி என்று அவள் பயன்பாட்டு பொருட்களை காணும் போதே ஏதோ நாட்டு மருந்து கடைக்குள் நுழைந்து விட்ட உணர்வை கவிதாவிற்கு தோற்றுவிக்கும். 
யாருக்காவும், தான் கடைபிடித்து வந்த கலாச்சாரங்களை, பண்பாட்டை விட்டுக் கொடுப்பதாயில்லை. முதலில் அவளை ஒருவாறு பார்த்த அலுவலக மக்கள் கூட, இவள் இயல்பு இது தான் என்று அவளை ஏற்றுக் கொண்டிருந்தனர்.   
குருமாவின் வாசம் அந்த இடத்தை நிரப்ப, “பூங்கொடி… மழை விட்ட மாதிரி தெரியல. நான் பேசாம ஏதாவது கேப் புக் பண்ணி போயிடவா.’’ என்றாவாறு, உடை மாற்றத் துவங்கினாள் கவி. 
“என்ன பெரிய மழை. நாம பார்க்காத மழை. நம்மகிட்ட தான் ரெயின் கோட் இருக்கு இல்ல. சண்டே வெளிய போகாம ஒரு மாதிரி இருக்கு. நானே உன்னை ட்ராப் பண்றேன் கவி.’’ என்றவள் தோழிக்கு உணவை டப்பாவில் அடைக்கத் துவங்கினாள். 
அதே நேரம், மழைக்கு இதமாக, மிதமாக மதுவருந்திவிட்டு, அமுதன் இளையாராஜா பாடல்களை ஒலிக்க விட்டு ரசித்துக் கொண்டிருந்தான். அவனுடைய அறையின் பால்கனியில் அன்று தான் மலர்ந்த ரோஜா ஒன்று மழையில் நனைந்திருக்க, அவன் அதை வருடிய அதே நேரம், “ஈரமான ரோஜாவே..’’ என்ற பாடல் வரிகள் அவன் செவி நிறைத்தது. 
ஏனோ அந்த ரோஜாவை வருடும் போது, யாழிசையின் நினைவுகள் மனதில் எழுந்தன. அவன் மதுவின் பிடியில் இருக்கையில், தளைகள் உடைக்கும் மனசாட்சியின் செயல்பாடாகவும் அது இருக்கலாம். 
தலையை ஒருமுறை நன்றாக குலுக்கிக் கொண்டான். கடந்து சென்ற ஆறு மாதத்தில், இருவருக்குள்ளும் இயல்பான பேச்சு வார்த்தைகள் இருந்ததில்லை. ஆனால் அலுவல் காரியமாய் ஓரிரு வார்த்தைகளில் தங்கள் சம்பாசனைகளை முடித்திருக்கிறார்கள்.
இசையின் விழிகள் முதலில் அமுதனை முறைத்துக் கொண்டே இருக்கும். நாட்கள் கடக்க கடக்க, அவனை விலக்கி நிறுத்தும் அலட்சிய பாவமொன்றை விழிகளில் கொண்டு வந்திருந்தாள். 
அமுதனும் சளைத்தவன் அல்லவே. அவள் முறைத்தாள், ‘அடப் போடி’ என்ற அலட்டல் பார்வையையும், அவள் அலட்சிய பார்வைகளுக்கு தன்னுடைய கர்வப் பார்வையின் மூலமும் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து விடுவான். 
அதோடு அவள் செய்யும் வேலைகளை சரி பார்த்து, தங்களுக்கும் மேல் உள்ள டெக்னிகல் டீமிற்கு அனுப்ப வேண்டிய பொறுப்பிலும் அமுதனே இருந்தான். 
ஆகையால் அலவலக கூட்டத்தின் போது, ஏதேனும் சிறிதாய் அவர்கள் குழு தவறிழைத்து இருந்தாலும், அனைவரையும் நிறுத்தி, தாறு மாறாய் வகுந்தெடுத்தான். 
தீஞ்சுவை சொற்பொழிவு பொதுவில் பலருக்கு என்று இருந்தாலும், கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் தருவாயில், ‘எப்படி..’ என்ற மிதப்பு பார்வையை யாழிசையை நோக்கி செலுத்தி வைப்பான். 
அவள் பல்லை கடித்து கொண்டு அமைதியாய் கடந்து விடுவாள். செய்த தவறுக்கு மேலதிகாரி திட்டும் போது, பின் அவள் வேறென்ன செய்ய முடியும். 
ஆனால் அவள் பழிவாங்கல்கள் வேறு வடிவில் இருக்கும். வழமையாய் மாதம் ஒருமுறை வார இறுதிகளில் அலுவலக கொண்டாட்டங்கள் இருக்கும். 
அலுவலக ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்கள் கார்பெட் நிறுவனம் கையாண்ட வழிமுறை அது. அந்த நாட்களில் சற்று தொலைவில் இருக்கும் ஏதேனும் பயணிகள் விடுதியில் அரங்கை பிடித்து, அலுவலக ஊழியர்களை இரண்டு குழுவாய் பிரித்து சிறு சிறு விளையாட்டு போட்டிகள் நடத்துவார்கள். 
யாழிசையும் அவள் தோழிகளும், அமுதன் இருக்கும் அணிக்கு எதிரணியில் தான் இருப்பார்கள். அவன் குழு ஏதேனும் விளையாட்டில் தோற்றால் போதும், குத்தட்டாம் போடாத குறையாக, கரவொலி எழுப்பி, சீட்டி அடித்து அந்த இடத்தையே கலங்கடித்து விடுவார்கள். 
அப்போதெல்லாம் இசை, ‘நாங்க எல்லாம் வேற மாதிரி’ என்ற மிதப்பு பார்வையை அமுதனை நோக்கி செலுத்தி வைப்பாள். அப்போதெல்லாம் வெளியே புன்னைகைத்து, உள்ளே கனலாகிப் போயிருப்பான் அமுதன். 
அலுவலக கொண்டாட்டத்தின் போது, அவனால் மட்டும் வேறு என்ன பாவனைகளை காட்டி விட முடியும். ஆனால் அன்றைக்கு ரியாஸ் எதாவது வாய்விட்டு மாட்டினால் அவனை வறுத்தெடுத்து தன் தணலை கொஞ்சம் தணித்துக் கொள்வான். 
அமுதன் சிந்தனையில் அமர்ந்திருந்த போது வாயில் அழைப்பு மணி அவனின் மோன நிலை கலைத்தது. ‘நான் எதையும் ஆர்டர் பண்ணலையே.’ என்ற சிந்தையோடு சென்று அமுதன் கதவை திறக்க வெளியே ரியாஸ் நின்றுக் கொண்டிருந்தான். 
அவனைக் கண்டதும், முகத்தில் லேசாய் புன்னகை மலர, “வாடா புதுக்கோட்டை ஜாக்கிசான். சரக்கு வாசத்தை மோப்பம் பிடிச்சிட்டு கிளம்பி வந்தியோ..?’’ என்றபடி உள் நோக்கி நடந்தான். 
ரியாஸ் உள் நுழைந்ததும் கதவடைத்து விட்டு, “ஆமா.. நீ இங்க சரக்கடிச்சா எனக்கு அம்பத்தூர் வரைக்கும் வாசம் வரும் பாரு. உனக்கு இருக்குறது ஒரே ஒரு உயிர் நண்பன். சரக்கடிக்கும் போது அவனுக்கு ஒரு போனை போட்டு கூப்பிடணும்னு உனக்கு தோணுச்சா. பிகரை பார்த்தா தான் மச்சி பிரண்டை கட் பண்ணனும். பியரை பார்த்தா எல்லாம் இல்ல.’’ 
பேசிக் கொண்டே இருந்தவன், தான் அணிந்து வந்த மழை உடையை ஓரமாய் கழற்றி மின் விசிறியின் அடியில் உலர வைத்து விட்டு, அமுதனின் அருகில் வந்து அமர்ந்தான். 
ரியாஸ் அடித்த புது பொன் மொழியில், பெரிதாய் சிரித்த அமுதன், “சரி.. சரி.. ரொம்ப வழியாத… ப்ரிட்ஜ்ல உன்னோட பிராண்ட் இருக்கு போய் எடுத்துக்கோ.’’ எனக் கூற, 
“என் பிரண்டை போல யாரு மச்சான்..என் பிராண்டை எல்லாம் வாங்கி வச்சான்’’ என ராகம் இழுத்து பாடியவன், அவன் கன்னத்தை கொஞ்சம் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு எழுந்து செல்ல, “எருமை…எதுக்குடா கிள்ளிட்டு போற..’’ என்ற அமுதன் அதற்கும் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தான். 
ரியாஸ் வரும் போது லேசான் தூறலாய் இருந்த சாரல் மழை, நேரம் கடக்க கடக்க புயல் மழையாய் உருமாறி கொட்டி தீர்ந்துக் கொண்டிருந்தது. 
நண்பர்கள் இருவரும், தீர்த்த நேரம் முடித்து, உணவருந்தி முடிக்கும் வரை வெளியே பெய்த பேய் மழையை இருவருமே உணரவில்லை. 
உணவு முடித்து ஆசுவாசமாய் இருவரும் அமர, ரியாஸ், “மச்சி நைட் ஊருக்கு போறேன்டா.’’ என்றான். ஊரை பற்றி பேசும் போதே, ரியாசின் குரல் அடியோடு தன் குதூகலத்தை இழந்துவிட்டிருந்தது.  
‘இம்முறை என்ன?’ என்பதை போல அமுதன் பார்க்க, “தங்கச்சிக்கு உறுதி பண்றாங்கடா. நான் வீட்ல இல்லைனா அம்மா வருத்தப்படுவாங்க. அதான்..’’ ரியாஸ் சொல்லி முடிக்க, அமுதன் சற்று நேரம் எந்த மறுமொழியும் உதிர்க்கவில்லை. 
ரியாசின் தந்தை அவனுக்கு ஐந்து வயதாய் இருக்கும் போதே இறந்துவிட்டார். இளம் வயதிலேயே கணவனை இழந்து நின்ற ஜமிலாவிற்கு அவர்கள் மாமியார் வீட்டினரே தங்கள் இரண்டாம் மகனை மறு திருமணம் செய்து வைத்துவிட்டனர். 
ஜமீலா கூட சிறிது காலத்தில் மனம் மாறி அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் சிறு வயதில் இருந்து சித்தப்பா என்று ஏற்றுக் கொண்ட உறவை அப்பா என்று ஏற்றுக் கொள்ள ரியாசால் முடியாது போயிற்று. 
அவன் சுணக்கத்தை யாருமே உணரவில்லை. அவனோடு கல்லூரியில் ஒன்றாய் படித்த அமுதனை தவிர. பனிரெண்டாம் வகுப்பு முடியவும் பொறியியல் பயில விடுதி வந்தவன், அமுதனோடு நன்றாக ஒன்றிவிட்டான். 
ஏனெனில் அமுதனுக்கு தந்தை கிடையாது. தாயின் உள்ளங்கையில் வளர்ந்த ஒற்றை மகன். இவனும் தன் இனமே என்ற எண்ணம் வேரூன்ற ரியாஸ் அமுதனோடு செம்புல நீர் போல் ஒன்றிவிட்டான். 
ரியாசின் ஏக்கங்கள் அமுதனுக்கு புரியும். என்னதான் ஒட்டு மொத்த குடும்பமும் அவனை அன்பால் தாங்கினாலும், அவன் அவர்களை விலக்கியே வைப்பான். 
அமுதன் இரண்டொருமுறை அவனுக்கு அறிவுரை கூட சொல்ல முயன்று இருக்கிறான். “சின்ன வயசுல ஒதுங்கி இருந்த சரி. உங்க சித்தப்பா சொல்லப் போன கிரேட்டா. அவரை பார்த்தா உன்கிட்ட வேற்றுமை காட்ற மாதிரி கூட தெரியல. அப்புறம் நீ ஏன்டா ஒதுங்கிப் போற.’’ என்று காய்வான். 
அதற்கு பதில் சொல்லாத ரியாஸ், கண் சிவந்து இரண்டு நாட்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலைவான். “என் சித்தப்பா எனக்கு எப்பவும் அத்தா ஆக முடியாது தமிழ்.’’ என்றுவிட்டு. 
மற்ற நேரங்களில் வெகு வெகு இயல்பாக இருக்கும் ரியாஸ், தன் தந்தையின் பேச்சு வந்துவிட்டால் முற்றாக இறுகி விடுவான். ஆக அமுதன் முடிந்த அளவு அந்த பேச்சை தவிர்த்து ஒரு கட்டத்தில் நிறுத்தியே இருந்தான். 
சற்று நேரம் அமைதியாய் இருந்த அமுதன், “பாருடா… நிஷாவுக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு வயசாயிடுச்சா. நாம காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போது, டென்த்ல மார்க் குறைஞ்சி போச்சுன்னு உன் சட்டையை கண்ணீரால குளிப்பாட்டிட்டு இருந்தாலே அந்த குட்டிப் பொண்ணுக்கா கல்யாணம்.’’ என்றுவிட்டு கலகலவென்று நகைத்தான். 
சற்றே இலகுவான ரியாசும், “ஆமா நேத்து தான் நீயும், நானும் எஞ்சினியரிங் முடிச்சோம். வந்துட்டான் பேச. அது ஆச்சு எட்டு வருஷம். அப்படியே இவர் இளம் சிட்டு. காலேஜ் பொண்ணுங்க உன்னை அங்கிள்னு கூப்பிட இன்னும் அஞ்சி வருஷம் தாண்டி மாப்பிள்ளை இருக்கு.’’ என நன்றாக நண்பனை வாரினான். 
“ஆமா என்னை அங்கிள்னு கூப்பிடும் போது, உன்னை மட்டும் மச்சான்னு கூப்பிட போறாளுக. போடா டேய். சரி எப்ப கிளப்புற. எப்படி கிளப்புற.’’ என்று நடப்பில் வந்து நின்றான் அமுதன். 
“வழக்கம் போல ஒன்பது மணி ட்ரைன் தான். திருச்சி போய் அங்க இருந்து புதுக் கோட்டை போகணும்டா. என் வண்டி உங்க அப்பார்ட்மென்ட் பார்கிங்லையே இருக்கட்டும். நான் போகும் போது கேப் புக் பண்ணிக்கிறேன். மணி இப்ப எட்டு தானே ஆகுது. இன்னும் ஒரு கால் மணி நேரம் கழிச்சு புக் பண்ணா சரியா இருக்கும்.’’ என்றவன் கால் நீட்டி அமர்ந்து தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் தன் கவனத்தை பதித்தான். 
“சரிடா… எனக்கும் லேசா தூக்கம் வருது. நான் போய் படுக்கிறேன். நீ கிளம்பும் போது சொல்லிட்டு போ.’’ என்றவன் தன் படுக்கை அறைக்குள் நுழைந்தான். 
ஆனால் அடித்து பெய்த மழையில், ரியாஸ் முன் பதிவு செய்த வாகனம், சொல்லிய நேரத்திற்கு வர முடியாது போனதால், சரியாய் எட்டு முப்பத்தைந்திற்கு முழங்கால் வரை வீதியில் ஓடிய நீரில், மழை கவச உடைகளை அணிந்து கொண்டு, அமுதன் நண்பனை இரயில் நிலையத்தில் விட்டு வருவதற்காய் எழிலனை கிளப்பினான். 
அதே நேரம் முகத்தில் மழை நீர் தெளிக்க, இசையும், கவியும் ரயில் நிலையம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள் இருசக்கர வாகனமொன்றில்.  
இருவரின் உடல் நனைத்துக் கொண்டிருந்த அந்த மழை அறிந்திருந்தது அடுத்த நடக்கவிருக்கும் நிகழ்வுகளை.  
சலனமாகும். 
 

Advertisement