Advertisement

சலனம் – 3 
அமுதன் தன் இடுப்பில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை ராம்ராஜ் வேஷ்டியை கொஞ்சம் கடினப்பட்டே, தன் உடலோடு இறுக்கி வைத்தான். 
“எந்த வீணாப் போனவன்டா.. இந்த எத்தினிக் டேலாம் கண்டு பிடிச்சது. வண்டி ஓட்டும் போது கழண்டு காத்துல அடிச்சிட்டு போகாம இருந்தா சரி. எதுக்கும் பாதுகாப்புக்கு ஒரு ஷார்ட்சை உள்ள மாட்டி வைப்போம்.’’ என்று வாய்விட்டு முணுமுணுத்தபடி இரவில் வழக்கமாய் அணியும், இலகுவகை ஷார்ட்ஸ் ஒன்றையும் பாதுகாப்பு கருதி அணிந்து கொண்டான். 
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி அவர்கள் அலுவலகத்தில் இன்று, எத்தனிக் டே என்ற கலாச்சார நாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் ஆண்கள் அனைவரையும் வேட்டி சட்டையிலும், பெண்களை புடவை அணிந்தும் வர சொல்லி ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தனர்.
அமுதனுக்கு கிஞ்சித்தும் வேட்டி அணிந்து வழமை இல்லை ஆகையால், நேற்று இரவோடு, இரவாக இந்த ஒட்டிக்கோ கட்டிக்கோவை வாங்கி ஏதோ முடிந்த அளவு தனக்குள் அந்த உடையை பொருத்திக் கொண்டான். 
ஆனாலும் ஏதோ ஒரு அசௌகரியம் அவனை படுத்திக் கொண்டே இருந்தது. எழிலனின் மேல் ஒரு விதமாய் அமர்ந்து சவாரி செய்தவன், அலுவலகத்தை அடைந்ததும் அங்கே கண்ட காட்சிகள், வியப்பையும் தாண்டி அவனுக்குள் ஒரு இதத்தை பரப்பியது. 
வாயிலில் வாழை மரத்தோடு, மாவிலை தோரணம் கட்டி, முகப்பில் பெரிய பெரிய வண்ணக்கோலம் அலங்கரிக்க, வண்ண வண்ண புடவைகளில் பெண்கள், பலவித வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்துக் கொண்டிருந்தனர்.
உண்மையை சொல்லப் போனால் அவனுக்கு யாரையுமே அடையாளம் தெரியவில்லை. ஒரு உடைக்கு ஆளை மாற்றும் சக்தி இருக்கிறதா என்ன..? என தனக்குள் வியந்தவன், மெதுவாய் தன் பணியிடம் நோக்கி செல்ல, எங்கிருந்தோ வந்த ரியாஸ், அவன் கரம் பற்றி இழுத்தான்.
“மச்சி எங்க போற நீ..? இன்னைக்கு நோ ஆபீஸ் வொர்க். ஒன்லி செலிபரேசன் தான். வெளிய வா மச்சி! நம்ம பொண்ணுங்க எல்லாம் ஏதோ சமத்துவ பொங்கல் வைக்க போறாங்களாம். வடிவேல் காமெடியை விட செம என்டர்டெயின்மென்டா இருக்கப் போகுது. எதுக்கும் முதல்ல நைட் டியூட்டி பாக்குற வாட்ச்மேன் வளக்குற நாய்க்கு போட்டு டெஸ்ட் செஞ்சிடனும்.’’ 
ரியாஸ் சொன்னதை போல அங்கே சில பெண்கள் செங்கற் கற்களை அடுப்பாக மாற்றி அதன் மீது பொங்கல் பானையை ஏற்றி வைத்திருந்தனர். 
அடுப்பை ஏற்றி வைத்திருந்தனர் அவ்வளவே, மற்றபடி அதை எப்படி பற்ற வைப்பது, என்பதே புரியாமல், “ஹே நாட் லைக் தட் யார்..’’ என தங்களுக்குள் வம்பளந்து விளையாடிக் கொண்டிருந்தனர். 
இவள் மருதாணி விரல்கள் வெளுப்பதே இல்லையா அன்றி விரல் வெளுக்க வெளுக்க இவள் தினம் மருதாணி இடுகிறாளா என்ற குழப்பத்தில் மற்றவர்களை ஆழ்த்தும், யாழிசை அப்போது அங்கு வந்து சேர்ந்தாள். 
முதலில் அமுதன் கண்டது இசையின் மருதாணி விரல்களை தான். அலுவலகத்தின் பின்னால் வீழ்ந்திருந்த பழைய தென்னை மட்டை ஒன்றை முறித்து விறகாக்கிக் கொண்டு வந்திருந்தாள். 
கற்பூரம் ஒன்றை இட்டு, அவள் அடுப்பை பற்ற வைக்க, அதுவரை வேடிக்கை விளையாட்டில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூட, பொறுப்பாய் அவள் இட்ட பணிகளை சிரத்தையாய் செய்து கொண்டிருந்தனர். 
அதுவரை விளையாட்டு பிள்ளைகளின் கூட்டாஞ்சோறு விளையாட்டிடம் போல கலகலத்துக் கிடந்த இடம் தற்சமயம், சிரத்தையாய் பக்தி நிலைக்கு சென்றிருந்தது. 
ரத்தோட் ஒரு ஓரமாய் நின்று இதுவரை தான் கண்டறியாத தென் இந்திய பண்டிகையின் வர்ணங்களை ரசித்துக் கொண்டிருந்தார். உலை கொதித்து பொங்கல் பொங்க, அங்கே மகிழ்ச்சியின் அலை வீச துவங்கியது. 
பெண்களின் குலவை சத்தத்தை ஆண்கள் அலைபேசியில் ஒலிக்க விட, அங்கிருந்த குறும்பு பெண்கள் தங்கள் வாயில் விரல் வைத்து, என்னவோ அந்த சத்தத்தையே தாங்கள் தான் எழுப்புவதைப் போல பாவ்லா செய்து கொண்டிருந்தனர். 
ரியாஸ் நடுவில் புகுந்து, “எங்க ஆயாலாம் வாயில நிஜமா குலவை போடும் நீங்களும் இருக்கீங்களே..’’ என வம்பிழுக்க, “வேணா வா நாங்க உன் தலையில பெரிய கல்லை போடுறோம்..” என அவர்கள் தங்கள் பங்கிற்கு இவனை வாரிக் கொண்டிருந்தனர். 
பொங்கல் நெய் மணம் கமகமக்க தயாரானதும், கிழக்கு முகத்தில் சூரிய பொங்கலை படைத்தது, பெண்கள் சூழ்ந்து நின்று கும்மி கொட்டி முடிய, யாழிசையின் தோழிகள் அவளை ஒரு பாடல் பாட வேண்டினர். 
பொங்கல் தொன்னைகளில் வைத்து அனைவருக்கும் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்க, அலுவலக முகப்பின் புல் தரைக்கு அருகிலிருந்த படியில் அமர்ந்த பூங்கொடி, கால்களை சம்மனமிட்டு, விழிகளை மூடி, வலது கை தொடையில் தாளம் போட… ‘ஸ்வாகதம் கிருஷ்ணா.. சுப சுவாகதம் கிருஷ்ணா..’’ என்ற கீர்த்தனையினை பாட துவங்கினாள். 
அதுவரை பொங்கலை வாங்கி உண்ண அடித்துக் கொண்டிருந்த, கூட்டம் கூட அப்படியே நின்ற இடத்தில் சிலையாகி நின்றது. அதுவரை அறியாத போது மட்டும் அவளை பார்த்துக் கொண்டிருந்த அமுதன் அவள் விழி மூடி அமரவும், விழி எடுக்காமல் அவளை பார்த்து நின்றான். 
முழுதாய் பதினைந்து நிமிடங்கள் கழித்து அவள் குரல் நிறுத்தி விழி திறக்க, கூட்டம் இசை எனும் மாய வலை அறுத்து ஆர்பரிக்க மேலும் சில நொடிகள் எடுத்துக் கொண்டது. 
ரத்தோட் அவள் அருகில் வந்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க, மற்றவர்களுக்கு அவளை சூழ்ந்து நின்று பாராட்ட, ஏனோ அப்போதும் அமுதன் அவளை பார்த்த வண்ணமே நின்றுக் கொண்டிருந்தான். 
அதற்குள் ரியாஸ், பொங்கல் தொன்னைகளோடு இவன் அருகில் வந்து நின்றவன், “டேய்… மச்சி உனக்கு தான் இந்த சாமி பூதம் எல்லாம் ஆகாதுல.. உன்னோட பங்கையும் நானே அமுக்கிடவா..?’’  என கேட்க.. அவன் கைகளில் இருந்த இரு தொன்னைகளையும் பறித்தவன்,, “போய் வேற வாங்கிக்கோ.. போ ..’’ என்று அவனை துரத்த, “எல்லாம் நேரம்டா சாமி..’’ என்று புலம்பியவன் அங்கிருந்து நகர்ந்தான்.    
அனைவரின் பாராட்டுகளையும் ஒரு புன்சிரிப்பில் ஏற்றவள், தன்னை சூழ்ந்திருந்த கூட்டத்தில் இருந்து வெளியேறும் போது தான், தன்னையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த அமுதனை கவனித்தாள். 
அத்தனை நேரம் புன்னகையில் விரிந்திருந்த இதழ்கள் உடனே இறுக, பார்வையை சுருக்கி அவனை முறைத்தபடி தன் இருப்பிடத்திற்கு செல்ல விழைந்தாள். 
அவள் முகம் வெளிபடுத்திய பாவனைகளை கண்டதும், அமுதன் தானும் முகம் சுருக்கி, ‘போடி’ என்பதை போல் ஒரு பாவனையை வெளிப்படுத்தியவன், அவள் கண் முன்னே தன் கையிலிருந்த இரு தொன்னைகளையும் அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட்டான். 
அதுவரை சாதாரணமாய் முறைத்திருந்தவள், முகம் சிவக்க நின்று நன்றாக அவனை முறைத்தாள். அதற்கும் ஒரு முக சுழிப்பை பதிலாய் கொடுத்தவன், ரியாஸ் புதிதாய் வாங்கி வந்த பொங்கல் தொன்னைகளையும், அவன் கதற கதற அவன் கரத்தில் இருந்து பிடுங்கி, அவள் பார்ப்பதை உணர்ந்து மீண்டும் குப்பை கூடையில் வீசி விட்டு, ரியாசின் கரம் பற்றி இழுத்தபடி தன் பகுதிக்கு விரைய துவங்கினான். 
மூக்கு நுனி சிவக்க விட்டால் அவனை அறைந்திடும் கோபத்தில், அப்படியே அங்கேயே உறைந்து நின்றாள் யாழிசை. அலுவக முகப்பில் ஒளிர்ந்து கொண்டிருந்த தொலைக்காட்சியில்  சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்பிருப்பதாய் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். 
சலனமாகும். 
 

Advertisement