Advertisement

மற்றவர்களின் கவனமும் நொடியில் அந்தப் பூவின் மேல் திரும்பியது. அமுதனும் புகைப்படத்தில் மட்டுமே கண்டிருந்த அந்தப் பூவை கவனமெடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். 
இசை முதலில் அந்தப் பூவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், சில நொடிகளில், அந்த பூவை தாண்டி மலர்ந்திருந்த வேறு வகை மலர் அவள் கவனத்தை கவர்ந்தது. 
நாம் சென்று அந்த மலரை எடுத்து வருவோம் என்று நினைத்தவள், சற்றே உள்ளடங்கியிருந்த அந்த கொடியை நோக்கி நடந்தாள். சற்று நேரம் மலரில் நிலைக்கவிட்டிருந்த தன் பார்வையை அமுதன் இசையை நோக்கி திருப்பினான். 
அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் அவள் இல்லாது போக, எங்கே போனாள் அவள் என்ற பரபரப்பில், அமுதன் தன் பார்வையை சுழற்றினான். அப்போது தான் சற்று தொலைவிலிருந்த கொடியில் மலர்களை பறித்துக் கொண்டிருந்த இசை கண்ணில் தென்பட்டாள். 
ஒரு ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டவன், அவளை நோக்கி நடக்க தொடங்கினான். என்ன தான் ஒற்றை அடிப் பாதை தெளிவாய் இருந்தாலும், காட்டில் பெயர் தெரியாத, பூச்சியினங்கள் குறித்த அச்சம் அவன் நடையை எட்டிப் போட வைத்தது. 
அவளின் பின்னால் சென்று நின்றவன், “பூச்செடியில எல்லாம் ஏதாச்சும் விச பூச்சி இருக்க வாய்பிருக்கு இசை. சீக்கிரம் வெளிய வா.’’ என்றான். 
இவன் குரல் அருகில் கேட்டதும் மகிழ்வாய் திரும்பியவள், “இது என்ன பூ தெரியுதா..?’’ என்றாள் கேள்வியாய். 
அவள் பூவை உயர்த்தி  காட்டும் பொழுது தான் அமுதன், தங்களுக்கு வெகு அருகில் இருந்த மரத்தில் தன் பெரிய உடலை தேய்த்துக் கொண்டிருந்த ஒற்றை யானையை கண்டான். 
ஒற்றை யானையின் கண்ணில் தென்படுவது ஆபத்து என அறிவான், ஆகையால் இசையை அப்படியே அசையாது இருக்க சொல்ல முடிவெடுத்தான். ஆனால் அதற்குள் நேரம் கடந்திருந்தது. 
இவன் சைகை கொடுக்கும் முன்பே, அந்த யானை இவர்களை நோக்கி ஓடி வர துவங்கியிருந்தது. இசை நடப்பது என்ன என உணரும் முன்னே அமுதன் அவளின் கரம் பற்றி வேகமாய் இழுத்துக் கொண்டு மேல் நோக்கி ஓடினான். 
அப்போது தான் இசை, பின்னால் திரும்பி பார்த்தாள். துரத்தும் யானையை கண்டவளின் உள்ளம் நடுக்கம் கொள்ள உயிர் காக்கும் வேகத்தில் தானும் அமுதனோடு ஓட துவங்கினாள். 
தொலைவில் இவர்கள் ஓடி வருவதை கண்ட இவர்கள் குழுவினர், ஓடிப் போய் வாகனத்தில் ஏறினர். ஓட்டுனர், வண்டியை கிளப்பி வைத்து சீக்கிரம் வாங்க என குரல் கொடுத்தார். 
கிட்ட தட்ட இருவரும் வண்டியை நெருங்கிய நேரம், முன்னால் இருந்த கல் இடறி இசை கீழே விழுந்தாள். மேட்டு நிலத்தில் ஏறுவது யானைக்கு எளிது ஆகையால் அதுவும் இவர்களை வேகமாய் சமீபித்து இருந்தது. 
விழுந்தவளை எழுப்பிக் கொண்டு ஓட நேரமில்லை என்பதை உணர்ந்த அமுதன் ஒரு நொடி கூட தாமதிக்காது, அப்படியே அவள் மீது விழுந்து, அவளின் உயிர் கவசமானான். 
அதிர்ந்த இசையின் விழிகள் இறுதியாய் கண்டது தன் தலைக்கு மேல் ஓங்கிய யானையின் பாதங்களை தான். அதற்குள் எங்கோ வெடி சத்தம் கேட்க, யானை வந்த வழியே காட்டிற்குள் ஓடியிருந்தது. 
ஓட்டுனர் போட்ட வெடி அவர்களின் உயிர் காக்க, மற்ற நண்பர்களும் யானை பயம் நீங்கி இருவரை நோக்கியும் வந்தனர். இசை உயிர் பயத்தில் விழிகளை இறுக மூடியிருந்தாள். 
ஆபத்து நீங்கியதை முதலில் உணர்ந்தவன் அமுதனே. அவன் இசையின் கன்னத்தை வலுவாய் தட்ட, விழி பிரித்தவள், அவன் ஆபத்து ஏதுமின்றி நலமாய் இருப்பதை கண்டு அவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள். 
அவளின் உணர்ச்சி போராட்டத்தை உணர்ந்தவன், அவள் கைகளுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அமைதியாயிருந்தான். ஓட்டுனர் அருகில் வந்து, “ஒண்ணுமில்ல யானை போயிருச்சு. எழுந்திருங்கம்மா.” என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். 
வாசு தண்ணீர் குடுவையை கொண்டு வந்து நீட்ட, எழுந்து நின்ற இசை முதலில் அந்த குளிர்ந்த நீரை, முகத்தில் ஊற்றிக் கொண்டாள். அதன் பிறகு தொண்டையில் கொஞ்சம் சரித்துக் கொண்டவள், வண்டியில் ஏறிய பின்பும், அமுதனின் கரங்களை விடாது பற்றிக் கொண்டாள். 
அதற்கு பின்பு ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி தொடர்ந்தது அவர்கள் பயணம். வழியில் சிறுத்தையை ஓரிடத்தில் கண்ட போது கூட, வண்டியிலிருந்தே புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 
அனைவரின் உற்சாகமும் குறைந்ததை உணர்ந்த ஓட்டுனர், “இதெல்லாம் இங்க சகஜம். உங்களை சுளுவா ஆபத்துல சிக்க விட்ருவோமா. சிறுத்தையே விரட்டி வந்தா கூட உங்களை காப்பாத்தி கூட்டிட்டு போயிருவோம். எல்லா வண்டியிலயும் துப்பாக்கி இருக்கு. பயப்படாமா வாங்க.’’ என்றார் ஆற்றுப்படுத்தும் விதமாய். 
அதன் பிறகு வண்டியில் கொஞ்சம் சகஜ நிலை திரும்பியது. ஆயினும் முந்தைய கொண்டாட்ட நிலை திரும்பவில்லை. அதிலும் இசையின் சிந்தையில் ஓங்கிய காலோடிருந்த யானையே நிறைந்திருந்தது.
தான் என்ன சமாதானம் சொன்னாலும் அது தற்சமயம் எடுபடாது என்பதை உணர்ந்த அமுதன் அமைதியாய் அவள் பற்றியிருந்த கரத்தில் அழுத்தம் கொடுத்து, அவளுக்கு பாதுகாப்பு உணர்வை ஊட்டியபடி, தனது பயணத்தை தொடர்ந்தான். 
மாலையில் அனைவரும் விடுதி திரும்பியதும், அலைந்த களைப்பில் தங்கள் அறையில் சென்று முடங்கினர். பொதுவாய் இது போன்ற சுற்றுலாக்களில் ஆண்கள் மூவர் அல்லது இருவர் அறையை பகிர்ந்து கொள்வர். 
ஆனால் இம்முறை நடு அரங்கம் மையமாய் கொண்ட பெரிய விடுதியில் அனைவருக்கும் தனித்தனியான சிற்றறை கொடுக்கப்பட்டிருந்தது. அமுதன் இரவு உணவிற்கு கூட கீழே இறங்கி செல்லவில்லை. 
அறைக்கே உணவை வரவழைத்து உண்டான். சிறிது நேரம் முகநூலில் உலவியவன், உறங்கலாம் என எண்ணும் போது அவன் அறைக் கதவு லேசாய் தட்டப்பட்டது. 
வாசு மதுபான கொண்டாட்டத்திற்கு அழைக்க வந்திருப்பான் என எண்ணி கதவை திறந்த அமுதன் திகைத்தான். வாயிலில் இசை நின்றிருந்தாள். அவளின் முகத்தில் இருந்த உறுதியை கண்டவன், மௌனமாய் அவளை அறைக்குள் அனுமதித்தான். 
வந்தவள் அவனிடம், கையில் இறுக்கிப் பிடித்ததால் கசங்கிய மலரை நீட்டினாள். அமுதன் ஏதும் பேசாமல் அந்த மலரை உற்றுப் பார்த்தான். அவர்களின் வாசக சாலை வாசிப்பில் மலர்களும், சங்க இலக்கியமும் என்ற தலைப்பில் ஒரு வாரம் கலந்துரையாடல் நடைபெற்றது. 
அப்போது ஒவ்வொருவரும் தாங்கள் வாசிக்கும் பாடல் குறித்த மலர்களை வாய்ப்பிருந்தால் நேரடியாகவோ, அன்றி புகைப்படத்திலோ அதன் உருவமைப்பை காட்டினர். 
தன் நினைவடுக்கில் தேடிய அமுதன், இசையின் கையில் இருப்பது செங்காந்தள் மலர் என்பதை உணர்ந்தான். அது பற்றிய இலக்கிய பாடலை பகிர்ந்தவள் இசை தான். 
சங்க காலத்தில், காதலில் விழுந்தவர்கள், சுற்றத்தினர் அறியும் முன் தாங்கள் மட்டுமே உணரும் அக மணம் செய்யும் முறையை கைக் கொண்டிருந்தனர். அந்த கந்தர்வ மணத்தின் போது, காதலன் தன் உள்ளக் குறிப்பை காதலிக்கு காந்தள் மலர் கொடுத்து உணர்த்துவான். 
அவள் அம்மலரை வாங்கிக் கொண்டாள், இயற்கையின் விதிப்படி அவன் இனி அவள் கணவன். எனவே இருவரும் இல்வாழ்வில் கலந்து இன்புற்று வாழ்வர். 
இப்படி அந்த மலரின் சிறப்பை எடுத்தியம்பிய இசை எதற்காக தன்னிடம் அந்த மலரை நீட்டி நிற்கிறாள் என அமுதன் உணர, சில பல நொடிகள் எடுத்துக் கொண்டான். 
ஆனால் உணர்ந்த பிறகு தயக்கம் ஏதுமின்றி அவள் உள்ளங் கையிலிருந்த சிறு மலரை பாந்தமாய் தன் விரலுக்கிடை இடம் மாற்றினான். இசை மெல்ல விழியுயர்த்தி அவனை பார்த்தாள். 
அதிலிருந்த அச்சம் மொத்தமும் இடம் பெயர்ந்து, அங்கே காதல் குடி கொண்டிருந்தது. அமுதன் அவளையே இமைக்காது பார்த்தான். மெதுவாய் அவனை நெருங்கியவள், தன் நெற்றியை கொண்டு அவன் நெற்றி மீது முட்டினாள். 
லேசான நகைப்பை வெளிப்படுத்தியவன், “நீ என்கிட்ட இப்படி சாரி கேக்க கூடாது.’’ என்றான். அவன் குரலின் பொருள் உணர்ந்தவள், லேசாய் தலை நிமிர்ந்து, மீசைகள் பாதி மறைந்த அவன் அதரத்தில் தன் இதழ் ஒற்றி எடுத்தாள்.
அமுதனுக்கு நிகழ்வுகளை நம்ப முடியவில்லை. ஆயினும், அவள் இடையில் தன் கரம் கோர்த்தவன், “ரொம்ப உசுப்பேத்துற பொண்டாட்டி.’’ என்றான் மயக்கமாய். 
அந்த ஒற்றை வார்த்தை, இசையின் தயக்கங்களை துடைத்தெரிய, தன் கரங்களை அவன் முதுகில் பின்னியவள், “ஏன் இந்த சில்லுவண்டு மயங்காதா…?’’ என்றாள் தானும் கிறக்கமாய். 
இருவரும் தங்கள் வாழ்வின் மிகப் பெரும் முடிவுகளை எடுக்கும் வயதை அடைந்திருந்த போதும், அமுதன் தயக்கமாய் அவள் முகம் பார்த்தான். மீண்டும் தன் நெற்றியால் அவனை முட்டியவள், “உங்க அம்மா சம்மதம் சொல்லி… எங்க பாட்டி ராமாயணம் கேட்டு, எங்க அப்பா மண்டபம் பார்த்து நம்ம கல்யாணம் மத்தவங்க முன்னாடி நடக்க குறைஞ்சது மூணு மாசம் ஆகும் மிஸ்டர் சில்வண்டு. அதான் நாம நம்மளை வாழ்க்கை துணைன்னு முடிவு பண்ற மேரேஜ் பண்ணிகிட்டோம் இல்ல.’’ என்றவள் அவன் கரத்தின் அழுத்தம் கூடாதிருப்பதை உணர்ந்து, அவன் பிடியிலிருந்து விலகி நின்றாள். 
“ஆனாலும் நீங்க ரொம்ப அழுத்தம் தான். உங்க அம்மா சம்மதம் இல்லைன்னு யோசிக்கிறீங்க. அதானே. சரி நான் என் ரூமுக்கு போறேன். ஆனா ஒன்னு நியாபகம் வச்சிக்கோங்க. இப்ப நீங்க என்னை ரிஜெக்ட் பண்றீங்க. சோ எனக்கும் ஒரு சான்ஸ் இருக்கு. உங்களை ரிஜெக்ட் பண்ண.’’ என்றவள் கதவின் குமிழை திருகி திறக்கப் போனாள். 
அமுதன், தாய் தன்னிடம் கடைசியாய் உச்சரித்த வார்த்தைகளை நினைவிற்கு கொண்டு வந்தான். திரும்ப முனைந்தவளின் கரம் பற்றி தடுத்தவன், “சில்லு வண்டு எப்படி லவ் பண்ணும்னு பாக்காம போனா என்ன அர்த்தம்…?’’ என்றவன் மீண்டும் அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான். 
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் விடுங்க…!’’ என்று சிணுங்கி இசை அவன் பிடியிலிருந்து வெளி வர முயல, அமுதன் தன் அழுத்தமான முதல் முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான். 
அது தன்னுள் கடத்திய வெப்பத்தில் இசை மௌனியானாள். இருவரும் நுழைந்த உறவு புதிதென்பதால் தயங்கி தயங்கி உள் நுழைந்தார்கள். அவள் தயங்கும் போதெல்லாம் அவன் முத்தத்தால் அவளை திறந்தான். 
அவன் திணறும் போதெல்லாம், அவள் தன் பெரு மூச்சால் அவனை வழி நடத்தினாள். அவர்கள் காதல் காட்டில் பெருமழை விடாது பெய்தது. விடியலின் பின்பும் அவர்கள் ஒருவரில் ஒருவர் பிணைந்து சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். 
அதே நேரம் சேலத்தில் அருள் தன் கூந்தலை கொண்டை போட்டுக் கொண்டிருந்தார். மகன் யானைக் காலிடை விழுந்த செய்தி வாசுவின் மூலம் அவர் செவி எட்டியிருந்தது. ஆக மகனோடு, இசையையும் உலுக்க அவர் சென்னை கிளம்பிக் கொண்டிருந்தார். 
சலனமாகும். 

Advertisement