Advertisement

சலனம் – 27 
ரியாசின் திருமணம் கலகலப்பாய் நடந்தேறிக் கொண்டிருந்தது. இஸ்லாம் வழித் திருமண வைபவத்தில் கவியின் சொந்தங்கள் அதிகம் பங்கேற்க மாட்டார்கள் என்றே ரியாஸ் எண்ணியிருந்தான். 
ஆனால் அவர்கள் அந்த எண்ணத்தை பொய்ப்பித்து, நடைபெற்ற ஒவ்வொரு சம்பர்தாயத்தையும் ஸ்ரத்தையாய் கேட்டறிந்து கொண்டிருந்தார்கள். கவி இயல்பாய் ரியாசின் தாய் ஹசீனவோடு ஒன்றிவிட்டாள். 
உம்மா முகம் திருப்பிக் கொண்டால் என்ன செய்வது என்ற கவலை ரியாசின் மனதிற்குள் இருக்க தான் செய்தது. அது தற்சமயம் அவனை விட்டு விடைபெற்றிருந்தது. 
இருபக்க திருமண உறுதி மொழிகள் வாசிக்கப்பட்டதும், ரியாசின் தங்கை, கவியின் கழுத்தில் கருகு மணியாலான தாலியை அணிவித்தாள். 
திருமணம் வைபவம் நிறைவுற்றது என்றதின் சான்றாய் மணமகளை சூழ இருந்த பெண்கள், மிட்டாய்களை வீசினர். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஆவலாய் அதை பிடிக்க முயன்றனர். 
அந்த இடமே வேடிக்கையும் சிரிப்புமாய் அத்தனை பாந்தமாய் இருந்தது. இரு வேறு மதம் இணைந்த திருமணம் என சொல்ல முடியாமல் யார் முகத்திலும் சிறு சுளிப்புமின்றி அழகாக நடைபெற்றுக் கொண்டிருந்தது திருமணம். 
அமுதன் ரியாசின் அருகில் மாப்பிள்ளை தோழனாய் நின்று கொண்டிருந்தான். அவனை அலங்கார நிலையம் அழைத்து செல்வது, உடை அணிய உதவுவது, அடிக்கடி பழச்சாறு கொடுத்து கவனித்து கொள்வது, வியர்க்கும் முகத்தை கைகுட்டையால் ஒன்றியெடுப்பது இப்படி மாப்பிள்ளை தோழனுக்கு என்று வரையறுக்கப் பெற்ற அத்தனை வேலைகளையும் அவன் பொறுப்பாய் நிறைவேற்றிக் கொண்டிருந்தான். 
அருளுக்கு நிலுவை வழக்குகளின் விசாரணை தேதிகள் தொடர்ந்து இருந்ததால், அவரால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் மகன் மூலம் திருமண பரிசாய் மணமக்களுக்கு அவர்களின் முதல் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மோதிரத்தை திருமண பரிசாய் அனுப்பியிருந்தார். 
இவர்களின் அலுவகலத்தில் இருந்து பெரும்பான்மையானோர் திருமணத்திற்கு வந்திருந்தனர். அதில் இசையும் அடக்கம். அவ்வப்போது கவியை நெருங்குவதும், மீண்டும் தன் அலுவலக தோழிகளை தஞ்சமடைவதும் என இசை மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்தாள். 
இசையும், அமுதனும் ஒருவரை  மற்றவர் அறியாமல் பார்வையால் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் உன்னை கவனிக்கிறேன் என்பதை இருவரும் வெளிப்படையாய் காட்டிக் கொள்ளவில்லை. 
ரியாஸ் கவியின் திருமணம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. ஆக இவர்கள் அலுவலக மேலாளர் ரத்தோட் வழக்கம் போல சுற்றுலா திட்டம் ஒன்றை தீட்டினார். அனைவரும் ஒரு மனதாக, மணமக்களை வாழ்த்தும் கையோடு, அப்படியே முதுமலை காட்டிற்குள் இரண்டு நாள் பயணத்தை திட்டமிட்டிருந்தனர். 
சென்னையிலிருந்து அனைவரும் சொகுசுப் பேருந்தில் பயணித்து திருச்சியை அடைந்திருந்தனர். அமுதன் அவர்களுக்கு முன்னதாக திருச்சி வந்திருந்தான். நண்பனின் சார்பில் அவர்களை உபசரிப்பதும் அமுதன் பொறுப்பாயிற்று. 
முதலில் அவன் சுற்றுலா செல்ல மறுத்தான். ரியாஸ் தான் அவனை சுற்றுலா செல்ல வற்புறுத்தினான். நண்பனிடம் ஒரு கட்டத்திற்கு மேல் மறுத்து பேச வழியில்லாத அமுதன் சுற்றுலா செல்ல ஒப்புக் கொண்டான். 
திருமணம் முடிந்து, விருந்துண்டதும், அலுவலக நண்பர்கள் தங்கள் பரிசை கொடுப்பதற்காய் மேடை ஏறினர். அதுவரை மேடையில் நின்றுக் கொண்டிருந்த அமுதன், அப்போது தான் வந்திருந்த பரிசுகளில், விலை உயர்ந்தவற்றை மணமகனின் அறைக்குள் வைக்க சென்றான். 
ஒட்டு மொத்த அலுவகமும் அவனுக்காய் காத்திருக்க, அறையிலிருந்து வெளிபட்டவன், “வந்துட்டேன்..’’ என பலமாய் குரல் கொடுத்தபடி வசீகர புன்னகையை இதழில் தேக்கி, வேகமாய் மேடையை நோக்கி நடந்தான். 
அவனின் அந்த செயலில், இசையின் இருதயம் லயம் தப்பி ஒலித்தது. இவனும் அருகில் வர, வர்ண காகித உருளையை வெடித்தும், பனி கூல் மழை பொழிந்தும், அவர்கள் தங்களின் பங்களிப்பில் வாங்கிய பரிசினை ரியாஸ், கவியிடம் வழங்கினர். 
ரத்தோட் ரியாசை கட்டி அணைத்து தன் வாழ்த்தை தெரிவிக்க, பெண்களும் ஆண்களுமாய் அவர்களை கட்டி அணைத்து வாழ்த்து மழையை பொழிந்தனர். வாழ்த்தியவர்கள் வரிசையாய் கீழே இறங்கி இருக்க, இறுதியில் இசையும், அமுதனும் மட்டுமே மீதமிருந்தனர். 
இசையை கட்டி அணைத்த கவி, “பெஸ்ட் ஆப் லக். எல்லா நேரமும் உன் ஈகோவை பிடிச்சிட்டு தொங்காதே.’’ என்றாள் ரகசியமாய் காதோடு. 
அமுதனை லேசாய் அணைத்த ரியாஸ், “டேய்…! என்னடா தொப்பை இப்படி இடிக்குது. பிரியாணி புல் கட்டோ…! சரி சரி… இந்த முறை நான் சோறு  போட்டேன்ல… சோ நீ டூர் முடிஞ்சி வரும் போது எனக்கு கல்யாண சோறு போடணும். நானும் உன்னை மாதிரி புல்லா சாப்பிட்டு போய் என் பொண்டாட்டிய கட்டிப் பிடிச்சா இப்ப நான் சொல்ற மாதிரி அப்ப அவ தொப்பை இடிக்கிதுன்னு சொல்லணும். டீல் ஓகே.’’ என்றான் லேசாய் கண் சிமிட்டி. 
ரியாசின் பேச்சில் லேசாய் அவன் தோளில் தட்டிய அமுதன், “டேய்.. ஒரு பழமொழி சொல்வாங்க தெரியுமா..? அடியேன்னு சொல்ல பொண்டாட்டி இல்லையாம். அவன் பிள்ளைக்கு பேர் வச்சானாம். அந்த மாதிரி கவி உன்னை நிமிந்து பாத்து பேசவே எத்தனை மாசம் ஆகப் போகுதோ..? இதுல உனக்கு தொப்பை இடிக்குற கற்பனை வேற. கொஞ்சம் கம்மியா பீல் பண்ணு மச்சி..!’’ என்றான் சிரிப்போடு. 
அசடு வழிய சிரித்த ரியாஸ், “அப்படியெல்லாம் அபசகுணமா சொல்லக் கூடாது. நம்பிக்கை வேணும். அதானே மச்சி எல்லாம்.’’ என்றான் நகைக் கடை விளம்பரம் போல. 
அப்போதும் சிரித்தவன், “உனக்கு சோறு வேணா கேளு. அஞ்சப்பர்ல ஆர்டர் பண்ணிக்கலாம். அதுக்காக எல்லாம் என்னை காலம் முழுக்க அரஸ்ட்டாக சொல்லாத.’’ என்றவன், கவியிடம், “வறேன்மா.’’ என்றுவிட்டு மேடையை விட்டு கீழிறங்க துவங்கினான். 
அவன் கடைசியாய் பேசிய வரிகளை இசை கேட்டிருந்தாள். ஆக அவன் பின்னே நடந்தவள், “அப்போ நீங்க சில்லு வண்டா..?’’ என்றாள். 
இவள் எதற்கு தன்னிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறாள் என புரியாத அமுதன், நின்று அவள் முகம் பார்க்க, “இல்ல கல்யாணத்துல சிக்கமாட்டேன்னு உங்க பிரண்டுகிட்ட லக்சர் கொடுத்துட்டு இருந்தீங்க இல்ல. அதான் கேட்டேன். வடிவேல் சொல்வாரே சிங்கம் சிக்கும். சில் வண்டு சிக்காதுன்னு.’’ 
வாசக சாலை அறிமுகத்திற்கு பிறகு, கூடல் வாசிப்பு நிகழ்வில் பங்கேற்க செல்லும் போதெல்லாம், இசையிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவான். இசையும் அதற்கு பதில் சொல்வாள். உரிமையோ, கேலியோ, நட்போ எதுவுமே அவள் குரலில் வெளிப்படாது. ஆக அமுதனும் தன் குரலில் எதையும் வெளிப்படுத்திக் கொள்ள முனையமாட்டான்.   
அப்படி கோடிட்டு நிற்பவள், முதல் முறையாக சிறு கேலிப் பேச்சை வெளிப்படுத்த, அமுதன் அப்படியே உறைந்து நின்றான். அவள் கேள்விக்குறியாய் புருவம் உயர்ந்த தெளிந்தவன், “சிங்கத்தை விட சில்வண்டு தான் காதலிக்கிறதுல கில்லாடின்னு போன வாரம் அகநானூறு பாடல்ல வாசிச்சோமே மறந்துடுச்சா…?” என்றவன் அவள் முகத்தை ஊன்றி பார்க்க, அந்த பாடலின் நினைவில் இசையின் முகம் செவ்வர்ணமானது. 
அதற்குள் பேருந்தில் ஏறியிருந்தவர்கள் இவர்களை நோக்கி குரல் கொடுக்க, இசை அமுதனை முந்திக் வேக வேகமாக நடந்தாள். அவனின் பலமான கேலி சிரிப்பு அவளை துரத்தி வந்தது. 
வழமை போல, பாட்டு நடனம் என்று உற்சாக கொண்டாட்டமாய் பயணம் துவங்கியது. சென்ற முறை போல் அல்லாமல், இசை ஆட்டத்திலும், பாட்டத்திலும் பேருந்தை அசரடித்து பயணத்தை தொடர்ந்தாள். 
அவளின் கொண்டாட்டத்தை ரசனை மிகு விழிகளால் படமெடுத்தபடி, கைகளை தட்டிக் கொண்டு அமுதன் தன் பயணத்தை தொடர்ந்தான். விடியற்காலையில் பேருந்து முதுமலையை தொட்டபோது கிட்டத்தட்ட அனைவரும் உறங்கியிருன்தனர். 
அரை குறையாய் விழித்தவர்கள், தங்களுக்கென பதிவுசெய்யப்பட்ட அறையை அடைந்ததும் மீண்டும் உறக்கத்தை தழுவினர். அனைவரும் எழுந்து, தயாராகி, உணவருந்தி, அந்த நாளுக்கான வெளி சுற்றலை துவங்கும் போது நேரம் காலை பதினொன்றை நெருங்கி இருந்தது. 
இவர்களுக்கு வனத்தை சுற்றிக் காட்ட, பிரத்யேக வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. வந்திருந்த இருபத்தியோரு பேரும் எழுவர் எழுவராய் மூன்று வாகனங்களில் ஏறிக் கொண்டனர். 
கொஞ்சம், கொஞ்சம் இடைவெளிவிட்டு அந்த வாகனங்கள் பயணத்தை துவக்கின. அமுதனும், இசையும் மூன்றாவது வாகனத்தில் இருந்தனர். அடர் வனத்தின் பசுமையை ரசித்தபடி அனைவரும் பயணத்தை மேற்கொண்டனர். 
முதலில் இவர்களின் கண்களுக்கு விருந்தானது புள்ளி மான். மானை கண்டதும் வண்டியை ஓரமாய் நிறுத்தி, அவரவர் தம் செல்லிடை பேசிகளில் புகைப்படங்களை எடுக்க துவங்கினர். 
வண்டியிலிருந்து அடிக்கடி இறங்க வேண்டாம் என ஓட்டுனர் எச்சரித்தும் யாரும் அவரின் சொற்களை காதில் போட்டுக் கொள்ளவில்லை. “அண்ணா ஒரு போட்டோ… ப்ளீஸ்…!’’ என கெஞ்சி காரியம் சாதித்துக் கொண்டிருந்தனர். 
அமுதன் வண்டியை விட்டு இறங்கவில்லை என்றாலும், புள்ளி மானாய் உற்சாகம்  பொங்க புகைப்படம் எடுக்கும் இசையின் மகிழ்விற்காய் வேண்டி மறுப்பு ஏதும் சொல்லாது அமைதியாயிருந்தான். 
அடுத்து மீண்டும் சற்று தூரம் உள்நோக்கி பயணித்ததும் இவர்கள் காட்டெருமையை கண்டனர். இப்போது யாரும் வாகனத்தை விட்டு இறங்க முனையவில்லை. தொலைவிலிருந்து அதை கண்டு ரசித்தனர். 
இப்படி வரிசையாய் இவர்கள்  விலங்குகளை கண்டபடி பயணித்தனர். சற்று தூரம் பயணித்ததும், இவர்களின் கண்களுக்கு காட்டு யானைக் கூட்டம் ஒன்று தென்பட்டது. 
குட்டியும், பெரிதுமான யானைகள் சாலையை கடந்து காட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தது. குட்டியானையை கண்டவர்கள் கீழே இறங்க ஆர்பரித்தனர். ஓட்டுனரும் சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தினார். 
இது எங்களுக்கு வழக்கம் தான் என்பதை போல யானைக் கூட்டம் இவர்களை கண்டு கொள்ளாமல் தங்கள் பயணத்தை தொடர்ந்தது. ஆனால் அப்போது தான் பிறந்திருந்த குட்டியானை இவர்களின் புறம் ஒரு பார்வையும், தன்னை வழி நடத்தும் தாயின் துதிக்கையில் ஒரு பார்வையுமாய் சென்று கொண்டிருந்தது. 
யானைகள் கூட்டமாய் செல்லும் அழகை, இசை விழி விரித்து பார்த்திருந்தாள். யானைக் கூட்டம் கண்ணில் இருந்து மறையவும், அங்கிருந்த வித்யாசமான மலர்கள் அவர்களின் கவனத்தை கவர தொடங்கியது. 
அந்த மலரை கண்ட ஓட்டுனர், “இது குறிஞ்சி பூ. பனிரெண்டு வருசத்துக்கு ஒரு முறை பூக்கும்னு சொல்லுவாங்களே அந்தப் பூ. நீங்க எல்லாம் ரொம்ப லக்கி.’’ என்றவர் கொஞ்சம் பூக்களை பறிக்கக் தானும் கீழே இறங்கினார். 

Advertisement