ரியாசின் கல்யாண விடயம் அவர்கள் அலுவலகத்தில் கசிந்ததும், ஒட்டு மொத்த அலுவலகமே அவனை ஓட்டி தள்ளியது. எந்நேரமும் ரியாசின் முகம் லேசாய் சிவந்த வண்ணத்தில் தான் இருந்தது. 
‘இது தான் புது மாப்பிள்ளை கலை போல’ என்று அமுதன் கூட அந்த முகத்தை மகிழ்வாய் ரசித்திருந்தான். ரியாஸ் திருமண செய்தி அறிந்த நான்காம் நாள் பிரகாஷ் அமுதனை அலைபேசியில் அழைத்தார். 
இவன் வழக்கம் போல ஏதேனும் உதவி தேவையாயிருக்கும் என்ற எண்ணத்தில் அலைபேசியை இயக்கி காதில் வைக்க, மறுபுறம் பிரகாஷ் மிக உற்சாகமாக பேசினார். வழமையான முகமன் விசாரிப்புகளுக்கு பிறகு, தான் அழைத்த நோக்கத்தை வெளிப்படுத்தினார்.  
“அமுது… நம்ம செல்வா டைரக்ட் பண்ண மூணு படமும் லைனா ஹாட்ரிக் ஹிட் கொடுத்துச்சு இல்ல. இப்ப அவன் இங்க நம்ம காலனியில இருக்க எல்லா பிள்ளைகளும் எல்லா விதமான புக்கையும் படிச்சி வளரணும்னு ஒரு வாசக சாலை ஒன்னை ஆரம்பிச்சி இருக்கான். போன வாரம் பாடலாசிரியர் விவேகா வந்திருந்தார். அன்னைக்கு கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்  நினைவு நாளாம். அதனால வந்த எல்லாரும் அவரோட சிறப்பான கவிதையை உருக்கமான குரல்ல வாசிச்சு காட்னாங்க. 
சொன்னா நம்ப மாட்டா. நாலு முறை நான் அழுதேன் அமுது. வாழ்கையில மொதோ முறையா படிக்க தெரியாததுக்கு அப்படி ஒரு வருத்தம் உண்டாச்சு. ஆனாலும் அவங்க வாசிக்கிறதை கேக்கும் போது அப்படி ஒரு சந்தோசம் மனசெல்லாம். 
நாளைக்கு சினிமால நிறைய பாட்டெழுதின முத்துகுமாரோட நினைவு நாளாம். இந்தவாட்டியும் சினிமால பாட்டெழுதுற யாரோ ஒருத்தர் தலைமை தாங்க வர்றாங்களாம். 
நிறைய எழுதுறவங்க, வாசிக்கிறவங்க, படிக்கிறவங்க எல்லாரும் வருவாங்க. எனக்கு என்னமோ நீயும் வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. வேலை முடிஞ்சா வீட்ல சும்மா தான இருப்ப. நாளைக்கு ஒரு எட்டு நம்ம வாசக சாலைக்கு வந்துட்டு போ அமுது.’’ என்று வாஞ்சையாய் அழைத்தார். 
அமுதனுக்கு அத்தனை ஊறிய வாசிப்பு பழக்கம் கிடையாது. பெரியார், அம்பேத்கார் போன்றோர் பற்றிய சில கட்டுரைகளை வாசித்துள்ளான். என்னவோ இந்த கவிதை மீதெல்லாம் அவனுக்கு அத்தனை ஈர்ப்பு இல்லை. 
ஆனாலும் பிரகாசின் அழைப்பை தட்டிக் கழிக்க மனமின்றி, “சரிண்ணா… நான் வரேன். நீங்க அழறதை நான் பார்த்ததே இல்லையே. அதுக்காகவாவது வறேன்.’’ என்றான் லேசான கேலி குரலில் இழையோட. 
அவனின் நோக்கம் புரிந்தாலும், “டேய் படவா…! நானே அழுதுட்டேன். எதுக்கும் நீ ரெண்டு கர்சீப் கொண்டு வா. இல்லைனா சட்டை நனைஞ்சிட போகுது.’’ என்று திருப்பி தாக்கிவிட்டே அழைப்பை துண்டித்தார். 
அமுதன் இதழ் நிறைந்த புன்னகையோடு அலைபேசியை வைத்தான். என்னவோ, அவனுக்கு இவரோடு பேசும் போதெல்லாம் அருள் அம்மாவின் நினைவு வரும். 
இப்போதெல்லாம் அருள் இவனிடம் அதிகம் பேசுவதில்லை. இவனே முயன்றால் கூட, வெறும் உம் கொட்டுதலோடு தான் உரையாடலை நகர்ந்தி செல்கிறார். முதலில் விடாப்பிடியாய் முயன்று கொண்டிருந்த அமுதன், தற்சமயம், அவர் விரும்பும் போது பேசட்டும் என்று விட்டுவிட்டான். 
மறுநாள் மாலை பணி முடிந்ததும், வீட்டிற்கு சென்றவன், குளித்துவிட்டு உடை மாற்றி, உற்சாகமாய் விசிலடித்தபடியே வாசக சாலை நோக்கி கிளம்பினான். 
என்னவோ நெடு நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு உற்சாக மன நிலை வாய்த்திருந்தது அன்றைக்கு. பிரகாஷ் குறிப்பிட்ட இடத்தை அடையும் போது, ‘கூடல்’ என்று வெளிப்புறம் பெயர் பலகை தாங்கிய வாசல் அவனை வரவேற்றது. 
அவன் தயங்கியபடியே உள் நுழைய, பிரகாஷ் அவனை வாசலிலேயே வரவேற்றார். உள்ளே அந்த வாசக சாலை பெரிதாய் நீண்டிருந்தது. இருபுறமும், வரிசையாய் மர அடுக்குகள் நீண்டிருந்தன. அது அத்தனையிலும் தடிமனான பல புத்தகங்கள் வீற்றிருந்தன. 
புத்தக அலமாரிகளுக்கு கீழே நீண்ட சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அங்கே பல இளைஞர்கள் புத்தகங்களை பிடித்தபடி  தங்களுக்கு வசதிப்பட்ட இடத்தில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார்கள். 
இவனின் பார்வையில் வியப்பை கண்ட பிரகாஷ், “இங்க இருக்க புத்தகம் எல்லாம் நிறைய பேர் டொனேட் பண்ணது அமுது. இன்னும் கொஞ்ச நேரத்துல வாசிப்புக்கு தலைமை தாங்குறவர் வந்துடுவார். அவர் வர வரைக்கும் எல்லாரும் இப்படி தான் ஏதாச்சும் படிச்சிட்டு இருப்பாங்க. நீயும் வேணா போய் ஏதாச்சும் எடுத்து படி.’’ என்றார். 
அந்த இடத்தில் சூழ்ந்திருந்த அமைதி, அத்தனை பாந்தமாய் இருந்தது. சம்மதமாய் தலை அசைத்தவன் உள் நோக்கி நடந்தான். ‘பெரியார்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கண்ணில் பட அதை கையில் எடுத்துக் கொண்டு அமுதனும் தரையில் அமர்ந்தான். 
எத்தனை நேரம் கடந்ததோ அமுதன் அறியான். திடீரென அங்கு சலசலப்பு தோன்றியது. அமுதன் தலை நிமிர்ந்து பார்க்க, இயக்குனர் செல்வாவோடு, இளம் பாடலாசிரியர் உமா அரங்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தார். 
ஆங்காங்கு அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் இப்போது அவர்களை நோக்கி நடந்தனர். வாசக சாலையின் இருபக்க சுவர்களிலும் நிறைய சாளரங்கள் இருந்தமையால் தாரளாமாய் தென்றல் உள் நுழைந்து அனைவரையும் ஆரத் தழுவி சென்றது. 
அமுதன் தானும் அந்த கூட்டத்தினை நோக்கி சென்றான். அதற்குள் யாரோ கவிஞர் முத்துக்குமார் அவர்களின் நிழற்படத்தை அங்கிருந்த மேஜை மீது கொண்டு வந்து வைத்தார். 
சிறப்பு விருந்தினர்கள் அந்த புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியதும் நிகழ்ச்சி துவங்கியது. தலைமை தாங்கும் பாடலாசிரியர் நடுவில் அமர்ந்ததும், அவருக்கு நேராய் இருவரிசையில் கவிதை அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அமர்ந்தனர்.  
 
அனைவரும் அமர்ந்த பின்பு அனைவரிடமும் ஒரு மெழுகுவர்த்தி கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. இன்னும் அதை ஏற்றும் போது தான் அமுதன் தனக்கு எதிரே அமர்ந்திருந்த இசையின் முகத்தை கண்டான். 
அவனுள் ஒரு மின்னல் தாக்க, இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இசையும் விழியுயர்த்தி அமுதனை பார்த்தாள். அமுதனுக்கு உச்சி மண்டையில் பாய்ந்த மின்னல் இசையின் பாதம் வழியே தன் பயணத்தை துவக்கியது. 
இவர்கள் தங்களுக்கான உலகில் ஆழ்ந்திருக்க, பாடலாசிரியர் தன் உரையை துவக்கினார். அந்த புறவொலி அவர்களின் மாய வலை அறுத்து, மீண்டும் அவர்களை நடப்பிற்கு திருப்பியது. 
இருவரும் ஒன்றே போல மையம் நோக்கி தங்கள் பார்வையை திருப்பினர். “எல்லாருக்கும் வணக்கம். வாழ்கையை எழுத்தா சொல்லி காலங் காலமா அதுக்கு உருவம் கொடுத்து உலவ விடுறவன் தான் எழுத்தாளன். ஆனா அதுக்கும் மேலான வேலை செய்றவன் தான் கவிஞன். அவன் வெறும் கருப்பும் வெள்ளையுமா எதையும் சொல்ல மாட்டான். அந்த எழுத்துக்கு மேல இயற்கையோட எல்லா நிறத்தையும் எடுத்து தன் கற்பனையால பல நிறம் கொடுப்பான். அதனால தான் அவன் வார்த்தையை வாசிக்கும் போது நாம வாழ்க்கையோட எல்லா வர்ணத்தையும் நம்ம கண் வழியா பாக்குறோம். அப்படி ஒரு அற்புதமான கவிஞருக்கு நடக்குற அஞ்சலில கலந்துக்குறதுல ரொம்ப பெருமைபடுறேன். இனி அவரோட எழுத்துகளை அவர் குரலா நீங்க வாசிக்கப் போறதை இங்க வீசுற காத்து பொக்கிசமா உள் இழுத்து வச்சிக்கும்னு நம்புறேன். வாசிப்பை தொடங்கலாம்.’’ என தன் உரையை உருக்கமாய் முடித்தார்.    
அவர் அனுமதி கிடைத்ததும், முதலில் இருந்த வாசகன் தனக்கு மிக பிடித்த அவரின் காதல் கவிதைகளை மிக உருக்கமாய் வாசித்து காட்டினார். அனைவரும் இதயம் உருக அதை கேட்டு ரசித்தனர். 
அவர் முடிக்க காற்றில் எழுந்த கரவொலி அடங்க சற்று நேரம் எடுத்தது. அந்த கவிதை குறித்த தன் பார்வையை பாடலாசிரியரும், அவருக்கு இடப்புறம் அமர்ந்திருந்த, இயக்குனரும் பதிவு செய்து முடிக்க, அதற்கடுத்து இருந்த வாசகன் கவிதையை தொடர்ந்தார். 
அவர், பெட்டிகடையில் அப்பா உருகொண்ட மனிதரிடம் சிகரெட் வாங்கும் போதெல்லாம் கைகள் நடுங்கும் ஹைக்கூ கவிதையை பதிவு செய்ய மீண்டும் காற்றில் கரவொலி. 
அளவில் சிறிய கவிதை தான். ஆனால் அது வெளிபடுத்தும் உணர்வுகள் மிகப் பெரிது  என்பதை அமுதன் அப்போது உணர்ந்தான். மீண்டும் அழைப்பாளர்கள் கருத்துக்கு பின் கவிதை உற்சவம் தொடங்கிற்று.
இப்படி காதல், நட்பு, உணர்வு, உறவு என்று கவிதை பயணம் நீண்டது. அமுதனின் கண்கள் சில கவிதைகளால் கலங்க, கைதுணியை எடுத்து துடைக்க தோன்றாமல் வாசிப்பவர் வெளிபடுத்தும் குரலோடு கரைந்திருந்தான். 
இப்படி கவிதைகளின் நகர்வு வரிசை, இசையிடம் வந்து நின்றது. அவள் தான் வாசிக்கப் போகும் கவிதைக்கான முன்னோட்டத்தை துவங்கினாள். “எல்லா அப்பாவும் தன்னோட குழந்தைகளை விரல் பிடிச்சு தான் நடக்க சொல்லி கொடுப்பாங்க. ஆனா இவர் தன் மகன் தமிழ் பிடிச்சி வாழணும்னு நினைச்சார் போல. சீக்கிரம் இந்த உலகத்துல இல்லாம போயிடுவோம்னு தெரிஞ்சி இருக்குமோ என்னவோ தெரியாது. அவன் வாழ்நாளுக்கு எல்லாம் தேவையான வார்த்தையை ஒரு கடிதமா வடிச்சி வச்சிட்டு போய்ட்டார். நான் இப்ப அந்த கடிதத்தை தான் வாசிக்கப் போறேன். கட்டுரை தொகுப்போட பேர் ‘அணிலாடும் முன்றில்.’ ” என சொல்லி முடித்தவள் தன்னுடைய கடிதத்தை வாசிக்க துவங்கினாள். 
‘அன்புள்ள மகனுக்கு….’ என தொடங்கிய கடிதம், அவன் வாழ்வில் வாலிப பருவம் தொடங்கி, பேரன் பெயர்த்தி எடுத்த பின்பும் அவன் தந்தை நினைவு வருமாயின் அந்த கடிதத்தை எடுத்து படிக்க சொன்னது. அன்று அவன் கண்களில் இரு துளி கண்ணீர் வடிந்தால் அவன் தந்தையின் பேரன்பை உணர்ந்தவனகிறான் என்று முடிந்தது. 
அதை வாசிக்கும் போதே இசையின் கண்கள் கலங்கி குரல் மாறுபட துவங்கியிருந்தது. இரண்டு பத்திகள் கடந்த போது, அவள் ஒரு கேவலை வெளிப்படுத்த, அதற்கு மேல் தாமதிக்காத அமுதன் எட்டி, அவள் கைகளிலிருந்த புத்தகத்தை தான் வாங்கி அவள் விட்ட இடத்திலிருந்து வாசித்தான். 
இசை தன் தாயை வார்த்தைகளில் கண்டவள். இக்கடிதம் அவளுள் ஏற்படுத்தும் உணர்வு பிரவாகத்தை அமுதானால் நன்றாக உணர முடிந்து. அமுதன் தன் வாழ்நாளில் தந்தை என்ற உறவையே உணராதவன். ஆனால் அக்கடிதம் உணர்வுகளின் ஆழிப் பேரலையை உருட்டிவிட்டது. 
அந்த கடிதம் முடிந்த போது, அமர்ந்திருந்த அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர். முத்துகுமார் அது தன் மகனுக்கு மட்டும் எழுதிய கடிதமாய் அதை காணாமல், ஒவ்வொரு மகனுக்கும் எழுதிய கடிதமாய் அதை கண்டார்கள். அந்த கடிதம் எழுதிய தந்தையின் விரல் இப்போது இங்கில்லை என்ற நிஜம் அவர்களை சுட்டது. 
அரங்கம் பேரமைதியில் மூழ்கியது. மௌனமான கண்ணீர் தமிழின்  அஞ்சலியாய் அங்கு உதிர்ந்து கொண்டிருந்தது. ஒரு வழியாய் மீண்ட சிறப்பு அழைப்பாளர் தன் கருத்தை முடிக்க, மீண்டும் கவிதை பேரலை அங்கு துவங்கிற்று. 
நிகழ்ச்சி முடிந்த பின்பு, கூட்டம் அமைதியாய் கலைந்தது. இழந்த கவியின் துக்கம் அனைவரின் நெஞ்சத்தையும் அடைந்திருந்தது. இசை வெளியே நின்றிருந்த தன் வாகனத்தை நோக்கி நடந்தாள். 
அவளின் புத்தகம் தன் கையிலிருக்க, அதை கொடுப்பதற்காய் அமுதன் அவளை நோக்கி நடந்தான்.
“இசை…’’ அவனின் மெல்லிய அழைப்பில் இசை திரும்பினாள். “உன்னோட புக்…’’ அவன் நீட்ட, நீரில் மிதந்த பெருங் கண்கள் கொண்டு அவனைப் பார்த்தவள், அவன் கையிலிருந்த புத்தகத்தை அர்த்தத்தோடு பார்த்தாள். 
“நீங்க இந்த புக்கை முழுசா படிச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். கொண்டு போய் படிங்க. நான் அடுத்த வாரம் வரும் போது வாங்கிக்கிறேன்.’’ என்றாள் சலனமே இல்லாத குரலில்.
எதற்கு அப்படி சொல்கிறாள் எனப் புரியாத போதும், ‘சரி’ என்று மண்டையை உருட்டினான் அமுதன் தன்னை போல. 
சலனமாகும்.