Advertisement

சலனம் – 26 
அடித்து செல்லும் பேரருவியில் சிக்குண்ட நிலை அமுதனுக்கு. தாயின் கேள்விகளை முழுதாக உள்வாங்கி அவன் ஒரு முடிவெடுப்பதற்குள் ஒரு மணி நேரத்தில் அருள் ஊருக்கு கிளம்பியிருந்தார். 
செல்லும் முன், “உன் லைப் உன் கைல. எப்பவும் என்னை சந்தோசப்படுத்தனும்னு எதுவும் செய்யாத. உனக்கு எது சந்தோசத்தை தருமோ அதை செய்.’’ என்று விட்டு கிளம்பியிருந்தார். 
அருளின் வார்த்தைகளில் அமுதனை விட சிந்தனைக்கு உள்ளானவன் ரியாஸ் தான். அமுதன் தனக்கிருந்த பிரச்சனைகளில் அப்போது ரியாசின் மாற்றத்தை உணரவில்லை. 
அருள் அம்மா ஊருக்கு கிளம்பி சென்று முழுதாய் ஒரு மாதம் ஓடியிருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் அமுதனும், இசையும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. 
உண்மையில் அவர்கள் அதை விரும்பவில்லை. இருவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்த குற்ற உணர்ச்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதே பொருத்தமாக இருக்கும். 
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. வெட்டி முறிக்க வேலை எதுவும் இல்லாததால் அமுதன் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தான். அந்த நேரம் வீட்டின் வாயில் மணி அழைக்க, சற்று சலிப்புடனே எழுந்து சென்று கதவை திறந்தான். 
வெளியே ரியாஸ் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியின் சாயலை உணர்ந்த அமுதன் அவனை வீட்டிற்குள் அனுமதித்தான். 
உள்ளே நுழைந்த ரியாஸ், தன் கையில் இருந்த நெகிழிப் பையை பிரித்து, அதிலிருந்த சில, பல பத்திரிக்கைகளை டீபாயின் மீது பரப்பி வைத்தான். இவன் எதற்கு இதை இங்கு கொண்டு வந்தான் என அமுதன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே,
“மச்சி..! இதுல ஒரு நல்ல டிசைனா செலக்ட் பண்ணுடா. ஈவ்னிங் போறப்ப பிரிண்ட் பண்ண கடையில கொடுக்கணும்.’’ என்றான். 
‘ஒருவேளை அவன் தங்கையின் திருமணத்திற்கு பத்திரிகை அடிக்கிறானோ’ என்று நினைத்த அமுதன் உடனே அந்த நினைப்பை புறம் தள்ளினான். ஏனெனில் அவன் வெளிநாட்டில் இருக்கும் பொழுது தான் ரியாசின் தங்கை திருமணம் நடந்து முடிந்திருந்தது. 
எதிரே இருந்த சோபாவில் அமர்ந்த அமுதன், ஒவ்வொரு பத்திரிகையாய் கையில் எடுத்து பார்த்துக் கொண்டே, “யாருக்கு மாப்பிள்ளை கல்யாணம். நீ இவ்ளோ தீயா வேலை பாக்குற அளவுக்கு.’’ என்றான். 
ரியாஸ் வாயெல்லாம் பல்லாக, “எனக்கு தான் மச்சி…!’’ என்றான் அதிரடியாய். அவனின் பதிலில் அமுதனின் கையிலிருந்த பத்திரிக்கை நழுவி தரையை முத்தமிட்டது. 
“என்னடா சொல்ற…?’’ அமுதன் அதிர்ந்து போய் பார்க்க, லேசாய் முகம் சிவந்த ரியாஸ், “பொண்ணு பேரை கேட்டன்னு வை மச்சி. இன்னும் ஜெர்க் ஆயிடுவ.’’ என்றான் கண் சிமிட்டி. 
“டேய்…! போதும் நிப்பாட்டு. நீ பொண்ணு பேரை சொல்லும் போது ஜெர்க் ஆவுறேனோ இல்லையோ… நீ மூஞ்சில காட்ற ரியாக்சன் பார்த்து வாமிட் பண்ணிடுவேன் போல. பா… என்ன கன்றாவி ரியாக்சன்டா…’’ என்றான் எரிச்சலாய். 
“அதெல்லாம் புது மாப்பிளைக்கு வர வெட்கம் மச்சி. இப்பலாம் எந்தப் பொண்ணு வெட்கப்படுது. எனக்கு தான் கல்யாணத்துக்கு அப்புறம் நடக்கப் போற மேட்டர்லாம் நினச்சி வெட்கம் வெட்கமா வருதுடா…’’ என்றவன் இரு கைகளினாலும் முகத்தை மூடிக் கொண்டான். 
“அடி செருப்பால. நாயே…! என்ன கடுப்பேத்த காலங் காத்தால கிளம்பி வந்து இருக்கியா. ஒழுங்கா கிளம்பி ஓடிடு. இல்ல… குளிக்க இப்ப தான் ஹீட்டர் ஆன் பண்ணி வச்சேன். சுடு தண்ணிய பிடிச்சி மூஞ்சில ஊத்திடுவேன்.’’ என்றான் கடுப்பாய். 
தன் முகத்தில் இருந்து கைகளை எடுத்துக் கொண்ட ரியாஸ், “ஒரு புது மாப்பிள்ளையை பீல் பண்ண விடுறியா. இதுக்கு பெரு தான் ஸ்டமக் பர்னிங். சரி போய் என் மூஞ்சில ஊத்துறதா சொன்ன சுடு தண்ணியில எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு கொண்டு வா போ…’’ என்றான். 
“ரொம்ப ஓவரா போறடா…’’ என்று வெளியே குரல் கொடுத்தாலும் அமுதன் அமைதியாக நண்பனுக்கு குளம்பி தயாரிக்க சென்றான். நண்பனுக்கு திருமணம் என்றதும் அவன் அடி மனதிலும் ஒரு மகிழ்ச்சி பூத்திருந்தது. 
இருவருக்குமான காபி கோப்பைகளை அமுதன் எடுத்து வர, நண்பர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு கோப்பையை கைப்பற்றிக் கொண்டனர். அமுதன் ஒரு கையில் காபி கோப்பையை வைத்துக் கொண்டே டீபாயின் மீதிருந்த பத்திரிக்கை மாதிரிகளை பார்வையிட்டான். 
அதில் இரண்டு பன்னீர் ரோஜாக்கள் முத்து சரத்தினால் கோர்கப்படுவதை போன்ற, முகப்பினை கொண்ட பத்திரிகையை கையில் எடுத்தவன், மீண்டும் நன்றாக ஆராயும் பார்வையை அதன் மீது செலுத்திவிட்டு, “இது நல்லா இருக்கு மச்சி…!” என்று நண்பனை நோக்கி நீட்டினான்.
நண்பன் நீட்டிய பத்திரிகையை பெற்றுக் கொண்ட ரியாஸ், “எனக்கும் இதான் மாப்பிள்ளை பிடிச்சி இருந்தது. இந்த ரெண்டு ரோஸ்ல எங்க பேர் வர மாதிரி போட்டா இன்னும் செமையா இருக்கும்ல.’’ என்றான் கனவுகள் வழியும் விழிகளோடு. 
“நல்லா தான் இருக்கும்.’’ என்று சின்ன சிரிப்போடு நண்பனை வழி மொழிந்த அமுதன், “அது சரி. யாருடா அது… உன்கிட்ட ஏமாந்த பொண்ணு. இந்த 90 கிட்ஸ்க்கு வாழ்க்கை கொடுக்கப் போற அந்த 2கே கிட்ஸ் யாருடா மச்சி.?’’ என்றான். 
அமுதனின் சிரிப்பு இப்போது ரியாசையும் தொற்றியிருந்தது. மீண்டும் வெட்கத்திற்குள் அமிழ தயாராயிருந்த முகத்தை கடினப்பட்டு இயல்பாக்கி, “எல்லாம் உனக்கு தெரிஞ்ச நம்ம ஆபிஸ் கிட் தான். யாழிசை பிரண்ட் கவிதாவை தாண்டா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.’’ என்றான் மகிழ்வாய். 
 
அந்தப் பெயரை கேட்ட அமுதன் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றுவிட்டான். ரியாசின் குடும்பம் எத்தனை மார்க்கப்பற்றுள்ளவர்கள் என்பதை அமுதன் அறிவான். ‘அவர்கள் எப்படி ஒரு இந்துப் பெண்ணை…’ அமுதனின் தொடர் சிந்தனையை தடை செய்வதை போல, ரியாஸ் பேசினான். 
நண்பனின் முகத்திலிருந்தே அகத்தை படித்தவன், “முதல்ல நானும் உன்னை மாதிரி தாண்டா நினச்சேன். எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. அதோட நிறைய பிராக்டிகல் டிபிகல்டீஸ் பேஸ் பண்ணனும். எல்லாத்தையும் விட என்னோட மத நம்பிக்கையை என்னால விட்டு தர முடியாது. அதே போல அவ மேல எதையும் திணிக்கவும் முடியாது.’’ என்றவன் கால் நீட்டி சோபாவில் முதுகை முட்டுக் கொடுத்து, வசதியாய் அமர்ந்தான். 
‘அப்புறம் எப்படி கல்யாணம் என்ற எல்லை வரை துணிந்தான்.’ என்று அமுதன் பார்த்திருக்க, “என்னையே அப்படி உத்து உத்து பாக்காதடா. எல்லாம் எப்படி மாறுச்சுன்னா… உங்க அம்மா உன்னை இசை வீட்டுக்கு கூட்டிட்டு போய் ரெண்டு பேரையும் லெப்ட், ரைட் வாங்கினாங்க இல்ல. அந்த கேள்வியெல்லாம் என்னை பார்த்து கேட்ட மாதிரியே இருந்துச்சி. 
நானும் கிட்டத்தட்ட உன்ன மாதிரி தான். நீ காதலை சொல்லிட்டு அப்புறம் இசை வேண்டாம்னு சொன்னது ஒதுங்கிப் போன. நான் சொல்லாமலேயே மனசுக்குள்ள வச்சி ஏங்கி ஏங்கி ஒதுங்கிப் போனேன். 
அருள் அம்மா கிளம்பின அடுத்த ரெண்டு நாள் நான் ஆபிஸ் வரல. அது உனக்கு நியாபகம் இருக்கா. அப்ப நேரா திருச்சிக்கு தான் போனேன். கவி வீடு எதுன்னு கண்டுபிடிச்சி ஒரு நாள் தூரத்துல இருந்து வாட்ச் பண்ணிட்டு இருந்தேன். 
அவங்க அப்பா ஆபிஸ் போற டைமை தெரிஞ்சிக்கிட்டு நேரா அவர் முன்னாடி போய் நின்னேன். அவர் பொண்ணோட ஆபிஸ்ல கூட வேலை செய்றேன்னு சொன்னதும் பக்கத்துல இருந்த கேண்டீனுக்கு கூட்டிட்டு போனார். 
நான் ரொம்ப தயங்கி தயங்கி தான் என்னோட லவ் பத்தி சொன்னேன். என் லைப்ல இதுக்கு முன்னாடி அப்படி ஒரு திகிலை நான் அடைஞ்சதே இல்ல. அவர் மூஞ்சி ரொம்ப இறுக்கமா மாறுச்சு. 
நான் பயந்து போய் பார்த்துட்டு இருக்கும் போதே, “செம ஹாப்பி நியூஸ் மாப்பிள்ளை. அப்புறம் கல்யாணத்தப்ப மட்டன் பிரியாணி உண்டு தானே.’’ அப்படின்னு கேட்டார். அதுக்கு அப்புறம் தான் ரொம்ப நேரம் பிடிச்சி வச்சிருந்த மூச்சையே நான் விட்டேன்னா பார்த்துக்கோ.’’  என்றவன் அந்த நாளின் நினைவில் மலர்ந்து சிரித்தான். 
இப்போது பெரிதாய் சிரித்த அமுதன், “அடேய் மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு கவி அப்பா, அவர் பொண்ணையே உனக்கு கொடுக்க முடிவு எடுத்துட்டரா…? ஒரு வகையில உன் மாமா உன் இனமடா மச்சி…! இனி நீங்கள் பிரியாணிக் குடும்பம் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள்…!’’ என்று கையுயர்த்தி சொன்னவன் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தான். 
எதிரே அமர்ந்திருந்தவனின் தொடையில் தட்டிய அமுதன், “ரொம்ப ஓட்டாதடா…! என் கல்யாணத்துக்கு வந்தா நீ மட்டும் என்ன பிரியாணிய மோந்து பார்த்துட்டு போயிருவியா…? பாய் வீட்டு பிரியாணினா வாய் ஊறுறது சகஜம்டி மாப்பிள்ளை. ஓவரா எங்க மாமனார் இமேஜை டேமேஜ் பண்ண… என் கல்யாணத்துல உனக்கு மட்டும் சாம்பார் சோறு போட்டு துரத்திருவேன் தம்பி.’’ என்றான் லேசாய் மிரட்டும் தொனியில். 
“சரி… சரி விடு. நாம பிரியாணிக் கதையை அப்புறம் பேசலாம். நீ உன்னோட மிச்சக் கதையை சொல்லு.’’ என்று ஊக்கினான் அமுதன். 
வெளிர் ரோஜா நிறத்திலிருந்த தன் நகக் கண்களை அழுத்தியபடி, இதழ்கள் லேசாய் புன்னகையில் மலர்ந்திருக்க ரியாஸ் தன் மிச்சக் கதையை தொடர்ந்தான். 
காதல் ஓர் ஆண் மகனை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை கண்ணால் கண்டு கொண்டிருந்தான் அமுதன். 
“கவி அப்பா குடும்பம் மூணு தலைமுறையா கம்யூனிஸ்ட் குடும்பம்டா. அவங்க வீட்ல கல்யாண வழமையே சுய மரியாதை திருமணம் தானாம். என்னோட மதம் பத்தி அவருக்கு எந்த பிரச்னையும் இல்ல. கவிகிட்ட கலந்து பேசிட்டு சொல்றதா சொன்னார்.’’ 
“சூப்பர் மச்சி. அப்புறம் என்ன எல்லாம் சுபம் தானே. அது சரி உங்க வீட்ல என்ன சொன்னாங்க…?’’ என்றான். 
நண்பனை பார்த்து கண்ணை உருட்டிய ரியாஸ், “நிஜமான பிரச்சனையே அதுக்கு அப்புறம் தாண்டா ஆரம்பிச்சது.’’ எனவும் அவர்கள் வீட்டில் மறுப்பு பலமாயிருந்ததோ என்ற சிந்தையில் சுருங்கியது அமுதனின் முகம். 
ஆனால் அதற்கு முற்றிலும் புறம்பான ஒரு கதையை சொல்லத் தொடங்கினான் ரியாஸ். “கவி அப்பா சம்மதம் கிடைச்சதும், அன்னைக்கு நைட்டே எங்க வீட்ல பேச முடிவு செஞ்சிட்டேன். வாப்பா கடையில இருந்து வர நேரத்துக்காக காத்திட்டு இருந்தேன். 
அவர் நைட் தொழுகை முடிச்சதும் நேரா அவர் ரூம் முன்னாடி போய் நின்னேன். ஒரு வார்த்தை தான் சொன்னேன்… ‘வாப்பான்னு’ அவர் மூஞ்சி சிவந்து கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு. 
இத்தனை நாள் நான் எவ்ளோ பெரிய தப்பை பண்ணிட்டு இருந்தேன்னு அப்ப தான் புரிஞ்சது. கொஞ்ச நேரம் கழிச்சி குரலை செருமிட்டே ‘சொல்லுப்பா’ அப்படின்னு சொன்னார். 
இத்தனை நாள் பேசாம என்னோட சுய நலத்துக்காக அவர் முன்னாடி வந்து நிக்குற மாதிரி எனக்கு அசிங்கமா இருந்தது. ஆனா அவர் அந்த மாதிரியெல்லாம் நினைக்கலை. 
என் பக்கத்துல வந்து, என் கையை பிடிச்சிட்டு, ‘அல்லா கடைசியா என் மகனை என்கிட்ட பேச வச்சிட்டார்.’ அப்படின்னு சொன்னார். அன்னைக்கு வாப்பாகிட்ட எதுவும் கேக்க தோணல. அதனால அமைதியா அவர் கூடவே இருந்தேன். 
மறுநாள் அவர் கூடவே கடைக்கும் கிளம்பினேன். உம்மா என்னை ரொம்ப வித்யாசமா பார்த்தாங்க. அங்க தான் அப்பாகிட்ட கவி பத்தி பேசினேன். கொஞ்ச நேரம் அவர் எதுவுமே பேசல. 
அடுத்த நாள் வாப்பாவுக்கும், உம்மாவுக்கும் சரியான சண்டை. அவங்க அப்படி சண்டை போட்டு நான் பார்த்ததே இல்ல. அன்னைக்கு எங்க வீட்டுக்கு மூத்த ஹஜ்ரத் எல்லாம் வந்தாங்க. 
பொண்ணை எங்க மதத்துக்கு மாத்தினதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணலாம்னு அவங்க சம்மதம் சொன்னாங்க. அப்புறம் தான் அம்மா கொஞ்சம் சமாதானம் ஆனாங்க.  
எங்க வீட்ல பர்மிசன் கிடைச்சதும் மறுபடி நான் கவி அப்பாவுக்கு போன் பண்ணினேன். அவர், “தாலி இல்லாம… மத சடங்கு இல்லாம கல்யாணம் பண்ணலாம்னு நான் எப்படி உறுதியா நம்புறேனோ.. அதே மாதிரி தானே உங்க வீட்லயும் ஒரு கல்யாண வழி முறையை வச்சி இருப்பாங்க. அதனால எனக்கு பெருசா எந்த தடையும் இல்ல. உங்க வீட்டுக்காக, அவங்க முன்னாடி பேர் மாத்தி வச்சிகிறது எல்லாம் பெரிய விஷயம் இல்ல. ஆனாலும் நீங்க இதை பத்தியெல்லாம் கவிகிட்ட ஒரு முறை பேசிடுங்க.’’ அப்படின்னு சொன்னார். 
அப்பாடா எல்லா பிரச்சனையையும் சமாளிச்சிட்டோம் அப்படின்னு நினச்சிட்டு நான் கவிக்கு போனை போட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் தான் உண்மையான பிரச்சனை ஸ்டார்ட் ஆச்சு. 
அப்ப தான் இதுவரை என் லவ்வை அவகிட்ட சொல்லவே இல்லைன்னு புரிஞ்சது. எப்படி பேசினாலும் கவியை மலை இறக்கவே முடியல. நான் என்ன சமாதானம் சொன்னாலும், 
“ஏன் மறுபடி உன் பிரண்ட் லவ்வுக்கு தூது போகணுமா. இந்த முறை உங்க ப்ராசஸ் டைம் ரொம்ப அதிகமோ. அதான் என்னை கல்யாணம் பண்ணி பக்கத்துல வச்சிக்கலாம்னு நினைகிறீங்களா..?’’ அப்படின்னு கேட்டா. 
ஆரம்பத்துல அவ சொல்ற மாதிரி இசையை தெரிஞ்சிக்க தான் அவகிட்ட பேசிட்டு இருப்பேன். ஆனா என் மனசுக்கு தெரியும் நான் அவ கூட பேச்சை வளர்க்க தான் இதெல்லாம் பண்றேன். 
கடைசியா கவி பின்னாடி ஹச் டாக் மாதிரி சுத்தி தான் ஒரு வழியா கல்யாணத்துக்கு அவ சம்மதம் வாங்கினேன். கல்யாணத்துக்கு மட்டும் தான் சம்மதம் கிடைச்சி இருக்கு.
அவளை பொறுத்தவரை இது அரேஞ் மேரேஜ் மாதிரி தானாம். அவளுக்கு எப்ப தோணுதோ அப்ப லவ் பண்ணுவாளாம். அது வரைக்கும் நான் பொறுமையா வெயிட் பண்றதா இருந்தா என்னை கல்யாணம் பண்ணிகிறதா சொல்லிட்டா. 
எனக்கு என் கவி என் பக்கத்துல இருந்தாலே போதும்னு இருக்கு. அதனால அவளோட எல்லா கண்டீசனுக்கும் ஓகே சொல்லிட்டேன். கல்யாணம் முடிஞ்சும் எத்தனை நாள் கன்னிப் பையனா சுத்தனுமோ தெரியலையே.’’ ரியாஸ் இம்முறை வெளிப்படையாய் புலம்ப அமுதன் வெடித்து சிரித்தான். 
“உனக்கு இதெல்லாம் தேவை தாண்டா. பெரிய தூதுப் புறா இவரு. ஒழுங்கா முன்னாடியே அந்தப் பொண்ணுகிட்ட லவ்வை சொல்லிட்டு அப்புறம் அவங்க வீட்டுக்கு பேச போக வேண்டியது தான. ஆனா நீ தலைகீழா செஞ்சாலும் எல்லாம் நேராகிடுச்சு. மச்சக்காரன் தாண்டா நீ. வாழ்த்துகள் மச்சி…!’’ என்றான் உள மகிழ்வோடு. 
ரியாஸ் ஒரு மென் புன்னகையில் நண்பனின் வாழ்த்தை ஏற்றான். சற்று நேரம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ரியாஸ் கிளம்பும் சமயம், “இசைகிட்ட பேசிப் பாருடா’’ என்றான் வேண்டுதலாய். 
அமுதன் அதற்கு மறுமொழி ஒன்றும் சொல்லாது இறுகி நின்றான். இதற்கு மேல் இவனிடம் தன் சொற்கள் எதுவும் எடுபடாது என உணர்ந்த ரியாஸ், “சரிடா… நான் கிளம்புறேன். காலம் எல்லாத்தையும் ஆத்தும், மாத்தும்னு சொல்லுவாங்க. அது உனக்கும் நடக்கும்னு நம்புறேன்.’’ என்றவன் நண்பனின் தோள்களில் தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். 
தன் கண் முன்னால் மறையும் நண்பனின் முதுகை பார்த்தபடி சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தபடி அமர்ந்தான் அமுதன். ‘என் வாழ்வில் எதுவும் எப்பவும் ஆறாது’ என்று எண்ணிக் கொண்டவன் சமைப்பதற்காய் எழுந்தான். 

Advertisement