Advertisement

அடுத்து இசையும் தன் பணியை தொடர, தங்கள் வீட்டை உறவினர் ஒருவரின் மேற்பார்வைக்கு விட்டவர், சென்னையில் வாடகை வீடு பார்த்து தங்கள் இருப்பிடத்தை அங்கே மாற்றினார். அந்த யோசனையை அவருக்கு வழங்கியதே ஷாலினி தான். 
ஷாலினி இசையுடன் மேலே விழுந்து பழகவில்லையே தவிர, அவள் தேவைகளை யாரின் கவனத்தையும் கவராமல் அமைதியாய் கவனித்துக் கொண்டார். 
அதுவே இசையை ஈர்க்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவரோடும் இயல்பாக பழக துவங்கினாள். தன் தோழியே தன்னிடம் திரும்பி வந்ததை போல அதன் பிறகு ஷாலினி இசையை கொண்டாட துவங்கிவிட்டார். 
இரட்டை சகோதரிகள், ஜெனியும், ஷைனியும் அன்பான தாய், தந்தையின் உறவில் திளைத்து வளர்ந்தவர்கள். ஆக அவர்கள் எப்போதும் உற்சாக குதிக்கும் பந்துகளாகவே அந்த வீட்டில் வலம் வருவர். 
அவர்களின் கலாட்டாவில் இசை இரண்டே வாரத்தில் அவர்களின் குழுவில் இணைந்து விட்டாள். இரவில் மகள்களை மொட்டை மாடி அழைத்து சென்று நட்சத்திரங்களை காட்டும் தந்தை, ஞாயிறு மாலைகளில் கடற்கரைக்கு அழைத்து செல்வார். 
விடுமுறை நாட்களில் காலையிலிருந்தே வீடு விளையாட்டு அரங்கம் போல இரண்டுபடும். இறகு பந்து, கைப்பந்து, கால்பந்து என வெளி அரங்கு விளையாட்டு முதல், சுண்டாட்டாம், சீட்டு, சதுரங்கம் என உள் விளையாட்டு போட்டிகளும் கலை கட்டும். 
ஒவ்வொரு விளையாட்டிலும் வெற்றி பெறும் மகள்கள் தங்களின் வெற்றியை புள்ளியில் குறித்துக் கொள்வார்கள். ஐம்பது புள்ளியை எட்டிவிட்டால் தந்தை அவர்கள் கேட்கும் பரிசை வாங்கி தர வேண்டும். அது அவர்களின் வழக்கம். 
சில நாட்களில், ஷாலினை கூட்டு சேர்த்துக் கொண்டு, தந்தையை தோற்கடித்து, அவரை சமையல் அறையில் நிறுத்தி தங்களுக்கு பிடித்ததை சமைக்க சொல்லி மகள்கள் அடாவடி செய்வர். 
எப்போதும் ஞாயிறுகளில் அவர்கள் குடும்பமாக தேவாலயங்களுக்கு செல்லும் போது, முதலில் வீட்டில் தேங்கியிருந்த இசையும், அவர்களோடு பழக துவங்கிய பின்னர் அவர்களோடு தானும் இணைந்து கொண்டாள். 
ராஜ் மகளுக்கு பிடித்த பூஜை அறையை அவளுக்கு பிடித்த இடத்தில் அமைத்துக் கொடுத்தார். முதலில் இவளை வைத்து கொண்டு அவர்கள் அசைவ உணவை உண்ண தயங்க, இசை, மெல்ல மெல்ல அந்த உணவுப் பதார்த்தங்களின் மணத்திற்கு தன்னை பழக்கியவள், பின்பு அவர்களோடு இணைந்து ஒரே உணவு மேஜையில் உண்ண தொடங்கினாள். 
முதலில் ராஜ் பெருமளவு தயங்க, “பா… ஸ்கூல்ல எல்லாம் பிரண்ட்ஸ் நான் வெஜ் கொண்டு வந்தா மூஞ்சை சுழிச்சிட்டு தனியா போய் உக்காந்து சாப்பிடுவேன். அது எவ்ளோ தப்புன்னு இப்போ தான் புரியுது. மத்தவங்க சாப்பிடுற உணவை இது தப்புன்னு கிரிடீசைஸ் பண்ண எனக்கு என்ன உரிமை இருக்கு. நாம எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடுற சந்தோசத்தை இந்த சின்ன விசயத்துக்காக எல்லாம் நான் இழக்க விரும்பல.” என்றாள் தெளிவாய். 
ராஜிற்கு எந்த அளவிற்கு கடலில் கப்பலின் மேல் விருப்பமோ, அந்த அளவிற்கு நிலத்தில் இரு சக்கர வாகனங்களின் மேல் விருப்பம். இரண்டு மகள்களும் கல்லூரிக்கு எடுத்து செல்லும் வாகனமே புல்லட் வகையாக இருக்க, இசை முதலில் ஆச்சர்யமாக தான் அதை பார்த்தாள். 
ஆனால் அவள் தந்தை அவளுக்கும் கனரக வாகனங்களை இயக்க சொல்லிக் கொடுக்க, அவளுக்குமே அந்த வேகமும், அந்த வாகங்களை பயன்படுத்தும் போது வரும் உற்சாகமும், நம்பிக்கையும் அத்தனை பிடித்திருந்தது. 
அதன் பிறகு ஒருநாள் விளையாட்டு மைதானத்தில், சில வாலிபர்கள் பைக் ஸ்டன்ட் செய்வதை இசை விழிகளில் வியப்போடு, ஆர்வமாய் பார்த்திருக்க, மகள் அறியாது அவர்களை பற்றி விசாரித்தவர், அடுத்த நாள் காலையில் மகளை அழைத்துக் கொண்டு பிரகாசின் முன் வந்து நின்றார். 
முதலிலேயே பிரகாஷிற்கும், இசைக்கும் அறிமுகம் உண்டென்பதால், அவர் இவளிடம் இயல்பாக உரையாட, ராஜ் மகளை கேள்வியாய் பார்த்தார். பின்பு மகள் ஏற்கனவே தங்களின் அறிமுகம் பற்றி எடுத்துரைக்க, அதன் பிறகு, ராஜும் பிரகாஷோடு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 
இசை பைக் ஸ்டன்ட் பழக பிரியப்படுகிறாள் எனவும், பிரகாஷ் முதலில் மறுக்கவே விரும்பினார். ஏனெனில் அவர் குழுவில் உள்ள அனைவரும் ஆண்கள். ஆனால் ராஜின் கண்களில் கண்ட உறுதியில் பிரகாஷ் கற்று தர சம்மதித்தார். 
அதன் பிறகு அதிகாலை பயிற்சிக்கு ராஜ் தான் மகளை அழைத்து வந்தார். முதல் ஒரு வாரம், அவள் செல்லும் இடம் பாதுகாப்பானது தானா என்று உறுதி செய்து கொண்டவர், அதன் பின் மகளை சுயமாக சென்று வர அனுமதித்துவிட்டார். 
மூன்று மகள்களுக்கும் அவர் சில தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுத்திருந்தாலும், இரவு நேரங்களில் மகள்களை தனியாக பயணிக்க அனுமதிக்கமாட்டார். ஏனெனில் நம் நாட்டின் நிலை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். ஆக இரவில் மகள்கள் எங்கே சென்றாலும் வீட்டிற்கு அழைத்து வருவது அவரே. 
இப்படி சிறு வயது முதலே கூட்டுப் புழு பருவத்திலிருந்த இசை,  பட்டாம்பூச்சியாய் தன் வாழ்வை சிறகடித்து வாழ ஆரம்பித்திருந்தாள். இடையில் அவர்கள் இருமுறை இசையின் பாட்டி வீட்டிற்கும் சென்று திரும்பினர். 
பேத்தியின் முகத்தில் வழிந்த உற்சாகத்தை கண்டவர், இனி அவள் வாழ்வை அவள் தந்தை பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதியில், இசையிடம் இதுவரை தான் மூடி வைத்திருந்த அன்பை பொழிந்தார். 
பானுவும், இசையிடம் தென்பட்ட மாற்றங்களில் நிம்மதியாகிப் போனார். என்ன தான் வாழ்வு இசைக்கு இனிமையில் கழிந்தாலும், அவ்வப்போது அமுதனின் நினைவுகள் துளிர்க்கவே செய்யும். 
முதலில் அந்த புகைப்படம் வெளி வந்த சமயத்தில் அதிர்ச்சியில் இருந்தவள் அது பற்றி ஒன்றும் பெரிதாய் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் இயல்பா பிறகு, ஒரு நாள் ராஜ், அருள் அவரை தேடி வந்து சொல்லிப் போன தகவல்களை மகளிடம் தெரிவிக்க, அதுவரை அந்த புகைப்பட பிரக்ஞையின்றி இருந்தவள் அதன் பிறகே அதன் காரணகர்த்தா யார் என்று சிந்திக்க துவங்கினாள். 
அமுதனையும், தன்னையும் தவிர அந்த நேரத்தில் அங்கு யாருமின்றிப் போக, இது நிச்சயம் அமுதனின் செயலாக மட்டுமே இருக்க முடியும் என்று தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தவள், அதன் பிறகு அவனின் மேல் கோபத்தை வளர்த்துக் கொள்ள துவங்கினாள். 
ஏனெனில் அவள் மட்டும் தானே அறிவாள். அந்த புகைப்படம் எத்தனை நிதர்சன உண்மையென்று. ஆனாலும் அவள் அடிமன ஆழத்திலிருந்து அவளால் அவனை முழுமையாக வெளியேற்றவும் முடியவில்லை. 
முக்கியமாய் மாதா மாதம் வந்த இயற்கை சுழற்சியே அவன் நினைவுகளை உள்ளுக்குள் விசிறி விட்டு செல்லும். ‘அன்று என்னை அப்படிப் பார்த்துக் கொண்டானே. அவன் அன்பு எப்படிப் பொய்யாகிப் போனது…?’ என பல நாட்கள் உள்ளுக்குள் கலங்கி தவித்து இருக்கிறாள். 
ஆறு மாதங்கள் கழித்து அவன் திரும்பி வந்த நாளை அலுவலகத்தின் மூலம் அறிந்தவள், எத்தனை முயன்றும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவரும் அறியாமல் அவனை காண விமான நிலையம் சென்றாள். 
அங்கு அவளின் கல்லூரியில் இளவலாக படித்த ஒருவன், அமுதனை அழைத்து செல்ல வந்திருப்பதை கண்டவள், அவனை அனுப்பி விட்டு, தான் அவனை அழைத்து செல்ல முனைந்தாள். உடல் முழுதும் இருந்த கவச உடையால் அவனால் அவளை இனம் காண முடியவில்லை. 
ஆனால் இசை வண்டியின் வேகத்தை அதிகரிக்கும் போதெல்லாம், அமுதன் அவள் தோளை இறுக்கிப் பிடித்து, தன் பயத்தை வெளிக்காட்ட அது என்னவோ இசைக்கு அத்தனை உற்சாகத்தை கொடுத்தது. இன்னும் இன்னும் வேகமாய் வாகனத்தை இயக்கி, அவனை தன் முதுகில் பல்லியாய் தொற்ற வைத்திருந்தாள். 
அதன் பிறகு அவனிடம் சென்று பேச வேண்டும், நியாயம் கேட்க வேண்டும் என்று அவள் உள் மனம் உந்திக் கொண்டே தான் இருந்தது. ஆனால் இசைக்கு அவன் முகத்தை கண்டாலே காதல் மட்டுமே கட்டுக்கடங்காமல் பொங்க, கோபம் என்பதோ கோடையில் எட்டிப் பார்க்கும் கண் துடைப்பு மழையாய் லேசாய் தூறிவிட்டு சென்றுவிடும்.
அந்த ஆற்றாமையில் தன்னை தானே வளர்ந்தவள், அமுதனை சென்று காண கூடாது என்று முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவனிடம் விளக்கம் கேட்கவும் பிடிக்கவில்லை. அதே சமயம் அவனை வெறுக்கவும் அவளால் முடியவில்லை. 
அவள் நிலை இப்படி இரு தலைக் கொள்ளி எறும்பாய் இருக்கையில் தான் அமுதன் அவளை சந்தித்தது. அப்போது கூட இசை முதலில், தன்னையும் மீறி, ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…?’’ என்று தன் மனதை திறந்திருந்தாள். 
ஆனால் அடுத்த நொடியே அவனின் செயல்கள் நினைவிற்கு வர, இசை உக்கிரமான வார்த்தைகளை பொழிந்து அவனை சினம் கொள்ள செய்தாள். ஆனால் உடனே அவன் கண்களில் தென்பட்ட வலி, அது அவளுக்கும் உள்ளத்தை கசக்கிப் பிழியும் உணர்வை தான் தந்தது. 
ஆயினும் கண் முன் கண்ட புகைப்படம் ஒருபுறம், ‘நான் அப்படியா…’ என கண்களால் கேள்வி கேட்கும் அமுதன் ஒருபுறம், இரண்டிற்கும் இடையில் போராட முடியாமல், இசை வழமையாய் தன் உற்சாக குடும்பத்தின் அன்பின் கதகதப்பில் வந்து ஒடுங்கிக் கொண்டாள். 
அவளுக்கு தற்சமயம் எதையுமே சிந்திக்கப் பிரியமில்லை. ஆனால் அவள் பிரியங்கள் குறித்தெல்லாம் கவலை கொள்ளாது, கையில் சிலம்பில்லாதது ஒன்றே குறையாய், அருள் அமுதனுக்கான நியாயம் வேண்டி இசை வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார். 
சலனமாகும்.

Advertisement