Advertisement

சலனம் – 24
அமுதனுக்கு அன்றைய பொழுது வழமையாய் தான் விடிந்தது. தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காபி கோப்பையை வாங்கியவன், அதை பருகும் போது, தன்னுடைய அலைபேசியை எடுத்து நோண்ட துவங்கினான். 
அவன் அலைபேசியையில் இணைத்ததும், ‘டிங்’ என்ற ஒலியோடு நிறைய புலன செய்திகள் எட்டிப் பார்க்க, வரிசையாய் ஒவ்வொன்றாய் திறந்து பார்த்து வந்தவன், இசை அனுப்பிருந்த புகைப்படத்தை கண்டதும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றான். 
கிளம்புவதற்காய் மகனை புகைவண்டியில் முன் பதிவு பயண சீட்டை பதிய சொல்லி கேட்டுக் கொண்டிருந்த அருள் மகனின் செய்கையில் துணுக்குற்று அவன் அருகில் வந்தார். 
மகனின் பார்வை அலைபேசியில் நிலை குத்தியிருக்க, “டேய்….! என்ன..?’’ என்றார் அவன் தோளை தட்டி. 
தாயின் தொடுகையில் நடப்பிற்கு திரும்பியவன், ‘ஒன்றும் இல்லை’ எனும் விதமாய் தலையை ஆட்டிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான். அருளும் நேற்றிலிருந்து அவனை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறார். மகனிடம் எதுவோ சரியில்லை என்பதை அவரது உள்ளுணர்வு அவருக்கு உணர்த்திய படி தான் இருந்தது. 
மகனிடம் பேச வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டவர், பின் தன் சமையல் வேலைகளை கவனிக்க துவங்கினார். அறைக்குள் நுழைந்த அமுதன் ஆத்திரத்தில் தன் அலைபேசியை படுக்கையில் வீசி எறிந்தான். 
தலையை இரு கைகளிலும் அழுந்தப் பற்றியவன், அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தான். சொல்ல முடியா வலி இதயத்தை தாக்க, ‘ஒற்றை புகைப்படம் போதுமா அவளுக்கு என் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையை குலைக்க’ என மனம் வேதனை கொள்ள சற்று நேரம் விழிகளை அழுந்த மூடி அப்படியே அமர்ந்திருந்தான். 
கன்னத்தில் சூடான உவர் நீர் வழிய, அப்போதே தான் அழுவதை உணர்ந்தவன், கண்ணீரை துடைத்து விட்டு, எழுந்தான். உள்ளம் முழுதும் பொங்கி வழியும் எரிமலைக் குழம்பாய் தகிக்க வீசி எறிந்த அலைபேசியை தேடி எடுத்து ரியாசை அழைத்தான். 
இவன் காலையில் அழைக்கவும், சிறிது இடைவெளி விட்டே ரியாஸ் அழைப்பை ஏற்றான். இவன் அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றானோ இல்லையோ, அவன் ‘ஹெலோ’ என்ற வார்த்தையை சொல்லக் கூட இடைவெளி கொடுக்காதவன், “நீ எங்க இருந்தாலும் இன்னும் பத்து நிமிசத்துல எங்க வீட்ல இருக்க.’’ என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான். 
அமுதன் எதற்கு அழைக்கிறான் எனப் புரியாத ரியாஸ், ‘இவன் என்ன காலங் கத்தால போனை பண்ணி வா, வாங்குறான். என்னவோ பொங்கல் சுண்டல் செஞ்சி வச்சி இருக்க மாதிரி. இம்சை அரசன். அங்க போயிட்டு அவங்க அம்மாவை சமச்சி தர சொல்லிட வேண்டியது தான்.’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், அமுதன் சொற்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளலாமல், குளித்து, அலுவலகம் செல்லும் உடையில் தயாராகி அவனின் வீட்டிற்கு சென்றான். 
அதுவரை அமுதன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ரியாசை கண்டதும் அருளின் முகம் யோசனைக்கு சென்றாலும், “வாடா ஸ்நாக்ஸ் டப்பா.’’ என்று வழக்கம் போலவே வரவேற்றார். 
ரியாஸ் அமுதன் எங்கே என்று வினவ, “ரூமுக்குள்ள இருக்கான் போய் பாரு.’’ என்றவர், வெண் பொங்கலின் தாளிப்பினை மேற் கொள்ள, அந்த வாசத்தில் கவர்ந்திழுக்கப்பட்ட ரியாஸ் ‘பேசாம சாப்பிட்டு போய் பார்ப்போமா’ என்று ஒரு நொடி சிந்திக்க தொடங்கிவிட்டான். 
ஆனாலும் அமுதனின் குரலில் இருந்த இறுக்கம், ரியாசை அவன் அறையை நோக்கி நகர்ந்தி இருந்தது. கதவை திறத்து இவன் உள்ளே செல்ல, இவனைக் கண்டதும் அமுதன் வேகமாய் எழுந்து வந்து அவனின் சட்டைக் காலரை பற்றினான். 
கண்களில் கனலோடு, “டேய்…! ஏண்டா என்கிட்ட சொல்லல. நேத்து என்னை அவ எவ்ளோ அசிங்கப்படுத்திட்டா தெரியுமா..? நீ கூட என்னோட பீலிங்சை புரிஞ்சிக்காம விளையடிட்ட இல்ல. இப்படியெல்லாம் நீ இல்லாதப்ப நடந்துச்சுன்னு நீ ஏண்டா என்கிட்ட சொல்லல.’’ என்று அவனை உலுக்கிக் கொண்டிருந்தான். 
ரியாசிற்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அவன் அமுதனின் செய்கையில் திகைத்து நின்று கொண்டிருக்க, ரியாசிற்கு காபியை கொண்டு வந்த அருள் மகனின் செய்கையை கண்டு திகைத்து போனார். 
தான் கொண்டு வந்த காபியை அருகிருந்த டீபாயில் வைத்தவர், “டேய்… தமிழு….! விடு அவனை… என்ன பண்ணிட்டு இருக்க நீ…?’’ என்று மகனின் பிடியில் இருந்து ரியாசை மீட்டார். 
அமுதன் வலி நிரம்பிய குரலில், “மா… உனக்கு தெரியாது மா. இவன் எதையெல்லாம் என்கிட்ட மறைச்சி இருக்கான் தெரியுமா…? அதனால நேத்து நான் எவ்வளவு அவமானப்பட்டு வந்து இருக்கேன் தெரியுமா…? 
ஒரு பொண்ணு என்னைப் பார்த்து கேக்குறா… நான் அவளை செட்யூஸ் பண்ணி அதை போட்டோ எடுத்து, பத்திரிக்கைக்கு கொடுத்து அது மூலமா அவ கல்யாணத்தை நிறுத்திட்டேனாம். பொதுவா பசங்க லவ் பண்ற பொண்ணு ஏமாத்திட்டு போனா மூஞ்சில ஆசிட் அடிப்பாங்களாம். ஆனா நான் அவ கேரக்டர் மேல ஆசிட் அடிச்சிட்டு போயிட்டேன்னு சொல்றாமா…? 
சொல்லுமா ஒரு பொண்ணோட மனசுல, உணர்வுல, நடத்தையில ஆசிட் அடிக்கிற மாதிரி தான் நீ என்னை வளர்த்தியா..? நேத்து அவ பேசின நிமிசத்துல இருந்து என் மனசுல நிம்மதியே இல்ல. ஏதோ அவ கல்யாணம் எப்படியோ நின்னு இருக்கு. அந்த கோபத்தை என் மேல வார்த்தையா கொட்டுறான்னு நினச்சேன். 
அவ என் மேல சுமத்தின குற்றத்துக்கு ஆதரமா அந்த போட்டோ வெளியான பத்திரிக்கையை எனக்கு அனுப்பி வச்சி இருக்கா.  இங்க இவ்ளோ நடந்து இருக்கு… இவன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம விட்டுட்டான். இதெயெல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தான்னா….”  
அமுதன் அடுத்த வார்த்தையை பேச அருள் அனுமதிக்கவில்லை. “சொல்லியிருந்தான்னா நான் அதை பண்ணலைன்னு அவ கால்ல விழுந்து கதறி இருப்பியா தமிழு.’’ என்றார் உக்கிரமாய். 
அமுதன் புரியாது விழிக்க, “நீ இதை செஞ்சி இருக்க மாட்டேன்னு அவளுக்கு தோணி இருந்தா… உன்கிட்ட விளக்கம் கேட்டு அவ வந்து நின்னு இருப்பா. அப்படி நம்பிக்கை இல்லாத பொண்ணை நினச்சி நீ ஏன் தமிழு உன்னை இவ்ளோ வருத்திக்கிற.’’ தாயின் வார்த்தைகள் சாட்டையடியாய் நிதர்சனத்தை உணர்த்த அமுதன் பேசும் தாயை இயலாமையுடன் பார்த்திருந்தான், ‘இதற்கு என்ன பதில் சொல்வது…?’ என்பதை போல. 
அருளின் முகத்தில் அமுதன் அதற்கு முன் அப்படி ஒரு கோபத்தை பார்த்ததேயில்லை. அவன் விழித்துக் கொண்டிருக்கும் போதே, “ரியாஸ் உன் வண்டியை எடு. எனக்கு உடனே இசையை பார்க்கணும்.’’ என்று விட்டு வாசல் நோக்கி நகர்ந்துவிட்டார். 
ரியாஸ், சற்று நேரம் அமுதனை பார்த்தவன், மீண்டும் அருள், “டேய் நீ வரியா..? இல்ல நான் ஆட்டோ  பிடிச்சி போகவா…?’’ என்று சொல்லியபடி தன் காலணிகளை அணிந்து கொண்டிருந்தவர். 
ரியாஸ் இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்தவன், தானும் அருளை பின்பற்றி வெளியே நடந்தான். அதுவரை சிலையென சமைந்திருந்த அமுதனும், அணிந்திருந்த உள் பனியன் மேலே, ஒரு டீ ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டவன் தானும் அவர்களை தொடர்ந்தான். 
இசையின் வீட்டில் அவள் தங்கைகளுக்கு கல்லூரி விடுமுறை என்பதால் இசை தானும் அலுவகத்திற்கு விடுப்புக் கொடுத்திருந்தாள். அவர்கள் குடும்பமாய் அமர்ந்து, சுண்டாட்டாம், ( கேரம்) விளையாடிக் கொண்டிருந்தனர். 
இரண்டு இரட்டை சகோதரிகளும் ஒரு கூட்டணியில் இருக்க, இசையும் அவள் தந்தையும் ஒரு அணி சேர்ந்து இருந்தனர். ராஜ் சிகப்பு காயை குறி வைத்திருக்க, “அப்பா…! மிஸ் பண்ணிடாதீங்க. பாலோ கூட ஈசியா இருக்கு. பாக்கெட் பண்ணுங்க.’’ என்று உற்சாகமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள். 
இவள் இப்படி குரல் கொடுக்க, மற்ற இரு சகோதரிகளும், “புஷ்… இஷ்… டஷ்…” என்று தங்கள் வாயில் வந்த வார்த்தைகளை மந்திரம் என உச்சரித்து அவர் அந்த காயை அடிக்க முடியாது என போலியாய் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தனர். 
ஆனால் அவர்கள் சொன்ன போலி மந்திரங்களை கடந்து ராஜ், அந்த சிகப்பு நிற காயை குழிக்குள் தள்ளி விட, இசை, “ஹே…’’ என உறச்சகமாய் கத்தியவள் தன் தந்தைக்கு ஹை பை கொடுத்தாள். 
இப்போது அவர் வெள்ளைக் காயை குறி வைக்க, மீண்டும் சகோதரிகள் தங்கள் மந்திர உச்சரிப்பை தொடர்ந்தனர். இம்முறை அந்த வெள்ளைக் காய் குழிக்குள் விழுவதாய் போக்குக் காட்டி மீண்டும் சுண்டாட்ட பலகையின் மீது வந்து நின்றது. 
இம்முறை இரட்டை சகோதரிகள் இருவரும், ‘ஹே…’ என்று ஒருவருக்கு ஒருவர் துள்ளலாக ஹை பை கொடுத்துக் கொண்டனர். இசை, “போங்கப்பா..’’ என்று சலித்தபடி தன் கையில் இருந்த சிகப்பு காயை மீண்டும் நடு வட்டத்தில் வைத்தாள். 
ராஜ் அவளின் சலிப்பிற்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார். அவருக்கு மூன்று மகள்களின் மகிழ்வும் மிக முக்கியம். இசை அவர்களோடு வந்து இணைந்த இந்த ஆறு மாதத்தில் அவள் வாழ்வே ஏதோ மந்திர குச்சியை சுழற்றினார் போல அத்தனை மகிழ்வாய் மாறிவிட்டது. 
முதலில் ராஜ் அவளை அழைத்து வந்த போது, இசையால் அங்கே ஒன்றவே முடியவில்லை. அவளுக்கு ஆரம்பத்தில் அந்த இல்லத்தில் துணையாய் இருந்தது ராஜ் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களே. 
முடிந்த அளவு அந்த புத்தகங்களோடு அறைக்குள் அடைந்து கொள்வாள்.  அதன் பிறகு பணியில் இணைந்தவள், வேலை செய்த இருப்பிடத்தை மற்றும் இன்னொரு கிளைக்கு மாற்றிக் கொண்டாள். இவளை தொடர்ந்து கவியும் இவள் பணிபுரிந்த கிளைக்கு வந்து சேர்ந்து கொண்டாள். 
தானுண்டு, தன் பணியுண்டு என்றிருந்தவளின்  மௌனம் உடைந்தது புத்தகங்களின் வாயிலாக தான். ஒரு முறை அவள் கையில் ஜெயகாந்தனின், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்.’ புத்தகத்தை கண்டவர் அது பற்றி அவளோடு விவாதிக்க, அதன் பிறகு மகளுக்கும், தந்தைக்கும் பேச்சு வார்த்தை கொஞ்சம் இயல்பாக துவங்கியது. 
அப்போது அவர்கள் சென்னையில் புதிதாய் குடியேறியிருந்தனர். இரட்டை மகள்களும், பொறியியல் இரண்டாம் வருடம் சென்னையில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு வரை தூத்துக்குடியில் பயின்றதால் அவர் தன் இருப்பிடத்தை தூத்துக்குடியில் நிரந்தரமாய் அமைத்திருந்தார். 

Advertisement