Advertisement

சலனம் – 23 
அமுதன் அழைத்த அலைபேசியை அப்படியே மௌனத்தில் ஆழ்த்திவிட்டு யாழிசையின் முகம் பார்த்தான். அவள் முகமோ கசப்பான உணர்வுகளை பிரதிபலித்து நின்றது. 
அவள் ஏன் தன்னிடம் அப்படி ஒரு முகபாவத்தை வெளிப்படுத்துகிறாள் என புரியாத அமுதன் அவள் முகத்தையே பார்த்திருக்க, “நான் இப்படியெல்லாம் உங்ககிட்ட கெஞ்சுவேன்னு நினச்சி தான நீங்க அப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு போனீங்க. நெவர். அது இனி எப்பவும் நடக்காது. ஆனா நீங்க செஞ்ச விசயத்துல நடந்த ஒரே நல்ல விஷயம் என் அப்பா எனக்கு திரும்ப கிடைச்சது தான். எனி வே அதுக்கு ஒரு தாங்க்ஸ். கொஞ்சம் வழியை விடுங்க நான் கிளம்பனும்.’’ என்றவள் அவனை சுற்றிக் கொண்டு நடந்தாள். 
அமுதனுக்கு யாழிசை பேசியது தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. ஆனால் தன்னை ஏதோ குற்றம் சுமத்துகிறாள் என்பதை உணர்ந்தவனின் கோபம் ஏக போகமாய் கிளறப்பட, “யாழிசை ஒரு நிமிஷம் நில்லுங்க.’’ என்று அவளை தன் உக்கிர குரலால் தடுத்து நிறுத்தினான். 
அந்த கடின குரல் அவனுக்கு பழைய அமுதனை நினைவூட்ட, யாழிசை திமிராய் நின்றாள். அவள் திரும்பி நிற்க, சுற்றி வந்து அவள் முன் நின்றவன், “இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு. சத்தியமா எனக்கு புரியல. நான் உங்களை லவ் பண்ணேன். பர்ஸ்ட் டீசன்ட்டா ப்ரோபோஸ் பண்ணேன். அப்பவும் என்னை உங்க வார்த்தையில அசிங்கப்படுத்தினீங்க. சரி இந்தப் பொண்ணே நமக்கு வேண்டாம்னு ஒதுங்கிப் போனேன். ரெண்டாவது டைம் நீயா நெருங்கி வந்து என்னை மறுபடி உன் பக்கம் இழுத்த. மறுபடி நான் ப்ரபோஸ் பண்ணப்ப என்னால லவ் மேரேஜ் பண்ணவே முடியாதுன்னு ஒரு டைரியை கொண்டு வந்து கொடுத்து ‘ஓ’ன்னு ஒப்பாரி வச்ச. அப்பவும் என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு அமைதியா ஒதுங்கிப் போனேன். ஒரு வேளை இப்படி நான் அமைதியா ஒதுங்கி ஒதுங்கி போறது தான் உன் பிரச்சனையா யாழிசை.’’ மரியாதைப் பன்மையில் துவங்கி, கோபத்தின் ஒருமையில் தன் வார்த்தைகளை கொட்டியிருந்தான் அமுதன். 
ஆனால் அவனை விட உக்கிரமாய் நிமிர்ந்தாள் இசை. கோபமாய் தன் கைகளை தட்டியவள், ‘சபாஷ் மிஸ்டர் அமுதன். சபாஷ்…! உங்க நடிப்புக்கு புதுசா ஒரு பெஸ்ட் பார்பார்மன்ஸ் அவார்ட் கொடுக்கவா..? எப்படி எப்படி உங்களுக்கு எதுவும் தெரியாதா..? 
பசங்க எல்லாம் பொதுவா பொண்ணுங்க லவ் பண்ணாட்டி மூஞ்சில ஆசிட் அடிப்பாங்க. நீங்க நேரா அடிச்சீங்க பாருங்க என் கேரக்டர் மேல ஆசிட். ரொம்ப நல்லவர் மாதிரி ஒதுங்கிப் போயிட்டு இந்தப் பக்கம் நைசா உங்க பிரண்டை வச்சி நம்ம போட்டோவை பத்திரிக்கையில வர வச்சி… சீ… நீங்க எவ்ளோ சீப் கேரக்டர்னு எனக்கு அப்ப தான் புரிஞ்சது. ஆனா எனக்கு இன்னும் ஒன்னு தான் புரியல. அந்த போட்டோ அதை எப்படி எடுத்தீங்க. எதிர்பார்த்து இருப்பீங்க. நிறைய கதை சொல்லி இருக்கோம். எப்படியும் இன்னைக்கு நைட் நம்மகிட்ட விழுந்துடுவான்னு இல்ல… நீங்க கேமரா செட் பண்ணிட்டு வந்து இருக்கீங்கன்னு தெரியாம நானும்….’’ என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, 
“நல்லவேளை முத்தத்தோட அன்னைக்கு நிறுத்திட்டீங்க. அதையும் தாண்டி ஏதாச்சும் நடந்திருந்தா இந்நேரம் அதையெல்லாம் ஏதாச்சும் ப்ளே பாய் புக்குக்கு அட்டைப்படம் போட குடுத்து இருப்பீங்க.’’ என்றவள் அடுத்த கணம் தன் கன்னத்தில் சுரீர் என்ற வலியை உணர்ந்தாள். 
வலித்த கன்னத்தை தாங்கியபடி அவள் நிமிர்ந்து பார்க்க, இதுவரை அவள் கண்டறியாத முக பாவனையை வெளிப்படுத்தி அமுதன் நின்றுக் கொண்டிருந்தான். 
விழிகள் கலங்கி சிவந்திருக்க, கை முஷ்டியை அவன் மடக்கியிருந்த விதமே அவன் கோபத்தை பறை சாற்ற போதுமாயிருந்தது. 
இவன் கொடுத்த அறை வெளிப்படுத்திய சத்தம் பிறர் கவனத்தை இவர்களின் பால் ஈர்க்க, அனைவரும் அதிர்ந்து நின்றனர். முதலில் அமுதனின் அருகே ஓடி வந்தது பிரகாஷ் தான். 
வந்தவர் அவனை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. முதலில் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன் பிறகே, “பொண்ணுங்களை கை நீட்றது என்ன பழக்கம் அமுதா. மன்னிப்பு கேளு முதல்ல அந்தப் பொண்ணுகிட்ட.’’ என்றார். 
அமுதன் நின்ற இடத்தில் அப்படியே சிலை போல நின்றான். “கேளுடான்னு சொல்றேன்..’’ மறுபடி பிரகாஷ் கையை ஓங்க, “அண்ணா…! வேண்டாம். இது எங்க சொந்தப் பிரச்சனை. நாங்க பேசிக்கிறோம். நீங்க எல்லாரையும் கூட்டிட்டு கிளம்புங்க.’’ என்றாள் இசை. 
“நீ நில்லு அண்ணா. அதெல்லாம் ஒரு ************ சொந்தமும் இல்ல. நீ நில்லு. நான் உன் கூட வரேன். உனக்கு கையால அடிக்கிறது மட்டும் தான் கண்ணனுக்கு தெரியுது. வாயல அடிக்கிறதை பார்த்தியா நீ.’’ என்றான் கலங்கிய குரலில். 
பிரகாஷிற்கு அமுதனை பல வருடங்களாக தெரியும். பெண்கள் விசயத்தில் அவனை ஒரு குறை சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு பெண்ணை கை நீட்டி அடித்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 
இது ஏதோ காதல் பிரச்சனை என்பதை நொடியில் ஊகித்தவர், “டேய்….! என்ன வார்த்தை மணக்குது. வக்கீல் அம்மா பையனாட்டம் பேச்சு இருக்கணும். என்ன தான் உங்களுக்குள்ள சண்டையா இருந்தாலும் மூணாவது மனுஷன் முன்னாடி விட்டுக் கொடுப்பியா நீ.’’ என்று சிரித்தபடி அவன் தோளில் தட்டியவர், இசையிடம் திரும்பி, “அப்பா வருவாராம்மா. இல்ல தனியா போகனுமா…?’’ என்றார். 
பிரகாஷ் சிரிக்கவும் சுற்றி இருந்தவர்கள் தங்கள் இயல்பிற்கு திரும்ப, டயர் மட்டும் கொஞ்சம் உக்கிரமாய் அமுதனை முறைத்துக் கொண்டிருந்தான். 
அமுதனின் கண்களில் கண்ட வலி யாழிசையை கொஞ்சம் நிதானப்படுத்தியிருந்தது. ஆனாலும் பத்திரிக்கையில் கண்ட அவளின் புகைப்படம் அவள் உள்ளத்தை உலைக்களமாகவே வைத்திருந்தது. 
‘இவன் எதுவுமே தெரியாத மாதிரி நடிப்பான். நான் நம்பணுமா…? போடா.’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், அவனை கோபமாய் முறைத்தபடியே, பிரகாஷிடம், “வருவார் சார்…!’’ என்றாள். 
“சரி வாம்மா. இங்க நடந்தது எதையும் பெருசுபடுத்த வேண்டாம். ஏதோ கோவம் கையை நீட்டிட்டான். அவன் சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்.’’ என்று சொல்ல, 
“அண்ணா… அவகிட்ட நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற. அவ பேசுறது வார்த்தையில்ல. எல்லாமே விஷம். அதுக்கு மன்னிப்பு வேற”  என்று அமுதன் கத்திக் கொண்டிருந்தான். 
சூழல் கனமாவதை உணர்ந்தவர், டயரை அழைத்து, “டேய்…! இசை அப்பா வர வரை அவங்க கூட இருந்து அனுப்பிட்டு எனக்கு போன் பண்ணு.’’ என்றவர், அமுதனின் கரம் பற்றி இழுத்து, “உன் வண்டி சாவியை டயர் கிட்ட கொடு. அவன் வரும் போது உன் வண்டியை கொண்டு வரட்டும். இப்ப நாம கிளம்பலாம்.’’ என அவர் வாகனத்தில் அவர் வீட்டிற்கு அழைத்து வந்தார். 
வரும் வழியில் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்ததும், தன்னுடைய அலுவல் அறைக்கு அழைத்து  சென்றவர், “இப்ப சொல்லுடா… உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன பிரச்சனை..?’’ என பொறுமையான குரலில் வினவினார். 
அமுதனுக்கு நடந்தவைகளை கிளற விருப்பமே இல்லை. ஆயினும் நடந்த நிகழ்வுகளை அவனை நிலையிழக்க செய்திருக்க, ஆதியோடு அந்தமாய் நடந்தவை அத்தனையும் அவரிடம் ஒப்புவித்து முடித்திருந்தான். 
அவர் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை. பிறகு ஆழமான குரலில், “நிஜமா நீ அந்தப் பொண்ணை லவ் பண்ணியா அமுது.’’ என கேட்டார். 
இவர் ஏன் இப்படி கேட்கிறார் எனப் புரியாத அமுதன், அவரை குழப்பமாய் நிமிர்ந்து பார்க்க, “இல்ல… ஏன் கேக்குறேன்னா அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ணுதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் லவ் மேரேஜ் வேண்டாம்னு சொன்ன உடனே ஒதுங்கிப் போயிருக்கியே அதுக்கு கேட்டேன். எதுக்கும் அவங்க வீட்ல பேசி பாப்போம். இல்ல நம்ம வீட்ல சொல்லிப் பாப்போம்னு உனக்கு தோணவே இல்லையா.’’ என்றார். 
அவரை பார்த்து வெறுமையாய் சிரித்தவன், “நடக்கும்னு தெரிஞ்சா மோதிப் பார்க்கலாம் அண்ணா. இங்க எனக்கு எதிரா நின்னது… பொண்ணோட சாதியோ, மதமோ இல்ல அவங்க வீட்டு ஆளுங்களோ இல்ல… அந்தப் பொண்ணே எங்க காதலுக்கு எதிரா நின்னா…! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்னால கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஏன்னா எங்க அம்மா லவ் மேரேஜ் பண்ணி அதனால நிறைய பிரச்சனயை அனுபவிச்சி இறந்து போயிட்டாங்க. 
இப்ப நானும் அதே தப்பை பண்ணா எல்லாரும் இறந்து போன எங்க அம்மாவை மறுபடி தப்பா குறை சொல்லி பேசுவாங்க. அதை என்னால அனுமதிக்க முடியாதுன்னு சொல்றா…! இந்த இடத்துல நான் என்ன பண்ண முடியும். இல்ல எனக்கு நீ தான் வேணும்னு கட்டாய தாலி கட்டணுமா. இல்ல கடத்திட்டு போய் குடும்பம் நடந்த முடியுமா…? ரெண்டுமே என்னால முடியாது. ஏன்னா எங்க அம்மா வளர்ப்பு அப்படி.
உண்மையா அவ என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனப்ப மனசுல அத்தனை வலி. அதை வார்த்தையால சொல்லவே முடியாது. ஆனா அந்த வலியை நினச்சி வாழ்கையை தொலைக்க முடியுமா…? 
வாழ்கையில எவ்ளோ பெரிய வலி வந்தாலும் அதை கடந்து வாழ முடியும்னு எனக்கு கண் முன்னாடி உதாரணமா வாழ்ந்துட்டு இருக்க மனுசி எங்க அம்மா. அப்பா இறந்ததுக்கு அப்புறம், சொந்தக்காரங்க துணை இல்லாம தனி ஒரு மனுசியா என்னை வளர்ந்து ஆளாக்கி இருக்காங்க.
அவங்க எதிர்பார்ப்பு சந்தோசம் எல்லாமே நான் நல்லா வாழ்றதை பாக்குறதா மட்டும் தானே இருக்கும். அதுக்கு தான் அவங்க பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வாழ்கையை வாழ்ந்து பாக்குறதுன்னு முடிவு பண்ணேன். 
எல்லாருமே லவ் பண்றவங்களை கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன…? நூத்துல எழுபது பேரோட காதல், காதாலவே தோத்துப் போகுது. மீதி முப்பதுல இருபத்தியொன்பது பேர் லவ் கல்யாணத்துக்கு அப்புறம் தோத்துப் போகுது. 
மொத்தமா நம்ம சமூகத்துல ஏதோ ஒரு சதவீத தம்பதிகள் தான் உண்மையான காதலோட மனசு ஒத்து வாழ்றாங்க. மீதி எல்லாரும் குழந்தை, குட்டின்னு கமிட்மெண்ட்ஸ் வந்துருச்சேன்னு ஒருத்தரை ஒருத்தர் சகிச்சிட்டு வாழ்றாங்க. 
தோத்து போன காதலர்கள்கிட்ட மிச்சம் மீதி பொக்கிசமா அவங்க காதல் கால நல்ல நினைவுகள் இருக்கும். ஆனா கல்யாணம் செஞ்ச பிறகு தோத்து போனா, அங்க வெறுப்பு மட்டும் தான் மிஞ்சும். 
சரி நம்ம காதல், காதலாவே தானே தோத்து போச்சு. சில பல நல்ல நினைவுகள் மிச்சம் மீதி இருக்கட்டும். மத்தபடி நம்ம வாழ்கையை பார்த்துட்டு அமைதியா போவோம்னு பார்த்தா…. 
முன்ன என்ன பத்தி தெரியாது, குத்தி குதறி பேசிட்டு இருந்தா. என்னை பத்தி முழுசா தெரிஞ்சதுக்கு அப்புறமும், வாய்க்கு வந்த படி மோசமா, கீழ் தரமா பேசுறா. 
இப்பவும் அவ நியாபகத்துல மூச்சை இழுத்துவிட்டா, அவ மூச்சு காத்து வாசத்தை என்னால உணர முடியுது. ஆனா நான் அவளை ஏதோ போட்டோ எடுத்து பத்திரிக்கையில போட்டேன்னு சொல்றா. அவ லவ்வரா இல்ல… ஒரு ஆம்பளயா அவ சொல்ற விஷயம் எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு அவளுக்கு புரியவே இல்லணா…!
அவ ட்ரஸ்ல சின்ன கரை பட்டப்பவே அது மத்தவங்க கண்ல படக் கூடாதுன்னு பதறினவன் நானு. என்னைப் பார்த்து சொல்றா…. நாங்க தனியா இருந்த நேரத்தை நான் போட்டோ எடுத்து பத்திரிக்கையில கொடுத்துட்டேன்னு. சொல்லுண்ணா… என் இடத்துல நீ இருந்தா என்ன செஞ்சி இருப்ப… சொல்லுண்ணா..?’’ 
பேசிக் கொண்டே இருந்த அமுதன், பிரகாஷ் எதிர்பார்க்காத தருணமொன்றில் அறையில் இருந்த கண்ணாடியில் தன் கைகளை மடக்கி ஓங்கி ஓர் குத்துவிட்டான். 
அமுதனின் மனதை போல சில்லு சில்லாய் உடைந்த உருவங்காட்டி, அவன் கைகளில் புறக் காயங்களையும் தோற்றுவித்தது. கையில் வழிந்த உதிரத்தை கண்டு பதறிய பிரகாஷ், 
“டேய்…! அறிவு கெட்டவனே.’’ என்று அவனை நோக்கி பாய்ந்தவர், அருகில் இருந்த துண்டை நீரில் நனைத்து அவன் கைகளில் வழிந்த உதிரத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தார். 
அதே நேரம், வீட்டை அடைந்திருந்த யாழிசை, ‘ரொம்ப ஓவரா பண்றான். நல்லவன் மாதிரி. பாக்கட்டும் அவன் லட்சணத்தை.’ என்று மனதிற்குள் எண்ணியவள், தங்களின் புகைப்படம் வந்த பத்திரிகையின் அட்டைப்படத்தினை, புலனத்தின் மூலம் அவனுக்கு அனுப்பி வைத்தாள். 
அப்போது யாழிசை அறியவில்லை, மனித தன்மையுடன் இருக்கும் ஒருவனை மிருக குணத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை.
அந்த நேரம் அமுதனுக்கு தன் அலைபேசியை பார்க்கவெல்லாம் எங்கே நேரமிருந்தது. பிரகாஷ் அவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சைகள் முடிந்ததும், தானே அவனை வீட்டில் சென்று விட்டு வந்தார். நேரம் இரவு பதினொன்றை நெருங்கியிருந்ததால் அவனை வாயிலிலேயே விட்டு விட்டு விடைபெற்றிருந்தார்.   
மகன் வருவதற்கு தாமதமாகும் என முன்பே தெரிவித்திருந்தமையால், அருள் மகனுக்காக காத்திருக்காமல் உண்டு உறங்கியிருந்தார். கூடத்தில் அரவம் கேட்டவுடன் பொறுமையாய் எழுந்து வெளியே வந்தார். 
அப்போதும் மகனின் கைகளுக்கு அவர் பார்வை செல்லவில்லை. கலைந்த கூந்தலை கொண்டையாய் முடிந்தபடி, “என்னடா வெளிய சாப்டியா..? இல்ல தோசை ஊத்தவா..?’’ என்றார் கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றியபடி.
“எதுவும் வேண்டாம்மா. ஒரு டம்ளர் பால் போதும்.’’ என்று அமுதன் சொல்ல, அவன் குரலில் இருந்த சோர்வில், விலுக்கென்று பார்வையை மகனின் முகம் மீது பதித்தார். 
கலங்கி, சோர்ந்திருந்த முகத்தில் குழப்பத்துடன் ஆராய்ந்தவரின் பார்வை, சற்று கீழிறங்கி அவன் கைகளில் பதிந்தது தான் தாமதம், “தமிழு…!’’ என்ற கூவலோடு மகனை நெருங்கி இருந்தார். 
“ஷ்… அம்மா…! எனக்கு ஒன்னும் இல்ல. ஒட்டு மொத்த சென்னையையும் உன் ஒத்த குரல்ல எழுப்பி விட்ருவ போல.’’ என இயல்பாக பேசி தாயை சமாதானம் செய்ய முயன்றான். 
“என்னடா ஆச்சு. கீழ விழுந்துட்டியா. வண்டிய பாத்து ஓட்டுன்னு எத்தனை தடவை சொல்றேன். என்னடா நீ…?’’ என்று கலங்கிய குரலில் சொன்னவர், கவலையோடு அவன் கரங்களை பிடித்துக் கொண்டார். 
“மா…! சின்ன ஆக்சிடன்ட். பேலன்ஸ் பண்ண கையை ஊனிட்டேன். தோள் லேசா சிராச்சிடுச்சி. ஹாஸ்பிடல்ல செப்டிக் ஆகாம இருக்க ஒரு ஊசியும், ட்ரெசிங்கும் போட்டுட்டு, வலி குறைய டேப்லட் கொடுத்து இருக்காங்க. மத்தபடி எலும்புல, சதைல எந்த அடியும் படல. போதுமா…? சும்மா என் கையை பிடிச்சிட்டு சீன் போடாம போய் எனக்கு பால் கொண்டு வா. ரொம்ப டயர்டா இருக்கு. மாத்திரை போட்டுட்டு நான் தூங்கணும்.’’ என்றான். 
அவனின் வார்த்தைகள் வேலை செய்ய, அருள் மகனுக்கு பால் கொண்டு வர எழுந்தார். அதுவரை இயல்பாய் இருந்த முகம் தாய் அந்தப் பக்கம் நகர்ந்ததும் வலியை காட்டியது. 
உள்ளங்கையில் இரண்டு இடத்தில் தையல் போட்டிருந்தார்கள். அருள் பாலை கொண்டு வந்து தரவும், பாலோடு, மாத்திரைகளையும் சேர்த்து விழுங்கியவன், “அருளு…! இன்னைக்கு என்னோடவே என் ரூம்ல தூங்கு.’’ என்றான் உத்தரவாய். 
“சரிடா எரும. ஏசி மட்டும் கம்மியா வை.’’ என்றவர், மகனின் படுக்கையை தட்டி உறங்க தயார் செய்தார். இருவரும் படுக்கையில் ஏறி படுத்ததும், அமுதன் தாயின் வலக்கரத்தை எடுத்து, தன் ஒருபுற கன்னத்தில் வைத்துக் கொண்டவன், அப்படியே மெது மெதுவாய் வலி மாத்திரைகளின் வீரியத்தில் உறங்கியும் போனான். 
அருளும் மகனின் முகத்தை வெகு நேரம் பார்த்திருந்தவர், ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கியும் போனார். 
இசை அனுப்பிய புகைப்படம் அமுதன், இணையத்தை இணைக்கததால் அவன் அலைபேசியை வந்தடையாதிருந்தது. அவன் நாளை விடிந்ததும், அலைபேசியை இயக்கையில் தொடப்போகும் ஒற்றை புள்ளி அவன் பொறுமையை புரட்டிப்போட, அமைதியாய் காத்திருந்தது. 
சலனமாகும்.   

Advertisement