Advertisement

“வா… அண்ணாத்தை…! அமெரிக்கா பூட்டன்னு கேள்விப்பட்டேன். ஆனா படா மாஸா திரும்பி வந்து கீறப்பா. எனக்கு சென்ட் கின்ட் எதுனா வாங்கின்னு வந்தியா.’’ என்றான். 
“சென்ட் தானே வாங்கிட்டா போச்சு. சரி ஏற்பாடுலாம் எப்படிடா போகுது. எல்லாம் முடிஞ்சதா.’’ எனக் கேட்டான். 
“எல்லாம் ரெடியா கீதுபா. அந்த சேனல்காரனுங்க வரத்து ஒண்டி தா பாக்கி. சரி தர்பூஸ் சூசு இருக்கு கொண்டாரவா…? பெரிய ஹோட்டல் பசங்கோ சும்மா சூப்பரா போட்டுன்னு இருக்கானுங்கோ. எத்தினி  தபா கேட்டாலும் குடுக்குறானுங்கோ.’’ என்றான் மகிழ்ச்சியாய். 
“எனக்கு எதுவும் வேண்டாம். வேணா என் பங்கையும் வாங்கி நீயே குடி.’’ என்றவன், மீண்டும் அங்கிருந்த சூழலில் தன் கவனத்தை திருப்பினான். 
“அடப் போப்பா. நான் ஆல்ரெடி எட்டு தபா குடிச்சிட்டேன். இதுக்கு மேல குடிச்சா தொண்டையை தாண்டி சூசுலாம் வாயி வழியாவே வழிஞ்சி வந்துரும். நான் வேற யாருக்குனா எதுனா வேணுமான்னு போய் பாக்குறேன்.’’ என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். 
சரியாய் ஏழு மணிக்கு சற்று முன்பாக தொலைக்காட்சி நிறுவனம் வந்துவிட, அடுத்த சில நொடிகளில், பிரகாசோடு கவுன்சிலரும் வந்துவிட அந்த இடம் பரபரப்பிற்கு உள்ளானது. 
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் முன்னால் வந்து, “வணக்கம் சென்னை. நாம இப்ப இருக்க இடம் வட சென்னை. பசங்க பொதுவா பொண்ணுங்களை கரெக்ட் பண்ண தான் பைக்கை யூஸ் பண்ணுவாங்க. ஆனா இந்த பசங்க பைக்கை வச்சி பல வித்தை பண்றாங்க. வாங்க அவங்க அப்படி என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்.’’ என்று பேசி முடிக்க, நடுவில் ஒரு இடைவேளை விட்டு மீண்டும் காணொளி பதிவை துவக்கினார்கள். 
மைதானம் முழுக்க சுற்றிலும் கையிற்றால் தடுப்பு அமைக்கப்பட்டிருக்க, முதலில் உள்ளே நுழைந்தது ஒரு பல்சர். முதலில் அதிவேகமாய் மைதானத்தை ஒரு சுற்று சுற்றி வந்த வண்டி அடுத்து சுற்றில் அதன் முன் சக்கரம் காற்றில் இருக்க, பின் சக்கரம் ஒன்றை மட்டும் துணையாய் கொண்டு மைதானத்தை சுற்றி வந்தது. 
தன் பணி முடிந்ததும் அது வேறு பாதையில் வெளியேற அடுத்த வாகனம் அதை விட வேகமாய் உள்ளே நுழைந்தது. இம்முறை யமஹா வாகனம். அந்த வாகன ஒட்டியோ சடாரென தன் கால்கள் இரண்டையும் மேலே கொண்டு வந்து கைகளில் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு, கால்களாலேயே வண்டி ஓட்டி அசத்தினார். 
இப்படி வரிசையாய் வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பார்வையாளர்கள் வியந்து நோக்கும் வகையில் தங்களின் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். 
இப்படியே பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்க, இறுதியாய் நுழைந்தது அந்த கே.டீ.எம் வாகனம். இதுவரை வந்தவர்கள் பல வித்தைகளை செய்திருக்க, இந்த வாகன ஓட்டி அப்படியென்ன புதிய வித்தையை செய்துவிடப் போகிறார் என்பதை போல பார்வையாளர்கள் அசுவாரசியமாய் பார்த்திருக்க, வந்த வேகத்தில் அந்த வாகன ஓட்டி, அதி வேகமாய் ஓடிக் கொண்டிருந்த  வாகனத்தின் மேல் எவ்வித பிடிமானமும் இன்றி எழுந்து நின்றார்.
மொத்த கூட்டமும், ‘ஓ..’ என்ற ஒலியை வெளிப்படுத்த, வாகன ஓட்டியின் அடுத்த செயல் கூடியிருந்தவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. ‘feet in air’ என்று சொல்லப்படுகின்ற வித்தையை அவர் செய்திருக்க, மொத்த கூட்டமும் கண்களை சிமிட்ட மறந்து அக்காட்சியை கண்டிருந்தது. 
அதாவது வாகன ஓட்டி தன் உடலை சமநிலைப்படுத்தி, கைகள் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்க, உடலை அப்படியே ஒட்டு மொத்தமாய் மேல் நோக்கி வளைத்து தன் கால்களை அந்தரத்தில் நிறுத்தி இருந்தார். 
அந்த சுற்று முடியவும், அடுத்த சுற்றில் மீண்டும், வாகனத்தின் மீது ஏறி நின்று, தன் கைகளால் வீர வணக்கம் செலுத்த, அனைவரும் கைகளை தட்டி தங்கள் பாராட்டை தெரிவித்தனர். 
சற்று நேரம் அந்த இடம் முழுவதையும், விசில் சத்தமும், கரவொலியும் ஆக்கிரமித்தது. பிரகாஷ் இதுவரை காற்றில் வாகனத்தால் வித்தைகளை செய்து காட்டிய அனைத்து வீரர்களையும் தங்கள், முக கவசத்தை கலைந்து விட்டு வரும் படி அழைத்தார். 
வித்தைகளை செய்து காட்டிய வீரர்கள் தங்கள் வரிசையின் படி ஒவ்வொருவராய் தங்கள் முக கவசத்தை கையில் ஏந்தியபடி வந்தனர். அனைவரின் பார்வையும் கடைசி வீரருக்காய் காத்திருக்க, மீண்டும் அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியபடி, அணிந்திருந்த சிகப்பு நிற உடைக்கு பொருத்தமான, சிகப்பு நிற தலைக்கவசத்தை கைகளில் தாங்கியபடி யாழிசை நடந்து வந்தாள். 
அவர்கள் அணிந்திருந்த உடைகள், வித்தை செய்யும் வீரர்கள் பிரத்யேகமாக அணியும் உடை. ஆகையால் அதில் ஆண், பெண் வேறுபாட்டை கண்டறிய முடியவில்லை. 
அவள் முக கவசத்தை நீக்கிய பின்பே, கடைசி நிமிட வாகன வித்தையை செய்தது ஒரு பெண் என்பதை மற்றவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் பிரகாசை சூழ்ந்து நிற்க, தொகுப்பாளினி, வீரர்களிடம் தன் கேள்விக்கணைகளை தொடுத்தார். 
அதுவும் யாழிசை அந்த அணியில் இருந்த ஒரே பெண் என்பதால் அவள் புறம் நிறைய கேள்விகள் பறந்தன. 
“நீங்க ஒரு பொண்ணு. பொண்ணுங்க ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்றதே பெரிய விஷயம். இந்த ஸ்டன்ட் இதுல எல்லாம் உங்களுக்கு எப்படி  ஆர்வம் வந்துச்சி. உங்க வீட்ல இருக்கவங்க இந்த விசயத்துக்கு எந்த அளவுக்கு உங்களுக்கு ஆதரவு கொடுத்தாங்க…?’’ என கேட்க, மென்மையாய் சிரித்த யாழிசை, 
“இருபத்தஞ்சி வருசத்துக்கு முன்னாடி கல்பனா சாவ்லா ராக்கெட்லையே போயிட்டு வந்துட்டாங்க. ஸ்போர்ட்ஸ் பைக் ட்ரைவிங்கை நீங்க ஒரு பெரிய விசயமா பாக்குறது எனக்கு ரொம்ப சர்ப்ரைசிங்கா இருக்கு. ஈவன் ஸ்கூல் பசங்க இப்பலாம் ராக்கெட் செஞ்சி லான்ச் பண்ணிட்டு இருக்காங்க. என்னோட பேமிலியை பொருத்தவரைக்கும், நான் எனக்கு பிடிச்ச எந்த விசயத்தை வேணா செய்யலாம். ஆனா அது மத்தவங்களை ஹர்ட் பண்ணாம இருக்கணும். அவ்ளோ தான். சோ… என்னைப் பொறுத்தவரை இது ரொம்ப இயல்பான சாதாரணமான விஷயம் அவ்ளோ தான்.’’ என்றவள், என் பேச்சு அவ்வளவு தான் என்பதை போல மண்டையை உருட்ட, அடுத்து மைக் பிரகாஷின் புறம் நீண்டது. 
அவர் தன் வழித் தோன்றல்கள் குறித்து சற்று நேரம் பெருமையாய் பேச, அவரை தொடர்ந்து, பேசிய கவுன்சிலர் வறுமையிலும், செம்மையாய் தங்கள் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ளும் தங்கள் பகுதி இளைஞர்கள் குறித்து பூரிப்புடன் பேசினார். 
அமுதன் இறுதியாய் வந்து நின்ற  யாழிசையின் மேல் பார்வையை பதித்தவன் தான். அதன் பிறகு யார் என்ன பேசினார்கள் என்பதை அறியான். 
எட்டு மணி வாக்கில் நிகழ்ச்சி முடிவுற, மைதானத்தில் பிரகாஷ் வந்திருந்த அனைவருக்கும் பபே முறையில் இரவு உணவினை ஏற்பாடு செய்திருந்தார். 
வேண்டிய உணவினை கையில் வைத்துக் கொண்டு, அவர்கள் ஆங்காங்கே பிடித்தவர்களுடன் நின்று பேசியபடி உணவருந்த, அமுதனின் விழிகள் கூட்டத்தில் யாழிசையை தேடியது.
ஆனால் அவன் தேடுதலை தடை செய்வதை போல டயர் வந்து நின்றான். “அண்ணா…! எல்லாருக்கும் தண்ணி கேன் வந்துகீது. ஆட்டோல இருந்து எடுத்தாரணும். வாண்ணா.’’ என்றழைக்க, அமுதன் அவனை தொடர்ந்தான். 
அதற்கடுத்தும் வேலைகள் தொடர, அமுதன் கவனம் வேலையில் இருந்தாலும், மனமோ யாழிசையின் மேலிருந்தது. உணவு முடியவும், கூட்டம் முற்றிலும் கலைந்திருக்க, தொலைக்காட்சி ஊழியர்களும் விடை பெற்று சென்றிருந்தனர். 
மைதானத்தில் தற்சமயம், பிரகாஷ் மற்றும் வாகன வீரர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று இருபதுக்கும் குறைவான நபர்களே இருந்தனர். 
பிரகாஷ் மீதிருந்தவர்களை உணவருந்த அழைக்க, அனைவரும் தட்டில் வேண்டிய உணவுகளை நிரப்பிக் கொண்டு வட்டமாய் நாற்காலிகளை எடுத்துப் போட்டு அமர்ந்தனர். 
அமுதன் தனக்கான தட்டை கையில் எடுத்துக் கொண்டு, யாழிசையை  பார்வையால் தேட, “எக்ஸ் கியூஸ் மீ.’’ என்ற தேன்குரல் அவனை பின்புறமிருந்து கலைத்தது. 
இத்தனை நேரம் யாரை விழி வலை வீசி தேடிக் கொண்டிருந்தானோ அவள் அவனுக்கு பின் புறம் நின்றுக் கொண்டிருந்தாள். அமுதன் விழிகளை அவள் மேலிருந்து சற்றும் நகர்த்தாமல், தான் மட்டும் நகர்ந்து நிற்க, பிரகாசின் அருகில் காலியாயிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள் யாழிசை. 
முன்பு யாராவது அசைவம் உண்டால் அவர்கள் அருகிலேயே செல்லாதவள், இன்று அவளை தவிர சுற்றி அமர்ந்திருந்த அத்தனை பேர் தட்டிலும் இருந்த அசைவ உணவை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், தன் சப்பாத்தியை விள்ளல் செய்து விழுங்கத் துவங்கினாள். 
தன் முன் அமர்ந்திருந்த யாழிசை அமுதனுக்கு முற்றிலும் புதியவளாய் இருந்தாள். அதோடு அவள் அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாதது அவன் மனதை நெருட துவங்கியிருந்தது. 
‘என்ன தான் திருமணமாகியிருந்தாலும், ஒரு அறிந்த புன்னகைக்கும், ‘ஹெலோ’ என்ற சொல்லுக்கும் கூடவா பஞ்சம் வந்து விடும்.’ என்ற கேள்விகள் அவன் மனதில் உலா வர மனதின் கேள்விகளை அவளை கேட்டு விடுவது என்று முடிவெடுத்துக் கொண்டான். 
யாழிசை உண்டு முடித்ததும், கைகளை சுத்தம் செய்ய, சற்றே தூரத்தில் இருந்த தண்ணீர் குழாய்களை நோக்கி நடக்க, அமுதன் தானும் அவளை பின் தொடர்ந்து சென்றான். 
அவள் கைகளை கழுவி விட்டு திரும்ப, அவளை நேர் பார்வை பார்த்தவன், “மேரேஜாயிட்டா தெரிஞ்சவங்ககிட்ட பேசக் கூடாதுன்னு ஏதாச்சும் ரூல் இருக்கா இசை.’’ என்று குரலில் சற்றே காரம் தூக்கலாய் கலந்து வினவினான். 
இரண்டு வினாடிகள் அவனை ஆழ்ந்து பார்த்தவள், “தெரிஞ்சவங்ககிட்ட பேசலாம் தப்பில்ல. ஆனால் முன்னால் காதலன்கிட்ட பேச முடியாது. பை த பை… எனக்கு இன்னும் மேரேஜ் ஆகல. ஐயம் ஸ்டில் மிஸ் யாழிசை.’’ என்று சொல்ல அதிர்ச்சியிலோ அன்றி ஆனந்ததிலோ அமுதனின் விழிகள் விரிந்தது. 
மேலும் அவனை நெருங்கி நின்றவள், “என்னை வேணா கல்யாணம் பண்ணிகிறீங்களா… விடிய விடிய உக்காந்து பேசலாம்.’’ என்றாள் அவன் உணர முடியாத ஒரு உணர்வை குரலில் தேக்கி. 
அமுதன் அவளின் அதிரடி பேச்சில் சமைந்து நிற்க, அவன் அலைபேசி, “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்த வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா…? நீயும் அம்மாவை வாங்க முடியுமா..?’’ என பாடி அழைப்பது அருள் என அறிவித்தது.
சலனமாகும். 
      
 

Advertisement