Advertisement

சலனம் – 22
“தமிழு.’’ அருள் தன் கையை பிடித்து இழுத்து நிறுத்தவும் தான், தன் செயலின் வீரியம் அமுதனுக்கு உரைத்தது. அவன் அப்படியே திகைத்து நிற்க, “நாம இப்படி போகணும்.’’ என்று பற்றிய கைகளை விடாது அவனை வாயிலை நோக்கி வழி நடத்தி வந்தார். 
ரியாசும் சற்றே கலவையான உணர்வுகளில் இருந்தான். இராணி தான் வரிசையில் நின்று பெற்று வந்த புளியோதரையை பொறுப்பாய் ரியாசுக்கு கொடுக்க அவனோ வேண்டாம் என மறுத்து விட்டான். 
‘வரும் போது வஞ்சனை இல்லாம வயித்துல தள்ளிட்டு இருந்தானே. இப்ப என்ன ஆச்சு..?’ என்று சிந்தித்தவர், ‘சரி இதையாச்சும் நம்ம புருசுக்கு கொண்டு போவோம்.’ என்று அந்த உணவுப் பொட்டலத்தை அழகாய் சிந்தாமல் மடித்து தன் கைப்பைக்குள் வைத்து கொண்டார். 
அனைவரும் வெளியே வரவும், இராணியை அவர்கள் சொல்லும் இடத்தில் விட்டுக் கிளம்புவதாக ரியாஸ் கிளம்ப, அமுதனும், அருளும் தங்களின் வீட்டை நோக்கி கிளம்பினர். 
வழியில் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அமுதன் வீட்டை அடைந்ததும் அறைக்குள் அடைந்து கொள்ள, அருள் அவனிடம் எதுவும் பேச முடியவில்லை. 
இரவில் அவன் அறைக்கு சென்றவர், வழமையாய் அவன் அருந்தும் பாலைக் கொடுத்துவிட்டு, “வாழ்கையில சில நேரம் பழசை மறக்குறது நல்லது தமிழு.’’ என்றார். 
தன்னிடமிருந்த பால் கோப்பையை கீழே வைத்தவன், “மா… எனக்கு தெரியும். லைப் மஸ்ட் பீ மூவ் ஆன். இன்னைக்கு கோவில்ல எதிர்பார்க்காம அந்தப் பொண்ணை பார்க்கவும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன். வேற ஒன்னும் இல்ல.’’ என்றான் அமைதியாய். 
அவனையே ஆழ்ந்து பார்த்த அருள், “வெறும் ஷாக் அவ்ளோ தானா..?’’ என்றார் நம்ம முடியாமல். அமுதன் மேற்கொண்டு பதில் சொல்லாமல் மௌனம் காக்கவும், 
“உன் கண்ல தெரிஞ்சது வெறும் அதிர்ச்சி மட்டும் இல்ல தமிழ். அதை என்னால உணர முடிஞ்சது. இப்பவும் சொல்றேன். உன்னால வேற பொண்ணு கூட வாழ முடியும்னு தோணினா மட்டும் சொல்லு. ஒரு பொண்ணு வாழ்க்கை உன்னால வீணாகக் கூடாது தமிழு.’’ 
தாயின் குரலில் வெளிப்பட்ட வருத்ததில் அமுதன் சற்று நேரம் மௌனமாய் இருந்தான். பின்பு தாயின் கரத்தை பற்றிக் கொண்ட அமுதன், “கஷ்டப்பட்டாலும் கடந்து வந்து தான்  தீரனும் அருளு. வேற வழி இல்ல.’’ என்றான் சற்றே கசப்பான புன்னகையை இதழ்களில் தாங்கி. 
அவன் முடியை லேசாய் கலைத்தவர், “எல்லாம் நல்லபடியா நடக்கும்.’’ என்றுவிட்டு, வெளியேற முயல, அமுதன் தாயை தன் படுக்கையில் அமர்த்தி, அவரின் மடியில் முகம் புதைத்துக் கொண்டான். 
சிறுவயதிலிருந்தே இப்படித் தான். மன வருத்தத்தில் இருக்கும் நேரங்களில் எல்லாம் தாயின் மடியை தேடுவான். அருள் அவன் தலையை கோதிக் கொடுக்க, சற்று நேரத்தில் அமுதன் உறங்கிவிட்டான். 
உறங்கிய மகனின் தலையை தலையணையில் வாகாய் வைத்தவர், சற்று நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தார். உறக்கத்திலும் அழுத்தமாயிருந்தது அவன் முகம். 
தன்னையும் மீறி ஒரு பெருமூச்சை வெளியேற்றியவர், வரவேற்பறையில் சென்று முடங்கினார். மகனுக்கு எளிதாய் வாய்த்த உறக்கம் அன்னைக்கு எட்ட நின்று எக்களிப்பு காட்டியது. 
மறுநாள் விடிந்ததும் அமுதன் வழமை போல அலுவலகத்திற்கு கிளம்பினான். கிளம்பும் முன் தாயிடம், “மா… சாயங்காலம் பிரகாஷ் அண்ணா வீட்டுக்கு போறேன். நைட் வர லேட் ஆகும். எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காம நீ சாப்பிட்டு தூங்கு.’’ என சொல்லியே புறப்பட்டிருந்தான். 
“டேய்… நீ வர லேட் ஆகும்னா நீ அதை மட்டும் தான் சொல்லணும். சாப்பிட்டு படுத்து தூங்குன்னு எனக்கு ஆர்டர் எல்லாம் போடக் கூடாது. உங்க இராணி அத்தை வரேன்னு சொல்லியிருக்கா. ரெண்டு பேரும் ஷாப்பிங் போக போறோம்.’’ என்று அருளும் அவன் மூக்கை உடைத்தே பணிக்கு அனுப்பி வைத்தார். 
தாயின் சொற்கள் அமுதன் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க, “யப்பா…! சரி சரி… பாக்காம, பாதுகாப்பில்லாம போயிட்டு வா.’’ என்றவன் படிகளில் இறங்கி நடந்துவிட்டிருந்தான். 
‘இப்ப இவன் என்ன சொல்லிட்டு போறான்.’ என்று ஒரு கணம் சிந்தித்த அருள், ‘பாத்து பத்திரமா போயிட்டு வான்னு சொன்னா அதுக்கும் திருப்பி கொடுப்போம்னு ஆபோசிட்டா சொல்லிட்டு போகுதா எருமை.’ என்று புரிந்த பின், மகனின் கேலியில் தானும் புன்னகைத்தார். 
இப்படி மகனும், தாயும் புன்னகைக்க அழகாகவே துவங்கியது காலைப் பொழுது. அமுதன் அலுவகலத்தை அடைந்ததும், பணிகள் அவனை ஆக்கிரமித்து கொண்டது. 
நேற்றிலிருந்து அவன் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு விடை காண சொல்லி அவன் இதயம் நச்சரிக்க, மூளையோ, ‘டேய்… அது உனக்கு வேண்டாத வேலை’ என அவனை எச்சரித்துக் கொண்டிருந்தது. 
ஒரு கட்டத்தில் மூளையை, இதயம் வென்றுவிட, அமுதன் அவர்கள் அலுவலர்களின் தகவல்களை கணினியில் பதிந்து வைத்திருக்கும் இணைப்பிற்குள் நுழைந்தான். 
அதில் அவன் விரல்கள் ‘யாழிசை’ என்ற பெயரை தட்டச்சு செய்ய அவள் இவர்களின் மற்றொரு கிளை அலுவகத்தில் பணி புரிந்து கொண்டிருப்பதாய் கணினி விவரம் சொல்லியது. 
அந்த விவரத்தை வெறித்துக் கொண்டிருந்தவனை ரியாசின் குரல் கலைத்தது. ‘டேய் நல்லவனே. கேண்டீன்ல உளுத்தம் வடை சூடா இருக்காம். உனக்கு வேண்டாம்னாலும் பரவாயில்ல. எனக்கு வாங்கி கொடு.’’ என்றபடி வந்து நின்றான். 
“அது எப்படிடா…! எது கிடைச்சாலும் வயித்துல அள்ளிப் போடுற. ஆனாலும் முருங்கைகாய்க்கு பேன்ட் சட்டை போட்ட மாதிரி இருக்க.’’ என்று அவனை கலாய்த்தபடியே எழுந்து நின்றான் அமுதன். 
உடனே அழகாய் வெட்கப்பட்ட ரியாஸ், “மச்சி நீ என்னை வேற எந்த வெஜிடபிள் கூட கம்பேர் பண்ணி இருந்தாலும் டென்சனாகி இருப்பேன்டா. ஆனா முருங்கைகாய்னு சொன்னப் பாரு. ஐ லைக் இட்… ஐ லவ் இட்.’’ என்றான். 
ரியாஸ் வெளிப்படுத்திய முகபாவத்தில் வேகமாய் சுற்றி முற்றிலும் பார்வையை ஓட்டிய அமுதன், “வாயை மூடுறா எரும. ஆபிஸ்ல இருக்கோம். என்ன கண்றாவி எக்ஸ்ப்ரஸன் கொடுக்குற.’’ என்றுவிட்டு அவனோடு சேர்ந்து உணவகம் நோக்கி நடந்தான். 
“டேய் மச்சி, உனக்கு தெரியாத. இப்ப பசங்க வெட்கப்படுறது தான் பேசன். நிறைய டிக் டாக் விடீயோ எல்லாம் கூட அப்படித் தான் லைக்ஸ் பிச்சிட்டு போகுது.’’ என்று விடாது பதில் கொடுத்துக் கொண்டு வந்தான். 
உணவகத்திற்குள் வந்ததும், தங்களுக்கு தேவையான உணவை வாங்கியவர்கள், அருகிலிருந்த காலி மேஜையில் அமர்ந்தனர். 
வடையை வாயில் அதக்கியபடி, இயல்பாக கேட்பதைப் போல, “ஆமா…! இசை மேரேஜுக்கு ஆபிஸ்ல இருந்து எத்தனை பேர் போனீங்க. என்ன கிப்ட் கொடுத்தீங்க.’’ என்று ரியாசின் வாயை கிளறினான் அமுதன். 
அவன் இசை என்ற பெயரை உச்சரித்ததும் ரியாஸ் உண்டு கொண்டிருந்த வடை அவனுக்கு புரையேற, தண்ணீரை குடித்து, தன் தலையில் தானே தட்டிக் கொண்டவன், “அது இப்ப எதுக்கு உனக்கு…?’’ என்று அமுதனிடமே தன் கேள்வியை  திருப்பிப் போட்டான். 
“சும்மா ஒரு கியூரியாசிட்டி தான். வேற என்ன…? கூட வொர்க் பண்ண கொலிக்ஸ் மேரேஜ் பத்தி கேக்குறது கூட குத்தமா…?’’ என்றான் அமைதியாய். 
அவன் முகத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்த ரியாஸ். “அந்த டைம்ல நான் லீவ் போட்டுட்டு ஊருக்கு போயிட்டேன். சோ எனக்கு தெரியாது மச்சி. அதோட அருள் அம்மா உனக்கு ஒரு பொண்ணை பேசி முடிவு பண்ணி இருக்குறதா சொல்லிட்டு இருந்தாங்க. பொண்ணை உனக்கு பிடிச்சி இருக்கு தானே.’’ என்று கேட்படி அமுதனின் முகத்திலேயே தன் பார்வையை நிலைக்க விட்டான் ரியாஸ். 
முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ள அரும்பாடுபட்டவன், “ம்… ஓகே தான். சரி சர்குலர் அனுப்பனும். நீ பொறுமையா சாப்பிட்டு வா. நான் கிளம்புறேன்.’’ என்றவன் தன் இருக்கையை நோக்கி விரைந்தான். அவன் முதுகை வெறித்த ரியாசின் இதழ்களில் கள்ளப் புன்னகை ஒன்று வந்து அமர்ந்தது. 
மாலை குறித்த நேரத்தில் வேலையை முடித்தவன், தன் வண்டியை நேராய் பிரகாஷ் வீட்டை நோக்கி செலுத்தினான். அவரின் வீட்டின் முன் பல வாகனங்களும், இளைஞர்களும் குவிந்திருக்க, இவனை அடையாளம் தெரிந்த பலர், கை அசைத்து வரவேற்றனர். 
அவர்களுக்கெல்லாம் ஒரு புன்னகையை பதிலாய் கொடுத்தவன், பிரகாஷின் வீடிருந்த இரண்டாம் தளம் நோக்கி படிகளில் ஏறினான். இவனைக் கண்டதும் பிரகாஷ் உற்சாகமாய் வந்து அணைத்து கொண்டார். 
“இளச்சி போயிட்டடா தம்பி.’’ என்றார் தோளில் தட்டி. அவரைப் பார்த்து பெரிதாய் சிரித்தவன், “அப்பாடா…! நீ தான் அண்ணா என்னைப் பார்த்து வித்யாசமா ஒரு வார்த்தை சொல்லியிருக்க.’’ என்றான்.
இவன் குரல் கேட்டதும் பிரகாசின் மனைவி அருணா எட்டிப் பார்த்துவிட்டு, “வா… அமுது. நல்லா இருக்கியா…? டீ போடவா இல்ல காபியா.’’ என்றபடி வெளியே வந்தார். 
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அண்ணி. இப்ப தான் ஆபிஸ்ல காபி சாப்டேன்.’’ எனவும், சரி எனும் விதமாய் தலை அசைத்தவர், அங்கு குழுமியிருந்த மற்றவர்களை உபசரிக்க நகர்ந்தார். 
இவனிடம் திரும்பிய பிரகாஷ், “அமுதா… சரியா ஏழு மணிக்கு சூர்யா டிவிகாரங்க வரதா சொல்லி இருக்காங்க. நம்ம கிரவுண்ட்ல எல்லா ஏற்பாடும் பக்காவா நடந்துட்டு இருக்கு. நீ எதுக்கும் முன்னாடி அங்க போயி எல்லாம் ஒழுங்கா இருக்கான்னு பார்த்துட்டு இருக்கியா. நம்ம ஏரியா கவுன்சிலர் நானும் வரேன்னு நிக்கிறார். நான் கிளம்ப கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்குடா.’’ என்றார். 
“சரிண்ணே… நான் முன்னாடி போறேன். நீங்க பொறுமையா வாங்க. மணி இப்ப தான் ஆறு. ஒன்னும் அவசரமில்ல.’’ என்றவன் அங்கிருந்து எழ அவனோடு வேறு சிலரும் கிளம்பினர். 
இவர்கள் மைதானத்தை அடைந்த போது, லேசாய் இருள் கவிழ துவங்கியிருந்தது. அங்கே முகப்பில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, பெரிய விளம்பர தட்டியில், ‘பேட் பாய்ஸ் பைக் ஸ்டன்ட்’ என்ற பெயரோடு வித விதமான நிலைகளில் வண்டியோட்டிகளின் புகைப்படங்கள் வீற்றிருந்தது. 
அதை கண்ட அமுதன், அதிலிருந்த நிலைகளின் பெயர்களை தன் நினைவடுக்கில் தேடிக் கொண்டிருந்தான். இவனை அங்கே கண்டதும், டயர் எங்கிருந்தோ ஓடி வந்தான். 

Advertisement