Advertisement

சலனம் – 21 
தன்னைக் காண வந்த அமுதனை தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அணைத்துக் கொண்டார் ரத்தோட். “வெல்கம் பேக் அமுதன்.’’ என்று. 
அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர், மீண்டும் அமர்ந்த பின், “ரொம்ப அழகாயிட்ட மேன்.’’ என்று தமிழை வழக்கம் போல உடைக்க, அவரின் பாராட்டில் லேசாய் முகம் சிவந்தவன், “தாங்க்ஸ் சார்.’’ என்றான். 
அவன் வந்ததிலிருந்து அவனை மீண்டும் கண்டவர்கள் அனைவரும், ஒன்றே போல இவ்வாக்கியத்தை மொழிய, அவனுக்குள் அது ஒரு வித ‘நீங்களுமா..?’ மன நிலையை தோற்றுவித்திருந்தது. 
“ஜாயினிங் ரிப்போர்ட் மெயில் பண்ணியாச்சா…?’’ ரத்தோட்டின் கேள்வியில் கலைந்தவன், “எஸ் சார். மார்னிங்கே பண்ணிட்டேன். நம்ம நியூ ப்ரோஜக்ட் பத்தி பேச மீட்டிங் அரேஞ் பண்ணனும்.’’ என்றான். 
“கண்டிப்பா. மீட்டிங் மதியம் லஞ்சுக்கு அப்புறம் அரேஞ் பண்ணிடுறேன். உங்க டீம்ல பெருசா எந்த சேஞ்சும் இல்ல. மோகன்னு ஒரு புது ட்ரைனி மட்டும் ஜாயின் பண்ணி இருக்கார். வேற ஏதாச்சும் டீடைல்ஸ் வேணும்னா நீங்க ரியாஸ்கிட்ட கேட்டுக்கோங்க.’’ எனவும், மீண்டும் ஒரு முறை, “எஸ் சார். தாங்க் யூ சார்.’’ என்றவன் அங்கிருந்து விடை பெற்று தன் இருக்கையை நோக்கி நடந்தான். 
‘அப்ப மோகன் தான் நேத்து நம்மளை பைக்ல பதற வச்ச பையனா…? இருக்கட்டும் டீம் ஹெட்டு எப்படி பதற வைப்பான்னு நான் அவனுக்கு காட்றேன்.’ என்று மனதில் எண்ணியபடி தன் இருப்பிடத்தை அடைந்தான். 
அதற்கு மேல் தேங்கியிருந்த வேலை அவனை இழுத்துக் கொள்ள, முழுதாய் தன்னை பணியில் ஆழ்த்திக் கொண்டான். இடையில் இருமுறை ரியாஸ் வந்து பேச முயன்ற போது கூட, “வேலையிருக்கு மச்சான். மதியம் மீட்டிங் இருக்கு. என்னால எழுந்து கேண்டீன்லாம் வர முடியாது. சூடா ஒரு கப் காபி மட்டும் கொண்டு வந்து தா.’’ என்றவன் அமர்ந்த இருக்கையிலிருந்து எழுந்து கொள்ளவில்லை. 
மதிய உணவிற்கு பின், அனைவரும் கலந்துரையாடல் அறையில் குழும, அமுதன் தங்களின் புதிய ப்ராஜெக்ட் பற்றி விளக்கி கூற, அனைவரும் தங்களுக்கு எழும் சந்தேகங்களை வினவ என்று அந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. 
மற்ற நேரங்களில் குறும்பும், கொண்டாட்டமுமாய் இருக்கும் ரியாஸ் கூட பொறுப்பாய் அமர்ந்திருந்தான். அமுதன் அவர்களின் குழுவில் இருந்த மோகனை அடிக்கடி கேள்வி கேட்க, ரியாஸ், ‘இவன் எதுக்கு இப்ப இந்த பச்சை மண்ணை பிசஞ்சிட்டு இருக்கான்…?’ எனப் புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். 
ஒருவழியாக கலந்துரையாடல் முடிய முதலில் அந்த அறையிலிருந்து ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று தப்பி ஓடியது மோகன் தான். அன்றைக்கு அலுவல் முடிந்து, அமுதன் கிளம்பும் நேரம், ரியாஸ் அவன் அருகில் வந்து நின்றான். 
“மச்சி உன்னோடையே வீட்டுக்கு நானும் வரேன். மம்மி இன்னைக்கும் ஏதாச்சும் செமையா சமச்சி இருப்பாங்க.’’ என்று வந்து நின்றான். 
“நான் வந்ததுல யாருக்கு லாபமோ இல்லையோ உனக்கு நல்ல லாபம் போலடா.’’ என்று அவன் வயிற்றில் லேசாய் குத்தினான் அமுதன். 
“டேய்…! வளருற பையனை வயித்துல அடிக்குற. சரி ஏன்டா அந்த மோகனை மீட்டிங்ல போட்டு பிதுக்கி எடுத்த. எனக்கு வாச்ச ஒரே அடிமை. விட்டா விரட்டி விட்ருவ போல.’’ என்றான் ஆற்றாமையோடு. 
“ஆமா… உன் அடிமை நேத்து என் உயிரையே ஊசலாட வச்சான். இன்னைக்கு மூஞ்சை பன் பட்டர் பேபி மாதிரி வச்சிகிட்டா நான் சும்மா இருப்பேனா. அதான் நானும் ஒரு காட்டு காட்னேன். நேத்து தாங்க்ஸ் சொல்றேன். அதுக்கு கூட ரிப்ளே பண்ணாம போறான்டா அந்த புண்ணாக்கு.’’ என்று பொரிந்து தள்ளினான். 
“இல்லையே பையன் அவ்ளோ டெரர் பீஸ் இல்லையே.’’ என்று சிந்திக்க, அமுதனின் அலைபேசி அலறியது. அதை இயக்கி அவன் காதில் வைக்க, அந்தப் பக்கம் பிரகாஷ் பேசினார். 
அவரின் அழைப்பை ஏற்றவன் குரலில் மகிழ்ச்சி. “சொல்லுங்க அண்ணா…!’’ என்றான் நெகிழ்வோடு. “டேய் அமுது…! சென்னை வந்துட்ட போல சொல்லவே இல்ல.’’ என்றான் அவனை விட அதீத உற்சாக குரலில். 
“ஆமா அண்ணா. நேத்து தான் வந்தேன். ஒரே அலைச்சல். பேச முடியல. நாளைக்கு நேர்ல வரேன்.’’ என்றான். 
அந்தப் பக்கம் பிரகாசோ, “அது என்ன நாளைக்கு தான் உனக்கு நல்ல நாளா. சரி சரி… நாளைக்கு பசங்க பைக் ஸ்டண்ட் இருக்குடா. இந்த வாட்டி நியூஸ் சேனல்ல இருந்துலாம் கவர் பண்ண வரப் போறாங்க. நீ கண்டிப்பா வரணும்’’ என்று உற்சாகமாக பேசினார். 
ஆம் பிரகாஷ் ஒரு வாகனப் பிரியர். சிறு வயதில் விளையாட்டாய் ஆளில்லா வீதிகளில் ரேஸ் வைத்து விளையாடியிருக்கிறார். ஒருமுறை நண்பன் ஒருவனின் உயிர் அந்த ஆபத்தான விளையாட்டில் பிரிந்து விட அதன் பிறகு முழுமையாக ரேசை நிறுத்தி இருந்தார். 
ஆனாலும் அவரின் வாகன காதல் குறையவில்லை. வித விதமான ஸ்போர்ட்ஸ் பைக் என்று சொல்லப்படுகின்ற கனரக இருசக்கர வாகனங்களை வாங்கிவிடுவார். 
அவர் ஏரியா பையன்கள் மீண்டும் ரேஸ் என்று கிளம்ப, இம்முறை விபத்தேதும் நிகழ்த்து விடக் கூடாது என்று, அவர்கள் வேக போட்டியில் பயிற்சி பெறவும், பங்கேற்கவும் முறையான மைதானத்தில் அனுமதி வாங்கிக் கொடுத்தார். 
அமுதன் வழமையாய் போட்டிகளில் பங்கேற்பது இல்லை என்றாலும், வேக போட்டி மைதானத்தில் சில நேரம், பையன்களோடு வண்டியோட்டி மகிழ்வான். அந்தப் போட்டி சில நேரங்களில் ஆளில்லா இரவு நேர மெரீனா சாலைகளிலும் நடப்பதுண்டு. 
அந்த விடயம் பிரகாசின் செவி அடைந்தால், அவர் தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஒரு மாதம் வண்டியை பிடுங்கி வைத்துக் கொள்வார். அமுதனின் வண்டி கூட அப்படி ஒரு மாதம் அவரிடம் காவலிருந்து மீண்டிருக்கிறது. 
 
பையன்கள் வெறும் வேகப் போட்டியோடு நிற்காமல், இரு சக்கர வாகனங்களை வைத்து இப்போது ஸ்டன்ட் என்று சொல்லப்படுகின்ற, அசரவைக்கும் வித்தைகள் செய்யத் துவங்கியிருக்க, பிரகாஷ் அவர்களை தன்னால் இயன்ற அளவிற்கு ஊக்குவித்தார். 
முறையான அங்கீகாரம் கிடைத்தால் இதுவும் உடல் வளை திறனை, பளு தூக்கும் திறனை, சமநிலை திறனை அறுதியிடும் விளையாட்டாக மாறலாம் என்ற எண்ணம் அவருக்கு. 
இப்போது அவர் எண்ணியபடி, தொலைகாட்சியிலிருந்து சிறப்பு செய்தியாக வெளியிட வருகிறார்கள் என்றதும் அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு. அவரோடு அவரின் வழித் தோன்றல்களுக்கும். 
பிரகாஷ் செய்தியை பகிர்ந்ததும், அமுதனுக்கு அவ்விடயம் மகிழ்ச்சியை கொடுக்க, “கண்டிப்பா வரேன் அண்ணா. வேற என்ன வேலை எனக்கு.’’ என்று உற்சாகமாகவே பதில் கொடுத்தான். 
“சரி அமுது. நாளைக்கு பார்க்கலாம். அண்ணி வெளிய போகணும்னு சொல்லிட்டு இருந்தா. நாம அப்புறம் பேசலாம்.’’ என்று அழைப்பை துண்டிக்க, அமுதனும் இதழில் மலர்ந்த முறுவலோடு அலைபேசியை வைத்தான். 
“பிரகாஷ் அண்ணாகிட்ட தானே பேசின. ஏதோ லவ்வர்கிட்ட பேசுற மாதிரி எதுக்கு ஈன்னு பல்லை காட்டிட்டு இருக்க.’’ என்று ரியாஸ் கடுப்பாக, “லவ்வர்கிட்ட எல்லாம் ஈன்னு பேச முடியாது. வாயை இறுக்கி மூடிக்கிட்டு ‘ம்’ தான் கொட்டனும். அதெல்லாம் உனக்கு புரியாது. பேசாம வா.’’ என்றவன் தன் தோள் பையை எடுத்துக் கொண்டு முன்னால் நடந்தான். 
“ஆமா நீ ஆறேழு வச்சி உம் கொட்டின ஆளு பாரு. அனுபவம் பேச. போடா டேய்.’’ என்றவன் தானும் அவன் பின்னோடு நடந்தான். அதே நேரம் கவியின் கோப முகம் நினைவில் ஆட, ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று ஒதுக்கியவன் அமைதியாய் அமுதனை தொடர்ந்தான். 
அமுதன் வீட்டை அடைந்ததும், அங்கு அருள் இவனுக்காய் காத்திருந்தார். “என்ன அருளு எங்கையோ கிளம்புற மாதிரி இருக்கு.’’ என்று இவன் வினவ, “இங்க ஏதோ சாய்பாபா கோவில் இருக்காம். போயே ஆகணும்னு உங்க இராணி அத்தை நிக்குறா. நாணும், பன்னீர் பட்டர் மசாலாவும் செஞ்சி ஹாட் பாக்ஸ்ல வச்சி இருக்கேன். பசிச்சா சாப்பிடு.’’ என்றவர், தன் கிளம்புதல் பணியை தொடர்ந்தார். 
ரியாஸ், நேராக சமையலறை சென்றவன், கைகளை மட்டும் கழுவிவிட்டு, உணவினை கட்ட துவங்க, “வந்த வேலையை சரியா செய்யுது பாரு ஒரு ஜீவன்.’’ என்று அவனை முறைத்த அமுதன், 
“அம்மா.. நீயே இங்க ஒரு வாரம் தான் இருக்க போற. இப்ப எதுக்கு என்னை விட்டுட்டு தனியா கிளம்புற. வேணும்னா சேகர் அங்கிளும், அவங்க வீட்டம்மாவும் போயிட்டு வரட்டும். நமக்கு என்ன…? உனக்கு தான் இந்த கோவில், குளம் எல்லாம் ஆகாதே. இப்ப என்ன புதுசா..?’’ என்றான் சலிப்பாய். 
“எல்லாம் சரி தான்டா. இந்த முறை உங்க சேகர் அங்கிள் கூட அவங்க அக்கா பொண்ணு கல்யாணம்னு ராணி அத்தனையும் சென்னைக்கு வந்து டேரா போட்டுட்டா. அவங்க வீட்டு ஆளுங்க எல்லாம் கல்யாண வேலையில பிசியா இருக்காங்களாம். வாரக் கடைசின்னு சேகருக்கும் பத்திரிக்கை ஆபிஸ்லையே தவம் கிடக்குறானாம். மதியம் போனை போட்டு ஒரே புலம்பல். அதான் வேற வழி இல்லாம வரேன்னு ஒத்துகிட்டேன்.’’ என்றார் அலுப்பாய். 
“சரி.. சரி… இரு நானும் வரேன். கோவிலுக்கு போயிட்டு, அப்படியே பீச் போயிட்டு வரலாம்.’’ என்றவன் தன்னை தூய்மைபடுத்திக் கொள்ள அறைக்குள் நுழைந்தான். 
ரியாஸ் வாயிலிருந்த நாணை விழுங்கிக் கொண்டே, ‘நா… னு… வரேன்.’’ என்று தானும் ஊர் சுற்றக் கிளம்பினான். இராணி அவர்களின் வீட்டிற்கு வந்து சேர, ரியாஸ், மற்றும் அமுதன் இருவரின் இருசக்கர வாகன உபயத்தால் அவர்களின் பயணம் கோவில் நோக்கி திரும்பியது. 
சாய்பாபா கோவில் வாசலில் இருவரும் நின்றுக் கொள்ள, அருளும், இராணியும் மட்டும் கோவிலுக்குள் வணங்க சென்றனர். 
கோவிலுக்கு வந்த வயது பெண்களை ரியாஸ் வஞ்சனையில்லாமல் ரசித்துக் பார்க்க, “டேய்…! ஓவரா வழிஞ்ச குல்லாவை எடுத்து தலையில போட்டு விட்ருவேன்.’’ என்று அமுதன் காய்ந்தான்.
“சைட் அடிக்கலாம் கண்ணு போதும். நீ எதை வேணா எங்க வேணா மாட்டு.’’ என்று சொல்லிவிட்டு தன் பணியை செவ்வனே தொடர்ந்தான். இவன் பதிலில் அமுதன் தான் தலையில் அடித்துக் கொண்டான். 
அன்னையர்கள் இருவரும் கோவிலை விட்டு வெளியே வரும் போது பிரசாதத்தை சுமந்து வர, ரியாஸ் முதல் ஆளாக பாய்ந்து சென்று அதை வாங்கி ரசித்து உண்டான். 
அருள் அமுதனிடம் கொஞ்சம் நீட்ட, ‘வேண்டாம்’ என்று சைகையில் தெரிவித்தவன், வண்டியை கிளப்ப துவங்கினான். ரியாசோ, “ஆன்ட்டி கேசரி செம டேஸ்ட்டா இருக்கு. இந்த கோவில்ல தினமும் தருவாங்களா..?’’ என்று இராணியை வினவியபடியே, கையில் ஒட்டியிருந்த துணுக்குகளை நாவால் சுத்தம் செய்தான். 
“வியாழக்கிழமை பாபாவுக்கு விசேசம்டா தம்பி. அன்னைக்கு இது போல நிறைய பிரசாதம் தருவாங்க.’’ என உற்சாகமா பதில் சொல்லியபடி, அவன் வண்டியின் அருகில் சென்றார் இராணி. 
மேலும் இரண்டு நிமிடங்கள் அமுதனின் பொறுமையை சோதித்து விட்டே தன் வண்டியை கிளப்பினான் ரியாஸ். அடுத்து அவர்கள் பயணம் கடற்கரையை நோக்கி செல்ல, பயணம் துவங்கிய சில நிமிடங்களிலேயே, இராணி, “அருளு… அஷ்டலட்சுமி கோவில் இருக்க பீச்சுக்கு போக சொல்லு அருளு. கடலை பார்த்த மாதிரியும் இருக்கும் . கோவிலுக்கு போன மாதிரியும் இருக்கும்.’’ என்று தன் அடுத்த வேண்டுதலை முன் வைத்தார். 
ரியாஸ் உடனே, ‘அங்கயும் இதே மாதிரி நெய் வடியிற கேசரி தருவாங்களா ஆன்ட்டி.’’ எனக் கேட்டு, அமுதனின் இரத்த அழுத்தத்தை எகிற வைத்தான். ‘நீ நாளைக்கு ஆபிஸ் வாடி.. உன் மண்டையில நான் ரத்தம் ஒழுக வைக்குறேன்.’ என்று நண்பனை மனதிற்குள் கறுவிக் கொண்டான். 
இராணியோ, “அம்மன் கோவில்ல எல்லாம் சக்கரை பொங்கல் இல்ல புளியோதரை தான் தம்பி நெய்வேத்தியம் பண்ணுவாங்க.’’ என்று பொறுப்பாய் பதில் சொல்ல, “ஓ வெரி நைஸ். அது கூட எனக்கு ரொம்ப பிடிச்ச டிஸ் தான் ஆன்ட்டி.’’ என்று என சப்புக் கொட்டி சொன்னான் ரியாஸ். 
அருள் கூட, “பய பார்க்க தான் ஈர்குச்சி மாதிரி இருக்கான். வயிறு மட்டும் பேரல் மாதிரி வளர்த்து வச்சி இருக்கான்.’’ என்று எண்ணிக் கொண்டார். அமுதனுக்கு தற்சமயம் மீண்டும் கோவிலுக்கு செல்ல விருப்பம் இல்லை என்றாலும், தாய் நிச்சயம் இராணி அத்தையின் விருப்பம் நிறைவேறுவதையே விரும்புவார் என்பதை ஊகித்து, பெசன்ட்நகர் கடற்கரை சாலையை நோக்கி வாகனத்தை விரட்டினான். 
இவர்கள் கோவிலை அடையும் போது, நன்றாக இரவு கவிழ்ந்திருந்தது. வழக்கத்தை விட கோவில் வாசலில் கூட்டம் அதிகமிருக்க, அருள், “உங்க அத்தை ஒவ்வொரு லட்சுமியையும் அரை மணி நேரம் சுத்தினாலும் சுத்துவா. இங்க நிக்கிறதுக்கு பேசாம உள்ள வந்து உக்காரு வா.’’ என அழைத்தார். 
அமுதனுக்கு அது தான் சரியென்று தோன்றியது. வெளியே நின்று ரியாசின் முகத்தை பார்ப்பதை விட உள்ளே சென்று கோவிலின் கட்டிடக் கலை அமைப்பை ரசிக்கலாம் என்று முடிவு செய்தான். 
“சரி வரேன்.’’ என்று அமுதன் தாயோடு நடக்க, ரியாசும் இராணியோடு பேசியபடியே கோவிலை நோக்கி நடந்தான். கோவில் வாயிலில் இராணி அர்ச்சனைக்கு கொடுக்க பூஜை தட்டுகளை வாங்க, அமுதன் மௌனமாய் தன் வேடிக்கை பார்க்கும் பணியை துவங்கினான். 
இவர்கள் கோவிலுக்கு சென்ற நாள் சித்ரா பௌர்ணமி ஆகையால், கோவிலில் கூட்டம் நன்றாக கூடியிருந்தது. ஒவ்வொரு பிரகாரமாய் வலம் வந்த பின், நடுவிலிருந்து கூடத்திற்கு வர, அங்கே சந்தனக்காப்பில் அஷ்டலட்சுமிகளையும் அலங்காரம் செய்து அந்த அலங்கார சிலைகளுக்கு கீழே, எட்டு சிறு பெண் குழந்தைகள் அமர வைத்திருந்தனர்.  
அமுதன் குட்டி தேவதைகள் போல இருந்த பெண் குழந்தைகளை விழி எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான். ரியாஸ் கூட அந்த புதிய சூழலை அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருந்தான். 
இவர்கள் அந்த சூழலை ரசித்துக் கொண்டிருக்கும் போதே, “பக்யாதா லஷ்மி பாரம்மா நம் அம்மா நீ… சௌ பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா.’’ என்ற காந்தக் குரல் காற்றில் கரைந்து இவர்களை வந்தடைந்தது. 
குரல் வந்த திசையில் அமுதன் தன் விழிகளை திருப்ப, அங்கே இசை கண்களை மூடி ஊன் உருகிப் பாடிக் கொண்டிருந்தாள். அவளின் அருகில் கவி. இருவரும் புடவை அணிந்து இருக்க, யாழிசை அணிந்திருந்த சந்தன நிற புடவை அவளுக்கு அத்தனை பந்தமாயிருந்தது. 
புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு பொட்டு, அதன் மேலே லேசாய் சந்தனக் கீற்று. தோளின் இருபுறமும் ஊஞ்சலாடும் மல்லிகை சரங்கள். அமுதன் அவளை கண்ட நொடி, அப்படியே திகைத்துப் போய் அவளிடம் மட்டுமே தன் பார்வையை நிலைக்க விட்டான். 
அவன் உலகில் மற்றவை அனைத்தும் பின் தள்ளப்பட்டன. ‘பார்த்தவிழி பார்த்தபடி’ என்று லயித்து நிற்க, ரியாசின் பார்வையோ தன்னையே விடாது முறைத்துக் கொண்டிருந்த கவியின் மேலேயே இருந்தது. 
பாடல் முடியவும், விழிகளை திறந்தவள், மீண்டும் ஒரு முறை அஷ்டலட்சுமிகளையும் வணங்கிவிட்டு, கோவிலைவிட்டு வெளியே நடக்க துவங்கினாள். 
அமுதனின் மனதோடு, காலும் அவள் பின் செல்ல முயல, அருள் அவன் கைபிடித்து இரண்டையும் தன் பக்கம் திருப்பினார். 
சலனமாகும். 
 

Advertisement