Advertisement

சலனம் – 20 
ஆறு மாதங்களுக்குப் பின். 
விமான நிலையத்தின் பரிசோதனை பகுதியிலிருந்து வெளிவந்த அமுதனை ரியாசிற்கு ஒரு நிமிடம் அடையாளமே தெரியவில்லை. அருகில் அமுதன் நெருங்கி வர பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான். 
இருவரின் அணைப்பின் அழுத்தமும் உணர்த்தியது அவர்களுக்கான நட்பின் இறுக்கத்தை. நண்பனை சற்று தள்ளி நிறுத்தி மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், “ஆளே மாறிட்டடா மச்சான்.’’ என்றான் ஆனந்தமாய். 
“டேய்… போதும். உன் மிச்ச ஆராய்ச்சி பார்வையை எல்லாம் வீட்டுக்கு போனதும் பார்த்துக்கலாம். எனக்கு உடனே அம்மாவை பார்க்கனும் போல இருக்கு. வா சீக்கிரம் வீட்டுக்கு போலாம்.’’ என்று நண்பனோடு விமான நிலையம் விட்டு வெளி நோக்கி நடக்க துவங்கினான். 
“அம்மாவையும் ஏர் போர்ட் கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்ல. என்னவோ பர பரன்னு இருக்கு. அவங்களை உடனே பார்க்கணும் போல.’’ என்று அமுதன் மொழிய, 
“டேய்… உன் லக்கேஜ் எல்லாம் கார்ல ஏத்து. அருள் மம்மி உனக்காக மிதக்குற கப்பலை தவிர அத்தனை சீ புட் ரெசிபியும் சமைச்சிட்டு இருக்காங்க. என்கிட்ட வேற நிறைய லிஸ்ட் கொடுத்துவிட்டு இருக்காங்க. வரும் போது வாங்கிட்டு வர சொல்லி. என் பிரண்ட் ஒருத்தனை வர சொல்லி இருக்கேன். சென்னை ட்ராபிக்ல கார்ல போனா நிலைமை என்னன்னு உனக்கே தெரியும். நீ அவன் கூட பைக்ல சீக்கிரம் வீட்டுக்கு போ. நான் பின்னாடியே வரேன்.’’ என்றான். 
“அது யாருடா…? எனக்கு தெரியாம.. உனக்கு பிரண்டு.’’ என அமுதன் சந்தேகமாய் கேட்க, “நம்ம ஆபிஸ் நியூ ஜாயின் ட்ரைனிடா.’’ என்றான் ரியாஸ். 
“ஓ..’’ என்ற அமுதன் அதற்கு மேல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவனுக்கு தற்சமயம் விரைவில் வீட்டிற்கு போக வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே மனதில் நிலை கொண்டிருந்தது.
ரியாஸ், அமுதனின் உடமைகளை தன் வாகனத்தில் ஏற்றி முடிக்கவும், அவர்களை உரசிக் கொண்டு ஒரு கே.டீ.எம் ஆர்.சி 200 சி.சி வகை இருசக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது. 
அமுதன் அந்த வாகனத்தின் புற தோற்றத்தில் லயித்து நிற்க, ரியாஸ், “டேய் வண்டியில ஏறுடா. வயசுப் பொண்ணை சைட் அடிக்குற மாதிரி இன்னும் வண்டியை சைட் அடிச்சிட்டு திரி. விளங்கிரும்.’’ என்று அவன் காதில் முணுமுணுக்க, அமுதன் அமைதியாய் உயர்ந்திருந்த அந்த பின் இருக்கையில் இருபுறமும் கால் போட்டு ஏறி அமர்ந்தான். 
இவன் அமர்ந்ததும், வண்டி துவக்கதிலேயே எண்பது கிலோமீட்டர் வேகத்தை தொட்டது. அமுதன், வண்டியின் வேகத்தை தாக்கு பிடிக்க வண்டியோட்டியின் தோளில் தன் கரங்களை வைத்து தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டான். 
“யப்பா முரட்டு ட்ரைவரா இருப்பான் போலையே.’’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், “ப்ரோ… கொஞ்சம் ஸ்லோவா போங்களேன். சீட் ஹைட்டா இருக்கு. சரியா பேலன்ஸ் பண்ண முடியல.’’ 
அவனின் வார்த்தைகளை செவி மடுத்த தோரணையையே வண்டியோட்டி காண்பிக்கவில்லை. வாகனம் அதி வேகமாக, பல கன ரக வாகனங்களுக்கு மத்தியில் அனாயசமாக புகுந்து வேகமெடுக்க, அமுதனுக்கு அவன் இதயம் தொண்டைக் குழியில் வந்து துடித்தது. 
பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டவன், “நான் ரேஸ் ஓட்டும் போது கூட மிட் நைட் ப்ரீ ரோடை தானே சூஸ் பண்ணுவேன். இவன் ஹெவி ட்ராபிக்ல இப்படி பிரிச்சி மேயுறானே. சேதாரமில்லாம வீடு போய் சேருவோமா தெரியலையே.’’ என்று மனதிற்குள் எண்ணமிட்டபடி, வாகன ஓட்டியின் இரு பக்க தோள்களையும் அழுந்த பற்றிக் கொண்டான். 
எத்தனை நேரம் அப்படி பற்றி இருந்தானோ, வண்டியின் ஒலிப்பான் வேகமாக ஒலியெழுப்ப, அமுதன் கண்களை திறந்தான். அப்போது தான் வாகனம் நின்றுவிட்டிருந்தது அவன் புத்தியில் உரைத்தது. 
தன் குடியிருப்பிற்கு வந்துவிட்டதை உணர்ந்தவன், வேகமாய் இறங்கி நின்றான். இவன் இறங்கிய அடுத்த நொடி, வாகன ஓட்டி தன் வாகனத்தை கிளப்பி சென்றிருக்க, இவன் உதிர்த்த நன்றி காற்றில் கலந்து தேய்ந்தது. 
“சரியான ஹெட் வெயிட் பார்ட்டி போல. நின்னு ஒரு வார்த்தை கூட பேசாம போறான். அது சரி… நாம இன்னைக்கு உசிரோட வந்ததே பெரிய விஷயம்.’’ என்று மகிழ்ந்தவன், “நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்.’’ என்ற பாடலை மனதிற்குள் முணுமுணுத்தபடி, மாடிப்படிகளை இரண்டிரண்டாக தாவி ஏறினான். 
“அருளு..’’ இவன் வாயிலில் நின்று உற்சாகமாய் குரல் கொடுக்க, கையில் கரண்டியோடு எட்டிப் பார்த்தவர், “டேய்… வாசல்ல நின்னு சீன்லாம் போடாத… சீக்கிரம் உள்ள வந்து கை, கால் கழுவிட்டு இந்த வெங்காயம், பூண்டை எல்லாம் உறிச்சி கொடு. ஒருவேளையும் இன்னும் ஆகல. சாப்பாட்டு நேரம் நெருங்குது இல்ல.’’ என்றுவிட்டு மீண்டும் சமையலறைக்குள் மறைந்தார். 
கொஞ்ச நேரம் திகைத்து வாயிலில் நின்றவன், பின்பு பலமாய் சிரித்துவிட்டு, தாய் சொன்னதைப் போல, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான். 
அங்கிருந்த உணவு மேஜையில் ஏறி அமர்ந்தவன், தாய் எடுத்து வைத்திருந்த பூண்டுகளை கையில் எடுத்து, அதை உடைத்து பிரித்த படியே, ‘என்ன மம்மி… ஹெவி கோவம் போல. என்ன விஷயம்.’’ என கேட்டான். 
அருள் சற்று நேரம் வாயே திறக்கவில்லை. பின்பு, “ஆமா… அப்படியே நீ எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கிற பாரு. நான் உன்கிட்ட கோவப்பட..’’ என்றார். 
விஷயம் இன்னது என அமுதனுக்கு புரிந்தாலும், அது குறித்து ஏனோ தற்சமயம் அவன் பேச விரும்பவில்லை. அவனே நிறைய முயன்று தான் சமன்பட்டதாக வெளியே காட்டிக் கொண்டு திரிகிறான். 
ஆனால் யாழின் சிறிய நினைவூட்டல்கள் கூட மனக் காயத்தை பெரிய அளவில் கீறிவிட்டு, மீண்டும் ஆறா ரணமாக்கிவிடுகிறது. 
லேசாய் புன்னகைத்தவன், “வத்தி குச்சி… வத்தி வச்சிட்டானா…? அருளு… நீ புதுசா அருள் வந்து எல்லாம் ஆடாத…! அது சும்மா ஒரு பொண்ணு மேல லேசா ஒரு பீல் வந்துச்சி. அது பெருசா டெவலப் ஆகுறதுகுள்ள அவ வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டா. நானும் அதை மறந்துட்டேன். அவ்ளோ தான். வேற பெருசா ஒண்ணுமில்ல. உன்கிட்ட சொன்னா நீயும் பீல் பண்ணுவன்னு தான் சொல்லல. மத்தபடி மறைக்கணும்னுலாம் ஒண்ணுமில்ல மம்மி.’’ என்றவன் இறங்கி நின்றான். 
அருள் திரும்பி நிற்க, அவரின் கலங்கிய விழி கண்டவன், அவரை லேசாய் அணைத்து, நெற்றியில் முட்ட, மகனின் மௌன மன்னிப்பு வேண்டலை உணர்ந்தவர், தானும், கண்களில் மிதந்த நீரோடு, லேசாய் புன்னகைத்தபடி, அவன் தலையில் முட்டி அவன் வேண்டிய மன்னிப்பை வழங்கினார். 
இரண்டு பேரும் சற்று நேரம் அப்படியே நிற்க, முதலில் தெளிந்தவர் அருள் தான். “அதான் தினம் விடீயோகால்ல கொஞ்சி முடிச்சாச்சு இல்ல… இன்னும் என்ன…? போ.. போய் பூண்டை உறி.’’ என்று நகர்ந்து கொள்ள, அவரை மீண்டும் ஒரு முறை மென்மையாக அணைத்து விடுவித்தவன், 
“இப்படியெல்லாம் விடீயோகால்ல கொஞ்ச முடியலை இல்ல. அதான் இப்ப கொஞ்சுறேன்.’’ என்றான். மீண்டும் அமுதன் ஏறி அமர்ந்து பூண்டை உறிக்க துவங்க, அவன் எதிர்பார்க்காத நேரத்தில், அவன் முன் உச்சியை கோதியர். சற்றே எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டார். 
அமுதன் அன்னையை பார்த்து அழகாய் புன்னகைக்க, “ஐஞ்சு வயசுல உன்னை பக்கத்துல உக்கார்த்தி வச்சி சமைச்ச மாதிரியே இருக்கு. வருஷம் ஓடினதே தெரியல. இனி இப்படி வெளிநாடெல்லாம் போகாதடா. வாரம் ஒருமுறை பார்த்து பழகிட்டு நீ இல்லாம வீடே வெறிச்சோடி போச்சு. ஏதோ அப்பப்ப அந்த ரியாஸ் பய வந்தான் . இல்லாட்டி நான் ப்ளைட் டிக்கெட் புக் பண்ணியிருப்பேன் அமெரிக்காவுக்கு.’’ என்று பெருமையாய் அலுத்துக் கொண்டார். 
“நீ ரொம்ப பீல் பண்ணாத மம்மி. நான் நெக்ஸ்ட் டைம் அமெரிக்கா போக வேண்டி வந்தா உனக்கு பூண்டு உறிக்க ஒரு மருமகளையும், கொஞ்சி விளையாட ஒரு பேத்தியையும் ரெடி பண்ணிக் கொடுத்துட்டேன் போறேன் சரியா..?’’ என கேட்க,
“எம் மருமக என்னை விட கெட்டிக்காரியா தான்டா இருப்பா மகனே. நீ ஊருக்கு போறேன்னு தெரிஞ்ச உடனே ஒரு வருசத்துக்கு தேவையான பூண்டை உறிச்சி வாங்கி ப்ரிட்ஜ்ல போட்ற மாட்டா. அட அவளுக்கே தெரியாட்டி கூட நான் சொல்லிக் கொடுத்துற மாட்டேன்.’’ என்று போட்டு தாக்கினார். 
அமுதன், “மம்மி… நான் தான் நீ பத்து மாசம் சுமந்து பெத்த பையன் மம்மி…!’’ என்று பாவமான குரலில் சொல்ல, “ஆனா வேற இனமடா மகனே.’’ என்று அவர் விடாது பதில் கொடுத்தார். 
அப்போது தான் வெளியில் சென்று திரும்பிய சேகர், வாங்கி வந்த புதினா, கொத்தமல்லி தலைகளை சமையல் மேடையில் வைத்து விட்டு, “அடேய் பையா…! வந்தாச்சா. என்னடா கோலிவுட் கலர்ல போயிட்டு, பாலிவுட் கலர்ல ரிடர்ன் வந்து இருக்க. அருளு அடுத்த தடவை சும்மா சுத்தி பார்க்கவாச்சும் அமெரிக்கா போகணும் போல. இங்க உக்காந்து வண்டி வண்டியா கிரீம் வாங்கி தடவுறது தண்டம் போல.’’ என சொல்லி சிரிக்க, தாயும், மகனும் சேர்ந்தார் போல அவரை முறைத்தனர். 
“ஜோக்கு சொன்னா சிரிக்கணும். இப்படி முறைக்க கூடாது.’’ என மீண்டும் அவர் சிரிக்க முயல, அமுதனோ, “அது ஜோக்குன்னு முதல்ல நாங்க பீல் பண்ணும். அப்புறம் தான் சிரிக்க முடியும். கலரு தான ராணி அத்தைகிட்ட சொல்றேன். ஒரே நாள்ல உங்க கன்னத்தை சிவக்க வச்சிட மாட்டாங்க.’’ என அமுதன் இரு பொருள் பட பேச, 
“நான் பார்த்து டவுசர் போட்ட பய எல்லாம் என்னை கேள்வி கேக்குற மாதிரி இருக்கே என் குடும்ப வாழ்க்கை.’’ என்று மனதிற்குள் நொந்தவர், வெளியே லேசாய் சிரித்து மழுப்பிவிட்டு, “இங்க புழுக்கமா இருக்கு. நான் ஹால்ல உக்காந்து டி.வி பாக்க போறேன்.’’ என்று நழுவ முயன்றார். 
இப்போது அருள் பெரிதாய் சிரிக்க, அமுதனோ, “யோவ்.. மாம்ஸ் எங்க நழுவப் பாக்குற. இந்தா அந்த சேரை இழுத்துப் போட்டு உக்காந்து நீயும் ரெண்டு பூண்டை உறி.’’ என சொல்ல, ‘உனக்கிது தேவையா..?’ என்பதை போல அருள்விழி பார்த்தார். 
‘எல்லாம் உனக்கு பிரண்டா வாச்ச நேரம்.’ என்று பதில் பார்வை பார்த்தவர், பேசாமல் பூண்டை உறிக்க துவங்க, அமுதன் அவரின் வீடு, தொழில் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். 
இருவரும் காரியத்தில் கண்ணாயிருக்க, அந்த நேரம் வீட்டிற்குள் ரியாஸ் நுழைந்தான். வந்தவன், கண்ட காட்சியில், வாங்கி வந்த பொருட்களை கீழே வைத்து விட்டு, 
“ஐயகோ…! என்ன ஒரு அநியாயம். ஒரு பேனா பீரங்கி…! எழுத்து சிங்கம்…! புரட்சி புயல்…! பூண்டு உறிப்பதா..?’’ என்று சேகரை பார்த்து வசனம் பேச, அவன் எதிர்பார்த்த பாராட்டு அவரிடமிருந்து அவனுக்கு கிடைக்கவில்லை. 
மாறாக, அவனை உறுத்துப் பார்த்த அமுதன், அவன் வாகன ஓட்டியிடம் கோர்த்துவிட்ட கடுப்பில், “ஆமா…அவர் இனி உறிக்க வேண்டாம். அடுத்து பொறியாளர் நீ வந்து வெங்காயத்தை உறி… புதினாவை கிள்ளு.’’ என்று எழுந்து செல்ல, அவனை பின் தொடர்ந்த சேகரும், “கிள்ளு… கிள்ளு..’’ என்று விட்டு முன்னால் நடந்தார். 
“மம்மி…’’ என்று அவன் அருளின் முகம் பார்க்க, “மீன் குழம்பு பிடிக்கும் தானே…?’’ என்ற ஒற்றை கேள்வியில் அவன் பேசாது வெங்காயம் உறிக்க அமர்ந்துவிட்டான். 
பயணக் களைப்பில் நியாயப்படி அமுதன் உறங்கி இருக்க வேண்டும். ஆனால், நீண்ட நாள் கழித்து, மனதிற்கு நெருக்கமானவர்களை கண்டிருக்க, அவன் வீட்டிற்குள் இங்கும் அங்கும் அலைந்து அனைவரையும் வம்பிழுத்துக் கொண்டிருந்தான். 
மதியம் சமையல் முடியவும், வயிறும், மனமும் நிறைய அமுதன் அள்ளி அள்ளி உண்டான். அவன் உண்ணும் அழகை அருள் அமைதியாய் ரசித்துக் கொண்டிருந்தார். 
வயிறு புடைக்க உண்டதும், ரியாஸ் தன் வீட்டை நோக்கி கிளம்பி விட, சேகரும் தன் அலுவலை பார்க்க கிளம்பினார். வீட்டில் அம்மாவும், மகனும் தனித்திருக்க, அமுதன் தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். 
அவன் தலையை அமைதியாய் கோதிவிட்டவர், “தமிழு… ஆறு மாசம் முன்னாடி… அமெரிக்கா போகும் முன்னாடி அம்மாவுக்கு ஒரு வாக்கு கொடுத்தியே. நியாபகம் இருக்கா..?’’ என கேட்க, அமுதன் ஒரு நொடி கூட தயங்காது, “பொண்ணு பார்த்தாச்சா அருளு.’’ என்றான். 
அவன் குரலில் இருந்த திடம், அருளையே அசைத்துப் பார்க்க, “ம்… பார்த்துருக்கேன். ஆனா உன் சம்மதம் வாங்கிட்டு தான் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும்னு இன்னும் ஒன்னும் பேசல.’’ என்றார். 
“மா… நீயே பேசி முடின்னு ஏற்கனவே சொல்லிட்டேன். பொண்ணுக்கு என்னை பார்க்கணும்னு தோணினா ஏதாச்சும் பொது இடத்துல மீட் பண்ணிக்கலாம். மத்தபடி எனக்கு பெருசா எதிர்பார்ப்பு எல்லாம் ஒண்ணுமில்ல’’ என்றான். 
“சரிதான். முதல்ல நான் பொண்ணை பத்தி சொல்றதை நல்லா கேட்டுட்டு அப்புறம் உன் முடிவை சொல்லு. என்னடா அம்மா நமக்கு இப்படி ஒரு பொண்ணை பார்த்துட்டாங்களேன்னு நீ பின்னாடி வருத்தப்படக் கூடாது. அது தான் இப்பவே தெளிவா பேசிடுறேன். உனக்கு பிடிச்சாலும் சரி… பிடிக்கலைன்னாலும் சரி தாராளமா உன் முடிவை சொல்லிடு.’’ என்றார். 
“அப்படி என்ன பொண்ணை பார்த்து வச்சி இருக்க அருளு… உன் பையன் தெறிச்சி ஓடுற மாதிரி. சொல்லேன் கேப்போம். ஆனா பொண்ணு உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்.’’ என்றான் புன்னகையோடு. 
“பொண்ணு பேரு விமலா. நம்ம சேகரோட தூரத்து சொந்தம். கிராமம் தான். டிகிரி படிச்சிருக்கா. வயசு இருபத்தி மூணு. ஒரு வருசத்துக்கு முன்னாடி அவனை ஒரு பையன் ஒன்சைடா லவ் பண்ணி இருக்கான். 
இந்த பொண்ணு கண்டுக்காம சுத்தி இருக்கா. இவங்க வேற அவங்க கிராமத்துல பெரிய குடும்பம் போல. அந்தப் பொண்ணுக்கு பெரிய இடத்து சம்மந்தமா பேசி முடிச்சி இருக்காங்க. 
இவ பின்னாடி ஒரு வருசமா சுத்திட்டு இருந்த பையன், கடுப்பாகி அவ போட்டோஸ் எல்லாம் சோசியல் மீடியால இருந்து எடுத்து, அவனோட சேர்த்து வச்சி மார்பிங் பண்ணி மாப்பிள்ளை வீட்டுக்கு அனுபிட்டான். 
அவங்களும் ஒழுங்கா எதையும் விசாரிக்காம கல்யாணத்தை நிறுத்திட்டாங்களாம். பொண்ணு தன்னோட போட்டோவை அப்படி பார்த்ததும், அதிர்ச்சியாகி சூசைட் ட்ரை பண்ணியிருக்கா. 
கடைசியா நம்ம சேகர் தான் சைபர் கிரைம் மூலமா எல்லா விசயத்தையும் கண்டு பிடிச்சி, அவங்க பேரன்ட்ஸ்க்கு புரிய வச்சதோட, மாப்பிள்ளை வீட்லயும் தெளியவச்சி இருக்கான். 
அந்த பையனுக்கு தண்டனை கிடைச்சது. ஆனா நின்னு போன கல்யாணம் நடக்கவே இல்ல. பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத உறவை தொடர வேண்டாம்னு முடிவு பண்ணி கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. 
இப்ப தான் அவங்க அம்மா, அப்பா கெஞ்சி கூத்தாடி அந்தப் பொண்ணு மறுபடி கல்யாணத்துக்கு சம்மந்தம் சொல்லியிருக்கா. எனக்கு பொண்ணை போட்டோல பார்த்ததும் பிடிச்சது. 
எதேச்சையா அவங்க ஊருக்கு போற மாதிரி, உங்க சேகர் அங்கிள் மூலமா பொண்ணை பார்த்துட்டும் வந்துட்டேன். ரொம்ப அமைதியான பொண்ணு. எனக்கு பார்த்ததும் ரொம்ப பிடிச்சி போச்சு. 
வாழ்கையில வலியை உணர்தவங்க, அடுத்தவங்க வலியை சுலபமா புரிஞ்சிப்பாங்கன்னு சொல்லுவாங்க. அந்த வகையில இந்தப் பொண்ணு உனக்கு ரொம்ப ஏத்தவளா இருப்பான்னு நான் நம்புறேன். இனி உன் முடிவை நீ தான் சொல்லணும் தமிழு.’’ என்று நிறுத்தினார். 
அமுதன் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை. சாதாரண புகைப்படங்கள், பெண்களின் வாழ்வில் எப்படியெல்லாம் சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது என்ற சிந்தையில் இருந்தவன், “தமிழு…’’ என்று அருள் மீண்டும் அழைக்கவும் தான் தன் சிந்தையில் இருந்து கலைந்தான். 
“இது எல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இல்லமா. எனக்கு முழு சம்மதம். பொண்ணோட திருப்திக்கு வேணா ஏதாச்சும் பொது இடத்துல மீட் பண்ணிக்கலாம்.’’ என்றான். 
“ஏற்கனவே ஒரு கல்யாணம் நின்னதுல குடும்பமே உடஞ்சி போயிருக்கு தமிழு. இப்ப இப்படி பேசிட்டு இனி எக்காரணம் கொண்டும் இந்த கல்யாணம் வேண்டாம்னு மட்டும் நீ சொல்லிடக் கூடாது. யோசிக்க எவ்ளோ நேரம் வேணா எடுத்துக்கோ. ஆனா முடிவெடுத்துட்டா அப்புறம் மாறக் கூடாது. எதுக்கும் நீ காலையில உன் முடிவை சொல்லு.’’ என்றார் சற்றே கண்டிப்பான குரலில்.   
அமுதனிடம் பெண்ணின் புகைப்படம் காட்டப்பட, அந்த அமைதியான முகத்தில் சற்று நேரம் பார்வையை நிலைக்கவிட்டவன், மறுநாள் காலையில் பணிக்கு கிளம்பும் முன், “எனக்கு முழு சம்மதம்மா. நீங்க அவங்க வீட்ல ஓகே சொல்லிடுங்க.’’ என்றுவிட்டு சென்றான். 
இன்றைக்கு, முக்கிய தகவல்கள் குறித்து கலந்துரையாடவும், மீண்டும் அலுவகலத்தில் இணையவுமே அமுதன் பணிக்கு கிளம்பியது. இந்த களேபரங்கள் ஓய்ந்த பின் ஒரு வாரம் விடுப்பை எடுத்துக் கொண்டு தாயோடு சேலம் கிளம்ப எண்ணியிருந்தான். 
இவன் வழக்கமாக வாகனம் நிறுத்தும் இடத்தில், நேற்றைக்கு இவனை ஏற்றி வந்த, கே.டீ.எம் நின்றுக் கொண்டிருந்தது. ‘இன்னைக்கு இந்த சுள்ளானை கண்டு பிடிச்சி சுளுக்கெடுக்கணும்’ என்று மனதில் கறுவிய அமுதன் பளு தூக்கியை நோக்கி நடந்தான். 
ஆனால் அவனை சுளுக்கெடுக்க அலுவலகத்தின் உள்ளே ஒரு வில்லி அவன் வரவிற்காய் சுள்ளி போல காத்திருந்தாள். 
சலனமாகும்.  
 

Advertisement