Advertisement

சலனம் – 2 
அமுதனும், யாழிசையும் நேருக்கு நேர் மோதி, சரியாய் மூன்று வாரங்கள் கடந்திருந்தது. அன்று அமுதனிடம் குரல் உயர்த்திப் பேசிய நொடியில், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயினர். 
அமுதன் தன் கையில் இருந்த பீங்கான் தேநீர் கோப்பையை அப்படியே தரையில் வீச, அந்த வெண்பளிங்கு தரை, புகழ் பெற்ற ஓவியன் வரைந்த புரியா ஓவியம் போல தரையெல்லாம் சிதறி பரவியது. 
அவன் கோபத்தின் பரிணாமம் கண்ட யாழிசை, அந்த பீங்கான் கோப்பை வெளிப்படுத்திய ‘சிலீர்’ என்ற சத்தத்தில் சற்றே அதிர்ந்து ஒரெட்டுப் பின்வாங்கினாள். அதே நேரம் ரத்தோட், “இங்க என்ன சத்தம்..?’’ என்றபடி அங்கு வந்து நின்றார்.
ரியாஸ் வேகமாய் முன் வந்து, “சார்… அமுதன் கையில இருந்த கப் ஜஸ்ட் ஸ்லிப் ஆயிடுச்சி சார். நத்திங் மோர் தென் தட். கைஸ் எல்லாம் உங்க கேபின் போங்க.’’ என்று மற்றவர்களிடம் உரைத்தவன், அமுதனை அழைத்துக் கொண்டு வேகமாய் அங்கிருந்து அகன்றான். 
அதன் பிறகு அடுத்த நாளே, மகிழன், அதையும் இதையும் சொல்லி தன் பயிற்றுனர் பொறுப்பிலிருந்து கழன்றுக் கொண்டான். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பே அரிதாயிருந்தது. 
அப்படியே தப்பித் தவறி சந்தித்துக் கொள்ள நேர்ந்தாலும், பார்வையில் ஒரு போர்க்களம் அமைத்து இருவரும் விழி வீச்சின் மூலமே ‘போர்’ புரிந்து வந்தனர். 
அன்றைக்கும் அமுதன் தன் எழிலனின் மேல், உற்சாகமாய் அலுவகம் நோக்கி, காற்றை கிழித்தபடி பயணித்துக் கொண்டிருக்க, அவன் அலுவலகத்திற்கு சற்று முன் கூடியிருந்த சிறு கூட்டம் ஒன்று, அவன் பயணத்தை தடை செய்தது. 
என்னவோ என்று வண்டியை நிறுத்திவிட்டு, சற்றே கழுத்தை நீட்டி எட்டிப் பார்க்க, அவனை கண்ணில் முதலில் விழுந்தது, நீரில் மிதந்துக் கொண்டிருந்த யாழிசையின் விழிகள் தான். 
படக்கென வண்டியை நிறுத்தியவன், கூட்டத்தை விளக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். 
“என்ன ஆச்சு..?’’ தனக்கு வெகு அருகில் கேட்ட குரலில் திடுக்கென நிமிர்ந்தவள், கண்களில் ஒரு நொடி வந்து போன ஆசுவாசத்துடன், அவனுக்கு முன் நின்று அழ வேண்டிய சூழலை எண்ணி மீண்டும் பொங்கி அழத் துவங்கினாள். 
அவன் கேள்விக்கு விடையை அங்கிருந்த மகிழுந்து ஓட்டுனர் ஒருவர் அவனுக்கு அறிவித்தார். 
“இந்த பொண்ணு பக்கத்துல இருக்க பஸ் ஸ்டாப்புல இருந்து நடந்து வர சோலோ.. பைக்ல வேகமா வந்த பேமானி பசங்க இந்த பொண்ணு கழுத்துல இருந்த ஜெயினை அத்துகின்னு போயிட்டாங்க சார். பாவம் இந்தப் பொண்ணு தடுமாறி கீழ வேற விழுந்துடுச்சி. யார் என்னன்னு கேள்விகேட்டா பதில் சொல்லாம பயந்து அழுதுகின்னே நிக்குது. பாவம் ஊருக்கு புச்சு போல கீது.’’ அவர் மேலும் பரிதாபப்பட, அமுதன் அவளை முறைத்துப் பார்த்தான். 
அதே நொடி, அவன் பார்வை அவள் கழுத்தில் இறங்க, அங்கு வட்டமாய், ‘தோல்’ சற்றே பெயர்ந்து சில ரத்த துளிகள் வேறு துளிர்த்து இருந்தது. வெண்ணிற கழுத்தில் ஏதோ கழுத்தொட்டிய சிவப்பு ஆரம் போல காயம் தன் இருப்பை அறிவிக்க, முயன்று அவள் முகம் பார்த்தவன், ஒற்றை சொல்லாய், “வா…’’ என்றுவிட்டு தன் வண்டியை நோக்கி நடந்தான்.
ஆனால் அவள் நின்ற இடத்தில் இருந்து எட்டுக் கூட வைக்காமல் அப்படியே நிற்க, ஒரு பெருமூச்சில் தன் பொறுமையை மீட்டவன், ஓரமாய் எழிலனை நிறுத்தி பூட்டிவிட்டு, கடந்து சென்ற மகிழுந்தில் ஒன்றை கை காட்டி நிறுத்தினான். 
இம்முறை அவன் அழைக்காமலேயே காயம்பட்ட கழுத்தில் ஒரு கரம் கொண்டு அணைத்த படி வேகமாய் அந்த மகிழுந்தில் ஏறினாள். 
அவனோ அவளுக்கு அருகில் அமராமல், ஓட்டுனர் அருகில் அமர்ந்தபடி, பக்கத்துல ‘விகாஸ்’ ஹாஸ்பிடல் போங்க அண்ணா, என்றுவிட்டு அடுத்து அவர்களின் அலுவலகத்திற்கு அழைத்து இருவருக்கமான கால தாமத அனுமதியையும் தானே பெற்றான். மறந்தும் அவள் முகம் பார்க்க முனையவில்லை. 
மருத்துவமனைக்குள் நுழைந்ததும், யாழிசைக்கு முதல் உதவி சிகிச்சைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, யாழிசையுடன் பயிற்சியில் இணைத்து, அவளுக்கு சற்றே நெருக்கமான தோழியாய் மாறியிருந்த கவிதா அங்கே வந்து சேர்ந்திருந்தாள். 
அமுதன் மருத்துவமனைக்கு செலுத்திய கட்டண தொகையின் ரசீதை, அவளிடம் கொடுத்துவிட்டு, “பாத்துக்கோங்க’’ என்றுவிட்டு அங்கிருந்து வெளியேற முனைய, “ரொம்ப தாங்க்ஸ்..’’ என்ற யாழிசையின் குரல் அவனை அப்படியே தேக்கியது. 
வேகமாய் அவளை நோக்கி திரும்பியவன், இத்தனை நேரம் கடினப்பட்டு அடக்கி வந்த கோபம் அப்படியே குரலில் இறங்க, “ஆமா.. உனக்கு எப்ப தான் அறிவு வளரும். நட்ட நடு ரோட்ல ஏதோ திருவிழாவுல தொலைஞ்ச குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்க. 
அந்த ரோட்ல தினம் எத்தனை பேர் நடந்து போறாங்க. அவனுங்க ஏன் உன்கிட்ட மட்டும் ஜெயினை அத்துட்டு போனாங்கன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தீயா. 
உன்னைப் பாக்கும் போதே அவனுங்களுக்கு தெரிஞ்சி இருக்கு சரியான பேக்கு நீன்னு. உன்னைலாம்… எனக்கு வர கோபத்துக்கு.. இதுல நீ தெனாவட்டா என் வண்டியில வேற ஏறமாட்ட. 
நீ இன்னும் கொஞ்ச நேரம் அங்கயே நின்னு அழுது.. போலிஸ் வந்து விசாரிச்சா… நம்ம ஆபிஸ் நேம் ஸ்பாயில் ஆயிடுமேன்னு தான் உன்ன அங்க இருந்து கூட்டிட்டே வந்தேன். உன்னோட ‘தாங்க்ஸ்லாம்’ நீயே வச்சிக்கோ.’’ என்றுவிட்டு மீண்டும் திரும்பி நடக்க யத்தனிக்க, அதுவரை விபத்தின் அதிர்ச்சியில் இருந்தவள் அப்படியே மீண்டாள். 
வேகமாய் தன் கையிலிருந்த கைப்பையை பிரித்து அதிலிருந்து ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்தவள், வேகமாய் அவன் முன் வந்து நின்றாள். கோபத்தில் அவன் கரங்களை பற்றி இழுத்து, அந்த பஞ்சு நிற தாளை அவன் உள்ளங்கையில் தன் பலம் கொண்ட மட்டும் வைத்து அழுத்தினாள்.     
  
அதோடு அவனை உறுத்துப் பார்த்து, “எனக்கு யாரோட பிச்சையும் தேவையில்லை. ஜஸ்ட் ஷட் அப். அண்ட் கெட் அவுட். எனக்கு அட்வைஸ் சொல்ற தகுதி எல்லாம் உனக்கு எப்பவுமே இருக்கப் போறதில்லை. புரிஞ்சதா..?’’ 
அவள் குரல் கோபத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, அவள் கரமோ, மேலும் அழுத்தமாய் அவன் உள்ளங்கையை இறுக்கிக் கொண்டிருந்தது. 
அமுதன் நீரில் மிதந்தபடி தன்னை முறைத்துக் கொண்டிருந்த யாழிசையின் விழிகளை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான். 
ஏனோ அவளை கண்ட நாள் முதல் தனக்குள் நிகழும் பரிமாண மாற்றத்தின் வேர் அறிய மறுத்தது மனம். இன்றைக்கு அவளின் நிலை கண்ட நொடி, தனக்குள் ஏன் இத்தனை பதட்டம் என்ற அவன் உள்மன கேள்விக்கு, அவனே விடை காண முடியா கோபத்தின் கனலை அப்படியே அவள் மீது வார்த்தைகளாய் வடித்திருந்தான்.     
இருவரும் அப்படியே அவரவர் நிலையில் உறைந்து நிற்க, கவிதா தான் இடையிட்டு இருவரையும் உலகிற்கு மீட்டு வந்தாள்.
“இசை… என்ன பண்ற நீ…? சார் கையை விடுடி..?’’ அவள் வந்து யாழிசையை உலுக்க, அவளோ அப்பொழுது தான் மகிழனின் கரம் தன் கரத்தோடு இணைந்திருப்பதை உணர்ந்து வேகமாய் அவன் கையில் இருந்து தன் கரத்தை விலக்கிக் கொண்டாள். 
அவளை உஷ்ணமாய் முறைத்தவன் அவள் கண்முன்னே அவள் கொடுத்த பணத்தை, அங்கிருந்த நேசக் கரங்கள் உண்டியலில் செலுத்திவிட்டு விடுவிடுவென வெளியேறி நடக்கத் துவங்கினான்.  
இயலாமையில் பூங்கொடியின் விழிகளின் உவர் நீர் பெருக்கெடுக்க, வெளியே சடுதியில் நிறம் மாறிய வானமும் வெம்மையாய் தூறிக் கொண்டிருந்தது. 
சலனமாகும். 
 

Advertisement