Advertisement

சலனம் – 19 
பானுமதியின் இல்லத்தை அடையும் போது, யாழிசை அழுது சிவந்த விழிகளோடு பானுமதியின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்தாள். இவரை கண்டதும் எழுந்து அவள் உள் சென்றுவிட, ராஜ் அமைதியாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார். 
அவரை வாங்க என்று வரவேற்றவர், அருந்த நீர் கொடுத்து உபசரித்த பின், கவலைக் குரலில், “இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை. மாப்பிள்ளை ரொம்ப தங்கமான பையன். ஆனா அவங்க வீட்ல இந்த பத்திரிக்கை விஷயம் கேள்விப்பட்டதும் ஒரே பேச்சா வேண்டாம்னு முடிச்சிட்டாங்க. பாலா என்கிட்டே போன்ல ரொம்ப வருத்தப்பட்டார். என்னால பெத்தவங்க பேச்சை மீற முடியாது மாமி சாரின்னு.’’ என்றார். 
“இப்ப நாம என்ன பண்ணலாம் சிஸ்டர். எனக்குமே ஒன்னும் ஓடல. காலையில இசை கூட போட்டோல இருந்த பையனோட அம்மா வீட்டுக்கு வந்திருந்தாங்க. அந்த பத்திரிக்கை மேல கேஸ் பைல் பண்ணலாம்னு. ஒரு முடிவு எடுக்குறதுக்குள்ள…’’ அவர் வேதனையோடு நிறுத்த, 
“பாலா வீட்ல சொந்தத்துக்குள்ள பொண்ணை பிடிச்சிட்டாங்க போல. நிச்சயம் பண்ண தேதியில கல்யாணத்தை நடத்த.. நாமளும் வேணா..’’ பானு முடிப்பதற்குள் அவசரமாய் இடையிட்டார் ராஜ். 
“வேணாம் சிஸ்டர். இப்ப கல்யாணத்துக்கு எந்த அவசரமும் இல்லை. என் பொண்ணு கல்யாணம் அவ வாழ்கையில சந்தோஷமான விசயமா இருக்கனும். அள்ளி தெளிச்ச அவசரமா இருக்கக் கூடாது . இந்த விஷயம் இசை தாத்தா, பாட்டிக்கு சொல்லியாச்சா..?’’ எனக் கேட்டார். 
“இன்னும் இல்ல… அவங்ககிட்ட விஷயம் இப்படின்னு சொல்ல முடியாது. வேற எதையாச்சும் சொல்லி தான் சாமாளிக்கனும். அரவிந்தனும் வரேன்னு சொல்லி இருக்கான். வந்ததும் கிளம்பலாம்னு இருக்கேன்.’’ என்றார் பானு. 
“சரி வாங்க. நானே உங்க ரெண்டு பேரையும் அங்க விட்டுட்டு அப்புறம் வீட்டுக்கு போறேன். இசை எப்படி இருக்கா..? கிட்ட தட்ட ஒரு வருசம் பேசி பழகி இருக்காலே..?’’ என்றார் கேள்வியாய். 
“அவ கல்யாணம் நின்னதை விட தன் போட்டோ இப்படி பத்திரிக்கையில் வந்துடுத்தேன்னு தான் ரொம்ப வாடிப் போறா. அம்மாவை ஒப்பிட்டு எல்லாரும் பேசுவாளே மறுபடின்னு மருகிண்டே இருக்கா. முடிஞ்ச அளவு சமாதானப்படுத்தி வச்சி இருக்கேன்.’’ என்றவர் இசையை கிளப்ப அறை நோக்கி நடந்து விட்டார்.
தன் மகள் மறுகும் சூழலில் தலை கோதி ஆறுதல் அளிக்கா முடியா தன் நிலை எண்ணி உள்ளுக்குள் குமைந்தவர்,  இருவரும் கிளம்பி வந்ததும், தன் வாகனத்தை கிளப்பினார் . 
இருவரும் இசையின் பாட்டி வீட்டை அடையும் போது, லலிதாம்பிகை வீட்டு முற்றத்தில் வற்றலை காய வைத்துக் கொண்டிருந்தார். ராஜை கண்டதும், முகமெல்லாம் பல்லாக, “வாங்கோ…! வாங்கோ…! மாப்பிள்ளை…!” என்று அன்பாய் வரவேற்றார். 
ஆம் ராகவியின் இறப்பிற்கு பின், ரங்காச்சாரி ஓய்ந்து விட, அந்த குடும்பத்தின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றியது ராஜ் தான். மூத்த மருமகன் வீட்டிற்கு அடங்கிய பிள்ளை, ஆகையால் பெரும்பாலும் இவர்கள் தான் பானுவிற்கு சீர் செய்ய வேண்டி இருந்தது. 
அப்போதெல்லாம் கூட, லலிதாவிற்கு ராஜின் மேல் பெரிதாய் பிடிப்பு வந்ததில்லை. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்பு, ரங்காச்சாரி நெஞ்சை பிடித்து சரிய, லலிதாம்பிகை செய்வது அறியாது திகைத்த போது, பானுவின் மூலம் தகவல் அறிந்த ராஜ் நிமிடத்தில் நிகழ்வுகளை மாற்றி அமைத்தான். 
வீட்டிற்கே ஆம்புலன்சை அனுப்பி வைத்து, அவரை பிரபல இருதய சிகிச்சை மருத்துவமனையில் சேர்பித்தான். அடுத்த நாளே விமானத்தின் மூலம் தூத்துக்குடி வந்தவன், அவர் இயல்பிற்கு மீளும் மூன்று நாட்களும் ஒரு மகனைப் போல அருகிருந்து அவரைப் பார்த்துக் கொண்டான். 
பானுமதி பத்திய சமையல் செய்து தர, மற்ற சொந்தங்கள் ஏதோ, அருங்காட்சியகம் செல்பவர்கள் போல அவ்வப்போது எட்டிப் பார்த்து சென்றனர். அவ்வளவே.
அப்போது தான், ஜாதி, மதத்தை விட சக மனிதனின் மனிதம் முக்கியம் என்பதை லலிதா உணர்ந்தார். அன்றிலிருந்து மருமகனின் மேல் அவருக்கு பிரியம் கூடியது. இப்படி ஒரு நல்லவருடன் தன் மகளுக்கு வாழக் கொடுத்து வைக்காமல் போய் விட்டதே என்று கூட வருந்தினார். 
மூவரும் வீட்டிற்குள் நுழைந்ததும், யாழிசை மீண்டும் மௌனமாய் தன் அறையை தஞ்சம் அடைந்தாள். பேத்தியின் முக மாற்றம், லலிதாவின் கருத்தில் பதிந்தாலும், அது குறித்து இப்போது பேச வேண்டாம் என்று முடிவெடுத்தவர், வந்தவர்கள் அருந்த சூடான பானம் தயாரித்து கொண்டு வந்தார். 
அதற்குள் அரவிந்தனும் அங்கு வந்து சேர, இப்போது அவர் மனதிற்குள் எச்சரிக்கை மணி அடிக்க துவங்கியது. லலிதாவை பார்த்து, “மாமி… மாமாவை சித்த வெளிய வர சொல்றேளா…? ஒரு விஷயம் சொல்லணும்.’’ என்றார் அரவிந்தன். 
“ஏன்..? என்னாச்சு..? இன்னைக்கு சுமங்கலி பொண்டுகள் பூஜை வைக்கிறதா சம்மந்தி ஆத்துல சொல்லிண்டு இருந்தா. இதுவரை ஒரு போனையும் காணோம். மாப்பிள்ளை ஆத்துல ஏதாச்சும் பிரச்சனையா..?’’ என்று சரியாக பிரச்சனையின் வேர் பிடித்தார் லலிதா. 
“சொல்றேன் மாமி. முதல்ல நீங்க மாமாவை அவர் அறையில இருந்து அழைச்சிண்டு வாங்கோ. ஒண்ணா பேசிடலாம்.’’ என சொல்ல, குழம்பிய முகத்துடன் கணவரை அழைத்து வர அவர் அறைக்குள் நுழைந்தார். 
உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட ரங்காச்சாரி, ராஜை கண்டதும், “வாங்கோ மாப்பிள்ளை. சேமமா இருக்கேளா…?’’ என்று அவரை நலம் விசாரித்து முடித்த பின்னரே, மற்றவர்களின் பால் தன் கவனத்தை திருப்பினார். 
அரவிந்தனும் முகமன்கள் முடிந்த பின்னர், “இதை எப்படி பெரியவாகிட்ட சொல்றதுன்னு தெரியல. ஆனா சொல்லாமலும் இருக்க முடியாது. நேத்தைக்கு பாலாவுக்கு ஏதோ சின்ன ஆக்சிடன்ட் ஆயிடுத்தாம்.’’ என சொன்ன மறுவிநாடி, லலிதா, “பகவானே…!’’ என்று அலறியிருந்தார். 
“ரொம்ப வருத்தப்படாதீங்கோ மாமி. அவா ஆத்துல, நிச்சயத்துக்கு அப்புறம்  நடக்குற மூணாவது அசம்பாவிதமாம். அதனால அந்த மாலா மாமியோட ஓர்படி, அவாளுக்கு ரொம்ப தெரிஞ்ச இடத்துல ஜாதகம் பார்க்க அழைச்சிண்டு போயிருக்கா. 
அவா… நம்ம யாழ் ஜாதகத்தையும் பார்த்துட்டு, ரெண்டு பேருக்குமே கிரக அமைப்பு சரியில்லை. அதனால ஒன்னு பொண்ணை மாத்துங்கோ. இல்ல கல்யாணத்தை தள்ளிப் போடுங்கோன்னு சொல்லி இருக்கா. 
பாலாவுக்கு முப்பது நெருங்கிடுத்து இல்லையா. அதோட மறுபடி அமெரிக்காவுக்கு வேற போகணும். அதனால அவா சொந்தத்துல ஒரு பொண்ணை பார்த்து முடிக்கப் போறாளாம். 
காலையில தான் பாலாவோட தோப்பனார் வந்து சொல்லிட்டு போனார்.  எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வேண்டாம்னு வீம்பா சொல்றவாகிட்ட நாம கெஞ்சிண்டும் இருக்க முடியாது. என்ன சொல்றேள் மாமா நீங்கோ…?’’ 
பாலாவின் கேள்விக்கு ரங்காச்சாரி, ராஜின் முகம் பார்த்தார். “என்னவோ போடா அம்பி. இந்த காலத்துல மனுசா நெஞ்சுல ஈரமே இல்லாம போயிண்டு இருக்கு. இன்னும் பனிரெண்டு நாள்ல கல்யாணம்னு வந்து நிக்கரச்சே… பாவம் அந்த குழந்தை மனசு என்ன பாடுபடும். அவா எல்லாரையும் அந்த பகவான் பார்த்துப்பான். இனி என்ன செய்றதுன்னு அவ தோப்பனார் தான் முடிவு செய்யணும். சொல்லுங்கோ மாப்பிள்ளை.. நாம என்ன செய்யலாம்..?’’ என்று பொறுமையாகவே விசயத்தை கையாள முயன்றார். 
ஆனால் லலிதாம்பிகை நடப்பை ஏற்க முடியாமல் வார்த்தைகளை சிதற விட்டார். “அவ அம்மா ஜாதகத்தை அப்படியே கொண்டுன்னு இருக்கா. எல்லாம் அவ பிறந்த நேரம். பாலா மாதிரி ஒரு நல்ல வரனை இனி நாம தேட முடியுமா..?’’ என்று நா தழு தழுக்க கேட்டபடி, துளிர்த்த கண்ணீர் துளிகளை புடவை முந்தானையில் துடைத்தார். 
எதை எதற்கு இணை கூட்டுகிறார்கள் என்று ராஜிற்கு எரிச்சல் மூண்டது. ஆனால் அதை அவரிடம் காட்ட முடியாதவன் மனதில் முதன் முதலாக, யாழிசையின் வளரிடம் குறிந்த பேரச்சம் தோன்றியது. 
உள்ளுக்குள் எது அவனை உந்தியதோ, “இப்போதைக்கு மறுபடி கல்யாணம் பத்தி பேச்சு வேண்டாம் சார். நான் யாழிசையை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். இங்க சொந்தகாரங்ககிட்ட எல்லாம் மாப்பிள்ளைக்கு ஆக்சிடன்ட் அதானால கல்யாணத்தை தள்ளிப் போட்டு இருக்கோம்னு சொல்லி பிரச்சனைய முடிங்க. அடுத்த சம்மந்தம் கொஞ்சம் நிதானமாவே பார்க்கலாம்.’’ என்று முடித்துவிட்டான். 
பானுமதிக்கு இப்போது தான் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது. யாழிசை இங்கிருந்தால், நிச்சயம் தன் தாய் புலம்பி தீர்த்தே அவளை ஒரு வழி செய்து விடுவார் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். 
ஆக ராஜை நன்றியோடு பார்த்தார். ரங்காச்சாரியும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ள, லலிதாவும் பேத்தி கொஞ்ச நாள் தந்தையின் வீட்டில் சீராடிவிட்டு வரட்டும் என்று அனுப்ப உடன்பட்டார். 
இவள் வீட்டில் இருந்தால் எப்படியும் அவளை வார்த்தையால் வதைப்போம் என்பதை அவரும் உணர்ந்தே இருந்தார். வயோதிகமும் சேர  என்ன முயன்றும் அவரின் வெட்டு வார்த்தைகளை அவரால் மாற்றிக் கொள்ளவே முடியாது போயிற்று. 
இந்த ஏற்பாட்டிற்கு மனதளவில் எதிர்ப்பு தெரிவித்தவள் யாழினி மட்டுமே. ஆனால் அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. பாட்டியின் பேச்சை கேட்டுக் கொண்டு அந்த வீட்டில் இருப்பதும், தணலின் மேல் நிற்பதும் ஒன்றென்பதால், பிடிக்காத தந்தையின் வீட்டில் இருபது மேல் என பேசாமல் தன் உடமைகளை தயார் செய்தாள்.   
 
அமுதனின் வீட்டில் ரியாஸ் சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். வரும் போது இருந்த மன அழுத்தம் தற்சமயம் அவனிடமிருந்து விடை பெற்றிருந்தது. 
“நான் கிளம்புறேன் ஆன்ட்டி. வரும் போது என்ன நடக்குமோன்னு பயம் இருந்துச்சு. இப்ப அது இல்ல. அமுதன் சோ லக்கி. உங்களை மாதிரி ஒரு அம்மா கிடைக்க. அது எப்படி ஆன்ட்டி. ஒரே பால்ல டோட்டல் டீமையும் அவுட் பண்ணிடீங்க…!’’ என்றான் பெருமை பொங்க. 
அவனைப் பார்த்து லேசாய் புன்னகைத்தவர், “நான் பெருசா ஒன்னும் பண்ணல ரியாஸ். கொஞ்சம் நம்ம சமூகத்தோட சைக்காலஜியை புரிஞ்சி வச்சிருக்கேன் அவ்ளோ தான். நீ முதல்ல விசயத்தை சொன்னதும் என்ன பண்றதுன்னு முதல்ல எனக்கு ஒன்னும் புரியல. 
ஆனா அந்த வீடியோ பார்த்ததும் தான் மூளைக்குள்ள ஒரு மின்னல் வெட்டுச்சி. என்ன தான் பசங்க அமெரிக்கா போனாலும், ராக்கெட்ல செவ்வாய் கிரகமே போனாலும் அவன் பொண்டாட்டி இன்னொரு ஆம்பிளை பக்கத்துல நெருங்கி கூட நிக்க கூடாது. 
அது தானே உலக வழக்கம். இப்படி ஒரு சென்சிடிவ் விசயத்தை கையில் எடுத்தா கண்டிப்பா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒதுங்கிப் போவாங்கன்னு நினச்சேன். சேகர் கூட ப்ளான் பண்ணி அவன் எடிட்டரா இருக்க பத்திரிக்கையில நியூஸ் வர வச்சி.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வாட்ஸ் அப் வரைக்கும் கொண்டு போய் சேர்த்துட்டேன். மிச்ச மீதி வேலையை அவங்க பார்த்துட்டாங்க. சோ சிம்பிள்.’’ என்றார். 
தானும் அவரை பார்த்து முறுவலித்தவன், “இதெல்லாம் யாழ் அமுதன் கல்யாணம் நடக்க தானே செய்றீங்க. நடத்துங்க…! நடந்துங்க…! ஆன்ட்டி பேசாம லவ்வர்சை சேர்த்து வைக்க நாம ஒரு ஏஜென்சி நடத்தினா என்ன…? வெளிநாட்டுக்காரன் இங்கிலீஷ்ல ஆத்து ஆத்துன்னு ஆத்துற சொற்பொழிவை கேட்டு காது தீஞ்சி போச்சு ஆன்ட்டி. நாம பார்ட்னர்ஷிப்பா பார்ட் டைம்ல அந்த பிஸ்னசை தொடங்கலாம். என்ன சொல்றீங்க..?’’ என்றான் கேலியாய். 
அவன் காதை பிடித்து லேசாய் திருகியவர், “படவா ராஸ்கல்…! இரு இரு… அந்த சீனியர் கேஸ் மேட்டரை தூசு தட்றேன்.’’ என்று அவரும் அவனை போலியாய் மிரட்டினார். 
சேகர் உள்ளே வரவும் அவர்களின் பேச்சு வார்த்தை தடைபட்டது. “கார் ரெடி பையா. ரயில்வே ஸ்டேசன் போலாமா…? உங்க ஆன்ட்டி உன்னை வழி அனுப்ப ஸ்பெஷலா என்ன செஞ்சாங்க…?’’ என்றபடி இருக்கையில் அமர்ந்தார். 
“அது அங்கிள் நைட் புல்லா ட்ராவல் பண்ணி வந்து ஆன்ட்டி செம டையர்ட். சோ இன்னைக்கு சமையல் நான் தான். அது வேற ஒன்னும் இல்ல அங்கிள். நைட் செஞ்ச சாதம் மீந்து போச்சு. அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி பழைய சோறும்.. பச்சை மிளகாவும் சமைச்சி இருக்கேன். கொண்டு வரவா..? சாப்பிடுறீங்களா..? பாவம் உங்க மூஞ்சை பார்த்தா வேற பல நாள் பட்டினி கிடந்தவர் மாதிரி இருக்கீங்க.’’ என்று சிரியாமல் சொன்னவன், சமையலறை நோக்கி நடக்க, உண்மையில் சேகர் மிரண்டே போனார். 
ரியாசின் குறும்பில், அருள் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, கண்களில் நீர் வரும் அளவு பொங்கி பொங்கி சிரித்தார். அருள் சிரிக்கவும் தான் அவன் தன்னை கேலி செய்கிறான் என்பதை உணர்ந்த சேகர், 
“டேய்…! நான்லாம் டெரர் பத்திரிக்கை எடிட்டர்டா…! என்னையே காமெடி பீசாக்கி விளையாடிட்டு இருக்கியா..? அருள் இந்தப் பையன் மேல ஏதோ கேஸ் போடலாம்னு சொன்ன இல்ல. முதல்ல அந்த பைலை தூசி தட்டு. இவன் என்ன எனக்கு பழைய சோறு போடுறது. நான் இவனுக்கு போடுறேன் களி.’’ என்று தன் பங்கிற்கு தானும் போட்டு தாக்கினார். 
“ஐயோ…. அங்கிள். அந்த கேசை நீங்களும் நியாபகம் வச்சி இருக்கீங்களா. ஆன்ட்டி மஸ்ரூம் பிரியாணி தான் செஞ்சாங்க. எனக்கு பேக் பண்ணி தந்த என்னோட பங்கை கூட உங்களுக்கே கொடுத்துடுறேன். ப்ளீஸ் அந்த கேசை மட்டும் கொஞ்சம் மறந்துடுங்க அங்கிள்.’’ என்றான் பாவமாய். 
இப்போது மற்ற இருவரும் பொங்கி சிரிக்க, ரியாஸ் பாவமாய் நின்றுக் கொண்டிருந்தான். அவன் முதுகில் ரெண்டு தட்டு தட்டியவர், “வா பையா போலாம். அருள் உன் பையன் கூட்டாளிங்க எல்லாம் அவனைப் போலவே அறுந்த வாலுங்க தான்.’’ என்றவர் எழுந்து முன்னால் நடக்க, ரியாசின் உடமைகளை அருள் தன் கையில் எடுத்துக் கொண்டார். 
“நீ கேட்ட இல்ல.. உங்க பையன் கல்யாணம் யாழிசையோட நடக்க தான் இந்த காரியத்தை செஞ்சீங்களான்னு. கண்டிப்பா இல்லை ரியாஸ். ஒரு குட்டிப் பொண்ணுக்கு அவளோட அப்பா பாசம் கிடைக்கவும், ஒரு வளர்ந்த பொண்ணு அவ வாழ்கையில அவ முடிவை தானே எடுக்கவும் தான் அந்த காரியத்தை செஞ்சேன்.’’ என சொல்ல, ரியாஸ் அதிர்ச்சியில் நடப்பதை நிறுத்தினான். 
அவன் கண்களில் ஆச்சர்யத்தை உணர்ந்தவர், ‘ஆம்’ எனபதைப் போல இமைகளை தாழ்த்தி, “தூத்துக்குடியில இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி நான் மட்டும் தனியா யாழ் அப்பாவை சந்திச்சு பேசினேன். நீ சொன்ன டைரி கதையை ஒன்னு விடாம அவங்க அப்பாகிட்ட சொன்னேன். 
நடந்து முடிஞ்ச எதையும் இனி மாத்த முடியாது. ஆனா நடக்க போறதை நல்ல விதமா மாத்தி அமைக்க முடியும்னு சொல்லிட்டு வந்தேன். அவருக்கு புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன். 
மத்தபடி யாழிசை, அமுதன் காதல் அவங்க சொந்த விசயம். அதை அவங்க தான் முடிவு பண்ணனும். அதுல எல்லாம் நான் எப்பவும் தலையிடப் போறதா இல்லை.’’ என்றார். 
‘அப்போ அமுதன் யாழிசை காதல்…?’ என அவன் உள்ளம் சிந்திக்க, அவன் உள்ளத்தின் கேள்வியை விழிகளில் வாசித்தவர், “அதை அவங்களும், காலமும் தான் முடிவு செய்யணும். நீ சமர்த்தா சென்னைக்கு போடா. திருச்சி போகும் போது எல்லாம் இங்கயும் வா. இந்த நாலு நாள் எனக்கு என்னவோ அமுதன் கூடவே இருந்தது போல இருந்துச்சி.’’ என்றார் மகிழ்வாய். 
மீண்டும் இருவரும் நடக்க துவங்கி இருக்க, வாகன நிறுத்துமிடத்தை நெருங்கி இருந்தனர். வாகனத்தின் உள் ஏறும் முன், “லவ் யூ மம்மி…!’’ என்றவன், அவரை லேசாய் அணைத்து விடுவிக்க, “மீ..டூ ரியாஸ்.’’ என்றார் புன்னகையுடன். 
“நீங்க கொஞ்சுனது போதும். ட்ரைனுக்கு டைம் ஆச்சு. நீ ஏறு பையா.’’ என்று ரியாசை அவசரப்படுத்த, “பொறாமையா ஓல்ட் மேன்.’’ என்று அவரை நக்கலடிதபடியே காரில் ஏறினான். 
“இல்லைங்க சீனியர்.’’ என்ற அவரின் ஒற்றை பதிலில், அவன் கப் சிப்பாக, சிரித்தபடி அவர் வாகனத்தை கிளப்பினார் இரயில் நிலையம் நோக்கி. 
அன்றைய இரவு முழு நிலவு வானில் முழுதாக ஒளி பரப்பிக் கொண்டிருக்க, வேண்டா வெறுப்பாய் தன் அருகில் அமர்ந்திருந்த மகளுக்கு, தானே வடிவமைத்த தொலைநோக்கியின் மூலம், வானத்து நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார், காலம் தவறி தன் கடமையை ஏற்றிருந்த அந்த தந்தை. 
சலனமாகும். 
  

Advertisement