Advertisement

சலனம் – 18 
அந்த அறையில் நிசப்தம், அசௌகர்யமான மௌனமாய் சூழ்ந்திருந்தது. நடக்கும் நிகழ்வுகளை நம்ப முடியா பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான் ரியாஸ். அருள் அம்மாவை இதுவரை சாதாரண இல்லத்தரசியாய் மட்டுமே பார்த்திருக்கிறான்.
வாழ்வில் முதன் முறையாக அவரை உடல் முழுக்க மூளை கொண்ட வழக்கறிஞராக காண்கிறான். ரியாஸ் சேலம் சென்ற போது, அவனை வரவேற்றவரிடம், முதலில் தயங்கினாலும், பின்பு ஆதி முதல் அந்தமாய் நடந்த அத்தனையையும் ஒன்று விடாது ஒப்புவித்து முடித்தான். 
முதலில் அருள், அவனை அதிர்ந்து பார்த்தவர், சற்று நேரம் ஒன்றும் பேசாமல் மௌனத்தில் ஆழ்ந்தார். பிறகு, “என் பையன் வாழ்கையில எனக்கு தெரியாம எந்த விசயமும் இல்லைன்னு நினச்சிட்டு இருந்தேன்.’’ என்றவர் நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினார். 
ரியாஸ் அறிவான். நிச்சயம் இவ்விடயம் அவரை வருத்தத்தில் ஆழ்த்தும் என்பதை. ஆனால் அவனும் தான் என் செய்வான். நிகழ்வுகளின் கணம் தாங்காமல், அருளிடம் சரண் புகுந்திருந்தான். 
அவனிடம் ஏதும் பேசாது இரவு உணவை சமைத்தவர், இருவரும் உண்டு முடித்ததும், “ஏன் ரியாஸ் .. நீங்க இங்க ட்ரிப் வந்தப்ப எடுத்த போட்டோஸ் எல்லாம் இருக்கா..?’’ என வினவினார். 
அதை எதற்கு தற்போது கேட்கிறார் என்று புரியாவிட்டாலும், “பிரண்ட் ஒருத்தன் டிஜிட்டல் கேமரால எடுத்தான். அதுக்கு அப்புறம் நடந்த பிரச்சனயில நான் அதை மறந்தே போயிட்டேன். இருங்க உடனே அனுப்ப சொல்றேன்.’’ என்றவன் வாசுவை தொடர்பு கொண்டான். 
“ப்ரோ… மறந்தே போயிட்டேன் பாருங்க ப்ரோ. இருங்க என்னோட மெமரி கார்ட்ல இருக்குற எல்லா போட்டோசையும் உங்க மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்குறேன். நீங்க அப்புறம் பொறுமையா நம்ம ஆபிஸ் வாட்ஸ் அப் க்ரூப்ல ஷேர் பண்ணிடுங்க.’’ என்றவன் அலைபேசியை துண்டித்தான். 
அருளும், ரியாசும் கணினி முன் அமர்ந்தனர். வாசுவோ எந்த புகைப்படத்தையும் ஆரயாமல், கடனே என்று ரியாசிற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். இறுதியில் ஒளிப்பதிவாகியிருந்த காணொளியையும் சேர்த்து. 
  
முதலில் இருந்த புகைப்படங்களில் எல்லாம், யாழ் கடனே என்று புன்னகைத்து இருந்தாள். அமுதனை கூட எங்கே நிற்கிறான் என தேட வேண்டி இருந்தது. 
அடுத்தடுத்து அமுதனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்பட தொகுப்பு நீள, அருள் உச்சு கொட்டிய படியே ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்துக் கொண்டிருந்தார். 
இவர் இதையெல்லாம் எதற்காக பார்க்கிறார் எனப் புரியாவிட்டாலும், ரியாசும் அவரோடு சேர்ந்து அந்த புகைப்படங்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். 
இறுதியில் புகைப்படங்கள் ஓய்ந்திருக்க, காணொளிகள் துவங்கியது. முதலில் இருளில் மூழ்கி இருந்த காணொளியை கண்டவர், அது தங்கள் வீட்டில் கொல்லைப்புறம் என்பதை உறுதி செய்ததும், “இதையெல்லாம் என்னத்துக்கு  உன் பிரண்ட் விடீயோ எடுத்து வச்சி இருக்கான்..?’’ என ரியாசை கேள்வி கேட்டார். 
‘இது அவன் எடுத்த வீடியோ இல்லைன்னு நினைக்கிறேன் ஆன்ட்டி. கேமராவை உங்க வீட்டு பேக் சைட் மறந்து வச்சிட்டு மார்னிங் எடுத்தா சொன்னான். அந்த புல் டைமும் விடீயோ வேற ஆன்ல இருந்ததும்னும், அதையெல்லாம் டெலிட் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தான். மறந்துட்டான் போல. பைலை எல்லாம் கம்ப்ரஸ் பண்ணி அனுப்பி இருக்கான். அதான் எல்லாமே ரிசீவாகி இருக்கு ஆன்ட்டி.’’ என்றவன் அந்த இருட்டு காணொளியை அசுவாரசியமாக கணினியின் திரையில் நகர்த்திக் கொண்டிருந்தான். 
அவர்கள் எதிர்பார்க்காத நொடியொன்றில் திரையில் யாழிசை தோன்றினாள். அப்போது தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து கொள்ளப் போன அருள், அவளை திரையில் கண்டதும் மீண்டும் இருக்கையில் அமர்ந்தார். 
அவள் அமர்ந்த சில வினாடிகளில் அமுதன் அங்கு வந்து சேர்ந்தான். புகைப்படக் கருவி, சற்றே தொலைவில் இருந்தது ஆகையால் அவர்கள் பேசிக் கொண்டது எதுவும் காணொளியில் தெளிவாக கேட்டகவில்லை. 
ஆனால் அவர்கள் முகம் வெளிப்படுத்திய உணர்வை இருவராலும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் எதிர்பார்க்கா நொடியொன்றில் இருவரும் முத்தமிட்டுக் கொள்ள, ரியாஸ் சுய உணர்வை அடைந்து, படக்கென அக்காட்சியை நிறுத்தினான். 
முதலில் அருள் திகைத்தார் என்றாலும், அதன் பிறகு பெரிதாய் வெடித்து சிரித்தவர், ‘பாரேன்டா ரியாஸ்…! உன் பிரண்ட் பண்ற காரியத்தை. நான் தான் இவனை சாமியார் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வச்சி இருக்கேன். இவன் பெரிய ஆசிரம சாமியா வருவான் போல இருக்கு. ஆனா இவ்ளோ பிரியத்தை வச்சி இருக்கற பொண்ணு ஒதுங்கிப் போறதை நினைக்கும் போது தான் வருத்தமா இருக்கு. சரி நீ போய் தூங்கு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.’’ என்றவர் அவனை கிளப்பி விட்டு விட்டு, கணினியை நோண்ட துவங்கினார். 
ரியாசிற்கு மனதில் இருந்த வேதனையை எல்லாம் பகிர்ந்திருந்ததாலோ என்னவோ சுகமாய் விழிகளில் தூக்கம் நர்த்தனமாட, அவன் வேறு எதுவும் பேசாமல், அமுதனின் அறைக்கு சென்று நித்திரையில் ஆழ்ந்தான். 
மறுநாள் சென்னை கிளம்ப முனைந்தவனை, மேலும் இரு நாட்கள் தங்கி செல்லுமாறு அருள் நிறுத்தி வைத்தார். அவன் ஏற்கனவே ஒரு வார விடுப்பிற்கு விண்ணப்பித்து இருந்ததால் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் அவர் வார்த்தைக்கு இணங்கினான். 
ஆனால் இரு நாட்கள் கழித்து அவர்களின் பயணம் தூத்துக்குடி நோக்கி துவங்கியதில் இருந்து ஆரம்பித்தது அவனுக்கான அதிர்ச்சி. இவர்களோடு அருளின் தோழரான சேகரும் பயணத்தில் இணைந்தார். 
அதிகாலையில் அவர்கள் ஊரை அடைய, ஒரு விடுதியில் தங்கி தங்களை தூய்மை செய்து கொண்டவர்கள் அடுத்து சென்ற இடம், இருதயராஜின் வீடு. 
ஆம், தன் கடல் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், இருதயராஜ் சொந்த ஊரில் வந்து அடைக்கலமாகியிருந்தார். அவரின் இரு பிள்ளைகளும், சென்னையிலிருந்த பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவிகளாய் இருந்தனர். 
‘இது யார் வீடு..? இங்கு எதற்கு வந்திருக்கிறோம்..?’ என ரியாஸ் புரியாமல் அமர்ந்திருக்கும் போது, இருதயராஜ் வரவேற்பறைக்கு வந்து சேர்ந்தார். வந்தவர்களை வரவேற்றவர், “நீங்க யாருன்னு தெரியலையே. என்ன விசயமா என்ன பார்க்க வந்து இருக்கீங்க..?’’ என வினவினார். 
அருளின் முகம் அந்த வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே கம்பீரத்தை தத்தெடுத்திருக்க, “ஐயம் அட்வகேட் அருள்மொழி. ஒரு பர்சனல் கேஸ் விசயமா உங்ககிட்ட பேச வந்து இருக்கோம். உங்க டாட்டர் தானே யாழிசை…?’’ என்று பதில் கொடுத்தார். 
“எஸ்… யாழிசை என்னோட பர்ஸ்ட் டாட்டர். ஆனா நீங்க சொல்ற கேஸ் விஷயம் எனக்கு ஒன்னும் புரியலையே…?’’ என்று ராஜ் தன் தாடையை தடவினார். 
அதே நேரம் ஷாலினி வந்திருந்தவர்களுக்கு தேநீர் சுமந்து வர, சற்று நேரத்திற்கு அவர்களின் பேச்சு வார்த்தை தடைபட்டது. தேநீரை அருந்தி முடிந்த பின், “இத பார்த்தா உங்களுக்கு புரியலாம்…!’’ என்று தமிழகத்தின் மிகப் பிரபலமான செய்தி வார இதழ் ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினார். 
‘விசிறி.’ என்ற தலைப்பின் கீழ், உண்மைக்கு மட்டும், என்று பொறிக்கப்பட்டிருந்தது. நூலின் முகப்பிலேயே, ‘காக்டெயில் கலாச்சராம்… கெட்டு சீரழியும் ஐ.டி உலகம்..’ என்ற செய்தி பொறிக்கப்பட்டிருக்க, அமுதன், யாழிசையை நெருங்கி அணைத்திருந்த புகைப்படம் மிகத் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தது. 
அதைக் கண்டதும், ராஜின் முகம் மாறிவிட, ‘வாட்..?’’ என்ற அதிர்ச்சியோடு, அவர் எழுந்து நின்றார். ஆனால் அருள் அவரின் எதிர் வினைக்கு மாறாக, பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “சார்… டென்சன் ஆகமா உக்காருங்க. அப்ப தான் நாம நிதானமா பேச முடியும்.’’ என்றார். 
“எப்படி டென்சன் ஆகாம இருக்க முடியும் மேடம். என் பொண்ணுக்கு இன்னும் டுவல் டேஸ்ல மேரேஜ். இப்ப போய் இப்படி அவளை பத்தி நியூஸ் வந்தா.. அது அவ பியூச்சரை எவ்வளவு பாதிக்கும். ஓ மை காட். இந்த நியூஸ் போட்டவங்களை நான் சும்மா விடப் போறதில்லை.’’ என்றவர் தன் அலைபேசியை தேடினார். 
“நானும் அதே தான் சொல்ல வந்தேன் சார். நானும் இந்த பத்திரிக்கை மேல மான நஷ்ட வழக்கு போடத் தான் போறேன். ஏன்னா உங்க பொண்ணு பக்கத்துல இருக்குறது என் பையன். அவனுக்கும் இன்னும் மூணு மாசத்துல கல்யாணம். எனக்கும் காலையில இருந்து பொண்ணு வீட்ல இருந்து போன் மேல போன். என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.’’ என்றார். 
ராஜ் ஒன்றும் பேச முடியாமல் சற்று நேரம் அமைதியில் மூழ்கினார். அந்த அறையே அசௌகரியமான அமைதிக்குள் மூழ்கியது. பின்பு சற்றே நிதானம் கொண்டவராக, அந்த தலைப்பின் கீழ் வெளி வந்திருந்த கட்டுரையை முழுமையாக வாசித்து முடித்தார். 
ஐ.டி ஊழியர்கள் வார இறுதி நாட்களில் கொண்டாட்டம் என்ற பெயரில் காம கேளிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் கலாசாரத்தை சீரழிப்பதாக பெரிதாய் கதா காலட் சேபம் செய்து நீண்டிருந்தது அக்கட்டுரை. 
சமீபத்தில் நடந்து என, நிறுவன பெயர் தவிர்த்து, ஏற்காடு கொண்டாட்டத்திற்கு வேறு சாயல் பூசி கட்டுரையாக்கியிருந்தனர். அந்த கட்டுரையை வாசித்து முடித்தவர், அருளை நிமிர்ந்து பார்த்து, 
“இது உண்மையா இருக்க வாய்ப்பில்லை மேடம். என் பொண்ணு ஆபிஸ்ல ஏதோ பெரிய ஆர்டர் கம்ப்ளீட் பண்ணதுக்காக நடந்த பார்ட்டி அது. அவங்க பெரியம்மா என்கிட்ட சொல்லிட்டு தான் அவளை அங்க அனுப்பினாங்க. இப்ப நாம என்ன செய்யலாம்..?’’ என வினவினார். 
“ஆமா சார். இதுல இருக்க மேட்டர் உண்மை இல்லை. இது எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியும். ஆனா ஊர் உலகத்துக்கு தெரியாதே. என் பையன் ரொம்ப ஸ்மார்ட் சார். அவனுக்கு கீழ இருந்த சீனியரை விட நல்லா பர்பார்ம் பண்ணி இப்ப ஆன்சைட் போயிட்டான். 
இவனை கண்டாலே அந்த சீனியருக்கு ஆகாது. இவனை பழி வாங்க நேரம் பார்த்துட்டே இருந்தான். என் பையன் பார்த்டே பார்ட்டிக்கு ஆபிஸ் மொத்தமும் எங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க. 
  
அப்போ மொட்டை மாடியில பரத்டே பார்ட்டி நடக்கும் போது, யாரோ சாப்பிட்டு போட்டுட்டு போன, கேக் பேப்பர் வழுக்கி உங்க பொண்ணு விழப் போனாங்க. பக்கத்துல இருந்த என் பையன் தாங்கிப் பிடிச்சி நிறுத்தினான். 
இவ்ளோ தான் சார் நடந்தது. ஆனா, பார்டியில போட்டோ எடுத்துட்டு இருந்த அந்த பிராட், அதையும் போட்டோ எடுத்து இருக்கான். மீடியால இருந்த அவன் பிரண்ட்கிட்ட சொல்லி இப்படி நியூஸ் போட வச்சி இருக்கான்.
அந்த நியூஸ் போட்ட பையனையே நேரா பார்த்து விசாரிச்சிட்டு தான் இங்க வரோம். கேஸ் பைல் பண்ணனும்னா பாதிக்கப்பட்டவங்க நேரடியா கம்ப்ளைன்ட் கொடுக்கணும். 
அப்ப தான் கேஸ் ஸ்ட்ராங்கா நிக்கும். இப்ப என் பையன் அமெரிக்கால இருக்கான். அவனால நேரடியா வந்து கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாது. அதானால தான் உங்க பொண்ணை கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லலாம்னு வந்து இருக்கோம்.’’ என்றார். 
ராஜ் சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தவர், “நீங்க சொல்றது எல்லாம் சரி தான் மேடம். ஆனா என் பொண்ணுக்கு இன்னும் பனிரெண்டு நாள்ல கல்யாணம். அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.’’ என்றார். 
அதுவரை மௌனமாய் இருந்த சேகர், “என்ன சார் நீங்க இப்படி பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க. பொண்ணுங்க ராக்கெட்ல போற காலம் இது. இப்ப போய்… ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க இப்படி யோசிக்கிறீங்க. அதுவும் உங்க பொண்ணு பேர்ல தப்பே இல்லைங்கிறப்ப நீங்க ஏன் சார் பின்வாங்கனும்.’’ என்றார். 
ராஜ் சிந்தனையில் ஆழ்ந்த போதே, அவரின் அலைபேசி அலறியது. அதை ஏற்றவர், “வாட்..!’’ என்று அலறினார். பின்பு முகம் கோபத்தில் மின்ன, “என் பொண்ணு மேல நம்பிக்கை இல்லாதவங்களுக்கு எதையும் நிரூபிச்சி இந்த கல்யாணத்தை நடத்தனும்னு எந்த அவசியமும் இல்லை சிஸ்டர். நீங்க ஒன்னும் வொரி பண்ணாதீங்க. நான் உடனே கிளம்பி அங்க வரேன்.’’ என்றவர் அழைப்பை துண்டிக்க, அவருக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த மூவரும் எழுந்தனர். 
“சாரி சார்…! நீங்களே கொஞ்சம் பிரச்சனையில இருக்கீங்க போல. நாம அப்புறம் மீட் பண்ணலாம். இது என்னோட விசிடிங் கார்ட். நீங்க ப்ரீ ஆனதும் கூப்பிடுங்க.’’ என அருள் சொன்னதும், ராஜ் தலை அசைக்க, மூவரும் வெளியே வந்தனர். 
வெளியே வந்தவர்கள், வந்து வாகனத்தில் அமரும் வரை ரியாஸ் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் வாகனம் புறப்பட்டதும், “எப்படி ஆன்ட்டி இப்படி ஒரு ப்ளோல புருடா விடுறீங்க. ஒரு நிமிஷம் நானே ஆடிப் போயிட்டேன். அது என்ன புது வில்லன் கேரக்டர் சீனியருன்னு. ஆனா அட்டைபடம் அவ்ளோ ரியலிஸ்டிக்கா இருக்கு.  ரெண்டு நாள்ல கேப்ல என்னென்ன வேலை பார்த்து இருக்கீங்க. செம ஆக்சன் ஹீரோயினி நீங்க.’’ என்று கைகளை தட்டினான். 
அவனை பார்த்து மந்தகாசமாய் புன்னகைத்தவர், “தம்பி நம்ம கதையில வில்லன் புதுசு எல்லாம் இல்ல. ரொம்ப பழைய ஆளு தான். ஆமா ரியாஸ் நீ என் பையன் வேலையில ஜாயின் பண்றதுக்கு ஒரு மூணு மாசம் முன்னாடி ஜாயின் பண்ணிட்ட தானே…?’’ என்று கேட்டு வைத்தார். 
சற்று நேரம் அவரின் கேள்விக்கு பதில் புரியாமல் விழித்தவன், புரிந்ததும், ‘ஆன்ட்டி..!’’ என்று அலற, வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த சேகரோ பின்னால் திரும்பி, “நீ கவலைப்படாத பையா…! உன்னை ஜாமீன் எடுத்து ஜம்முன்னு பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.’’ என்று சிரித்து வைத்தார். 
“உங்க  பையன் கல்யாணம் நடக்க, என்னை களி திங்க வைக்க பிளான் போடுறீங்களே… சரியான பேட் ஆன்ட்டி. யா அல்லா… இந்த சதியில இருந்து என்னை காப்பாத்துப்பா…! இனி எவன் எக்கேடு கெட்டா எனக்கு என்னன்னு நான் பாட்டுக்கு பகாடியாவை உள்ள தள்ளிட்டு பெட்ல பகுமானமா குப்புற அடிச்சி தூங்கிடுறேன்.’’ என்று கடவுளுக்கு ஒரு அவசர வேண்டுதலை அனுப்பி வைத்தான். 
ஆனால் அவன் உள்ளக்கிடக்கை உணர்ந்தார் போல. அருள், ‘வாய்பில்லை ராசா… வாய்பில்லை…’’ என்று பாவத்துடன் கூறியவர், தன் கைப்பையில் இருந்த ரோபன் குளிர் கண்ணாடியை எடுத்து கண்களில் அணிந்தார். 
தங்களை சேர்த்து வைக்க ஒருவனின் உடல், பொருள், ஆவி அத்தனையும் பிழியப்படுவதை உணராமல், அமுதனும், யாழிசையும் தங்கள் சோக கீத உலகில் மூழ்கியிருந்தனர்.   
சலனமாகும்.  

Advertisement