Advertisement

அதுவும் அவரின் மாமியார் வாய் சொல்லுக்கு பயந்து மூன்றே மாதத்தில் குழந்தையை தன் அன்னை வீட்டில் ஒப்படைத்து இருந்தாள். ராஜ் ஆறு மாதம் ஒருமுறை இரண்டு வருடங்கள் வந்தவன், தாயின் இறுதி ஆசைப்படி ஷாலினியை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டான். 
மாமனின் மனக்கவலை நன்றாக அறிந்தவள் ஆகையால், எதிர்பார்ப்பில்லா அன்பை பொழிந்து அவன் வாழ்விலும் வசந்தத்தை வீச செய்தாள் ஷாலினி. இருவரும் வருடம் ஒருமுறை ஊருக்கு வரும் போது யாழிசையை நேரில் கண்டு வருவார்கள். 
ராஜிற்கு மகளின் மேல் அளப்பரிய பாசம் உண்டென்றாலும் அதை வெளியே காட்ட அத்தனை தயங்கினான். தான் அவளின் வாழ்வில் இருந்து ஒதுங்கி இருத்தலே அவளின் வருங்காலத்திற்கு நல்லது என திடமாய் நம்பினான். 
ஷாலினியால் அவன் மேலும் இரு குழந்தைகளுக்கு தகப்பனாக, தனது ஏக்கத்தை எல்லாம் அவர்களின் மூலம் தீர்த்துக் கொண்டான். 
அவரவர் விரும்பிய விடை அவரவருக்கு கிடைத்தது. ஆனால் யாழிசைக்கு வாழ்வில் வெறுமையொன்றே பரிசாய் கிடைத்தது. தாய்பால் பாதியில் நிறுத்தப்பட்டு புட்டிப் பாலுக்கு பழக்கப்படுத்தப்பட்டாள். 
சிறிய விசயங்களில் சொல் பேச்சு மீறினால் கூட பாட்டி எப்போதும், கொடூர கதைகள் சொல்லி அவளை அதீத பயத்திற்கு உள்ளாக்கினாள். மற்ற குழந்தைகள் விடுமுறையில் தாய் தந்தையரோடு, பூங்கா, திரையரங்கம் சென்றால், தாத்தா இவளை சைக்கிளில் காலா, காதட் சேபம் கேட்க, கோவில் அழைத்து செல்வார். 
இப்படி மழலையின் சாயலின்றியே வளர்ந்தது அவள் வாழ்வும் வயதும். அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல், பானுமதி பெரியம்மாவும், அரவிந்த் சித்தாப்பாவும் மட்டுமே. 
அரவிந்தன் அவளை காண வரும்போதெல்லாம். பொம்மைகள், கலர் பென்சில்கள் என்று அவள் வயதுக்கு தக்க படி பரிசுப் பொருட்கள் தருவான். பானுமதி தன் அம்மா வீட்டிற்கு வந்தால், குழந்தையை அழகாய் அலங்கரித்து, அவளுக்கு பிடித்த பலகாரங்கள் செய்து தருவார். 
பாட்டி என்ன தான் அவளை வெடுக் வெடுக் என்று பேசினாலும், அவளின் உடலுக்கு முடியாது போனால் அப்படிப் பார்த்துக் கொள்வார். அதானாலேயே சிறு வயதில் அடிக்கடி காய்ச்சல் வர வேண்டும் என்று கடவுளிடம் கோரிக்கை வைத்திருக்கிறாள். 
அவரின் கரிசனமெல்லாம் காய்ச்சல் குணம் கண்டதும் அதோடு காணாமல் போய்விடும். சிறு வயதில் எப்போதாவது ஒரு முறை வந்து தன்னை கண்டு செல்லும் தந்தை பெரும்பாலும் அவள் நினைவிலேயே நின்றதில்லை. 
அவர் வரும்போதெல்லாம் நிறைய இனிப்புகள் கிடைக்கும். அவ்வளவே அவள் அறிந்தது. ஆனால் கொஞ்சம் வளர்ந்து விவரம் புரிய துவங்கிய பின்பே, தன்னை முழுதாய் பாட்டி வீட்டாரிடம் ஒப்படைத்து விட்டு வேறு திருமணம் செய்து கொண்டு வாழும் மனிதர் என்ற எண்ணமே மேலோங்கிவிட்டது. 
ஆக ராஜ் பாசம் காட்ட நினைத்தாலும், அவள் ஒதுங்கிப் போக பழகிக் கொண்டாள். இப்படி தாயையும் இழந்து, தந்தை இருந்தும் பெற்றோரின் அன்பில்லா தளிராய் வளர்ந்து ஆளாகி நின்றாள் யாழிசை.
சரியாய் இருபத்தியோரு வயதில் தான், தன் அன்னையின் நாட் குறிப்பேட்டை படிக்கும் சந்தர்ப்பம் அவளுக்கு கிட்டியது. அதில் அவள் தாயின் வாழ்கையை, உணர்வியல் போராட்டங்களை அறிந்தவள், அதிலிருந்த இறுதி வரிகளை படித்ததும் உறைந்து போனாள். 
“என்னை நானாக வாழ விடாத காதல்… இனி எப்போதும் என் சந்ததிகளுக்கும் வேண்டாம் கடவுளே.’’ என எழுதியிருந்தாள். அவளின் உள்ளப் போராட்டம் அறியாத மகளோ, தாய் காதலில் ஏமாந்து போய் இப்படி எழுதி இருக்கிறாள் என மாய்ந்து போனாள். 
அன்றே அந்த நாட்குறிப்பேட்டின் மீதே தான் எப்போதும் காதல் செய்யப் போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டாள். அதோடு எப்போதும் பாட்டியின் ஒரே வசவான, “நூலைப் போல சேலையின்னு எங்களை சந்தி சிரிக்க வச்சிடாதேடி.’’ என்ற வார்த்தைக்கு ஒரு நாளும் அவள் உயிர் கொடுக்க விரும்பியதில்லை. 
ஆக எப்போதும் தனக்குள் சுருண்டு போனாள். இவள் இப்படியிருக்க, இவளுக்கு பானுமதியின் தூரத்து உறவினர்கள் வகையில் ஒரு வரனை பார்த்து அவள் பொறியியல் இறுதியாண்டு தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே நிச்சயம் செய்தார்கள். 
ராஜிற்கு தகவல் தெரிவிக்கப்பட அவன் அவனளவில் மாப்பிள்ளை குறிந்து விசாரித்த பின், முழு திருப்தி கொண்ட பிறகே, தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தான்.  
அது சமயம் மாப்பிள்ளை லண்டனில் இருக்க, அவன் ஊருக்கு வந்த சமயம், பெண்ணும் மாப்பிளையும் பேசிப் பழக, பானுமதி இருவரையும் தூத்துக்குடியிலிருந்த பெரிய வணிக வளாகத்திற்கு அழைத்து சென்றாள். 
இருவருக்கும் தனிமை கொடுக்க விரும்பி, அவர் பொருட்கள் வாங்கும் பிரிவிற்குள் நுழைய, பாலா அவளை மூன்றாம் தளத்தில் இருந்த பனிக்கூழ் அங்காடிக்கு அழைத்து செல்ல விரும்பினான். 
வெளியே கூட்டமான இடங்களில் நடந்து வரும் போது, சாதாரணமாக இருந்த இசை, பளு தூக்கி இயந்திரத்தில் இருவர் மட்டும் நுழைய, தனிமையில் ஒரு ஆடவனுடன் இருக்கிறோம் என்ற எண்ணம் சூழ்ந்ததும், உடல் பயத்தில் வேர்க்க துவங்கியது. 
அவள் மாற்றத்தை கண்டு கொண்ட பாலா, “இசை.. ஆர் யூ ஓகே..?’’ என்று அவள் கைப்பற்ற வந்தான். ஆனால் மேலும் அவள் முகம் வெளுத்து அப்படியே அவன் மேல் பயந்து சரிந்தாள். 
அதன் பிறகு வெளியே வந்து ஓர் இருக்கையில் அவளை இழுத்து அமர்த்தி முகத்தில் நீரடித்த பின்பே சற்று தெளிந்தாள். பானுவின் அலைபேசிக்கு அழைத்து அவன் விவரம் சொல்ல, அவர் பதறியடித்து இவர்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். 
தன் பெரியன்னையை கண்டதும், யாழிசை மீண்டும் இயல்பாக பாலா முற்றாய் குழம்பிப் போனான். அப்போதும் எதுவும் பேசாதா பாலா அன்றைக்கு இரவே பானுமதியை அழைத்து பேசினான். 
அவன் பேச்சின் சாரம்சத்தை உள்வாங்கிய பானு, தன் தாயிற்கு தெரியாமல் , யாழிசையை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனாள். அவளுக்கு பல பரிசோதனைகள் செய்த மருத்துவர், இறுதியாக பானுவை அழைத்து, 
“சின்ன வயசுல இருந்து இவங்க பாட்டி.. இவங்க ஆண்கள்கிட்ட பழகாம இருக்க ரொம்ப பயங்கரமான கதைகளை சொல்லி இருக்காங்க. வளர்ந்த பிறக்கும் அந்தப் பயம் இவங்க அடி மனசுல தங்கி இருக்கு. இது ஒரு வகை போபியா. இவங்க கூட்டமா இருக்க இடத்துல ஆண்களோட சகஜமா பேசுவாங்க. ஆனா தனிமையில முன்னப் பின்ன தெரியாத ஆணைப் பார்த்தா ரொம்ப பயப்படுவாங்க. இது ஈசியா சரி செய்யக் கூடிய பிரச்சனை தான். 
இந்த மாதிரி போபியாவுக்கு ட்ரீட்மென்ட் என்னன்னா அவங்க எதை பார்த்து ரொம்ப பயப்படுறாங்களோ அந்த சூழலை தினம் தினம் அவங்க பேஸ் பண்ற மாதிரி வச்சிடுறது. 
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பயம் குறைஞ்சி அவங்க நார்மலுக்கு திரும்பிடுவாங்க. இஞ்சினியரிங் முடிச்சி இருக்காங்க தானே. பேசாமா பெரிய சிட்டில தனியா வொர்க் பண்ண விடுங்க. தினம் அங்க நூறு பேரை புதுசா மீட் பண்ற சுச்சுவேசன் வரும் இவங்க பயமும் குறையும். 
இப்போதைக்கு இவங்க மனசு சமநிலையில இருக்க மெடிசன் கொடுக்குறேன். கொஞ்சம் ரிலாக்சேசன் டெக்னிக் எல்லாம் வெளிய தெரபி ரூம்ல டீச் பண்ணுவாங்க. அதெல்லாம் ரெகுலரா பாலோ பண்ண சொல்லுங்க. பெருசா பயம் வேண்டாம். சரி பண்ணிடலாம்.’’ என்றார் புன்னகை முகத்தோடே. 
பானு வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் அவருக்கு ஒரு பயம் இருந்தது. அன்று இரவு மருத்துவர் கூறிய தகவல்களை அவர் பாலாவிடம் பகிர, “இதுல என்ன மாமி இருக்கு. உடம்புக்கு ஏதேனும்னா வைத்தியம் பாக்குறோம்மில்லையா..? அப்படித் தான் மனசும். அந்த டாக்டர் சொன்ன மாதிரி இசையை வேலைக்கு அனுப்புங்கோ. எனக்கும் ஆன்சைட் இன்னும் ஒன் இயர் இருக்கு. சோ நான் முடிச்சிட்டு வரதுக்கும்  இசை கோப் அப் ஆறதுக்கும் சரியா இருக்கும். பாட்டி எதாச்சும் சொன்னா மாப்பிள்ளை உத்தரவுன்னு சொல்லுங்கோ தட்டாமா கேப்பா.’’ என்றான். 
அதன் பிறகே பானு இயல்பானார். முதலில் இசை வேலைக்கு அதுவும் சென்னை செல்வதற்கு லலிதாம்பிகை ஒப்புக் கொள்ளவே இல்லை. இறுதியாய் இது மாப்பிள்ளையின் உத்தரவு என்று சொல்லித் தான் அவரையே சமாளிக்க வேண்டியிருந்தது. 
இப்படிதான் யாழிசை தன் ஓடுடைத்து வெளி உலகை முதன் முதலில் சுதந்திரமாய் தரிசித்தாள், பிறந்த குழந்தையின் பாதமென ஒவ்வொன்றையும் புதுமையாய் உள்வாங்கினாள். 
பாலா அவள் சென்னை வந்த போது, முதல் முறை அலைபேசியில் அழைக்கும் போதே திட்ட வட்டமாக, “எங்காத்துல பாட்டிக்கு இதெல்லாம் பிடிக்காது. ப்ளீஸ்.. மேரேஜ் வரைக்கும் போன்ல பேசவெல்லாம் வேண்டாமே.’’ என தன்மையாய் மறுப்பை உணர்த்தியிருந்தாள்.
பாலாவும் ஒரு புன்சிரிப்போடு அவளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். அவன் பணியும் அதற்கேற்றார் போல அவனை உள்வாங்க, பானுமதி இவளிடம் பேசும் போது, எப்போதாவது அவனும் கான்பிரன்ஸ் காலில் இணைந்து, பார்த்துக் கொள் பெரியவர்கள் முன்னிலையில் தான் பேசுகிறேன் என செய்கையில் அவளை பகடி செய்வான். 
ஆனால் இது அத்தனையும் மறந்து, யாழிசை அமுதனின் மேல் காதலில் விழுந்தாள். அவள் திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை. ஆனால் நிகழ்ந்ததை எப்படி மாற்ற முடியும். 
ஒரு நாளெல்லாம் தாயின் நாட்குறிப்பேட்டை, கட்டிக் கொண்டு அழுதவள், இறுதியில் தானும் அதில் சில வரிகளை புதிதாய் சேர்த்தாள். மனதில் திடத்தை கூட்டி அமுதனை நேருக்கு நேர் சந்தித்து அந்த குறிப்பேட்டை ஒப்படைதவள், இரவோடு இரவாக ஊருக்கு கிளம்பினாள். 
அவள் கையெழுத்தில் இருந்த கடைசி வரிகள் இவை தான். “அம்மா பேர் என்னால மறுபடி கலங்கப்படுவதை நான் விரும்பல அமுதன். மன்னிச்சிடுங்கோ. எல்லாத்துக்கும் மொத்தமா சேர்த்து.’’ 
அதையெல்லாம் வாசித்த பின், அமுதானால் அவள் மனநிலையை தெளிவாக உணர முடிந்தது. தன்னுடைய காதலை அவள் நிரகாரித்த போது கூட ஓரளவு மீள முடிந்த அவனால், அவளுக்கும் தன் மீது ஈர்ப்புண்டு, ஆனாலும் சூழல் கருதி விலகிப் போகிறாள் என்பதை ஏற்கவே முடியவில்லை. 
மீண்டும் அவளுக்கும் தொல்லை கொடுக்கவும் அவன் மனது அனுமதிக்கவில்லை. அன்றைக்கு இரவு ரியாசை தன்னுடைய அறைக்கு அழைத்தவன், மொட்டை மாடியில் மொடாக் குடி குடித்துவிட்டு, நண்பனின் மடியில் விழுந்து கதறி தீர்த்தான். 
அமுதன் எதற்குமே இயல்பாய் கலங்குபவன் இல்லை. அவன் கண்ணீரை கண்டதும், ‘அவ அப்படி என்ன பெரிய இவ.’ என்ற கோபம் ரியாசினுள் தாறுமாறாய் பொங்கியது. ஆனால் அது வெடித்த இடம் தான் வேறாகிப் போனது. 
நண்பனின் அரை குறை புலம்பலில் அவன் புரிந்து கொண்டது ஒன்றை தான். ‘யாழிசைக்கு ஏற்கனவே அவர்கள் வீட்டில் நிச்சயம் பேசி வைத்திருகிறார்கள். இன்னும் மூன்று மாதத்தில் திருமணம்.’ 
“எனக்கு வாழ்கையில எதுவுமே கிடைக்காதுடா ரியாஸ். என் அம்மாவோட அன்ப தவிர.’’ என்றவன் எழுந்து நின்று இரவின் நீல வானத்தை கையெடுத்து கும்பிட்டு, 
“எனக்கு என் அம்மா மட்டும் போதும். அருளு ஐ… லவ் யூ… உன் பையனும் உன்ன மாதிரி தான். ஒரே லவ். அதுவும் பாதியில புட்டுகிச்சி. உனக்காச்சும் மிச்சம் நான் கிடைச்சேன். எனக்கு எதுவுமே இல்லையே… இல்லையே.. ‘’ என்றவன் கீழே சம்மணமிட்டு அமர்ந்து, தரையை அடித்து, மீண்டும் அழுதான். 
அன்றைக்கெல்லாம் அவனை தேற்றுவதே, ரியாசிற்கு பெரும்பாடாய் போனது. ஆனால் அன்றிலிருந்து, சரியாய் மூன்றாம் நாள் அமெரிக்கா கிளம்பிய அமுதன் இயல்பான அமுதனாய் மாறியிருந்தான். 
ஆனால் கண்களில் மட்டுமே எதையோ தொலைத்த வெறுமை. “இன்னும் ஆறு மாசம் இங்க நடக்குறது எதுவுமே எனக்கு தெரிய வேண்டாம் ரியாஸ். எனக்கு கால் பண்ணாத. எல்லாத்தையும் மறப்பேன்னு சொல்ல முடியல. ஆனா மனசு வலியில கொஞ்சம் கொஞ்சமா மருத்துப் போயிடும்னு நம்புறேன். வரேன்டா.’’ என்றவன் திரும்பியும் பார்க்காமல் விமானத்தை நோக்கி நடந்து விட்டான். 
ரியாசால் தான் நடந்த எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. அதுவும், இன்னும் இரு வாரத்தில் திருமணம் என்று, லேசாய் இழுத்த புன்னகை முகத்தோடு யாழிசை அனைவருக்கும் திருமணப் பத்திரிக்கையை வைத்த போது, ஜீவனற்ற அவள் கண்களில் எதைக் கண்டானோ, அன்று மாலையே அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு சேலத்திற்கு கிளம்பினான். 
அங்கு போனால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா அவன் அறியான். ஆனால் அங்கு தான் அமுதனின் அம்மா அருள் இருக்கிறார். 
சலனமாகும். 

Advertisement