Advertisement

சலனம் – 17 
தெருவில் இறங்கி நடந்த ராகவி, விறு விறுவென நடந்து சிறுவயதிலிருந்து எப்போதும் விருப்பமாய் செல்லும் பெருமாள் கோவில் வாசலில் சென்று நின்றாள். 
இரண்டரை கிலோ மீட்டர்கள் அனாயசமாய் நடந்து வந்திருந்தாள். அப்போது தான் கோவிலில் பெருமாளுக்கு நெய் வேத்தியம் செய்து சர்கரைப் பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள். 
வரிசையில் நின்று அதை ஆவலோடு வாங்கிப் புசித்தவள், ஆலய சுவற்றில் தலை சாய்த்து அப்படியே அமர்ந்துவிட்டாள். என்னவோ சொல்ல முடியாத பேரமைதி அந்நேரத்தில் அவள் உள்ளம் சூழ்ந்தது. 
அதே நேரம் அங்கு வந்த அரவிந்தன், களைப்போடு சுவர் சாய்ந்து அநாதரவாய் அமர்ந்திருந்த ராகவியை கண்டான். இவள் விட்டு சென்றதும், நெருங்கிய சொந்தத்தில் அவசரமாய் ஒரு பெண்ணை பேசி நிச்சயித்த தேதியில் அவன் திருமணம் நடந்திருந்தது. 
ஆனாலும் தன் அண்ணனின் திருமணத்தில் கண்டிருந்த, துறு துறு ராகவி அவன் மனதில் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டாள். அவள் அப்படி அமர்ந்திருப்பதை கண்டவன், “ராகவி..’’ என்று அழைக்க, விழி திறந்தவள் தன் எதிரே நிற்பவனைக் கண்டு அதிர்ந்தாள். 
அவனை ஏமாற்றிய குற்ற உணர்ச்சி, தன்னுடைய தற்போதைய நிலைஅனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவிற்கு வர, ராகவியின் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்து ஊற்றாய் பொங்கியது. 
“ராகவி ப்ளீஸ்…! பப்ளிக் பிளேஸ்ல இருக்கோம். சரி வாங்கோ. உங்க அக்கா வீட்டுக்கு போகலாம். அண்ணா, மன்னிய தனியா குடித்தனம் வச்சாச்சு. வீடு இங்க பக்கத்துல தான். வாங்கோ போலாம்.’’ என்று அவளை அழைத்து வந்தான். 
பானுமதிக்கு குழந்தை பிறந்து மூன்று மாதம் முடிந்திருந்தது. குழந்தையின் ஜாதகம் அப்படியே சிற்றப்பனை கொண்டு இருக்க, ஒரே நட்சத்திரக்காரர்கள் ஒரே வீட்டில் இருக்கக் கூடாதென பெரிய மகனை தனிக் குடித்தனம் அமர்ந்தியிருந்தார் பானுவின் மாமியார். 
அக்கா வீடு வரும் வரை, ராகவி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வந்தாள். அக்காவை கண்டதும் அவள் மடியில் படுத்துக் கொண்டு, ‘கோ’வென கதறி தீர்த்தாள். 
அக்காவிற்கும், தங்கைக்கும் இடைவெளி கொடுத்து அரவிந்தன் சற்று நேரம் வெளி முற்றத்தில் அமர்ந்திருந்தான். தங்கையின் புலம்பல்களுக்கு சற்று நேரம் காதினை கொடுத்த பானு, 
“ராகிமா மறுபடி நீ தப்பு செய்றயோன்னு தோன்றது நேக்கு. ஆயிரம் இருந்தாலும், உன் ஆம்படையான் ஆத்துல இல்லாதப்ப நீ பாட்டுக்கு வீட்டை விட்டு கிளம்பினது தப்பு. அதுவும் வாயும் வயிறுமா இருந்துண்டு. அவா வேற மதம்னு தெரிஞ்சி இஷ்டப்பட்டு சர்ச் வரைக்கும் போய் தானேடி அவரை கட்டிண்ட. இப்ப அழுது, புலம்பி என்ன செய்ய முடியும். கிருஷ்ணரை எல்லாம் நீ மனசுல பிரார்த்தனை பண்ணிக்கோ. இப்படி வரைஞ்சி வச்சி வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்காதே. உங்க அத்திம்பேர் வரட்டும். அவர் வண்டியில உன்னை உங்க வீதி முக்குல விட சொல்றேன். இப்படி எல்லாம் தத்து பித்துன்னு உளறிண்டு மறுபடி வீட்டை விட்டு வரக் கூடாது. புரியுறதா..?’’ 
பானு தங்கையின் காதலை எதிர்த்த போதும், இன்று அவள் கணவன் வீட்டிற்கு அனுப்ப முயலும் போதும் தங்கையின் நல்வாழ்வை சிந்தித்தே பேசினாள். ஆனால் வழமை போல அதை, ராகவி தவறாக புரிந்து கொண்டாள். 
“ஓ…. உன் கொழுந்தனாரை கட்டிகிறதா சொல்லி ஏமாத்திட்டேன்னு நோக்கு என் மேல இன்னும் வருத்தம் போகலையா..? சரி… நான் இனி உன்னை பார்க்க வரலை அக்கா. ஆனா நேக்கு அம்மா வீட்ல செஞ்ச மாவடு இருந்தா அதோடு கொஞ்சம் தயிர் சாதம் மட்டும் போட்டு தா அக்கா. நான் சாபிட்டுட்டு உடனே கிளம்பிடுறேன்.’’ என்றாள் வேதனையாய். 
தங்கையின் வேதனை அக்காவிற்கும் புரிய தான் செய்தது. ஆனாலும் இப்போது இரங்கினால் தங்கையின் வாழ்க்கை பாழாகுமே என்று மனதை தேற்றியவள், அவள் வேண்டியபடி தட்டில் சாதத்தை போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். 
தங்கை அள்ளி அள்ளி உண்பதை கண்ணீரை உள் இழுத்தபடி அமைதியாக வேடிக்கைப் பார்த்தாள். இறுதியாக, தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில், தான் அணிந்திருந்த சிறிய கழுத்தணியை கழற்றி போட்டவள், “குழந்தை நன்னா உன்ன உரிச்சாப்ல இருக்கான். பேர் என்னக்கா..?’’ என்றாள். 
“வசுதேவன். இவர் தாத்தா பேர்.’’ என்றாள். “நன்னா இருக்கு அக்கா.. தேவா வா வான்னு கூப்பிடலாம் இல்லக்கா. சமத்து.’’ என்றவள் குழந்தையின் கன்னம் தொட்டு முத்தம் கொடுத்தாள். 
‘இப்படி குறும்பு பேச்சும், கல கல சிரிப்புமாய் இருந்தவளை இந்த கல்யாணம் தான் எப்படி மாற்றிவிட்டது’ என்று பானு தனக்குள் மறுகிக் கொண்டிருக்கும் போது, அரவிந்தன் உள்ளே வந்தான். 
“மன்னி…! நான் கிளம்புறேன். விஜி ஆத்துல தனியா இருப்பா. எதுக்கும் ராகவிய ரெண்டு நாள் உங்க ஆத்துல வச்சிருந்தே அனுப்புங்கோ. பிள்ளையாண்டு வேற இருக்கா. ஆசைப்பட்டதெல்லாம் சமச்சி கொடுத்து அப்புறம் அனுப்பிவிடுங்கோ.” என்றவன், “வரேன் ராகவி…!’’ என்று அவளிடமும் விடை பெற்று கிளம்பினான்.
ராகவி தற்சமயம் இங்கிருந்து கிளம்பி எங்கே செல்வது என்று தவிப்புடன் அமர்ந்திருக்க, அங்கே வந்து சேர்ந்தார் இவர்களின் தாய் லலிதா. இவளை கண்டதும் முகம் திருப்பியவர், “இவளை எல்லாம் என்னத்துக்கு ஆத்துக்குள்ள உக்காத்தி வச்சிருக்க.’’ என்று பெரிய மகளை காய்ந்தார்.  
பானுமதி வேறு வழியின்றி தமக்கை தன்னிடம் புலம்பியவற்றை தாயிடம் கூற, அவரோ சிறிய மகளின் வாழ்வு பற்றி யோசியாமல் மருமகன் வீட்டினர் மேல் கோபம் கொண்டார். 
“எத்தனை தைரியம் இருந்தா பெருமாள் உருவத்தை பெருக்கி தள்ளியிருப்பா இவ மாமி. பட்டாச்சாரியார் பொண்ணுடி அவ. சரியா சொல்லிட்டு வந்து இருக்கா பெருமாளுக்கு இடமில்லாத வீட்ல நானும் இருக்க மாட்டேன்னு. இப்ப தான் அவளை பெத்து பால் கொடுத்ததுக்கு ஒரு அர்த்தம் வந்திருக்கு.” என்றவள் சிறிய மகளை பார்த்து,  “நீ நம்மாத்துக்கு வா. இனி உன் ஆம்படையான் வந்து உன்ன தனிக் குடித்தனம் வைக்குறதா இருந்தா கூட்டிண்டு போகட்டும். உனக்குன்னு யாருமில்லைன்னு நினைச்சாளா உன் மாமி. அத்தனை கர்வமா அன்னைக்கு உங்க பொண்ணை உங்களை விட நல்லா பாத்துப்பேன்னு சொல்லி அழைச்சிண்டு போனார் உங்க ஆத்துக்கார். வரட்டும் அவரையும் கேக்குறேன் உரைப்பா நாலு கேள்வி.’’ 
ஒரு தாயாய் லலிதா குமுற, பானு பதறிப் போனாள். “அம்மா அவர் இப்போ ஊர்ல இல்ல. இவளை முதல்ல அங்க அனுபுங்கோ. அவர் வந்ததும் பேசிக்கலாம்.’’ என்றாள் அவசரமாய்.     
ஆனால் லலிதாம்பிகையின் செவிகளில் பானுவின் சொற்கள் ஏறவில்லை. கையோடு மகளை வீட்டிற்கு அழைத்து சென்றவர், வீட்டிற்கு வந்த கணவரிடமும் விசயத்தை போட்டு உடைத்தார். 
மகளின் கிருஷ்ண பக்தி அவரையும் குளிர்வித்திருக்க, “என் குழந்தையை இவ்வளவு சோதிக்கணுமா கிருஷ்ணா.’’ என்று பூஜை அறைக்குள் சென்று அமர்ந்தார். மகளிடம் என்னவோ அவரால் உடனே பேச முடியவில்லை. 
இங்கே மருமகள் கிளம்பி சென்று இரண்டு மணி நேரம் அவளுக்காய் காத்திருந்த மரியம், அவளை தேடிப் போன, ஷாலினி, இறுதியில் ராகவி தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருப்பதை உறுதி செய்த பின்பே சற்று இலகுவாய் மூச்சுவிட்டார். 
உடனே மகனுக்கு அவர் தொலைபேசியில் அழைக்க , அவனோ எடுக்க முடியாத நடுக்கடல் பயணத்தில் இருந்தான். கர்த்தரின் மேல் பாரத்தை போட்ட, மரியம் மகனின் வரவிற்காய் காத்திருக்க தொடங்கினார். 
ராகவி முதலிரண்டு நாட்கள், நிம்மதியாய் தன் தாய் வீட்டு சீராடலை அனுபவித்தாள். அம்மாவை செய்து தர சொல்லி சுண்டைக்காய் வற்றல் குழம்போடு, கத்தரி பொரியலை ரசித்து உண்டாள். 
துளசி மாட தாழ்வாரத்தில் நிம்மதியாய் உறங்கினாள். ஆனால் இதெல்லாம் நிரந்தரமில்லை என்பது அவள் அறிவிற்கு தெரிந்தே இருந்தது. கணவனின் அன்பு முகமும், அவனை வளர்த்தெடுக்க அவன் அன்னை பட்ட பாட்டை அவன் விவரித்த கணமும் உள்ளுக்குள் தோன்றி அவளை உருக்க துவங்கியிருந்தது. 
“நீ ஒரு நம்பிக்கை துரோகி. பெத்தவாளுக்கும் உண்மையா இல்ல. இப்ப கட்டினவனுக்கும் உண்மையா இல்ல. நீ ஒரு பச்சோந்தி மனுசி.’’ என்று அவள் மனசாட்சியே அவளை கேலி செய்தது. 
அவள் மன உறுதியை மேலும் குலைக்கும் வண்ணம் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேற துவங்கின. அந்த வாரத்தில் அவர்களின் பாட்டியின் திவசம் வர, வீட்டிற்கு ஹோமம் வளர்க்க வந்த வாத்தியார், “உங்க பொண்ணை அவ அக்கா வீட்டுக்கு அனுப்பிடுங்கோ. வேத்து மனுசாளை கட்டிண்டு பிள்ளையாண்டு வேற இருக்கா. இதெல்லாம் உங்களுக்கு நான் சொல்லணுமோ ஓய்.’’ என்றார். 
ஆம் இவர்களின் வழக்கத்தில், தவச திங்களில் வேற்று இனத்தவர்களை அனுமதிக்க மாட்டார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியில் வேற்று இனத்தவர்களை அனுமதிக்கும் இவர்கள் காரியம் போன்ற அமங்கல நிகழ்ச்சியில் பிராமணர்கள் அல்லோதரை அருகில் விட மாட்டார்கள்.
‘இதே குலத்தில் பிறந்து வளர்ந்த நான் வேற்று இனப் பெண்ணாகி போனேனோ..? நாளை என் குழந்தைக்கும் இதே நிலை தானோ..? இப்படி கலப்பில் பிறந்தது என இரண்டு பக்கமும் அரை குறை மனதோடு தான் ஏற்ப்பார்களோ..?’ ஏதேதோ சிந்தை அவளை ஆக்ரமிக்க, தாய் வாடி நின்று பார்க்கும் போதே ராகவி அக்காவின் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். 
கடந்த பத்து மாதமாய் எழுதாத நாட் குறிப்பை கையோடு எடுத்துச் சென்றவள், தன் இத்தனை நாள் மனப் போராட்டங்களையும் வார்த்தைகளாக்கி அதில் வடிக்க துவங்கினாள். 
இவளின் இந்த உள்ளக் கொதிப்பு, இவளுக்கு கூடுதலாய் ரத்த கொதிப்பை இழுத்து வந்தது. சரியாய் இருபது நாட்கள் கழித்து வந்த ராஜ் கண்டது, உடல் முழுக்க வீங்கி, உயிரை இழுத்து பிடித்தபடி மருத்துவக் கட்டிலில் கிடந்த ராகவியை தான்.      
அவன் அன்பு முகத்தை கண்டதும் மேலும் குன்றிப் போனவள், அவன் கைகளை தனக்குள் எடுத்துக் கொண்டு, “ராஜ்..’’ என்றாள் கலக்கமாய். 
‘நீ ஒன்னும் பேச வேண்டாம். எல்லாம் சரியா போயிரும்.’’ என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அன்றைக்கு இரவே அவளுக்கு ரத்த கொதிப்பு அதிகமாகி ஜன்னி கண்டது. 
மருமகளை அந்த நிலையில் கண்ட மரியம், கட்டிலின் கீழ் அமர்ந்தவர் தான் விடாது ஜபிக்க துவங்கி இருந்தார். இப்போது, அனைவரின் மதமும் பின்னே சென்று, ராகவி பிழைத்து வந்தால் போதும் என்ற ஒற்றை வேண்டுதலே அனைவர் மனதிலும் முன் நின்றது. 
ஊசிகள் போட்டும்  ஜன்னி கண்டதால், மருத்துவர் உடனே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்றார். ராஜும் ஒப்புக் கொண்டு உடனே ஒப்புதல் படிவங்களில் கையெழுத்துப் போட்டான். 
அப்போது தான் லேசாக நினைவு திரும்பிய ராகவி, அவளை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லும் முன், திக்கி திணறி, “எனக்கு எது நடந்தாலும்… உங்க வாழ்கையை நீங்க வாழணும்.’’ என்றவள், தன் மாமியாரை அருகில் அழைத்து, தன் கணவனின் கையை அவரின் கைகளில் ஒப்புக் கொடுத்தாள். 
மொத்தக் குடும்பமும் கண்ணீர் வடிக்க, மரியம் அப்போதும், அவளின் முன் நெற்றியில் சிலுவை குறியிட்டு மருமகளை ஆசிர்வதித்தார். அவர் கண்களில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் வழிந்து ராகவியின் முன் நெற்றியை நனைத்தது. 
ராகவியை மருத்துவப் பணியாளர்கள் அவளை அறுவை அரங்கிற்கு அழைத்து செல்ல, அப்போது தான் அவளின் கட்டிலின் அருகிருந்த நாட் குறிப்பேட்டை கண்டான். 
அதை கைகளில் எடுத்தவன், அருகிருந்த காத்திருப்பு அறையில் அமர்ந்து, அந்த நாட் குறிப்பேட்டை வாசிக்க துவங்கினான். பத்து மாதங்கள் அவளோடு வாழ்ந்த போது, அறியாத அவள் ஆசைகள், ஏக்கங்கள், மனக்குமுறல்கள் அத்தனையும் அதன் மூலம் அறிந்தவன் உள்ளுக்குள் பொடிப் பொடியாய் நொறுங்கிப் போனான். 
அழகான பெண் சிசுவை பிரசவித்த ராகவி, இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் போராடி பின் ஓய்ந்து போனாள். ஆம் பிறந்த மகளின் பால் முகத்தை கூட காணாது தன் அத்தனை போராட்டங்களையும் முடித்துக் கொண்டு மரணத்தில் அமைதி கொண்டாள். 
இரண்டு நாட்களாய் பிறந்த குழந்தைக்கு பானுமதி தான் தாய்ப்பாலூட்டி பார்த்துக் கொண்டாள். மனைவி இறந்த பின்பு, ராஜ் மருத்துவமனையே திகைக்கும் அளவிற்கு கதறி அழுதான். 
வாழும் போது தான் அவள் விரும்பிய மத வழி, அவள் வாழ்வியல் முறைகள் அமையவில்லை என்பதில் வருத்தம் கொண்டவன், அவளின் பூத உடலை அப்படியே அவரின் தந்தையிடம் ஒப்படைத்தான். 
“உங்க முறைப்படியே எல்லாம் பண்ணிடுங்க சார்.’’ என்ற கோரிக்கையோடு. அவனுக்கு தெரியும். இவர்களிடம் உடலை ஒப்புவித்தால் ஈம சடங்கில் தான் எந்த இடத்திலும் நிற்க முடியாமல் போகும் என்பதை. 
தான் கொடுத்த சாபம் தான் பலித்துவிட்டது என்று குமுறிப் போன தந்தை, எந்த மகளை மடியில் அமர்த்தி கன்னிகா தானம் செய்து கொடுத்திருக்க வேண்டுமோ, அதே மகளின் உடலுக்கு கற்பூர ஆரத்தியில் கொள்ளி வைத்து அவளை வழி அனுப்பி வைத்தார், மருமகனின் வேண்டுதல்படி. 
தான் கூடிக் களித்து கொஞ்சிய அவளின் உடல், சற்று நேரத்தில் வானில் கரும்புகையாவதை மயான வாசலில் நின்று, கண்களில் நீர் நிரம்ப வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜ். 
மருமகளின் உடைகளை மட்டும் வைத்து, மரியம் தன் வகையில் சாங்கியங்களை செய்திருந்தார். ஒட்டு மொத்தமாய் கலங்கிப் போயிருந்த குடும்பத்தை அப்போது பானு தான் தங்கினாள். 
மகளை தினமும் வாயிலில் நின்று கண்டு செல்வதை ராஜ் வாடிக்கையாய் வைத்திருந்தான். சில நாட்கள் மரியமும் உடன் வருவார். என்ன காரணமோ இருவரும் அவர்கள் அழைத்தாலும் வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். 
இறுதியில் பணிக்காய் ஊருக்கு கிளம்பும் நாளில் ராகவியின் வீட்டிற்கு வந்தவன், அதுவரை கையில் இருந்த மொத்த சேமிப்பையும் பணமாய் திரட்டி கொண்டு வந்திருந்தான். 
நேராய் ராகவியின் தந்தையின் முன் வந்து நின்றவன், அந்தப் பணத்தை அவர் காலடியில் வைத்து விட்டு, சாஸ்டாங்கமாய் அவர் காலில் விழுந்தான். ரங்காச்சாரி பதறி விலக, தூளியில் இரு குழந்தைகளையும் தூங்க வைத்துக் கொண்டிருந்த பானு அரவம் கேட்டு வெளியே வந்தாள். 
“உங்க மகளை வாழ வைக்கிறதா சொல்லி கூட்டிட்டு போய் கொன்னுட்டேன். இந்த பாவிய மன்னிச்சிருங்க ஐயா.’’ என்று தரையில் தலையை முட்டி முட்டி அழுதான். 
ரங்காச்சாரி பதறி அவனை தூக்கினார். “நீ என்னப்பா பண்ணுவ. அவ ப்ராப்தம் அவ்ளோ தான். பகவான் சீக்கிரம் அவளை அழைச்சினுட்டார். பின்ன சின்ன வயசுல இருந்து பெருமாள் கோவிலே கெதின்னு இல்ல கிடப்பா.’’ என்றவர் தோளில் இருந்த துண்டால் கண்களை துடைத்துக் கொண்டார். 
ஒரு காதல் மத வெறியை தூண்டி, நான் பெரியவன் நீ சிறியவன் என்று எக்களிக்க வைத்தது. ஆனால் ஒரு மரணம், இங்கு எதுவுமே நிலையில்லை என்ற நிதர்சனத்தை முகத்தில் அறைந்து மனிதர்களுக்கு பாடம் எடுத்து விடுகிறது.
ஒருவாறு தன்னை தேற்றி எழுந்து நின்ற ராஜ், அவர் காலின் கீழிருந்த மஞ்சள் பையை அவர் கைகளில் கொடுத்து, “இதுவரைக்கும் நான் சம்பாரிச்ச மொத்த பணமும் இருக்குங்க ஐயா. என் மகளை உங்க வழக்கப்படியே வளர்த்து ஆளாக்குங்க ஐயா. என் ராகவி தன் வாழ்கை எப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டாளோ அப்படியெல்லாம் எங்க பொண்ணு வாழ்க்கை இருக்கனும்.” என்றவன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
“ராகவி இறந்துட்டான்னு எல்லாரும் சொல்றாங்க. அதுல எனக்கு நம்பிக்கை இல்ல. உங்க பொண்ணு சாகலை ஐயா. உங்க பேத்தியா பொறந்து மறுபடி உங்ககிட்ட வந்துட்டா. நான் எப்பவாச்சும் ஓரமா வந்து நின்னு என் பொண்ணை பார்த்துட்டு போறதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க ஐயா. மத்தபடி அவ படிப்பு செலவுல இருந்து எல்லாம் நான் பாத்துக்கிறேன். அவ நல்லபடியா வளர்ந்து ஆளானா போதும் ஐயா.’’ என்று கை கூப்பி வேண்ட, கூடத்தில் இருந்த மூவரும் கண்ணீர் வடித்து நின்றனர். 
அன்றைக்கு சென்றவன், ஆறு மாதம் ஒரு முறை குழந்தையை காண வருவான். பொதுவாக பெண் குழந்தைகள் தந்தையின் சாயலை அதிகம் கொண்டிருப்பார்கள். 
ஆனால் யாழிசை அப்படியே ராகவியை உரித்து வைத்திருந்தாள். பானுமதி தான் தங்கையின் பெயரனா இசை என்று பொருள் வரும் பெயராக யாழிசை என்ற பெயரை தங்கையின் மகளுக்கு தேர்ந்தெடுத்தாள். 
தாயில்லா பெண் என குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அவளின் மேல் பாசத்தை பொழிய, லலிதா சூடு கண்ட பூனையாய் பேத்தியை கட்டுப்பாடோடு வளர்த்தார். 
பெண்கள் பள்ளி, மற்றும் கல்லூரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டாள். என்னதான் பானுமதி அவளை போற்றி வளர்ந்தாலும் யாராலும் பெற்ற தாயாகிட முடியாது அல்லவா..? 

Advertisement