Advertisement

சலனம் – 16 
தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையை ஒருவாரு ஏற்று வாழப் பழகிக் கொண்டாள் ராகவி. மாமியாரிடம் அன்பு செலுத்த கற்றுக் கொண்டிருந்தாள். 
அவர்களுக்கு திருமணமாகி ஒருவாரம் உடனிருந்த ராஜ், தன் தாய் தனக்கு எத்தனை முக்கியம் என்பதை அவளுக்கு அப்படி உணர்தியிருந்தான். ஆம் மரிய புஷ்பத்தின் வாழ்க்கை அத்தனை கடினமானது. 
சிறுவயதில் கணவன் இறந்துவிட, இரங்கல் பார்வைகளை ஒத்திவைத்துவிட்டு, அக்கா கணவருடன் திடமான பெண்ணாக, படகில் ஏறினார் மரியம் மீன் பிடிக்க. 
அப்போதெல்லாம் பெண்கள் கரையில் மீன் விற்பதோடு சரி. பிடிக்க இறங்கியதில்லை. கணவன் இருக்கும் பொழுது அவருடன் ஓரிருமுறை மீன் பிடிக்க பயணித்த அனுபவம் கைகொடுக்க, ஆணுக்கு ஆணாக கடலாடி வளர்த்தார் ஒற்றை மகனை. 
உதவும் குணம் அதிகம். வரும் வருவாயில் சரியாய் கால் பகுதியை தேவலாயத்தின் இயலாதோருக்கான நிதி உண்டியலில் சேர்த்துவிடுவார். இப்போது மகன் படித்து நல்ல நிலைக்கு வந்த பின்பே தான் கடலாடுவதை நிறுத்தி இருக்கிறார்.  
ராகவியும் மாமியாரின் பின்புலம் அறிந்த பிறகு அவரிடம் புன்னகை முகமாக பேச பழகி இருந்தாள். அது அத்தனை கடினமாகவும் இருக்கவில்லை. மரியத்தின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து கொண்டவள் அதை அழகாய் பூர்த்தி செய்தாள். 
ஆம் அவளுக்கு மருமகள் எப்போதும் பளிச் என்று இருக்க வேண்டும். காலை, மாலை இருவேளையும் ஜெபிக்க வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை மலர்ந்து உபசரிக்க வேண்டும்.
அதை ராகவி இம்மி பிசகாது நிறைவேற்றினாள். தனக்கு வேண்டிய சைவ உணவை தானே சமைத்து கொள்வாள். மரியம் ராகவியின் உணவு விடயங்களில் தலையிடுவதில்லை. 
ராஜ் மும்பை கிளம்பிய பிறகு மாமியார் மருமகளின் நெருக்கம் மேலும் சற்று அதிகரித்தது. அவரை மகிழ்விக்க, ராகவி சில தோத்திர பாடல்களை கற்றுக் கொண்டு அவரிடம் அழகாய் பாடிக் காட்டினாள். 
அதில் மகிழ்ந்த அவர், அந்த வார ஞாயிற்றுக் கிழமை தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் மருமகளை அனைவர் முன்பும் பாட வைத்தார். அனைவரும், மரியத்திடம் மருமகள் குறித்து பாராட்ட, அவருக்கு பெருமையில் தலை கால் புரியவில்லை.
மகனிடம் தொலைபேசியில் பூரித்து போனார். அப்போதெல்லாம் கைபேசி இல்லாத காரணத்தினால் வீட்டிலிருந்த ஒற்றை தொலைபேசியை தான் அனைவரும் பொதுவாக உபயோகிக்க வேண்டியிருந்தது. 
தாய் பேசிய பின் பேசிய மனையாளுக்கு ராஜ் தொலைபேசியில் முத்தங்களால் தனது அன்பை பொழிய, ராகவி மௌனமாய் சிவந்து அவன் அன்பை வாங்கிக் கொண்டாள். 
ஓரிரு மாதத்தில் வீடு பார்த்து அவளை தன்னிடம் அழைத்து கொள்வதாக ராஜ் சொல்லியிருக்க, ஒன்றரை மாதத்தில் ராகவி அவன் வம்சத்தை தனக்குள் வார்த்திருந்தாள். 
செய்தியை கேள்விப்பட்ட மரியம் கொண்டாடி தீர்த்தார். அவரின் சார்பாக ஞாயிறு பிரார்த்தனை நாளொன்றில் அனைவருக்கும் கறி விருந்து கொடுத்தார். 
ராஜும் கொஞ்சினான் மனைவியை தொலைபேசியில் மட்டும். அப்போது அவனுக்கு முக்கியமாக கடலுக்குள் பயணிக்க வேண்டிய கட்டாயம் வர, ஆயிரம் பத்திரங்கள் மனைவிக்கு சொல்லிவிட்டு, தாயாரிடம் மனைவியை ஒப்புவித்துவிட்டு தன்னுடைய பணியை துவங்கினான். 
உடல்நிலை இயல்பாக இருந்த போது, மாறுபட்ட தன் வாழ்வை இயல்பாய் ஏற்றுக் கொண்ட ராகவியால் மசக்கையில், உடல் துவண்ட போது, அதே இயல்போடு வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை. 
காலையில் குமட்டும் போதே, அம்மாவின் மா வடுவிற்கு நா ஊரும். வாந்தி எடுத்த பின் தலை சாய்ந்துக் கொள்ள, துளசி மாட சுகந்த குளிர்ச்சியை மனம் தேடும். 
மருமகளுக்கு உடலுக்கு முடியவில்லையென மரியம் தனக்கு தெரிந்த வகையில் சைவம் சமைத்துக் கொடுத்தார். ஆனால் அது ராகவியின் வாயோடு வெளிநடப்பு செய்தது. 
ஒன்றும் முடியாது போக, தயிர் சாதம், கொஞ்சம் ஊறுகாய் என எளிய உணவை உட்கொள்ள துவங்கினாள். அந்த மாதம் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் போது, மருத்துவர், இரத்தம் உடலில் குறைவாக இருப்பதாக சொல்லி சத்து மாத்திரைகளை கொடுக்க, ராகவிக்கு அடுத்த சோதனை ஆரம்பமானது. 
அதுவரை ராகவியின் உணவுப் பழக்கங்களில் தலையிடாதிருந்த மரியம், “இத்தனை நாள் நீ தனியாளு. சரின்னு விட்டேன். இப்போ வயித்துல பிள்ள இருக்கில்ல. இனியாச்சும் கறி, மீனு தின்னப் பழகு. முதல்ல கஷ்டமா இருக்கும். பழகிட்டா நீயே அப்புறம் கேட்டு சாப்பிடுவ. நம்ம கடல் மீனு ருசி அப்படியாக்கும். பிள்ள புஷ்டியா வளரணும் இல்ல கண்ணு.’’ என்று கெஞ்சலில் முடிக்க, ராகவி உண்மையில் மிரண்டு போனாள். 
“இல்ல.. மா… அது… கீரை, பழம் எல்லாம் சாப்பிட்டா கூட பாப்பா நல்லா தான் பிறக்கும். எங்க சித்ராக்கா பாப்பா கூட பிறக்கும் போதே மூணே கால் கிலோ இருந்தா’’ என ராகவி தன்மையாய் தன் மறுப்பை பதிவு செய்தாள். 
சற்று நேரம் எதுவும் பேசாதிருந்த மரியம், “அடுத்த மாசம் டாக்டர் எல்லாம் சரியா இருக்குன்னு சொன்னா சரி. இல்லனா நீ கறி, மீன் திங்குற அவ்ளோ தான். உன் பிடிவாதத்துக்கு பிள்ளையை சீக்காக்க முடியாது.’’ என்றவர் எழுந்து சென்றுவிட, ராகவி பயந்து போய் அமர்ந்திருந்தாள். 
அந்த நேரம் கணவனிடமும் எதனையும் பகிர்ந்து கொள்ள முடியாத, தன் நிலையை எண்ணி, மனதிற்குள் குமைந்தவள் வெகு நாட்கள் கழித்து, தான் எப்போதும் அணிந்திருக்கும், சிறிய கழுத்தணியின் பதக்கத்திலிருந்த குட்டி ஆலிலை கிருஷ்ணனை கையில் வைத்துக் கொண்டு நெடு நேரம், கிருஷ்ணனோடு தன் மன பாரத்தை பகிர தொடங்கினாள். 
அடுத்த நாள் அவளுக்கு பொழுது மசக்கையின்றி புலர எல்லாம் கிருஷ்ணனின் செயல் என்று மனதிற்குள் குதூகலித்த ராகவி தனக்கு தேவையான உணவினை தயார் செய்து நன்றாக உண்டாள். 
முதல் நாள் மருத்துவர் கொடுத்த மருந்தின் விளைவாலே உடல் நலம் பெற்றது என்பதை அவள் மூளை வசதியாய் மறந்து போனது. அதற்கு அடுத்து, உடலில் இரத்த சத்தை அதிகரிக்கும் காய், கீரை பழங்களை வாங்கி வந்து தவறாது உண்டாள். 
ராகவி மீண்டும் பழைய உடல் திடத்துடன் நடமாடுவதை கண்ட மரியமும் அதன் பிறகு மருமகளை உணவு விசயத்தில் வற்புறுத்தவில்லை. வழக்கம் போல மாமியார் முன்பு ஜெபத்தையும், தோத்திர பாடல்களையும் ராகவி விடவில்லை. 
ஆகையால் அவர்கள் உறவு வழமை போல தொடர்ந்தது. இடையில் ராகவி தன் கையாய் ஒரு கிருஷ்ணர் உருவத்தை தாளில் வரைந்து வண்ணம் தீட்டி, அதை அவர்களின் அறை அலமாரியில் வைத்து தினசரி ரகசிய பூஜை செய்ய துவங்கினாள். 
மொட்டை மாடியில் மூலிகை தோட்டம் அமைத்து, அதோடு மாமியாருக்கு சந்தேகம் வராத வகையில் துளசி மாடம் தயார் செய்தாள். அதிகாலையில் சூரிய நமஸ்காரத்தை மீண்டும் ஆரம்பித்தாள். 
துளசியை அறைக்கு கொண்டு வந்து, அதனால் தன்னுடைய கிருஷ்ணரை அலங்கரித்து வைத்தாள். முழுதாய் ஒன்றரை மாதங்கள் கழித்து ஊருக்கு வந்த ராஜ் மனைவியை கொண்டாடி தீர்த்த பின் அவள் அறையில் செய்து வைத்திருந்த கோலங்கள் கண்டு உண்மையில் பயந்தே போனான். 
தாய் இதை நிச்சயம் சகிக்க மாட்டார் என அவனுக்கு தெரியும். ஆனாலும் மனைவியின் ஆசையின் மீதும் நீரூற்ற அவனுக்கு பிரியம் இல்லை. எனவே, ‘இதெல்லாம் அம்மா கண்ணுல பட்டுடாம பார்த்துக்கோ ரா. மும்பை போனதும் நான் உனக்கு ஒரு பூஜை ரூமே செட் பண்ணி தரேன். ஆனா அம்மா.. சொல்லி இருக்கேன் இல்ல.’’ அவன் அமைதியாய் வேண்ட, மனையாளும் சரி என்பதாய் தலையாட்டி வைத்தாள். 
ராஜ் உடனிருந்த இரு வாரங்களும் ராகவி மேலும் சுறு சுறுப்பாய் நடமாடினாள். இருவரும் ஜோடியாக ஊரை சுற்றி வந்தனர். ராஜ் மும்பை கிளம்பி செல்லும் போது அடுத்த மாதத்தின் துவக்கத்தில் அவளை தன்னோடு மும்பை அழைத்து செல்வதாய் சொல்லியிருந்தான். 
ஆனால் அதற்கு முன் ராகவிக்கு லேசாக உதிரப் போக்கு துவங்க, கரு தான் கலைந்து விட்டதோ என ராகவி பயந்தே போனாள். மருத்துவமனை செல்லும் வரையில் ஒரு தாயாய் தன் குழந்தையை எண்ணி துடித்துப் போனாள். 
அப்போது தான் தன் பெற்றோரும் தன்னை எண்ணி இப்படித் தானே துடித்து இருப்பார்கள் என்ற நிதர்சனம் அவளுக்கு புரிந்தது. மருத்துவர் பரிசோதித்து, குழந்தை நலம் என்ற வாரத்தையை சொல்லும் வரை, மரியம் ஏசுவையும், ராகவி கிருஷ்ணா என்ற நாமத்தையும் மனதிற்குள் ஒரு நொடி கூட விடாது ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். 
“இது அபார்சன் இல்ல. சிலருக்கு ஏற்படுற முன் உதிரப் போக்கு. இனி உதிரம் வராம இருக்க ஊசி போட்டு இருக்கேன். இனி தான் இவங்களை பத்திரமா பார்த்துக்கணும். ஹெவியா எந்த வேலையும் செய்ய கூடாது. ட்ராவல் செய்ய கூடாது. குழந்தை பிறக்குற வரை ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.’’ என்ற மருத்துவரின் அறிவுரையை கேட்டதும், குழந்தை பிறக்கும் வரை தன் வாழ்வு இங்கு தான் என்பதை ராகவி உள் வாங்கிக் கொண்டாள். 
என்னவோ அந்த சம்பவத்திற்கு பிறகு ராகவி முற்றாய் மாறிப் போனாள். குழந்தை நன்றாக பிறக்க வேண்டுமே என்ற கவலை அவளை அரிக்க தன் கிருஷ்ணரின் பாதங்களை சரணடைந்தாள்.
மரியம் மருமகளுக்கு முடியாத காரணத்தினால் அவள் அறையில் வந்து அவளுக்காய் ஜெபித்து செல்வார். ராகவியின் துள்ளல் அடங்கிப் போக, மாமியார் சமைத்து தரும் உணவினை குழந்தையின் நலன் எண்ணி விழுங்கினாள். 
மரியம் அசைவம் சமைப்பதில் கெட்டி. சைவம் ஏதோ பேருக்கு சமைப்பார். அவர் கனவா கண்டார் தன் மகன் சுத்த சைவப் பெண்ணை கட்டி வந்து பின்னாளில் கர்ப்பிணியாய் அவள் அற்புத சைவ சமையலுக்கு ஏங்குவாள் என. 
இப்படியே மேலும் இரு மாதங்கள் கழிய, ராஜ் வந்து காணும் போது ராகவி, அறையில் கட்டிக் கொண்டு, “எனக்கு அம்மா மடியில படுத்துக்கணும் போல இருக்கு ராஜ்..’’ என கண்ணீர் வடிக்க அந்த காதல் கணவனும் கலங்கித் தான் போனான். 
ஆனால் நிலைமை தெள்ள தெளிவாய் அவனுக்கு தெரியும் ஆகையால், “ரா… கண்டிப்பா இப்ப உங்க வீட்ல நம்மை ஏத்துக்க மாட்டாங்க. குழந்தை பிறக்கட்டும் சரியா. அப்புறம் உங்க அம்மாவை கொஞ்சலாம். முதல்ல கடல் தாண்டி வந்த என்னை கொஞ்சு பார்க்கலாம்.’’ என்று அவளை திசை திருப்பி அப்போதைக்கு அவளை சமாளித்தான். 
கணவன் அருகில்லாத போதெல்லாம் ராகவி தன் கிருஷ்ணரை சரணடைந்து விடுவாள். இப்படியே ராகவிக்கு ஏழாம் மாதம் வளைகாப்பும் முடிய, வழக்கம் போல தங்கள் பக்க முறைகளை எண்ணி ராகவி உள்ளுக்குள் ஏங்கிப் போனாள். 
ராகவிக்கு எட்டாம் மாதம் நடந்துக் கொண்டிருந்த போது, ராஜ் அப்போது தான் ஊருக்கு வந்து மீண்டும் கடலுக்கு சென்றிருந்தான். அறைக்குள் மட்டுமே நடமாடும் ராகவி, வழக்கம் போல குளித்துவிட்டு வந்து, அலமாரியில் இருக்கும் கிருஷ்ணரை எடுத்து வழிபட்டுவிட்டு அமர்ந்திருந்தாள். 
அதே நேரம் வெளியே ஷாலினியின் குரல் கேட்க, முதுகலை படிப்பிற்காய் சென்னையில் இருந்தவள் ஊருக்கு திரும்பி இருப்பதை உணர்ந்து ஓவியத்தை அப்படியே விட்டு விட்டு ராகவி தோழியை காண விரைந்தாள். 
சென்னை வாழ்க்கை முறையும், மேற் கல்வியும் ஷாலினியை இன்னும் பொலிவாக்கியிருந்தது. தோழிகள் இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து கதை பேச மரியம் இருவருக்கும் பழசாறு கொண்டு வந்து கொடுத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்ய துவங்கினார். 
வழமை போல மரியம் ராகவியின் அறையை சுத்தம் செய்ய, இவள் வெளியே விட்டு வந்திருந்த ஓவியம் காற்றில் பறந்து தரையில் விழுந்திருந்தது. 
ஏதோ குப்பை என மரியம் அதை கூட்டி வரவேற்பறையில் தள்ள, தோழியோடு பேசிக் கொண்டிருந்த ராகவி மாமியாரின் செயல் கண்டு துடித்தவள், பதறிப் போய் அந்த ஓவியத்தை கையில் எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். 
மரியத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் மருமகளை கேள்வியோடு நோக்க, “எங்க சாமி உங்களுக்கு அவ்ளோ இளப்பமா போயிட்டாரா..? துடைப்பம் போட்டு தள்ளுறீங்க. ஐயோ.. கிருஷ்ணா…’’ என்றவள் மீண்டும் அந்த ஓவியத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். 
மரியத்திற்கு அவள் பேசுவது சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் புரிந்த பின் அவரின் நெற்றி சுருங்கியது. “உங்க சாமி போட்டோ எல்லாம் இங்க கொண்டு வந்து வச்சிருந்தியா..?’’ என்று சற்று உக்கிரமாகவே கேட்டார். 
“ஏன் வச்சிக்க கூடாது. உங்களுக்கு உங்க சாமி உசத்தி மாதிரி எனக்கு என் சாமி உசத்தி. இன்னைக்கு என் வயித்துல இருக்க குழந்தை நல்லா இருக்க காரணமே என்னோட கிருஷ்ணர் தான்.’’ என்று யோசியாது வாய்விட்டாள். 
மரியம் சற்று நேரம் உறைந்து நின்றார். எதுவுமே பேசவில்லை. “உன் கையில் இருக்கும் உருவத்திற்கு என் வீட்டில் இடம் இல்லை. இருதயராஜ் பொண்டாட்டியா எங்க மதத்தை நீ ஏத்துகிட்டதா நியாபகம். கர்த்தர் வழி வந்தவங்க மாற்றுப் பாதையை தேட மாட்டாங்க. நீ இப்ப இருக்க நிலை ஒருவேளை உன்ன பலவீனமா மாத்தியிருக்கலாம். கர்த்தரின் பாதங்களை கெட்டியா பிடிச்சிக்கோ. அவர் ஒருபோதும் நம்பியவங்களை கைவிட மாட்டார்.’’ என்று தன்மையாய் மருமகளுக்கு அறிவுரை வழங்க துவங்கினார். 
ராகவிக்கு அத்தனை நாள் அடைபட்டிருந்த மொத்தமும் அன்றைக்கு வாய் வழி வெளியே வந்தது. “நீங்க பிறந்ததுல இருந்து உங்களுக்கு இயேசு தான் பகவான்னு கை காட்டி வளர்திருப்பா. உங்களை ஒரே நாள்ல மாற சொன்னா உங்களால முடியுமா..? ராஜை காதலிச்சதுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனை கட்டாயம் தரணுமா..? நீங்க உங்களுக்கு பிடிச்ச இயேசுவை கும்பிடுங்கோ. நான் எனக்கு பிடிச்ச பகவானை பிரார்த்தனை பண்றேன். ஒருத்தர் நம்பிக்கையில இன்னொருத்தர் ஏன் குறுக்கிடனும்.’’ ராகவி தன்னிலையை உணர்த்த முயன்றாள். 
“இதையெல்லாம் நீ ராஜை திருச்சபையில வச்சி கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி பேசி இருந்தா.. உங்க கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சே இருக்க மாட்டேன். என் மகனும் நான் ஒத்துக்காத உன்னை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டான். நடந்ததை நினச்சி பார்த்து பேசு ராகவி. பொண்ணுங்க வழி எப்பவும் புருஷன் வழி. அதை ஒரு நாளும் மறக்க நினைக்காத.’’ என்றார். 
ஷாலினிக்கு இந்த சொற்போர் செல்லும் பாதை அபாயகரமாக தோன்ற அப்போதைக்கு தோழியை தேற்றும் நோக்கில், “ராகவி… நீ கொஞ்சம் சும்மா இரு. வா. உன் ரூமுக்கு போகலாம். உன் வளைகாப்பு ஆல்பம் நான் இன்னும் பார்க்கவேயில்லையே.’’ என்று தோழியை அங்கிருந்து நகர்ந்த முனைந்தாள். 
ஆனால் மரியம் , “உன் பிரண்டை அவ கையில் இருக்க படத்தை வெளியே வச்சிட்டு உள்ள போ சொல்லு.’’ என்று கட்டாய குரலில் ஆணையிட்டார். 
ஆனால் அதை மறுக்கும் விதமாக ராகவி அப்படியே நின்றாள். ஷாலினி கைகளை பிசைந்து கொண்டு நின்றாள். 
“வேணும்னா அந்த படத்தோட நீயும் வெளிய போயிரு. எங்க வீட்ல இயேசுவை தவிர வேற ஒரு தெய்வத்திற்கு இடமில்லை.’’ என்றார் ஆணை போல. 
ராகவி கொஞ்சமும் கலங்கவில்லை. கணவன் வீட்டில் தற்சமயம் இல்லை என்பதும் அவள் நினைவில் இல்லை. கையில் இருந்த ஓவியத்தை இறுக்கிப் பிடித்தவள், வேகமாய் நடந்து வெளியே வந்து காலணியை அணிந்தாள். 
ஷாலினி அழைக்க, அழைக்க வீராப்பாய் தெருவில் இறங்கி நடந்தாள். மரியமும் இறங்கி வரவில்லை. ராகவியும் திரும்பி பார்க்கவில்லை. 
இருவரும் அறியாத உண்மை, ராகவி மீண்டும் அந்த இல்லத்தின் வாசலை இனி மிதிக்கப் போவதில்லை என்பதை தான்.
சலனமாகும். 
     
 

Advertisement