Advertisement

சலனம் – 15
அந்த தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டு புடவை சரசரக்க அங்கும் இங்கும் கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தார் மரியபுஷ்பம். ஒற்றை மகனின் திருமண வைபவத்தில் அவர் முகம் அத்தனை பூரித்திருந்தது. 
ஜோசப் இருதயராஜ் மண மகனுக்குரிய கம்பீர உடையில் இருக்க, ஆலின்லீத்தியால் என்று திருச்சபையில் இரண்டு நாட்களுக்கு முன் ஞானஸ்நானம் பெற்று பெயரோடு மதம் மாற்றப் பெற்றிருத்த ராகவி, மணப்பெண் என்று அவளை அடையாளப்படுத்தும் வெண்ணிற வலைத்துணி கிரீடத்தை அணிந்திருந்தாள். 
பாதிரியார் வழக்கமான சம்பர்தாயங்களை நிறைவேற்ற, மணமக்களும், கூடியிருந்தோரும் சம்மதம் தெரிவிக்க, தங்கத்தில் கோர்க்கப்பட்டிருந்த தாலி செயினை அவள் கழுத்தில் அணிவித்தான் ராஜ். 
ராகவியின் கண்கள் ஏற்கனவே கலங்கி இருந்தது. இவன் மாங்கல்யத்தை அணிவித்த அடுத்த நொடி தாரை தாரையாக கண்களில் நீர் வழிய, இவள் அருகே ஓடி வந்த சகாயமேரி, “ஏய் பிள்ள கல்யாணானத்தன்னைக்கு பொண்ணு புள்ள கரைய கூடாதுல்ல.’’ என்றாள் சற்றே ஆதங்க குரலில். 
இவளின் பின்னே மணப் பெண் தோழியாய் நின்று கொண்டிருந்த, ஷாலினி, “ராகினி ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப். எங்க வீட்டுப் பக்கம் இதெல்லாம் ரொம்ப பார்பாங்க. நீ அழுதா  உனக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்லையோன்னு சொந்தக்காரங்க நினைச்சிடுவாங்க.’’ என தன் பங்கிற்கு ஆற்றுப்படுத்த முனைந்தாள். 
ராகவி முயன்று அழுகையை முழுங்கினாள். மூன்று மாதங்களுக்கு முன்னால், நடந்த அக்காவின் திருமண வைபவம் அவள் கண் முன் பவனி வந்தது. 
அவர்களின் தந்தை ரங்காச்சார்யர் மடியில் அமர்ந்திருந்த அக்காள் பானுமதியின் கன்னிகாதானம் என்று சொல்லப்படுகின்ற மாங்கல்ய தாரணம் முடிந்ததும், சூழ நின்ற சுற்றமே கண்ணீர் வடிக்க, 
‘மாட்டுப் பொண்ணு வந்தாச்சா .. மருமா வந்தாச்சா’ என்று மாறி மாறி கேட்டு கண்ணீர் வடிந்த கண்களோடு கட்டியணைத்துக் கொண்டது நேற்றைக்கு தான் நடந்தாற் போல இருந்தது. 
அதோடு மாப்பிளையின் தம்பி, ‘அத்திம்பேர் வந்தாச்சா’ எனக் கேட்டு இவளின் கை குலுக்கவும், இவள் ‘மன்னி வந்தாச்சா’ என்று பதில் கொடுத்தபடி, மேடைவிட்டு இறங்கியதும் எப்படி அவளால் மறக்க முடியும். 
அக்காவின் அந்த மூன்று நாள் திருமண கொண்டாட்டத்திலும், மணப் பெண்ணின் தங்கை என்ற ஹோதாவில் இவள் பட்டாம்பூச்சியாய் சுற்றியதென்ன. 
அதுவும் அவளின் அத்திம்பேர் அவள் அக்காளின் கழுத்தில் தாலி கட்டும் போது, நாளை நம் திருமணத்தில் நாமும் இப்படி தான் புன்னகையோடு அழுது கரையப் போகிறோம் என்று எண்ணியதென்ன. 
ஆனால் எண்ணியதெல்லாம் நடந்துவிட்டால் அது எப்படி மனித வாழ்வாகிவிடும். ராகவி கொஞ்சமும் எண்ணிப் பார்க்காத விடயமாய், கல்லூரியில் உடன் படித்த தோழி, ஷாலினியின் தாய் மாமன் இருதயராஜ் அவளை ஒரு நாள் கல்லூரிக்கு மோட்டார் பைக்கில் விட வந்த போது, பொத்தென காதலில் விழுந்தே போனாள் ராகவி. 
முதலில் அவளை கவர்ந்தது அவன் நெடு நெடு உயரம் தான். அக்காள் மகளை கல்லூரியில் விட்டவன், வேறு யார் புறமும் பார்வையை திருப்பாமல் வண்டியை வீட்டை நோக்கி திருப்பியதில் மயக்கம் கொஞ்சம் கூடுதலானது.
அடுத்து வந்த நாட்களில் சாதரணமாக விசாரிப்பதை போல, ஷாலினியிடம் இருதயராஜ் பற்றிய விசாரணையை துவங்கினாள். ஏற்கனவே மாமனின் தீவிர விசிறியான அவள், கேட்க ஒரு செவி கிடைத்த மகிழ்வில், தன் மாமனின் வீர தீர சாகசங்களை கொட்டி தீர்த்தாள். 
அவள் சொல்லிய கதைகளில் தனக்கு வேண்டியவற்றை ராகவியின் மூளை வெகு இயல்பாக பிரித்து எடுத்து கோர்த்தது. 
‘ஷிப் கேப்டன். பல ஆயிரங்களில் சம்பளம். ஒற்றை மகன். இளம் வயதில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் விளையாடி பரிசு வென்ற சூரன்.’ 
ஷாலினி ராஜை பற்றி இன்னுமின்னும் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அதை கேட்க காது கொடுத்தவள் தற்சமயம் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். 
அடுத்து வந்த நாட்களில், ‘நோட்ஸ் எடுக்க… கொடுக்க’ என அடிக்கடி ஷாலினியின் வீட்டுப் பக்கம் ஒதுங்க துவங்கினாள். ஷாலினியோடு அடிக்கடி தென்படும் அவளை முதலில் இயல்பாக கடந்துக் கொண்டிருந்த இருதயராஜ் பின்னொரு மழைநாளில் அவள் மேல் மையல் கொண்டான்.
அவளின் ஆரிய நிறமும், அடர்ந்த புருவங்களும், தந்தியடிக்கும் பேச்சும் அவனுக்கு புது அனுபவமாயிருந்தது. அடுத்த ஒரு மாதமும், நூலக புத்தகங்கள் காதல் கடிதங்கள் சுமக்கும் தபால்காரர்களாகின. 
திருமணம், எதிர்காலம் என்ற நிதர்சன பேச்சுகளை விடுத்து, இருவரும் இளையாராஜா பாடல்களில் காதல் கடிதங்களை துவக்கி உருகி உருகி காதலித்தனர். 
அடுத்த மாதம் அவன் கப்பலுக்கு புறப்பட, இங்கு ராகவி சங்க தலைவியாய் பசலையில் வாடினாள். இதற்கிடையில் மசக்கை தாக்கிய பானுமதி தாய் வீட்டை தஞ்சம் அடைந்திருந்த நேரம், அவளின் நோட்டு புத்தகங்களில் துயின்று கொண்டிருந்த, காதல் கடிதங்களை கண்டவள் அதிர்ந்து தந்தையிடம் அப்படியே போட்டுக் கொடுத்தாள் . 
இன்னும் ஒரு மாதத்தில் இறுதி வருட பருவ தேர்வுகள் தொடங்கப்படவிருக்க, பானுமதியின் கொழுந்தன் அரவிந்தனை அவசர மாப்பிள்ளையாய் நிர்ணயித்து, அவர்கள் அமைதியாய் கல்யாண வேலையை தொடங்கினர். 
ராகவிக்கு எதையும் சுவீகரிக்க அவகாசமே வழங்கப்படவில்லை. அவளின் வெளிநடப்புகள் தடை செய்யப்பபட்டன. கல்லூரியில் விட்டு செல்ல, அழைத்து வர தினமும் அவளின் தந்தை ரங்காச்சாரி உடன் வந்தார். 
இறுதி பரிட்சைகள் முடிந்து அவள் வெளி வந்த நாளில், அரவிந்தன் அவளுக்காய் காத்திருந்தான். இவள் பேந்த பேந்த விழிக்க, “உனக்காக வாங்கிண்டு வந்தேன்.’’ என்று இவள் கைகளில் ஒரு பரிசுப் பொருளை கொடுத்தான். 
ராகவி இவன் எதற்கு தனக்கு பரிசு கொடுக்கிறான் என்று விழித்துக் கொண்டு நிற்க, “இன்னும் இருபது நாள்ல நமக்கு கல்யாணம். ஆனா ரெண்டு பேரும் பேசிப் பழகவே இல்லையே ராகவி. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். வீட்ல எல்லாரும் உனக்கு சம்மதம்னு சொன்னாலும் நேக்கு உன் வாயல கேக்கணும் போல இருந்தது. அதான் யாருக்கும் சொல்லாம வந்துட்டேன். வருங்கால ஆத்துக்காரியை யாராச்சும் வெறுங்கையோட பார்க்க வருவாளோ.. அதான் ஒரு சின்ன கிப்ட். பிடிச்சிருக்கா…’’ அவன் இரட்டை பதில் எதிர்பார்த்து கேள்வியை தொடுக்க, இன்றைக்கு பார்த்து காற்றுப் போன தன் இருசக்கர வாகனத்தை மனதில் சபித்தபடி, ரங்காச்சாரி வேகமாய் அங்கு வந்து சேர்ந்தார். 
“என்ன மாப்பிள்ளை வரதா சொல்லவே இல்லையே…? வாங்கோ ஆத்துக்கு போகலாம். என்னத்துக்கு இப்படி நடுரோட்ல நின்னு பேசிண்டு.’’ என்று அரவிந்தனின் கவனத்தை தன் புறம் திருப்பினார். 
மானாரின் பேச்சில் அரவிந்தன், ராகவியின் அதிர்ந்த முகத்தை கவனிக்கவில்லை. “இல்ல மாமா…! அடிக்க கொடுத்திருந்த பத்திரிக்கை வாங்க வந்தேன். அதான் அப்படியே ராகவியை பார்த்துட்டு போலாம்னு வந்தேன். ஆத்துல எல்லாரும் எனக்காக காத்துண்டு இருப்பா. நான் போனா தான் அவா கோவிலுக்கு போவா. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன் மாமா. வரேன் ராகவி.’’ என்றவன் கிளம்ப, தந்தையும் மகளும் தலையை மட்டும் உருட்டி தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர். 
வழியில் தந்தையும் மகளும் பேசிக் கொள்ளவில்லை. வீடு வந்ததும் ராகவி கலங்கிய முகத்துடன், ‘ஏன் இப்படி செய்தீர்கள்’ என்பதை போல பார்த்தாள் . ரங்காச்சாரி தன் அலமாரியிலிருந்த அவளின் காதல் கடிதங்களை அவள் முகத்தில் விட்டெறிந்தார். 
“பெத்த கடனுக்கு கட்டி கொடுக்கப் போறேன். ஒழுங்கா கட்டிண்டு இந்த வீட்டை விட்டு போ. இல்ல பொணமா பாடையில போல. ரெண்டே ஆப்சன் தான் உனக்கு. நம்ம பரம்பரை என்ன பரம்பரை. நாலு தலைமுறையா ஸ்ரீரங்கத்து பெருமாளுக்கே சேவை பண்ணின முதன்மை பட்டர் வழி வந்தவா நாம. வேத்து மதத்து ஆளுமேல நோக்கு பார்வை போறதோ…’’ அவர் வார்த்தைகளில் மகளை வாட்டி விட்டு தன் இருப்பிடமான சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். 
அவர் முடிக்கவெனவே காத்திருந்ததை போல, சமையற்கட்டில் நின்றுக் கொண்டிருந்த தாய் பொரிய துவங்கினாள். “நோக்கு ஏண்டி புத்தி இப்படி போறது. உன்னாட்டம் தானே உங்க அக்காளும் காலேஜு போனா. எப்படி படிச்சு வந்தா. மனசுல இருக்க கசடை எல்லாம் கேணி ஜலத்துல அலம்பிடு. அவ்ளோதான் சொல்வேன் நான்.’’ என்று தன் பங்கிற்கு மகளை மூளை சலவை செய்தார். 
பானுமதி அப்போதைக்கு எதுவுமே பேசவில்லை. ஆனால் அவர்களின் அறையில் உறங்கும் நேரம், “எதார்ததுல இதெல்லாம் ஒத்து வராது ராகிமா.’’ என்று தன்மையாக விளக்க முயன்றாள். 
ஆனால் எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளி கிளம்பியதிலிருந்தே மூர்க்கமாய் தானும் எதிர்ப்பது என்று முடிவெடுத்திருந்த ராகினி, “இனி எப்பவும் என்கிட்டே நீ பேசாத அக்கா.’’ என்று அவர்களின் உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். 
உலகம் அறியா மகள் என்று எண்ணிக் கொண்டிருந்த இவர்களின் மகள், அடுத்த நாளே, தன் திருமண செய்தி குறித்து ராஜிற்கு கடிதம் அனுப்பிவிட்டாள். 
அதுவும் இவர்கள் எவனை மாப்பிள்ளையாய் தேர்ந்தெடுத்து இருந்தார்களோ அவளின் மணாளன் மூலமே. இவர்கள் வீட்டிற்கு பத்திரிக்கை கொடுக்க வந்த அரவிந்தனிடம் தனிமையில் பேச கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, 
“என் பிரண்டுக்கு எழுதின லெட்டர். போறச்சே கொஞ்சம் போஸ்ட் ஆபிஸ்ல போட்ருங்கோ.’’ என்று அவன் கையாலே அவன் திருமணத்திற்கு சூன்யம் வைத்தாள். 
அரவிந்தன் வெள்ளந்தியாய் அதை கால் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, அவள் சொன்னபடி தபால் பெட்டியில் அக்கடிதத்தை சேர்த்தான். மும்பை அலுவலகத்தை அடைந்த கடிதம், அவன் பணி நிமித்தம் கப்பலில் இருந்ததால் அவன் கரம் சேர மேலும் ஆறு நாட்களாகியது. 
விடயம் கேள்விப்பட்டு அவன் பறந்தோடி வருகையில் திருமணத்திற்கு ஆறே நாட்கள் மீதம் இருந்தன. முதலில் ராஜ் தன்மையாக ராங்காச்சாரியை அவரின் வீட்டில் சந்தித்தே பேசினான். 
ஆனால் அவனை வீட்டிற்கு வெளியே திண்ணையில் அமர வைத்து பேசியதோடு, அவனின் சாதி குறித்து பேசி, அவனை அவமானப்படுத்த உள்ளுக்குள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராகவி, அவன் அவமானப்படுவதை பொறுக்க முடியாமல் பொங்கிவிட்டாள். 
அக்ரஹாரமே அவர்கள் வீட்டு வாயிலில் கூடி நின்று வேடிக்கைப் பார்க்க, “நான் இனி உங்க பொண்ணே இல்லப்பா. நீங்க சொன்ன மாதிரி பாடையில பொணமா போயிட்டதா நினச்சிண்டு எல்லாரும் தலை முழுகிடுங்கோ.’’ என்று அடிக்குரலில் வீரா வேசமாய் முழங்கியவள், இவளை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்த இருதயராஜின் கரம் பற்றி, அந்த வீட்டை விட்டு, பிறந்து வளர்ந்த தெருவை விட்டு, இது நாள் வரை வாழ்ந்த வாழ்வை விட்டு விறு விறுவென வெளியேறினாள். 
மரிய புஷ்பம் மகன் ஒரு இந்துப் பெண்ணோடு வந்திருப்பதை கண்டு முதலில் அதிர்ந்தாலும், அவன் முகத்தில் கலக்கத்தை கண்டவர் உடனே தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, ராகவியிடம், “இனி உனக்கு எல்லாமே என் மகன் வழி தான். அதுக்கு உனக்கு சம்மதம் தானே.” எனக் கேட்டார். 
ராகவி கண்களில் திரண்ட நீரோடு மௌனமாய் தலையாட்டினாள். அடுத்த நிமிடமே அவர்கள் உறவே அவன் வீட்டில் கூடிவிட, இவனின் பெரியம்மா மகளான சகாயமேரியின் வீட்டில் தங்க வைக்கப்பட்டாள். 
கூடவே இவளின் தோழி ஷாலினி இருந்தாலும், அவர்களின் வாழ்வியல் முறையை இவளால் அனுசரிக்க முடியவில்லை. இவளோ அசைவம் என்ற பெயரை கேட்டாளே அஞ்சுவாள். 
அவர்கள் வீடோ மீனவக் குடும்பம். வீட்டில் எப்போதும் மீன் மணத்தது. இவளுக்காய் தாளித்து தரும் பருப்பு கூட தொண்டையில் சிக்கியது. அடுத்த நாளே அவளுக்கு ஞானஸ்தானம் கொடுத்து பெயரோடு மதம் மாற்றினார்கள். 
அங்கே சிலுவையில் அறையப்பட்டிருந்த ஏசு ஏனோ இவளுக்கு பெருமாளாகவே காட்சி தந்தார். இவளின் பெயர் மாற்றப்படும் போதும், ‘பெருமாளே’ என மனதிற்குள் முனகிக் கொண்டாள். 
மரியம் இரண்டு நாட்களில் இவளுக்கென அணி, மணிகளை வாங்கிக் குவித்தார். அருகில் வரும் போதெல்லாம், “பொண்ணு மவளே.’’ என்று நெற்றி வருடினார். அடிக்கடி இவள் நெற்றியில் சிலுவை குறியிட்டு ஆசிர்வதித்தார். 
அவர் இவரிடம் வேண்டியது ஒன்று தான். “எனக்கு உங்க கல்யாணத்துல எந்த வருத்தமும் இல்ல கேட்டியோ. இவங்க தாத்தா பாஸ்டர். பாதிரிமாருங்க குடும்பம்னு நமக்கு தனி பேரே இருக்கு. அந்த பேரு எப்பவும் நிலைக்கணும். பிறப்பால நீ மாறியிருந்தாலும் இடைவழியில் சரியான மேய்ப்பர்கிட்ட வந்து சேர்ந்துட்ட. கர்த்தரோட பாதங்கள கெட்டியா பிடிச்சிக்கோ. விட மாட்டாருல்ல எப்பவும்.’’ என்றார். 
அவளுக்கும் இவரின் உள்ளக் கிடக்கு புரிய தான் செய்தது. ஆனால் பிறந்ததில் இருந்தே பழகியது ஒரு நாளில் எப்படி மாறும். இவர்கள் வாசிக்க கொடுத்த வேதகாமத்தில் அவள் கந்தசஷ்டியை உருப் போட்டுக் கொண்டிருந்தாள். 
இப்படி அவளின் வாழ்க்கை முறை மாறிய நாற்பதெட்டு மணி நேரங்களில் ராகவி உள்ளுக்குள் மிரண்டு போனாள். காதலிக்கும் போது, கோவில் வரை உடன் வருபவன், வாசலோடு நிற்பதும், இவள் நீட்டும் விபூதியை ஒரு புன்னகையோடு மறுதலிப்பதும் நினைவில் வந்து கிலிமூட்டியது. 
இனி என் பெருமாளை நான் பார்க்கவே கூடாதா..? ஆஞ்சநேயரின் செஞ்சாந்து இட்டுக் கொள்ள கூடாதா..? மார்கழி காலையில் வாசலில் பூசணிப் பூ வைத்து, பாசுரம் பாடக் கூடாதா..? 
பிறந்த இத்தனை கேள்விகளும் அன்று இரவு ராஜை கண்டதும் தற்காலிகமாய் மறைந்து போனது. இவளின் கரம் பற்றிக் கொண்டவன், “உனக்கு கஷ்டமா இருக்கும்னு தெரியும். அம்மா எது சொன்னாலும் சரி சரின்னு கேட்டுக்கோ. ஒரு மூணு மாசத்துல மும்பை போயிடலாம். அம்மா முன்னாடி உங்க சாமி பத்தியெல்லாம் எதுவும் பேசிடாத. ஆனா மும்பை போனதும் நீ உன் இஷ்டப்படி இருக்கலாம் சரியா..?’’ என்று அவளை தேற்ற முயன்றான். 
மறைந்த புன்னகை ராகவியின் இதழில் மலர்ந்தது. ஆயினும் நடந்தேறிய அடுத்தடுத்த நிகழ்வுகள் அவளை பரமபத ஆட்டத்தின் சர்ப்பம் தீண்டிய காயாக மேலும் கீழும் போட்டு உருட்டி எடுத்தது. 
திருமண வைபவம் தொடங்கிய நிமிடத்திலிருந்தே இவளின் மனது நடந்து முடிந்த அக்காளின் திருமணத்தில் மையம் இட்டுக் கொண்டது. எங்கள் வழக்கப்படி திருமண மூகூர்த்தம் வைகறையில் இருக்கும் என்றது துவங்கி, 
‘இப்போ மடிசார் கட்டிடிண்டு இருக்கனும். ராஜ் காசியாத்திரை கிளம்புவார். அப்பா மகளை தரதா சொல்லி அழைச்சிண்டு வருவா. மாமா எல்லாம் என்னை தூக்கி இருப்பா மாலை மாத்த. எனக்கு ராஜ் கழுத்தை எட்டி போக்கு கட்டுவார். எங்களை பொன்னூஞ்சல் உக்காத்தி வச்சி மாமிலாம் பழம், பால் கொடுத்து கன்னூஞ்சல் பாட்டுப் பாடுவா… அப்பா மடியில் உக்காந்து ராஜ் கையால மாங்கல்யம் வாங்கிப்பேன்.’ 
அவள் தன் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, “சிஸ்டர் இங்க பாருங்க..” என புகைப்படக் கலைஞர் அவளை நடப்பிற்கு இழுத்தார். 
பந்தியில் பரிமாரியிருந்த பிரியாணியை அள்ளி மண மகனுக்கு ஊட்ட சொன்ன போது, ராகவி, ராஜ் கொடுத்த உள்ளங்கை அழுத்தத்தில் அதை சரியாக செய்து முடித்தாள். 
ஆனால் அவன் பிரயாணி விரல்களில் இவளின் சாம்பார் சாதம் பிசைந்து வாயருகில் கொண்டு வருகையில் ஓங்கரித்து வந்ததை உள்ளே தள்ளி புன்னகைத்து நடிக்க அரும்பாடுபட்டுப் போனாள். 
இனி தன் வாழ்நாள் முழுக்க இப்படி வேடமிட்டு அலையப் போகிறோம் என்பதை அவள் அப்போது அறியவில்லை. 
சலனமாகும்.   
  

Advertisement