Advertisement

சலனம் – 14 
ரியாஸ் முகத்தில் அப்படியொரு ரௌத்திரத்தை கவி இதற்கு முன் கண்டதே இல்லை. உடலெல்லாம் நடுங்கிப் போய் நின்றுக் கொண்டிருந்தாள். ரியாசிடம் தன்னிலை விளக்கம் கூட கொடுக்க முடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள். 
“உனக்கு படிச்சி படிச்சி சொன்னேன் கவி. இசைக்கு பிடித்தம் இருந்தாலும் ஒதுங்கி ஒதுங்கி போகுது, என்ன காரணம் தேடுன்னு. ஆனா நீ உப்பு சப்பில்லாத மேட்டர்ஸ் எல்லாம் கேதர் பண்ணி எடுத்துட்டு வந்த. அந்த பொண்ணுக்கு நிச்சயமான விசயத்தை கூட தெரிஞ்சிக்காம கூடவே ஏழு மாசமா ஒரே ரூம்மெட்டா வேற இருந்து இருக்க…’’
சொன்னவன் மேஜையில் இருந்த கண்ணாடி கோப்பையை சுவற்றில் விட்டெறிய, அது சுக்குநூறாகி தரையில் தெறித்தது. கவி ரியாசின் கோப முகத்தை எதிர்பார்த்தே, அவன் அழைத்தத போது, அவனின் வீட்டிற்கு வந்திருந்தாள். 
ஆனால் இப்படி ஒரு மூர்க்கத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. வாயில் வார்த்தைகள் வராது நா தந்தியடிக்க, “ரியாஸ்…. அது… நான்…’’ அவள் திணறும் போதே, 
“வாயை மூடு. வாயை மூடுன்னு சொன்னேன். என் பிரண்ட் தெளிவா… பிராக்டிகலா… இதெல்லாம் எனக்கு ஒத்து வராதுடான்னு ஆரம்பத்துலையே ஒதுங்கிப் போனான். நான் தான் ஏதோ சாதாரண மிஸ் அன்டர் ஸ்டாண்டிங்… அவங்க பேசிப் பழக கொஞ்சம் ஸ்பேஸ் கிடச்சா எல்லாம் சரியாயிடும்னு.. ஏற்காடு ட்ரிப்லாம் அரேஞ் பண்ணி… பிராக்டிகலா தெளிவா இருந்தவனை.. பைத்தியக்காரனா தேவதாசா மாத்திட்டேன். எல்லாப் பிரச்சனைக்கும் நான் தான் காரணம். ஐயம் த கல்பிரிட்..’’ சொன்னவன் வேக வேகமாய் நெற்றியில் மாறி மாறி அறைந்து கொண்டான். 
கவிக்கு அருகில் சென்று அவனின் செய்கையை தடுப்பதற்கு கூட பயமாயிருந்தது. “ரியாஸ்.. ப்ளீஸ்… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. இதுல உங்க மேலலையோ… என் மேலையோ எந்த தப்பும் இல்ல. ரெண்டு பேரும் நல்லது செய்ய தான் நினைச்சோம். ஆனா… இசை…’’ கவிக்கும் இசையின் மீது பெரிய ஆற்றாமை தோன்றியிருந்தது. 
இசையின் பெயர் கவியின் வாயில் வெளிப்பட, வேகமாய் நிமிர்ந்தவன், ‘ஏண்டி… உங்களுக்கு எல்லாம் பசங்க மனசு நீங்க வச்சு விளையாடுற சொப்பு பொம்மையா. உங்கிட்ட முதல்ல பேச ஆரம்பிச்சப்ப நான் என்ன சொன்னேன். எனக்கு ஆளு இருக்குன்னு சொன்னேன் நியாபகம் இருக்கா. 
ஏன் அப்படி சொன்னேன். ரெண்டு பேர் ரிலீஜனும் வேற வேற. நமக்குள்ள வேற மாதிரி பீலிங் டெவலப் ஆனா அதை அவ்ளோ சீக்கிரம் ப்ரோசீட் பண்ண முடியாது. ரெண்டு பேருக்குமே தேவையில்லாத மன உளைச்சல். 
அதுக்கு தான் இல்லாத ஆளை இருக்குறதா சொல்லி நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு கோட்டை போட்டேன். ஒரு பையன் நானே எதிர்ல இருக்க உன்னோட பீலிங்சை இந்த அளவுக்கு புரிஞ்சிக்க முடியும்னா…
இசைக்கு அமுதன் மனசு லேசா புரிய ஆரம்பிக்கும் போதே … வாய திறந்து அடேய் மடையா எனக்கு நிச்சயம் ஆயிடுச்சுடா… இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் முடிவு பண்ணியிருக்காங்ன்னு சொன்னா தான் என்ன..? 
அதானே உங்களுக்கு எல்லாம் நாங்க ஹட்ச் டாக் மாதிரி உங்க பின்னாடியே சுத்தணும். பாக்கெட் மணி முழுக்க ஸ்பென்ட் பண்ணனும். அப்புறம் எவனாச்சு சொந்த வீடு, செட்டில் ஆளுன்னு வந்தா எங்களை கை கழுவிட்டு அவன் பின்னாடி போகணும். 
இவ்ளோ தானே நீங்க எல்லாம். ஆயிரம் பொண்ணுங்க இப்படி தான்டி எங்க பசங்க மனசுல ஆசிட் அடிச்சிட்டு போறீங்க. இதெல்லாம் எந்த மீடியாவாச்சும் பேசுமா…? லவ் பெயிலியர்னு வெளிய சத்தமா சொல்லிக் கூட அழ முடியாது. அந்த வேதனை எல்லாம் உனக்கு எங்க புரிய போகுது. போயிடு… இனி எப்பவும் என்ன பார்க்க வராத..’’ 
நண்பனின் கண்ணீர் துளிகள் ரியாசை அப்படி வெறி கொள்ள செய்திருக்க வார்த்தைகள் கண்டபடி தெறித்து விழுந்திருந்தது. அமுதனை ரியாஸ் எட்டு வருடங்களாக அறிவான். அவன் கண்ணீர் சிந்தி, ஏன் குரல் கரகரத்து கூட ரியாஸ் கண்டதில்லை. 
உள்ளும் புறமுமென நண்பனை அறிந்தவன். அவனை காயப்படுத்திவிட்ட இசையின் மீது அப்படி ஒரு கோபம் வந்தது. ரியாஸ் பேச பேச, கவியின் விழிகள் கலங்கிக் கொண்டே வந்தது. 
அவன் பேசி முடித்ததும், கோபமாய் தன் கையிலிருந்த வாலட்டை திறந்து கைக்கு வந்த பணத்தை அள்ளியவள், அதை அப்படியே அருகிருந்த மேஜையில் வைத்துவிட்டு, “ரொம்ப தாங்க்ஸ்…! பொண்ணுங்களை நல்லா புரிஞ்சி வச்சி இருக்கீங்க. இனி உங்களுக்கும் எனக்கும் நடுவுல ஒண்ணுமே இல்ல… ஒண்ணுமே…’’ ஒற்றை விரலை நீட்டி உணர்ச்சிப் பிழம்பாய் பேசியவள், அடுத்த நொடி திரும்பியும் பாராது விறு விறுவென வெளியேறினாள். 
“போடி.. போ…’’ என்றவன், அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து கூட எழ முயற்சிக்கவில்லை. நண்பனின் கண்ணீர் துளி அத்தனை பாதித்திருந்தது. 
இன்றைக்கு அதிகாலை விமானத்தில் தான் அமுதன் அமெரிக்காவிற்கு பறந்திருந்தான். கடந்த மூன்று நாட்களாய் அமுதன் இருந்த நிலையை எண்ணிப் பார்த்தவன், மனது மிகவும் பாரமாகிப் போனது. 
ஏற்காட்டிலிருந்து திரும்பிய அன்று அவர்களை வழி அனுப்பிய அமுதனின் முகம் ஆனந்தத்தில் விகசித்தது. நொடிக்கொரு முறை, இசையை அவன் பார்வைகள் தொடர, ரியாஸ் தன் செயல் வெற்றி பெற்றதாகவே பூரித்துப் போனான். 
ஆனால் அதே நேரம் குழப்பத்தில் கலங்கி தவித்திருந்த இசையின் முகத்தை அவன் கவனிக்கவில்லை. அலுவலகத்தில் புதிதாய் இவர்கள் கைவசம் வந்திருந்த அடுத்த வேலை அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள, அமுதனும் வேறு அலுவலகத்தில் இல்லாது போக, அவனுக்கு அடுத்த நிலையிலிருந்த ரியாஸ் கூடுதல் பொறுப்போடு அனைத்தையும் கவனிக்க வேண்டியாயிற்று. 
எனவே சில பல புலன செய்திகளோடு கவியின் சந்திப்புகளை கூட தற்காலிகமாய் நிறுத்தியிருந்தான். அவன் சுற்றி வரும் வரை ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவன் பேச்சை நிறுத்தியதும், கவிக்கு பிரிவாற்றாமை தாங்க முடியவில்லை. 
ஆகையால் அவள் தனக்குள் மறுகிக் கொண்டிருந்த இசையை கவனிக்கவில்லை. இப்படி அவரவர் அவரவர் உலகில் உழன்றுக் கொண்டிருக்க, அமுதன் தான் அமெரிக்கா செல்லும் நான்கு நாட்களுக்கு முன்னால் சென்னை வந்தான். 
வரும் போதே உள்ளுக்குள் அப்படி ஒரு உற்சாகம். அன்றைக்கு அவனும், இசையும் தங்களுக்கான உலகத்தில் மூழ்கியிருக்க, தெருவின் ஒலிப் பெருக்கியில் கணீரென்று ஒலித்த சுப்ரபாதம் இருவரையும் நடப்பிற்கு திருப்பியது. 
அமுதன் பட்டென விலக, ஒரு நொடி ஒன்றும் புரியாது அப்படியே நின்ற இசை, அடுத்து அமுதன் அழைக்க, அழைக்க அவர்கள் அறை நோக்கி ஓடிவிட்டாள். 
வெட்கம் என்று எண்ணிக் கொண்ட அமுதன் அடுத்து எழும் அனைவருக்கும் காபி தாயரிக்க தாயரோடு சமையல் அறையை தஞ்சம் புகுந்தான். அனைவரும் எழும்பி, கிளம்ப அதற்கடுத்து இருவருக்குமான தனிமை என்பது வாய்க்கவேயில்லை. 
அவள் மனதில் தனக்கான இடம் இருக்கிறதென்று முழுமையாக எண்ணிய அமுதன், அப்போதைக்கு அவசரப்படவில்லை. மலர்ந்த முகத்துடனே அனைவரோடு அவளையும் வழி அனுப்பி வைத்தான். 
ஆனால் அவள் அவன் கண்களை கூட சந்திக்க மறுத்த போது, அவள் வளர்ந்த சூழல் எண்ணி பயந்திருப்பாள் என்று முடிவெடுத்துக் கொண்டவன், அவர்கள் சென்னை சென்று அடையும் வரை தன்னை அடக்கி கொண்டான். 
அதற்கு பிறகு அவன் இசைக்கு தொடர்பு கொள்ள முயல, அவளோ ஒரே வரியில், “நீங்க சென்னை வந்ததும் சொல்லுங்க. நான் நேர்ல வரேன். நாம பேசலாம். போன்ல எதுவும் பேசவேண்டாமே ப்ளீஸ்…!’’ என்ற செய்தியை அனுப்பி தகவல் தொடர்பை தள்ளி வைத்தாள். 
சரி இன்னும் நான்கு நாட்களில் நேரில் சென்றே பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன், தாயோடு அந்த நான்கு நாட்களை ரசித்து கொண்டாடி கழிக்க துவங்கினான். 
ஏனெனில் அடுத்த ஆறு மாதத்திற்கு அவன் நினைத்தாலும் தாயின் அருகாமை கிட்டாது அல்லவா. அவன் கிளம்பும் நேரம் அருள் குழந்தை போல அழ, அவரை மடி தாங்கி கொஞ்சி சமதானப்படுத்திவிட்டே சென்னை கிளம்பினான். 
இம்முறை இசை ஏதேனும் காரணம் சொல்லி மறுத்தால் அவளுக்கு இருவரின் மன நிலையையும் பொறுமையாய் விளக்கி எப்படியாவது அவர்கள் காதலை அவளை ஒத்து கொள்ள வைக்க வேண்டும் என்றெண்ணியிருந்தான். 
ஆம் அவளின் காதலுக்கும் சேர்த்து தான் ஒருவனே போராட முன்றான். சென்னையை அடைந்ததும், “மியூசிக்… சென்னை வந்துட்டேன்.’’ என்று ஒரு குறுஞ் செய்தியை அனுப்ப, “ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்..’’ என்று மட்டும் ஒரு பதிலை கொடுத்தாள். 
‘வா.. வா..’ என்று  மனதிற்குள் சொல்லி கொண்டவன், சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மாலை இருவருக்குமான வெஜ் சாண்ட்விச்சை தயார் செய்துவிட்டு காதலியின் வருகைக்காய் காத்திருக்க துவங்கினான். 
ஆனால் வந்தவளை கண்டதும், நான்கு நாட்களுக்கு முன்னால் தன் கைவளைவில் நின்றிருந்த பெண்ணா என்ற சந்தேகமே அமுதனுக்கு வந்துவிட்டது. 
கண்ணில் கருவளையும் விழுந்து, உதடுகள் காய்ந்து, சருமம் வெளிறி ஏதோ படுக்கை நோயாளி போல இருந்தாள். அவளை கண்டதும் அதிர்ந்தவன், ‘இசை… என்ன ஆச்சு. ஆர் யூ ஆல்ரைட்.’’ என வேகமாய் அவள் கரம் பற்ற வந்தான். 
ஒரு கையை முன்னோக்கி நீட்டியவள், ‘அங்கேயே நில்லுங்க அமுதன். வராதீங்க.. என் பக்கத்துல வராதீங்க ..’’ என்றவளின் குரலில் அத்தனை வேதனை. 
அமுதன் அப்படியே நின்றான். எதுவோ பெரிதாக வரப் போகிறது என்று அவன் உள் மனம் அடித்து சொன்னது. ஆனாலும் அவள் வாடிய நிலையை பொறுக்க முடியாமல், ‘சரி… உள்ள வந்து சோபால உக்காரு. நான் காபி போடுறேன். குடிச்சிட்டு பேசலாம். எப்பவும் உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது. வா..’’ என்றவன் சமையலறை நோக்கி நகர, இசை அமைதியாய் உள்ளே வந்து அமர்ந்தாள். 
இருவரும் காபி அருந்தியதும், இசை தன் குரலை செருமி சரி செய்து கொண்டு பேச துவங்கினாள். மிகவும் உணர்ச்சி வசப் பட்டிருந்ததில், குரல் லேசாய் கரகரத்து விட்டிருந்தது. 
“நீங்க என்னை மன்னிக்கணும். அன்னைக்கு நான்.. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல.. ஏதோ ஒரு வகையில ரொம்ப எமோசனலா டிஸ்ட்ரப் ஆயிருந்தேன். 
நான் உங்களை தப்பு சொல்ல வரல. எல்லா தப்பும் என் பேர்ல தான். நான் என்னை பத்தின உண்மைகளை ஆரம்பத்துல இருந்தே உங்களுக்கு சொல்லியிருந்தா உங்களுக்கு என் மேல அப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமான்னு கூட எனக்கு தெரியல. 
ஐயம் சாரி. நீங்க நினைக்குற மாதிரி நான் சிங்கிள் கிடையாது. ஐயம் புக்டு. இந்த கொரியர் எல்லாம் இந்த தேதியில இங்க போய் சேரணும்னு அட்வான்சா பண்ணி வைப்பாங்க இல்ல. அந்த மாதிரி இன்னும் ஐஞ்சி மாசத்துல கல்யாணம்னு ஒன்ன பண்ணி என்னையும் எங்காத்துல இருந்து பார்சல் பண்ணிடுவா.’’ என்றவள் தலை குனிந்து அழ, வெளிப்பட்ட வெப்ப நீர் திவலைகள் அவள் மடியிலேயே விழுந்தது. 
உணர்வுகளின் குவியலில் வார்த்தைகளில் அவள் வழக்கு வந்திருந்தது. அவ்வளவு தான் அமுதன் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து தன் மேல் பழி போடப் போகிறான் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், 
“சரி..! அது பாஸ்ட். இருந்துட்டு போகட்டும். அதுக்கு ஏன் அழற. டூ அட்ரஸ் மாத்திடலாம் கொரியர்ல.’’ என்றுவிட்டு அவளை பார்த்து நம்பிக்கையாய் புன்னகைத்தான்.    
‘இந்த நம்பிகையை தன்னால் சிதைக்க முடியாதிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.’ என தனக்குள் நினைத்தவள், விழிகளை துடைந்துக் கொண்டு நேராய் அமர்ந்தாள். 
தான் கையோடு கொண்டு வந்திருந்த தன் தாயின் நாட்குறிப்பேட்டை அவன் கைகளில் வைத்தவள், “நான் மறுபடி நாளைக்கு வரேன் அமுதன். நீங்க முடிஞ்சா இந்த டைரியை வாசிங்க. உங்களுக்கு நான் பதில் சொல்லாமலேயே விடை கிடைக்கும்.’’ என்றவள் அவன் பதிலுக்காய் காத்திருக்காமல் எழுந்து வெளியேறிவிட்டாள். 
அமுதன் சிந்தனை ஏறிய முகத்தோடு அந்த நாட் குறிப்பை பிரித்தான். சில பல பக்கங்களை அசுவாரசியமாய் கடந்த பின் 1990 ஜூன் 2 என்று தேதியிட்ட பக்கத்திலிருந்து அவன் அந்த தூத்துக்குடி மாவட்டத்தின் பழைய பெண்கள் கல்லூரியின் வளாகத்திற்குள், எழுத்து என்ற கால இயந்திரத்தின் மூலம் நுழைந்திருந்தான். 
அங்கே ஆறடியில் ஆஜானுபாக கடல் வீரனாய் நின்றுக் கொண்டிருந்த ஜோசப் இருதய ராஜை, மெல்ல விழி உயர்த்தி ஓரப் பார்வையில் ரசித்துக் கொண்டிருந்தாள் ராகவி. 
சலனமாகும்.   
       
   

Advertisement