Advertisement

அமுதன் தாயை தொடர்ந்து இறங்க, “அது என்ன நெத்தியில முட்டிக்கிறது.’’ என்றாள் அறியும் ஆவலில். முகம் கனிய அவளை நோக்கியவன், “எங்க பாசையில சாரி கேட்டேன். உன்ன அம்மாகிட்ட பிடிச்சி கொடுத்தேன்ல அதுக்கு. அம்மா உடனே அக்சப்ட் பண்ணிட்டாங்க. அதான் திரும்ப முட்டிட்டு போறாங்க.’’ என்றவன், 
“வா போய் வாஷ் பண்ணலாம்.. இல்லனா அம்மா சொன்ன மாதிரி ஈ, எறும்பு எல்லாம் நம்மளை கிஸ் பண்ண தேடி வந்துரும்.’’ என்றபடி முன்னால் நடந்தான். 
கீழே அவனுக்காய் மொத்த கூட்டமும் காத்திருந்தது. ரத்தோட் முன்னால் வந்து அவனை அணைத்தவர், “ஹாப்பி பர்த்டே மேன்…!’’ என்றவர், “ப்ரம் ஆல் ஆப் அஸ்…’’ என்றபடி அவர்கள் வாங்கிய பரிசை நீட்டினார். 
மற்றவர்கள் கரவொலி எழுப்ப, அதை பெற்றுக் கொண்டவன், அவர்கள் முன்னிலையிலேயே அதை பிரித்து கையிலும் கட்டிக் கொண்டான். அருள்விழி முன்னால் வந்து, “வீட்ல இருக்க மூணு அட்டாச் பாத்ரூம்லையும் கீசரை ஆன் பண்ணிட்டேன். எல்லாரும் சுடு தண்ணியில குளிச்சிட்டு படுங்க. காலைல அஞ்சி மணிக்கு கிளம்பினா போதும். பத்து மணிக்கு சென்னை போயிடலாம்.’’ என்று அறிவிக்க, கூட்டம் கலைந்தது தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள. 
ரத்தோட் குளிர்பதன வசதி செய்யப்பட்டிருந்த அமுதனின் அறையில் தங்க வைக்கப்பட்டார். மீதமிருந்த இரண்டு அறைகளில் மூன்று மூன்று பெண்கள் தங்க வைக்கப்பட, ஆண்கள் அனைவருக்கும் மொட்டை மாடி ஒதுக்கப்பட்டது. 
பெரிய அண்டாவில் வீட்டின் பின்புறத்தில் விறகிலும், உள்ளே கேசிலும், அருள் சுடு தண்ணீர் காய வைக்க, அமுதனும் அம்மாவிற்கு உதவினான். வீட்டின் கொல்லைப் புறமிருந்த குளியலறையை ஆண்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது. 
  
அனைவரும் குளித்துவிட்டு படுத்துவிட, இசை மட்டும் அருளையே சுற்றிக் கொண்டிருந்தாள். முகத்தில் அப்பிய கேக்கை கூட, லேசாக கலுவியிருந்தாள், க்ரீம் முழுதாய் போகாமால் வலு வழுவென அவள் கன்னம் தங்கியிருந்தது. 
முதலில் விறகடுப்பை பற்றவைகவும், நீர் தீர தீர அண்டாவில் நீர் நிரப்பும் பணிகளையும் செய்தவள், அனைவரும் குளித்து முடிக்கவும், அருள்விழி சமையல் அறைக்குள் நுழைவதைப் பார்த்தவள், தானும் அவரோடு பின் நுழைந்தாள். 
“நீ போய் படும்மா. எனக்கு இங்க வேலை இருக்கு. காலைல வழியில நீங்க எல்லாரும் சாப்பிட டிபன் ரெடி பண்ணனும்.’’ என்றார். 
‘ஏன் ஆன்ட்டி, நீங்க கஷ்டப்படுறீங்க. நாங்க வழியில ஏதாச்சும் ஹோட்டல்ல சாப்பிட்டுப்போம். நீங்களும் வந்து ரெஸ்ட் எடுங்க வாங்க.’’ என்றாள். 
“இதுல என்ன கஷ்டம் இருக்குமா. ஏன் இப்போ இந்த அர்த்தராத்திரியில எங்க வீடு தேடி வந்து.. அமுதனை பார்த்தீங்க. அவனை சந்தோசப்படுத்தத் தானே. நீங்க எல்லாம் கூட சின்னப் பசங்க. அமுதன் ஹெட் ஆபிசர் அந்த ரத்தோட் சாருக்கு வயசு எப்படியும் ஐம்பதுக்கு மேல இருக்கும். 
தன்னோட தூக்கம் கெடும்னு கொஞ்சம் கூட அலடிக்காம சிரிச்ச மாதிரியே உங்களுக்கு ஈக்வலா நின்னார். நாளைக்கு நான் சமச்சி கொடுக்குற சாப்பாட்டை சாப்பிடும் போது உங்களுக்கு எல்லாம் என் நியாபகம் வரும் இல்ல. அதான் எனக்கு பெரிய சந்தோசம். 
நம்ம வழக்கப்படி வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா வாழை இலை போட்டு நடு வீட்ல விருந்து பரிமாறனும். ஹும்… நீங்க நடு ராத்திரி வந்து விடிகாலைல போறீங்க. ஆனாலும் சும்மா அனுப்ப முடியுமா..? அதான் இந்த ஏற்பாடு. 
ஒரு வேளை அருள் கையில சாப்பிட்டா அந்த ருசி அவங்க வாழ் நாள் முழுக்க மனசுல நின்னுடாது. நீயே நாளைக்கு சாப்பிட்டு பார்த்துட்டு எனக்கு போன்ல சொல்லு. இப்ப போய் தூங்கு போ.’’ என்றார். 
ஆனால் இசை அவர் சொல்ல சொல்ல கேளாமல், அவரோடே அமர்ந்துவிட்டாள் சப்பாத்தி உருட்ட. அமுதன் கொல்லையில் இருந்த வாழைகளை பறித்து வந்தவன், சமையல் அறையில் இசை இருப்பதை கண்டு விழி விரித்தான். 
“தூங்கலையா நீங்க..” என்றான். “இல்ல தூக்கம் வரல..’’ என்றாள் அவள் பொதுவாய்.  இடையில் அருள், “தமிழு.. ட்ரைவரை வீட்டுக்குள்ள படுக்க சொல்லலாமில்ல.. அந்த தம்பி மட்டும் ஏன் தனியா கிடக்குது.’’ என்றார். 
“மா.. அவர் ஏ.சி ஆன் பண்ணிட்டு ஜம்னு தூங்குறார். நீ கொடுத்த பாதாம் பால் சூப்பர்ன்னு உன்கிட்ட சொல்ல சொன்னார். அவரை பத்தி கவலைப்படாம நீ சோலியைப் பாரு அருளு..’’ என்றான். 
“சரி.. சரி… பிரிஜ்ல இருக்க பன்னீரை எடுத்து கட் பண்ணுடா தடியா. நைசா போய் படுத்துறாத..’’ என்று அவனையும் வேலை ஏவினார். 
“மா.. மீ பர்த் டே பாய்… நானா..’’ என்றான் போலியாய் அதிர்ந்தபடி அமுதன். “நீயே தாண்டா. வீட்டுக்கு வந்ததுல இருந்து லேப்டாப்பே கதின்னு கிடந்த… வயிறு முட்டி தொப்பை போட்டுட்டு இருக்கு. உன்னை ஒருத்திகிட்ட பிடிச்சி கொடுக்குற வரை… ஒழுங்கா குனிஞ்சி நிமுந்து வேலை செய்..’’ என்றார் சிரியாமல். 
ஆனால் இவர்கள் சம்பாசனையை கேட்ட இசை, உதட்டை உள் மடித்து சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டாள். இப்படி கேலியும் கிண்டலுமாக அடுத்த ஒரு மணி நேரத்தில், சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள, பன்னீர் பட்டர் கிரேவியும், இட்லியும், கார சட்னியும் செய்து முடித்திருந்தார்கள். 
அழகாய் அதை வாழை இலையில் அமுதன் கட்டி வைத்தான். மொத்தம் ஓட்டுனருக்கும் சேர்த்து பதினான்கு பொட்டலங்களை பெரிய கூடையில் அடுக்கி முடித்த அருள், “சரி சரி… இனியாச்சும் போய் படுங்க. மணி ரெண்டாச்சு. நாலரை மணிக்கே எல்லாரையும் எழுப்பிவிட்டா தான் சரியா இருக்கும்.’’ என்றபடி எழுந்தார். 
அருள் வரவேற்பறையில் ஒரு போர்வையை விரித்து படுக்க, அமுதனும் தாயோடு படுத்தான். இசை தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள். தாயோடு இசை ஒன்றும் விதம் அமுதனுக்கு அத்தனை நிறைவாய் இருந்தது.
நான்கு மணிக்கு முதல் ஆளாய் இசை எழுந்துவிட்டாள். புதிய இடம் அவளுக்கு உறக்கமே வரவில்லை. அமைதியாய் யார் தூக்கத்தையும் கலைக்காது அறையை விட்டு வெளியேறியவள், குளிக்க மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு, கொல்லைப்புறம் நோக்கி சென்றாள். 
என்னவோ அந்த வீட்டின் கொல்லைப் புறம் அவளுக்கு அத்தனை பிடித்திருந்தது. அன்றைக்கு பௌர்ணமி. அந்த வெள்ளி நிலவொளி எங்கும் பாய்ந்திருக்க, துணி துவைக்கும் கல்லில் தனது உடமைகளை வைத்தவள், தானும் அப்படியே அதன் மீது அமர்ந்துவிட்டாள். 
வரவேற்பறையில் உறங்காமல் புரண்டுக் கொண்டிருந்த அமுதன், இசை கொல்லைப்புறம் செல்வதை கண்டவன் உடனே எழுந்து கொண்டான். அவர்கள் இருக்கும் அறைக்குள் குளியலறையோடு, கழிவறை வசதியும் உண்டு. 
பின் ஏன் என்று எண்ணியவன் அவளை தொடர்ந்து தானும் கொல்லைப்புறம் நோக்கி நடந்தான். அங்கே சென்றவன் கண்ட காட்சி அப்படியே அவனை கட்டிப் போட்டது. 
நீண்ட கூந்தலை விரித்து விட்டு, துணி துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்தவள், ஏதோ சிந்தனையில் கண்களை வானத்தை நோக்கி பதித்திருந்தாள். 
அவள் இரு கண்ணின் பாவையிலும், பௌர்ணமி நிலவின் பிம்பங்கள் குட்டி நிலவுகளை பிரதிபலிக்க, நிலவொளி அவள் முகத்திற்கு ஒரு புது சோபையை வழங்கியிருந்தது. 
அவளின் “ச்ச… ச்சீ…’’ மூளையிலிருந்து வழுவி எங்கோ சென்றிருக்க, எத்தனை நேரம் அவளை அப்படி பார்திருந்தானோ, மெதுவாய் அவளை பின்னால் நெருங்கி, “இசை..’’ என்றான் முற்றிலும் உருகிய குரலில். 
“ம்…’’ என்றவள் தன் மோன நிலை கலையாது நிலவையே வெறித்துக் கொண்டிருந்தாள். “இங்க வந்து ஏன் உக்காந்து இருக்கீங்க. உங்க ரூம்ல அட்டாச் பாத்ரூம் இருக்குமே. இங்க சுடு தண்ணி கூட காயவச்சா தான். இந்த பாத்ரூம்ல ஹீட்டர் இல்ல..’’ என்றான். 
அவனை திரும்பிப் பார்த்தவள், “எல்லார் அம்மாவும் இப்படி தான் ஜாலியா இருப்பாங்களா அமுதன்…?’’ என்றாள் ஏக்கமாய். கண்ணில் மினு மினுப்பாய் தற்சமயம் சில நீர் துளிகள் உற்பத்தியாகியிருந்தது. 
அவளுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் அவளை பார்க்க, அவன் என்ன நடக்கிறது என உணரும் முன் எழுந்து நின்றவள், முடிந்த அளவு எக்கி அவன் நெற்றியில் மோதினாள். 
அமுதன் அதிர்ந்து போய் பார்க்க, “சாரி… அமுதன்… வெரி சாரி…! நான் உங்களை அப்படி பேசி இருக்கக் கூடாது…” என்றாள். 
அவள் மிக அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டிருப்பது கரகரத்த அவள் குரலில் தெரிந்தது. மூச்சை இழுத்து தன்னை சமன்படுத்திக் கொண்ட அமுதன், “இசை.. இட்ஸ் ஓகே.. நான் அதை மறக்க முயற்சி பண்றேன். நீங்க முதல்ல உள்ள வாங்க..’’ என அவளை திசை திருப்ப முனைந்தான். 
“அப்போ நீங்க என்னை மன்னிக்க மாட்டீங்களா…?’’ என்றபடி ஆழ் மன வருத்தத்தை விழிகளில் தேக்கி, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவ்வளவு தான் அமுதனின் அத்தனை கட்டுகளும் உடைந்து நொறுங்கிப் போனது. இரு உள்ளங் கைகளிலும் அவள் கன்னத்தைப் பற்றியவன், குனிந்து அவள் நெற்றியின் மீது பட்டும் படாமல் மெதுவாய் மோதினான். 
உடனே இசை தன் விழிகளை அவசரமாய் மூட, கண்களில் குளம் கட்டியிருந்த நீர் வழிந்து கன்னத்தில் ஓடியது. அவன் குனிந்து நெற்றியை மோதியிருக்க, வெகு அருகில் அவளின் சுவாசம், கண்ணீர் ஈரம் என்று பல காரணிகள் அவனை செயலிழக்க செய்ய, துணிந்து கண்ணீர் வழிந்த ஒற்றை கன்னத்தில் இதழ் பதித்தான். 
இசை இன்னும் விழிகளை இறுக மூட, அடுத்த கன்னத்திலும் மெதுவாய் முத்தமிட்டான். அடுத்த நொடி கன்னத்தின் மென்மை அவனை பித்தாக்க முகம் முழுக்க இலக்கின்றி வேக வேகமாய் முத்தமிட்டான். 
இசை அப்பொழுதும் திமிராது முகத்தை அவன் வசம் ஒப்புவித்து இருந்ததில் திடம் பெற்றவன், துடித்துக் கொண்டிருந்த இதழ்களை மென்மையாய் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். 
இவர்கள் அவர்கள் உலகில் மூழ்கியிருக்க, வாசு முகம் கழுவ வந்த போது அருகிருந்த திட்டில் இயக்கு நிலையில் வைத்துவிட்டு, அவன் மறந்து விட்டு போயிருந்த அந்த உயர்தர புகைப்படக் கருவி, இருவரின் செய்கைகளையும் தனக்குள் அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருந்தது. 
சலனமாகும்.  
     
  

Advertisement