Advertisement

சலனம் – 13 
“நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும். 
வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்.
பண்பு வேண்டும் பணிவும் வேண்டும்… 
அன்பு வேண்டும் அறிவும் வேண்டும்…’’ 
அமுதன் வீட்டு மொட்டை மாடியில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் நிறைய செடி கொடிகள்.. அதன் மேலே ரியாஸ் அவச அவசரமாய் சரம் விளக்குகளை தொங்கவிட்டு நூதன முறையில் அலங்கரித்து இருந்தான். 
அவனை சுற்றிலும், அலுவக ஊழியர்களோடு, அருள் சுற்றி நின்று கை தட்டி ஆர்பரித்துக் கொண்டிருக்க, ஐந்து வயது சிறுவன் போல, அமுதன் முகம் கனிந்து நின்றுக் கொண்டிருந்தான். 
இவர்களின் இந்த ரகசிய ஏற்பாடு அவன் அறியாதது. அனைவரும் அருவியிலிருந்து திரும்பியதும், அமுதன் மாலையே ஏற்காட்டிலிருந்து கிளம்பிவிட்டான். 
அவர்கள் அனைவரும் இரவு சென்னைக்கு கிளம்புவதாக ஏற்பாடாகி இருந்தது. ஆனால் சரியாய் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அவன் அறைக்கதவு பட படவென தட்டப்பட, தன் அன்னை தான் வழக்கம் போல தன்னை பிறந்த நாள் கொண்டாட எழுப்புகிறாள் என்று நினைத்தவன், மலர்ந்து சிரித்தபடியே கதவை திறந்தான். 
ஆனால் வெளியே இவன் அலுவக மக்கள் அனைவரும் கையில், சிறு அகல் விளக்கை ஏந்தியபடி நின்றுக் கொண்டிருந்தார்கள். அடுத்த நொடி, “நீண்ட நீண்ட காலம்…’’ என்ற பாடல் ஒலிப் பெருக்கியில் அலற, ரியாஸ் முன்னால் வந்து, ஏதோ மாப்பிளையை மண மேடைக்கு அழைத்து செல்லும் தோழன் போல, இவனின் கரம் பற்றி மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். 
அங்கே சரம் விளக்குகள் ஒளிர, இரவின் விண்மீன் வெளிச்சமும், ஆங்காகங்கே செடிகளில் மலர்ந்திருந்த மலர்களும், அப்படியொரு அழகியல் தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. 
ராயல் என் பீல்ட் போன்ற தோற்றத்தில் உருவாகப்பட்டிருந்த இனிப்பப்பம் அங்கிருந்த சிறிய மேஜையில் வீற்றிருக்க, அமுதனுக்கு வெட்கமே வந்துவிட்டது. 
அருளை பார்த்து, “மாம் ஐயம் க்ரோன் அப்…! இப்படி பொம்மை கேக் எல்லாம் வாங்கி வச்சி கொலிக்ஸ் முன்னாடி என் மானத்தை இப்பவே யூஎஸ் ப்ளைட் ஏத்தனுமா…” என்றான் சிறு புன்னகையுடன். 
அருகில் நெருங்கி அவன் தலையில் கை வைத்தவர், “எனக்கு எப்பவும் நீ… கேட்டதை வாங்கி தரலைனா மண்ணுல புரண்டு அலற அதே குட்டி அமுதன் தான். சீன் போடாம கேக்கை கட் பண்ணு. போன வருஷம் கூட ஹெட் மிரர் என்னோட பங்குன்னு உக்காந்து அமுக்கிட்டு.. இந்த வருஷம் என்ன வளர்ந்துட்டேன்னு பெருசா டயலாக் எல்லாம் பேசுற. உன் சைட் எதாச்சும் கூட்டத்துல இருக்கா என்ன…” என்றபடி அவர் கண்களை திருப்ப, அமுதன் பதறிவிட்டான். 
தாயும் மகனும் மிக நெருக்கத்தில் நின்று அமைதியாய் பேசிக் கொண்டிருந்ததாலும், பாடல் அதிக டெசிபலில் ஒலித்துக் கொண்டிருந்ததாலும், மற்றவர்களுக்கு இவர்கள், சம்பாசனை ஊமைப் படம் போல தான் தெரிந்தது. 
“யம்மா… அருளு.. நான் வாயே திறக்கல… சைட் கைட்டுன்னு எதையாச்சும் கொளுத்தி விட்றாத… அப்புறம் உன் பையனை கைட்டாக்கி பறக்க விட்ருவாங்க. அவ்ளோ டேஞ்சரஸ் பெலோஸ் எங்க ஆபிஸ் கேர்ள்ஸ் எல்லாம்.’’ என்னதான் பொதுவாக சொன்னாலும், பார்வை ஒரு நொடி இசையை தொட்டு மீண்டது. 
அதற்குள் இவர்களை நெருங்கிய ரியாஸ், “என்ன அம்மாவும் பையனும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க. கேக்கை வெட்டு மேன்.’’ என்றான் அமுதனிடம். 
அமுதன் புன்னகையோடு அந்த இனிப்பை வெட்ட, கையில் இருந்த விளக்கை, அருள் ஏற்கனவே தரையில் அமுதன் என்று எழுதியிருந்த எழுத்துக்களின் மேல் அடுக்கிவிட்டு வந்து நின்று நின்றவர்கள், இப்போது இன்னும் வேகமாய் கரவொலி எழுப்பினார்கள். 
ரத்தோட் கையில் இருந்த, வண்ண காகித உருளையை சுருட்ட, அது ‘டம்’ என்ற ஓசையுடன் வெடித்து சுற்றி நின்றுக் கொண்டிருந்தவர்களின் மேல் காகித பூமழை பொழிந்தது. 
ரியாஸ் தன் கையில் இருந்த வெண் நுரை உருளியை இயக்கி, அங்கே செயற்கை பனி மழையை பொழிவித்துக் கொண்டிருந்தான். வாசு  நடக்கும் நிகழ்வுகள் அத்தனையையும் தன் உயர்தர புகைப்படக் கருவியில் படமாக்கிக் கொண்டிருந்தான். 
ஒரு வழியாய் இவர்கள் ஆர்பாட்டம் சற்றே அடங்க, அமுதன் முதல் துண்டு இனிப்பை அம்மாவிற்கு ஊட்டினான். ‘ஆ’ திறந்து வாங்கிக் கொண்டவர், மகனைப் பற்றி அறிந்தவராய், இனிப்பின் கண்ணாடி உருவ பகுதியை வெட்டி மகனுக்கு ஊட்டினார். 
அதற்கு அடுத்து யார் யாருக்கு, ஊட்டினார்கள், அல்ல அல்ல, இனிப்பை மாறி மாறி முகத்தில் பூசிக் கொண்டார்கள் என்பதே அறியாத வண்ணம் அங்கே ஒரு களேபரமே நடந்துக் கொண்டிருந்தது. 
இசை அந்த ஆர்பாட்டத்தில் பங்கு கொள்ளாமல் ஓரமாய் ஒதுங்கி வந்து நின்றாள். அருள்விழியும் ஒரு சிரிப்போடு பின்னால் நகர்ந்திருந்தார். அமைதியாய் நின்றுக் கொண்டிருந்த இசையை கண்டவர், 
“ஏன்மா சும்மா நிக்குற. போ நீயும் போய் என் மகன் மூஞ்சுல கேக்கை அள்ளி அப்பிட்டு வா. இல்ல உனக்கு யாரை பிடிக்குதோ அவங்க மூஞ்சில அப்பு…எங்க ஊர்ல எல்லாம் நான் வயசுப் பொண்ணா இருக்கும் போது மஞ்ச தண்ணி ஊத்தி விளையாடுவாங்க… உங்க காலத்துல கேக்கை அப்புறீங்க.. எப்படி பார்த்தாலும் எல்லாமே விளையாட்டு தான். சந்தோசம் தான்.’’ என்றவர் இசையை பார்த்து வாஞ்சையாய் புன்னகைத்தார். 
இசைக்கு அவர்கள் வாகனம் இரவு கிளப்பும் போது தான் தெரியும் அவர்கள் நேராய் அமுதனின் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்று. வண்டியில் அவனுக்கு இவர்கள் அனைவரின் சார்பில் வாங்கப்பட்ட பரிசு பொருள் அனைவரின் பார்வைக்கும் காட்டப்பட்டது. 
சற்றே விலை கூடுதலான கைக் கடிகாரத்தை வாங்கி இருந்தார்கள். இவள் தனக்கு முன்னிருந்த கவியை பார்க்க , “சாரி இசை கிப்ட் வாங்க அமவுண்ட் கேட்டப்ப நானே உனக்கும் கொடுத்துட்டேன். சாரி..! சொல்ல மறுந்துட்டேன்.’’ என்றாள். 
முன்பே தெரிந்திருந்தால் தன் சார்பில் சிரியதாகவேனும் ஏதாவது பரிசுப் பொருளை வாங்கி இருக்கலாம் என்று எண்ணியவள், அப்போதைக்கு இயன்ற காரியமாய் கவியை நன்றாக முறைத்து வைத்தாள். 
ஆனால் அதையெல்லாம் கவி கண்டு கொள்ளாமல், தனக்கு இடப்புறமிருந்த ரியாசிடம் எதையோ சிரத்தையாக விவாதிக்க துவங்கியிருந்தாள். இவர்கள் அமுதனின் வீட்டை நெருங்கும் போது இரவு மணி பதினொன்று. 
ரியாசின் மூலம் இவர்களின் வருகை அறிந்தவர், அனைவருக்கும் சுட சுட, பாதாம் பால் கலந்து வைத்து காத்திருந்தார். அவரைக் கண்டவுடன், பாய்ந்து சென்று கட்டிக் கொள்ள சொல்லி இசையின் உள்ளுணர்வுகள் உந்தியது. 
ஆனால் புதியவர்களிடம் எப்போதும் ஒதுங்கி நிற்கும் சுபாவம் சிறு வயது பழக்கம் என்பதால், அறிமுகப் படலத்தில் ஒரு சிறு புன்னகையோடு அமைதியாய் நின்று கொண்டாள். 
ஆனால் ஆச்சர்யப் பார்வையில் அவரை தொடர்ந்து கொண்டே இருந்தார். ரியாசுடன் மற்ற தோழர்களும் இணைந்து மொட்டை மாடியை தயார்படுத்த, பெண்கள் அருள்விழியோடு இணைந்து, அகல் விளக்கை தயார் செய்ய உதவினர். 
இசை அப்போதும் ஒதுங்கி நிற்க, ரத்தோட் தன் வழமையான ரசனைப் பார்வையோடு அங்கு நடப்பவற்றை கவனிக்க துவங்கியிருந்தார். 
அருள் மீண்டும் இசையின் கைப்பற்றி உலுக்க, அப்போது தான் அவர் தன்னை கேள்வி கேட்டது உரைக்க, தலையை இட வலமாக ஆட்டி, “இல்ல ஆன்ட்டி எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை. வேண்டாம்.’’ என்றாள் இசை. 
“பழக்கம் இல்லைனா பழகிக்கோ…’’ என்றவர், அவள் என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே, அவளின் கையை இறுக பற்றிக் கொண்டு, “எல்லாரும் இங்க பாருங்க. ஒரு பாப்பா பத்திரமா பதுங்கி இருக்கு.’’ என்று கத்தினார். 
அடுத்த நொடி, அவளை நோக்கி திரும்பியவர்கள், “இதோ வந்துட்டோம் ஆன்டி.’’ என்றபடி அவளின் முகம் உடை என்று சிக்கிய இடத்தில் கேக்கை அப்பினார்கள். 
“ஹே… நோ…’’ என்று வீரிட்டவள், “ஆன்ட்டி இது போங்காட்டாம்.’’ என்று சிறு பிள்ளை போல கண்களை சுருக்கி சிணுங்கினாள். ஆனால் அதற்கும் அருள் பெரிதாய் சிரிக்க மட்டுமே செய்தார். 
“இருங்க… உங்களை…’’ என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, கேக் இருந்த மேஜை அருகில் சென்றவள், அங்கு மிச்சம் மீதியிருந்த, கேக் கிரீமை வழித்து எடுத்து, அவர் கன்னத்தில் அப்ப வந்தாள். 
அதற்குள் பெரும்பான்மையான கூட்டம் கேக்கை காலி செய்திருந்ததால், முகம் கை கால்களை கழுவ கீழே இறங்கினர். அமுதன் மட்டும் இவர்களின் விளையாட்டை வேடிக்கை பார்த்து நின்றிருந்தான். 
இவளின் நோக்கம் அறிந்தவர், வேகமாய் அமுதனின் பின் பக்கம் வந்து நின்றுக் கொண்டு, “நீ ஆடுறது தான்மா போங்காட்டம். இன்னைக்கு என் பையனுக்கு தானே பர்த்டே. அவன் உடம்புல எங்க வேணா அப்பு. என்னை எதுக்கு குறி வைக்குற.’’ என்று பயந்து பேச, 
“அதெல்லாம் முடியாது, நீங்க தானே பிடிச்சவங்களுக்கு பூச சொன்னீங்க. எனக்கு உங்களை தான் பிடிச்சிருக்கு. ஓடாதீங்க ஆன்ட்டி. ஒழுங்கா நில்லுங்க. நின்னா நான் கொஞ்சமா பூசிட்டு விட்ருவேன்.’’ என்றாள். 
அமுதன் பின்னே அருளும், முன்னே இசையும், அவனை தூணை போல பயன்படுத்தி எட்டி எட்டி பார்த்து விளையாடிக் கொண்டிருக்க, அந்த காட்சி கவிதை போல இருந்தது. 
வாசு இவர்களின் விளையாட்டை காணொளியாய் பதிவேற்றிக் கொண்டிருந்தான். அருள் தொடர்ந்து ஆட்டம் காண்பிக்க, இவர்களை சிரிப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமுதனை நோக்கி திரும்பியவள், “அமுதன் உங்க அம்மாவை பிடிச்சி கொடுங்க ப்ளீஸ்..!’’ என்று வேண்டுதல் வைத்தாள். 
அடுத்த நொடி தனக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த தாயை, பின்னால் கை கொடுத்து முன்னால் இழுத்தவன், அவர் அசையாது பிடித்துக் கொண்டான். 
“அடேய் துரோகி..!’’ என்று தாய் அலறியதெல்லாம் கொஞ்சமும் அவன் செவியேறவில்லை. அவன் கண்ணில் பட்டு கருத்தில் நிறைந்ததெல்லாம், “ஹை… சிக்கிடீங்காளா..’’ என்று குதூகலித்தபடி, அருளின் கன்னத்தில் கேக்கின் கிரீமை சிறுபிள்ளையின் உற்சாகத்தோடு அப்பிய இசை தான். 
மகன் இன்னமும் தன்னை இறுக்கிப் பிடித்திருக்க, கடுப்பானவர், “அடேய்…! உன் பிரண்டு ஆசை தீர் கேக்கை அப்பிட்டாங்க. விடுறா..’’ என திமிர, தாயின் தலையில் லேசாய் முட்டியவன் அவரை விடுவித்தான். 
தானும் அவனைப் போல, அவன் முன் நெற்றியில் மோதியவர், “சரி வாங்க வாங்க கீழப் போகலாம். இன்னைக்கு எத்தனை எறும்பு.. என் கன்னத்த கிஸ் பண்ண காத்துகிடக்கோ தெரியலையே..’’ என்றபடி முன்னால் இறங்கினார். 

Advertisement