Advertisement

எப்படியும் யூட்ரஸ் மாசம் ஒரு முறை, ஒரு நாலஞ்சி நாள் அழும். அப்ப எல்லாம் அந்த பொண்ணுங்களுக்கும் கஷ்டமா இருக்கும். அதனால நீ எந்தப் பொண்ணு ஸ்கர்ட்ல ப்ளட் ஸ்டெயின் பார்த்தா பர்சனால அவங்ககிட்ட சொல்லி வாஷ் பண்ணிக்க சொல்லணுமே தவிர அந்த ஈவன்ட் வச்சி பொண்ணுங்களை கேலி கிண்டல் எல்லாம் பண்ணக் கூடாது சரியா..!’ அப்படின்னு கேட்டாங்க. 
‘சரிமான்னு’ நான் சொன்னதும், ‘இனிமே உனக்கு எந்த டவுட் வந்தாலும் முதல்ல என்கிட்ட கேளு. முடிஞ்சா நான் சொல்லி தருவேன். இல்ல யார் அதை உனக்கு தெளிவா சொல்லி தருவாங்களோ அங்க கூட்டிட்டு போவேன்.’ அப்படின்னு சொல்லிட்டு என் நெத்தியில முத்தம் கொடுத்து தூங்க கூட்டிட்டு போனாங்க. 
அப்புறம் நாங்க டென்த் படிக்கிறப்ப, எங்க மிஸ் இதே மென்சுரேசன் ப்ராசஸ் எடுக்க சங்கடப்பட்டு நெளிஞ்சப்ப, நான் எங்க மம்மி சொன்ன கதையை சொல்லி எல்லாருக்கும் புரியிற மாதிரி கிளாஸ் எடுத்தேன். மிஸ் கூட அன்னைக்கு கிளாஸ்ல அழுதுட்டாங்க. 
இது சின்ன எக்சாம்பிள் எங்க உறவுக்கு. என் வாழ்கையில அம்மா, அப்பா, ஆசான், தோழி, சண்டைக் கோழி இப்படி எல்லாமுமா இருக்குறது எங்க அம்மா தான். எங்க அம்மா கண்ணு வழியா தான் நான் இந்த உலகத்தை பார்த்தேன். உணர்ந்தேன். எல்லாத்தையும் கத்துகிட்டேன்.
பத்து வயசுல எனக்கு விசில் அடிக்க சொல்லிக் கொடுத்த அம்மா, பதினெட்டு வயசுல நான் சைட் அடிச்சதை கூட ரசிச்சாங்க. அம்மா பத்தி பேசினா நான் பேசிட்டே இருப்பேன் இசை. ஆர் யூ ஓகே நவ்.’’ என்றவன் அவளை பார்த்து சிநேகமாய் சிரித்தான். 
‘ஒ’ என்ற வடிவில் உதட்டை குவித்து, ஆச்சர்யத்தில் வாய் பிளந்து கதை கேட்டுக் கொண்டிருந்தாள் இசை. அவள் பெரிய மனுசியாகி நின்ற போது குழம்பி, தவித்த நாட்கள் நினைவிற்கு வந்தது. 
பெரியம்மா கூட அந்த நேரத்தில் பட்டும் படாமல் பதில் சொன்னது நினைவில் வந்து போனது. தன்னையும் மீறி, “கிரேட் பர்சன் உங்க மாம். ஹாட்ஸ் ஆப் ஹேர்..’’ என்றாள் உற்சாகமாய் கை தட்டி. 
‘ஹே… இசை எல்லாரும் திரும்பி பாக்குறாங்க. கொஞ்சம் அடக்கி வாசிங்க ப்ளீஸ். சரி எல்லாரும் வர வரைக்கும் பக்கத்துல இருக்க ரோஸ் கார்டன் வரைக்கும் ஒரு வாக் போயிட்டு வரலாமா.’’ என்றான் எழுந்தபடி. 
“போலாமே..’’ என்றபடி இசையும் எழுந்தாள். சற்று நேரம் முன்பு வரை, அமுதன் தன் உடையில் இருந்த உதிரக் கரையை சுட்டிக் காட்டியதற்காய் வெட்கி, குமைந்து, அவமானமாய் உணர்ந்தவள் கரைந்தே போயிருந்தாள். 
அவளோடு இணைந்து அமுதன் முன்னே நடந்தான். ஆனால் அவன் மனமோ ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தின் பின் நடந்துக் கொண்டிருந்தது. 
இசை வாகனத்தில் இருந்து இறங்கி நடக்க, அவளின் மீது பார்வையை செலுத்தக் கூடாதென்று, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நடந்தான். ஆனால் சாலையின் ஒரு புறம் பார்த்து மறுபுறம் அவன் பார்வையை திருப்பும் போது, யதேச்சையாய் அவள் பின்புறத்தில் பார்வை உரசி சென்றது.
வழக்கம் போல மீண்டும் வெடுக்கென்று பார்வையை திருப்ப முயன்றான். ஆனால் அவள் உடையில் கண்ட சில உதிரப்புள்ளிகள் அவனை அவ்வாறு செய்ய விடாது தடுத்தது. 
நீருக்குள் அமிழ்ந்து கிடந்ததால், அவள் தன் நிலை உணரவில்லை என்பதை உணர்ந்தவன், அடுத்த நொடி, வேகமாய் அவளின் பின் சென்று நின்றான். இசை அதிர்வதை அவள் உடல் மொழியில் உணர்ந்தாலும், மேலும் சற்று நெருங்கி அவளின் காதிற்குள், “இசை… உங்க ட்ரஸ்ல ப்ளட் ஸ்டைன் நடக்கமா அப்படியே நில்லுங்க.’’ என்றான். 
இசையின் முக மாற்றத்தை, இவன் அவளுக்கு பின் நின்றுக் கொண்டிருந்ததால் கணிக்க முடியவில்லை. அவள் கை வீசி வரும் போதே, எதையும் கொண்டு வரவில்லை என்பதை அறிந்தவன், அருகில் வசதியான கழிவறைகள் இல்லாதிருந்ததால், அவளுக்கும் சேர்த்து தானே சிந்தித்து, இசைக்கு சற்று முன்னே நடந்து கொண்டிருந்த புவனாவை அழைத்தான். 
அவள் என்னவென்று திரும்பிப் பார்க்க, “புவனா இசை அவங்க செல்லை ரூம்ல வச்சிட்டு வந்துட்டாங்களாம். நாங்க போயி எடுத்துட்டு வரோம். கவிகிட்டையும் ரத்தோட் சார்கிட்டையும் கொஞ்சம் இன்பார்ம் பண்ணிடுங்க ப்ளீஸ்.’’ என்றான். 
அப்பெண் சரி என்று தலையாட்டிவிட்டு முன்னால் நடக்க, படக்கென்று அவள் கரம் பற்றி வந்த திசையில் திருப்பியவன், “நீங்க முன்னால நடங்க, உங்க பின்னாடியே நான் வரேன்.” என்றவன் அவளுக்கும் அவனுக்கும் மில்லி மீட்டர் இடைவெளிவிட்டு பின் தொடர்ந்தான். 
இவனின் வண்டியை நெருங்கியதும் இசை வண்டியில் ஏறி அமர தயங்கினாள். வண்டியை கிளப்பி முறுக்கியவன், “இசை…’’ என்று குரலில் அழுத்தத்தை கூட்ட, அது நன்றாக வேலை செய்தது. 
படக்கென அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள். இசை அழுகிறாள் என்பதை தனக்கு முன்னால் இருந்த கண்ணாடியின் மூலம் அறிந்தவனின் மனது பாரமாகிப் போனது. 
விடுதி வந்ததும், முன்பை போல, அவளை முன்னால் நடக்கவிட்டு, பின் தொடர்ந்தவன், அவள் அறைக்குள் நுழையும் முன், “என்ன பிராண்ட் வேணும்னு என் போனுக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க. மெடிகல் ஷாப் கொஞ்சம் தள்ளி இருக்கு. நான் போய் வாங்கிட்டு வரேன்.’’ என்றான். 
இசை சரி என்பதாய் தலை அசைத்துவிட்டு, வேகமாய் தோழிகளுடன் தங்கியிருந்த அறைக்குள் சென்று கதவடைத்தாள். அப்படி ஒரு அழுகை பொங்கியது. 
சக தோழிகள் இப்படி ஒரு விசயத்தை சுட்டிக் காட்டினாலே மனதிற்குள் அப்படி குமைந்து போவாள். அவள் பாட்டியின் வளர்ப்பு அப்படி. சிறுவயதில் தெரியாமல் உடையில் கரை பட்டுக் கொண்டாளே பாட்டி, “உடம்பு மேல கவனம் இல்லாம அப்படி என்ன ஆட்டம் உனக்கு..’’ என்று நாள் முழுக்க கரித்துக் கொட்டுவார். 
ஆகையால் சிறுவயதிலிருந்தே இது போன்ற விசயங்களில் மிக கவனமாக இருப்பாள். அவளின் நாள் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் இருந்தது. பயணம், மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து சுழற்சியை துரிதப்படுத்தியிருந்தது. 
சாதாரணமாக இருந்திருந்தால் உடனடியாக வித்யாசத்தை உணர்ந்திருப்பாள். நெடு நாட்களுக்கு பின்பு கிட்டிய அருவியின் குளுமையோடு, நண்பர்களின் ஆர்ப்பாட்டமும் இணைய, அத்தனையும் மறந்து நீரில் அமிழ்ந்திருந்தாள். 
அதனாலேயே அமுதன் முன் குன்றி நிற்க வேண்டியதாகிவிட்டது. அவள் தன் போக்கில் கதவில் சாய்ந்து நிற்க, அலைபேசி ஒலி எழுப்பி அவளை கலைத்தது. 
அதை அவள் உயிர்பிக்க, “ஹெலோ..’’ என்ற அமுதனின் வேகமான குரல், செவி வந்து மோதியது. “இசை…. பத்து நிமிசமா மெசேஜ் வரும்னு மெடிக்கல் ஷாப்ல நின்னுட்டு இருக்கேன். இப்ப நீங்க சொல்றீங்களா.. இல்ல வழக்கமா மளிகை சாமான் லிஸ்ட்ல எங்க அம்மாவுக்கு வாங்குற பிராண்ட் வாங்கவா.’’ என்றான். 
இசை உள்ளே சென்றுவிட்ட குரலில், “மெசேஜ் அனுப்புறேன்.’’ என்றுவிட்டு அலைபேசியை உடனே துண்டித்தாள். உடனே தான் வழமையாய் உபயோகிக்கும் உள்ளூர் உற்பத்தி அணையாடையின் பெயரை அனுப்பி வைத்துவிட்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். 
நன்றாக சுடுநீரில் குளித்தவள், “நாப்கின்லாம் எப்படி மளிகை சாமன் வாங்கும் போதே வாங்குவாங்க. பாட்டிலாம் புதுசா இருக்க பிரிக்காத நேப்கினையே கவர் சுத்தி கொல்லைல வைக்க சொல்லுவாங்க.’’ என்று ஏதேதோ எண்ணமிட்டபடி குளித்து முடித்தாள். 
இருபது நிமிடங்கள் கழித்து வந்து கதவை தட்டிய அமுதன், அவள் முகத்தை பார்க்காது, வாங்கி வந்த பொருளை அருகிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு, உடனே வெளியேறிவிட்டான். 
அவனின் அந்த கண்ணியம், தற்சமயம் அவள் மனதிற்கு ஆசுவாசத்தை தர, அதை பயன்படுத்திக் கொண்டவள், அப்படியே படுக்கையில் சரிந்துவிட்டாள். 
ஆனால் மேலும் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து அவளின் அலைபேசி அலறியது. இவள் எடுக்க அமுதன். “நீங்க வர வழியில ட்ராவல் சேரமா வாமிட் பண்ணதால ரூம்லயே இருக்கப் போறதா ரத்தோட்கிட்ட மெசேஜ் பாஸ் பண்ணியிருக்கேன் இசை. யாராவது கேட்டா இதையே சொல்லிடுங்க.’’ என்றான். 
இசை உள்ளது நன்றியுணர்வு அத்தனையும் வார்த்தையில் குழைத்து, “ரொம்ப தாங்க்ஸ் அமுதன்..!’’ என்றாள் கரகரத்த குரலில். அந்த குரலில் எப்படி உணர்ந்தானோ, “இசை இங்க வெளிய ஒரு ஓப்பன் ரெஸ்டாரன்ட் இருக்கு. ஜன்னல் வழியா பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கு. வாங்களேன். ஒரு கப் காபி சாப்பிடலாம்.’’ என்று தன்மையாக அழைத்தான். 
இசைக்கு அறையில் அப்படியே அவன் முகம் காணாது முடங்கிக் கிடக்கவே விருப்பம். ஆனால் அவன் அழைத்த மரியாதைக்காய், “ம்’’ என்று ஒப்புதல் கொடுத்து கீழிறங்கி சென்றாள். என்னவோ அவளின் மன சுணக்கத்தை சரி செய்தேயாக வேண்டும் என்ற வேகம் உந்த, அவளை வரவழைத்த அமுதன், கதை சொல்லியாய் அதை சாதித்தும் முடித்திருந்தான்.   
பலவகை மலர்களின் மணம் மனம் வருட, அமுதனும், இசையும் அந்த பூங்காவிற்குள் நடை பயின்றுக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்ததிலிருந்து, அங்கிருக்கும் பூக்களை ரசிக்கவும், அதோடு சுயமி எடுக்கவுமே, இசைக்கு நேரம் சரியாய் இருந்தது. 
அமுதன் அமைதியாய் அவளை கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தான். ஒரு வழியாய் பூக்களை ரசித்து முடித்தவள், “ஏன் அமுதன் நம்ம நாட்ல எல்லா பசங்களும் உங்களை மாதிரியே இருந்துட்டா… பெண்களுக்கு எதிரான ஹராஸ்மென்ட் அப்படிங்கிற விசயமே இருக்காது இல்ல..’’ என்றாள் வெள்ளந்தியாய். 
அவளை பார்த்து இல்லை என்பதை போல தலை அசைத்தவன், “பசங்களை பெத்தவங்க எல்லாம் என்னோட அருள் மாதிரி பெண்களை பற்றின சரியான புரிதலை பசங்களுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கணும். அப்ப தான் இதெல்லாம் இங்க குறையும்.’’ என்றவன் சற்றே கடினப்பட்ட குரலில், 
“பொண்ணுக்கு பொண்ணு தான் எதிரின்னு சொல்லுவாங்க இல்ல. அதெல்லாம் நான் நம்பினதே இல்ல. ஆனா கொஞ்ச நாள் முன்னாடி ஒரு நியூஸ் படிச்சப்ப அது உண்மை தான்னு எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது இசை. ஒன்பதாவது படிச்சா என்ன வயசு இருக்கும். ஒரு பதினாலு வயசு இருக்குமா. அப்படினா அவங்க குழந்தை தானே. 
அப்படி ஒரு குழந்தை பீரியட்ஸ் அப்ப தன் ட்ரஸ்ல கரை பட்டுக்கிட்டான்னு கிளாஸ் மிஸ் எல்லார் முன்னாடியும் திட்டி அவமானப்படுத்தி இருக்காங்க. அவமானம் தாங்காத அந்த குட்டிப் பாப்பா சூசைட் பண்ணி செத்துப் போச்சு இசை. 
இங்க பெண்களை பத்தி பெண்களுக்கே சரியான புரிதல் இல்லை. ஏன் நீ கூட ஏதோ நடக்க கூடாதது நடந்த மாதிரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்படி கூனிக் குறுகிப் போன. 
எல்லாரும் சொல்ற மாதிரி பீரியட்ஸ் தீட்டு ரத்தம், உடம்புல இருந்து வெளியாகுற கெட்ட ரத்தம் எல்லாம் இல்லை. நாம கையை கிழிச்சிகிட்டா வர ரத்தம் எப்படி பரிசுத்தமோ, அதே அளவுக்கு பரிசுத்தமான ரத்தம் தான். 
நமக்கு தெரியாம நம்மளை மீறி ட்ரெஸ்ல இல்ல வேற எங்காவது பட்டுகிட்டா, இட்ஸ் ஓகே கிளீன் இட் அப் அப்படிங்கிற மனநிலை தான் பெண்களுக்கும் வரணும். சமூகத்துக்கும் வரணும். 
இது உன்னோட உடம்பு. இங்க எதுவும் அசிங்கம், அருவருப்பு இல்ல சரியா. உன்னோட வாய் எப்படி பேச இருக்கோ.. அது மாதிரி தான் அந்தந்த உறுப்பு அது அதோட வேலையை செய்ய இருக்கு. 
இனிமே என்னை மாதிரி அவங்க ஆணா இருந்தாலும் சரி, பொண்ணா இருந்தாலும் சரி.. உன் ட்ரஸ்ல கரை இருக்குன்னு சொன்னா, ‘தாங்க்ஸ்..’ சொல்லிட்டு வாஷ் ரூம் போ. அதை விட்டுட்டு ஏதோ உன் உடம்பே அசிங்கம் அப்படிங்கிற முக பாவத்தை மூஞ்சில கொண்டு வந்து, அவமானப்பட்டு நிக்காத புரியுதா..!’’ என்றான். 
அத்தனை நேரம் இருந்த மன எரிச்சல் வாய் வழியே வெடித்திருந்ததில், மரியாதையை காற்றில் பறக்கவிட்டு ஒருமைக்கு தாவியிருந்தான். அதை அவனும் உணரவில்லை. இசையும் உணரவில்லை. 
“என்ன மனுஷன்டா இவன்…’’ என்று அவனை பார்த்திருந்தவள், ‘சரி’  என தலையை மட்டும் உருட்டினாள். மேலும் சில நிமிடங்கள் அமைதியாக நடந்து விட்டு, இருவரும் தங்கள் அறைக்கு திரும்பினர். 
நல்லூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ரியாசும், கவியும், ‘ஐயோ… இப்ப என்ன பஞ்சாயத்தோ..?’ என பார்வையால் பேசிக் கொண்டு வந்தனர். கவி வண்டி ஏறியதிலிருந்து, இசைக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள். அவள் எடுக்கவே இல்லை. 
ரியாஸ் அமுதனுக்கு அழைத்தான். அவனும் எடுக்கவில்லை. இருவரும் களைப்பு நீங்க அறையில் உறங்கிக் கொண்டிருக்க, ரியாஸ்,மரண பீதியில் இருந்தான். 
சமாதான கொடி பறந்து கொண்டிருக்கும் அவர்கள் உறவில், ரியாஸ் அவர்களை இணைந்து வைப்பதாய் எண்ணி செய்யவிருக்கும் செயல், நாலு போலீசும், நல்லா இருந்த ஊரும் கதையாய் போர் முரசைக் கொட்ட வைக்க காத்திருந்தது.
சலனமாகும்.     

Advertisement