Advertisement

சலனம் – 12  
குளியலறையில் நெடு நேரம் அழுதிருக்கிறாள் என்பதை விழிகள் பறை சாற்ற, அமுதன் அவளை எப்படி தேற்றுவது எனப் புரியாமல் அமர்ந்திருந்தான். 
“இசை… காபி சொல்லி இருக்கேன். சூடா குடிச்சா.. யூ மே பீல் பெட்டர்.’’ என்றான். அவனுக்குமே அவளோடு வார்த்தையாடுவது அத்தனை எளிதாய் இல்லை. 
அவன் வார்த்தைகள் செவியடைந்தது எனும் விதமாய் தலையை மட்டும் உருட்டினாள். இருவரும் அந்த நட்சத்திர விடுதியின் திறந்த வெளி உணவகத்தில் அமர்ந்திருந்தனர். 
சுற்றிலும் பசும் புல்வெளி தரையை போர்த்தியிருக்க. தூய வெள்ளையில் பொருத்தமான இடைவெளிவிட்டு, மேஜைகளையும், நாற்காலிகளையும் அமைத்திருந்தனர். மையமாய் ஒரு செயற்கை நீரூற்று வேறு. ஏதோ காட்டிற்குள் அமர்ந்திருக்கும் உணர்வை கொடுத்துக் கொண்டிருந்தது.   
ஆனால் இருவரும் எதையுமே ரசிக்காமல் கடனே என்று அங்கு அமர்ந்திருந்தனர். இசைக்கோ அமுதன் தனிமை கொடுத்து விலகி சென்றால் நன்றாக இருக்குமே என்று தோன்றிக் கொண்டிருந்தது. தனிமையில் இன்னும் சற்று நேரம் அழுதால் மனம் சமனப்படுமோ என்று எண்ணிக் கொண்டிருந்தாள். 
அமுதனின் எண்ணங்களோ,  தற்சமயம் தன் எதிரில் அமர்ந்திருப்பது, அலுவக சக ஊழியை இசையாயின்றி, தான் நீட்டிய காதல் கரத்தை பற்றிக் கொண்டிருந்த இசையாய் இருந்திருந்தால் இந்நேரம் ஆள் அரவமற்ற அவர்கள் அறையில் அவளை மடி சாய்த்து, ‘ஏய் மட்டிப் பெண்ணே..! இயற்கையின் முன்… ஏனடி அவமானம் கொள்கிறாய்.’ என்று நெற்றியில் முட்டி முட்டி பாடம் எடுத்திருப்பேனே என்ற திசையில் பயணித்தது.  
தலையை உலுக்கி தன் எண்ணவோட்டத்தை தடுத்தவன், தன் எதிரில் அமர்ந்து மறுகிக் கொண்டிருக்கும் சக மனுசியை தேற்ற முடிவெடுத்தான்.
“இசை… நான் ஒரு கத சொல்றேன் செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் கேக்குறீங்களா..?’’ என்றான் மலர்ந்த புன்னகையோடு. 
இசை அவனை நிமிர்ந்து பார்த்தவள், அந்த புன்னகை அவளை ஈர்க்க, ‘சரி’ என்பதாய் தலையை உருட்டினாள். அதே நேரம் சிப்பந்தி வந்து காபி கோப்பைகளை அடுக்கி விட்டு சென்றார். 
“இசை.. நீங்க ரெண்டு பேருக்கும் காபி கலக்கிட்டே கதை கேளுங்க சரியா..?’’ என சொல்ல, இருவரின் கோப்பைகளிலும் தேவையான அளவு, பால், குளம்பி நீர், மற்றும் சர்க்கரை சேர்த்து அவள் காபியை கலக்க துவங்க, அமுதன் அவள் கரங்களை பார்த்துக் கொண்டே கதை சொல்லத் துவங்கினான். 
“அப்போ நான் சிக்ஸ்த் படிச்சிட்டு இருந்தேன் இசை. கோ எஜூகேசன் ஸ்கூல் தான். அந்த சமயம் திடீர் திடீர்னு எங்க கிளாஸ்ல படிச்ச பொண்ணுங்க எல்லாம் பெரிய மனுசி ஆயிட்டு இருந்தாங்க. கொஞ்சம் முன்னாடி என் கூட கிரவுண்ட்ல கோ- கோ விளையாடிட்டு இருந்த ஸ்ரீமதி அடுத்த மேத்ஸ் பீரியட் முடியறதுக்குள்ள எப்படி சட்னு பெரிய மனுசி ஆனான்னு எனக்கு அப்ப புரியவே புரியாது. 
ஏன்னா பொண்ணுங்க பெரிய மனுசி ஆயிட்டா அவங்களை மிஸ் சிக் ரூம்ல உக்கார வச்சிருவாங்க, அவங்க பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டு போற வரைக்கும். அப்புறம் ஒரு பத்து நாள் கழிச்சி ஸ்கூலுக்கு திரும்பி வர பொண்ணுங்க நிஜமா பெரிய பொண்ணா ஆயிடுவாங்க. முன்ன மாதிரி எங்க கூட விளையாட மாட்டாங்க. 
டெஸ்க் மேல ஏறி கீழ குதிக்க மாட்டாங்க. சின் சான் பாசையில சொல்லணும்னா அமைதி ஆயிடுவாங்க. அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி அப்படி..’’ 
கதையை பாதியில் நிறுத்திய அமுதன் தன் காபியை எடுத்து சுவைக்க, ஏற்கனவே காபியை அருந்திக் கொண்டிருந்த இசையில் முகத்தில் புன்னகை ஒன்று உற்பத்தியாகி அது அவள் முகம் முழுக்க பரவியது. 
அமுதன் ஏன் இந்த கதையை இப்போது சொல்கிறான் என்று புரிந்தாலும், இசையும் சுவாரசியமாய், “அப்புறம் என்ன ஆச்சு அமுதன்..” என்று கதை கேட்க துவங்கியிருந்தாள்.    
நல்லூரில் ஆரம்பித்த பயணத்தில் இருந்து வாய் மூடி மௌனியாய் இருந்த இசை இப்போது தான் வாய் மலர்ந்து ஒரு வார்த்தையை உதிர்த்திருந்தாள். அமுதன் உள்ளமும் லேசாக, 
“இருங்க இசை காபி குடிச்சிட்டு சொல்றேன். பர்பெக்டா இருக்கு மிக்சிங்.’’ என்றவள், லேசாக அவள் கோப்பையோடு தன் கோப்பையை முட்டி “சியர்ஸ்” என்று விட்டு, காபியை ரசித்து அருந்த துவங்கினான். 
இசையோ கதை கேட்கும் ஆர்வத்தில் வேக வேகமாக காபியை குடித்துவிட்டு அவன் வாய் பார்த்து அமர்ந்தாள். இசையின் ஆர்வத்தை கண்ட அமுதனும், கொஞ்சம் வேகமாய் காபி கோப்பையை காலி செய்துவிட்டு, மீண்டும் தான் விட்ட இடத்தில் இருந்து கதையை துவங்கினான். 
“இப்படியே ஒவ்வொரு பொண்ணா பெரிய பொண்ணா ஆயிட்டே இருந்தாங்களா..? என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல. அப்போ ஸ்கூல் டேஸ்ல எனக்கு கேர்ள் பெஸ்ட்டி ஒருத்தி இருந்தா. அவ பேரு நாகா. 
நல்லா படிப்பா. எனக்கு சில நேரம் மேத்ஸ் சொல்லி தருவா. அவகிட்ட என் பிரச்னையை சொன்னேனா உடனே, “டேய்..! ரொம்ப கவலைப்படாத டா… நானும் ஒரு நாள் கண்டிப்பா பெரிய மனுசி ஆவேன் இல்ல. அப்ப உனக்கு பெரிய மனுசி ஆகுறதுன்னா என்னன்னு சொல்றேன்.’’ அப்படின்னு சொல்லிட்டு எங்க அம்மா கொடுத்துவிட்ட வெஜ் சான்ட்வெஜ்ஜை மொக்கிட்டா. 
“அப்புறம் என்ன ஆச்சு..’’ இப்போது இசை தன் வெண்பற்கள் வெளியே தெரியும் அளவிற்கு பெரிதாய் புன்னகைத்து கேட்டாள். 
“அப்புறம் அப்படியே பெரிய மனுசி மேட்டர் சீக்ரெட் சொல்லுவேன் இல்லப்பா உனக்குன்னு சொல்லி சொல்லியே என்னோட டெய்லி ஸ்நாக்ஸ், ரெண்டு ஹீரோப் பேன், ஒரு காம்பஸ் எல்லாத்தையும் ஆட்டையப் போட்டா. இதுல சோகம் என்னன்னா அவன் எய்த் போற வரை பெரிய பொண்ணு ஆகவே இல்ல..’’ அமுதன் சோகமாய் சொல்ல, இசை பொங்கி சிரித்தாள். 
கண்ணில் நீர் வர சிரிக்கும் அவளை வியப்போடு பார்த்த அமுதன், அவள் தலையை உலுக்கி சிரிப்பை நிறுத்திவிட்டு அவனை பார்த்த பின்பே தான் பேச்சை நிறுத்தியது உணர்ந்து கதையை தொடர்ந்தான். 
“நாங்க எய்த் படிக்கும் போது நடந்த குவாட்டர்லி கடைசி எக்ஸாம் அன்னைக்கு நாகா பெரிய பொண்ணு ஆயிட்டா. ஆனா பாவம் ரொம்ப அழுதா. மிஸ் அவளை வழக்கம் போல சிக் ரூம் அனுப்பிட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. குவாட்டர்லி எக்ஸாம் ஹாலிடேஸ்லாம் முடிஞ்சி ஸ்கூலுக்கு வந்ததும் வேக வேகமா போய் நாகாகிட்ட கேட்டேன் பெரிய பொண்ணு ஆகுறதுன்னா என்னப்பா அப்படின்னு..’’ 
கதை சொல்லி அமுதன் வார்த்தையை நிறுத்த, புன்னகையில் மலர்ந்த முகத்தோடே இசை, “என்ன சொன்னாங்க நாகா..’’ என கேட்டுவிட்டு, ‘கண்டிப்பா உண்மையை சொல்லி இருக்க மாட்டங்க இல்லையா.. ஹா..! ஹா..! ரெண்டு வருஷ காத்திருப்பு… ஸ்நாக்ஸ்.. ஹீரோ பென் எல்லாம் ஹோகயா வா..!’’ என்றுவிட்டு மீண்டும் பொங்கி சிரித்தாள். 
“சும்மா எதாச்சும் பொய் சொல்லி இருந்தா கூட பரவாயில்லையே. போடா பன்னின்னு எல்லார் முன்னாடியும் திட்டிட்டா. எனக்கு செம்மையா கோவம் வந்துருச்சி. அவன் ரிப்பனை பிடிச்சி இழுத்து ஒரு பக்க ஜடையை கழட்டி விட்டுட்டு என் இடத்துல வந்து உக்காந்துட்டேன். 
அன்னைக்கு பஸ்ட் பீரியட் வேற சயின்ஸ். கனகா மிஸ் ஏற்கனவே செம ஸ்ட்ரிக்ட். வந்தவங்க நாகா தலையை பார்த்து ஏன் இப்படி இருக்க கேக்க, அவ என்ன கையை காட்ட நான் வேற வழி இல்லாம அவ என்னை ஏமாத்தின கதையை மிஸ்கிட்ட சொல்லிட்டேன். 
அவ்ளோ தான். வயசுக்கு தகுந்த பேச்சா பேசுறன்னு என்னை வெளுத்து வாங்கி பிரின்சிபல் ரூமுக்கு அனுப்பிட்டாங்க. அங்க இருந்து நேரா எங்க அம்மாவுக்கு தகவல் போச்சு. 
நான் நாலு பீரியட் கிளாஸ் வெளிய நின்ன அவமானத்துல அழுதுட்டே இருந்தேன். அப்ப தான் அம்மா வந்தாங்க. கோர்ட்ல இருந்து நேரா வந்தாங்க. கைல அவங்க கோர்ட்ல யூஸ் பண்ற ப்ளாக் ஓவர் கவுன். 
பிரின்சிபல் மேம் என் மேல சொன்ன கம்ப்ளைண்ட்டை கேட்டவங்க.. இனிமே இப்படி பேச மாட்டான்னு அங்க சொல்லிட்டு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க.’’ 
உடனே இசை வேகமாய், ‘அச்சோ வீட்ல வந்து அம்மாவும் பூசை கொடுத்தாங்களா… இனி அப்படி கேப்பியா கேப்பியான்னு… அப்பா பெல்ட்டா இல்ல பூரிக் கட்டையா..!’’ என்றவள் பாவமாய் அவனை பார்த்தாள். 
அவளை பார்த்து நன்றாக முறுவலித்தவன், “எங்க அம்மா என்னை எந்த சூழ்நிலையிலும் அடிச்சதே இல்ல இசை.’’ என்றுவிட்டு முகத்தில் பொங்கிய பெருமிதத்தோடு கதையை தொடர்ந்தான். 
“அன்னைக்கு நைட் எனக்கு பிடிச்ச டின்னர் சமச்சி கொடுத்தாங்க. அப்புறம் வழக்கமா எனக்கு கிளாஸ் எடுக்குற ப்ளாக் போர்ட்கிட்ட கூட்டிட்டு போனாங்க. 
“தமிழ் பாப்பா எப்படி வரும்னு ஒரு டைம் நீ கேட்டப்ப அம்மா என்ன சொன்னேன்..?’’ அப்படின்னு என்கிட்ட கேட்டாங்க. இந்த கேள்வியை நான் நாலாவது படிக்கும் போது எங்க அம்மாகிட்ட கேட்டேன். 
அதுக்கு அவங்க சொன்ன பதில் இப்ப கூட நியாபகம் இருக்கு. நேச்சர் மதர் நைட்டு ரவுண்ட்ஸ் வரும் போது யார் வீட்ல கிட்ஸ் இல்லையோ அந்த வீட்டுல இருக்க மம்மி டம்மில ஒரு குட்டி பாப்பாவை வச்சிட்டு போயிடுவாங்க. 
கொஞ்ச நாள் மம்மி டம்மில பாப்பா நல்லா வளர்ந்ததும், ஹாஸ்பிடல் போயி ஊசி போட்டு பாப்பாவை வெளியே எடுத்து கொடுத்துருவாங்க. அப்படின்னு எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்ததை நான் அப்படியே சொன்னேன். 
எங்க அம்மா என்னை பார்த்து அழகா சிரிச்சிட்டு, அந்த கதையில நான் இன்னும் கொஞ்சம் உனக்கு சொல்ல மறந்துட்டேன் தமிழ். நேச்சர் மதர் டம்மில பாப்பா வைப்பாங்க சொன்னேன்ல… அதுக்கு பொண்ணுங்க வளரணும். 
அந்த வளர்ச்சி தான் பெரிய பொண்ணா ஆகுறது. அது எப்படி ஆகும்னா… அப்படின்னு என்கிட்ட சொல்லிட்டு எங்க அம்மா, பெண்களோட கருவறையையும், சினைப்பையையும் அந்த பிளாக் போர்ட்ல வரைஞ்சாங்க. 
எனக்கு அப்ப அதோட பேர் எல்லாம் தெரியாது. எங்க அம்மா வரைஞ்சி முடிச்சதும், நீ சாப்பிடுற புட் எப்படி உன்னோட ஸ்டமக் போகுதோ அப்படி தான் பாப்பாவும் .. நேச்சர் மதர் வைக்கும் போது பொண்ணுங்களோட இந்த ஆர்கனுக்கு போகும். இதோட பேர் யூட்ரஸ். 
இந்த யூட்ரஸ் பக்கத்துல ஒரு சின்ன நெல்லிக்கா மாதிரி வரைஞ்சி இருக்கேன் பாரு இது தான் ஓவரி. இது ஒவ்வொரு மாசமும், ஒரே ஒரு பூவை பூக்கும்.
அந்த பூ இந்த யூட்ரஸ்ல வந்து காத்திருக்கும். நேச்சர் மதர் உள்ள பூ இருந்தா தான் உள்ள பாப்பா வைக்க முடியும். 
ஆனா பாப்பா வைக்குறதுக்கு முக்கியமான ரெண்டு கண்டிசன் இருக்கு நம்ம உலகத்துல. ஒன்னு அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்கனும். அதோட அவங்களுக்கு அப்ப பாப்பா தேவையா இருக்கணும்.  அதனால நேச்சர் மதர் நிறைய பேருக்கு பாப்பா கொடுக்காம போயிருவாங்க. 
ஆனா பாவம் பூ பூத்து இருந்துச்சி இல்லையா. ‘நீ சொல்லு தமிழ் நம்ம மல்லி கொடியில சாயங்காலம் பூத்தப் பூ நாம பறிக்காம விட்டா காலைல என்ன ஆகும்…?’ அப்படின்னு என்கிட்ட கேள்வி கேட்டாங்க. 
‘செடியில வாடி அப்புறம் கீழ உதிந்திரும் அம்மா…’ அப்படின்னு சொன்னேன். அதுக்கு அம்மா, என் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்துட்டு, ‘பிரிலியன்ட் பாய்..’ அப்படின்னு சொன்னாங்க. 
மறுபடி அந்த படத்தை காட்டி, இங்க மாசம் ஒரே ஒரு பூ பூக்கும்னு சொன்னேன் இல்லையா அந்த பூ நேச்சர் மதர் தனக்கு பாப்பா கொடுக்கலையே அப்படிங்கிற சோகத்துல ரத்தக் கண்ணீர் விடும். முதல் முறை யூட்ரஸ் ப்ளட் டியர்ஸ் பண்றதை தான் பொண்ணுங்க பெரிய மனுசி ஆகுறாங்கன்னு சொல்றாங்க. சரியா… பாவம் யூட்ரஸ் அந்த ப்ளட் டியர்ஸ் ட்ரெஸ் எல்லாம் ஸ்பாயில் பண்ணிட கூடாதுன்னு நம்ம கீழ் வீட்டு அஸ்வின் பாப்பாவுக்கு அவங்க மம்மி பே பேம்ப்பர்ஸ் போடுற மாதிரி கேர்ள்ஸ் அந்த மாதிரி நேரத்துல பேட் யூஸ் பண்ணி அந்த டியர்சை கேச் பண்ணி அப்புறம் டிஸ்போஸ் பண்ணிடுவாங்க. 

Advertisement