Advertisement

சலனம் – 11 
சொகுசு வசதிகள் அத்தனையும் தன்னகத்தே கொண்ட அந்த சிற்றுந்து மெல்ல மெல்ல மலைகளின் இளவரசனின் உடல் மீது ஊர்ந்து ஊர்ந்து ஏறிக் கொண்டிருந்தது. 
மேலே வாகனம் ஏற, ஏற, கீழே இருக்கும் கட்டிடங்களும், வாகனங்களும் சாலைகளும், நவ ராத்திரி கொலுவில் அடுக்கி வைத்திருக்கும் பொம்மைகள் போல தோற்றமளிப்பதை ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தாள் யாழிசை. 
அவளோடு அந்த வாகனத்தில், மொத்தம் பதிமூன்று பேர் இருந்தனர். வெள்ளி இரவு சென்னையில் இருந்து வாகனம் கிளம்பிய போது, ஆட்டம், பாட்டத்தோடு வண்டி குலுங்கியது. 
ரத்தோட் ஹிந்தி பாடல்களுக்கு இல்லாத இடுப்பை அசைக்க, அவருக்கு பின், “ஜில் ப்ரோ…’’ என தன் தோற்றத்திற்கு ஏற்ற பாடலில் வண்டியிலேயே கம்பியை பற்றிக் கொண்டு பறந்து பறந்து ஆடினான் ரியாஸ். 
“ஹே.. ஹே.. என்ன ஆச்சு உனக்கு… புதுசா இந்த பார்வை எதுக்கு…’’ என அவனை நோக்கி கவி அண்ட் கோ கலாய்த்து எடுக்க, கொஞ்சமும் வஞ்சனையின்றி அனைவரும் பொங்கி சிரித்தனர். 
இத்தனை ஆர்ப்பாட்டத்திலும், இசை மட்டும் இதோ சிரிக்கிறேனே என்று காட்டுவதற்கு இதழ்களை இழுத்து வைத்து அமர்ந்திருந்தாள். மற்ற படி அமர்ந்திருந்த இடத்திலிருந்து இம்மியளவு நகரவில்லை. 
ரத்தோட் அவர்களின் குழுவினர் அனைவரையும் நான்கு நாட்களுக்கு முன்னால், பிரத்யேக கலந்துரையாடலுக்கு அழைத்து, நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி செய்தியை பகிர்ந்தார். 
அப்போதே அனைவரும், ‘ஓ..’ என்று வெற்றி கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரோ அதை தொடர்ந்து, ‘இந்த வெற்றியைக் கொண்டாட அனைவருக்கும் ஏற்காட்டின் நட்சத்திர விடுதியில் இரண்டு நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று அறிவிக்க, அந்த அறையே ஆர்ப்பாட்ட கரவொலியில் அதிர்ந்தது. 
இசைக்கு இந்த பயணத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லை. ஏன் எவ்வகை கொண்டாட்டங்களிலும் நாட்டமில்லை. ஆனால் இவர்கள் குழுவின் தொழிநுட்ப தலைவன் என்ற முறையில் அமுதன் வருவான் என்ற எண்ணம் உள்ளுக்குள் வலுப் பெற, பெரியம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி, சென்று வர அனுமதி பெற்றாள். 
இடையில் போலி முகநூல் கணக்கு துவங்கி அமுதனுடன் நட்பில் இணைந்து இருந்தாள். அவன் தனது அன்றாட வாழ்வின் ரசனை மிகு நிகழ்வுகளை சிறு சிறு வார்த்தை கோர்வையில் வெளிப்படுத்தி அதற்கு தகுந்தார் போல் அவன் புகைப்படங்களையும் இணைத்திருந்தான். 
அரும்பாய் அவன் பால்கனி ரோஜாவோடும், அதே முழுதாய் மலர்ந்த ரோஜாவோடும் எடுத்துக் கொண்டிருந்த சுயமி புகைப்படங்களை இணைத்து இருந்தவன், நேற்றும் இன்றும் நான் என்று பதிவிட்டு இருந்தான். 
அத்தனை நாள் அவனுடனே சுற்றித் திரிந்த போதெல்லாம் வராத ரசனையோடு, இசை அப்புகைப்படங்களில் புன்னகைத்துக் கொண்டிருந்த அமுதனை ரசித்துக் கொண்டிருந்தாள். அது சாதாரண மானுட மனவியல். தம் உள்ளங்கைக்குள் அடங்கும் எவற்றையும் அது ரசிப்பதில்லை.
கிட்டாதென்று அறுதியிட்ட ஒன்றன் பின்னே ஓடிக் களித்து திரியும். இசையும் அப்படியொரு நிலையில் தான் இருந்தாள். முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்க அவனை தேடினாள். 
ரியாஸ் கூறிய தகவலை கேட்ட பின்பு, ‘ஆறு நாள்ல இன்னொரு பொண்ணுக்கு ஓகே சொன்னீங்களா..? இல்ல ஒரு பொண்ணுக்கு ஆல்ரெடி ஓகே சொல்லிட்டு டைம் பாசுக்கு என்கிட்ட டயலாக் பேசுனீங்களா..?’ என்று நறுக்கிய வெங்காய கார்ப்பின் தொனியில் அவனிடம் கேட்க எண்ணி அவனை தேடினாள். 
என்னவோ ஆறே நாட்களில், அவனின் மண வாழ்வு தீர்மானிக்கப்பட்டதை அவளால் அத்தனை எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் நாட்கள் தான் கடந்து கொண்டிருந்ததே தவிர அவனை கண்ணில் காண முடியவில்லை. 
ஆக அவனை முகநூலில் தேடி அலைந்து, ஒரு வழியாய் கண்டு பிடித்து, போலி கணக்கு துவங்கி, அவனோடு நட்பில் இருக்கும் நாலு நண்பர்களின் நட்பு பட்டியலில் இணைந்து, ஒரு வழியாய் அவனின் நட்பையும் எட்டிப் பிடித்தாள். 
முதலில் அவனின் பதிவுகளுக்கு, இதயத்தை இறுக்கிப் பிடிக்கும், ‘நான் காக்கிறேன் உன்னை’ என்ற பொருள் உணர்த்தும் பொம்மையை சொடுக்கி வந்தவள், பின்பு ஒரு நாள் நள்ளிரவில் அவன் உள்அஞ்சல் பெட்டியை தட்டினாள். 
கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி அப்படியே, அவளின் அஞ்சல் பெட்டி தொடர்பை கருப்பினான். இசையால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தெரியாத ஆண் நண்பர்கள் தன் உள் அஞ்சல் பெட்டியை தட்டினாள் தானும் இதையே தான் பலமுறை செய்திருக்கிறோம் என்பதை வசதியாக மறந்தாள். 
‘பெரிய ஹீரோன்னு நினைப்பு சொங்கிக்கு. பேச்சுல அப்படி என்ன இவன் கற்பு தேஞ்சிட போகுதுன்னு இப்படி சீன் போட்டு ப்ளாக் பண்ணிட்டு போறான். இடியட்..’ அப்படி அவனை மனதிற்குள் வசை பாடினாலும், முகநூலில் தன் நட்பின் இணைப்பை துண்டிக்காதிருந்தது அவளுக்கு அத்தனை ஆசுவாசமாய் இருந்தது. 
இதே இவளின் ஆண் நண்பர்கள் யாராவது உள் அஞ்சல் பெட்டியை தட்டியிருந்தால், அதை உள்திரை படமெடுத்து, முக நூலில் பதிந்து, ‘பெண் என்ற மனிதிக்கு மரியாதை கிடையாதா…?  இந்த ஆண்களிடம்’ என்று பெரிய புரட்சி பதிவிட்டு ஒரு இருநூறு லைக்குளை அள்ளியிருப்பாள்.
பாவம் பிழைக்கத் தெரியாத அமுதன் கருப்பி தன் எதிர்ப்பை தெரிவித்து அமைதியாகிவிட்டான். இந்த விசயத்தில் ஆண்களின் மனப் பக்குவம், பிடித்தால் கடலை அன்றி கதவை சாத்தி அடை வகையறாவை சேர்ந்ததாய் இருக்கக் கூடும். 
சிற்றுந்தில் அனைவரும் ஆட்டம் போட்டு வர, இசை தன் பங்காய் ஒரு மெல்லின பாடலை பாடிவிட்டு அப்படியே ஒதுங்கிவிட்டாள். எப்படியும் இந்த கொண்டாட்டத்திற்கு அமுதன் கட்டாயம் வருவான் என்ற பெரிய எதிர்பார்ப்பை வளர்த்து இருந்தாள். 
அவன் வராது போகவும், ஏதோ ஒருவகை ஏமாற்றம் சூழ, அலைபேசி வழி அவன் முக நூல் பக்கத்தில் சுற்றியபடி, ஒரு ஜன்னலோர இருக்கையை சரணடைந்திருந்தாள். 
விடியற்காலை ஆறு மணிக்கு அவர்களின் வாகனம் ஏற்காட்டை அடைந்தது. நன்றாக பொழுது புலர்ந்திருக்க, இரவில் ஆடிய ஆட்டத்தில் அனைவரும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தனர். 
ஆனால் அலைபேசியில் ஒரு கண்ணும், ஜன்னலில் ஒரு கண்ணும் பதித்திருந்த இசை உறங்கவே இல்லை. ஆகையால் ஏறு மலை அழகை கண்டு களித்தபடி பயணித்துக் கொண்டிருந்தாள். 
வாகனம் ஒரு உறுமலோடு நிற்கவும், ‘வந்தாச்சு போல’ என்று நினைத்தவள் எழுந்து நின்றாள். வெகு நேரம் அமர்ந்தே வந்ததில் கால்கள் பிடித்துக் கொண்டிருக்க, நிற்க முடியாமல் தள்ளாடியவள் மீண்டும் தன் இருக்கையிலேயே ‘தொப்பென’ அமர்ந்தாள்.      
அதே நேரம் சிற்றுந்தின் முன் கதவை திறந்து கொண்டு அமுதன் உள் நுழைந்தான். “ஹாய்.. கைஸ்….’’ என்ற அவனின் உற்சாக குரலில் மற்றவர்கள் உறக்கம் கலைந்து எழ,  இசை ஒரு நொடி அதிர்ந்து பின் ஆச்சர்யம் கொண்டாள். 
அவனை கண்ட அடுத்த நொடி, உள்ளங்காலில் புறப்பட்ட மின்னல் ஒன்று, வேகமாய் உச்சந் தலை ஏறி நின்றது. என்ன உணர்விது என்று அவள் அறியா உணர்வொன்று அவளை ஆட்டுவித்தது. 
இசை வேகமாய் தன் பயணப் பொதிகளை சேகரிப்பவள் போன்று தலை குனிந்துக் கொண்டாள். அதற்குள் மற்றவர்கள் விழித்துக் கொள்ள, “டேய் மச்சான்..’’ “ஹாய் ஜி….” “ஹாய் சார்..’’ என்ற கலவையான குரல்கள் அங்கே கேட்கத் துவங்கின. 
அமுதன் இரு நாட்களுக்கு முன்பு தான் சேலம் வந்திருந்தான். ரத்தோட் அவனை கொண்டாட்டத்திற்கு அழைக்க, முதலில் தட்டிக் கழிக்கவே விரும்பினான். 
ஆனால் அவர்கள் அதற்கு தேர்ந்தெடுத்த இடமும், காரணமும் அவன் நிராகரிப்பை தடை செய்தது. அவர்கள் குழு அடைந்த வெற்றிக்கு தலைவனாய் உடனிருப்பதும், தன் சொந்த ஊரை தேடி வருபவர்களை கவனித்து விருந்தோம்பி அனுப்பி வைக்க வேண்டியதும், தன் கடன் என்றுணர்ந்தவன் கலந்து கொள்கிறேன் என்று வாக்களித்தான். 
ஆனால் அவர்களோடு உடன் பயணிக்காமல், காலை ஏற்காட்டில் நேரடியாக அவர்களோடு இணைந்து கொள்வதாய் சொல்லியிருந்தான். அந்த தகவல் இசையை தவிர குழுவில் இருந்த மற்றவர் அனைவருக்கும் தெரியும். 
ரியாசும், கவியும் கவனமாய் அச்செய்தி அவள் செவி சேராது பார்த்துக் கொண்டனர். ஒவ்வொருவராய் தம் தம் பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர். 
தன்னுடைய ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்ற மரியாதைக்கு, அமுதன் ஒவ்வொருவரையும் தனி தனியாய், ‘வாங்க..’ என்று வரவேற்றுக் கொண்டிருந்தான். 
இசை இறுதியாய் வாகனத்தில் இருந்து இறங்க, சடாரென முகத்தை திருப்பியவன், “ஜஸ்ட் டூ மினிட்ஸ்ல ஹோட்டல் வந்துடும். இதோ.. இந்தப் பக்கம்..’’ என்றபடி விடுதிக்கு வழி காட்ட துவங்கினான். 
இசைக்கு யாரோ தன் முகத்தில் ஓங்கி அறைந்ததைப் போல் ஆகிவிட்டது. மற்றவர்கள் யாரும் அமுதனின் ஒதுக்கத்தை கவனிக்காவிட்டாலும், இவர்களை மட்டும் கவனிப்பதையே வாடிக்கையாய் கொண்டிருந்த ரியாசும், கவியும் கண்டு கொண்டனர். 
“ஊடலாம்’’ என்று ஒருவரை ஒருவர் பார்த்து கண் ஜாடையும் காட்டிக் கொண்டனர். அவர்கள் அறியாதது அமுதன் ஊடல் கொண்டல்ல, ஒதுக்கம் கொண்டே விலகிப் போகிறான் என்பதை. 
இசை தாய் கோழி கொத்தி விரட்டும் குஞ்சைப் போல, சோகமாய் நடந்து வர, கவி அளவோடு வந்து இணைந்து கொண்டாள், ‘சீக்கிரம் நடடி..’ என்ற வார்த்தையோடு. 
ஒருவழியாய் அனைவரும் விடுதியை அடைய, பெண்களுக்கு தனியாய் மூன்று அறைகளும், ஆண்களுக்கு இரண்டு அறையும் முன் பதிவு செய்யப்பட்டிருந்தது. 
அவரவர் அவரவருக்கு ஒதுக்கிய அறையில் சென்று, தங்களை புத்துணர்வு செய்து வர, காலை உணவிற்கு பிறகு எட்டு மணி போல உற்சாகமாய் துவங்கியது ஊர் சுற்றும் படலம். 
முதலில் அருகிலிருந்த, மலர் பூங்கா, படகு இல்லம், பக்கோடா முனை என்று அழைத்து சென்றவன், மதிய உணவிற்கு பின் சேர்வராயன் மலை, குகைக் கோவில், கரடி முனை என்று சற்று தொலைவில் இருந்த இடங்களுக்கு அழைத்து சென்றான். 
இருபுறமும் மரங்கள் அணிவகுத்து நிற்க, குளிர்ந்த தென்றல் உடல் வருட, அந்த மலைப் பிரதேசத்தில் உலாத்துவதே பேரின்பமாய் இருந்தது மற்றவர்களுக்கு.
ஆனால் இசை முள்ளின் மேல் நிற்பதை போல் நின்றாள். ஒவ்வொரு இடங்களிலும் அமுதன் அவளை கவனமாய் தவிர்த்தான். 
அவன் வீட்டிலிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மலைக்கு வந்திருந்தான். ஆக இவர்களை எங்கேனும் அழைத்து செல்லும் போது, முதலில் இவன் வண்டியில் வழி காட்டி ஓட்டி செல்ல, ஓட்டுனர் அவரை தொடர்வார். 
வண்டியை நிறுத்தியதும், துள்ளி குதித்து இறங்கும் மற்றவர்களோடு இணைந்து கொள்ளும் அவன், ஒரு தேர்ந்த சுற்றுலா வழிகாட்டியாக அந்த இடத்தின் சிறப்பையும் இயல்பையும் விளக்க துவங்கி விடுவான்.
ஆனால் மறந்தும் இசையின் புறம் திரும்ப மாட்டான். அப்படித் தான் படகு இல்லத்தில் முதல் படகு நிரம்பி விட, இரண்டாம் படகில் இசையோடு ஏற வேண்டிய கட்டாயம் ஏற்பட, பிடிவாதமாய் ஏற மறுத்து மற்றவர்களை மட்டும் படகு சவாரிக்கு அனுப்பி வைத்தான். 
அவனின் இந்த ஒதுக்கம் பெரும் வலி தர, இசை தானாகவே அமுதனின் முன்னிலையிலிருந்து ஒதுங்க துவங்கினாள். முதலில் அமுதன் இசையிடம் காட்டும் இறுக்கத்தை விளையாட்டாக கவனித்துக் கொண்டிருந்த ரியாஸ் நேரம் கடக்க, கவலை கொண்டான். 
மாலை சுற்றி ஓய்ந்து விடுதிக்கு வந்தவர்களுக்கு, ரூப் கார்டன் விருந்து என்று சொல்லப்படுகின்ற மொட்டை மாடி விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். 
ஆண்கள் மிதமாக மது எடுத்துக் கொள்ள, பெண்கள் தமக்கு பிடித்த உணவு வகைகளோடு அங்கிருந்த நீச்சல் குளத்தில் கால்களை மிதக்க விட்டபடி அமர்ந்துவிட்டனர். 
இசையும் அப்படித் தான் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை நீருக்குள் இலக்கின்றி பாய்ந்திருக்க, கைகள் தன் போக்கில் தட்டில் இருந்த உணவை அளந்து கொண்டிருந்தது. 
அமுதன் எதற்கோ திரும்பியவன், அந்த காட்சியை கண்டு ஒரு நொடி அவள் மீது பார்வையை நிலைக்க விட்டான். காலையிலிருந்து தன்னை தொடரும் அவள் பார்வைகளை அமுதன் உணர்ந்தே இருந்தான். 
ஆனாலும், அவளின் ‘ச்சீ’ என்ற உதாசீனம் ஒவ்வொரு நொடியும் மண்டைக்குள் பெருங்குரலாய் எதிரொலிக்க, அவளைக் கண்டதே பொய்யோ எனும்படி முகத்தை திரும்பிக் கொண்டான். 
அடுத்த நாள் அருவிகளில் ஆட்டம் போட முடிவு செய்திருந்தார்கள். ஆக, அன்றைக்கு அனைவரும் விரைவாகவே தங்கள் அறைக்குள் நுழைந்து பயணக் களைப்பில் உறங்கியும் போயினர். 
இசை அத்தனையும் ஒதுக்கிவிட்டு நல் இசை கேட்டு உறங்கிப் போனாள். அமுதன் வண்டியோட்டிய களைப்பில் உறங்கிவிட, கவியும், ரியாசும் புலனத்தில் அமுதன், மற்றும் இசை குறித்து புலம்பி பேசி, பேசியே பொழுது புலரும் வரை விழித்திருந்தார்கள்.   
பொழுது புலர்ந்ததும், காலை உணவிற்கு பின் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டவர்களின் பயணம் அருவி நோக்கி தொடங்கியது. முதலில் ஏற்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்த கிள்ளியூர் அருவிக்கு சென்றார்கள். 
அவ்வருடம் நன்றாக மழை வெளுத்து வாங்கியிருந்ததால், அருவியில் நீர் ஆர்பரித்துக் கொட்டிக் கொண்டிருந்தது. தன் மனக் கிலேசங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இசையும் அருவியில் உற்சாகமாய் ஆட்டம் போட்டாள்.
உடைகள் தெப்பலாய் நனைந்திருக்க, அப்படியே அடுத்த அருவிக்கு நடையை கட்டினார்கள். அமுதன் இலகுவான சற்றே நீண்ட கால்சாராய் ஒன்றை அணிந்திருந்தான். 
மற்றவர்களும் நீரில் ஆட்டம் போடுவதற்கு ஏற்ற வகையில் உடுத்தி இருந்தனர். இசை மட்டும் வழமையான பருத்தி உடையில் இருந்தாள். அதுவும் அலுவலகத்தில் இணைந்த அன்று அணிந்திருந்த சந்தன நிற சுரிதாரை அணிந்திருந்தாள். 
‘அருவியில குளிக்க வரும் போது, டார்க் கலர் ட்ரெஸ் போடணும்னு தெரியாது. இடியட். வாய் மட்டும் நல்லா ட்ரம்ப் தங்கச்சி மாதிரி வக்கனையா இழுத்து சுழிச்சி பேசுவா…! வேற எதுக்கும் லாயக்கு இல்ல.’’ அவளை அந்த உடையில் பார்த்த நொடி முதல் அமுதன், மனதிற்குள் கிண்டி கிளறிக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாது, இசை நீரில் நன்றாக ஆட்டம் போட்டாள். 
பாவம் அவளும் என் செய்வாள். இங்கு அருவி திட்டம் உண்டு என்பது அவள் அறியாதது. ஆக அவளுக்கு பிடித்த இரண்டு செட் உடைகளோடு கிளம்பி வந்திருந்தாள். அதில் சற்றே நிறம் கூடுதலான உடையை நேற்று அணிந்திருக்க, மீந்த மற்றொரு உடையை இன்று அணிந்திருந்தாள். 
இவர்களின் வாகனம் அடுத்து ஏற்காட்டிலிருந்து இருபது கிலோ மீட்டர்கள் தொலைவிலிருந்த நல்லூர் அருவியை அடைந்தது. அமுதன் வழமை போல வாகன கதவின் பக்கவாட்டில் நிற்க, அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வாகனத்தில் இருந்து இறங்கினர். 
இசை இறுதியாய் இறங்க, அவளைக் கண்டதும் முகத்தை திருப்பும் அமுதன் அவளும் முன் நடந்து செல்லும் வரை அமைதியாய் நின்றான். 
அவள் முன்னே நடக்கவும், நிமிர்ந்து அவளை நோக்கியவன், அடுத்த நொடி அவளை பின்னோடு நெருங்கி நின்று அவள் கன்னத்தோடு, தன் கன்னம் இழைய, “இசை..’’ என்று மென்மையாய் அழைத்தான். 
அமுதனின் அந்த அதிரடி செயலில் முதலில் திடுக்கிட்டாலும், அடுத்த நொடி, உடலும் உள்ளமும் ஒருங்கே குழைய, இசை சூழல் மறந்து நின்றாள். 
ஆனால் அடுத்து அவள் காதிற்குள் அவன் சொன்ன சேதி கேட்டவளின் முகம், அவமானத்தில் அப்படியே பகலின் அல்லியாய் சுருங்கிப் போனது. 
சலனமாகும். 
 

Advertisement