Advertisement

விழி வெப்பச் சலனம்.
சலனம் – 1 
வானம் வெளுத்தும் காயாமல், கருத்தும் கொட்டாமல், சாம்பலும், வெளிர் நீலமும் கலந்த கலவையில் மந்தகாசப் புன்னகை புரிந்து கொண்டிருந்தது. 
திங்கட்கிழமை விடியலில் பணிக்கு கிளம்புவதில் எப்போதும் சுணக்கம் தான்  தமிழமுதனுக்கு. அதுவும் வாரவிடு முறையின் இரண்டு நாட்களையும் கொண்டாடிக் கழித்த பின், மீண்டும் அந்த குளிர் பதன கண்ணாடி கூண்டிற்குள் மனித இயந்திரமாய் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தை எண்ணிப் பார்க்கும் பொழுதே, அவனுக்கு உள்ளம் சுனங்கி விடும். 
அதுவுமின்று வானம் வேறு கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாய் இருக்க, படுக்கையில் இருந்து எழப் பிடிக்காமல் உருண்டுக் கொண்டே இருந்தான். 
ஆனால் அப்படியெல்லாம் உன்னை சும்மா விட முடியாது எனும்படி அவன் அலைபேசி சிணுங்கியது. எதிர் முனையில் அவன் மேலதிகாரி ரத்தோட் தான் பேசினார். 
அமுதன் அலைபேசியை இயக்கி காதில் வைத்ததும், “அமுதன் இன்னைக்கு நியூ ட்ரைனீஸ் ஜாயின் பண்றாங்க. நீங்க கொஞ்சம் முன்னாடி வந்துட்டா தேவலாம்.’’ என்று பாதி ஆங்கிலமும், உடைந்த தமிழும் கலந்து அவனுக்கு ஆணையிட்டார்.
“எஸ் சார். ஸ்யூர்.’’ என்று அவருக்கு பணிவாய் பதில் கொடுத்தவன், அப்புறம் அலைபேசி அணைக்கப்பட்டதும், மோசமான கெட்ட வார்த்தைகளால் அவரை அர்ச்சித்துக் கொண்டே, படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான். 
அவசர அவசரமாய் பணிக்கு தயாராகி, அவன் ஆருயிர் தோழன், எழிலனை கிளப்பிக் கொண்டு திருவல்லிக்கேணி வீதியில் அவன் பறக்கத் துவங்கிய போது மணி ஒன்பதை எட்டிக் கொண்டிருந்தது. 
எழிலன் அவன் தாய் அவனுக்கு அளித்த பிறந்த நாள் பரிசு. யமஹா FZ என்ற வண்டியின் முகப்பில் அருள்விழி என்ற அவனின் தாயின் பெயரைப் பொரித்து வைத்திருப்பான். 
பின்புறம், ஒரு சிறிய கைத்தடிப் படமும், அதை தொடர்ந்து, சுயமரியாதைக் கிழவனின் பேரன் என்ற வார்த்தைகளும் அந்த வண்டியை அலங்கரித்துக் கொண்டிருந்தன. 
தாய் பரிசளித்த அன்றைக்கே அந்த வண்டிக்கு எழிலன் என்ற பெயர் சூட்டி தன் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டான். அவனை பொறுத்தவரை அன்பிற்கு உயர்திணை அஃறிணை கிடையாது.
வாழ்வை இலகுவாய் கொண்டாடுபவன் தான் ஆயினும் கொண்ட கொள்கையில் இம்மியளவும் பிசகாதவன், பின் வாங்காதவன். 
அலுவகத்தை வந்தடைந்ததும், ஆசுவாசமாய் தன் தலைக்கவசத்தை கழற்றி, எழிலனோடு இணைத்தவன், அதன் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தம் ஒன்றையும் பதித்தான். 
எழிலனுக்கு இருபுறமும், ஒரு பக்கம் இளம்ரோஜா நிற ஸ்கூட்டியும், மறுபுறம் வெண்ணிற ஹோண்டா ஆக்டீவாவும் நிறுத்தப்பட்டிருக்க, தன் வண்டியின் இருக்கையில் செல்லமாய் தட்டியவன், 
“இன்னைக்கு ரெண்டு பிகருங்களுக்கு நடுவுல மாட்டி இருக்க. என்ஜாய் பண்றா மச்சி!’’ என்றவன், கலைந்த முடியை, கைவிரல்களால் கோதிக் கொண்டே, பளு தூக்கியை நோக்கி நடந்தான். 
அலுவலகத்திற்கு கொஞ்சம் முன்னமே வந்திருந்தான் ஆகையால், லிப்ட் ஒருவருமின்றி காற்றாடிக் கிடந்தது. உள்ளே நுழைந்து ஐந்தாம் தளத்திற்க்கான என்னை அழுத்திவிட்டு, உதடு குவித்து, “லா லா..’’ என்று விசிலடித்துக் கொண்டிருந்த போது, மருதாணியிட்ட வளைக்கரம் ஒன்று, மூடிக் கொண்டிருந்த கதவின் குறுக்கே விழுந்தது. 
உணர் அதிர்வுகள் பொருத்தப்பட்டிருந்த அந்த கதவு, மூடிக் கொண்டிருந்த தருவாயில் அவள் கரங்கள் நடுவில் நுழைந்ததும் மீண்டும் விரியத் திறந்தது.  மகிழன் அந்தக் கரங்களையே பார்த்துக் கொண்டிருக்க, அந்த இடத்தையே மல்லிகைப் பூ வாசத்தால் நிரப்பியபடி அந்த யுவதி உள் நுழைந்தாள். 
மகிழன் தன் பார்வையை கரங்களில் இருந்து சற்று முகத்தை நோக்கி உயர்த்தினான். சிவப்பில் சந்தன கோடுகளிட்ட காட்டன் சுடிதார் அணிந்து இருந்தாள். 
துப்பட்டாவை பள்ளி செல்லும் சிறுமி போல இரண்டு பக்கமும் ஒழுங்காய் மடிப்புகள் எடுத்து  பின் செய்து இருந்தாள். எண்ணெய் வைத்த தலையில் வகிடு எடுத்து நுனி முடி வரை பின்னி இருந்தாள். 
தலையில் இரண்டு முழ மல்லிகைப்பூ. சிவப்பு நிற வட்டப் பொட்டின் மேலே கீற்றாய் சந்தனம். கைகளில் கண்ணாடி வளையல்கள்.
மகிழனுக்கு அதுவும் தன் அலுவலகத்தில், இப்படியான தோற்றத்தில் பெண்களை கண்டே வழமை இல்லை ஆகையால், அவளை விநோதமாய் ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். 
வாயில் தாளமிட்டுக் கொண்டிருந்த விசிலின் ராகம் கூட நின்றுவிட்டிருந்தது. அந்த குறுகிய கொள்ளளவு கொண்ட பளு தூக்கியில், ஆடவன் ஒருவன் நின்றுக் கொண்டிருப்பதை அந்த மங்கை பளு தூக்கியில் நுழையும் போதே, ஓரப் பார்வையில் கண்டிருந்தாள். 
தற்சமயம் அவன் தன்னை வெறித்துக் பார்க்க, கைவசம் இருந்த பைலை, மார்போடு அணைத்துக் கொண்டவள், முடிந்த அளவு ஓரமாய் சென்று நின்று கொண்டாள். 
அவன் முகத்தில் இருந்த இரண்டு மில்லி தாடியும், முறுக்கு மீசையும் வேறு அவளுக்கு இன்னும் கொஞ்சம் பீதியை கிளப்பி இருந்தது. 
அவளின் இந்த செய்கையை கவனிதவனுக்குள், ‘சுள்’ என்ற கோபம் ஆர்டீசியன் ஊற்றாய் கிளம்பினாலும், அவளை அலட்சியப்படுத்த, விட்ட இடத்தில் இருந்து வெகு அலட்சியமாய் தன் விசில் ராகத்தை தொடர்ந்தான். 
ஆனாலும் விழியின் ஒரு கோணம் அவளை அளவெடுத்த படியே தான் இருந்தது. அவள் மௌனமாய் எதையோ உச்சரிப்பதை உணர்ந்தவன், அவன் பார்வையை மேலும் கூர்மையாய் அவள் இதழ்களில் பதித்து, அவளின் வார்த்தைகளை மொழி பெயர்க்க முனைந்த நொடி, ’டிங்’ என்ற அலார ஒலியோடு லிப்டின் கதவுகள் விரியத் திறந்து. 
ஏதோ மூடியிருந்த எலிப் பொறிக்குள், சிக்கி இருந்த எலி தப்பி ஓடுவதைப் போல, அவள் முந்திக் கொண்டு ஓட, அவன் வேக நடைக்கு ஏற்ப அவளின் பின்னல் ஆடிய நடனத்தை ஒரு சிரிப்புடன் ரசித்தவன், தோளை குலுக்கிவிட்டு, தன் பகுதி நோக்கி நடந்தான். 
அடுத்த ஒரு மணி நேரத்தில், புதிதாய் இணைந்த, ஐந்து பயிற்சி ஊழியர்களில் அவளும் ஒருத்தி என்பதை அறிய நேர்ந்த போது, அவளை ஒரு அளவீட்டுப் பார்வை பார்த்தான் அவ்வளவே. 
ஆனால் அவளோ நொடிக்கு ஒரு முறை அவனை ஒரு பதட்டப் பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அறிமுகங்கள் முடிந்த பின், அவர்களுக்குண்டான பணியினை மேலோட்டமாய் விளக்கி முடித்தவன், இதற்கு முன்பு முடிந்திருந்த ப்ராஜெக்ட்களை ஒருமுறை அலசி ஆராய பணித்துவிட்டு மீண்டும் தன் பகுதிக்கு திரும்பிவிட்டான். 
என்னவோ அவளின் அந்தப் பதட்டப்பார்வை கொஞ்சமும் அவனுக்கு பிடிக்கவே இல்லை. அதன் பொருட்டே வேகமாய் தன் இடம் திரும்பியிருந்தான்.
தேநீர் இடைவேளையில், அமுதனின் நெருங்கிய தோழனான ரியாஸ் வேறு, அவன் முதுகில் கொண்டாட்டமாய் தட்டி, “என்ன மச்சி! நீ தான் நியூ ஜாயின்ஸ் ட்ரைனராம். கலரெல்லாம் எப்படி இருக்கு?’’ என உற்சாகமாய் வினவ, ஆனமட்டும் அவனை முறைத்துப் பார்த்தவன், 
‘ஏண்டா… நீ வேற வந்து எரிச்சலைக் கிளப்பிக்கிட்டு… ஏதோ கும்பகோணம் மகாமகத்துக்கு போற மாதிரி தலையில ஒரு கூடை மல்லிப்பூவை வச்சிட்டு.. சந்து மாரியம்மன் பண்டிகையில கூழ் காச்சி ஊத்துற முனியம்மா மாதிரி பெரிய பெரிய பொட்டை நெத்தியில வச்சிக்கிட்டு… கொஞ்ச நேரம் உத்துப் பாத்தா காய்ச்சல் வந்துரும் போல. கலராம்.. கலரு… இதையெல்லாம் எந்த லூசுப் பய இன்டர்வியூல செலக்ட் பண்ணானோ தெரியல. வந்து என்னை இம்சை பண்ணுது.’’ எரிச்சலோடு மொழிந்தவன், கையில் தேநீர்க் கோப்பையோடு திரும்ப, அவனுக்கு நேர் பின்னே, வெம்மையில் விடைத்த நாசியோடு, மொத்த உக்கிரமும் உச்சியில் தெறிக்க யாழிசை நின்று கொண்டிருந்தாள். 
அவன் சற்றே உரத்து பேசியதால், கொஞ்சம் நெருங்கி நின்றுக் கொண்டிருந்தவர்களுக்கு, இத்தனை நேரம் அவன் விமர்சித்த பெண் இவள் தான் என்பது அவள் தோற்றத்தில் வாயிலாய் புலப்பட, அனைவரும் அவளை பரிதாபமாய் பார்த்து வைத்தனர். 
இவ்வளவு நேரம் அவனை சற்றே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவள், அவனை நன்றாய் நிமிர்ந்து பார்த்து, 
“லூசு மாதிரி வண்டிக்கு முத்தம் கொடுத்து… அதுக்கு பிகர் செட் பண்ணி கொடுத்துட்டு வர… உன்னை எல்லாம் எந்த கூமுட்டை இங்க வேலைக்கு செலக்ட் பண்ணானோ… அவனை விட புத்திசாலி ஒருத்தன் தான் என்னை செலெக்ட் பண்ணி இருப்பான்.’’ என்று நக்கலாய் நறுக்கு தெரித்தார் போன்று வார்த்தைகளை அள்ளித் தெளித்தாள். 
அமுதனின் மேலதிகாரி கூட அவன் முன் குரல் உயர்த்தி பேச அஞ்சுவார். அப்படியிருக்க இன்று பணியில் இணைய வந்த சிறு பெண் அனைவர் முன்னிலையிலும் அவனை ஒருமையில் அழைத்து பேசியது வெகு ஆழமாய் அவன் சுய மரியாதையை சீண்டிவிட்டது. 
அடக்க முடியாத கோபத்தை அவன் விரல் மடக்கி அடக்க யத்தனித்த நொடி, அந்த கோடையின் முதல் மழையை, வானம் அந்த கண்ணாடி கதவுகளில் சற்றே வெம்மையுடன் தூவிக் கொண்டிருந்தது. 
சலனமாகும்.     

Advertisement