Advertisement

அமுதனின் குடியிருப்பு, பதினைந்து நிமிடங்களில் வந்துவிட, காலத்தை சபித்த அமுதன் இசையை தேநீர் அருந்த தன் இல்லத்திற்கு அழைத்தான். இசை மறுக்க தான் நினைத்தாள். 
ஆனால் அவளுக்குமே யாருமற்ற தனிமையில், அமுதனின் கரத்தில் சில நொடிகளேனும் செலவழிக்க தோன்றியது. ஆக அமைதியாய் அமுதனின் சொல் கேட்டு அவன் வீட்டை நோக்கி நடந்தாள். 
கைகள் கோர்த்து, அமுதனின் வீடிருக்கும் முதல் தளத்தை அவர்கள் அடைந்த போது, விரியத் திறந்திருந்த வாசல் கதவே அவர்களை வரவேற்றது. அமுதன் குழப்பத்தோடு உள் நுழைய, இசையும் அவனை தொடர்ந்தாள். 
வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அருளை கண்டதும் இருவரும் ஒன்றாய் திகைத்தனர். விழிகள் சிவந்து அவர் அமர்ந்திருந்த கோலம், முதுமலையில் நடந்தது அவர் செவி எட்டிவிட்டது என்பதை அவர்களுக்கு அறிவித்தது. 
சூழலை எப்படி கையாள்வது எனப் புரியாமல் அமுதன் திகைத்து நிற்க, ‘நீ எனக்கு இல்லாமல் போய் விடுவாயா…?’ என்ற தாய்மையின் பயப்பார்வையை அமுதனை நோக்கி செலுத்தினார் அருள். 
அந்த விழிகளின் மொழியை இசை முற்றாக உணர்ந்தாள். உணர்ந்தவள் மென் நடை நடந்து, அவரின் அருகில் சென்று முட்டிப் போட்டு அமர்ந்தாள். அவர் அப்போதும் அதே உறைந்த நிலையில் இருந்தார். 
லேசாய் உயர்ந்து அவர் முன் நெற்றியில் தன் நெற்றியை வைத்தவள், “நீங்க அமுதன் மேல கோபப்படக் கூடாது ஆன்ட்டி. நான் தான் தப்பு செஞ்சேன். காட்ல இருக்க ஆபத்து புரியாம இறங்கி உள்ள போயிட்டேன். அமுதன் யாரோ ஒரு இசையை காப்பாத்துல. தன்னோட இணையான இசையை தான் தன் உயிரை பணயம் வச்சி காப்பாத்தினார். அவர் இல்லைனா நான் இல்ல… நான் இல்லைனா அவர் இல்லைன்னு நாங்க அப்ப தான் ஒருத்தரை ஒருத்தர் முழுசா புரிஞ்சிகிட்டோம் ஆன்ட்டி. 
நான் ஆரம்பத்துல அமுதனை சந்தேகப்பட்டு எல்லாம் பேசலை ஆன்ட்டி. கோவப்பட்டு பேசி இருக்கேன். அது எனக்கு இப்ப தான் புரியுது. என்ன தான் நான் பேசி இருந்தாலும், புருஷன் பொண்டாட்டி பிரச்னையை அவர் உங்ககிட்ட சொன்னது தப்பு. அதுக்கு அவருக்கு வேணா ஏதாச்சும் தண்டனை கொடுங்க. 
உங்க பையனுக்கு ரொம்ப ஆயுசு கெட்டி ஆன்ட்டி. ஏன்னா அவர் தான் இசையோட புருசன்னு சபிக்கப்பட்டவர் ஆச்சே. நான் இன்னும் அவரை தோசை கரண்டி, பூரிக் கட்டை, செட்டில் பேட் எதுலையும் அடிக்கவே இல்லை ஆன்ட்டி. என்னை ஒரே ஒரு முறை மன்னிச்சி லைப் புல்லா அவரை அடிக்க எனக்கு சான்ஸ் தருவீங்களா ப்ளீஸ். இனிமே என்னை தவிர எந்த ஆபத்தும் அவரை நெருங்காம நான் பாத்துகிறேன். ப்ளீஸ் ஆன்ட்டி…!’’ கண்களில் கண்ணீர் பள பளக்க தன்னிடம் மண்டி போட்டு மன்றாடும் சிறு பெண்ணின் காதலை அருள் வியந்து பார்த்தார். 
அதே நேரம் அவர் பெற்ற மகனோ, ‘அடிக் கிராதகி. இதுக்கு தான் என்னை பூ கொடுத்து கரெட் பண்ணியா…! அது மலர் இல்லடா மச்சி…! மலரஞ்சலி போல…!’ என தனக்கு எதிரே இல்லாத நண்பன் ரியாசுடன் மனதிற்குள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.    
சற்றும் நேரத்தை கடத்தாத அருள் தன் முன் நெற்றியை, மண்டியிட்டு அமர்ந்திருந்த இசையின் நெற்றியோடு மோதி, தன்னுடைய மன்னிப்பை வழங்கினார். 
அதன் பின் காட்சிகள் புயலின் வேகத்தில் மாறின. அன்றைக்கே இரண்டு குடும்பங்களும் அமர்ந்து பேசினர். இருதய ராஜிற்கு அமுதன் தன் மருமகனாய் வருவதில் அத்தனை மகிழ்ச்சி. 
இசை, அமுதனின் திருமணம் கிறிஸ்துவ மதப்படி தேவாலயத்திலும், அதன் பின் பிராமண முறைப்படி மண்டபத்திலும் ஏற்பாடானது. விஷயம் அறிந்தவர்கள் இருவரையும் ஓட்டி தள்ளினர். 
பிரகாஷ் வேறு தன் பங்கிற்கு, “அதுக்கு தான் அந்தப் புள்ளைய பாஞ்சி அடிச்சியா நீ..?’’ என்று அமுதனிடம் வம்பளந்து கொண்டிருந்தார். இசை, அமுதனின் திருமணம் உறுதியானதும், இசை அமுதனை கிடப்பில் விட்டுவிட்டு, அருளோடு ஊர் சுற்ற துவங்கினாள். 
அருள் அம்மாவும், சுரிதார் அணிந்து கொண்டு மகிழ்வாய் இசையின் வாகனத்தில் சுற்றி வந்தார். இருவரும், அணி, மணிகள் வாங்குவது முதல். அலங்கார அங்காடி செல்வது வரை ஒன்றாகவே சுற்றினர். 
அப்படி அவர்கள் வெளியே சுற்றி வரும் நாளில் வீட்டில் சமைத்து வைத்து அவர்களுக்காய் காத்திருப்பது அமுதனின் கடமையானது. தன் திருமண விடுப்பு முடிந்து பணியில் இணைந்த ரியாஸ், அமுதன் கூறிய செய்தி கேட்டு மகிழ்ந்தான். 
ஆனால் அதற்கு மாறாய் அமுதன் தகித்துக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் இசை அமுதனை நெருங்குவதே இல்லை. அமுதன் அலைபேசியில் வெட்கம் துறந்து கெஞ்சிக் கூட பார்த்துவிட்டான், ‘ஒரே ஒரு முத்தம் மட்டும் தா.’ என.
ஆனால் இசை தயை, தாட்சண்யமின்றி மறுத்துவிட்டாள். “நீங்க தான மேரேஜ்… அப்ரூவல் அது இதுன்னு பேசினீங்க. இனி கல்யாணம் வரைக்கும் டோன்ட் டச் தான். நானும் ஆன்ட்டியும் மெகந்தி டிசைன் பத்தி வாட்ஸ் அப்ல டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். நொய் நொன்னு எனக்கு சாட் பண்ணிட்டு இருக்காதீங்க.’’ என்று அவனை அப்ரூட்டாய் கட் செய்து விட்டாள்.     
    
அம்மாவும், மருமகளும் இணைந்து அமுதனை படுத்தும் பாட்டை உணர்ந்தவன், ‘நம்ம பொழப்பு தேவலை.’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். 
இப்படியாக இவர்கள் திருமண நாளும் விடிந்தது. தேவலாயத்தில் மோதிரம் மாற்றி, திருமண உறுதியெடுத்து, இருவரும் தம்பதிகளாயினர். முதல் வரிசையில் அமர்ந்து, இசையின் தாய் வழி சொந்தங்கள் கண்ணில் நீர் ஜனிக்க, அக்காட்சியை கண்டு வாழ்த்தினர். 
அன்றைக்கு இரவே மறுநாள் திருமணம் நடக்க வேண்டிய மண்டபத்திற்கு அனைவரும் சென்று தங்கினர். காலை விரைவாக திருமணத்திற்கு எழும்பி கிளம்ப வேண்டும் என்ற சிந்தையோடு, பயணித்த ரியாசின் பின்புறம் அமர்ந்திருந்த கவியின் கரம் என்றைக்கும் இல்லாத விதத்தில் ரியாசின் இடையில் ஊர்ந்தது. 
வீடு வருவதற்குள் அவன் சிந்தை எங்கெங்கோ பறந்தது. வீட்டை திறந்து, மீண்டும் பூட்டியதை மட்டுமே அவன் அறிவான். காலணிகள் திசைக்கு ஒன்றாக தெரித்த போது, விரல்கள் கவியின் உடைகளின் மீதிருந்தது. 
முற்றிலும் கலைந்து, களைத்த பின் ரியாஸ் கவியின் காதோரம், “என்ன இன்னைக்கு மேடம் என் மேல இரக்கம் காட்டிடீங்க.’’ என உல்லாசமாய் வினவினான். 
“நீங்க என்கிட்ட பேசக் காரணமே அமுதன், இசை காதல் தான். அவங்க காதல் கண்டிப்பா ஜெயிக்கும்னு மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது. அதான் அந்த நாளுக்காக நம்ம காதல் வாழ்கையை காத்திருக்க வச்சேன்.’’ என்று சொல்லியவள் மீண்டும் அவன் மார்பில் புதைய, ரியாஸ் தன் கை சேர்ந்த புதையலை அள்ளி அணைத்துக் கொண்டான். 
மறுநாள் காலை திருமணத்திற்கு வெகு தாமதமாக வந்த ரியாசை அமுதன் முறைத்துக் கொண்டிருந்தான். அப்போது தான் மாப்பிள்ளை காசி யாத்திரை முடிந்து, மாலை மாற்றும் சடங்கை துவங்கி இருந்தார்கள். 
இசைக்கு மாமன் என்ற தனி உறவு ஏதும் இல்லை. ஆகையால், அவளின் தாத்தாவும் தந்தையும் தான் அவளை தூக்குவதற்கு நின்றுக் கொண்டிருந்தனர். அந்த சடங்கின் விதிகளை கேட்ட பிரகாஷ், அவளை தூக்க தானும் முன் வந்து நின்றுக் கொண்டார். போதாக் குறைக்கு கவி ரியாசை இசையை தூக்க நிறுத்திவிட்டாள்.     
இப்போது அமுதனின் புறம், சேகரும் சில தோழர்களும் மட்டும் நின்றுக் கொண்டிருக்கக், யாரும் எதிர்பாரா வண்ணம், அருள் தன் மகனை தூக்க தான் முன் வந்து நின்றார். 
தாய் மாமன் தான் தூக்க வேண்டும் என்று அங்கிருந்தோர் சொல்லும் போது, “என் பையனுக்கு அம்மா, அப்பா மட்டும் இல்ல… மாமா, மச்சான் எல்லாம் நான் தான்.’’ என்று உறுதியாய் சொன்னவர், சேகரோடு தானும் இணைந்து, வளர்ந்த மகனை மீண்டும் ஒரு முறை தோளின் மேல் தூக்கினார். 
அவரின் அந்த செயலில் அங்கிருந்த அனைவர் கண்களிலும் நீர் திரண்டது. இசையை எத்தனை பேர் தூக்கினாலும், நெடிய அமுதனின் கழுத்தில் அவளால் மாலை சூட முடியவில்லை. 
இறுதியில் அவள் கண்களில் தவிப்பை பார்த்தவன், தானே தலை தாழ்த்தி அவள் கை மாலையை வாங்கிக் கொண்டான். இம்முறை அவள் கழுத்தை அவன் கைகளுக்கு எட்டாமல் உயர்த்த, தன் நீண்ட கரங்களால் வெகு எளிதாக பூமாலையை அவள் கழுத்தில் சூடினான். 
அதுவரை வெண்சங்காய் இருந்த வானம், கருநிறம் கொண்டு லேசாய் தூர துவங்கியது. அடுத்து பெண்ணையும், மாப்பிள்ளையையும் ஊஞ்சலாட்ட அழைத்து சென்ற பெண்கள், “பொண்ணு அரிசியா தின்னு இருப்பா போலியே. வானம் கருத்துண்டு போகுது. நன்னா மழை பெய்யும் போல.’’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 
அவர்கள் அறிய மாட்டார்கள் ஆதி முதல் அவர்கள் காதலின் சாட்சியமாய் இருந்த மழை, துளிகளால் அட்சதை தூவி  மண மக்களை வாழ்ந்த வந்ததை. 
ஊஞ்சல் வைபவம் முடிந்து, இருதயராஜின் மடியில் அமர்ந்திருந்த இசையின் கழுத்தில் அமுதன் மூன்று முடிச்சிட்டு, அவளை தன் இணையாய் ஏற்ற போது, இத்தனை நாள் மோதலின் வெம்மையில் தகிக்கும் விழிகள் குளிர்ந்து, காதலின் நேச மழையென அவன் விரல் சேர்ந்தது ஆனந்த விழி நீராய்.
சலனம் குளிர்ந்து காதல் மழையானது. 

Advertisement