Advertisement

சலனம் – 28 
காலை புலர்ந்தது என்பதை பறவைகள் கீதம் இசைத்து அறிவித்துக் கொண்டிருந்தன. அந்த இன்னிசை உறங்கிக் கொண்டிருந்த இசையின் செவியடைய அவள் சோம்பலாய் விழி திறந்தாள். 
திறந்த விழிகள் முதலில் கண்டது, படுக்கையின் அருகேயிருந்த நாற்காலியில் அமர்ந்து, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அமுதனை தான். அவன் விழிகளில் வருத்தத்தை கண்டவள் நெற்றி சுருங்க வேகமாய் எழுந்து அமர்ந்தாள். 
“எனாச்சு…’’ என்றாள் இசை ஒற்றை வார்த்தையாய். அமுதன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “சாரி’’ என்றான். 
நேற்றைய கூடல் அளித்த சோபை முகம் எங்கும் பரிமளிக்க, “எதுக்கு…?’’ என்று அவன் ஒற்றை சொல் வார்த்தைக்கு கேள்வி தொடுத்தாள் இசை.  
“இல்ல… நேத்து… என்ன இருந்தாலும் லீகலா மேரேஜ் பண்ணாம நான் உன்கிட்ட உரிமை எடுத்து இருக்க கூடாது. ரியலி சாரி. அதோட நேத்து…’’ என்றவன், அதற்கு மேல் எப்படி பேசுவது எனப் புரியாமல், எழுந்து நின்று அழுத்தமாய் தலையை கோதிக் கொண்டு நின்றான். 
இசை அவனையே பார்த்துக் கொண்டிருக்க, முகத்தை வேறு புறம் திருப்பியவன், “நாம நேத்து எந்த பாதுகாப்பு பத்தியும் யோசிக்கல. ஒருவேளை நீ நேத்து நடத்த விசயத்தலா கன்சீவ் ஆனா… அதை எப்படி நீ பேஸ் பண்ணுவ. ஐயம் ரியலி சாரி இசை. நான் நேத்து உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன்.’’ என்றான் வருத்தமாய். 
அவன் பேசியதை கேட்டதும், இசை கல கலத்து சிரித்தாள். அமுதன் அவள் ஏன் அப்படி சிரிக்கிறாள் எனப் புரியாமல் அவளை திரும்பிப் பார்க்க, அவனை ஊடுருவும் பார்வை பார்த்தவள், “நீங்க அருள் அம்மா பையன் தானே. ஆனா அவங்க தெளிவு ஏன் உங்ககிட்ட இல்ல…?’’ என அவனையே திருப்பிக் கேட்டாள். 
அமுதன் புரியாது விழிக்க, “முதல்ல உங்க ரூமுக்கு போய் குளிங்க. நானும் குளிச்சிட்டு வரேன். கீழ இருக்க தோட்டத்துல வெயிட் பண்ணுங்க. உங்க எல்லா கேள்விக்கும் அங்க வந்து பதில் சொல்றேன். சரியா…? இப்ப கிளம்புங்க.’’ என்றாள். 
அமுதன், சரி என்பதன் அடையாளமாய் தலையை உருட்டிவிட்டு அறை நீங்கினான். சரியாய் அரைமணி நேரம் கழித்து இசை தோட்டத்தை அடைந்தாள். அடர் நீல நிற சல்வார் அவள் கம்பீரத்தை இன்னும் அதிகப்படுத்தி காட்டியது. 
அமுதன் அவளுக்கு முன்பாக வந்து அங்கே காத்திருந்தான். தோட்டத்தின் உள்ளே ஒரு திறந்த வெளி உணவகம் இருக்க, இருவரும் முதலில் சூடாக தேநீர் அருந்தினர். 
சூடனா பானம் உடலில் வெம்மையை கூட்ட, கைகளை தேய்த்து கன்னத்தில் ஒற்றிக் கொண்ட இசை, “வாங்க அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாம்.’’ என சாலையில் இறங்கி நடக்க துவங்கினாள்.
அமுதன் அமைதியாய் அவளை பின் தொடர்ந்தான். சற்று நேரம் இருவரும் மெளனமாக நடந்தார்கள். மௌனத்தை தன் கேள்வியால் உடைத்தாள் இசை. 
“நீங்க உங்க வாழ்கையை யாருக்காக வாழ்றீங்க…?’’ எனக் கேட்டாள். இதற்கு உடனே எப்படி பதில் சொல்வது எனப் புரியாத அமுதன், “என்னோட சந்தோசத்துக்காக தான். அதுல என்ன சந்தேகம். ஆனா அதே சமயம் எங்க அம்மாவும் சந்தோசமா இருக்கணும்னு விரும்புவேன்.’’ என்றான். 
“சரி… நீங்க காலைல சொன்ன மாதிரி நான் இன்னும் பத்தே நாள்ல கன்சீவ் ஆயிட்டேன். ஆனாலும் உங்க அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கல. அப்போ என்ன செய்வீங்க…?’’ என்றாள். 
“அதெல்லாம் எங்க அம்மா எப்பவும் என்னோட ஆசைக்கு குறுக்க நிக்க மாட்டாங்க. ஒருவேளை அம்மா என்ன சமாதானம் சொல்லியும் ஒத்துக்கலைனாலும் கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன். எங்க அம்மா எனக்கு எவ்ளோ முக்கியமோ அவ்ளோ முக்கியம் நீயும் நம்மோட குழந்தையும்.’’ என்றான் உறுதியான குரலில். 
“சரி உங்க அம்மா சம்மதத்தை விடுங்க. எங்க வீட்டு ஆளுங்க யாரும் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. எனக்கு அவசர அவசரமா வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. இப்ப என்ன செய்வீங்க.’’ என்றாள். 
“என் பொண்டாட்டிக்கு உங்க அப்பா வேற மாப்பிள்ளை தேடுவாரா…? அதெப்படி நான் சும்மா இருப்பேன். வீடு பூந்து உன்னை தூக்குவேன். சட்டப்படி நீயும் மேஜர், நானும் மேஜர். லீகலா எல்லா பிரச்சனையையும் பேஸ் பண்ணுவேன். தேவைப்பட்டா இல்லீகலாவும் இறங்கி அடிப்பேன்.’’ இப்போது அவன் குரலில் சற்றே காரம் கூடி இருந்தது. 
“என் மேல உங்களுக்கு இத்தனை உரிமையும் எப்ப வந்துச்சு மிஸ்டர் அமுதன். நேத்து நாம ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே பெட் சேர் பண்ணோமே அப்போவா..?’’ இம்முறை அவளின் கேள்வி குண்டூசியாய் நகக் கண்ணில் ஏறியது. 
விதிர்த்து போன அமுதன் அவள் கண்களை நேரடியாய் பார்த்தான். அப்போதும் அதில் சிரிப்பிருந்தது. இசையின் மீதிருந்த பிடித்தம், பற்றாகி எப்போது உரிமையானது என்ற கேள்விக்கான பதிலை தன் மனதில் அமுதன் தேட துவங்கினான். 
அவள் மீதான காதலை வெளிப்படுத்தும் போது அவள் மீது பிடித்தமிருந்தது. அவள் வாழியல் சூழல் அறிந்து விலகிய போது அது பற்றானது. ஆனால் நேற்று யானையில் காலடியில் அவர் உயிர் சிதையலாம் என்ற நொடியில், தன்னுயிர் கொடுத்தேனும் அவளை காக்க வேண்டும் என்ற உந்துதல் பிறந்த பிறகே அமுதன் உணர்ந்தான், அவள் தன் உணர்வில் இரண்டறக் கலந்து ஒன்றானதை. 
அமுதன் பதில் பேசாமல் நிற்பதை கண்ட இசை, தன் கேள்விக்கு தானே பதில் சொல்ல துவங்கினாள். “நேத்து நான் இல்லாம வேற யார் இருந்து இருந்தாலும், நீங்க அவங்களை காப்பாத்த முயற்சி செஞ்சி இருப்பீங்க. ஆனா உங்க உயிரை பணயம் வச்சி இருப்பீங்கன்னு நிச்சயமா சொல்ல முடியாது இல்லையா.’’ என்றவள் தன் கரத்தை உயர்த்தி அவன் நெஞ்சின் மீது வைத்தாள். 
“நேத்து யானை என்னை மிதிக்க வந்தப்ப… எப்ப நீங்க என் மேல விழுந்தீங்களோ அந்த நொடி தான் நானும் உணர்ந்தேன். நம்ம ரெண்டு பேருக்கும் உண்டான பிணைப்பை. ஒரு பொண்ணு ஒரு பையனை பார்த்து எப்ப பயப்படணும் தெரியுமா..? அவ வாழ்கையில அவனோட பிணைப்பு பத்தி சந்தேகம் வரும் போது தான். இனி நானே விலகி போங்கன்னு சொன்னா கூட… உங்களால அது முடியாது. 
பெத்தவங்க சம்மதம், தாலி, மெட்டி இதெல்லாம் நம்ம காதலுக்கு நாம தரப் போற அங்கீகாரம். வெளி உலக அங்கீகாரம். கட்டாயம் நாம அதை கொடுக்கத் தான் போறோம். ஆனா நீங்களும் நானும் நம்மளை உணர்ந்த நாளை கொண்டாடணும்னு நான் விரும்புனேன். 
உடலை விட உன்னதம் மனசு. நேத்து எந்த சந்தேகமும் இல்லாம அதை நாம பரிமாறிட்டோம். ஆக உங்ககிட்ட எதை பகிர்ந்துக்கவும் எனக்கு எந்த தயக்கமும் இல்ல. 
நீங்களும் நானும் படிக்கிற சின்ன பசங்க இல்ல. அதுக்காக லவ் பண்ற எல்லாரும் இப்படி பண்றது சரின்னு நான் சொல்ல வரல. என் வாழ்கையில முடிவெடுக்குற அதிகாரம் எனக்கு இருக்கு. அதே போல உங்களுக்கும் இருக்கும்னு நம்புறேன். ஏன்னா நம்ம எடுக்குற முடிவுக்கு நாம தான் பொறுப்பு. யார் மேலையும் பழி போட்டு தப்பிக்க முடியாது இல்ல.’’ என்றுவிட்டு அமுதனை பார்த்து முறுவலித்தாள். 
அமுதனுக்குள் அதுவரை வியாபித்திருந்த குற்ற உணர்ச்சி விடை பெற, “சரி தான். எங்க அம்மவோட மருமகளாச்சே. இனி உன்கிட்டயும் நான் பாடம் கேட்டு தானே ஆகணும்.’’ என்றான் குறும்பாய். 
“ஆமா… நீங்க சரியான மக்கு ஸ்டூடன்ட் தான்.’’ என்றவள் வந்தவழி திரும்பி நடக்க, அவள் கரத்தோடு அழுத்தமாய் கரம் கோர்த்தவன், “ரியலி.’’ என்றான் சல்லாபமாய். அவன் கரம் கொடுத்த அழுத்தம் அவள் முக வர்ணத்தை மாற்றியது. 
அன்றைக்கும் ஊர் சுற்றும் படலம் அமோகமாய் முடிய, ஞாயிற்றுக் கிழமை மதியம் போல கிளம்பியவர்கள், சென்னையை அடையும் போது, திங்கள் பகலாகியிருந்தது. 
அனைவரும் அலுவகத்தில் இறக்கிவிடப்பட்டனர். குளித்து தயாராகி வர மற்றவர்கள் கிளம்ப, ரத்தோட் அலுவகத்தில் இருக்கும் தன்னுடைய பிரத்யேக அறைக்கு சென்றார். 
வண்டி நிறுத்தும் இடத்தில், இசை தன்னுடைய வண்டியை நோக்கி நடக்க, பின்னால் நடந்து கொண்டிருந்த அமுதன், “மேடம் இன்னைக்கும் என்னை ட்ராப் பண்ணுவாங்களா…?’’ என்றான் கேலிக் குரலில். 
அவன் தன்னோடு கழிக்கும் நேரத்தை நீட்டிக்க விரும்புகிறான் என்பதை உணர்ந்த இசை, “என்னவாம் சாருக்கு. உயிர் மேல இருந்த பயம் போயிருச்சா..?’’ என்றாள் கிண்டலாய். 
அமுதன் ரியாஸ் திருமணத்திற்கு கிளப்பும் போது, தன்னுடைய வாகனத்தை குடியிருப்பில் விட்டுவிட்டு, மகிழுந்தில் ரயில் நிலையத்தை அடைந்திருந்தான். ஆக தற்சமயம் அவன் வண்டி அங்கு இல்லை. அவனுக்கு வீட்டிற்கு செல்ல தேவையே இல்லை. பணியாளர்கள் தங்களை தூய்மை செய்து கொள்ள அங்கே வசதிகள் இருந்தன. 
ஆனாலும் இசையின் அருகாமைக்கு மனம் ஏங்கிக் கொண்டே இருந்தது. அந்த ஒற்றை இரவிற்கு பின் இருவருக்குமான தனிமை கிட்டவேயில்லை. பொது வெளியில் இருவரும் நாகரீகம் காத்தார்கள். 
ஆனால் ஒற்றை இரவில் படித்த பாடம், ரத்த நாளத்தில் குதியாட்டம் போட்டு, அவள் வாசம் தேடி அவனை அலைய வைத்தது. இசைக்கு அமுதனின் மனநிலை நன்றாக புரிந்தது. ஆனாலும் அவனை சுத்தலில் விடும் பொருட்டு, 
“எனக்கு ஆபிஸ்க்கு லேட் ஆயிடும் அமுதன். நீங்க கால் டாக்சி புக் பண்ணி போங்க. இல்ல இங்க ஆபிஸ்லையே ரெப்ரஷ் ஆயிடுங்க.’’ என்றவள் அவனை பார்ப்பதை தவிர்த்து தன் வண்டியை உயிர்பித்தாள். 
முகம் ஏமாற்றத்தில் சுருங்க, அமுதன் பதிலேதும் சொல்லாமல் திரும்பி நடந்தான். ஆனால் அவனை இடிப்பதை போல வண்டியை உரசிக் கொண்டு நிறுத்தியவள், “சீக்கிரம் ஏறுங்க. இல்ல விட்டுட்டு போயிருவேன்.’’ என்றாள் விளையாட்டாய். 
அமுதனுக்கு அந்த மழை இரவு நியாபகம் வர, “சரியா பழிவாங்குற.’’ என்றவன் பெரும் புன்னகையோடு ஏறி அமர்ந்து, உரிமையாய் அவள் தோளில் கரம் பதித்தான். 
அன்றைக்கு அவள் காட்டிய வேகம் உயிர் பயத்தை தந்தது என்றால், இன்றைக்கு அவளின் வேகம் காற்றில் பறக்கும் உற்சாகத்தை அவனுள் விதைத்தது. 
வேகமாய் செல்லும் இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து, கிழிக்கும் காற்றை முகத்தில் சுமந்தபடி, புற உலகை வேடிக்கை பார்த்து நகர்வதும் அலாதி சுகம் என்பதை அமுதன் அன்றைக்கு உணர்ந்தான். 

Advertisement