Advertisement

அவளின் மேலே தன் ஊடுருவும் பார்வையை நிலைக்க விட்டவர், “அந்த போட்டோவை மேகசின்ல வர யார் காரணம் தெரியுமா…?’’ என்று அருள் நிறுத்த, ரியாசின் இதயம் ஒரு நிமிடம் லயம் தப்பி துடித்தது. 
‘இவங்க பையன் காதலை சேர்த்து வைக்க கடைசியா என்னை பலி கொடுக்கப் போறாங்க போலையே…!’ என ரியாஸ் உள்ளுக்குள் அலறிக் கொண்டிருக்கும் போதே, “அந்த போட்டோ மேகசின்ல வர காரணம் நான் தான்” என்று உண்மையை போட்டு உடைத்தார். 
இசையும், அமுதனும் அதிர்ச்சியாக அவரை பார்க்க, ரியாஸ், ‘அப்பாடா…!’ என்றொரு நன்றிப் பார்வையை அவரை செலுத்தி வைத்தான். அமுதன் நொடியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்தான். 
அவனை ஒரு பார்த்தவர், “உனக்கு ஏற்கனவே சொல்லிட்டேன். நான் பேசி முடிக்கிற வரை…. நீ எந்த ரியாக்சனும் கொடுக்க கூடாதுன்னு.’’ என சொல்ல, அமுதன் அவரை முறைத்து பார்த்துக் கொண்டே அமர்ந்தான்.  
  
இசை உடைந்து போன குரலில், “ஏன் ஆன்ட்டி…!” என்றாள் ஆதங்கமாய். சற்று நேரம் ஒன்றும் பேசாமல், அமைதியாக சுற்றி இருந்த செடி கொடிகளை பார்த்தவர், “உன் லைபை உனக்கு திருப்பி கொடுக்க தான் அந்த காரியத்தை நான் செஞ்சேன்.’’ என்றார் அமைதியாய். 
‘அப்ப இந்தம்மா பையன் லவ்வை சேர்த்து வைக்க இதை செய்யலையா..?’ என்ற புது குழப்பத்துடன் ரியாஸ் அருளை பார்க்க, அமுதனும், இசையுமே அவரை புரியாமல் பார்த்திருந்தனர். 
“ஆறு மாசத்துக்கு முன்னாடி ரியாஸ் வந்து என்கிட்ட அமுதனோடு காதல் விசயத்தை சொன்னப்ப… எந்த மகனுக்கு எனக்கும் நடுவுல எந்த ரகசியமும் இல்லைன்னு பெருமிதமா நினச்சிட்டு இருந்தேனோ… அந்த மகன் தாங்க முடியாத வலியை தாங்கிக்கிட்டு வெளிநாடு போய் இருக்கான்னு தெரிஞ்சப்ப எனக்கு முதல்ல உன் மேல கண் மண் தெரியாத ஆத்திரம் தான் வந்தது.
என் பையனை விட இந்த உலகத்துல நல்லவன் உனக்கு யார் கிடைப்பா அப்படின்னு. நானும் ஒரு சராசரி அம்மா தான் இல்லையா. ஆனா அதுக்கு அப்புறம் தான் ரியாஸ் உன்ன பத்தி சொன்ன விஷயம் எல்லாம் என் மண்டைக்குள்ள ஏறுச்சு. 
நீ எங்க வீட்டுக்கு வந்தப்பவே உன்ன கவனிச்சேன். நீ உனக்குள்ள கொஞ்சம் ஒடுங்கிப் போற ரகமா இருந்த. ரியாஸ் உங்க அம்மா கதையோட டைரி பத்தி எல்லாம் சொல்லி முடிக்கவும், 
அம்மா இல்லாம, அப்பா இருந்தும் இல்லாம, தன்னோட சின்ன சின்ன செயல்களுக்கு கூட எங்க யாராவது தன்னை அவ அம்மாவோட ஒப்பிட்டு பேசிடுவாங்களோன்னு பயந்து பயந்து வளர்ந்த பாவப்பட்ட குட்டிப் பொண்ணு தான் என் கண் முன்னாடி வந்து நின்னா. 
அவளுக்கு நான் உணர்த்தணும்னு நினச்சேன். இந்த வாழ்க்கை ரொம்ப அற்புதமானது. அதை கொண்டாடி வாழணும். மத்தவங்க பார்வையை பத்தி கவலைப்படாம தனக்கு கிடைச்சி இருக்க இந்த ஒரு வாழ்கையை அவ சந்தோசமா தன்னோட விருப்பபடி வாழணும்னு ஆசைப்பட்டேன். 
அப்ப தான் உங்க போட்டோ எனக்கு கிடைச்சது. நான் உங்க ரெண்டு பேர் தனி தனி போட்டோவை மார்பிங் பண்ண தான் நீங்க டூர் வந்தப்ப எடுத்த போட்டோவை ரியாஸ்கிட்ட கேட்டேன். 
ஆனா நாங்க எதிர்பாரா விதமா நீங்க நெருக்காமா இருக்க போட்டோஸ் கிடைச்சது. நீ நினைக்குற மாதிரி அது என் பையன் வேலை இல்லை. உங்களோட டூர் வந்த பையன், எங்க பின் வீட்டு திட்டுல மறந்து ஆன் பண்ணி வச்சிட்டு போன கேமரா தான் உங்களை அப்படி ரெகார்ட் பண்ணி இருக்கு. 
நாங்க அதை எடிட் பண்ணி போட்டோ செஞ்சோம். அந்த விசயத்தை பண்றதுக்கு முன்னாடி, வாழ்கையில நிறைய கேசை நேர்ல பார்த்த வக்கீலா நான் என்னை நிறைய சுய பரிசோதனை செஞ்சுகிட்டேன். 
சிலருக்கு அளவுக்கு அதிகமான பய வியாதி இருக்கும் போது, அவங்க எந்த பொருளை இல்ல எந்த சூழலை பார்த்து பயப்படுறாங்களோ அந்த சூழலுக்குள்ள அவங்களை வெளியேற முடியாத படி நிறுத்தி வைக்கிறது. 
வேற வழி இல்லாம அவங்க நிதர்சனத்தை ஏத்துக்கும் போது அந்த அளவுக்கு  அதிகமான பய வியாதி அதாவது போபியா அவங்களை விட்டு போய் இருக்கும். 
நீயும் மனசளவுல ஒரு போபியால தான் இருந்த இசை. உன் கேரக்டர் நேம் எந்த காரணத்துக்காகவும் ஸ்பாயில் ஆயிட கூடாதுன்னு ஒரு வித சமூக போபியால இருந்த. 
உன்னை அதுல இருந்து வெளி கொண்டு வர தான் நான் அந்த போட்டோவை மேகசினல வர வச்சேன். அதுக்கு அப்புறம் நீ என்ன செஞ்ச கொஞ்சம் யோசிச்சு பாரு. 
உன்னை சுத்தி இருந்த அத்தனை பேரும் உன்னை எப்படி பார்த்தாலும், எப்படி பேசினாலும் நீ அதுல இருந்து மீண்டு நின்ன. சொல்லப் போனா, அந்த நேரத்துல ரொம்ப தெளிவா முடிவெடுத்து உங்க அப்பாவை மறுபடி உன் வாழ்கையில ஏத்துகிட்ட. 
இது தான் உண்மையான வாழ்க்கை இசை. இங்க யாரும் இன்னொருந்தங்க ஆசைக்காக, கனவுக்காக எல்லாம் வாழ முடியாது. அவங்க அவங்களுக்கு கிடைக்குறது ஒரு வாழ்க்கை. அதை அவங்க ஆசைப்படுற மாதிரி தான் வாழணும். 
என்ன அதெல்லாம் அடுத்த மனுசனை நோகடிக்காத, வருத்தப்படுத்தாத விசயமா இருக்கணும். அவ்ளோ தான். உன் போட்டோ பத்திரிக்கையில வந்ததை பார்த்ததும், ஒரு வருசமா உனக்கு பேசி வச்சிருந்த மாப்பிள்ளை என்ன செஞ்சான். 
ஆளை விடுங்கடா சாமின்னு ஓடிப் போயிட்டான். இத்தனைக்கும் அவன் யூ.எஸ்ல இருந்தப்ப ஒரு மராட்டிப் பொண்ணோட லிவிங் ரிலேசன்ல இருந்தவன். அவளுக்குமே இப்ப வேற மேரேஜ் ஆயாச்சு. அது வேற விஷயம். 
இது என் பிரண்ட் மூலமா எனக்கு அப்புறம் தெரிய வந்தது. விஷயம் தெரிஞ்சதும் உண்மையா என்ன நடந்ததுன்னு உன்கிட்ட வந்து கேட்டானா அவன். அவ்ளோ தான் நம்ம சமூகம், ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் கிழிச்சி வச்சி இருக்க கோடு. 
பத்திரிக்கை விஷயம் முடிஞ்ச பிறகு ஒரு ரெண்டு நாள் கழிச்சி, உங்க அப்பாவை நான் மறுபடி சந்திச்சு பேசினேன். உனக்கு இருக்க எல்லா பிரச்சனையும். உன்னோட சோசியல் போபியாவையும் சேர்த்து தான். 
இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு பார்க்காத. ஒரு ப்ரைவேட் டிடக்டிவ் ஏஜென்ட் மூலமா உன் வாழ்கையில நடந்த நிறைய விசயத்தை தெரிஞ்சிகிட்டன். 
அதுக்கு அப்புறம் உங்க காதலை பத்தியும் பேசினேன். கண்டிப்பா அமுதன் திரும்ப வந்து நீங்க ரெண்டு பேரும் மறுபடி சந்திச்சிகிட்டா எந்த தடையும் இல்லாத சூழல்ல மறுபடி உங்க காதலை ரெண்டு பேரும் உணர்வீங்க. கண்டிப்பா அதை பகிர்ந்துபீங்கன்னு நம்புனேன். 
அப்படி எந்த கட்டாயமும் இல்லாம மறுபடி நீங்க லவ் பண்ணா உங்களை பெரியவங்களா நாங்க சேர்த்து வைக்கணும்னு அன்னைக்கு பேசி முடிச்சோம். 
உங்க அப்பாவுக்கு ஒரே குற்ற உணர்ச்சி இசை. உன்னோட பிரச்சனை எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் ஒரு அப்பாவா நீ ஆசைப்பட்ட எல்லாத்தையும் உன் வாழ்கையில கொடுக்கணும்னு முடிவு செஞ்சார். 
அது தான் நான் பேசினதும், அமுதனை பத்தி விசாரிச்சு முடிச்சிட்டு, உங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னார். ஆனா எனக்கு இப்ப என்ன பிரச்சனைனா நீங்க ரெண்டு பேரும் உண்மையா காதலிக்கவே இல்ல…!’’ அருள் அவ்வார்த்தையை உதிர்த்ததும், ஒன்றே போல, “ஆன்ட்டி” என்றும், “அம்மா..” என்றும் அமுதனும், இசையும் குரல் எழுப்பினர்.
“இப்ப சத்தம் கொடுத்து என்ன செய்ய. ஏன் இசை என் பையனை பத்தி உனக்கு தெரியாதா…? இல்ல அவனை பத்தி முழுசா தெரிஞ்சிக்காமையே காதலிச்சியா…? உனக்கு உன் காதல் மேல, நீ காதலிக்கிற அமுதன் மேல நம்பிக்கை இருந்து இருந்தா உங்க போட்டோ மேகசின்ல வந்த அன்னைக்கே நீ நேரா அவனுக்கு போன் பண்ணி இருப்ப. இப்படி ஒரு விசயம் நடந்து இருக்கு அமுதன்னு. 
சரி அப்ப தான் கேக்கல. அவனை நேர்ல பார்த்த இல்ல. அப்பவாச்சும் நேர்ல நிறுத்தி நீ இப்படி செஞ்சியான்னு கேட்டு இருக்கணும். அதை விட்டுட்டு உன் போட்டோ வர அவன் தான் காரணம்னு இல்லாத பொல்லாத கேள்வியா கேட்டு அவன் மனசை சல்லடையா துளைச்சி இருக்க.’’ எனவும் இசை மீண்டும் தலை குனிந்து கொண்டாள். 
இம்முறை அமுதனை நோக்கி திரும்பியவர், “நீ மட்டும் என்னடா…? பெரிய ஒழுங்கா…? ஒரு பொண்ணு பிரச்சனைன்னு ஒதுங்கிப் போனா என்ன ஏதுன்னு பார்ப்போம்னு துணிச்சலா நிக்கிறதை  விட்டுட்டு எப்படியோ போன்னு அம்போன்னு விட்டுட்டு போவியா..? 
உன்னை பொறுக்கி ரேஞ்சுக்கு அவளுக்கு டார்ச்சர் தர சொல்லல. அட்லீஸ்ட் யார்கிட்டயாவது பேசுவோம். இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு பிடிப்போம்னு தோணுச்சா உனக்கு. 
இதுல பெரிய தியாகி மாதிரி ரியாஸ்கிட்ட டயலாக் வேற. எங்க அம்மாவுக்காக நான் என் வாழ்கையை வாழ்ந்து தான் ஆகணும்னு. நீ என்னடா நினச்சிட்டு இருக்க. அம்மா நமக்காக தான் வேற கல்யாணம் பண்ணிக்காம தனியா நின்னுட்டா அப்படின்னா…? 
அவளுக்காக நாம அவ சொல்ற பொண்ணை கல்யாணம் செஞ்சிகிட்டு குடும்பம் குழந்தைன்னு ஒரு போலியான வாழ்கையை வாழணும்னு முடிவு எடுத்த இல்ல. 
இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நான் உனக்காக எந்த தியாகமும் செய்யல. நான் எனக்கு பிடிச்ச வகையில என் வாழ்கையை கொண்டாடி வாழ்ந்தேன். அவ்ளோ தான். கூட உன்னையும் வளர்ந்தேன். 
இதுவரைக்கும் வசந்த் கூட பகிர்ந்துகிட்ட எதையும் வேற யார் கூடவும் ஷேர் பண்ண முடியும்னு தோணல. ஆனா இனி எப்பவும் அந்த எண்ணமே தோணாதுன்னு சொல்ல முடியாது. 
எனக்கு இப்ப 44 வயசாகுது. ஒரு வேளை அறுபது வயசுல கூட என் மனசுக்கு பிடிச்ச யாரையாவது பார்த்தா நான் எதைப்பத்தியும் யோசிக்கமா அவர் கையை பிடிச்சிட்டு, தோள்ல சாஞ்சிட்டு போயிட்டே இருப்பேன். 
நீ என் குழந்தைடா. உனக்கு இந்த உலகம் புரியுற வரை உன்னை பாதுகாக்கணும். சொல்லிக் கொடுக்கணும். தாய் பறவை மாதிரி. உன்னோட சிறகு நீளமா வளர்ந்து நீ பறக்க தொடங்கிட்டா, நான் நீ பறக்குறதை பார்த்து ரசிக்கணும். 
அதை விட்டுட்டு இவ்ளோ தாழ்வா பற… இவ்ளோ வேகம் போதும்… இந்த மரத்துல உக்காரு… அபப்டின்னு உன்னை டைரக்ட் பண்ணிட்டு இருக்க கூடாது. உன் அம்மாவா நான் அதை எப்பவும் செய்ய மாட்டேன். 
இசைக்கு இன்னும் மேரேஜ் ஆகலைன்னு தெரிஞ்ச பிறகாவாது நீ அவளை பத்தி என்கிட்ட வாய திறப்பன்னு பார்த்தேன். நீ என்னவோ தியாகி மாதிரி நான் சொல்ற பொண்ணுக்கு மண்டையை ஆட்டிட்டு… கோவில்ல இசையை பார்த்ததும் அப்படி உருகி நின்ன. 
சரி பையனை கொஞ்சம் சுத்தல்ல விட்டுட்டு, அப்புறம் உண்மையை சொல்லுவோம்னு நினச்சிட்டு இருந்தேன். ஆனா….’’ என்றவரின் வார்த்தைகள் தேங்க இப்போது மகன் அவர் அருகில் வந்து நின்றான். 
“மா… சாரிமா…!’’ என்ற அமுதனின் குரல் உடைய, இசையும் கர கரத்த குரலில், “சாரி ஆன்ட்டி…!’’ என்றாள். ஆனால் அவர்களின் வார்த்தையை உணரும் நிலையில் அருள் இல்லை. 
“போதும்… காதல்னா உண்மை, நம்பிக்கை, விட்டுக் கொடுக்காத தன்மை… அட்லீஸ்ட் கொஞ்சம் புரிதலாவது இருக்கனும். உங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல இது எதுவும் இருக்க மாதிரி எனக்கு தெரியல. பரஸ்பர நம்பிக்கை இல்லாத எந்த உறவும் ஒரு வருஷம் இல்ல… ஒரு நாள் கூட நீடிக்காது.
இனி அமுதன் உன் லைபை டிஸ்ட்ரப் பண்ண மாட்டான். இனி நீயும் அவனை டிஸ்ட்ரப் பண்ண கூடாது. போதும் எல்லாமே. அமுதன் விசயத்துல நான் அடிக்கடி சாதாரண அம்மா ஆயிடுவேன். என் பையனை நீ எப்படி அப்படி பேசலாம்னு சண்டை போட தான் வந்தேன்.
உன்னோட மனசு எனக்கு புரியாம இல்ல. ஆனாலும் இப்படியான்னு ஒரு வார்த்தை கேக்காம… இப்படிதான்னு நீயா நிறைய பேசிட்ட. இனி உன் முகத்தை பார்த்தாலே நீ பேசின பேச்சு தான் எனக்கு நியாபகம் வரும். என் அமுதன் அப்படிபட்ட ஆள் கிடையாது. அதை உன்கிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன். உன் மனசு நோகுற மாதிரி ஏதாவது பேசி இருந்தா… மறந்துடு. நான் வரேன்.’’ என்றவர் அமுதனின் கை பிடித்து பரபரவென்று இழுத்து செல்ல, அவர்கள் பின்னோடு ரியாஸ் ஏறக்குறைய ஓடினான். 
இசை நீர் தேங்கிய விழிகளோடு, தாயின் இழுப்பிற்கு உடன் பட்டு தன்னை திரும்பி பார்த்தபடி நடக்கும், அமுதனை இமைக்காது பார்த்திருந்தாள். 
‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்ட வடு.’ 
என்ற வள்ளுவனின் வாக்கு ஏனோ அந்த நேரத்தில் பொற்றில் அடித்தார் போன்று அவள் நினைவில் வந்து நின்றது.   
சலனமாகும். 

Advertisement