Advertisement

சலனம் – 25 
இசையின் குடும்பம் உற்சாகமாய் விளையாட்டில் ஆழ்ந்திருக்க, வாயில் மணி அழைத்து அவர்களை கலைத்தது. கணவன், மற்றும் மகள்களின் அருகே அமர்ந்து அவர்களை சுவாரசியமாய்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, ஷாலினி யார் வந்திருப்பது என்று காண எழுந்து சென்றார். 
ஆனால் அப்பொழுதும் மற்ற நால்வரும் தங்கள் கவனத்தை வேறு எதிலும் திசை திருப்பமாமல் சுண்டாட்ட பலகையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். 
வெளிக் கதவை திறந்த ஷாலினி அங்கே நின்றிருந்த அருள், அமுதன் மற்றும் ரியாசை கண்டு நெற்றியை சுருக்கினார். ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சந்திப்பு அத்தனை அழுத்தமாய் அவர் மூளையின் நரம்புகளில் சென்று அமரவில்லை. 
அவர் நெற்றியை சுருக்குவதை கண்ட அருள், குரலை முடிந்தவரை இயல்பாக்கி, “நாங்க இசையை பார்க்க வந்திருக்கோம். என்னை நியாபகம் இல்லைங்களா…? ஆறு மாசம் முன்னாடி தூத்துக்குடிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தேனே…’’ என்று தன் விளக்கம் கொடுத்தார். 
அவரின் உருவம் அத்தனை சீக்கிரம் நினைவடுக்கில் தூர்வாரப்படவில்லை என்றாலும், ‘இசையை காண வந்திருக்கிறோம்’ என்ற ஒற்றை  வார்த்தையில், இதழ்களில் புன்னகையை தேக்கிய ஷாலினி அவர்களை வீட்டிற்குள் அனுமதித்தார்.
அவர்கள் உள் கூடம் நோக்கி நடக்க, “இசை…! உன்ன தான் பார்க்க வந்து இருக்காங்க.’’ என்று அறிவித்தபடி ஷாலினி முன்னாள் நடந்தார். 
‘என்னையா…?’ என்று எண்ணியபடி சுண்டாட்டப் பலகையில் இருந்து முகத்தை நிமிர்த்தியவளின்  பார்வையில் முதலில் விழுந்தது, ஊதா நிற பருத்தி புடவையில், உயர கொண்டையிட்ட தோரணையில் கம்பீரமாக நடந்து வந்த அருள் தான். 
அவரை கண்டதும், “வாங்க ஆன்ட்டி…!’’ என்று உற்சாகமாக எழுந்து நின்றவள், அவரின் பின்னால் வந்த அமுதனை கண்டதும் முகம் மாற அப்படியே தேங்கி நின்றாள். 
அருள் அம்மாவை கண்டதும், மகளை விட ராஜின் முகம் பிரகாசமானது. எழுந்து நின்றவர், “வாங்க மேடம். உங்க சன் இண்டியா வந்தாச்சா…?” என்ற கேள்வியோடு அவரின் பின்னால் நின்று கொண்டிருந்த அமுதனின் மீது, வாஞ்சையான பார்வையை செலுத்தினார். 
ரியாஸ், ‘என்னங்கடா நடக்குது இங்க…?’ என்பதை போல மற்றவர்களின் முகபாவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். குழப்பமாய் அமர்ந்திருந்த மற்ற இரு மகள்களை பார்த்தவர், “போர்ட் எடுத்து உள்ள வையுங்கம்மா. அப்புறம் விளையாடலாம்.’’ என்று சொல்ல, ஆட்டம் முக்கியமான கட்டத்தில் இருந்தும், அவர் முகத்தில் தெரிந்த தோரணையில் மகள்கள் கூடத்தில் இருந்த பலகையை இருவரும் ஆளுக்கு ஒருபுறம் கைபிடித்து தங்கள் அறைக்கு கொண்டு சென்றனர். 
“உக்காருங்க மேடம். ஷாலு எல்லாருக்கும் காபி போடுமா. அமுதன் வாங்க இந்தப் பக்கம் வந்து உக்காருங்க.” என்றவர் அமுதனை தன் அருகில் அமர்த்திக் கொண்டார். 
ரியாஸ் தன்னை யாரும் இப்போதைக்கு கண்டு கொள்ளப் போவதில்லை என்ற முடிவில் தானே தனித்திருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தான். 
வந்தவர்களின் முகத்தில் என்ன ஊகித்தாரோ, “இசை நீ மம்மிக்கு போய் ஹெல்ப் பண்ணு.’’ என்று மூத்த மகளை சமையல் அறைக்கு அனுப்பியவர், மலர்ந்த முகத்துடன் அருளை நோக்கி, “சொல்லுங்க மேடம். நல்ல விஷயம் பேச தானே வந்து இருக்கீங்க. தம்பிகிட்ட எல்லாம் சொல்லிடீங்களா…?’’ என்றார். 
ராஜ் அப்படிக் கேட்கவும், ரியாஸ் ஒன்றும் புரியாமல் மனதிற்குள் தலையை பிய்த்து கொள்ள, அமுதனோ, ‘அம்மாவுக்கு இவரை தெரியுமா..? இவர் இப்ப எந்த நல்ல விசயத்தை பத்தி அம்மாகிட்ட கேட்டுகிட்டு இருக்கார்.’ என தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தான்.  
ஒரு பெருமூச்சை வெளியேற்றிய அருள், “நாம நினச்ச மாதிரி  எதுவும் நடக்கலை சார். எனக்கு இசை கூட கொஞ்சம் தனியா பேசணும். உங்க அனுமதி கிடைக்குமா…?’’ என்றார் தன்மையாய். 
அவரின் எதிர்மறை பதிலில் உள்ளம் சற்றே சுணங்கினாலும், “கண்டிப்பா மேடம். உங்களுக்கு இல்லாத உரிமையா…? எம் பொண்ணு எனக்கு திரும்ப கிடைக்க நீங்க தான் காராணம். மேல மொட்டை மாடி ரொம்ப அமைதியா இருக்கும். நீங்க போங்க மேடம். நான் இசையை அனுப்பி வைக்கிறேன்.’’ என்றார் திடமான குரலில். 
“ரொம்ப தாங்க்ஸ் சார்.’’ என்று ராஜிடம் மொழிந்தவர், “அமுதா என் கூட வா.’’ என்று மகனை அழைத்து கொண்டு, மொட்டை மாடிக்கும் செல்லும் படிகளை நோக்கி நடக்க துவங்கினார். 
அங்கே அமர்ந்திருந்த ரியாசோ, ‘அம்மாவுக்கும், பிள்ளைக்கும் கழட்டிவிட்டுட்டு போறாதே பொழப்பா போச்சு. இவர் காபி காபின்னு கூவிட்டு இருந்தாரே அதையாச்சும் இந்த வீட்ல கண்ல காட்டுவாங்களா…? இவங்களை நம்பி வந்தா… ரசகுண்டு பின்னாடி போய் ஏமாந்த அப்புசாமி தாத்தா கதி தான் போல.’ 
அவன் மனதிற்குள் அவர்களை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, இப்போதைக்கு மீண்டும் வீட்டிற்குள் எதையும் விளையாட முடியாது என்று உணர்ந்த இரட்டையர்கள், தங்கள் பூப்பந்து மட்டையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். 
அங்கே நிராதரவாய் அமர்ந்திருந்த ரியாசை கண்டவர்கள், “ஹாய் அங்கிள்…! செட்டில் விளையாடலாம் வறீங்களா…?” என்று அவனை அழைத்தனர். 
அவர்களின் ‘அங்கிள்’ என்ற விளிப்பை கேட்டவன், படக்கென்று தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். அது என்னவோ இதே பொருள் தரும் தமிழ் வார்த்தை காதில் தேனாக பாயும் போது, இந்த வார்த்தை மட்டும் தொண்டைக் குழியில் பால்டாயிலை கவிழ்த்த உணர்வை அவனுக்குள் தோற்றுவித்தது. 
அவர்களை பார்த்து பெயருக்கு சிரித்து வைத்தவன், “எனக்கு இன்னும் அவ்ளோலாம் வயசாகலமா…” என்றான். அவன் வெளிப்படுத்திய, குரல் மற்றும் உடல் மொழியில் ராஜோடு, அங்கு நின்றுக் கொண்டிருந்த இரட்டையர் இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள். 
“ஹா… ஹா…! நல்லா வடிவேல் மாதிரி ரியாக்சன் கொடுக்குறீங்க. சாரி அண்ணா…! சரி விளையாடலாம் வறீங்களா…? நாங்க ரெண்டு பேர் மட்டும் விளையாண்டா ரெண்டு நிமிசத்துல ஒரு சண்டை வந்து கேம் ஸ்பாயில் ஆகும்.’’ என்றாள் ஜெனி. 
‘அங்கிளுக்கு அண்ணனே தேவலாம்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன், “ஓ… விளையாடலாமே. ஆனா நான் காபி குடிச்சிட்டு தான் வருவேன்.ஓகே.’’ என்றான். 
மீண்டும் அவன் குரல் பாவனையில் சிரித்தவர்கள், “ஓகே அண்ணா. காபி குடிச்சிட்டே வாங்க. நாங்க வெளிய நெட் கட்றோம்.’’ என்றுவிட்டு அவர்கள் வெளியே ஓடிவிட, ராஜ் ரியாசிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார். 
அதே நேரம் இசை காபி கோப்பைகளோடு சமையல் அறையிலிருந்து வெளிப்பட்டாள். வந்தவள், அருளையும், அமுதையும்  காணாது திகைக்க, மகளின் முகம் வெளிபடுத்தும் உணர்வுகளை அமைதியாய் உள்வாங்கிக் கொண்டார் ரியாஸ். 
“இசை…! எங்களுக்கு காபியை கொடுத்துட்டு மீதி கப்பை மேல எடுத்துட்டு போ. மாடித் தோட்டத்தை சுத்தி பார்க்க போனாங்க. போய் அவங்களோட நின்னு நிதானமா பேசிட்டு வா.’’ என ராஜ் சொல்லவும், இசை அமைதியாய் அவர்களின் அருகில் வந்து காபி கோப்பைகளை கொடுத்துவிட்டு, மாடியேற துவங்கினாள். 
‘என்னா நடிப்புடா சாமி’ என ரியாஸ் ராஜை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, சமையலறை வாயிலில் நின்றுக் கொண்டிருந்த ஷாலினி, ஒன்றும் புரியாத குழப்பப் பார்வையை கணவனை நோக்கி செலுத்தினார். 
‘ஒன்றும் இல்லை..’ என்பதாய் விழி திறந்து மூடி மனையாளுக்கு ஆறுதல் அளித்தவர், “ஏதாச்சும் ஈஸியா டேஸ்டியா சமை ஷாலு. அவங்களை சாப்பிட வச்சி தான் அனுப்பனும்.’’ என்றபடி சமையல் அறை நோக்கி நடந்தார். 
‘சோறு… சோறு..’ என்று ரியாசின் உள்ளம் கூச்சலிட, ‘மேல என்ன நடக்குதோ’ என அறிவு கவலைப்பட, அறிவை ஒதுக்கி வைத்து  விட்டு, கூத்தாடும் உள்ளத்தோடு காபியை பருகி முடித்த ரியாஸ், அடுத்து குமரிகளோடு பூப்பந்தாட வெளி வாசல் நோக்கி நடந்தான். 
ஆனால், அப்படியெல்லாம் உன்னை விடுவேனா என்பதை போல அமுதன் நான்காம் படி மீது நின்றிருந்தவன், “ஒழுங்கா மேல வா…’’ என்று அடிக்குரலில் மிரட்டி இவனையும் கையோடு மேலே இழுத்து சென்றான். 
நால்வரும் கூடாரம் அமைத்து நாற்காலிகள் இடப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தனர். சுற்றிலும், பல வகை பூச்செடிகள், மற்றும் காய்கறிகள் பூத்து குலுங்க அந்த இடம் ஒரு அழகிய சோலையை ஒத்திருந்தது. 
இசை சுமந்து வந்த காபி கோப்பைகள் சீண்டப்படமால் குளிர்ந்து கொண்டிருந்தது. சற்று நேரம் அமைதியாயிருந்த அருள் தன் குரலை கனைத்துக் கொண்டு, இசையை நோக்கி, “நேத்து அமுதன்கிட்ட என்ன கேட்ட இசை…?’’ என்றார் நேரடியாய். 
நேற்று அவனை தூக்கி எறிந்து பேசிய இசையால், அருள் அம்மாவிடம் தான் பேசிய சொற்களை வாய் திறந்து சொல்ல கூட முடியவில்லை. அவள் ஏற்கனவே லேசான குற்ற உணர்ச்சியில் இருக்க, இப்போது அருளே நேரடியாக கிளம்பி வந்து நிற்கவும், நிரம்பவே குன்றிப் போனாள். 
அவளின் முக மாற்றங்கள் உணர்ந்த அமுதன், “மா… விடு. ஏதோ கோபத்துல பேசிட்டாங்க. எந்தப் பொண்ணா இருந்தாலும் அப்படி கோபம் வரத் தானே செய்யும். இப்ப எதுக்கு இங்க வந்து இவங்களை கேள்வி கேட்டுட்டு இருக்க. வா வீட்டுக்கு போகலாம்.’’ என்று அவரை அங்கிருந்து கிளப்ப முயன்றான். 
என்னவோ இசை தலை தாழ்த்தி அமர்ந்திருபப்தை அவனால் அனுமதிக்கவே முடியவில்லை. அது தன்னை பெற்ற தாயின் முன்னிலையில் என்றாலும் கூட. 
உடனே அருளுக்கு எங்கிருந்து தான் அத்தனை ஆவேசம் வந்ததோ வேகமாய் அவன் புறம் திரும்பியவர், “ஒரு வாரத்தை… நீ ஒரு வார்த்தை பேசக் கூடாது அமுதன். இசை உன்கிட்ட வேண்டாம்னு சொன்னதும்… ஜாலியா பையை தூக்கிட்டு பாரினுக்கு கிளம்பினவன் தானே நீ. உன் காதலுக்காக ஒரு சின்ன கல்லை நகர்தினியா நீ. நான் பேசி முடிக்கிற வரைக்கும் நீ வாயையே திறக்க கூடாது.’ என்று கர்ஜித்தார். 
தாயின் குரலை இத்தனை கோபமாக அமுதன் கேட்டதே இல்லை. ஆக அவன் தன்னைப் போல அடங்கினான். அதுவரை விளையாட்டு தனமாக இருந்த ரியாஸ் கூட, அருளின் கோபத்தில், ‘இனி என்ன ஆகுமோ’ என பீதியாக நண்பனை பார்த்து வைத்தான். 
மகன் அடங்கவும், அருள் நிதானமாக தன் பார்வையை இசையை நோக்கி திருப்பினார். “என்னை நிமிர்ந்து பார் இசை. தப்பே செஞ்சாலும் அதை எதிர் கொள்ளணும். இப்படி தலை எல்லாம் குனியக் கூடாது.’’ என்றார் உறுதியான குரலில். 
அவரின் அந்த குரலில் இசை அவரை நிமிர்ந்து பார்த்தார். அவர் அப்படி பார்க்கவும், “சொல்லு…! என் பையனை என்ன கேட்ட நீ நேத்து…?’’ என்றார். 
குரலில் தயக்கம் வந்து அமர்ந்து கொண்டாலும், இசை இம்முறை தெளிவாக பதில் பேச துவங்கினாள். “அவர் தான் எங்க இன்டிமேட் போட்டோ மேகசின்ல வர காரணம்னு சொன்னேன் ஆன்ட்டி.’’ என்றாள். 
“அது மட்டுமா சொன்ன…?” என்று அருள் காரமாக நிறுத்த, தாயிடம் உளறிய தன் மடத்தனத்தை எண்ணி அமுதன் தலையில் கைவைத்துக் கொண்டான். தான் அமுதனை சாடிய வார்த்தைகள் அத்தனையையும் அமுதனின் தாய் அறிந்து இருக்கிறார் என்பதை உணர்ந்தவள், அதற்கு மேல் அமைதியாகிவிட்டாள். 

Advertisement