வித்து

விரிவாக்கம் – 2

இரட்டைப் பிள்ளைகளென்று ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் சென்றதால், ரத்தன் கொடுத்த தகவலை ஆதியும் சுஷாந்தும் வீட்டுப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதே சமயம், ரத்தனின் எச்சரிக்கையத் தள்ளுபடி செய்யாமல் சௌந்துவின் பாதுகாப்பை தனியார் செக்யுரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைத்தான் சுஷாந்த். பேறுகாலம் முழுவதும் சௌந்துவை கண்ணுக்குள் வைத்துப் பாதுக்காத்தனர் ஆதியும் சுஷாந்தும். சீமந்தத்தை விமர்சையாக கொண்டாட வேண்டுமென்ற விசாலத்தின் விருப்பத்தை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் இருவரும் யோசித்துக் கொண்டிருந்த போது, சௌந்துவிற்கு இரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட, விமர்சையாக செய்ய வேண்டிய சீமந்தத்தை வீட்டோடு, நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்துக் கொண்டாடினார்கள்.

சௌந்துவின் சீமந்தத்தில், ஓடியாடி வேலை செய்து, இரண்டு பேரப்பிள்ளைகள் பிறக்கப் போவதைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டு ஓரகத்தி விசாலத்தின் குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் வேலையில் தீவிரமாக இருந்தார் இராஜகுமாரி. அவருக்கு நேர்மாறாக, இரட்டை பிள்ளைகள் என்பதால் ரமா மாமியாரின் வாய் வாய்க்காலாக மாறி தேவையில்லாத இடத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. சுப நிகழ்ச்சிக்கு பின், வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியாமல்,”இப்போ எங்கே பார்த்தாலும் ஒரே பிரசவத்திலே இரண்டு இல்லை மூணு பிள்ளைங்க தான், நம்ம காலத்திலே அதிசயம்னு நினைச்சதெல்லாம் இந்தக் காலத்திலே அடிக்கடி நடக்குது.” என்று இராஜகுமாரியிடம் வம்பு பேச, அதற்கு அவரிடம் எந்த எதிரோலியும் இல்லையென்றவுடன், அருகில் அமர்ந்திருந்த மரும்கள் ராமலக்ஷ்மியிடம்,

“இயற்கையா இரண்டு கரு உருவாக வாய்ப்பில்லை.. உன்னோட குடும்பத்திலே இரட்டைங்க இல்லாத போது இவளுக்கு மட்டும் எங்கேயிருந்து இரட்டை பிள்ளைங்க? உன்னோட தங்கை கண்டிப்பா ஏதாவது ட் ரீட்மெண்ட் எடுத்திருப்பா..அதான் இரட்டை குழந்தை” என்று கிசுகிசுத்தார்.

சில நிமிடங்கள் கழித்து, அதை அப்படியே அவளுடைய அம்மாவிடம் பகிர்ந்து கொண்ட ரமா,”எங்கே ம்மா ட் ரிட்மெண்ட் எடுத்துகிட்டா? வெளி நாட்லேயா..அதான் அடிக்கடி வெளி நாட்டுக்கு போயிட்டு இருந்தாளா?” என்று கேட்க, அதுவரை மூத்த மகள் மீதிருந்த எள்ளளவு பாசமும் விசலாத்திடமிருந்து காணாமல் போக,

“ட்ரீட்மெண்ட் எடுத்துக்கற எல்லாருக்கும் இந்த வரம் கிடைக்கறதில்லை லக்ஷ்மி..உன்னோட தங்கைக்கு எப்படிக் கிடைச்சுதுன்னு நீ கடவுள்கிட்டே தான் கேட்கணும்.” என்று முகத்தில் அடித்தார் போல் பதில் கொடுத்தார்.

சௌந்து, ரத்தன் இருவரும் சென்னைவாசி ஆனவுடன், கோவையிலிருந்து அவனுடைய அம்மாவுடன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனது ஜாகையை மாற்றிக் கொண்டான் சுஷாந்த். திருமணத்திற்கு பின், அந்த வீட்டில், அவனுடன் ஓரிரு வாரங்கள்  தங்கியிருக்கிறாள் சௌந்து. அதன் பின் அந்த வீட்டுப் பக்கம் அவர்கள் போகவேயில்லை. அதே போல், சென்னையில், தமிழர் முறையில் திருமணம் முடிந்த பின் சுஷாந்தின் சொந்த ஊரில் நடந்த திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு அந்தப் பக்கமும் போகவில்லை. அங்கே நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்தன் தலைமையில் நடந்ததாலும், திருமணத்தன்று வேறொரு ஜோடி தான் சுஷாந்திற்கு சௌந்துவை  மணமுடித்துக் கொடுத்தனர். சுஷாந்தின் தந்தை பார்வையாளர் போல் தான் அவனின் திருமணத்தில் பங்கேற்றார். அங்கே கழித்த நாள்களில், சௌந்து தனித்திருந்த தருணங்களில், சுஷாந்தின் சொந்தங்கள் யாரும் அவளை நெருங்கவில்லை, அவளும் யாரிடமும் வலிய போய் சொந்தம் கொண்டாடவில்லை.

அவர்களைப் போல பேச, உடுத்த, பழகக் கற்றுக் கொண்டிருந்தாலும், இப்போது அவர்களில் ஒருத்தி என்றாலும், அரசக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கும் அவளுக்கும் இடையே பிறப்பிலேயே உண்டான பேதத்தை ஒரு போதும் கடந்து வர முடியாது என்ற உண்மை உணர்ந்திருந்ததால் அவள் அவளாக, சௌந்தர்யலக்ஷ்மியாக தான் நடந்து கொண்டாள். அந்த கூட்டத்தில் எப்படி சுஷாந்த் உதித்தான்? என்ற அவளது கேள்விக்கு இன்று வரை அவளுக்கு விடை கிடைக்கவில்லை. இப்போது அந்த கேள்வியோடு, ஈவு இரக்கமில்லாதவர்களுக்கு நடுவே இரக்கமே உருவான அவன் எப்படி? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டது.

பேறுகாலத்தின் போது ரத்தனின் போக்கில் பெரிய மாற்றத்தைக் கண்டாள் சௌந்தர்யா. ஒரே வீட்டில் இருந்தாலும், முன்பு போல், அடிக்கடி, ‘ராஜாத்தி ‘என்று அவளை அழைக்கவில்லை அவளுடன் எதையும் பகிரவில்லை. சொல்லப் போனால் யாருடனுமே  அவர் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. எப்போதும் ஒரு மோன நிலையில், சில சமயங்களில், அதற்கு நேர்மாறாக தனக்கு தானே உரக்கப் பேசிக் கொண்டிருந்தார். கால நேரங்களை மறந்து, காலையில் தாமதமாக எழுவதும், இரவில் தூங்காமல் வளைய வருவதும் என்று அவரது போக்கு அனைவர்க்கும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் எப்போதும் போல் பழகும் ஒரே ஜீவன் ஆதியின் மகள் சக்தி ஜனனி தான். ‘ஐயா தாத்தா’ என்று அவரை அழைத்து, அவருடைய மடியில் அமர்ந்து, கொஞ்சி, விளையாடி, அவரை உயிர்ப்புடனும் உயிரோடவும் வைத்திருந்தது அவள் தான்.

சௌந்துவின் சீமந்தத்திற்கு பிற்கு, ஒரு நாள் காலையில், ஆதியும் கல்யாணியும் வேலைக்கு சென்ற பின், வெகு நேரமாகியும் ரத்தன் அவரது அறையை விட்டு வெளியே வரவில்லை. நள்ளிரவில் வீட்டிற்கு வந்ததால் நண்பகல் வரை உறங்க வேண்டுமென்று சொல்லியிருந்த சுஷாந்த்தை அவசரமாக எழுப்பினாள் சௌந்தர்யா. அவளுக்கு தான் என்னவோ ஏதோயென்று பயந்து போய் எழுந்தவனிடன்,

“காலைலேர்ந்து தாத்தா வெளியே வரவேயில்லை..இத்தனை லேட்டா என்னைக்கும் எழுந்ததில்லை..அம்மா பயந்து போயிருக்காங்க..என்னென்னு போய்ப் பாருங்க.” என்று சொல்ல, உடனே ஓடிச் சென்று அவரது அறைக் கதவை படபடவென்று அவன் தட்ட, உள்ளே பேரமைதி. அதில் பீதியடைவந்தவன், கதவை உடைப்பதென்று முடிவு செய்த போது, ஆட்டோமெட்டிக் பூட்டின் சாவியோடு வந்தார் விசாலம்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கே கட்டிலில், அமைதியாக படுத்திருந்தார் ரத்தன். அவரது அந்த நிலையைப் பார்த்து பயந்து போன விசாலம், சௌந்துவை அப்படியே அவளது அறைக்கு இழுத்துக் கொண்டு போக, “என்ன ம்மா ஆச்சு தாத்தாக்கு? சொல்லுங்க ம்மா.” என்று அவள் கத்த, சுஷாந்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனுடைய அம்மா போன பிறகு அவனுக்குயென்று இருக்கும் ஒரே உறவு ரத்தன் மட்டும் தான். அன்று மருத்துவமனையில் நடந்த சண்டைக்கு பிறகு அவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தையே இல்லை. இப்போது, இந்த நொடி, அதெல்லாம் சில்லியாக, சிறுபிள்ளைத்தனமாகத் தெரிய, உள்ளத்தளவில் அவனுடைய தாதூவிடம் மன்னிப்பு கேட்டவன், அவனுக்கு தெரிந்த மருத்துவருக்கு  உடனே அழைப்பு விடுத்தான். அடுத்த அரைமணி நேரத்திற்குள் பரமகல்யாணிக்கு பரிசோதனைகள் நடந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரத்தன்.

அன்று மாலை வரை அவர்களுக்குப் பயம் காட்டி விட்டு, ஆறு மணி போல் கண் விழித்து,”ராஜாத்தி.”என்று அவர் உச்சரிக்க, சௌந்துவை மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க, அவளுடைய கணவன் என்று அவளுடன் தொத்திக் கொண்டு சென்றான் சுஷாந்த்.

அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன், சௌந்து அவளது வாயைத் திறக்கும் முன், ரத்தன் அவரது கண்களை இமைக்கும் முன்,”உங்க இஷ்டப்படியே அம்மாக்கு எல்லாம் செய்யறேன் தாதூ.” என்று அவரது கையைப் பிடித்து சத்தியம் செய்தான் சுஷாந்த்.

இதை முன்னாடியே செய்திருக்கலாமென்று சௌந்துவுக்கும் ரத்தனுக்கும் ஒரே போல் தோன்ற, இருவரும் ஒரே போல் மெலிதாகப் புன்னகை செய்ய,”சிரிப்பெல்லாம் போதும்..ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேருங்க ரத்தன்.” என்று குவார் சாவாகக் கட்டளையிட்டான் சுஷாந்த்.

வீட்டு வாசலில் கார் நின்ற சத்தத்தை அடுத்து,’அருவா ஆச்சி.” என்று அழைத்தபடி லேசாக சாத்தியிருந்த கதவைத் திறந்து கொண்டு வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தாள் பவித்ரா. அவளது கூச்சலைக் கேட்டு சௌந்துவின் படுக்கையிலிருந்து தானாகவே இறங்கி, ஓடி வந்த ஜனனியும் அவளும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு, கிளுகிளுவென்று சிரிக்க, வாசல் கதவைச் சாத்தி விட்டு, சாமான்களை சோஃபா மீது வைத்த கல்யாணி,”ஷ்ஷ்.” என்று வாய் மீது விரலை வைத்து எச்சரிக்கை செய்ய, அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் கை கோத்துக் கொண்டு சௌந்துவின் அறைக்கு ஓடிச் சென்றனர்.

சிறுமிகள் இருவரும் எழுப்பிய சத்தத்தில் குழந்தைகள் இருவரும் விழித்துக் கொண்டனர். ஆண் குழந்தையின் கத்தல் காற்றைக் கிழிக்க, பெண் குழந்தை அவளது கண்களை விரித்து சௌந்துவைப் பார்த்து புன்னகைச் சிந்தினாள்.

“ஆரம்பிச்சிட்டான் டீ..நீ அவனைத் தூக்கிக்கோ..நான் இவளைத் தூக்கிக்கறேன்.” என்று சௌந்துவின் மடியிலிருந்த பேத்தியைக் தூக்கிக் கொண்டார் விசாலம்.

உடனே,”அருவா ஆச்சி..பாப்பாவைக் காட்டுங்க.” என்று அவரது புடவையைப் பிடித்து இழுத்தாள் பவித்ரா.

பள்ளிக்கூடம் செல்ல பவித்ரா பிடிவாதம் பிடித்த போது, மிருகங்கள் நிறைந்த அடர்ந்த காட்டினைக் கடந்து, அருவாளின் துணையோடு, துணிவுடன் விசாலம் ஆச்சி பள்ளிக்கூடம் சென்றதாக அவளுக்கு ஏற்றார் போல் கதையை மாற்றி, புதிதாக பரமகல்யாணி புனைய, சமத்தாகப் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்த பவித் ராவிற்கு ஆச்சியிலிருந்து அருவா ஆச்சியாகிருந்தார் விசாலம்.

படுக்கை மீது அமர்ந்து கொண்ட விசாலம்,”தொடாமப் பார்க்கணும்.” என்றார். சிறுமிகள் இருவரும் விசாலத்தின் இருபுறத்திலும் நெருங்கி நின்று கொண்டு, ஆவலுடன் அவரது மடியில் இருந்த பாப்பாவை பார்த்தனர். பாப்பாவும் அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகை சிந்த,”பாப்பா சிரிக்கறா ஆச்சி.” என்று சொல்லி ஜனனி சிரிக்க, அவளைத் தொடர்ந்து பவித்ராவும் சிரிக்க, கை, கால்களைக் சுத்தும் செய்து கொண்டு வந்த கல்யாணி பாப்பாவின் எதிரே கையை சொடுக்க,   உடனே,  பொக்கை வாயைத் திறந்து க்ளுக்கென்று ஒலி எழுப்பி பாப்பாவும் சிரிக்க, அந்த அழகில் சொக்கிப் போய் அவளது அம்மா, மாமி, பாட்டி மூவரும் சேர்ந்து சிரிக்க, பெண்களின் சிரிப்பொலியில் அவனது அழுகையை நிறுத்தி விட்டு, அம்மாவின் மடியிலிருந்து அவர்களை ஆராய்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் வீர் ரத்தன்.

சில நொடிகள் கழித்து, விசாலம் மடியில் சயனித்தபடி ராணி போல் அவர்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பாப்பவைக் காட்டி,”சித்தி, இவ பெயர் என்ன? சொல்லுங்க?” என்று கல்யாணிக்கு கட்டளையிட்டாள் பவித்ரா.

“தேவ்யான்ஷி.” என்றான் சுஷாந்த்.

அதைக் கேட்டு அந்த அறையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

“அவ தான் முதல்..அவளுக்கு அப்புறம் தான் மகன் பிறந்தான்..அவனோட பெயர் வீர் ரத்தன்.” என்று சொல்லி விட்டு குழுமியிருந்தவர்களின் பார்வையோடு அவனது பார்வையை கலந்தான் சுஷாந்த். அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், அவனருகில் அமர்ந்திருந்த ரத்தனின் முகத்தைப் பார்த்தவர்களுக்கு அதிலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  வாக்கரின் உதவியோடு நடந்து வந்து சுஷாந்த அருகில் அமர்ந்தவர் இதுவரை வாயைத் திறக்கவில்லை. முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று அனைவரையும் வரவழைத்தவர் அமைதியாக இருக்க, அவனுக்கு குழந்தைகள் பிறந்திருக்கும் விஷயத்தை, சாவகாசமாக, கிட்டதட்ட மூன்று மாதங்கள் கழித்து, இன்று, தெரியப்படுத்தியிருக்கிறான் சுஷாந்த்.

அந்தக் கூட்டத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்த அவனது தந்தையை புறக்கணித்து, குழந்தைகள் விஷயத்தை தெரியப்படுத்திய விதத்தில், நடந்த அனைத்தும் அவனுக்குத் தெரிந்து விட்டது என்று அங்கே இருந்தவர்களுக்கு தெரியப்படுத்தினான் சுஷாந்த். இத்தனை வருடங்களாக அவர்கள் அனைவரும் மறைத்த விஷயம், இப்போது, இப்படி வெளியே வந்த விதத்தில் இனி என்ன நடக்ககுமோ? என்ற அச்சத்தில் அவனது உறவுகள், அப்பா, மகன் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில நொடிகள் அமைதிக்கு பின், சுஷாந்தின் திருமணத்தில் பங்கேற்ற அவனுடைய சித்தப்பா,” குழந்தைங்களையும் மருமகளையும்  உன்கூட அழைச்சிட்டு வந்திருக்கலாம்..நம்ம குலத்தோட வாரிசு.. ”என்றவரின் பேச்சை சைகையில் இடைமறித்து,

“வாரிசா? யாரு?” என்று  சுஷாந்த் கேட்க,

அதில் லேசாக அதிர்ந்து, அவரைச் சுதாரித்து கொண்டு,“என்ன டா இப்படிப் பேசற..உன்னோட விருப்பத்தை நிறைவேற்ற நாங்க என்னவெல்லாம் செய்திருக்கோம்..உன்னோட மனைவியை தத்து எடுத்து, நம்ம குலத்திலே ஒருத்தியாக்கி, நம்ம முறைப்படி உனக்கும் அவளுக்கும் கல்யாணத்தை நடத்தி வைச்சிருக்கோம் டா..உன்னோட குழந்தைங்க நம்ம குலத்தோட வாரிசு..நம்ம வம்சத்துக்கு அடுத்து தலைமுறை வந்திடுச்சுன்னு நம்ம ஆளுங்களுக்கு அறிவிக்கணும்..எல்லாரையும் அழைச்சு பெரிய அளவுலே உன்னோட குழந்தைங்களுக்கு பெயர் சூட்டு விழா வைக்கணும்…அவங்களை சாமுண்டாகிட்டே (chamunda devi) கொண்டு போய் காட்டனும்.” என்று இனி நடக்க வேண்டியதை பற்றி அவர் அடுக்கிக் கொண்டே போக,

“நம்ம குலத்திலே பிறக்கிற எல்லாக் குழந்தைங்களுக்கும் இந்த மாதிரி, முறைப்படி தான் எல்லாம் நடக்குதா?” என்று மீண்டும் அவரை இடைமறித்தான் சுஷாந்த்.

அந்தக் கேள்விக்கு ஒருவரிடமிருந்தும் பதில் வரவில்லை. அதற்காக காத்திருக்காமல்,”உங்க எல்லார்க்கிட்டேயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்று அறிவித்தான் சுஷாந்த்.

‘என்ன விஷயமா இருக்கும்?’என்று அனைவர்க்குள்ளும் ஒரே கேள்வி வர, அதைக் கேட்க அவனிடம் நேரடியாகக் கேட்க முடியாமல் அனைவரும் அமைதியாக இருக்க, முதல்முறையாக அவரது வாயைத் திறந்து,

“அவனோட அம்மா உயிரோட இருந்தவரை நம்ம யாரோடேயும் அவன் உறவு வைச்சுக்கலை..அவ போன பிறகும் அப்படியே இருக்க தான் விருப்பப்பட்டான்..அவன் விரும்பின பெண்ணோட வாழ்க்கையை அமைச்சுக்க நம்ம அனுமதியோ அங்கீகாரமோ தேவையில்லைன்னு தான் சொன்னான்..நான் தான் அவனைக் கட்டயப்படுத்தி, அவனோட கல்யாணத்தை நம்ம முறைலே நடத்தி வைச்சேன்..

இப்போ அவன் எடுத்திருக்கற முடிவை முறைப்படி செய்யணும்னு தான் என்னையும் அழைச்சிட்டு வந்திருக்கான்..அவனோட இந்த முடிவு எனக்கும் சம்மதம்…இனி தான் சுஷாந்த்தோட  வாழ்க்கையே ஆரம்பமாகுது..அதிலே நம்மளோட நிழல் எங்கேயும் விழக் கூடாதுன்னு நினைக்கறான்..அவனோட விருப்பப்படி அவனை விலக்கறதுக்கான ஏற்பாட்டை ஆரம்பிச்சிடுங்க..நம்ம குலவரிசையிலிருந்து அவனோட  பெயரை  எடுத்திடுங்க.” என்றார் ரத்தன்.