Advertisement

7
அவள் கரம் கூப்பிய போது தான் கவனித்தான் அவளின் வலக்கரம் சற்றே கூம்பியிருப்பதை. அதை பார்த்தும் பார்க்காததும் போல இருந்து கொண்டான்.
அழகான பெண் ஏன் கடவுள் இவளுக்கு இப்படி ஒரு குறையை வைத்தான் என்று தான் தோன்றியது அவனுக்கு.
“நீங்க போகலாம்…” என்று சொல்லவும் அவள் திரும்பிச் செல்ல அவள் நடையில் கூட ஒரு சிறு வேறுபாடு இருந்ததை உணர்ந்தான்.
ஒரு கையும் காலும் அவளுக்கு சரியாயில்லை என்பது மட்டும் புரிந்தது. ஒரு பெருமூச்சுடன் தன் வேலையை கவனிக்கலானான்.
அவன் தினமும் தக்கலைக்கு வந்தாலும் அவனறையில் எப்போதும் இருக்க மாட்டான், பெரும்பாலான நேரத்தை அவன் வரைவதிலேயே கழிப்பான்.
புது புது மாதிரிகளை உருவாக்குவதில் அவனுக்கு அலாதி பிரியம் உண்டு. அப்படியொரு நாள் அவன் வரைந்து கொண்டிருந்த போது அறைக்கதவு தட்டப்பட்டது.
இது போன்று அவன் வரையும் போது யாரும் வந்து அவனை தொந்திரவு செய்வதென்பது அவனுக்கு அறவே பிடிக்காது.
முதல் முறை கதவு லேசாய் தட்டப்பட அதை கவனியாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். மீண்டும் ஒரு முறை தட்டப்பட இந்த முறையும் ஒரு கோபத்துடன் கதவை பார்த்துவிட்டு அவன் வேலையில் மும்முரமானான்.
இப்போது கதவு தொடர்ந்து தட்டப்பட அவன் கோபமாய் கதவைத் திறந்தான். அங்கு காஞ்சனா நிற்க அதே கோபத்துடன் “என்ன??” என்று கேட்டு வள்ளென்று விழுந்தான்.
“இல்லை நீங்க… நீங்க எதுவுமே சாப்பிடலைன்னு டேவிட் சார் சொன்னார். அதான் ஜூஸ் வாங்கிட்டு வரட்டுமான்னு கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன் சார்…”
“தேவையில்லை நீ கிளம்பு…”
அவள் சட்டென்று அங்கிருந்து கிளம்பிடவில்லை. “இல்லை சார் எதுவும் சாப்பிடாம இருந்தா உடம்புக்கு என்னாகறது. நீங்க என்னை திட்டினாலும் பரவாயில்லை சார்…”
“சுவர் இருந்தா தானே சார் சித்திரம் வரைய முடியும்… நீங்க வரையற இந்த டிசைன்ஸ் எவ்வளவு முக்கியமோ அது மாதிரி தானே சார் உங்க உடம்பும் முக்கியம்…”
“அப்படியா… உனக்கு அப்படியென்ன என் மேல அக்கறை??” என்றான் புருவத்தை உயர்த்தி.
“நீங்க தான் எங்க பாஸ்… நீங்க நல்லா இருந்தா தானே சார் நாங்க எல்லாரும் நல்லா இருக்க முடியும்…”
“ஹ்ம்ம்…”
“சார் கோபம் போயிடுச்சா சார்… ஜூஸ் வாங்கிட்டு வரட்டுமா சார்…”
“நான் கோபமாயிருக்கேன்னு சொன்னேனா…”
“அப்போ இல்லையா…”
“இல்லை…”
“ஜூஸ்…”
“வேணாம்…” என்றவன் சொல்ல அவள் முகம் வாடியது. அவள் திரும்பிச் செல்லப் போக “டேவிட் வரச்சொல்லு”
“ஹ்ம்ம் ஓகே சார்…”
“யார்கிட்டயாச்சும் சொல்லி எனக்கு லஞ்ச் வாங்கிட்டு வரச்சொல்லுங்க அவன்கிட்ட”
“தேங்க்யூ சார்…” என்று முறுவலுடன் சென்றாள் அவள்.
‘நல்ல பொண்ணு…’ என்று சொல்லிக்கொண்டு தன் பணியை மீண்டும் தொடர்ந்தான் அவன்.
டேவிட் வந்து உணவை கொடுத்து சென்றவன் அவனை ஒரு மாதிரியாய் பார்த்து வைக்க “என்னடா பார்க்கறே??”
“இல்லை நான் கூட உன்னை சாப்பிட சொல்லி பல முறை வந்து சொன்னேன். அதெல்லாம் உன் காதுல விழலையே, இப்போ மட்டும் என்னாச்சுன்னு பார்த்தேன்…”
“அந்த பொண்ணு சொன்னாடா… அதான்” என்றவன் அவள் வந்து சென்றதை சொல்ல “ஆஹான், என்னடா நடக்குது இங்க…”
“அவ எதுக்கு இங்க வந்து உன்னை பார்க்கறா…”
“அதும் அவ வேலை தானே…”
“எது முதலாளி சாப்பிட்டாரா இல்லையான்னு பார்க்கறதா…” என்று டேவிட் சொன்ன கருத்து அவனை யோசிக்க வைத்தது.
‘ஆமா அவளுக்கு நான் சாப்பிட்டா என்ன சாப்பிடலைன்னா என்னா…’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே “டேவிட் சார்…” என்று வந்து நின்றாள் காஞ்சனா.
“கதவை தட்டிட்டு வரணும்ன்னு தெரியாதா உங்களுக்கு…” என்றான் டேவிட் முகத்திலடித்தது போல்.
“சாரி சார்… ஆனா ஒரு விஷயம் சொல்லிட்டு போய்டறேன் சார்…”
“என்ன??”
“எனக்கு இவர் மேல என்ன அக்கறைன்னு நீங்க பேசிட்டு இருந்தது என் காதுல விழுந்துச்சு…”
“நான் ஒட்டு கேட்கலை சார்… உங்களை கேஷியர் சார் கூப்பிட்டார், அதுக்காக தான் வந்தேன். வந்த இடத்துல நீங்க பேசினது காதுல விழுந்துச்சு…”
“அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டாமா…” என்றவள் தொடர்ந்தாள்.
“எனக்கு தனிப்பட்டு அவர் மேல எந்த அக்கறையும் கிடையாது சார்… நம்ம ஸ்டாப்ஸ் எல்லார்க்கும் காபி, டீ கொடுத்தேன். சார்க்கு வேணுமான்னு கேட்கலாம்ன்னு தான் வந்தேன்…”
“அவர் தினமும் இந்த நேரம் காபி கொண்டு வரச்சொல்வார் தானே… இன்னைக்கு காலையில இருந்தே ஒண்ணுமே கேட்கலை… அதான் வந்து கேட்டேன்…”
“நீங்க ஜூஸ்ல வாங்கிட்டு வர்றதா சொல்லியிருக்கீங்க…”
“ஏன் சார் அவர் எதுவும் சாப்பிட்ட மாதிரி தெரியலை. அதனால தான் ஜூஸ் வேணுமா சார்ன்னு கேட்டேன்… இதெல்லாம் ஒரு குத்தமா சார்… இனிமே நான் இந்த பக்கமே வரலை சார்…” என்று டேவிட்டை பார்த்து சொன்னவள் விஸ்வாவை பார்த்தாள்.
“மன்னிச்சுடுங்க சார்… அதிகபிரசங்கித்தனமா நடந்துக்கிட்டேன்…” என்றுவிட்டு வெளியேறி சென்றுவிட்டாள் அவள்.
“எதுக்குடா இப்போ அவளை காய்ச்சு எடுத்த நீ??” என்று டேவிட்டை சத்தம் போட்டான் விஸ்வா.
“என்னமோ சரியில்லைடா… என்னன்னு எனக்கு தெளிவா சொல்லத் தெரியலை…” என்றான் அவன்.
“என்ன சரியில்லைங்கறே நீ??”
“சம்திங் ராங்…” என்றான்.
“நந்திங் ராங்…” என்ற விஸ்வா “ஆமா நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல ஸ்டாப்ஸ்க்கு எல்லாம் அவங்க காபி கொடுக்க வேணாம்ன்னு அப்புறம் ஏன் இன்னைக்கு அவங்க கொடுத்தாங்க…”
“கடையில ரொம்ப கூட்டம் இன்னைக்கு. அதனால தான் அவங்களை கொஞ்சம் ஹெல்ப் பண்ணச்சொல்லி சொன்னேன்…”
“என்ன கூட்டமா இருந்தாலும் இனி இதெல்லாம் வேண்டாம்…” என்றான் அந்த கடையின் உரிமையாளனாய் அவனின் முதலாளியாய்.
“ஹ்ம்ம் ஓகே சார்…” என்று டேவிட் சொல்லிட அவனை முறைத்தான் மற்றவன்.
“கோவிச்சுக்கிட்டியாடா…”
“இல்லை. ஆனா அந்த பொண்ணுக்கு இவ்வளவு சலுகை எல்லாம் வேண்டாம்…”
“நான் எந்த சலுகையும் கொடுக்கலை டேவிட், வேற யார் இருந்தாலும் இதே தான் சொல்லியிருப்பேன்…”
“ஓகே நான் கிளம்பறேன்…” என்று அவன் பெருமூச்சுடன் கிளம்பிவிட்டான்.
அன்றைய நிகழ்வுக்கு பின் அவள் அவன் இருக்கும் பக்கம் கூட வருவதில்லை. இப்படியே ஒரு மாதம் சென்றிருக்கும்.
“காஞ்சனா…” என்றழைத்தான் டேவிட்.
“சொல்லுங்க சார்…”
“நாளையில இருந்து நீங்க கோல்ட் செக்ஷன்க்கு போய்டுங்க”
“என்னாச்சு சார்…”
“உங்க வேலை திருப்திக்கரமா இருக்கு. அதான் உங்களை அங்க மாத்தியிருக்கோம்”
“தேங்க்யூ சார்…”
“எனக்கு எதுக்கு நன்றிலாம்… விஸ்வாக்கு தான் சொல்லணும்…”
“விஸ்வா சாரா என்னை மாத்தினாரு…”
“ஆமா நான் தான் ரிபோர்ட் பண்ணேன். உங்க வேலை நல்லாயிருக்குன்னு அவர் தான் மாத்தினாரு…”
“ரொம்ப நன்றி சொன்னேன்னு அவர்கிட்ட சொல்லிடுங்க சார்…”
“ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா??” என்று அங்கு வந்து நின்றான் விஸ்வா.
“சா… சாரி சார்… நான் உங்களை பார்க்கலை… தேங்க்ஸ் சார்…” என்றுவிட்டு அவள் வெளியேறப் போக “ஒரு நிமிஷம்” என்றான் அவன்.
கதவருகே சென்றவள் நின்று அவனை திரும்பி பார்த்தாள்.
“நீங்க வரைவீங்களா??”
“ரொம்ப வராது சார்…”
“சோ நீங்க வரைவீங்க… உங்க டிசைன்ஸ் பார்த்தேன், ரெண்டு நாள் முன்னாடி நீங்க லாக்கர்ல இருந்து உங்க திங்க்ஸ் எடுக்கும் போது உங்க ஹான்ட் பேக்ல இருந்து தவறி விழுந்துச்சு போல…”
“தற்செயலா தான் அது என்னன்னு பார்த்தேன்…”
“ஆர் யூ இண்டரெஸ்ட் இன் டிசைனிங்…”
சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நின்றவள் மேலும் கீழும் தலையாட்டி ஆமென்றாள்.
“என்ன படிச்சிருக்கீங்க…”
“படிச்சது சாதா டிகிரி தான்…”
“அது தான் என்ன??”
“பிகாம்…”
“அப்புறம் எப்படி வரையறதுல ஆர்வம்…”
“அது சின்ன வயசு பழக்கம்… காலேஜ் போகும் போது எங்க பக்கத்துவீட்டு அக்கா ஒருத்தர்கிட்ட கத்துக்கிட்டேன்…”
“அவங்க ஜூவல் டிசைனிங் எல்லாம் பண்ணுவாங்க… அதை பார்த்து நானும் வரைவேன். நான் வரையறது எல்லாம் பெரும்பாலும் அவங்க வரைஞ்ச டிசைன்ஸ் தான்…”
“அவங்களை நான் பார்க்கலாமா??”
“ஷி இஸ் நோ மோர்…”
“ஓ!!”
“சூசைட் பண்ணிக்கிட்டாங்க, ஏதோ லவ் பெயிலியர்…”
“அதெல்லாம் எதுக்கு இப்போ நீங்க கேட்கறீங்க…”
“நான் அதெல்லாம் கேட்கலை, நீ தான் சொன்னே… அவங்க வரைவாங்கன்னா அவங்களை நம்ம ஷாப்ல வேலைக்கு எடுத்துக்கலாம்ன்னு தான் கேட்டேன்…”
“நீ ஏன் எனக்கு ஹெல்ப் பண்ணக்கூடாது??” என்று நேரடியாய் அவளைப் பார்த்து கேட்டான்.
“விஸ்வா… அது தேவையா…” என்றான் டேவிட்.
“ஆமா சார் எனக்கு அது தேவையில்லை. நான் வந்த வேலையை மட்டும் பார்க்கறேன்…” என்று விருட்டென்று அவள் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
‘எல்லாம் உன்னால தான்…’ என்னும் பார்வை பார்த்தான் விஸ்வா.
“டேய் நான் சாதாரணமா தான்டா சொன்னேன்… உனக்கு ஹெல்ப்க்கு கண்டிப்பா ஆள் தேவைன்னா நீ எடுத்துக்கோ. எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை…”
“அதான் போயிட்டாளே…”
“நாளைக்கு வரட்டும் நானே பேசறேன்…” என்று முடித்தான் டேவிட்.
“என்னங்க எனக்கு இடுப்பு வலிக்குற மாதிரி இருக்குங்க…” என்று தன் கணவனின் கையை பிடித்துக் கொண்டாள் தேவி.
“என்ன தேவி இப்படி சொல்றே?? நான் போய் உடனே உங்கம்மாவை கூட்டிட்டு வர்றேன்…” என்று கிளம்பினார் வேலு.
தலைப்பிரசவத்திற்கு தாய் வீடு வந்திருந்தாள் தேவி. குமரன் அவளைப் பார்ப்பதற்காய் அன்று அங்கு வந்திருந்தான்.
இதோ அவளுக்கு வலியெடுத்துவிட்டது. தன் மாமியாரை அழைக்க அவரும் வந்துவிட்டார். குமரனுக்கும் தகவல் சொல்லப்பட அவர் காருடன் வந்துவிட்டார்.
தேவியின் அன்னை அது பிரசவ வலி என்று சொல்ல காரிலேயே மருத்துவமனை சென்றனர். 
அதே நேரம் இரண்டாவதாக மாசமாயிருந்த செந்திலின் மனைவி குளியலறையில் வழுக்கி விழுந்து அதே மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டார்.
தேவிக்கு சுகப்பிரசவம் நடக்க, ஏழு மாதத்திலேயே குழந்தை பிறந்தது செந்திலின் மனைவிக்கு.
இடுப்பில் நல்ல அடியென்பதால் அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை எடுத்தனர். செந்திலின் மனைவிக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்க அவர் உடல் நலிந்து குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே ஜன்னி கண்டு உடல் தூக்கி தூக்கி போட்டது அவருக்கு.
மருத்துவர் வந்து பார்த்து சிகிச்சை செய்தும் எந்த பலனும் அளிக்காமல் அவர் உடலைவிட்டு உயிர் பிரிந்தது…
வந்து விழுங்கின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்…

Advertisement